Showing posts with label திரைப்படங்கள். Show all posts
Showing posts with label திரைப்படங்கள். Show all posts

Thursday, January 23, 2014

80’s - 90's சினிமா டெம்ப்ளேட்

ஊரில் பெரிய பண்ணையார், அவருக்கு பட்டணத்தில் படிக்கும் ஒரு மகள் இருப்பார். மகன்கள் இருந்தாலும் அவர்கள் டம்மி பீஸாகவே இருந்து தங்கச்சி சொல்வதே வேதவாக்காக நினைத்து வாழும் ஆத்மாக்களாக இருப்பார்கள். கல்லூரி விடுமுறையில் பண்ணையாரின் மகள் தனது தோழிகளான நான்கு சப்பை ஃபிகர்களோடு சொந்த ஊருக்கு வருவார். அதே ஊரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து என்ன வேலை பார்க்கிறார் என்பதே சொல்லப்பாடாத ஹீரோவிடம் ‘ஏய் மேன்’ என்று சொடுக்கு போட்டு அழைத்து தனது பண்ணையார் மகள் செல்வாக்கைக் காட்டுவார். அடுத்த நொடியிலிருந்து ஹீரோவிற்கு வேலை கிடைத்துவிடும், அதாவது பண்ணையார் மகளின் திமிரை அடக்குவதையே முழுநேர வேலையாகக் கொண்டு களத்தில் குதித்துவிடுவார்.

இந்த இடத்தில் ஹீரோயினை சீண்டி ஹீரோ தனது நண்பர்களோடு ஒரு பாட்டு பாடியே ஆகவேண்டும்.இங்கே ஹீரோவிற்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு 50 லிருந்து 70 வயது வரை குறைந்த பட்சம் இருக்க வேண்டும். ஏனெனில் எப்படி படு மொக்கை ஃபிகர்களை தோழிகளாக வைத்தால்தான் சாத மொக்கை ஃபிகரை ஹீரோயினா ஆடியன்ஸான நாம் ஏத்துக்குவோமோ அதே போல 40-ல் இருக்கும் ஹீரோவை இளமையாகக் காட்ட இந்த டெக்னிக் ,அதெல்லாம் தொழில் ரகசியமாமாம்.

பாட்டு முடிந்ததும் ஹீரோயின் ஹீரோவைப் பார்த்து,”யூ யூ யூ” என்று கோபமாய் மூன்று முறை  சொல்ல வேண்டும்.மேலும் ‘இடியட்’, ’ஸ்கவுன்ட்ரல்’,’ஸ்டுப்பிட்’,’கெட் லாஸ்ட்’ போன்ற அறிய சொற்களை அவ்வப்போது உதிர்ப்பதில் ஹீரோயின் புலமை வாய்ந்தவராகவும் இருப்பார்.இதன் மூலம் ஹீரோயின் பெரிய படிப்பு படித்தவர் என்பதை பார்வையாளனுக்கு சூசகமாக கடத்துகிறார்கள் இயக்குனர்கள். அந்த வகையில் அவை தவிர்க்க முடியாதவை ஆகின்றன. 

தனது ஆங்கிலப் புலமையை நிரூபித்துவிட்ட ஹீரோயின் அதே கோபத்தோடு கிளம்பிப்போய் ஹீரோ தன்னிடம் செய்த ரவுஸை பண்ணையாரிடம் போட்டுக் கொடுத்து விடுவார். அதுவரை சின்ன வீடுகளுக்கு போய் வருவதை மட்டுமே செய்து கொண்டிருக்கும் பண்ணையார், ஹீரோவை பழி வாங்கக் கிளம்பிவிடுவார். எப்படின்னா சொதப்பலான அடியாட்களோடு படு சொதப்பலான பிளான்களை போட்டு ஹீரோவிடம் வரிசையா பல்ப் வாங்கிகிட்டே இருப்பார். கட்ட கடைசியா ஒரு சுமாரான பிளானை, இசையமைப்பாளரின் பி.ஜி.எம் உதவியோடு படு பயங்கர பிளானாய் நம்மை நம்ப வைத்து இறுதி பல்புக்கு ரெடியாகிவிடுவார். அதுவும் பல்பாத்தான் இருக்குமென்று நூறு சதவிகிதம் தெரிந்தாலும் வெட்கமே இல்லாமல் நாமும் சீட்டு நுனியில் குந்தி பார்க்க ஆரம்பிச்சிடுவோம்.

