Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Tuesday, July 10, 2012

வண்டல் மண் கதைகள்-5

காட்டாத்துப் பாலத்துக்கிட்ட விறகுக்கு கருவக்குச்சிகள வெட்டி கட்டி வச்சிக்கிட்டு, கட்டு ரொம்பக் கனமா இருக்கவும், சொம தூக்கிவிட யாராச்சும் ஆளு வருதான்னு இலுப்பமர நெழலுல ஒக்காந்து பாத்துக்கிட்டிருந்த மல்லிகாவுக்கு நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். கெச்சலா,பாதிக்கு மேல நரச்சத் தலையோட இருக்கிறவள பாத்தா இன்னும் ஒரு நாலஞ்சு வயசு சேத்து சொல்லலாங்கிற மாதிரி இருப்பா. பாட்டாளி பொம்பள, ஒரு நிமிஷம் சும்மா ஒக்காந்து பாக்க முடியாது. எதையாவது பரபரன்னு செஞ்சுகிட்டேதான் இருப்பா.
எங்கயோ எட்டி ட்ராக்டர் சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டு இருந்துச்சே ஒழிஞ்சி ஆளுவொ ஒருத்தரும் தெம்படல. மரத்த அடச்சு நின்ன நெழல வச்சு "மணி பண்ணெண்டு ஆச்சு"ன்னு தனக்குத்தானே முனகியவ, தாலிக்கொடியில இருந்த ஊக்குல ஒண்ணக் கழட்டி காலுல குத்தியிருந்த முள்ள எடுக்க ஆரம்பிச்சா.
ஒரு காலை நீட்டி, முள்ளு குத்துன காலை, நீட்டுன காலின் தொடையில மடக்கி வச்சு, முள்ளு அறுவுதான்னு மெல்லமா தடவிப் பாத்தா. முள்ளு அறுவவும் ஊறுகாய தொட்டு நக்குற மாதிரி ஆக்காட்டி வெரலால எச்சியத்தொட்டு, அறுவுன எடத்தில தொடச்சு பாக்கவும் பாதத்துக்குள்ள மச்சங் கெடக்குற மாதிரி பளிச்சுன்னு தெரிஞ்சிச்சு முள்ளு.
ஊக்கால மெல்லமாக் குத்தி அப்படியும் இப்படியுமா களஞ்சி விட்டதும் முள்ளு கொஞ்சம் தளந்து வரமாதிரி இருந்துச்சு. கட்ட வெரலுக ரெண்டையும் முள்ளு குத்துன எடத்துக்கு அங்கிட்டும் இங்கிட்டுமா வச்சு வலட்ட ஆரம்பிச்சா. கட்டுக்கேணி செங்கல்லு இடுக்கிலிருந்து, பாம்பு தலையை நீட்டுற மாதிரி, கதக்குன்னு வெளில எட்டிப் பார்த்த முள்ளை, வெடுக்குன்னு புடுங்கி,” எத்தத்தண்டி குத்தியிருக்குன்னு பாத்தியன்ன; மொவரையும் தன்னான”ன்னு முணுமுணுத்துக்கிட்டே, முள்ள வீசி எறிஞ்சிட்டு மறுபடியும் ரோட்டுல ஆளு வருதான்னு பாத்தா. யாரும் வர்ற மாதிரித் தெரியல. கையி தன்னாப்புல கால்ல இன்னும் முள்ளு தச்சிருக்கான்னு தடவிக்கிட்டிருந்துச்சு.
முள்ளுத்தச்சக் காலில் இன்னும் முள்ளு இருந்தா களஞ்சு எடுக்கலாம்னு தோணும். அப்படி ஒரு சொகமாவும் எதையோ சாதிச்சிக்கிட்டு இருக்குற மாதிரியும் இருக்கும். முள்ள எடுத்த பிறகு முந்திரிக்கொட்டைய அனல்லக் காட்டி, எளஞ்சூடானதும் வலியிருக்குற எடத்துல வச்சு வச்சு எடுத்தா வலி அப்படியே மரத்துபோவும். மரத்துப்போறது ரெண்டாம்பச்சம்தான், சுடும்போது சுருக் சுருக்குன்னு இருக்கிற அந்த சொகத்துக்கே நெதேய்க்கும் முள்ளக் குத்திக்கலாம்னு இருக்கும்.
ஆளுக அன்னாரத்தையேக் காங்கல, என்ன பண்ணலாம்னு சுத்தி முத்திப் பார்த்தவளுக்கு பக்கத்துல இருந்த இண்டம்புதர்ல படந்து கெடந்தக் குறிஞ்சாக்கீரை கண்ணுல  படவும் எந்திரிச்சு, லேசா கெந்தி கெந்தி நடந்துப்போயி கீரையப் பறிச்சு மடியில கட்ட ஆரம்பிச்சா. பாதி மடி ரொம்பியிருக்கையில யாரோ வர மாதிரித் தெரியவும், சட்டுன்னு புதரவிட்டு வெளில வந்து ரோட்டைப் பார்த்தா.
மாடிவீட்டு ரெங்கராசு தன்னோட பல்சர, காட்டாத்துக் கரையோரமா இருக்கிற கருவ மரத்தடில நிப்பாட்டிட்டு, அதுல சாஞ்ச மேனிக்கே ஒரு கையில புகையிற சிகரெட்டும், இன்னொரு கையில செல்போன வச்சி நோண்டிக்கிட்டும் நின்னான். மட மடன்னு சலவ மடிப்புக் கலையாம, வெள்ளையுஞ் சொள்ளையுமா கரவேட்டி கட்டிக்கிட்டு, கைச்செயினு , மோதிரம்னு நிக்கிற அவன பாத்தாலேத் தெரியும். பெரும் பணக்காரன்னு. மல்லிகா வீட்டுக்கு ஒண்ணுவிட்ட பங்காளிதான் ரெங்கராசு.
ரெங்கராச பார்த்த மல்லிகா புதரவிட்டு ரெண்டு எட்டு எடுத்து வச்சிட்டு ஏதோ யோசனையா தலைய சொறிஞ்சிக்கிட்டே மறுபடியும் புதருக்கேத் திரும்பி கீரைய பறிக்க ஆரம்பிச்சிட்டா.
சிகரெட்ட இழுத்து முடிச்சிட்டு ரெங்கராசு வண்டிய ஸ்டார்ட் பண்ற சத்தம் கேட்டதும் , மல்லிகா அவன் கண்ணுல படுற மாதிரி விறுவிறுன்னு வெறவுக்கட்டுக்குப் பக்கத்துல போயி நின்னுக்கிட்டு அவனப் பாத்து, ”சொமய கொஞ்சம் தூக்கிவிடுறியா?” ங்கிற மாதிரி சிரிச்சா, பதிலுக்கு ரெங்கராசும் வேண்டா வெறுப்பா லேசா சிரிச்சு தலைய ஆட்டிட்டு, அவளோட சிரிப்பின் அர்த்தம் வெளங்காதவன் போலவே , வண்டிய கிளப்பிக்கிட்டு அவம் பாட்டுக்கு போயிக்கிட்டிருந்தான்.
மூஞ்சில அடிச்ச மாதிரி போச்சு மல்லிகாவுக்கு, ”பெரசண்டு எலக்ச வரட்டும், சித்தி நொத்தின்னுட்டு இளிச்சிக்கிட்டு வரயில இருக்கு” என்று தனது ஆற்றாமைய வாயவிட்டு புலம்பிக்கிட்டே மறுபடியும் மரத்தடிக்கேத் திரும்பி, கீரைகள ஆஞ்சபடி ஒக்காந்துட்டா.
நேரம் ஆக ஆக, பசி மயக்கத்துல ”உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” ன்னு பெலகீனமா மூச்சு விட்டவ, இங்கின குந்தியிருக்க நேரத்துக்கு வீட்டுக்கேப் போயி ஆள அழைச்சிகிட்டு வந்திரலாம்னு யோசிச்சு, ஆஞ்சக்கீரைய அப்படியே முடிஞ்சிக்கிட்டு எந்திரிக்கையிலே, ”என்ன அத்தாச்சி இங்கின குந்தியிருக்க, சொம தூக்கிவிடணுமா?” என்றபடியே தோள்ல மம்பட்டிய வச்சிக்கிட்டு வந்துக்கிட்டிருந்தான் அர்ச்சுனன்.
”யப்பா, நல்ல வேள நீ வந்த, வெறவு வெட்டி வச்சிக்கிட்டு ஒரு நாழியா குந்தியிருக்கேன், ஒரு புள்ள பொடுசக் காணு்ம்”ன்னு கெரக்கம் தட்டின கண்ணுல சிரிப்பத் தேக்கி சொன்னமேனிக்கே சும்மாடுக்கு கொண்டு வந்திருந்தத் துண்ட அவசர அவசரமா சும்மாடு கோல ஆரம்பிச்சா.
”அத்தாச்சி, இந்த மம்பட்டிய நீ எடுத்துக்க, நான் தூக்கிக்கிட்டு வறேன்"ன்னு அர்ச்சுனன் சொல்லிக்கிட்டே வெறவுக்கட்ட குனிஞ்சு தூக்கப் போனான்.
”அட நீயே வேல செஞ்சுக் களச்சுப் போயி வற, ஒனக்கு எதுக்கு செரமம், சும்மா தூக்கிவிடு, நான் தூக்கிக்கிட்டு வறேன்"னு சொன்ன மல்லிகாவ எடமறிச்சு,
”ஆமா நீ தூக்குன, கால வேற கெந்துற , சும்மா இரு அத்தாச்சி, நான் தூக்கிக் கொண்டாந்து போட்டுட்டுப் போறேன்"ன்னு சொல்லியபடியே ”ஒரு கைபோடு ” என்று மல்லிகாவிடம் வெறவுக்கட்ட தூக்கிவிடச் சொல்லி குமிஞ்சான்.
”இரு இரு இந்தா இந்த சும்மாட தலைக்கு வச்சிக்க” என்று துண்டை நீட்டினா மல்லிகா.
”துண்ட எந்தலையில வச்சிக்கிட்டு வந்தா அப்புறம் தீட்டுன்னு தொடமாட்டிக, நீயே வச்சிக்க ,புதுத்துண்டாட்டமா வேற இருக்கு, நான் ஓணாங்கொடிய பறிச்சு சுத்திக்கிறேன்”ன்னான் அர்ச்சுனன்.
”ம்ம்மா, தீட்டாம்ட தீட்டு, காசு பணம் இல்லைன்னா எல்லாந் தீட்டுதான்”ன்னு சொல்லிக்கிட்டே,கோலுன சும்மாட்ட அர்ச்சுன தலையில வச்சிவிட்டு, வெறவுக்கட்ட தூக்கிவிட்ட மல்லிகா, ”நட போவோம்”ன்னு சொல்லி அர்ச்சுனனின் மம்பட்டிய தூக்கிக்கிட்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.

