Saturday, May 2, 2009

கானக்குயில் - சுவர்ணலதா..!

1982 ல் வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி யால்  அறிமுகபடுத்தப்பட்டவர். முந்தைய தலைமுறை பாடகிகளில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு எப்படி ஒரு தனித்த அடையாளம் கிடைத்ததோ அது போன்றே கேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான சொர்ண குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ண லதா.

எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 90-ல் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல்தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையில்லை.அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தின் "போவோமா ஊர்கோலத்திற்காக" தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்று தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பல படங்களுக்கு பாடும் வாய்ப்பை பெற்று 90களில் தமிழ் திரையுலகில் கோலாச்சினார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

இளையராஜாவின் அற்புதமான இசையில் இவர் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச","என்னுள்ளே என்னுள்ளே" போன்ற பாடல்களால் இசைப் பிரியர்கள் மட்டுமன்றி சக பின்னணி பாடகர்கள்,பாடகிகளையே தன் குரலால் மதிமயங்கவைத்தவர்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்த்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவரின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடியிருக்கிறார்.1996ம் ஆண்டு வெளியான "கருத்தம்மா" படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருது இவரைத் தேடிவந்தது. ரஹ்மானின் இசையில் சில ஹிந்தி படங்களிலும் பாடியிருக்கிறார்.

இவர் பாடிய மேலும் சில பாடல்கள்:

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட -உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்ம துரை
அடி ராக்கம்மா கையத் தட்டு - தளபதி
கண்ணில் ஆடும் ரோஜா -கேப்டன்
உன்னை எதிர் பார்த்தேன் - வனஜா கிரிஜா
அந்தியில வானம் - சின்னவர்
உசிலம்பட்டி பெண்குட்டி - ஜென்டில் மேன்
முக்காலா முக்காபுல்லா -காதலன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
புது ரோஜா பூத்திருக்கு -கோகுலம்
மல்லியே சின்ன முல்லையே -பாண்டித்துரை
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
அக்கடான்னு நாங்க -இந்தியன்
குச்சி குச்சி ராக்கம்மா - பம்பாய்
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் - பாட்டு வாத்தியார்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா - உடன் பிறப்பு
சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை
(ரொம்ப நீளமான பட்டியல் இருக்கு)

இசையமைப்பாளர்கள் தேவா,சிற்பி,பரத்வாஜ்,வித்யாசாகர்,ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட்பாடல்களை பாடியிருக்கும் இவரின் குரலை இப்போது வரும் பாடல்களில் கேட்க முடிவதில்லை,சுவர்ணலதாவின் காந்த குரலை மீண்டும் நிறைய பாடல்களில் கேட்க வேண்டும் என்ற ஒரு சாதாரண ரசிகனின் வேண்டுகோளாய் இந்த பதிவு.


10 comments:

  1. yes swarnaltha is great singer. AR Rahman hemself said this statement.

    One more great song is, tirumana malargal taruvayo totathil.

    List is may.

    Thanks for the post.

    ReplyDelete
  2. அருமையான பதிவு நாடோடி இலக்கியன்.
    எனக்கு மிகவும் பிடித்த குரல் அவருடையது.
    “மாலையில் யாரோ’ பாடலை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது.
    ‘ஊரெல்லாம் உன் பாட்டு’ம் அது போலவே...
    இன்னொமொரு எனக்குப் பிடித்த சுவர்ணலதா பாடல்,” வெடலப் புள்ள நேசத்துக்கு” ப்டம் ‘பெரிய மருது’..

    ReplyDelete
  3. @குப்பன்_யாஹூ ,
    திருமண மலர்கள் தருவாயா அருமையாண பாடல்.இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில் போறாளே பொன்னுத்தாயி பாட்டில் பிறந்த வீட்டை விட்டு பிரிந்து செல்லும் சோகத்தை தன் குரலில் கேட்பவரின் நெஞ்சத்தை பிழிவதுவதுபோல் பாடியிருப்பார்,அதற்கு முற்றிலும் மாறாக பிறந்த வீடே புகுந்த வீடாகுதே என்று சந்தோஷம் கலந்த ஏக்கத்தை திருமண மலர்கள் பாட்டில் வெளிப்படுத்தியிருப்பார்.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க குப்பன்_யாஹூ .

    ReplyDelete
  4. @ தமிழ் பறவை,
    பெரிய மருது பாடலை நினைவூட்டியதற்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  5. அருமையான பதிவு நாடோடி இலக்கியன்

    ReplyDelete
  6. @முரளிகண்ணன்,

    மிக்க நன்றி முரளி.

    ReplyDelete
  7. நாடோடி இலக்கியன்,

    ஸ்வர்ணலதாவின் முதல்பட தகவலுக்கு நன்றி.

    sukravathanee.org -இல் பாடல்கள் பற்றிய ஒரு பதிவில் ஸ்வர்ணலதா பற்றி எழுத நினைத்து, அவரது முதல் படம் பற்றி தேடிய போது உங்கள் வலைப்பூவை பார்க்க நேரிட்டது.

    உங்களுடைய வேறு சில பதிவை படித்தேன்,தஞ்சாவூர் குசும்பு தூக்கலாகவே தெரிகிறது. அருமை.

    பாடல்களைப் பொறுத்தவரையில் உங்கள் ரசனை எனது ரசனையுடன் மிகவும் பொறுந்திப்போகிறது.

    அன்புடன்
    காத்தவராயன்

    ReplyDelete
  8. நன்றி காத்தவராயன்,(இன்னும் எழுத ஆரம்பிக்கலியா நண்பா?)

    ReplyDelete
  9. //எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 90-ல் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல்தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையில்லை.//

    இல்லை நண்பரே..அதற்கு முன்னரே என் ராசாவின் மனசிலே படத்தில் இவரது 'குயில் பாட்டு..வந்ததென்ன இளமானே'பாடல் பிரபலமடைந்திருந்ததுதான். சின்னத்தம்பியில் இரண்டு பாடல்கள் இவரை உச்சத்துக்குக் கொண்டுசென்றன. அதன் பிறகு நிறையப் பாடல்கள்.
    சில பாடல்களை இவரைத் தவிர்த்து வேறு யாரும் சிறப்பாகப் பாடிவிட முடியாது எனத் தோன்றும்.

    'அலைபாயுதே' படத்தில் 'எவனோ ஒருவன்', 'வள்ளி' படத்தில் 'என்னுள்ளே என்னுள்ளே','சத்ரியன்' படத்தில் 'மாலையில் யாரோ மனதோடு பேச'

    இப்பொழுது இவருக்கு வாய்ப்புக்கள் இல்லையென்பதில் வருத்தம்தான்..

    நல்ல பதிவு..தொடருங்கள் !

    ReplyDelete
  10. நன்றி ரிஷான்,(இரண்டு பாடல்களுமே ஒரே நேரத்தில் வந்தைவே 1991 என்று நினைவு,ஆனால் எந்த படம் முதலில் வெளிவந்தது என்றுத் தெரியவில்லை,இரு பாடல்களுமே பிரபலமானவை என்றாலும் தமிழகத்தைப் பொருத்தவரை 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் அனைவராலும் முனுமுனுக்கப்பட்ட பாடல்,இப்பாடலின் சூப்பர் டூப்பர் ஹிட்டாலேயே அவர் பெரிதும் அறியபட்டார்(இந்த பாடலுக்கு பிறகுதான் நானும் அவரைப் பற்றி அறிந்து கொண்டேன்).தகவலுக்கு நன்றி ரிஷான்.

    ReplyDelete