Tuesday, June 5, 2012

வண்டல் மண் கதைகள்-4

மேலக்காத்து சன்னமா வீசிக்கிட்டு இருந்தது. புள்ளயார் கோயில் அரசமரத்தடில துண்ட விரிச்சி ,ஒரு கைய தலைக்கு முட்டுக்கொடுத்து சீரங்கத்து பெருமாள் கணக்கா ஒருக்கலிச்சுப் படுத்துக் கெடந்த பொன்ராசு, கட்ட வெரலுக்கும், ஆக்காட்டி வெரலுக்கும் நடுவுல புறா எறக வச்சி, தயிறு கெடையிற மாதிரி இங்கிட்டும் அங்கிட்டுமா காதுக்குள்ள எதமா கொடஞ்சி அதுக்குத்தக்கன கண்ண சொருகி,வாயக் கோணி தன்னை மறந்து லயிச்சுப் போயிக் கெடந்தான்.
கருக்கல்லயே எந்திரிச்சு வெரசா கால வேலையெல்லாம் முடிச்சி, பழையக் கஞ்சியக் குடிச்சிட்டு நேரா கோயிலுக்குதான் வருவான். வந்ததும் மொத வேலையா கோபுரத்தில் இருந்து எறஞ்சு கெடக்குற புறா எறகுகல்ல நல்லதாப் பாத்து ஒண்ண எடுத்துக்குவான், எறக அவன் தேர்ந்தெடுக்கிறதே நல்ல வேடிக்கயா இருக்கும், தேங்காயத் தட்டிப்பாக்குற மாதிரி ரெண்டு கிடுத்தம் சுண்டிப் பாத்து,அதன் கெட்டிதன்மை திருப்தியா இருந்தா எடுத்து, நுனிய ஒதுக்கி, கொஞ்சம் கீழே யெறக்கி சர்ர்ர்...ருன்னு ஒரு இழு, அப்படியே அட்ட பூச்சி மாதிரி எறகு மசுரு சுருட்டிக்கிட்டு விழும், அதே மாரிக்க ரெண்டு பக்கமும் இழுத்துவிட்டு காது கொடைய ரெடி பண்ணிருவான். ”இதுமாரி கோழி எறகுல ஒட்ரே இழுப்புல இழுக்க வாய்க்காது, பொசுக்குன்னு ஒடஞ்சு போவும்”ன்னு அங்கன நிக்கிறவய்களுக்கு கேக்கேமயே வெளக்கம் வேற கொடுப்பான். விவசாய வேல ஆரம்பிக்கற வரைக்கும் இப்படி அரசமரத்தடிலதான் எவனாயாச்சும் புடிச்சு வெட்டி ஞாயம் பேசியபடி ஓடும் அவம் பொழப்பு .
”யோவ் பங்காளி, மினி பஸ்ஸு வந்திட்டு போயிருச்சா”ன்னு ராமூர்த்தியின் கொரல கேக்கவும், மெதுவா எறக காதவிட்டு வெளில எடுத்த பொன்ராசு, பீடி புடிக்கிறவன் கையில பீடிய வச்சிக்கிற மாதிரி, எறக கையில புடிச்சிக்கிட்டே, ”பத்தர வண்டியா ? இனிமேதான் வருவான்”ன்னு சொல்லிட்டு,”வாய்யா, குந்து போவலாம்”ன்னு ராமூர்த்திய கூப்ட்டான்.
”எனக்கு வேல கெடக்கு நா போறேன்,பொறய்க்கா பேசிக்குவோம்”ன்னு கெளம்பிய ராமூர்த்திய, “ஏலேய் இவன, விசியமாத்தான்டா குந்த சொல்றேன் வா”ன்னு மறுவத்ரியும் கூப்புட்டான் பொன்ராசு.
”அட என்னன்னுதான் சொல்லு, வெரசா போவனுங்கிறேன்”ன்னு அவசரப்பட்டான் ராமூர்த்தி.
“ஒண்ணுமில்ல..நம்ம கிட்டிண‌ ம‌வ‌ன் பெரிய‌வ‌னுக்கு பொண்ணு தெவ‌ஞ்சிருக்குன்னாய்ங்க‌ளே எந்த ஊரு, எவ்வடம்னு தெரியுமா?”
"அட‌ நீ வேற‌, அத‌த்தான் க‌ல‌ப்பு க‌ல‌ச்சு விட்டுட்டாய்ங்க‌ளே" ன்னு சொல்லிக்கிட்டே அவனும் கைலியை சூத்தாம்பட்டைக்கு மேல தூக்கிவிட்டு பச்சக் கலர் டவுசர் தெரியும்படி அங்கன கெடந்த முண்டுக் கல்லுல ஒக்காந்தான்.