Tuesday, June 5, 2012

வண்டல் மண் கதைகள்-4

மேலக்காத்து சன்னமா வீசிக்கிட்டு இருந்தது. புள்ளயார் கோயில் அரசமரத்தடில துண்ட விரிச்சி ,ஒரு கைய தலைக்கு முட்டுக்கொடுத்து சீரங்கத்து பெருமாள் கணக்கா ஒருக்கலிச்சுப் படுத்துக் கெடந்த பொன்ராசு, கட்ட வெரலுக்கும், ஆக்காட்டி வெரலுக்கும் நடுவுல புறா எறக வச்சி, தயிறு கெடையிற மாதிரி இங்கிட்டும் அங்கிட்டுமா காதுக்குள்ள எதமா கொடஞ்சி அதுக்குத்தக்கன கண்ண சொருகி,வாயக் கோணி தன்னை மறந்து லயிச்சுப் போயிக் கெடந்தான்.
கருக்கல்லயே எந்திரிச்சு வெரசா கால வேலையெல்லாம் முடிச்சி, பழையக் கஞ்சியக் குடிச்சிட்டு நேரா கோயிலுக்குதான் வருவான். வந்ததும் மொத வேலையா கோபுரத்தில் இருந்து எறஞ்சு கெடக்குற புறா எறகுகல்ல நல்லதாப் பாத்து ஒண்ண எடுத்துக்குவான், எறக அவன் தேர்ந்தெடுக்கிறதே நல்ல வேடிக்கயா இருக்கும், தேங்காயத் தட்டிப்பாக்குற மாதிரி ரெண்டு கிடுத்தம் சுண்டிப் பாத்து,அதன் கெட்டிதன்மை திருப்தியா இருந்தா எடுத்து, நுனிய ஒதுக்கி, கொஞ்சம் கீழே யெறக்கி சர்ர்ர்...ருன்னு ஒரு இழு, அப்படியே அட்ட பூச்சி மாதிரி எறகு மசுரு சுருட்டிக்கிட்டு விழும், அதே மாரிக்க ரெண்டு பக்கமும் இழுத்துவிட்டு காது கொடைய ரெடி பண்ணிருவான். ”இதுமாரி கோழி எறகுல ஒட்ரே இழுப்புல இழுக்க வாய்க்காது, பொசுக்குன்னு ஒடஞ்சு போவும்”ன்னு அங்கன நிக்கிறவய்களுக்கு கேக்கேமயே வெளக்கம் வேற கொடுப்பான். விவசாய வேல ஆரம்பிக்கற வரைக்கும் இப்படி அரசமரத்தடிலதான் எவனாயாச்சும் புடிச்சு வெட்டி ஞாயம் பேசியபடி ஓடும் அவம் பொழப்பு .
”யோவ் பங்காளி, மினி பஸ்ஸு வந்திட்டு போயிருச்சா”ன்னு ராமூர்த்தியின் கொரல கேக்கவும், மெதுவா எறக காதவிட்டு வெளில எடுத்த பொன்ராசு, பீடி புடிக்கிறவன் கையில பீடிய வச்சிக்கிற மாதிரி, எறக கையில புடிச்சிக்கிட்டே, ”பத்தர வண்டியா ? இனிமேதான் வருவான்”ன்னு சொல்லிட்டு,”வாய்யா, குந்து போவலாம்”ன்னு ராமூர்த்திய கூப்ட்டான்.
”எனக்கு வேல கெடக்கு நா போறேன்,பொறய்க்கா பேசிக்குவோம்”ன்னு கெளம்பிய ராமூர்த்திய, “ஏலேய் இவன, விசியமாத்தான்டா குந்த சொல்றேன் வா”ன்னு மறுவத்ரியும் கூப்புட்டான் பொன்ராசு.
”அட என்னன்னுதான் சொல்லு, வெரசா போவனுங்கிறேன்”ன்னு அவசரப்பட்டான் ராமூர்த்தி.
“ஒண்ணுமில்ல..நம்ம கிட்டிண‌ ம‌வ‌ன் பெரிய‌வ‌னுக்கு பொண்ணு தெவ‌ஞ்சிருக்குன்னாய்ங்க‌ளே எந்த ஊரு, எவ்வடம்னு தெரியுமா?”
"அட‌ நீ வேற‌, அத‌த்தான் க‌ல‌ப்பு க‌ல‌ச்சு விட்டுட்டாய்ங்க‌ளே" ன்னு சொல்லிக்கிட்டே அவனும் கைலியை சூத்தாம்பட்டைக்கு மேல தூக்கிவிட்டு பச்சக் கலர் டவுசர் தெரியும்படி அங்கன கெடந்த முண்டுக் கல்லுல ஒக்காந்தான்.
“அடங்கொப்புரான”ன்னு படுத்திருந்தவன் பட்டுன்னு எந்திரிச்சு ஒக்காந்து “என்ன‌ய்யா இப்ப‌டி சொல்ற‌, க‌ட்டைக்கு க‌ட்ட‌ குந்தி எந்திரிச்சி, இல்லாத நட்டன அடிச்சவனுக்கெல்லாம் க‌ல்யாண‌மாயி போச்சு, இவ‌ன் ஒரு வம்பு தும்புக்கும் போவாம ப‌ம்ப‌ர‌ங்க‌ண‌க்கா வேல வெட்டின்னு சுத்திக்கிட்டு இருப்பான், இவ‌னுக்குப் போயி த‌ட்டிக்கிட்டே போவுத‌ய்யா”
“அதான் ஊருக்கு ரெண்டு பேரு கெடந்துக்கிட்டு கெளம்பிராய்ங்களேய்யா, இல்லாது பொல்லாதுமா சொல்லி கலப்புக் கலச்சுட”
“ ஊருக்கு ஊரு இதேதான் சொல்றாய்ங்க ,மெதுவா எவன் இந்த வேலய செய்யுறான்னு கண்டு சுளுக்கெடுத்துவுடணும்டா, தாயொலியல”.
“ எவனோ நம்ம ஊரு ஆளுவொ தானாம்யா, கெச்சலா ஒசரமான்னு அடையாளம் சொல்லியிருக்காய்ங்க” அதான் இன்னாருதான்னு யோசிக்க முடியல.
“ஏன்டா, ஒரு வேள மேப்படியானா இருக்குமோ” ன்னு மருதராசு வீட்டைக் கண்ணக் காட்டினான் பொன்ராசு.
“நான் என்னத்த ஒங்கிட்ட சொல்றதுன்னு நெனச்சேன், நீ பட்டுன்னு சொல்லிட்ட, அவந்தான்னு எல்லாரும் பேசிக்கிறாய்ங்க,கிட்டிணன் இதை லேசுல வுட மாட்டேனு சொல்லி, வெட்டிக்காட்டு ஒயின்சுக்கு போயிருக்காரு, இன்னைக்கு ரவளதான் நடக்கப் போவுது”
“நாஞ்சொல்றேன் இந்த மாதிரி குடி கெடுக்குற வேலய செய்ய இவன விட்டா நம்மூர்ல ஆளு இல்ல,அதுவும் அடையாளமும் பொருந்திப் போவுது” “ஆமாமா, அவனுந்தான் கல்யாண வயசுல ஆணும் பொண்ணும் வச்சிருக்கான், எல்லாம் நல்லதுக்கா”
இவய்ங்க இப்படி பேசுற மருதராசை, ஊருக்குள்ள எவனுக்குமே புடிக்காது. ஏன்னா அவன் டைப்பு அந்த மாதிரி. எந்த விசயமானாலும் எகனைக்கு மொகனையா பேசுறது, தேவ ,திருவிழான்னா ஆளுகளுக்குள்ள வம்பிழுத்துவிடுறது, ஏலம் விட்ட கொளத்துல திருட்டு மீனு புடிக்கிறதுன்னு கிராதகம் புடிச்ச வேலையாதான் பண்ணிக்கிட்டு இருப்பான். எவனாவது எதுத்துக் கேட்டான் செத்தான் ,அந்த மாதிரி நாராசமா பேசுவான், அவன் வாயிக்கு பயந்தே நரவல கண்டா ஒதுங்கன ஒதுங்கி போயிருவாய்ங்க.சரியான சிலுவுனிப்பய.
”சரிய்யா நான் கெளம்புறேன்”ன்னு கெளம்புன ராமூர்த்திக்கிட்ட அடுத்த கொக்கியப் போட்டான் பொன்ராசு,” பஸ்ஸு வந்திருச்சான்னுக் கேட்ட,அப்புறம் போறங்கிற, யாரும் விருந்தாடி வர்ரவொல”ன்னு பொன்ராசு கேட்டுக்கிட்டு இருக்கறப்பவே, “திருட்டு வக்காளிய, எங்கேயிருந்து எங்கடா போறிய கலப்பு கலய்க்க, நாறக் !@$!$, பொண்ணு கெடைகிறதே கடுசா இருக்குன்னு எம் மொவனுக்கு கீழச்சீமையில போயி நாயா அலஞ்சு பொண்ணு தெவச்சு, தேதி குறிக்கிறதோட இருந்தத, தேவடியா மொவய்ங்க, அங்க தெக்கே போயி கலச்சு விட்டுருக்காய்ங்க, கொப்ப மொவய்ங்களா அடையாளம் எல்லாம் சொல்லியிருக்காய்ங்க, அந்த #@டா மொவனுக்கு இன்னைக்கு இருக்கு, இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்” என்று தண்ணிய போட்டுவிட்டு ரோட்டுல அலப்பற பண்ணிக்கிட்டே வந்துக்கிட்டு இருந்தான் மேப்படியான் மருதராசு.

