Friday, November 8, 2013

வித்யாசாகரின் இசைப்பயணம் - 3

பகுதி -1

பகுதி -2

2002ல் தமிழில் வித்யாசாகர் சொற்ப எண்ணிக்கையிலான படங்களுக்கே இசையமைத்திருந்தாலும் மற்ற படங்களின் பாடல்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ரேஸில் முந்தியது இவரின் ரன் பட பாடல்களே.  ’காதல் பிசாசே’, ’இச்சுத்தா இச்சுத்தா’,’தேரடி வீதியில்’ என துள்ளலான பாடல்களால் ஒரு பக்கம் இளைஞர்களை  குறிவைத்துத் தாக்கியும், ’பொய் சொல்லக் கூடாது காதலி’, ’மின்சாரம் என் மீது’, ’பனிக்காற்றே பனிக்காற்றே’ என மெலடி விரும்பிகளையும் கிளீன் போல்டாக்கி இசை ஜாலம் செய்திருந்தார். இப்படத்தின் வெற்றியானது அவரை தமிழ்த்திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் வரிசையில் அமரவைத்தது என்றால் மிகையில்லை. இதே வருடத்தில் வெளியான வில்லன் படத்திலும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருந்தார்.

2003-லிருந்து 2008 வரை வித்யாசாகர் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராய் இருந்தார்.இந்த பிரியடில் மெலடிகளிலும் சரி குத்துப் பாடல்களிலும் சரி தனக்கென தனிப் பாணியில் பிரமாதப்படுத்தினார். இளையராஜாவின் ’கண்ணாலே காதல் கவிதை’,’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’,’மழைவருது மழை வருது’,’ஓ பட்டர்ஃப்ளை’, ’கல்யாண தேனிலா’ மாதிரியான அதிராத இசையில் மந்த மாருதமாய் வருடும் காதல் டூயட்களை வித்தியாசாகர் இந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாய் கொடுத்துக்கொண்டிருந்தார். அவற்றில் குறிப்பிட்டு சொல்லும்படியான பாடல்கள் ‘பூ வாசம் புறப்படும் பெண்ணே’, ’கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்’,’டிங் டாங் கோயில் மணி’,’விழியும் விழியும் நெருங்கும் பொழுது’, ’சொல்லித்தரவா சொல்லித்தரவா’,' கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ ஆகியவற்றைச் சொல்லலாம். ‘அழகூரில் பூத்தவளே’,’ஆசை ஆசை இப்பொழுது’ போன்ற பாடல்கள் சூதிங் மெலடிகள்தான் என்றாலும் என்னளவில் அவற்றிற்கு வேறொரு பட்டியல் கொடுப்பேன்.

‘இந்தாடி கப்பங்கிழங்கே’,’மச்சான் பேரு மதுர’,’எலந்த பழம் எலந்த பழம்’,’அப்படி போடு’ என குத்துப் பாடல்களானாலும் ,’இத்தனூண்டு முத்தத்திலே’,’பலானது பலானது’ போன்ற வெஸ்டன் டைப் ஃபாஸ்ட் பீட் பாடல்களானாலும் இவரின் பாணி  மெலடி விரும்பிகளையும் தாளம் போட வைக்கும் வகையில் இருக்கும். மதுர படத்தின் பாடல்களைக் குறிப்பிடும் போது ’பம்பரக் கண்ணு  பச்ச மொளகா ‘ பாடலின் நினைவினூடாக எட்டிப் பார்க்கும் இன்னொரு விஷயம் வித்யாசாகர் - மதுபாலகிருஷ்ணன் கூட்டணி எப்படி மேஜிக் கிரியேட் பண்ணுமோ அதே போல ’கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கெடச்சா’, ’பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்’, ’எல மச்சி மச்சி’, ’காதல் பிசாசே’ என உதித்தின் உச்சரிப்பு பர்வாயில்லைன்னு கூட சொல்லமுடியாதபடி கொத்தி குதறுவதாய் இருந்தாலும்  அவரின் குரல் வித்யாசாகரின் இசையில் சற்றே குறும்பு கொப்பளிக்க கூடுதல் ஸ்பெஷலாய்த் தெரியும்.

