Saturday, October 26, 2013

இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசைப் பயணம்

எண்பதுகளின் இறுதியிலேயே இசையமைப்பாளராக அறிமுகம் எனினும், 1994-ல் வெளிவந்த அர்ஜுனின் ஜெய்ஹிந்த் படத்தின் மூலமே தமிழ் இசை ரசிகர்களிடம் அறிமுகமானார் என்றால் மிகையில்லை. ’முத்தம் தர ஏத்த இடம் ஹோய் ஹோய்’,’கண்ணா எஞ்சேலக்குள்ள’,’போதை ஏறிப் போச்சு” என்று படத்தின் அத்தனை பாடல்களும் அதிரி புதிரி ஹிட்.இவற்றில் சில பாடல்கள் பஞ்சாபி ஆல்பம் ஒன்றிலிருந்து உருவப்பட்டவை என்பது பின்னர் தெரிய வந்தாலும், அக்காலக் கட்டத்தில் இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் இடமின்றி பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய இப்பாடல்கள் வித்தியாசாகருக்கு தமிழில் விசிட்டிங் கார்ட் படமாய் அமைந்தது.

ஜெய்ஹிந்த் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தும் அடுத்து தமிழில் வேறு படங்கள் இவரின் இசையில் அந்த வருடத்தில் வரவில்லை. அப்போது வித்யாசாகர் தெலுங்கில் பிஸியாக இருந்தது காரணமா, இல்லை இயக்குனர்களின் தேர்வாய் அவர் இல்லையா என்பதும் தெரியவில்லை. 1995ல் மீண்டும் அர்ஜுனின் மூலமே ’மலரே மௌனமா’ என்று மயிலிறகால் வருடியும்,’ஏய் சப்பா ஏசப்பா’ என புயலாய் சீறியும் கர்ணாவில் எண்ட்ரியானர் . கர்ணா வெளியான அதே நாளில்தான் பாரதிராஜாவின் பசும்பொன்னும் வெளியானது. தஞ்சையின் சாந்தி - கமலா காம்ளக்ஸில் சாந்தியில் பசும்பொன்னும்,கமலாவில் கர்ணாவும் ரிலீஸாகியிருந்தன. ஜெண்ட்டிமேன், ஜெய்ஹிந்த் என்று தொடர் பிளாக் பஸ்ட்டர்களுக்குப் பின்னர் அர்ஜூனின் ஹாட்ரிக் முயற்சி என்பதாலும்,படத்தின் மொத்த பாடல்களும் ஏற்கனெவே ஏக பிரபலமாகியிருந்ததாலும், ரிலீஸான அன்று கமலா தியேட்டரில் ஏகப்பட்ட கூட்டம். கண்டிப்பாக டிக்கெட் கிடைக்காது என்று புரிந்ததும், கிழக்குச் சீமையில மூலம் மீண்டும் ஃபார்மிற்கு வந்து, கருத்தம்மா என்ற ஆவரேஜ் படத்தையும் கொடுத்து கொஞ்சம் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்ததால், சரி பசும்பொன்னிற்குப் போகலாம் என்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால்,பசும்பொன் பெட்டி வரவில்லை என்று அங்கேயும் கர்ணாவை ஓட்டினார்கள்.படம் சுமார் எனினும் பாடல்களால் கொடுத்த காசுக்கு நியாயம் செய்து அனுப்பி வைத்தார் வித்யாசாகர்.

இடைவேளையின் போது வந்த பசும்பொன் ட்ரைலரைப் பார்த்தால், பாரதிராஜாவின் முந்தைய இரு படங்களின் பாடல்களான ’ஆத்தங்கர மரமே’, ’போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசத் தொட்டு’ என்று ஏ.ஆர்.ரஹ்மானின் சூப்பர் ஹிட் ட்யூன்களுக்கு சற்றும் சளைத்ததில்லை என்கிற மாதிரி,’தாமர பூவுக்கும் தண்ணிக்கும்’ என்று மண் மணக்க வித்யாசாகர் விளையாண்டியிருந்தார். அதே வருடத்தில்தான் சுந்தர்.சி யின் முறை மாமனில் ’ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்ததே’ என்று கிளாசிக்கல் ஹிட்டையும் கொடுத்திருந்தார். வில்லாதி வில்லன்,ஆயுத பூஜை என தொடர் ஹிட்களால் அந்த ஆண்டில் பரவலாக எல்லா தரப்பு இசை ரசிகர்களிடமும் சென்றடைந்தார் வித்யாசாகர். அந்த வகையில் 1995 அவரின் மியூசிக்கல் கேரியரில் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும்.

’ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்’,’கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கெடச்சா’ என்று 1996 ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஹிட் அடித்து இசைப்பயணத்தைத் தொடர்ந்தவர், ’பாடு பாடு பாரத பண்பாடு’,’உச்சி முதல் பாதம் வரை’ என தனக்கு தொடர் ஆதரவு தரும் அர்ஜுனின் செங்கோட்டையிலும் இசைக் கொடியை நாட்டினார். எனினும் படத்தின் தோல்வியால் வீழல் நீராய் ஆகின அத்தனை பாடல்களும்.

அதன் பிறகு இசையமைத்த ஓரிரு படங்களும் தொடர் தோல்வியினை சந்தித்திருந்த வேளையில் அட்டகாசமான விளம்பரங்கள்,அற்புதமான பாடல்கள்,அம்சமான ஹிரோயின் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வெளிவந்தது ப்ரியம். பம்பாயின் ’உயிரே உயிரே’ மூலம் தமிழ் இசை ரசிகர்களை ஒட்டு மொத்தமாய் அச்சமயத்தில் தன் குரலால் வசியப் படுத்தி வைத்திருந்த ஹரிஹரன் மற்றும் சித்ராவின் காம்பினேஷனில், இதுவரைக்குமான வித்யாசாகரின் மெலடிகளிலேயே தி பெஸ்ட் என நான் நினைக்கும் ‘உடையாத வெண்ணிலா’ என்ற மெஸ்மரைஸிங் மெலடி தொடங்கி,அன்றைய கல்லூரி மாணவர்களின் கல்சுரல்சுக்கான நடனத் தேர்விற்கு முதல் விருப்பமாய் இருந்த ’தில்ருபா’வரை ஒவ்வொரு பாடலையும் ரசனையோடு செதுக்கியிருந்தார் வித்யாசாகர். சொதப்பலான திரைக்கதையால் படம் வெளிவந்த வேகத்திலேயே பாதாளத்திற்குள் விழுந்தும் பாடல்களின் வெற்றியை அது எவ்வகையிலும் பாதிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு கேசட் விற்பனையில் சாதனை படைத்தது.

இரண்டாம் பகுதி:


மூன்றாம் பகுதி:

3 comments:

Anonymous said...

வணக்கம்

வித்தியாசாகர் பற்றி அலசிய பதிவுஅருமை தொடருகிறேன் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சே. குமார் said...

வித்யாசாகர் பற்றிய அலசல் அருமை...

தொடருங்கள்... தொடர்கிறோம்...

நாடோடி இலக்கியன் said...

நன்றி நண்பர்களே.