Thursday, May 31, 2012

வண்டல் மண் கதைகள் - 3

”டேய் குவாட்டர் ஃபைனல்ல நம்ம கூட மோதப் போறது சில்லத்தூர் டீம், செம்ம ஃபார்ம்ல இருக்காய்ங்க, இன்னைக்கு கண்டிப்பா மதியரசன எப்படியாச்சும் போட்டு இழுத்துகிட்டு போயிடனும், இவய்ங்கள மட்டும் ஜெயிச்சிட்டோம்னு வெய்யி கப்பு நமக்குதான்” என்றான் கையில் கிரிகெட் பேட்டோடு நின்று கீழே கிடந்த கரும்பு சக்கையை பந்தாக பாவித்து தட்டியடியே நின்ற கோபு. 

”அவன எங்கடா இப்பயெல்லாம் பாக்க முடியுது,முந்தா நாளு பாத்தேன், மேச்சு இருக்குடா போகனும்னு சொன்னேன், உளுந்து அரிக்கணும், வேல இருக்குன்னான், சரின்னுட்டு இப்போ போனடிகிறேன், ரிங்கு போயிட்டே இருக்கு எடுக்க மாட்டேங்கிறான்டா” என்றான் தங்கப்பன்.

பக்கத்து ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்சில் ரெண்டு ரவுண்ட் ஜெயித்துவிட்டு இதோ இன்னைக்கு நடக்கவிருக்கும் குவாட்டர் ஃபைனலுக்கான மேட்சுக்கு, டீமை இன்னும் ஸ்ட்ராங்காக்கத்தான் மதியரசன தேடிகிட்டு இருக்காய்ங்க. மதியரசன்தான் இவைங்க டீமின் ஆல் ரவுண்டர். ஓப்பனிங் பௌலிங்கும் சரி ,பேட்டிங்கும் சரி அவந்தான். முக்கியமா பௌலிங்கில் கிராமத்தானுங்களுக்கே உரிய மாங்கா அடியை இடையிடையே வீசி , நல்லா ஆடிட்டு இருக்கிறவய்ங்கள க்ளீன் போல்டாக்குவதில் மன்னன்.

“என்னாது உளுந்து அரிக்கிறானா, நீ வேற அவந்தான் வத்தலாம்பட்டியிலேயே குடியா கெடக்குறான்டா, அவரு வேற முக்கிய சோலியா திரியிறாரு” என்று கண்ணடித்து நக்கலாச் சிரித்தான் முத்துக்குமார்.

முத்துக்குமார் ஏதோ அவல் கொண்டுவந்ததை அறிந்து ஆசையாய் மெல்லும் ஆவலில் எல்லோரும் ஆர்வமாய் அவனை என்னடா சொல்ற என்பதாய் பார்க்க, முத்து தொடர்ந்தான்,

“டேய் வத்தலாம்பட்டி வசந்தா தெரியுமா? அதான்டா செண்டுக்காரி, அந்த பொம்பளைகிட்ட மதி அப்பாரு பேச்சு வார்த்தையிலே இருக்காராம் ” என்றுவிட்டு சிரித்தான்.

“அது பெரும் பார்ட்டில்ல , எப்படிடா இவரோட லிங்கானுச்சு, நம்புற மாதிரி இல்லையே” என்றான் கோபு.

”நெசமாத்தான்டா அந்த பொம்பள ஊரணிகாட்டு பேங்குக்கு அடிக்கடி குழு பணம் கட்ட போகும் , அது மாதிரி போகையிலே எப்பயோ கடைசி பஸ்ஸ விட்டுட்டு நின்னிருக்கு, நம்ப மதியப்பாரு அப்போன்னு பார்த்து அங்கிட்டு வண்டியிலே வந்திருக்காரு , அப்படியே பிக்கப் பண்ணவருதான் இன்னும் இறக்கி விடலயாம் ” என்றுச் சொல்லி சிரித்த முத்து தொடர்ந்தான்.

மதி அம்மா இத பத்தி அரச பொரசலா கேள்விப்பட்டு கேட்டப்பயெல்லாம் இல்லேன்னு அடிக்க போயிருக்காரு, ஆனா அவ்வோ ரெண்டு பேரும் சோடிபோட்டுகிட்டு போனத நம்ம ஊரு பொம்பளைக யாரோ பாத்துட்டு மதியம்மாகிட்ட சொல்ல , வேற வழியில்லாம மதிகிட்ட வெவரத்த சொல்லி அழுதிருக்கு அவ்வோ அம்மா. அதான் மதிப்பய ரெண்டு பேரையும் கையுங் களவுமா புடிக்கிறேன்னு யாருக்கும் சொல்லாம அங்க போயி சுத்திகிட்டு இருக்கான். இந்த கூத்து நாலஞ்சு மாசமா நடந்துகிட்டு இருக்கு, உங்களுக்குத்தாண்டா தெரியாம இருந்திருக்கிய” என்று முடித்தான்.

“அந்த பொம்பளைக்கு எளசா இருந்தா கசக்கும்போல, பாரு முன்னாடி வெட்டிக்காட்டு மணியாரு இப்போ மதி அப்பாரு” என்று சிரித்தான் கோபு.

”இதுல என்ன காமெடின்னா நேத்து மதி அப்பாரு எங்க அப்பாருகிட்ட ‘இந்த பய அங்கயே சுத்திகிட்டு மானத்தை வாங்கிட்டு இருக்கான், அவன் பண்ணுறது ஒன்னும் மொறையில்ல, பாக்குறவய்ங்க என்ன நெனப்பாய்ங்க,ஓ மவன்கிட்ட சொல்லி கொஞ்சம் அவனை கண்டிக்க சொல்லுய்யான்’னு பொலம்பியிருக்காரு” என்றான் முத்து.

“நல்லாயிருக்குடா கதை அந்தாளு அங்க போறதுமில்லாம ..”என்று ஆரம்பித்த கோபு ,“ஏ தம்பியளா ” என்றபடியே பாலகட்டைய நோக்கி மதியம்மா வந்துகிட்டு இருந்துதத பார்த்ததும்.”அடிச்சாம் பாரு சிக்சு” என டக்குன்னு பேச்சை மாத்தினான் .