எந்த இசையமைப்பாளரை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் பீக் டைம் பாடல்களில் ஒரே மாதிரியான ட்யூனை ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களில் கேட்க முடியும். இதற்கு ராஜா தொடங்கி யுவன் வரை  உதாரணங்கள் சொல்ல முடியும். வித்தியாசாகரும் அதற்கு விதி விலக்கல்ல. உதாரணத்திற்கு அவரின் பீக் டைமான இந்த காலகட்டத்தில் வந்த திருமலை படத்தின் ’வாடியம்மா ஜெக்கம்மா’வை மஜாவின் ’அய்யாறெட்டு நாத்து கட்டோடு’ம், ’அற்றைத் திங்கள் வானிடம்’ பாடலை ’ஒரு கிளி ஆசையில் ஒரு கிளி காதலில்’ பாடலோடும் பொருத்திப் பார்க்கலாம்.இம்மாதிரி நடப்பது அவர்களை அறியாமல்கூட நிகழலாம், ஆனால் அவரின் முதல் படமான பூமணத்தில் பிரபலமாகாமல் போன ’என் அன்பே என் நெஞ்சில்’ எனத் தொடங்கும் பாடலை, தெரிந்தே மீண்டும் சரியான நேரத்தில் பார்த்திபன் கனவு படத்தில் ’பக் பக் பக் மாடப்புறா’ வாக மாற்றி ஹிட்டாக்கிய வித்தைக்காரர் வித்யாசாகர். ’கண்ணாடி கூடும் கூட்டி’(மைனாவே மைனாவே), 'வாக்கிங் இன் தி மூன் லைட்’ (கண்ணால் பேசும் பூவே) போன்ற ஏற்கனவே மலையாளத்தில் தான் ஹிட்டாக்கிய ட்யூன்களை தமிழில் ரீயூஸ் செய்துகொண்டதும்கூட இந்த பிஸி பீரியடில் நிகழ்ந்தது. அன்பு படத்தின் ’தவமின்றி கிடைத்த வரமே’ பாடல் ராஜாவின் ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ பாடலை நினைவு படுத்துவதாய் தோன்றுவதும் இங்கே நினைவிற்கு வருகிறது.

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள், விருதுகளுக்கு நிகரான அங்கீகாரமாய் நினைக்கும் ரஜினி பட வாய்ப்பை, சந்திரமுகி மூலம் பெற்று தேவா ஆரம்பித்து வைத்து, பின்னர் ரஹ்மானாலும் தொடரப்பட்ட ரஜினிக்கு மட்டுமே செட் ஆகும் டிபிகல் ரஜினி பட ஓப்பனிங் பாடலை வித்யாசாகரால் ஃபுல்ஃபில் பண்ண முடியமா? என்கிற  பலரின் சந்தேகத்தை ’தேவுடா  தேவுடா ஏழுமல தேவுடா’,’அண்ணனோட பாட்டு’ என ஆர்ப்பரித்து, பாடல் ரிலீஸான அன்றே அடித்து நொறுக்கியது தொடங்கி அவரின் மியூசிக் கேரியரில் மகுடமாய் திகழும் ராதாமோகனின் மொழி படத்தின் ‘காற்றின் மொழி’ வரை பிரமாதப்படுத்தியது இதே டைமில்தான்.