இதற்கிடையில் ஹீரோவோட ஒரு மொன்னை ஃப்ளாஷ் பேக்கை அந்த ஊரில் உள்ள ஒரு பாவப்பட்ட கேரக்டர் மூலமா அறிந்துகொண்டோ அல்லது ஹீரோவின் உதவும் குணத்தைப் பார்த்தோ ஹீரோவை லவ்ஸ்விட ஆரம்பித்து இரண்டு டூயட்கள்,ஒரு சோகப் பாடலை பாடி முடிச்சிருக்கும் ஹீரோயின், இந்த பிளானை நேரடியாகவோ அல்லது இதற்கென்றே பிரத்யேகமாக எண்டராகும் ஒரு வேலையாளின் மூலமாகவோ ஹீரோவிடம் சொல்லிவிடுவார்.

ஹீரோவும், ஹீரோயின் சொன்ன இடத்திற்குப் போய் அந்த படு பயங்கர பிளானான ஹீரோவின் அப்பா,அம்மாவை கட்டி வைத்திருக்கும் குடோனிலிருந்து அவர்களை மீட்டு வெற்றிக் கொடி நாட்டிவிடுவார்.(ஹீரோவோட தங்கையை பண்ணையாரோ அல்லது அவரது ஆட்களோ ரேப் செய்ததால் தங்கை தூக்கில் தொங்கியதையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை).அங்கே நடக்கும் கலவரத்தில் ஹீரோவிற்காக செதுக்கி கூரா வைத்திருக்கும் ஆப்பில் பண்ணையார் குந்தி உயிரிழந்து விடுவார்.அப்பாலிக்கா ஹீரோயின் குடும்ப குத்துவிளக்காகி ஹீரோவின் குடிசை வீட்டுக்கு போயிடுவார்.

இதே டெம்ப்ளேட்டில் ட்விஸ்ட் ஒண்ணும் வைப்பாய்ங்க அதாவது ஹீரோவும் ஹீரோயினும் அத்தை புள்ள மாமா புள்ள உறவு முறையாக்கும்னு.

1980லிருந்து 1995 வரையிலான தமிழ் சினிமாவில் ரஜினியிலிருந்து ராமராஜன் வரை இந்த டெம்ப்ளேட்டிற்கு தப்பிய ஹீரோக்கள் இல்லை .

Tuesday, July 24, 2012

மூணாம் பக்கம்

மூணாம் பக்கம் 1988ல் பத்மராஜன் இயக்கத்தில் வெளிவந்த மலையாளத் திரைப்படம்.

கடற்கரையோர கிராமம் ஒன்றில் தனது பரம்பரை வீட்டில் ரிட்டயர்மெண்ட் வாழ்க்கையைத் தனிமையில் கழித்து வரும் ஒரு பெரியவர்(திலகன்). அதே ஊரில் இருக்கும் தனது சக வயது நண்பரோடு சேர்ந்து மது அருந்துவது, பழைய கதைகளை பேசிக்கொண்டிருப்பது என்பதாக அவரது பொழுதுகள் கழிகின்றன.

மருத்துவக் கல்லூரி மாணவனான அவரின் பேரன்(ஜெயராம்) விடுமுறையில் அவனின் சில நணபர்களோடு தாத்தாவை பார்க்க வருகிறான். தனது ஒரே மகனின் இழப்பிற்குப் பிறகு ஒட்டுமொத்த அன்பையும் தனது பேரனின் மீது வைத்திருக்கும் பெரியவர் அவனின் வருகையை கொண்டாடி மகிழ்கிறார். 

ஒரு நாள், பேரன் தனது நண்பர்களோடு அருகில் இருக்கும் பீச்சில் குளித்துக்கொண்டிருக்கும்போது அலையில் அடித்துச் செல்லப்படுகிறான்.  அதுவரை மிகச் சாதாரணமான காட்சிகளுடன் பயணிக்கும் திரைக்கதை, பத்மராஜனின் படமாக மெல்ல மெல்ல உருமாற ஆரம்பிப்பது இந்தக் காட்சியிலிருந்தான் என்று சொல்லலாம். அலையில் அடித்துச் செல்லப்படுபவர்களின் உடல் மூன்றாவது நாளில்(படத்தின் பெயர்) கரை ஒதுங்கும் என்பது அங்கே அவர்கள் அனுபவத்தில் கண்டுகொள்கிற உண்மை. அப்படி கரை ஒதுங்குபவர்களில் சிலர் உயிருடனும் இருந்த நிகழ்வுகளும் சில கதாபாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படுகிறது. 

