Sunday, December 23, 2012

பாடலாசிரியர் ஆர்.வி.உதயக்குமார்ஒரு இயக்குனர் ஒரு பாடலாசிரியரிடம் தனது படத்தின் கதை,களம், கதாபாத்திரங்களின் தன்மை,பாடலின் சூழல் என சில கூறுகளைச் சொல்லி பாடலுக்கான வரிகளை பெறும்போது பாடல் வரிகள் குறைந்தபட்சம் மேற்கூறிய ஏதாவது ஒரு விஷயத்தைவிட்டு விலகி போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.இதே ஒரு இயக்குனரே திறமையான பாடலாசிரியராகவும் இருந்தால் அவரின் எண்ண ஓட்டத்தில் விளையும் வார்த்தைகள் கதையை,களத்தை,கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படுத்திவிட முடியும். அப்படி சிறப்பாக வெளிப்படுத்தியதில் இயக்குனர் ஆர்.வி.உதயக்குமார் குறிப்பிடப்பட வேண்டியவர்.

பாடல் வரிகளுக்கு எதற்காக தனிச் செலவு என்ற எண்ணத்தில் எழுதுவது போல  "கும்மாங்குத்து லேடி" மாதிரியான வார்த்தைகளை இட்டு நிறப்பிக்கொண்டிருக்கும் பேரரசு போன்றோரின் வரிகளைப்போல் இல்லாமல் வாலி,வைரமுத்து என பாடல் எழுதுவதைத் தொழிலாகக் கொண்டவர்களின் திறமைக்கு நிகராக பாடல்களை எழுதியிருப்பதில் தமிழ்த் திரையுலகில் டி.ராஜேந்தரைப் போன்று ஆர்.வி.உதயக்குமாரும் ஒருவர்.

உறுதிமொழி படத்தின் அதிகாலை நிலவே அலங்காரச் சுடரே பாடலை சற்று முன் கேட்டுக்கொண்டிருந்தேன். இயக்குனர் ஆர்.வி.உதயக்குமாரின் இந்த  பாடலாசிரியர் முகத்தைப் பற்றி எழுத வேண்டும் என்கிற நீண்ட நாளைய எண்ணத்தை  ”ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு” என்ற வரி உசுப்பிவிட்டுவிட்டது. ஆர்.வி.உதயக்குமார், தான் இயக்கிய படங்களுக்கு அவரே பாடல்களை எழுதும் வழக்கத்தை தனது முதல் படமான உரிமை கீதத்திலிருந்தே தொடர்பவர்.”சித்தகத்தி பூக்களே சுத்தி வரப் பாக்குதே அத்திமரத் தோப்பிலே ஒத்திகைய கேட்குதே” போல எளிய சொற்களை ரசனையோடு கோர்க்கும் வித்தையும், ”சின்ன இடையில் மின்னலென ஒரு கோடு ஓடும்” போன்ற அழகான உவமைகளுமாக இவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசனைக்குரியதாக இருக்கும்.

சின்னக்கவுண்டரில் கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊரவிட்டு பாடலில், 

பொள்ளாச்சி சந்தையில 
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு போகல
பண்ணாரி கோயிலுக்கு 
முந்தான ஓரத்தில 
நேந்து முடிச்ச கடன் தீரல 

என்ற வரிகளில் கதை நடக்கும் களத்தையும் நுழைத்து சூழ்நிலைக்கு பொருத்தமான வார்த்தைகளோடு கதையின் போக்கில் எழுதியிருப்பார். இதே படத்தின் ஓவ்வொரு பாடலுமே மேற்கோள் காட்டி சிலாகிக்கும்படியான வரிகளைக் கொண்டிருக்கும்.

எஜமானில் ”ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்”, ”ஆலப்போல் வேலப்போல்”,”நிலவே முகம் காட்டு” என பாடலின் பல்லவிகளே சிறப்பாக இருக்கும். 