“என்ன சின்னம்மா என்னா விசியம் மதி எங்க? கொல்லையிலயா நிக்குறான்?” என்றான் முத்து வெகுளியான முகத்தோடு.

“ம்ம் கொல்லையில நிக்குறானா? ஏன் அவன் எங்க போறான் வறான்னு உங்களுக்கு தெரியாதா?” என்று கோபமாய் ஆரம்பித்தவள், சட்டுன்னு தணிந்து ”யப்பா நல்லாயிருப்பியய்யா, எம்புருஷன் இருக்கானே ஊர் மேயிர நாயி,அது எப்படியாச்சும் போயி தொலையிது, எம்புள்ளய கொண்டு வந்து சேத்துருங்கய்யா, ஆயி மாதிரியே இருந்திருக்காளே மவளும்” என்று ஒப்பாரி வைத்தாள்.

Tuesday, May 15, 2012

வண்டல் மண் கதைகள்-2

”அம்பலாரு மாமோய், எங்கின இருக்கிய” என்று அம்பலார் வீட்டு கரும்புக் கொல்லை வரப்பில் நின்னுகிட்டு குரல் கொடுத்தான் வேலன்.

ஏக சந்தோஷமா இருக்கும் வேலனின் முகத்தைப் பார்க்கும்போதே அவனப் பத்தி தெரிஞ்சவய்ங்களுக்கு ஓரளவுக்கு விஷயம் புடிபட்டுரும். அதுவும் அம்பலாரை இந்த உச்சி வெயில் நேரத்துல , தலையில துண்டுகூட போடாம தேடிகிட்டு வந்திருக்கான்னா கண்டிப்பா ஊருக்குள்ள ஏதோ பிரச்சனைங்கிறதை உறுதி பண்ணிக்கலாம்.

வண்ணாந்தொற ஆலமரத்தடியில அழுக்குத் துணிக்கெல்லாம் ஓருமண்ண போட்டுட்டு இவ்வளவையும் இன்னிக்கு தொவைச்சு முடிக்கணுமேன்னு எரிச்சலாய் ஒக்காந்து வெத்தலாக்கு போட்டுகிட்டு இருவன்கிட்ட, தெக்கித்தெரு சொக்கலிங்கம் வந்து சொன்ன சேதியதான், தாக்கலா கொண்டுகிட்டு வேலன் இப்போ அம்பலார தேடிகிட்டு வந்திருக்கான்.

“யாருப்பா அது” என்ற அம்பலத்தின் குரலுக்கு,”நாந்தான் மாமோய் வேலன்” என்றான்.

“வேலனா, இங்கிட்டு கீழண்ட கொல்லை பம்ப்செட் ஓரமா நிக்கிறேன் வா” என்ற அம்பலத்தின் பதிலுக்கு மின்னலாய் போய் நின்றான் வேலன்.

சொன அறுக்காம இருக்க சோலக்கொல்லை பொம்மைக்கு போட்டிருக்கும் தொம்பா தொம்பா சட்டை மாதிரியான ஒரு பழைய சட்டையை போட்டுகிட்டு, கரும்புக்கு தோகை உரிச்சிகிட்டு இருந்த அம்பலம் வைரக்கண்ணுக்கு ஐம்பது வயசிருக்கும். பாத்தா நாப்பதுதான் சொல்லலாம். அப்படி ஒரு தோற்றம், கடுமையான உழைப்பாளிங்கிறதால இயல்பிலேயே வலிமையான தேகம்.

“என்னடா வேலா, மொட்ட வெயில்ல என்னைய தேடிகிட்டு, என்னா விசியம்” கேட்டார் அம்பலம்.

ஒரு மாதிரி அசட்டு சிரிப்போட தலைய சொரிஞ்சிகிட்டே “ஒன்னுமில்ல மாமா , இந்த தெக்கித்தெரு சொக்கு சம்சாரத்த மாடு மேய்க்க போன எடத்துல, பழனியம்மா மவன் வடிவேலு ஏதோ கலாட்டா பண்னிபுட்டாப்ளயாம், அதான் சொக்கு பஞ்சாயத்த கூட்டச் சொல்லி தாக்கல் சொல்லிவிட்டாப்ல”

“தூத்தேரி, எதுக்கெடுத்தாலும் அருவா தூக்குற பய சொக்கு, தெரிஞ்சும் இந்த கிருத்துருவம் புடிச்ச நாயி அங்க போயி வாலாட்டியிருக்கு, மாட்டு வைத்தியன் கிட்டிணங்கிட்ட சொல்லி கிட்டி போட்டு அடிச்சிவிட்டாத்தான் அடங்குவான் போலிருக்கு” என்றபடியே வேற ஏதோ சொல்ல வந்த அம்பலம், வேலன் காட்டும் சுவாரஸ்யத்தைப் பார்த்து சட்டுன்னு சுதாரிச்சு ”சரி சரி நீ கெளம்பு தோவையெல்லாம் கரபாச்சிட்டு வறேன்” என்றார்.

மீண்டும் அதே அசட்டு சிரிப்போடவே “சரி மாமா நான் மேல வலவுகாரவுகளுக்கும் சொல்லணும், நேரமா சாவடிக்கு வந்துருங்க ” என்றபடியே வேலன் காத்தா போயிட்டிருந்தான். இன்னிக்கு வேலன் இருக்குற குசிக்கு இன்னும் ரெண்டு ஊரு துணியக்கூட வெளுப்பான்.

இப்பயெல்லாம் மாசம் பொறந்தா இப்படி ஒரு பஞ்சாயத்துன்னு ஆயிபோச்சு . இவிங்களுக்கு என்னன்னு நாம பஞ்சாயத்து பண்ண” என்று தனக்குதானே புலம்பிய அம்பலம், சட்டைய கழட்டி வரப்புல வச்சிட்டு , வெத்தல சீவ பொட்டலத்தை பிரிக்கவும், ஆறுமுகம் பொண்டாட்டி சரசு புல்லறுக்க கரும்புக் கொல்லைக்குள்ள நொழையவும் சரியா இருந்துச்சு.

Thursday, May 3, 2012

வண்டல் மண் கதைகள்-1

”சித்தப்பா, ஓ மச்சான் மவன்கிட்ட சொல்லிவய்யி, கால கைய முறிச்சாத்தான் அடங்குவான் போலருக்கு”

“வருஷா வருஷம் உங்களுக்கு இதே பொழப்பா போச்சுடா, சரி அவன் தண்ணி கட்டினதுக்கு அப்புறமா நீ கட்டிக்கடான்னாலும் கேக்க மாட்டேங்குற”

“யோவ், என்ன அவனுக்கு பரிஞ்சு பேசற,நல்லாயில்ல பாத்துக்க. விடிய காலம் மூணு மணிக்கெல்லாம் ஆத்துக்கு போயி, கிளைவாய்க்கா மதக திறந்து, ஒவ்வொருத்தங்கிட்டயா போராடி நாங்க தண்ணி கொண்டுவருவோம், வக்காலி அவம்பாட்டுக்கு நோகாம மடைய திறந்து வச்சுக்குவான், கேட்டா குத்தம், நல்லாயிருக்குய்யா ஞாயம்”

”ஏலேய் புரியாம இல்லடா, அவன் ஒரு கொணங்கெட்டவன், பேசிக்குவோம் கோவப்படாம போ”

“என்னத்த கிழிச்சியோ போ, பாத்துக்கிட்டே இரு , இன்னொரு வாட்டி வாலாட்டுனான்னு வையி மவன அவ்வளதான் சொல்லுவேன்” என்றபடியே இளங்கோ பய மேலுள்ள தாறுமாறான கோபத்தை எம்பங்காளி சேகருகிட்ட கத்திவிட்டு குளத்து பக்கம் நடையைக் கட்டினேன்.

மட்ட மத்தியானம், உச்சி வெயிலுக்கு இதமா குளத்துக்குள்ள எறங்கி தண்ணிக்குள்ள நல்லா முங்கி முங்கி எந்திரிச்சா, ஏதோ மேல வந்து விழற மாதிரி இருந்துச்சு. 

சுத்தி முத்திப் பார்த்தேன், பக்கத்து தொறையில அவ மட்டும் குளிச்சிட்டு இருந்தா, மறுபடியும் சுத்திப் பார்த்தேன், வேற யாரும் அங்கே இல்ல. குழப்பத்தோடே திரும்பவும் முங்க போனேன், சின்னதா ஒரு கல்லு என்னை நோக்கி , பார்த்துவிட்டேன் அவதான், இளங்கோ பய தங்கச்சி. அப்படியே அவளையே பாத்தேன்.