“அடங்கொப்புரான”ன்னு படுத்திருந்தவன் பட்டுன்னு எந்திரிச்சு ஒக்காந்து “என்ன‌ய்யா இப்ப‌டி சொல்ற‌, க‌ட்டைக்கு க‌ட்ட‌ குந்தி எந்திரிச்சி, இல்லாத நட்டன அடிச்சவனுக்கெல்லாம் க‌ல்யாண‌மாயி போச்சு, இவ‌ன் ஒரு வம்பு தும்புக்கும் போவாம ப‌ம்ப‌ர‌ங்க‌ண‌க்கா வேல வெட்டின்னு சுத்திக்கிட்டு இருப்பான், இவ‌னுக்குப் போயி த‌ட்டிக்கிட்டே போவுத‌ய்யா”
“அதான் ஊருக்கு ரெண்டு பேரு கெடந்துக்கிட்டு கெளம்பிராய்ங்களேய்யா, இல்லாது பொல்லாதுமா சொல்லி கலப்புக் கலச்சுட”
“ ஊருக்கு ஊரு இதேதான் சொல்றாய்ங்க ,மெதுவா எவன் இந்த வேலய செய்யுறான்னு கண்டு சுளுக்கெடுத்துவுடணும்டா, தாயொலியல”.
“ எவனோ நம்ம ஊரு ஆளுவொ தானாம்யா, கெச்சலா ஒசரமான்னு அடையாளம் சொல்லியிருக்காய்ங்க” அதான் இன்னாருதான்னு யோசிக்க முடியல.
“ஏன்டா, ஒரு வேள மேப்படியானா இருக்குமோ” ன்னு மருதராசு வீட்டைக் கண்ணக் காட்டினான் பொன்ராசு.
“நான் என்னத்த ஒங்கிட்ட சொல்றதுன்னு நெனச்சேன், நீ பட்டுன்னு சொல்லிட்ட, அவந்தான்னு எல்லாரும் பேசிக்கிறாய்ங்க,கிட்டிணன் இதை லேசுல வுட மாட்டேனு சொல்லி, வெட்டிக்காட்டு ஒயின்சுக்கு போயிருக்காரு, இன்னைக்கு ரவளதான் நடக்கப் போவுது”
“நாஞ்சொல்றேன் இந்த மாதிரி குடி கெடுக்குற வேலய செய்ய இவன விட்டா நம்மூர்ல ஆளு இல்ல,அதுவும் அடையாளமும் பொருந்திப் போவுது” “ஆமாமா, அவனுந்தான் கல்யாண வயசுல ஆணும் பொண்ணும் வச்சிருக்கான், எல்லாம் நல்லதுக்கா”
இவய்ங்க இப்படி பேசுற மருதராசை, ஊருக்குள்ள எவனுக்குமே புடிக்காது. ஏன்னா அவன் டைப்பு அந்த மாதிரி. எந்த விசயமானாலும் எகனைக்கு மொகனையா பேசுறது, தேவ ,திருவிழான்னா ஆளுகளுக்குள்ள வம்பிழுத்துவிடுறது, ஏலம் விட்ட கொளத்துல திருட்டு மீனு புடிக்கிறதுன்னு கிராதகம் புடிச்ச வேலையாதான் பண்ணிக்கிட்டு இருப்பான். எவனாவது எதுத்துக் கேட்டான் செத்தான் ,அந்த மாதிரி நாராசமா பேசுவான், அவன் வாயிக்கு பயந்தே நரவல கண்டா ஒதுங்கன ஒதுங்கி போயிருவாய்ங்க.சரியான சிலுவுனிப்பய.
”சரிய்யா நான் கெளம்புறேன்”ன்னு கெளம்புன ராமூர்த்திக்கிட்ட அடுத்த கொக்கியப் போட்டான் பொன்ராசு,” பஸ்ஸு வந்திருச்சான்னுக் கேட்ட,அப்புறம் போறங்கிற, யாரும் விருந்தாடி வர்ரவொல”ன்னு பொன்ராசு கேட்டுக்கிட்டு இருக்கறப்பவே, “திருட்டு வக்காளிய, எங்கேயிருந்து எங்கடா போறிய கலப்பு கலய்க்க, நாறக் !@$!$, பொண்ணு கெடைகிறதே கடுசா இருக்குன்னு எம் மொவனுக்கு கீழச்சீமையில போயி நாயா அலஞ்சு பொண்ணு தெவச்சு, தேதி குறிக்கிறதோட இருந்தத, தேவடியா மொவய்ங்க, அங்க தெக்கே போயி கலச்சு விட்டுருக்காய்ங்க, கொப்ப மொவய்ங்களா அடையாளம் எல்லாம் சொல்லியிருக்காய்ங்க, அந்த #@டா மொவனுக்கு இன்னைக்கு இருக்கு, இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்” என்று தண்ணிய போட்டுவிட்டு ரோட்டுல அலப்பற பண்ணிக்கிட்டே வந்துக்கிட்டு இருந்தான் மேப்படியான் மருதராசு.