கடலில் அடித்துச் செல்லப்பட்டவன் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பது தெரியாமல் நகரும் அந்த மூன்று நாட்களில்,  சுற்றத்தார் எல்லோரும் கவலையோடு இருக்கும்போதும் பெரியவர் மட்டும் ”அவன் நிச்சயமாய் உயிரோடு கிடைப்பான்” என்று மற்றவர்களிடம் சொல்லியபடி தனது அன்றாட செயல்களை செய்துகொண்டிருக்கிறார்.

மூன்றாவது நாள் கரை ஒதுங்குகிறது பேரனின் உயிரற்ற உடல். அதனைத் தொடந்து நடக்கும் சம்பவங்கள் பத்மராஜனின் மேஜிக்.குறிப்பாய் மனதை கனக்கச் செய்துவிடும் அந்த கிளைமேக்ஸ். அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் இப்படத்தில் நான் ரசித்த சில காட்சிகள் உண்டு. தான் மது அருந்தியிருப்பது பேரனுக்கு தெரிந்துவிடாமல் இருக்க செய்யும் பெரியவரின் பாடிலாங்வேஜ், தனது நண்பரின் பேத்திக்கும், தனது பேரனுக்கும் இடையே காதலை வளர்த்துவிட பெரியவர் செய்யும் விஷயங்கள் குறிப்பாய் பேரனுக்குத் தெரியாமல் இயல்பாய் அவர்களின் சந்திப்புகள் நிகழ்வதுபோல சூழலை கிரியேட் செய்து கண்டுக்கொள்ளாதது போல இருக்குமிடத்திலெல்லாம் திலகனின் நடிப்பு கிளாஸாக இருக்கும். தமிழில்தான் அவரை வில்லனாக மட்டுமே பாவித்துவிட்டார்கள். பேரனின் உடல் கரை ஒதுங்கிவிட்டதா என பெரியவர் அந்த மூன்று நாட்களும் அதிகாலையில் வந்து வந்து கடற்கரையைப் பார்த்துச் செல்லும் காட்சிகள், கடற்கரையில்  ”இது ஆபத்தான பகுதி இங்கே யாரும் குளிக்காதீர்கள்”(தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்) என்று போட் வைக்கும் காட்சி , பேரன் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும்,”நெனச்சேன்” என்றபடியே பெரியவர் காட்டும் முகபாவம் என இப்படி நிறைய காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன அசைப்போட்டு சிலாகித்துச் சொல்ல. முடிந்தால் ஒருமுறை இப்படத்தை பாருங்கள். 


பத்மராஜனின் ”இந்நலே” படத்தைப் பற்றி அடுத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.

Tuesday, June 16, 2009

மலையாளத் திரைப்படங்கள் ஒரு பார்வை

சமீப காலமாக 'உலக சினிமா'வைப் பற்றி பல பதிவுகள் இணையத்தில் பரவலாக வலம் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் நம்ம பக்கத்து மாநிலத்தில் வெளிவந்த சில படங்களைப் பற்றியது இப்பதிவு.

பத்து வருடங்களுக்கு முன்பு திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிப்பில் வங்காள மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களே ஒவ்வொரு வருடமும் மாற்றி மாற்றி சிறந்த படங்களுக்கான விருதுகளை அள்ளிச்செல்லும். எப்போதாவது தமிழ் உட்பட மற்ற மொழிப் படங்கள் அந்த வரிசையில் இடம்பெறும். அப்படி என்னதான் இருக்கிறது இந்த மலையாளப் படங்களில் வாங்க கொஞ்சம் மேலோட்டமா பார்க்கலாம்.

விருது வாங்குகிற படங்களை பார்ப்பதென்றாலே நம்மில் பலருக்கு ஆயாசமாய் இருக்கும்.ஆனால் நான் இங்கே பகிர்ந்து கொள்ளப் போகும் படங்கள் அசத்தலான திரைகதையால் நம்மைக் கட்டி போடும் மலையாளப் படங்களைப் பற்றியது, அதனால் பயப்படாமல் தொடருங்கள்.

பேரரசு,இளைய,சின்ன,புரட்சி தளபதிகளின் படங்களையே பார்த்துவிட்டு திடிரென உலக சினிமாவை பார்ப்பதற்குப் பதிலாக முதல் கட்டமாக வார்ம் அப் செய்து கொள்ளும் விஷயமாக இந்த மலையாளப் படங்களைப் பார்க்கலாம்.(இப்போது வரும் மலையாளப் படங்களுக்கு பேரரசுவின் படங்களை மூன்றுமுறை தியேட்டரிலேயேப் பார்க்கலாம்).நான் இங்கே சொல்லப் போகும் படங்கள் கொஞ்சம் பழைய படங்களே.