ராஜகுமாரனின் என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை பாடலில்,
”ஆகாய மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள், நீரோடைப் போல நாளும் ஆடிப்பாடி ஓடுவாள்” என்ற வரிகளில் காதலியின் இயல்புகளாக சொல்லியிருக்கும் இந்த கற்பனையைப்போல பாடல் முழுவதும் ரசனையான வரிகளால் அழகுபடுத்தியிருப்பார்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு,சிந்து நதிச் செம்மீனே,அன்ப சுமந்து சுமந்து, ஏய் வஞ்சிகொடி என பொன்னுமணியின் ஒவ்வொரு பாடலிலும் இவரின் முத்திரை இருக்கும். இதே போன்று கிழக்கு வாசலின் எல்லா பாடல்களையும் சொல்லலாம். குறிப்பாய் பாடி பறந்த கிளி சோகத்தை பிழியும் வரிகளால் மனதைத் நெகிழச் செய்யும் என்றால், அதே படத்தின் தளுக்கி தளுக்கி பாடலில் மெட்டுக்குள் அட்டகாசம் செய்யும் வரிகள் அனைத்தும் குறும்பானவை.

சிங்காரவேலனில் இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் பாடலில் வரிக்கு வரி காதலை வார்த்தைகளால் பிரவாகமாய் கவிதை நயத்தோடு ஓட வைத்திருப்பார்.

”உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு” என்று நந்தவனத் தேரு படத்தின் வெள்ளி நிலவே வெள்ளி நிலவே பாடலின் வரியை கேட்கும்தோறும் ஒரு பாடலாசிரியராக தொடர்ந்து இவரை இந்தத் திரையுலகம் பிஸியாக வைத்திருக்கலாம் என்று தோன்றும். இந்த படத்தோடு
சரிந்த  இவரது மார்க்கெட்  அதன்பின் எழாமலேப்போக இசைஞானி இளையராஜா, தனக்குப் பர்சனலாக பிடித்த பாடலாசிரியரான இவருக்கு கே.எஸ்.ரவிக்குமாரின்  பெரியகுடும்பம் படத்தில் பாடல்களை எழுதும் வாய்ப்பை கொடுத்தார். அப்படத்தின் ”முற்றத்து மாடப்புறா காதலுக்கு தூதொன்னு போய் வருமா“ என்னுடைய ஃபேவரைட். அதன் பின் வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதியியிருக்கின்றாரா என்பது தெரியவில்லை. இப்போதைய ட்ரெண்டிற்கு படங்கள் இயக்குவதென்பது இவரால் சாத்தியமா என்பது சந்தேகம் என்றாலும் ஒரு சிறந்த பாடலாசிரியராக இவரால் இயங்க முடியும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

3 comments:

அருண்மொழிவர்மன் said...

இவரது பல பாடல்கள் எனக்கும் பிடித்தமானதாகவே இருக்கின்றன. பெரிய குடும்பம் திரைப்படத்திற்குப் பிறகும் பாடல்கள் எழுதி இருக்கின்றார். உடனே நினைவுக்கு வருவது சின்ன ராமசாமி பெரிய ராமசாமி, மற்றும் வெளிவராத உலகை விலை பேசவா திரைப்படம் (சந்திரனை நெத்தியில ... பாடல்)

அருண்மொழிவர்மன் said...

இவரது பல பாடல்கள் எனக்கும் பிடித்தமானதாகவே இருக்கின்றன. பெரிய குடும்பம் திரைப்படத்திற்குப் பிறகும் பாடல்கள் எழுதி இருக்கின்றார். உடனே நினைவுக்கு வருவது சின்ன ராமசாமி பெரிய ராமசாமி, மற்றும் வெளிவராத உலகை விலை பேசவா திரைப்படம் (சந்திரனை நெத்தியில ... பாடல்)

நாடோடி இலக்கியன் said...

@அருண்மொழிவர்மன்,

//சின்ன ராமசாமி பெரிய ராமசாமி//

ஜெயராமும்,உதயக்குமாரும் சேர்ந்து நடிச்ச படம். இந்த படம் ரிலீஸ் ஆச்சா?

பாடல்கள் கேட்டதில்லை.

வருகைக்கு நன்றி அருண்மொழிவர்மன்.