Thursday, May 31, 2012

வண்டல் மண் கதைகள் - 3

”டேய் குவாட்டர் ஃபைனல்ல நம்ம கூட மோதப் போறது சில்லத்தூர் டீம், செம்ம ஃபார்ம்ல இருக்காய்ங்க, இன்னைக்கு கண்டிப்பா மதியரசன எப்படியாச்சும் போட்டு இழுத்துகிட்டு போயிடனும், இவய்ங்கள மட்டும் ஜெயிச்சிட்டோம்னு வெய்யி கப்பு நமக்குதான்” என்றான் கையில் கிரிகெட் பேட்டோடு நின்று கீழே கிடந்த கரும்பு சக்கையை பந்தாக பாவித்து தட்டியடியே நின்ற கோபு. 

”அவன எங்கடா இப்பயெல்லாம் பாக்க முடியுது,முந்தா நாளு பாத்தேன், மேச்சு இருக்குடா போகனும்னு சொன்னேன், உளுந்து அரிக்கணும், வேல இருக்குன்னான், சரின்னுட்டு இப்போ போனடிகிறேன், ரிங்கு போயிட்டே இருக்கு எடுக்க மாட்டேங்கிறான்டா” என்றான் தங்கப்பன்.

பக்கத்து ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்சில் ரெண்டு ரவுண்ட் ஜெயித்துவிட்டு இதோ இன்னைக்கு நடக்கவிருக்கும் குவாட்டர் ஃபைனலுக்கான மேட்சுக்கு, டீமை இன்னும் ஸ்ட்ராங்காக்கத்தான் மதியரசன தேடிகிட்டு இருக்காய்ங்க. மதியரசன்தான் இவைங்க டீமின் ஆல் ரவுண்டர். ஓப்பனிங் பௌலிங்கும் சரி ,பேட்டிங்கும் சரி அவந்தான். முக்கியமா பௌலிங்கில் கிராமத்தானுங்களுக்கே உரிய மாங்கா அடியை இடையிடையே வீசி , நல்லா ஆடிட்டு இருக்கிறவய்ங்கள க்ளீன் போல்டாக்குவதில் மன்னன்.

“என்னாது உளுந்து அரிக்கிறானா, நீ வேற அவந்தான் வத்தலாம்பட்டியிலேயே குடியா கெடக்குறான்டா, அவரு வேற முக்கிய சோலியா திரியிறாரு” என்று கண்ணடித்து நக்கலாச் சிரித்தான் முத்துக்குமார்.

முத்துக்குமார் ஏதோ அவல் கொண்டுவந்ததை அறிந்து ஆசையாய் மெல்லும் ஆவலில் எல்லோரும் ஆர்வமாய் அவனை என்னடா சொல்ற என்பதாய் பார்க்க, முத்து தொடர்ந்தான்,

“டேய் வத்தலாம்பட்டி வசந்தா தெரியுமா? அதான்டா செண்டுக்காரி, அந்த பொம்பளைகிட்ட மதி அப்பாரு பேச்சு வார்த்தையிலே இருக்காராம் ” என்றுவிட்டு சிரித்தான்.

“அது பெரும் பார்ட்டில்ல , எப்படிடா இவரோட லிங்கானுச்சு, நம்புற மாதிரி இல்லையே” என்றான் கோபு.

”நெசமாத்தான்டா அந்த பொம்பள ஊரணிகாட்டு பேங்குக்கு அடிக்கடி குழு பணம் கட்ட போகும் , அது மாதிரி போகையிலே எப்பயோ கடைசி பஸ்ஸ விட்டுட்டு நின்னிருக்கு, நம்ப மதியப்பாரு அப்போன்னு பார்த்து அங்கிட்டு வண்டியிலே வந்திருக்காரு , அப்படியே பிக்கப் பண்ணவருதான் இன்னும் இறக்கி விடலயாம் ” என்றுச் சொல்லி சிரித்த முத்து தொடர்ந்தான்.

மதி அம்மா இத பத்தி அரச பொரசலா கேள்விப்பட்டு கேட்டப்பயெல்லாம் இல்லேன்னு அடிக்க போயிருக்காரு, ஆனா அவ்வோ ரெண்டு பேரும் சோடிபோட்டுகிட்டு போனத நம்ம ஊரு பொம்பளைக யாரோ பாத்துட்டு மதியம்மாகிட்ட சொல்ல , வேற வழியில்லாம மதிகிட்ட வெவரத்த சொல்லி அழுதிருக்கு அவ்வோ அம்மா. அதான் மதிப்பய ரெண்டு பேரையும் கையுங் களவுமா புடிக்கிறேன்னு யாருக்கும் சொல்லாம அங்க போயி சுத்திகிட்டு இருக்கான். இந்த கூத்து நாலஞ்சு மாசமா நடந்துகிட்டு இருக்கு, உங்களுக்குத்தாண்டா தெரியாம இருந்திருக்கிய” என்று முடித்தான்.

“அந்த பொம்பளைக்கு எளசா இருந்தா கசக்கும்போல, பாரு முன்னாடி வெட்டிக்காட்டு மணியாரு இப்போ மதி அப்பாரு” என்று சிரித்தான் கோபு.

”இதுல என்ன காமெடின்னா நேத்து மதி அப்பாரு எங்க அப்பாருகிட்ட ‘இந்த பய அங்கயே சுத்திகிட்டு மானத்தை வாங்கிட்டு இருக்கான், அவன் பண்ணுறது ஒன்னும் மொறையில்ல, பாக்குறவய்ங்க என்ன நெனப்பாய்ங்க,ஓ மவன்கிட்ட சொல்லி கொஞ்சம் அவனை கண்டிக்க சொல்லுய்யான்’னு பொலம்பியிருக்காரு” என்றான் முத்து.

“நல்லாயிருக்குடா கதை அந்தாளு அங்க போறதுமில்லாம ..”என்று ஆரம்பித்த கோபு ,“ஏ தம்பியளா ” என்றபடியே பாலகட்டைய நோக்கி மதியம்மா வந்துகிட்டு இருந்துதத பார்த்ததும்.”அடிச்சாம் பாரு சிக்சு” என டக்குன்னு பேச்சை மாத்தினான் .

“என்ன சின்னம்மா என்னா விசியம் மதி எங்க? கொல்லையிலயா நிக்குறான்?” என்றான் முத்து வெகுளியான முகத்தோடு.