மலையாள சினிமாக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.முதலாவதாக அழுத்தமான கதைகளோடு ய‌தார்த்தமான திரைக்கதையமைப்பில் வெளிவந்த கலைப்படங்கள்(ரொம்பப் பொறுமையை சோதிக்கும் படங்கள்),இரண்டாவது புதுமையான/வித்யாசமான கதையமைப்பும் நிறைய ய‌தார்த்தமும் கொஞ்சம் மசாலாவும் கலந்தவை(இந்த வரிசையில் எக்கசக்க அசத்தல் படங்கள் இருக்கு),மூன்றாவது நடுத்தர வர்கத்தின் பிரச்சனைகளை பேசும் குடும்பப் படங்கள் மற்றும் லாஜிக்கெல்லாம் இல்லாத முழுநீள நகைச்சுவைப் படங்கள்.(இயக்குனர் பிரியதர்ஷனின் நிறைய படங்கள் இதில் அடங்கும்). நான்காவதாக ஆக்சன் படங்கள்(தமிழ் படங்களின் பாதிப்பால் சும்மா பறந்து பறந்து அடிக்கும் படங்கள் ) .

(ஐந்தாவதாக 'அந்தப்' படங்களையும் சேர்துக்கலாம் என நீங்க முணுகுவது கேட்குதுங்க,கொஞ்சம் மெதுவா)

இங்கே முதலில் நான் எடுத்துக்கொள்ளப் போவது மோகன்லால் நடித்தத் திரைப்படங்களை மட்டுமே.

மேற்சொன்ன நான்கு பிரிவுகளிலும் மோகன்லால் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். எனது பார்வையில் மோகன்லால் படங்களுக்கு மற்றுமொரு பிரிவை ஒதுக்குவேன்,அது உளவியல் ரீதியான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள்.

கலைப்படங்கள்:

வானப்பிரஸ்தம்(1999):மோகன்லாலுக்கு இரண்டாவது தேசிய விருதை பெற்றுத் தந்தத் திரைப்படம்.ஒரு ஏழை கதகளி கலைஞனின் வாழ்க்கையை பேசிய படம். ரொம்ப பொறுமையாகப் பார்த்தும் பாதி புரியாத படம். நம்ம ஊர் சுஹாசினிதான் இதில் கதாநாயகி. இந்த வரிசையில் இன்னும் சில படங்கள் இருப்பினும் இது ஒன்று போதும் எப்படியிருந்தாலும் நீங்க பார்க்கப் போவதில்லை.

புதுமை மற்றும் வித்யாசமான கதைக்களங்கள்:

கண்டிப்பா மிஸ் பண்ணக் கூடாத படங்கள் என நான் நினைக்கும் படங்கள், இப்பிரிவில். ரொம்பப் பெரிய இன்ரோவெல்லாம் கொடுக்கப் போறதில்லை. சும்மா ஸ்டோரியின் ஒன்லைன் மாதிரி சொல்கிறேன்.

தசரதம்(1989):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்

த‌ன் தாய் செய்த துரோகத்தால், பெண்களை வெறுத்து கல்யாணம் செய்துகொள்ளாமலேயெ குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் கோடீஸ்வரன் ஒருவனுக்கும்(மோகன்லால் ), தனது கணவனின்(முரளி) உயிரைக் காப்பாற்ற, சூழ்நிலையால் வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணொருத்திக்கும்(ரேகா) இடையே குழந்தைப் பாசத்தை வைத்து நடக்கும் போராட்டமும், பெண்கள் மேல் அவன் வைத்திருக்கும் தவறான கருத்தை எப்படி அவள் தகர்க்கிறாள் என்பதுமே கதை. மோகன்லாலின் மிகச் சிறந்த படமாகவும், அவராலேயே மீண்டும் நடிக்க முடியாத கதாபாத்திரமாகவும் நான் நினைப்பது இப்படத்தின் 'ராஜிவ்' கதாபாத்திரத்தைத்தான். சிபிமலயில் இயக்கத்தில் இப்படம் ஒரு மைல்கல். ஏற்கனவே இப்படத்தைப் பற்றி முழு விமர்சனத்தையும் இங்கே எழுதியிருக்கிறேன்.