கல்லை அவ வீசாதது போலவே கண்டுக்காம சோப்பு போட்டுகிட்டு இருந்தா, மெல்ல தண்ணிக்குள்ள முங்கி சின்னதா ஒரு நத்தைக் கூடை எடுத்து அவளை நோக்கி வீசினேன், சரியா அவ முதுகுல விழுந்துச்சு, 

டக்குன்னு திரும்பிப் பார்த்து வெட்கத்தோட சிரிச்சா..

நான் மறுபடியும் சுத்தி முத்திப் பார்த்தேன் ...

Sunday, April 18, 2010

பால்யத்தின் நினைவுகளில்...

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பொங்கல் சமயத்தில் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கையில் பரண் மீதிருந்த அட்டைப் பெட்டியில் பம்பரங்கள், கோலிகுண்டுகளோடு சாயம் வெளுத்து செல்லரித்துப் போயிருந்த சீவல், புகையிலை பாக்கெட்டுகளின் லேபிள்களைப் பார்த்ததும் தும்பி பிடித்து விளையாடிய நாட்களின் நினைவுகளில் மனம் சஞ்சரிக்கத் தொடங்கியதன் விளைவில் இப்பதிவு.

90களின் ஆரம்பம் எங்கள் பகுதிகளில் புலிமார்க் சிகைக்காயிலிருந்து ஷாம்பூவிற்கு மக்கள் மாறத்தொடங்கியிருந்த காலம். ஷாம்பூவிற்கு என்பதைவிடவும் ஸ்டாம்புக்கு என்றால் சரியாக இருக்கும்,பெரும்பாலும் அப்படித்தான் உச்சரிப்பார்கள். அப்போது மார்க்கெட்டில் சிக் ஷாம்பூவிற்கும் வெல்வெட் ஷாம்பூவிற்கும் இருந்த வியாபார போட்டியில் ”ஐந்து காலி ஷாம்பூ பாக்கெட்டுகளைக் கொடுத்து ஒரு ஷாம்பூ பாக்கெட் வாங்கிக் கொள்ளலாம்” என்ற வெல்வெட் கம்பெனியினரின் விளம்பரத்தைத் தொடர்ந்து காலையில் பள்ளி செல்வதற்கு முன்னர் ஊரில் இருக்கும் ஏரி,குளம்,குட்டை, பம்ப்செட் என எங்கெல்லாம் குளிப்பார்களோ( குறிப்பாக பெண்கள்) அங்கெல்லாம் சிறுவர் கூட்டம் ஷாம்பூ பாக்கெட் பொறுக்குவதற்கு அலைந்து திரிவோம். அப்படி பொறுக்கி சேர்த்த காலி ஷாம்பூ பாக்கெட்டுகளைக்கொண்டு ஒரு புதிய விளையாட்டை உருவாக்கினோம்.

கையடக்கத்தில் சதுரமாய் தேய்க்கப்பட்ட கற்களை ஆளுக்கொன்றாக வைத்துக்கொண்டு மார்க் செய்திருக்கும் ஓரிடத்திலிருந்து கல்லை தூரத்தில் வீசி(எங்க பாஷையில் சொன்னால் ஒட்டி) வீசிய கல்லினை மற்றொருவன் சூட் செய்தாலோ அல்லது சாண் அளவு வருமாறு அருகில் ஒட்டினாலோ அவனுக்கு முதலில் ஒட்டியவன் பெட் கட்டிய ஷாம்பூ பாக்கெட்டுகளைக் கொடுக்க வேண்டும். வெல்வெட் ஷாம்பூவிற்காகத் தொடங்கிய இவ்விளையாட்டில் எனக்குத் தெரிந்து யாரும் காலி பாக்கெட்டுகளைக் கொடுத்து ஷாம்பூ வாங்கிய நினைவில்லை.மாறாக சிக்,வெல்வெட் என அப்போது புழக்கத்திலிருந்த அத்தனை ஷாம்பூ பாக்கெட்டுகளையும் கொண்டு விளையாட்டை மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

விளையாட்டு உச்சபட்ச ட்ரெண்டில் இருந்தபோது ஒரு நாள் பச்சை நிறத்தில் புதிய பிராண்ட் ஷாம்பூ பாக்கெட்டை நண்பனொருவன் எடுத்து வந்தான். முதன் முதலாய் அந்த ஷாம்பூவை அப்போதுதான் பார்க்கிறோமென்பதால் அதனை ஜெயித்துவிட ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டிருந்தபோது அங்கே வந்த ஒரு அண்ணன், ”டேய் இது இருமல் மருந்து நிவாரன் 90 டா” என்றார். நாங்க எல்லோரும், ”இருமல் மருந்தா?’’ என்று கோரஸ் பாடி முடிக்கையில், ”அதான் தலைக்கு போட்டதும் நொரையே வல்லையா” என்றவனைப் பார்த்து அந்த அண்ணன் பயங்கரமாய் சிரித்துவிட்டு, ”ஏண்டா படிக்கத் தெரியாட்டியும் அதுலதான் ஒரு ஆளு வாயில மருந்த ஊத்திக்கிற மாதிரி படம் இருக்குல்ல அதப் பாத்துமாடா வெளங்கல” என்றபடியே பக்கத்தில் கபடி விளையாடிக்கொண்டிருந்த மற்ற அண்ணன்களிடமெல்லாம் நண்பனின் மானத்தை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார். இப்போதுதான் தேங்காய் எண்ணெய் தொடங்கி பல பொருட்கள் அந்த மாதிரி சாஷைகளில் வருகிறது, அப்போது ஷாம்பூ மட்டுமே பாலிதின் சேஷைகளில் வந்துகொண்டிருந்ததால் வந்த குழப்பம் அது. நிவாரன் 90 யை பார்க்கும் போதெல்லாம் இப்போதும் இந்த நினைவுதான் என்னிடமிருந்து ஒரு சிறிய புன்னைகையை களவாடிச் செல்லும்.

இவ்விளையாட்டில் பைத்தியமாய் இருந்த நாட்களில் பக்கத்து ஊர் கம்மாய் வரை ஷாம்பூ பாக்கெட் தேடி அலைந்திருக்கிறோம். கும்பலாய் ஷாம்பூ பாக்கெட் வேட்டைக்கு போகயில் தூரத்தில் கிடக்கும் பாக்கெட்டை எவனாவது முதலில் பார்த்துவிட்டு ”அங்கரே ஒன்னு கெடக்கு நாந்தான் ஃபர்ஸ்டு பாத்தேன்” என்று சொல்லிக்கொண்டே ஓடுகையில் அவனை முந்திக்கொண்டு வேற எவனும் எடுத்துவிட்டால் அவ்வளவுதான் ரத்தகளரி நடக்கும். முதலில் ஏதுவாக இருப்பது சட்டை பாக்கெட்டுதான் அதைத்தான் முதலில் கிழிப்பானுங்க/பேன். சட்டை போடாமல் இருப்பவனுங்களை கட்டுக்குள் கொண்டுவர அரைஞான் கயிற்றை பிடித்துக்கொண்டு உருளுவோம். இப்படியான சண்டைகளில் ஷாம்பூ பாக்கெட்டை கிழித்து வீசினாலும் வீசுவோமேயன்றி விட்டுக்கொடுத்ததாக ஞாபகம் இல்லை.

பிறகு இதே போன்று லெட்சுமி சீவல் பாக்கெட்டின் லேபிள்களைச் சேர்க்க ஆரம்பித்தோம். ஐம்பது லேபிள்களைச் சேர்த்து கடைகாரரிடம் கொடுத்தால் இரண்டு தேன் மிட்டாய் கிடைக்கும். அந்த லேபிளை என்ன செய்வார் என்பதெல்லாம் தெரியாது. இப்படி தேன்மிட்டாய்க்கான லெட்சுமி சீவல் லேபிள் சேகரிப்பானது ராணி சீவல்,எஸ்டேட் புகையிலை என விளையாட்டுக்காய் எக்ஸ்டெண்ட் ஆனது.

தஞ்சைக்கு அருகில் உள்ள எனது கிராமத்தில் லெட்சுமி சீவல்,ராணி சீவல் மற்றும் எஸ்டேட் புகையிலை மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இந்த லேபில்களைச் சேகரிக்க காலையிலேயே கடையை நோக்கி ஓடுவோம் . சீவல்,புகையிலை வாங்குபவர்களின் அருகிலேயே அந்த பாக்கெட்டுகளைப் பிரிக்கும் வரை உறுமீன் கொக்காய் நின்றதெல்லாம் ஈரமாய் நினைவில்.