“ம்ம் கொல்லையில நிக்குறானா? ஏன் அவன் எங்க போறான் வறான்னு உங்களுக்கு தெரியாதா?” என்று கோபமாய் ஆரம்பித்தவள், சட்டுன்னு தணிந்து ”யப்பா நல்லாயிருப்பியய்யா, எம்புருஷன் இருக்கானே ஊர் மேயிர நாயி,அது எப்படியாச்சும் போயி தொலையிது, எம்புள்ளய கொண்டு வந்து சேத்துருங்கய்யா, ஆயி மாதிரியே இருந்திருக்காளே மவளும்” என்று ஒப்பாரி வைத்தாள்.

Tuesday, May 15, 2012

வண்டல் மண் கதைகள்-2

”அம்பலாரு மாமோய், எங்கின இருக்கிய” என்று அம்பலார் வீட்டு கரும்புக் கொல்லை வரப்பில் நின்னுகிட்டு குரல் கொடுத்தான் வேலன்.

ஏக சந்தோஷமா இருக்கும் வேலனின் முகத்தைப் பார்க்கும்போதே அவனப் பத்தி தெரிஞ்சவய்ங்களுக்கு ஓரளவுக்கு விஷயம் புடிபட்டுரும். அதுவும் அம்பலாரை இந்த உச்சி வெயில் நேரத்துல , தலையில துண்டுகூட போடாம தேடிகிட்டு வந்திருக்கான்னா கண்டிப்பா ஊருக்குள்ள ஏதோ பிரச்சனைங்கிறதை உறுதி பண்ணிக்கலாம்.

வண்ணாந்தொற ஆலமரத்தடியில அழுக்குத் துணிக்கெல்லாம் ஓருமண்ண போட்டுட்டு இவ்வளவையும் இன்னிக்கு தொவைச்சு முடிக்கணுமேன்னு எரிச்சலாய் ஒக்காந்து வெத்தலாக்கு போட்டுகிட்டு இருவன்கிட்ட, தெக்கித்தெரு சொக்கலிங்கம் வந்து சொன்ன சேதியதான், தாக்கலா கொண்டுகிட்டு வேலன் இப்போ அம்பலார தேடிகிட்டு வந்திருக்கான்.

“யாருப்பா அது” என்ற அம்பலத்தின் குரலுக்கு,”நாந்தான் மாமோய் வேலன்” என்றான்.

“வேலனா, இங்கிட்டு கீழண்ட கொல்லை பம்ப்செட் ஓரமா நிக்கிறேன் வா” என்ற அம்பலத்தின் பதிலுக்கு மின்னலாய் போய் நின்றான் வேலன்.

சொன அறுக்காம இருக்க சோலக்கொல்லை பொம்மைக்கு போட்டிருக்கும் தொம்பா தொம்பா சட்டை மாதிரியான ஒரு பழைய சட்டையை போட்டுகிட்டு, கரும்புக்கு தோகை உரிச்சிகிட்டு இருந்த அம்பலம் வைரக்கண்ணுக்கு ஐம்பது வயசிருக்கும். பாத்தா நாப்பதுதான் சொல்லலாம். அப்படி ஒரு தோற்றம், கடுமையான உழைப்பாளிங்கிறதால இயல்பிலேயே வலிமையான தேகம்.

“என்னடா வேலா, மொட்ட வெயில்ல என்னைய தேடிகிட்டு, என்னா விசியம்” கேட்டார் அம்பலம்.

ஒரு மாதிரி அசட்டு சிரிப்போட தலைய சொரிஞ்சிகிட்டே “ஒன்னுமில்ல மாமா , இந்த தெக்கித்தெரு சொக்கு சம்சாரத்த மாடு மேய்க்க போன எடத்துல, பழனியம்மா மவன் வடிவேலு ஏதோ கலாட்டா பண்னிபுட்டாப்ளயாம், அதான் சொக்கு பஞ்சாயத்த கூட்டச் சொல்லி தாக்கல் சொல்லிவிட்டாப்ல”

“தூத்தேரி, எதுக்கெடுத்தாலும் அருவா தூக்குற பய சொக்கு, தெரிஞ்சும் இந்த கிருத்துருவம் புடிச்ச நாயி அங்க போயி வாலாட்டியிருக்கு, மாட்டு வைத்தியன் கிட்டிணங்கிட்ட சொல்லி கிட்டி போட்டு அடிச்சிவிட்டாத்தான் அடங்குவான் போலிருக்கு” என்றபடியே வேற ஏதோ சொல்ல வந்த அம்பலம், வேலன் காட்டும் சுவாரஸ்யத்தைப் பார்த்து சட்டுன்னு சுதாரிச்சு ”சரி சரி நீ கெளம்பு தோவையெல்லாம் கரபாச்சிட்டு வறேன்” என்றார்.

மீண்டும் அதே அசட்டு சிரிப்போடவே “சரி மாமா நான் மேல வலவுகாரவுகளுக்கும் சொல்லணும், நேரமா சாவடிக்கு வந்துருங்க ” என்றபடியே வேலன் காத்தா போயிட்டிருந்தான். இன்னிக்கு வேலன் இருக்குற குசிக்கு இன்னும் ரெண்டு ஊரு துணியக்கூட வெளுப்பான்.