தேவாசுரம்(1993):
இயக்கம்:ஐ.வி.சசி
கதை:ரஞ்சித்

பாரம்பரியமிக்க குடும்பத்தின் ஊதாரியான வாரிசு(மோகன்லால்), அவனை பழிவாங்கத் துடிக்கும் பரம்பரை எதிரி(நெப்போலியன்) என்று சாதாரணமாக துவங்கும் கதையில், நாயகனின் பிறப்பின் ரகசியம் தெரிய வரும்போது காதநாயகனிடம் ஏற்படும் மாற்றங்களை ரொம்ப உணர்வு பூர்வமாகப் பேசிய படம். இப்படம் தேவர் மகன் படம் பார்த்த எபெஃக்டைக் கொடுக்கும். ரௌடித்தனத்தின் உச்சமாக மோகன்லால், பரதநாட்டிய கலைஞரான ரேவதியை தனக்கு மட்டும் அவரை ஆடிக்காட்ட நிர்பந்திக்கும் போது வேறு வழியில்லாமல் ஆடிவிட்டு பிறகு ரேவதி விடுக்கும் சவால் படத்தின் முக்கியமான காட்சிகளில் ஒன்று. கதாநாயகியாக நடித்த ரேவதிக்கும் அவர் பிலிம் கேரியரில் இது முக்கியமான படம்.

கிரீடம்(1989):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்


தமிழில் அஜித் நடிப்பில்(?) வெளிவந்தது. அதே கதைதான் தமிழில் இருந்ததைப் போல மொக்கையாக இருக்காது. தன் மகனை பெரிய போலிஸ் ஆபிஸராகப் பார்க்கத் துடிக்கும் போலிஸ் தந்தை, சூழ்நிலையால் அதே மகனை குற்றவாளியாக பார்க்க நேர்ந்தால் என்னவாகும் என்பது கதை. தந்தையாக நடித்திருக்கும் திலகனின் நடிப்பிற்காகவே இப்படத்தை பலமுறை பார்க்கலாம். மோகன்லாலிற்கு சிறப்பு ஜூரி அவார்ட் வாங்கித் தந்தப் படம். இதன் இரண்டாவது பாகம் செங்கோல் என்ற பெயரில் வெளிவந்தது.

பரதம்(1991):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்

சங்கீதத்தைப் பிண்ணனியாகக் கொண்ட பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசுக்கும் (நெடுமுடி வேணு),இளைய வாரிசுக்கும்(மோகன்லால்) இடையே நடக்கும் ஈகோதான் கதையின் அடிநாதம். மோகன்லாலின் நடிப்பில் இப்படமும் ஒரு மாஸ்டர் பீஸ். இப்படத்தின் மூலமே மோகன்லாலுவிற்கு முதல் தேசிய விருது கிடைத்தது. நெடுமுடி வேணுவும்,மோகன்லாலுவும் நடிப்பில் நீயா? நானா நடத்திக் காட்டிய படம். இறுதிக்காட்சியில் எப்படிப் பட்டவராக இருப்பினும் கண்கள் கலங்கிவிடும். பல உணர்ச்சிமயாமான காட்சிகளோடு ரசிகனை ஒன்றவைக்கும்படி இருக்கும் இப்படத்தைத் தான் பி.வாசு 'சீனு'வாக்கி குதறித் தள்ளியிருந்தார். பி.வாசுவின் லீலைகளை இந்த பதிவில் இன்னும் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஸ்படிகம்(1995):
இயக்கம்:பரதன்
கதை:பரதன்

தன் மகனின் விருப்பத்திற்கு மாறான படிப்பை, வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கும் ஸ்ட்ரிக்டான ஆசிரியத் தந்தைக்கும்(திலகன்), அதனால் தந்தையையே பிடிக்காமல் நாளைடைவில் ரௌடியாகும் மகனுக்கும் (மோகன்லால்) இடையே நடக்கும் பனிப்போர்தான் கதை.கேரளாவில் சக்கை போடு போட்ட படம். இப்படத்தில் சில்க் ஸ்மிதாவும் இருக்கிறார்.தமிழில் "வீராப்பு" என்ற பெயரில் சுந்தர்.சி நடித்து வெளிவந்தது.தமிழிலும் நன்றாகவே எடுத்திருந்தார்கள்.