கடையின் வாசலில் வெற்றிலை எச்சில் கறைபட்ட நிறைய லேபிள்கள் கிடக்கும். இந்த லேபிள்களைச் `செல்லாத நோட்டு` என்று ஆட்டத்தில் சேர்த்துக்க மாட்டானுங்க. வேற வழியில்லாத போது , கறைபடிந்த லேபிள்களையும் பொறுக்கி, கறைகள் தனியாய் கசிந்து பிரியும்ப‌டி தண்ணிரில் சிறிது நேரம் உள்ளங்கையில் வைத்தபடியே நனைத்து , பிறகு மண் சுவரில் ஒட்டி காயவைத்து நல்ல மடமட சலவைத் தாளோடு க‌ள‌ம் இற‌ங்குவோம். இப்படி செய்யும் போது இளஞ்சிவப்பு நிற லெட்சுமி சீவல் லேபிள் ஆரஞ்ச் கலர் லேபிளாக மாறிவிடும், இருந்தாலும் ஆட்டையில் சேர்த்துக்குவானுங்க. மட்டித்தாள்களில் அச்சடிக்கப்பட்டிருக்கும் லேபிள்களை நனைக்கும்போது மண்பாண்டக் குயவனின் செயலையொத்து மிகக் கவனமாகக் கையாண்டால்தான் சலவைத்தாள் இல்லாவிடில் காகிதம் கூழ். நான் இதில் பயங்கர எக்ஸ்பெர்ட்.

யாராவது வயதானவர்கள் கடைக்குச் சென்று வெற்றிலை வாங்கி வரச் சொன்னால் நானெல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ளாதவன்.ஆனால் இவ்விளையாட்டு ஆரம்பித்த பிறகு ஊரில் இருக்கும் அத்தனை வெற்றிலை போடும் பெருசுகளுக்கும் ராஜமரியாதைதான். வெற்றிலை போடுபவர்களை எங்கே பார்த்தாலும் ”கடைக்கு போகனுமா” என்று வலிய கேட்க ஆரம்பித்து ஒவ்வொருத்தனும் சிலரை வாடிக்கை பிடித்து வைத்திருந்தோம். நாங்க லேபிளுக்காகத்தான் நிற்கிறோமென்பது நன்றாகவே தெரிந்தாலும் சில பெருசுங்க லேபிளை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுப்பதுபோல பாவ்லா காட்டி லேபிளோடயே சீவல் பாக்கெட்டை வேட்டியில் சுருட்டிட்டு போகுங்க அப்போதெல்லாம் ”இருடி உனக்கு இருக்கு” என்று மனசுக்குள்ளேயே கருவிக்கொண்டு நிற்போம். வெற்றிலை போடும் சில பாட்டிகளின் பக்கத்தில் லேபிளுக்காக போய் நின்றால், ”போங்கடா அங்கிட்டு எம்பேரங்கிட்டதான் கொடுப்பேன்”னு லேபிளை முந்தானையிலேயே முடிந்து வைத்துக்கொண்டதும், கிழவிகள் தூங்கும் போது முடிச்சை அவுத்து நாங்கள் முடிச்சவுக்கிளான கதைகளும் உண்டு.

கோடைவிடுமுறைக்கு பக்கத்தில் உள்ள சிறுநகரமான எனது பாட்டியின் ஊருக்குச் செல்லும்போது அங்குள்ள கடைத்தெருக்களில் ஏ.ஆர்.ஆர் சீவல் மற்றும் தங்கவிலாஸ் புகையிலைகளின் லேபிள்களை சேகரிப்பதுதான் முக்கிய வேலையாக இருக்கும். ஊருக்கு திரும்பியதும் புதிய லேபிள்களோடு விளையாடப் போகும்போது இருக்கும் பெருமிதத்தை அடடா என்னவென்று சொல்வேன் அதெல்லாம் அனுபவிச்சு உணரணும்ங்க, ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டாடுவானுங்க பசங்க. ”கூட்டாளி கூட்டாளி எனக்கு ஒன்னே ஒன்னு குடுய்யா நான் ஒனக்கு ரெண்டு லெச்சுமி சீவல் கடுதாசி தரேன்” என்றெல்லாம் கெஞ்சுவானுங்க. அதுவும் பத்மினி படம் அச்சிடப்பட்ட எஸ்டேட் புகையிலையின் லேபிளைப் பார்த்து பார்த்து சலித்துப்போனவர்கள் பச்சை நிறத்தில் பறக்கும் குதிரையோடு இருக்கும் தங்கவிலாஸ் புகையிலையின் லேபிளின் மேல் பயங்கர கிரேஸாக இருந்தனர்.

ஒவ்வொரு நாளும் விளையாடிய பிறகு ”இன்னைக்கு எனக்கு ஆயிர்ரூவா ஜெயிப்புடா/தோப்புடா ”என்று கணக்குப்போட்டு பேசிக்கொண்டிருக்கையில் அவ்வழியா கிராஸாகும் எதாவது ஒரு பெருசு,” எலேய் ஒங்கப்ப(ன்) கையில காசுல்லன்னுட்டு இருக்கான் நீதான் ஆயிரமாயிரமா வச்சிருக்கியே கொஞ்சம் கொடுக்குறது” என்றபடி ஏதோ பெரிதாய் காமெடி செய்துவிட்டதைப் போல தானே கேட்டு தானே சத்தமாய் சிரிச்சிட்டு போகும். இப்படி ஆயிரம் ஆயிரமாய் சேமித்து வைத்த பொக்கிஷம்தான் பரணில் செல்லரித்துப் போயிருந்த அந்த லேபிள்கள்.


கிராமங்களில் பால்யம் அமையப் பெற்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.அந்த வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.தொலைந்து போன எனது பால்யத்தின் தொலையாத நினைவுகளில் இப்படித்தான் அடிக்கடி தொலைந்துபோகிறேன்.

Monday, March 29, 2010

எங்க ஊரின் வரலாறு


 எங்க ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களோடு நன்றாகப் பழகினாலும் தண்ணீர் உட்பட எதுவுமே கொடுக்க மாட்டார்களாம். ”முறைப்பாடு இருக்கிறது தெய்வ குத்தம் ஆகிடும்” என்று சொல்வார்களாம்.இதன் பின்னணியில் ஏதோ ஒரு சுவாரஸ்யம் இருப்பதையறிந்து ஊர் பெருசு ஒன்றிடம் கேட்டபோதுதான் எங்க ஊரின் வரலாறு எனக்குத் தெரிய வந்தது.

எந்த காலக் கட்டத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, தற்போது எங்கள் ஊர் அமைந்திருக்கும் இடத்திற்கு 2கி.மீ தொலைவில் ஊரின் தெற்கு எல்லையாக காட்டாறு இருக்கும். அந்த காட்டாற்றின் மறுகரையில் தான் எங்களின் பூர்வீகக் கிராமம் இருந்ததாம். நான் சொல்லிக் கொண்டிருக்கும் கதை நடந்த காலத்தில் அடிக்கடி பெரு மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கே குடியிருந்த எங்கள் முன்னோர்கள் வீடு, கால்நடைகள் முதலிய எல்லாவற்றையும் இழக்க நேர்ந்ததால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போது இருக்கும் இவ்விடத்திற்கு வந்தார்களாம். அப்படி வந்தபோது அங்கே ஏற்கனவே பூர்வீகக் குடியாய் இருந்த சொற்ப எண்ணிக்கையிலான மற்றொரு சமுதாயத்தினரை மெஜாரிட்டியான எம்முன்னோர்கள் விரட்டியிருக்கிறார்கள். அப்படி விரட்டப்பட்டவர்கள் தான் தற்போதும் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கும் அம்மக்கள்.(நியாயம்தான்).

எனது முன்னோர்கள் வாழ்ந்த இடமாகச் சொல்லப்படும் அந்த காட்டாற்றின்
மறுகரையில் இன்றும் பாழடைந்த நிலையில் மிகவும் சிறிய அளவிலான பொன்னியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் இருக்கின்றன.

பொன்னியம்மன் சிலை

பொன்னியம்மன் கோவிலில் அம்மனின் சிலை மட்டுமே இருக்கிறது, சுற்றுச் சுவர் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது.

சிவன் கோவில் பொன்னியம்மன் கோவிலைவிட சற்று பெரியது, மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும் இக்கோயிலில் தற்போது மூலவர் அறை மட்டுமே முழுதாய் இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாததால் புதர்களும், மரங்களும், பாம்பு சட்டைகளுமாய் ஒரு வித அச்சத்தை தருவிக்கும் தோற்றத்தோடு இருக்கிறது.






சிவன் கோவில்

இப்படி ஒரு கோயில் இருப்பதே எங்கள் ஊரின் இளைய தலைமுறையினர் நிறைய பேருக்குத் தெரியவில்லை. நானும் கூட இக்கதையை அறிந்த பிறகே அங்கே சென்று பார்த்தேன்.
நந்தி
மூலவர் அறை



இந்த செங்கற்கலின் வடிவங்கள் மூன்று விதங்களில் இருக்கின்றன.

கோயிலைக் கட்டப் பயன்படுத்தியிருக்கும் சுட்ட கற்களில் வடிவமும்,அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணாம்புக் கலவையால் பூசியிருக்கும் விதமும் அக்காலக் கட்டிடக் கலையின் நேர்த்தியை எண்ணி வியக்க வைத்தது.