இப்பயெல்லாம் மாசம் பொறந்தா இப்படி ஒரு பஞ்சாயத்துன்னு ஆயிபோச்சு . இவிங்களுக்கு என்னன்னு நாம பஞ்சாயத்து பண்ண” என்று தனக்குதானே புலம்பிய அம்பலம், சட்டைய கழட்டி வரப்புல வச்சிட்டு , வெத்தல சீவ பொட்டலத்தை பிரிக்கவும், ஆறுமுகம் பொண்டாட்டி சரசு புல்லறுக்க கரும்புக் கொல்லைக்குள்ள நொழையவும் சரியா இருந்துச்சு.

Thursday, May 3, 2012

வண்டல் மண் கதைகள்-1

”சித்தப்பா, ஓ மச்சான் மவன்கிட்ட சொல்லிவய்யி, கால கைய முறிச்சாத்தான் அடங்குவான் போலருக்கு”

“வருஷா வருஷம் உங்களுக்கு இதே பொழப்பா போச்சுடா, சரி அவன் தண்ணி கட்டினதுக்கு அப்புறமா நீ கட்டிக்கடான்னாலும் கேக்க மாட்டேங்குற”

“யோவ், என்ன அவனுக்கு பரிஞ்சு பேசற,நல்லாயில்ல பாத்துக்க. விடிய காலம் மூணு மணிக்கெல்லாம் ஆத்துக்கு போயி, கிளைவாய்க்கா மதக திறந்து, ஒவ்வொருத்தங்கிட்டயா போராடி நாங்க தண்ணி கொண்டுவருவோம், வக்காலி அவம்பாட்டுக்கு நோகாம மடைய திறந்து வச்சுக்குவான், கேட்டா குத்தம், நல்லாயிருக்குய்யா ஞாயம்”

”ஏலேய் புரியாம இல்லடா, அவன் ஒரு கொணங்கெட்டவன், பேசிக்குவோம் கோவப்படாம போ”

“என்னத்த கிழிச்சியோ போ, பாத்துக்கிட்டே இரு , இன்னொரு வாட்டி வாலாட்டுனான்னு வையி மவன அவ்வளதான் சொல்லுவேன்” என்றபடியே இளங்கோ பய மேலுள்ள தாறுமாறான கோபத்தை எம்பங்காளி சேகருகிட்ட கத்திவிட்டு குளத்து பக்கம் நடையைக் கட்டினேன்.

மட்ட மத்தியானம், உச்சி வெயிலுக்கு இதமா குளத்துக்குள்ள எறங்கி தண்ணிக்குள்ள நல்லா முங்கி முங்கி எந்திரிச்சா, ஏதோ மேல வந்து விழற மாதிரி இருந்துச்சு. 

சுத்தி முத்திப் பார்த்தேன், பக்கத்து தொறையில அவ மட்டும் குளிச்சிட்டு இருந்தா, மறுபடியும் சுத்திப் பார்த்தேன், வேற யாரும் அங்கே இல்ல. குழப்பத்தோடே திரும்பவும் முங்க போனேன், சின்னதா ஒரு கல்லு என்னை நோக்கி , பார்த்துவிட்டேன் அவதான், இளங்கோ பய தங்கச்சி. அப்படியே அவளையே பாத்தேன்.

கல்லை அவ வீசாதது போலவே கண்டுக்காம சோப்பு போட்டுகிட்டு இருந்தா, மெல்ல தண்ணிக்குள்ள முங்கி சின்னதா ஒரு நத்தைக் கூடை எடுத்து அவளை நோக்கி வீசினேன், சரியா அவ முதுகுல விழுந்துச்சு, 

டக்குன்னு திரும்பிப் பார்த்து வெட்கத்தோட சிரிச்சா..

நான் மறுபடியும் சுத்தி முத்திப் பார்த்தேன் ...

Friday, April 13, 2012

ஒன்னுமில்ல..

”சரி, எங்க வீடு வந்திடுச்சு , நான் வறேன்டா..”

”செல்வி,கொஞ்சம் நில்லேன். நான் அஞ்சு வருஷமா உங்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நெனக்கிறேன். ஆனா..”

“என்னது”

“ஒன்னுமில்ல”

“சரிடா,வறேன்.”

“ம்”

“ஒரு நிமிஷம் மூர்த்தி, அஞ்சு வருஷம் இல்லடா நல்லா யோசிச்சுப் பாரு இதோட ஏழு வருஷம்”

“என்னது, ஏழு வருஷம்”

“ஒன்னுமில்ல”

Monday, February 6, 2012

பல்பு

”மச்சி , ஈவ்னிங் ஃப்ரி பண்ணிக்கோ சரக்கு இருக்கு”.

“டேய் இன்னைக்கு வேண்டாண்டா ஒர்க் இருக்கு, ஆஃபிஸ்லேருந்து கிளம்ப லேட்டாகும்”

”அப்படி என்னதாண்டா ஆணி புடுங்குவீங்க இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல” என்றவன், ”கிளென்ஃபிடிச் ஃப்ரம் யூகே யோசிச்சுக்க. வச்சிடட்டுமா” என்றான்.

“டேய் டேய் மச்சி பொறுடா ..ம்ம்ம் ஹி ஹி வறேன்டா”

”ஹா ஹா ... சரி நானே உங்க ஆஃபிஸ்ல வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றுவிட்டு போனை கட் பண்ணியவன் என்னுடைய பால்ய கால நண்பன் ரகு.

பெங்களூருவில் அஞ்சு வருஷம் குப்பை கொட்டிவிட்டு போன மாசம்தான் சென்னைக்கு வந்திருக்கான். ரொம்ப நாளா டச்சில் இல்லாமல் இருந்தவன் எப்படியோ முகநூலின் வழியா பிடிச்சிட்டான். இதோ இங்கு வந்து மூன்றாவது முறையாக சந்திக்க போறோம்.