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா(1990):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்

நெடுமுடி வேணு ஒரு ஜ‌மின்தார் , அவரின் சொத்துக்களை அப‌க‌ரிக்கும் பொருட்டு உற‌வின‌ர்க‌ளே அவ‌ரைத்தீர்த்து க‌ட்ட‌ ஒரு ரௌடியை வ‌ர‌வ‌ழைகின்ற‌ன‌ர். ஆரம்பத்தில் கொலை செய்ய தக்க சமயம் பார்த்திருக்கும் ரௌடி எப்படி அப்பெரியவரின் உயிரையும், சொத்துக்களையும் உறவினர்களிடமிருந்து காப்பாறுகிறான் என்பது கதை. கதையின் நாயகி கௌதமி. என்றைக்குமே நிலைத்து நிற்கும் அமரகானமான "பிரமதவனம் வீண்டும்" பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றது.ரவீந்திரனின் அனைத்து பாடல்களுமே அசத்தலாக இருக்கும் இப்படத்தில்.


இதேப் பிரிவில் சதயம்,தூவானத் தும்பிகள்,நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள், பவித்ரம்,லால் சலாம் என இன்னும் சில படங்களும் இருக்கின்ற‌ன‌.


உளவியல் ரீதியான படங்களையும், நகைச்சுவைப் படங்களையும், மோகன்லால் படங்களில் எனக்கிருக்கும் விமர்சனத்தையும் நாளைய பதிவில் பார்ப்போம்.

கொசுறு:மம்முட்டி நடித்தப் படங்களை அடுத்தத் தொடரில் எழுதுகிறேன்.

Thursday, March 6, 2008

தசரதம் - மலையாள சினிமா

சந்தரமுகி படம் வெளிவருவதற்கு முன்பு அப்படத்தைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவந்துகொண்டிருந்தன,அப்படி வெளியான செய்திகளில் முக்கியமானது ,பாசில் இயக்கத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா ஆகியோரது நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான மணிச்சித்திரதாழு என்ற மலையாளப் படம்தான் தமிழில் சந்திரமுகியாகிறது என்பதாகும்.உடனே ஒரு ஆர்வக்கோளாறில் அந்தப் படத்தின் வி.சி.டி வாங்கிப் பார்த்தேன்.

அப்படத்தின் திரைக்கதை மற்றும் மோகன்லால்,ஷோபனாவின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு சிறைச்சாலை படம் பார்த்த பொழுதே மோகன்லாலின் நடிப்பின் மீது ஒரு மரியாதை இருந்தது. மணிச்சித்ரதாழ் பார்த்ததும் அவருடைய மற்ற படங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இப்படித்தான் எனக்கு மலையாளத் திரைபடங்களின் அறிமுகம் கிடைத்தது.

அந்த வகையில் எனக்குப் பிடித்த சில படங்கள் இங்கே:



தசரதம்:

இயக்கம்:சிபி மலயில்

நடிகர்கள்:மோகன்லால்,நெடுமுடி வேணு,முரளி,ரேகா
வெளிவந்த ஆண்டு:1989

இப்படத்தில் ராஜீவ் மேனன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.கதைப்படி சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து  மேனேஜரால் வளர்க்கப்படும் ராஜீவ் மேனன் ஒரு கோடீஸ்வரன். பொறுப்புன்றி எப்போதும்  குடித்துவிட்டு ஊதாரியாய் சுற்றுகிறான்.அவனின் குடித்துணை நெடுமுடி வேணு, இவர் ஒரு எல்.ஐ.சி ஏஜண்ட், ஆனால் முழுநேரமும் ராஜிவ் மேனனோடு சுற்றுவதுதான் முக்கிய வேலையாக வைத்திருக்கிறார். 


ஒரு முறை இவர்கள் குடித்துவிட்டு செய்யும் சில செயல்களால் போலீஸாரால் ராஜீவ் கைது செய்யப்படுகிறான். இந்த விஷயத்தில் மிகவும் மன வேதனை அடைகிற மேனேஜர்,"இனிமேல் என்னால் இங்கே இருக்க முடியாது, எனக்கு வயதாகிவிட்டது,உன்னுடைய சொத்துக்களை நீயே பார்த்துக்கொள்" என்று கூறுகிறார். அவரை சமாதனப்படுத்தும் ராஜீவிடம், கல்யாணத்தைப் பற்றி பேசுகிறார் மேனேஜர். கல்யாணம் என்பது என் வாழ்வில் கிடையாது என்று பிடிவாதமாக மறுக்கிறான் ராஜீவ். அவனின் அம்மா அவளின் பழையக் காதலனோடு சென்றதால் ஏற்படுத்திச் சென்ற ரணம்,அவன் பெண்கள் மீதும், கல்யாணத்தின் மீதும் வெறுப்பாக இருக்கக் காரணமாய் இருக்கிறது.