’கனா கண்டேனடி’,’நீயா பேசியது’,’சில்லென்ற தீப்பொறி ஒன்று’,’யாரோ ஒருத்தி என்றவளை’, ’மூளையைத் திருகும் மூச்சுக் குழல் அடைக்கும்’, ’காதல் வந்தால் சொல்லி அனுப்பு’,’பிஞ்சு மழைச் சாரல்’,’கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை’, ’மழை நின்ற பின்னும்’, ’கண்டுபிடித்தேன் கண்டுபிடித்தேன் கன்னித் தீவை கண்டுபிடித்தேன்’ , ’சும்மா கெடந்த சிட்டுக் குருவிக்கு’ , ’சுடும் நிலவு ‘ என  தனித் தனியாய் சிலாகிக்க வேண்டிய நிறைய பாடல்களை தொடர்ச்சியாய் கொடுத்தவர் , 2008ற்குப் பிறகு காவலன் படத்தின் ‘யாரது யாரது’, தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் ‘கொலகாரி உன்ன  பார்த்து ’ போன்ற ஒரு சில பாடல்களைத் தவிர்த்து ரசிகர்களை பெரிதாய் திருப்திப்படுத்தினார்  என்று சொல்ல முடியாது. தமிழில்தான் இப்படியேத் தவிர மலையாளத்தில் செம ஃபார்மில் இருக்கிறார் இந்த மெலடி கிங். 

மாநில விருதுகள் தொடங்கி தேசிய விருது வரை பல விருதுகளை அள்ளியிருக்கும் வித்யாசாகரை, கர்னாடிக் மியூஸிக் தொடங்கி நாட்டுப்புற பாடல்கள் வரை நம் பாரம்பரிய இசைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் இளையராஜாவின் இசை வாரிசாய் என்னளவில் பார்க்கிறேன். 

மலையாள படமான ஆர்டினரி தமிழில் ஜன்னலோரமாய் கரு.பழனியப்பன் - வித்யாசாகர் கூட்டணியில் வரவிருக்கிறது. இக்கூட்டணியின் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

(நிறைவு)

3 comments:

Anonymous said...

இளையராசாவுக்குப் பின்னர் தமிழில் வந்த அருமையான இசையமைப்பாளர் வித்யாசாகர். ஆரம்பப் படங்கள் தவிர்த்து பின்னர் வந்த படங்களில் வெறுமனே ஒன்றிரெண்டு பாடல்களை மாத்திரமே நன்றாகப் பண்ணியிருப்பார். பின்னணி இசையில் பெரிதாகச் சோபிக்கவில்லை இவர். ஆயுத பூசையில் இவரின் வானவில்லில் சேலைகள் நெய்யட்டுமா நட்சத்திர மலர்கள் கொய்யட்டுமா என்ற தாலாட்டு வகைப்பாடல் இன்னும் கேட்கத் திகட்டாதது. இன்னொன்று சம்மர் இன் பெத்லகேமில் வந்த எத்ரயோ ஜென்மமாய்.. இதன் மூலப்பாடலான செங்கோட்டையில் வரும் பூமியில் பூமியில் பூமழை நான் தூவவா.. இனிப்பின் உச்சம்! பிரபு நடித்த ஊட்டியைக் கதைக்களனாகக் கொண்ட ஒரு படத்தில்.. பூங்காத்து வீசும் பொன்மாலை நேரம்... காதோடு ஏதோ கூறாமல் கூறும் என்ற பாடலும் உன்னத வகைக்குரியது! முஸ்தபாவில் கண்ணுக்கும் கண்ணுக்கும் இஷ்கு இஷ்கு.. அரசியலில் வாராய் என் தோழியே.. நேதாஜியில் நெருங்க நெருங்கத் தான் நெருப்பாச்சே.. சுபாஷில் முகம் என்ன மோகமென்ன.. மற்றும் பிரியம், உயிரோடு உயிராக, அன்பு போன்றவற்றில் அனைத்தும் பாடல்களுமே தேனிமையானவை! இப்போது தேவி சிறீப்பிரசாத்து, தமன் போன்றவர்களில் பாடல்களைக் கேட்டுத் துன்புறும் போது 90களில் இருந்த அனைத்து இசையமைப்பாளர்களின் அருமை பெருமைகள் புரிகின்றன.

சே. குமார் said...

நல்லதொரு இசையமைப்பாளர் பற்றிய அருமையானதொரு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பா....

ஜீவன் சுப்பு said...

ரெம்ப டீட்டேயிலான பதிவு . ஜன்னல் ஓரம் ஒரு முறை கேட்டேன் ... வழக்கமான ஈர்ப்பு குறைவாக இருப்பது போலவே உணர்வு . மீண்டும் கேட்கவேண்டும் .