காலையிலே இந்த புளு கலர் செக்டு ஷேர்ட் போடும்போதே தோணுச்சு இன்னிக்கு ரகு கால் பண்ணிட போறான்னு. நான் இதே ஷேர்ட் அணிந்திருந்த நாட்களில்தான் இதற்கு முன்பான இரு சந்திப்புகளுமே நடந்தன. ஆச்சர்யம் என்னென்னா அவனும் கூட பிஸ்தா கலரிலான செக்டு ஷேர்ட்தான் அந்த இரு சந்திப்புகளிலுமே அணிந்திருந்தான். இன்றைக்கும் அவன் அதே ஷேர்ட்டில் வரானான்னு பார்க்கணும்.

சரியா ஆறு மணிக்கு போன் பண்ணினான்,

“ டேய் மச்சி நான் உங்க ஆஃபிஸ் வெளியேதாண்டா நிக்குறேன் ”

”ரெண்டே நிமிஷம்டா ஷட் டவுன் பண்ணிட்டு வறேன்”

வாட் எ கோஇன்ஸிடெண்ட், சொன்னா நம்ப மாட்டீங்க அவன் இன்றைக்கும் அதே ஷேர்ட்டில்தான் இருந்தான். யுனிகானில் அமர்ந்து ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி,

“டேய் மச்சி” என்றதுதான் தாமதம்.

திரும்பியவன் யோசிக்காமல் கேட்டான்,“டேய் உங்க ஆஃபிஸ்லயும் யூனிஃபார்ம்தானா?”

Thursday, January 19, 2012

காணாமல் போன இசையமைப்பாளர்கள்:

ரொம்ப நாட்களுக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.இவ்வளவு அற்புதமான பாடல்களை தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன் ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இப்பதிவு.

"கண்ணுக்குள் நூறு நிலவா","புத்தம் புது ஓலை வரும்" - வேதம் புதிது,
"பொங்கியதே காதல் வெள்ளம்",”இதழோடு இதழ் சேர்க்கும் நேரம்”- மண்ணுக்குள் வைரம் போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன், 90 களின் ஆரம்பத்தில் வெளியான புதிய தென்றல் திரைப்படத்திற்குப் பிறகு என்னவானார் என்பது தெரியவில்லை.இப்படத்தின் பாடல்களும் கூட நன்றாக இருக்கும். குறிப்பாக "தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க" பாடலைச் சொல்லலாம்.

சௌந்தர்யன், நல்ல திறமையிருந்தும் ஏனோ இவரால் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.இவரது முதல் படமான சேரன் பாண்டியன் படத்தின் "சின்னத் தங்கம் ", "வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே" தொடங்கி அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட்டானவை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" பாடலை எழுதியதும் இவரே. இவரின் அடுத்த படமான சிந்து நதி பூவின் "மத்தாளம் கொட்டுதடி மனசு" இன்றும்கூட கிராமப்புறங்களில் அடிக்கடி ஒலிக்கக் கேட்கலாம் .கோபுர தீபம் படத்தின் ’உள்ளமே உனக்குத்தான்’ பாடலுக்கு கிராமத்து இசைப்பிரியர்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்தது.

"உன்னை தொட்ட தென்றல் இன்று " என்ற அற்புதமான மெலடியோடு தலைவாசலைத் திறந்த பால பாரதி,அமராவதியில் "தாஜ்மஹால் தேவையில்லை","புத்தம் புது மலரே", "உடலென்ன உயிரென்ன" என்ற எளிதில் மறக்க முடியாத பாடல்களை தந்து,"யாருப்பா இந்த இசையமைப்பாளர்" என்று இசைப்பிரியர்களின் புருவங்களை உயர்த்தவைத்து அத்தோடு காணாமல் போனவர்தான்.சில வருடங்களுக்கு முன்பு ”மெர்குரிப் பூக்கள்” படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.

வி.எஸ்.நரசிம்மன்,ஒரு காலத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் இரண்டு மூன்று படங்களுக்குத் தொடர்ச்சியாய் இசையமைத்தவர். அச்சமில்லை அச்சமில்லை படத்தின் "ஆவாரம் பூவு","ஓடுகிற தண்ணியிலே" பாடல்கள் இன்றும்கூட தொலைக்காட்சி நேயர்களால் விரும்பி கேட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பாடல்களை முதன் முதலில் கேட்டபோது இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசையில், சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தின் " செண்பகப் பூவைப் பார்த்து" பாடலும் அவரது இசைத் திறமையை எடுத்துக் காட்டிய ஹிட் பாடலே.