ஒரு சமயம் ஏதோ சிந்தனையில் இருக்கும் வேணுவிடம் என்னவென்று கேட்கிறான் ராஜீவ். அதற்கு தன் குழந்தைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை, அவர்களை எங்கேயாவது வெளியில் அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தேன்,அதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அதற்கு தன் வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என்று ராஜீவ் சொல்வதைத் தொடர்ந்து  தன்  மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியோடு ராஜீவின் வீட்டில் தங்குகிறார் வேணு. அவர்கள் தங்கியிருக்கிற ஒரு வாரமும் குழந்தைகள் மூன்றும் ராஜீவிடம் நன்கு ஒட்டிக் கொள்கின்றன.குறிப்பாக வேணுவின் கடைசி மகனை மிகவும் பிடித்துவிடுகிறது ராஜீவிற்கு. விடுமுறை முடிந்து வேணுவின் குடும்பம் கிளம்பிச் சென்றுவிடுகிறது.அவர்கள் சென்ற பிறகான வீட்டின் அமைதி ராஜீவை மிகவும் டிஸ்ட்ரப் செய்கிறது. 

 மேனேஜரிடம் சொல்கிறான்,"சவம் விழுந்த வீடு மாதிரி இருக்குல்ல, அங்கிள்" என்று.



"நீயும் கல்யாணம் செய்திருந்தால் உனக்கும் குழந்தைகள் பிறந்திருக்கும், வீடே கலகலப்பாக இருந்திருக்கும்" என்று கூறுகிறார் மேனேஜர்.

அன்றிரவு அந்த குழந்தைகள் நினைவால் தூங்க முடியாமல் தவிக்கிறான்.
மறுநாள் வேணுவை சந்தித்து,"உன்னுடைய கடைசி மகனை எனக்கு தத்து கொடுப்பாயா?.என் சொத்து முழுவதும் அவன் பெயருக்கே எழுதி வைக்கிறேன்,அவனை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறேன்" என்கிறான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத வேணு,சிறிது அமைதிக்குப் பின்,தான் ஏழையா இருக்கலாம்,அதுக்காக பெற்ற குழந்தையை தத்துகொடுக்க முடியாதென்றும், அப்படி கொடுத்தால் தான் ஒரு அப்பன் என்று சொல்லிக்கவே தகுதிகிடையாது என்றும்,என் குழந்தைகள் அப்பான்னு கூப்பிடும்போது நான் அனுபவிவிக்கும் சுகம் உனக்கு சொன்னால் புரியாது,அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்"என்று  சற்று கோபமாய் கூரிவிடுகிறார்.

அடுத்த நாளே தனது குடும்ப மருத்துவரைப் பார்த்து தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன், உங்களுக்கு தெரிந்து ஏதாவது குழந்தை இருந்தால் சொல்லுங்கள் என்கிறான்,அதற்கு "எதாவது ஒரு அனாதை குழந்தை விடுதிக்குத்தான் சென்று பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர்.

”எனக்கு அந்த மாதிரி குழந்தைங்க வேண்டாம்,பிறந்த உடனே தாயை இழந்த அனாதை குழந்தை இருந்தா சொல்லுங்க", என்கிறான்.

"அது மிகவும் கஷ்டம்" என்று சொல்லி "வாடகைத்தாய் முறையில் நீ குழந்தை பெற்றுக்கலாம்,அது உன்னுடைய சொந்த குழந்தையாகவும் இருக்கும்" என்று யோசனை கூறுகிறார் டாக்டர். அதைக் கேட்டு சந்தோஷப்படுகிற ராஜீவ் அதற்கான ஏற்பாடுகளை பண்ணச் சொல்கிறான்.

டாக்டரின் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சந்திரதாஸின் (முரளி) மனைவி ஆனி(ரேகா),தன் கணவனின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான இரண்டு லட்சம் ரூபாய்க்காக வாடகைத் தாயாக சம்மதிக்கிறாள்.பரஸ்பரம் இருதரப்பினரும் எழுத்தின் மூலம் ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர்.
முரளியின் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது, அதே சமயத்தில் ஆனியின் வயிற்றில் ராஜிவின் வாரிசு வளர்கிறது. 

