Wednesday, October 30, 2013

வித்யாசாகரின் இசைப் பயணம் -2

முதல் பாகம்:இங்கே

1997 ல் வெளியான புதையல் படத்திலும் கவனிக்க தக்க வகையிலேயே இசையமைத்திருந்தார் வித்யாசாகர். எண்பதுகளில் ராஜாவின் பாடல்களில் ஜென்ஸியின் குரலை எப்படி மறக்க இயலாதோ அதே போன்றே ’மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே’,’பூங்கதவே தாழ் திறவாய்’,’ஆனந்த ராகம்’ போன்ற சில பாடல்களின் மூலம் உமாரமணனின் குரலையும் மறக்க இயலாது. ராஜாவைத் தவிர மற்ற இசையமைப்பாளர்கள் இவரின் குரலை பெரிதாய் பயன்படுத்தியதில்லை என்பது ஒரு இசை ரசிகனாய் எனக்குள்ள வருத்தம். 90களின் ஆரம்பத்தில்  மிக சொற்ப எண்ணிக்கையிலான பாடல்கள் பாடியதுடன் காணாமல் போனவரை, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகர்தான் புதையல் படத்தின் ‘பூத்திருக்கும் வனமே மனமே’ பாடலில் மூலம் அழைத்து வந்தார். இதே படத்தின் மற்ற பாடல்களான ’ஒச்சம்மா ஒச்சம்மா’, ‘தீம் தக்கு தக்கு தீம்’ ஆகியவை நல்ல பாடல்களாய் இருந்தும் படத்தின் தோல்வியால் பெரிதாய் கவனிக்கபடாமலேயே போய்விட்டன. அதே வருடத்தில் சங்கவியை மூலதனமாக வைத்து வெளியான ’ஆஹா என்ன பொருத்தம்’ சுமாராய் ஓடினாலும் அதில் இடம்பெற்ற ‘சிந்தாமணி சிந்தாமணி’ பாடல் சூப்பர் ஹிட்டாய் அமைந்தது.

ஆர்.கே.செல்வமணியின் சூப்பர் டூப்பர் ஹிட்டான மக்களாட்சிக்குப் பிறகு மீண்டும் மம்முட்டியை வைத்து இயக்கி பெரிய தோல்வி படமாய் அமைந்த அரசியல் திரைப்படம் இதே வருடத்தில்தான் வெளிவந்தது. இப்படம் இன்னமும்கூட நினைவில் இருக்கிறதென்றால் வித்யாசாகரின் இசையன்றி வேறொன்றும் இல்லை. சுபா முத்கலின் கணீர் குரலில் ஆலாபனையோடு ஆரம்பிக்கும் ’ஆஜோரே ஆஜோரே’ வோடுதான் இப்படம் ரிலீசான நாட்களில் எங்கள் காலைகள் விடிந்தன. அந்த அளவிற்கு இலங்கை வானோலியில் இப்பாடல்தான் சுப்ரபாதம் போல ஒலித்துக்கொண்டே இருக்கும். ஹரிஷ் ராகவேந்திராவின் முதல் பாடலான ’வாசகி வாசகி’யும் இப்படத்தில் மற்றொரு மறக்க முடியாத மெலடி.

1998-ல் வித்யாசாகர் இசையமைப்பில் வெளிவந்த சொற்ப எண்ணிக்கையிலான படங்களும் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட சூர மொக்கைப் படங்களாகவே அமைந்தன. லவ் டுடே படத்தின் வெற்றி ஜோடியான விஜய் -சுவலட்சுமி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வந்து கடுப்படித்த ’நிலாவே வா’வில் ஒவ்வொரு பாடலும் அசத்தல் ரகம். எல்லாவற்றிற்கும் மேலாக வைரமுத்துவின் நீ காற்று நான் மரம் என்ற கவிதைக்கு அமைத்த மெட்டு பொற்கிரீடத்தில் வைரமாய் மின்னியது.’மலரே மௌனமா’விற்குப் பிறகு தர்பாரி கானடா ராகத்தில் பல பாடல்கள் வித்யாசாகர் இசையில் வெளிவந்திருக்கின்றன. இப்பாடலும் அதற்கு உதாரணம்.

’பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது’ என்று ஸ்ரீனிவாஸின் குரலில் கேட்கும் தோறும் நமக்கும் சிறகு முளைக்கும் உணர்வை கடத்தியதும் இதே ஆண்டில்தான்.இப்பாடல் மட்டுமன்றி உயிரோடு உயிராக மொத்த ஆல்பமுமே ரசனையான பாடல்களைக் கொண்டிருக்கும். இவ்வருடத்தின் மற்றொரு மறக்க இயலா மெலடி தாயின் மணிக்கொடி படத்தின்’நூறாண்டிற்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா’.

1999 ல் வெளியான எதிரும் புதிரும் இயக்குனர் தரணியின் முதல் படம். திருட்டு வி.சி.டியில் வெளியாகி சக்கை போடு போட்டு அடங்கியபின், பொறுமையாக ரிலிசான படம்.இப்படத்தில் புஸ்பவனம் குப்புசாமி பாடிய ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ மற்றும் ‘காத்து பொச பொசக்க’ பாடல்களின் வெற்றி பின்பு இப்படியான நாட்டுப் புற மெட்டுகள் வித்யாசாகரின் இசையில் நிறைய வெளிவருவதற்கு காரணமாய் அமைந்தது. இதே ஆண்டில் வெளியான ‘பூப்பறிக்க வருகிறோம்’ படத்தின் ’எட்டில் அழகு பதினெட்டில் அழகு’ பாடல் ஸ்ரீனிவாஸ் குரலில் சூப்பர் ஹிட் பாடலாய் வித்யாசகருக்கு அமைந்தது.

2000 ஆண்டிற்குப் பிறகுதான் தமிழில் வித்யாசாகரின் மேஜிக் ஒர்க் அவுட்டாக ஆரம்பித்தது எனலாம். சினேகிதியே ஆவரேஜ் கலக்‌ஷன் என்றாலும் அப்படத்தின் ‘ராதை மனதில்’ அரங்கேறாத கல்விக்கூட மேடைகள் இல்லை எனலாம்.

2001ல் வெளியான தில் படத்தில் ‘உன் சமையலறையில்’, ’கண்ணுக்குள்ள கெளுத்தி’,’மச்சான் மீச’ என்று அதகளமாய் ஆரம்பித்தவர், அதே ஆண்டில் வெளியான அள்ளிதந்த வானத்திலும் ’வாடி வாடி நாட்டுக்கட்டை’, ’கண்ணாலே மிய்யா மிய்யா’,’தோம் தோம் தித்தித்தோம்’அந்திக் கருக்கையில’ என ஜானருக்கொன்றாய் ஜூகல் பந்தி வைத்தார்.இவ்வாண்டில் மற்ற ஹிட் பாடல்கள் தவசி படத்தின் ’தந்தன தந்தன தை மாசம்’ மற்றும் மலையாளத்தில் ’சம்மர் இன் பெத்லேகம்’ படத்திற்காய் போட்டு இன்றளவும் மலையாள மியூசிக சேனல்களில் கலக்கிக்கொண்டிருக்கும் ’ஒரு ராத்ரி கூடி விடவாங்கவே’வை மலைக்காற்றாய் மாற்றி தமிழ் பேச வைத்த அர்ஜுனின் வேதம் பட பாடல். இதே ஆண்டின் பூவெல்லாம் உன் வாசம் வித்யாசாகருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆல்பமாக அமைந்தது. குறிப்பாய் சொர்ணலதா பாடிய ‘திருமண மலர்கள்’ மற்றும்,கருத்தம்மாவின் ’போறாளே பொன்னுத்தாயி’ ஆகிய பாடல்களில் பிறந்த இடமே புகுந்த வீடாக மாறுதே என்கிற சந்தோஷ அலுப்பை ஒன்றிலும்,மற்றொன்றில் பிறந்த வீட்டை பிரிந்து செல்கிற உச்ச பட்ச சோகத்தையும் சொர்ணலதா வெளிப்படுத்தும் விதத்தை ஒப்பிட்டு ரசித்திருக்கிறேன்.

2002ல் ரன்னில் பிடித்த ஓட்டம் எப்படி சந்திரமுகி வரை ஸ்டெடியாக போனது எனபது அடுத்த இடுகையில்.

2 comments:

2008rupan said...

வணக்கம

பதிவு அருமை 3ம் பகுதிக்காக காத்திருக்கிறேன்.....தொடருங்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நாடோடி இலக்கியன் said...

நன்றிங்க ரூபன்.உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.