"என்ன அழகு எத்தனை அழகு","ஏன் பெண்ணென்று பிறந்தாய்" என்று அசத்தலான பாடல்களோடு லவ் டுடேவில் அறிமுகமாகி ,"மலரே ஒரு வார்த்தை பேசு","சின்ன வெண்ணிலவே" என்று பூமகள் ஊர்வலத்திற்காக இசைவிருந்து படைத்து “நீ மலரா மலரா” என்று அற்புதம் நிகழ்த்திவிட்டு மௌனமான ஷிவா . ”அச்சு வெல்லமே அச்சு வெல்லமே” என்று சக்தியோடு தொடங்கிமுந்தானைச் சேலை முட்டுதா ஆளைஎன்று அரிச்சந்திராவோடு காணாமல்போன ஆகோஷ்(ஆனந்த்,கோபால் சர்மா,ஷ்யாம்), வி.ஐ.பி மூலம் அறிமுகமாகி "மின்னல் ஒரு கோடி" பாடலைத் தந்து ஆச்சர்யபடுத்தி சமீபத்தில் உற்சாகத்தில் அவரா இவர் என்று நினைக்கவைத்த ரஞ்சித் பரோட். கௌரி மனோகரியில் "அருவிகூட ஜதி இல்லாமல் ஸ்வரங்கள் பாடுது" பாடலைத் தந்த இனியவன் போன்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமான படங்களிலே எல்லோரது கவனத்தையும் ஈர்த்து, பிறகு ஒரு சிலருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலும், சிலருக்கு கிடைத்தும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலும் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர இன்னும் இரண்டு இசையமைப்பாளர்களின் கதை சற்று வித்யாசமாய் இருக்கும். இவர்களை காணாமல் போனவர்கள் லிஸ்டிலும் சேர்க்க முடியாது, பிசியானவர்களின் வரிசையிலும் சேர்க்க முடியாது. திடீரென காணாமல் போவார்கள்,திடீரென நான்கைந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவர் "ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்"(மனசுக்குள் மத்தாப்பு),"சின்னப் பூவே மெல்ல பேசு" (சின்னப் பூவே மெல்ல பேசு) என்று ஆரம்பத்தில் அசத்தலான பாடல்களை தந்து பிறகு விக்ரமன் படத்தில் ஒரே டியூனை வைத்து ஏகப்பட்ட படங்களுக்கு "லாலாலா" போட்ட எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றொருவர் அன்னை வயல் மூலம் "மல்லிகை பூவழகில்" என்று அட்டகாசமான மெலடியோடு ஆரம்பித்து "செவ்வந்தி பூவெடுத்தேன்" என்று கோகுலத்தில் தனது திறமையை நிரூபித்து, உள்ளத்தை அள்ளித்தா என்று மிகப் பெரிய ஹிட்டெல்லாம் கொடுத்து பிறகு சில காப்பி&பேஸ்ட் போட்டுவிட்டு இப்போது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டி நடுவராக இருக்கும் சிற்பி.

இப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் இசையமைப்பாளர்கள் அறிமுகமான காலத்தில் இளையராஜா என்ற மிகப்பெரிய இசை சாம்ராஜ்யத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் அல்லது தனக்கான தனி இசை அடையாளம் இலாமல் இளைராஜாவின் இசைப்பாணியை அப்படியே தொடர முயன்றதாலும் கூட அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் போயிருக்கலாம். முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல்.



"ஏதோ நடக்கிறது","தோடிராகம் பாடவா","மல்லிகைப் பூ பூத்திருக்கு" போன்ற அழகான மெலடிகளையும், ரஜினி படங்கள்(மனிதன்,ராஜா சின்ன ரோஜா) உட்பட சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் பல படங்களுக்கு இசையமைத்து சமீபத்தில் மறைந்த திரு.சந்திரபோஸ், பாலைவனச் சோலை("மேகமே மேகமே"),பெண்மணி அவள் கண்மணி("மூங்கிலிலை காடுகளே"), சம்சாரம் அது மின்சாரம்("சம்சாரம் அது மின்சாரம்","ஜானகி தேவி") என்று எண்பதுகளின் மத்தியில் நிறைய படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ் மற்றும் செந்தூரப் பூவே,ஊமை விழிகள்,உரிமை கீதம்(மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்),வெளிச்சம்("துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே") போன்ற வசீகரிக்கும் பாடல்களைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்த மனோஜ் கியான் போன்ற ஒரு காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த இவர்களும் கூட காணாமல் போன லிஸ்ட்டில் இடம்பிடித்தது ஏனோ தெரியவில்லை.



அழகன்,வானமே எல்லை,ஜாதி மல்லி போன்ற படங்களுக்கு இசையமைத்த மரகதமணி(கீரவாணி),கொடிபறக்குது,கேப்டன் மகள் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹம்சலேகா, ரசிகன் ஒரு ரசிகை(”பாடி அழைத்தேன்”,”ஏழிசை கீதமே”) படத்திற்கு இசையமைத்த அமரர் ரவீந்திரன் மற்றும் பூவுக்குள் பூகம்பம்("அன்பே ஒரு ஆசை கீதம்") படத்திற்கு இசையமைத்த சங்கீத ராஜன் ஆகியோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது, காரணம் அவர்கள் தெலுங்கு மற்றும் மளையாளத்தின் முண்ணனி இசையமைப்பாளர்கள்.தமிழுக்கு அவ்வப்போது விருந்தாளிகளாய் வந்த இசையமைத்தவர்கள்.

கங்கை அமரன்,எஸ்.பி.பி மற்றும் டீ.ராஜேந்தர் ஆகியோர் இசையமைப்பதை முதன்மையான தொழிலாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

டிஸ்கி:இது ஒரு மீள்ஸ்

Sunday, May 22, 2011

கண்ணே கட்டிக்க வா..






விக்ரம் படத்தின் ”வனிதாமணி வனமோகினி” மெட்டுக்கு எனது முயற்சி...


கயலோ விழி

கரும்போ மொழி
கொல்லாதே..