முரளியும்,ஆனியும் சேர்ந்து இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து என்று வேணு,ராஜீவிடம் கூறுகிறார்,இதனால் ஆனியை ஒரு மலை பங்களாவில் இரு செவிலியர்,ஒரு ஹவுஸ் கீப்பர்(சுகுமாரி),ஒரு வாட்ச்மேன் சகிதம் தங்கவைக்கிறான்.மாதங்கள் உருண்டோட ஆனி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.பிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக டாக்டரின் அறிவுறுத்தலோடும், தன் கணவரின் சம்மதத்தோடும்
மேலும் சில நாட்கள்,ஆனி ராஜீவின் வீட்டில் தங்க நேரிடுகிறது. குழந்தை புட்டிப்பால் குடிக்க ஆரம்பித்தவுடன் ராஜிவ் ஆனியை வழியனுப்பத் தயாராகிறார்.அப்போது ஆனியின் செயலும்,அதைத் தொடர்ந்து வரும் இருபது நிமிடக் காட்சிகளும் படத்தின் உயிரோட்டமான பகுதிகள்.


இந்தப் படத்தில் வரும் ராஜீவ் மேனன் காதாபாத்திரத்தை மோகன்லாலைத் தவிர வேறு எந்த நடிகராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்கமுடியாது என்பது என் எண்ணம்.படத்தின் ஆரம்பத்தில் குடித்துவிட்டு அவர் நடந்துகொள்கிற விதமும்,வேணுவின் குழந்தைகளைப் பிரியும்போது அவர் படுகிற வேதனைகளும்,ஆனி கருவுற்ற செய்தி கிடைக்கும் வரையில் தவிக்கிற தவிப்பும், பிறகு செய்தி கேள்விப்பட்டு சந்தோஷத்தில் கூடை,கூடையாய் பழங்கள் வாங்கிக்கொண்டு ஆனியை பார்க்கச் செல்லும்போது, "தயவு செய்து இனிமேல் என்னை பார்க்க வாராதீர்கள்" என்று ஆனி கூறும் போது மனசொடிந்து திரும்பி செல்லும் போதும்,குழந்தை வளர்ப்பது பற்றிய புத்தகங்களை வாங்கி படிக்கும் போதும்,குழந்தை பிறந்தவுடன் "யார் குழந்தையின் அப்பா" என்று நர்ஸ் கேட்க்கும் போது அருகிலேயே முரளியும் இருக்க சந்தோஷமும்,சங்கடமுமாய் அவர் கொடுக்கும் அந்த உணர்ச்சியும்,"என்னுடைய குழந்தை இல்லையென்றாலும், இது என்னோட ஆனியின் குழந்தை,அதனால் எனக்கும் பாசமுண்டு" என்று முரளி கூறும்போது, சட்டென்று முளைக்கிற கோபமும்,குழந்தைக்கு வைத்திருக்கும் புட்டிப்பாலை எடுத்து குடிக்கும் போது பார்த்துவிடுகிற சுகுமாரியின் முன் ஒரு குழந்தையைபோல் நெளிவதும் என்று மனிதர் என்னமாய் அசத்துகிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை மோகன்லாலின் ராஜ்ஜியம்தான்,எந்த ஒரு இடத்திலும் மிகைநடிப்பை பார்க்கவே முடியாது.

இறுதிக்காட்சியில் அவர் ரேகாவிடமும்,சுகுமாரியிடமும் பேசும் வசனங்களும், நடிப்பும் கண்ணில் நீரை திரள வைக்கும்.
குறிப்பாக சுகுமாரியிடம்,"ஆண்ட்டி,எல்லா அம்மாவும் ஆனியை போலத்தான் இருப்பாங்களா?"எனும்போது,



"ஆமாம்"என்பார் சுகுமாரி.

"அப்போ,என் அம்மா?"என்று ஒரு குழந்தையின் ஏக்கத்தோடு அவர் கேட்கும்போது நமக்கு என்னமோபோல் ஆகிவிடுகிறது.

"உன் அம்மா உன்னை விட்டு சென்றிருந்தாலும்,அவளால் ஒரு நாளும் நிம்மதியாக இருந்திருக்க முடியாது" என்று சுகுமாரி கூறும் போது,

"ஆண்ட்டி,உங்க குழந்தைகளையும் நீங்க இப்படித்தான் நேசிப்பீங்களா?"என்று கேட்பதற்கு,

"ஆம்" என்று தலையசைப்பார் சுகுமாரி,

அதைத் தொடர்ந்து,"ஆண்ட்டி என்னையும் அது மாதிரி

நேசிப்பீங்களா?"என்று கேட்பதோடு படம் முடிவடையும்.


அடுத்தடுத்தப் பதிவுகளில் இன்னும் சில படங்களை பற்றி சொல்கிறேன்.