சிவன் கோவிலின் உட்புறம் இருக்கும் பெண் சிலை


முட்செடிகளுக்கிடையில் இருக்கும் சிவன் கோவில்

அந்த கோயிலினுள் நின்ற போது பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளன் மாதிரி பயங்கரமான ஒரு ஃபீல்.(உள்ளுக்குள் உதறலோடு).வைரமுத்து மாதிரி “வண்டல்மண் இதிகாசம்” என்று ஒன்று எழுத வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு அங்கே நின்றபோது வந்ததுன்னு சொன்னா நீங்க சிரிப்பீங்கதானே,ஆனா நிஜமாவே அப்படித்தாங்க நெனச்சேன்.

கொசுறு:படங்கள் மட்டுமே புதிது, கட்டுரை மீள் பதிவு.

Tuesday, November 24, 2009

பொன்னேர் பூட்டுதல்


வருடம்தோறும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் கொண்டாடப்படும் அல்லது பின்பற்றப்படும் ஒரு சிறிய நிகழ்ச்சி பொன்னேர் பூட்டுதல்.எங்கள் பகுதியில் நல்லேர் கட்டுதல் என்பார்கள்.

பெரும்பாலான கிராமங்களில் சித்திரையின் முதல்நாளே நல்லேர் கட்டுவார்கள்.எங்கள் ஊரில் சித்திரையின் முதல் வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கட்டுவார்கள்.எனது ஆரம்பப்பள்ளி நாட்களில் பாடப்புத்தகங்களில் கிராமங்கள் சார்ந்த விழாக்களைப் பற்றிய பாடங்களில் சூரிய உதயத்தில் உழவன் ஒருவன் கலப்பையை தோளில் தாங்கியபடி எருதுகளை ஓட்டிச் செல்வது போலவும்,உழத்தி ஒருத்தி அவன் பின்னால் கஞ்சிப்பானை சுமந்து செல்வது போலவும் ஒரு டெம்ப்ளேட் படம் அச்சிட்டிருப்பார்கள். இந்தக் காட்சி அப்படியே நல்லேர் கட்டுமன்று எங்கள் ஊரில் காணக்கிடைக்கும் .

அதிகாலையிலேயே வீடுகளை கழுவி,மாடுகளை குளிப்பாட்டி அதனோடு கண்டிப்பாக மனிதர்களும் குளித்து கலப்பையை தோளில் சுமந்து எருதுகளை ஓட்டியபடி வயல்களை நோக்கி ஆண்கள் நடக்க அவர்களின் பின்னால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் பூஜை பொருட்கள், நவதானியங்கள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துச் செல்வர்.கூடவே ஒரு கூடையில் மாட்டு எரு,பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பாட்டிமார்களின் தலையில் இந்த எரு அள்ளிக்கொண்டு வருவதை கட்டிவிடுவார்கள்.

வயலில் மண்ணால் சிறு மேடை அமைத்து அதன் மேல் சாணம் அல்லது மஞ்சள் தூள் குழைத்து பிள்ளையார் செய்து, கொண்டுவ‌ந்திருக்கும் பொருட்களை அதன் முன் பரப்பி வைத்துவிட்டு, பஞ்சாங்கத்தின்படி அன்று எந்த திசை நல்ல திசையாக சொல்லப்பட்டிருக்கிறதோ அத்திசையை நோக்கி எருதுகளை நிற்க வைத்து ஏர் பூட்டி உழுவார்கள். குழந்தைகள் உட்பட குடும்ப‌ உறுபின‌ர்க‌ள் ஒவ்வொருவரும் அன்று ஏர் ஓட்டுவார்கள் அதாவது மெயின் டிரைவர் ஒருவர் இருப்பார் மற்றவர்கள் சம்பிரதாயத்திற்காக கொஞ்ச கொஞ்ச நேரம் கலப்பையின் கைப்பிடியைத் தொட்டுக்கொண்டு நடப்பார்கள். இது சம்பிரதாய உழவு என்பதால் வயலின் ஒரு சிறுபகுதியை மட்டும் உழவு செய்துவிட்டு எருதுகளை அவிழ்த்துவிடுவார்கள். பிறகு உழவு செய்த இடத்தில் எருவை கொட்டி அதன் மீது நவதானியங்களை விதைத்துவிட்டு அந்த வருடம் விளைச்சல் சிறப்பாய் இருக்க இறைவ‌னை வேண்டி பூஜைகள் செய்து எருதுகள், கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, கொண்டுவந்திருக்கும் நீராகாரத்தை எல்லோரும் பருகிவிட்டு பிரசாதமாக இனிப்புக் கலந்த பச்சரிசியை சுவைத்தபடியே வீட்டிற்குத் திரும்புவர். சுற்றிலும் இருக்கும் வ‌ய‌ல்வெளி எங்கும் அந்த‌ அதிகாலை நேர‌த்தில் கிராம‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் அவ‌ர‌வ‌ர் வ‌யல்க‌ளில் பொன்னேர் பூட்டும் காட்சி திருவிழாக்கோல‌மாக‌ அவ்வ‌ள‌வு ர‌ம்மிய‌மாக‌ இருக்கும்.

வீட்டு வாசலில் வேப்பங்குழை மற்றும் மாவிலைகளோடு ஒரு குடத்தில் நீர் வைத்து அதன் மேல் ஒரு சொம்பில் பசும்பால் வைத்திருப்பார்கள். வயலிலிருந்து திரும்பும் ஒவ்வொருத்தரும் அந்த நீரில் கால்களை சுத்தப்படுத்திக்கொண்டு பசும்பாலை சிறிது சுவைத்து, வேப்பங்குழைகளை வீட்டின் கூரையில் சொறுகிவிட்டு வீட்டினுள் நுழைவார்கள்.

புது வருடம் பிறந்ததும் நல்லேர் கட்டுவதற்கு முன்பாக வேறு எந்த விவசாய வேலைகளையும் செய்யக் கூடாது.அதனாலேயே சித்திரை பிறக்கும் அன்றே பெரும்பாலான கிராமங்களில் நல்லேர் கட்டிவிடுவார்கள்.சித்திரைப் பட்டம் உளுந்து,கடலை போன்ற தானியங்கள் நன்றாக விளையும்.நல்லேர் கட்டுவதற்கு முன்பாகவே மழை பெய்துவிட்டால் ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும் என்பதற்காக நல்லேர் ரூல்ஸை மீறவும் செய்வார்கள், அப்படி ரூல்ஸை மீறுபவர்கள் கண்டிப்பாக பஞ்சாயத்தில் அபராதம் செலுத்த பணிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் எல்லாமும் தெரியுமென்றாலும் எல்லாத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்து பருவத்தே பயிர் செய்துவிட்டு ஃபைனையும் கட்டுவார்கள்.

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய விவசாயத்தில் முதலில் காணாமல் போனது உழவு மாடுகள். அதனால் கலப்பைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இன்றும் நல்லேர் சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது. வீட்டிற்கு ஒருத்தரோ இருவரோ வயலுக்குச் சென்று மண்வெட்டியால் வயலில் சிறிது கொத்திவிட்டு ஜவுளிக்கடை கேரிபேக்கில் பார்சல் செய்யப்பட்ட எருவை கொட்டி நவதானியங்களை அதில் தூவிவிட்டு அவசர பிரார்த்தனை செய்துவிட்டு மினரல் வாட்டர் பாட்டிலில் கொண்டுவந்திருக்கும் நீராகாரத்தை பருகிவிட்டு,அனைத்துப் பொருட்களையும் கையடக்க நவீன பையில் எடுத்துவைத்தபடியே டூவீலரில் கிளம்பிவிடுகிறார்கள்.

ஆள்பற்றாக்குறை,எகிறிய கூலி,போதிய விளைச்சலின்மை, விளைந்த பொருட்களுக்கு நியாயமான விலையின்மை என‌ பல காரணங்களால் எங்கள் பகுதியில் சவுக்கு, யூக்களிப்டஸ் போன்றவற்றை நெல், கடலை, உளுந்து, எள், கரும்பு என நன்றாக விளையக்கூடிய நன்செய் நிலங்களிலும் தரிசாகப் போடக்கூடாதென்பதற்காக நட்டு வைத்திருக்கிறார்கள். விவசாயம் நலிவடைந்திருக்கும் இன்றையச் சூழலில் நல்லேர் பூட்டுவதை ஒரு கடமைக்கேனும் செய்து கொண்டிருப்பதே பெரிய விஷயம்தான்.