குறும்பாய் சிரி
உடும்பாய் பிடி
தள்ளாதே..

ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
ஏகாந்தமடி என்னை ஏதோ செய்யுதடி
ஏராளமாய் எண்ணம் வந்து கொல்லுதடி
என்னைச் சேரடி..

ரசிக்கிறான்
கண்ணில் வலை விரிக்கிறான்..ஓஓஓ..

சிரிக்கிறாள்
கன்னம் ரெண்டில் சிவக்கிறாள் ஓ ஓ ஓ..

கனலாய் கனா தினம் எனை வாட்டாதோ..
புனலாய் வரும் வெள்ளம் வெப்பம் தீர்க்காதோ..

அதரம் வழி
மதுரம் சுவை
வகையாய் எனை அணை

அணைத்தால் உனை
திறக்கும் அணை
இனி நான் உந்தன் துணை..

போதும் போதும்
போதையேறும்
பேதை தாங்காது.. (கயலோ விழி..)


இளமையாய்.
எங்கும் இனிமையாய்.. ஓஓஓ..

திறமையாய்
எல்லாம் திருடினாய்..ஓஓஓ

அடியே என்னில் என்ன புது பூகம்பம்
அடடா பொறு இது வெறும் ஆரம்பம்

இடம் வலம் எது
புரியா நிலை
புதிராய் இன்று
பெண்ணே..

தினம் தினம் இனி
இதுதான் நிலை
புலரி வரை
அன்பே..

ஏழை தேகம்
வேளை பார்த்து
சொர்க்கம் சேராதோ.... (கயலோ விழி..)

Friday, May 6, 2011

திரையில் கிராமத்து மெட்டுகள் 2

சிறிய இடைவெளிக்குப் பிறகு நண்பர் தமிழ்ப்பறவையின் நட்பிற்காக மீண்டும் பாடல் தொகுப்பு. இதுவும் 90 களின் பாடல்களே. திரையில் கிராமத்து மெட்டுகளின் தொடர்ச்சியாய் இத்தொகுப்பு.

1. படம்:பார்வதி என்னை பாரடி
இசை:இளைய ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி,ஜானகி.

2. படம்:சாமி போட்ட முடிச்சு
இசை:இளைய ராஜா
பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன்,சித்ரா.


3. படம்:சின்னத்தாயி
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி.


4. படம்:தங்கமனசுக்காரன்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:மனோ,ஜானகி


5. படம்:புது நெல்லு புது நாத்து
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி

6. படம்:என் உயிர் தோழன்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன்,சித்ரா

7. படம்:சாமுண்டி
இசை:தேவா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி

8. படம்:காவல் கீதம்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி


கொசுறு: வா அருகில் வா பட பாடலான ”மானா மதுரையில் பார்த்தேன் உன்னைக் கண்ட நாளா மதிகெட்டுப் போனேன்” சுட்டி கிடைத்தால் நட்புகள் பகிரவும்.

Friday, April 15, 2011

ஏதோ மோகம் ஏதோ தாகம்...

”ஏதோ மோகம் ஏதோ தாகம் ” - கோழி கூவுது பாடலின் மெட்டுக்கு வரிகள் எழுத முயன்றதன் விளைவு கீழே.

மாலை வேளை
வ‌ந்தான் காளை
தேக‌மெங்கும் தென்ற‌ல் தொட‌
தேவியிவ‌ள் நெஞ்ச‌ம் சுட‌
மோக‌ம் மெல்ல‌..
என்ன‌ சொல்ல‌....

மாலை வேளை
வ‌ந்தாள் பாவை
க‌ன்னியிவ‌ள் க‌ண்க‌ளிலே
காம‌ன‌வ‌ன் அம்புக‌ளை
க‌ண்டேன் நானே
சொர்க்க‌மிங்கே..!

அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்
அந்தி வானம் மஞ்சள் பூசும்
ஆளை எங்கோ கொண்டு சேர்க்கும்

வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்
வாடை மேய்ந்த வாழை தேகம்
வாகை சூட வேளை பார்க்கும்

பருவ‌ ராக‌ம் பாடும் நேரம்
இர‌வு ஏனோ நீளமாகும்
பருவ‌ ராக‌ம் பாடும் நேரம்
இர‌வு ஏனோ நீளமாகும்

செண்டு ம‌ல்லி பூவின் வாச‌மே
ரெண்டு நெஞ்சிலே பார‌மேற்றுமே

(மாலை வேளை...)
ஆளைக் கொல்லும் தேக‌ம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து
ஆளைக் கொல்லும் தேக‌ம் பார்த்து
ஆடிப் போனேன் உச்சி வேர்த்து

கன்ன‌ல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காம‌ன் கூத்து
கன்ன‌ல் வில்லை கண்ணில் பார்த்து
என்னுள் எங்கும் காம‌ன் கூத்து

உன்னைக் க‌ண்ட‌ அந்த‌ நேர‌மே
த‌ந்தை தாயும் ரொம்ப‌ தூர‌மே
உன்னைக் க‌ண்ட‌ அந்த‌ நேர‌மே
த‌ந்தை தாயும் ரொம்ப‌ தூர‌மே

அந்தித் தென்ற‌ல் மெல்ல‌ வீசுதே
வ‌ஞ்சி நெஞ்சிலே ஆசை பூக்குதே..
(மாலை வேளை...)

குறிப்பு:இப்படியான விபரீத முயற்சி இன்னும் தொடரும்.