Monday, September 28, 2009

எங்க ஊருக்கு தொலைக்காட்சி வந்த கதை

எண்பதுகளின் மத்தியில் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், எங்கள் ஊர் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நிறைய இடங்களில் தங்கி ஆயுதப் பயிற்சி எடுத்து வந்தனர். அப்போது அவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளுக்காக VCR மூலமாக அருகில் இருக்கும் கிராமங்களில் புதுப்புது படங்களை ஓட்டுவ‌து வ‌ழ‌க்க‌ம். டிக்கெட் ஒரு ரூபாய். முதன் முதலில் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கும் பாக்கியம் எங்கள் ஊருக்கு அவர்களின் மூலமாகவேக் கிடைத்தது.

அப்போது எங்கள் ஊரில் மூன்று வீடுகள் மட்டும்தான் மாடி வீடுகள். அதிலொன்று ப‌ள்ளியின் அருகிலேயே இருக்கும்.அவ்வீட்டின் மாடிப் படிகளில் ஏறமுடியாதவாறு முட்களைக்கொண்டு அடைத்து வைத்திருப்பார்கள். திருட்டுத்தனமாக அவ்வீட்டின் மாடிப்படியின் பக்கவாட்டு சுவரில் சறுக்கி விளையாடுவது எங்கள் சிறுபிராயத்தின் சாகச விளையாட்டுகளில் ஒன்று. அந்த வீட்டில் பாட்டி ஒருவர் இருக்கிறார் , அவர் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான் மனித குலம் தோன்றிய காலத்தைய முன்னோரில் ஆரம்பித்து எங்களுக்கு பிந்தைய தலைமுறைக்கெல்லாம் சேர்த்து சாபம் விடுவார். இன்னொரு மாடி வீடு எனது நண்பனின் வீடு என்பதால் அங்கே அடிக்கடி மாடியில் ஏறிப்பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மூன்றாவது வீட்டு மாடியின் அமைப்பு எப்படி இருக்குமென்றே தெரியாத அளவிற்கு எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அந்த வீட்டு மாடியில்தான் முதல் வீடியோ அரங்கேற்றம் நிகழ்ந்தது.

படம் பார்ப்பதைக் காட்டிலும் அவ்வீட்டின் மாடியை பார்க்கப் போகிறோம் என்கிற ரெட்டைச் சந்தோஷமெனக்கு. ”பூக்களைப் பறிக்காதீர்கள்”, ”வளையல் சத்தம்” மற்றும் ”முத்துக்கள் மூன்று” ஆகிய மூன்று படங்களை அப்போது ஓட்டினார்கள். கொடுத்த ஒரு ரூபாய்க்கு ஆசைத்தீர அந்த மாடிப்படிகளில் ஏறி இறங்கினேன். மற்றபடி படத்தின் தலைப்பைத் தாண்டி கதை பற்றியெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளும் வயதில்லை.ஏதோ படம் தெரிந்தது அவ்வளவுதான்.

என் கூட்டாளிப் பசங்களின் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் பக்கத்து ஊர்களிலேயே இருப்பார்கள். ஆனால் எனது பாட்டி வீடு கொஞ்சம் தூரத்தில் உள்ள ஒரு சிறு நகரமென்பதால் அடிக்கடி பஸ் ஏறி பார்ப்பவன் என்கிற ரேஞ்சில் நிறைய பெருமைகள் எனக்கிருந்ததால் நான் சொல்வதே அவர்களுக்கு வேதவாக்கு. எங்க பாட்டியின் ஊர்ல ரோட்டுல கப்பல் போகும்டான்னு சொன்னாக் கூட நம்பும் வெள்ளந்தி பயமக்க. பாட்டியின் வீட்டிற்குச் செல்லும்போது சில வீடுகளில் ஆண்ட்டெனாவைப் பார்த்திருப்பதால் தொலைக்காட்சிப் பெட்டியில் படம் தெரிய ஆண்ட்டெனா அவசியமென சொல்லியிருந்தேன். ஆனால் அன்று ஆண்டெனா இல்லாமல் படம் ஓடியதைக் கண்டு எப்படி இது சாத்தியமென்று எனக்கோ ஒரே குழப்பம். மற்ற பசங்களின் முன் முதன் முறையாக என் ரீல் அந்து போனது அப்போதுதான். அதன் பின் நான் என்ன சொன்னாலும் கையால் ரீல் சுற்றுவதைப் போல் சைகை செய்து கமுக்கமாய் சிரித்து வெறுப்பேற்றுவானுங்க.

விடுதலைப் புலிகள் போட்டு வைத்த பிள்ளையார் சுழியைத் தொடர்ந்து எங்கள் ஊர் இளைஞர் மன்றத்தினர் விடுமுறை நாட்களில் தஞ்சையிலிருந்து வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து வந்து பள்ளிக்கூடத்தில் வைத்து வருடத்திற்கு இரண்டு மூன்று முறை படம் ஓட்ட ஆரம்பித்தார்கள். நாயகன், கரகாட்டக்காரன் போன்ற படங்களை ஓட்டியபோது தியேட்டரைப் போன்றே பெரும்கூட்டம் திரண்டது.

சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு இலவச அனுமதி வேண்டியும், சிலர் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு பள்ளிக்கூடத்தையே அழைத்து வந்து ஐம்பது காசைக்கொடுத்து பேரம் பேசுவதெல்லாம் வேறு நடக்கும். அப்படி டிக்கெட் எடுக்க காசில்லாமல் வெளியில் நிற்பவர்கள் பள்ளிக்கூடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்க்க என்னன்னவோ வித்தைகளெல்லாம் செய்வார்கள். ஆனாலும் ஒவ்வொரு ஜன்னலிலும் ஒருத்தர் தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல் கதவுகளை உள்பக்கமா இழுத்து பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். முதல் படம் ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் ஏகப்பட்ட கெடுபிடிகளாக இருக்கும். பிறகு ஒன்னுக்கடிக்க வெளியில் வருபர்களோடு சேர்ந்து டிக்கெட் எடுக்காதவர்களும் நைசாய் வந்து அமர்ந்து விடுவார்கள். ஓரளவு முதலுக்கு மோசமில்லாத வசூல் வந்ததும் வெளியில் நிற்பவர்களை மன்றத்து அண்ணன்களே இலவசமாக அனுமதித்துவிடுவார்கள். காசு கொடுத்து வந்தவனெல்லாம் முதல் படம் முடிந்ததும் தூங்கிவிடுவான், பிளாக்கில் வந்தவர்கள் விடியவிடிய படம் பார்த்துவிட்டு விடிந்ததும் டிக்கெட் எடுத்த பார்ட்டிகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

சில தடவை எங்க அப்பா படம் பார்க்க அனுமதி கொடுக்காமல் கிராமர் எடுக்க ஆரம்பித்து விடுவார். அன்றைக்கு காலையில் இருந்தே சும்மாதான் திரிந்து கொண்டிருந்திருப்பேன் ஆனால் படம் போடும் நேரத்தில்தான் பாடம் நடத்த ஆரம்பிப்பார். பள்ளிக்கூடமும் எங்க வீடும் அடுத்தடுத்து இருப்பதால் அங்கே படம் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இவரோ இங்கே ”ராமு இஸ் ஸ்மாலர் தேன் ராஜா” இதை பாஸிடிவ் டிகிரியா மாத்து என்பார். துக்கம் தொண்டையை அடைக்கும், கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கும். பிறகு கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ”போய்த்தொல” என்று காசு கொடுத்து விரட்டிவிடுவார். சில தடவை அழிச்சாட்டியமாய் அனுப்பவே மாட்டார். அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் பொறந்தாலும் வாத்தியார் பிள்ளையா மட்டும் பொறக்கக் கூடாதென்று.

1990 ல் எங்கள் ஊருக்கு பஞ்சாயத்துத் தொலைக்காட்சியின் வருகை நிகழ்ந்தது . டீ.வி வந்த அன்று ஊரே பள்ளிக்கூடத்தின் முன்பு திரண்டு விழாக்கோலம் பூண்டு வரவேற்றது அந்த பிளாக் அண்ட் ஒயிட் சாலிடர் டீ.வியை. ஆண்டெனாவை ஃபிட் செய்து இப்படியும் அப்படியுமாய் திருப்பி சிக்னலைப் பிடித்து ஒரு வழியாய் ஏதோ ஹிந்தி நிகழ்ச்சி ஓட ஆரம்பித்தது. கலைக்கு மொழியில்லை என்பதை முழுதாய் உணர்ந்த நாள் அது. ஊர் மொத்தமும் அசையாமல் பார்த்து ரசித்தது அன்றைய ஹிந்தி நிகழ்ச்சிகள் முழுவதையும்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை படத்திற்கும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கும் தவமாய் தவமிருந்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் பசுமையான காட்சிகளாக நினைவில் விரிகிறது. ஞாயிற்றுக் கிழமை ஐந்து மணிக்கு ஒளிபரப்பாகும் படத்திற்கு மூன்று மணிக்கே பள்ளியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அன்றைய எல்லா வேலைகளும் படம் பார்ப்பதை மனதிற்கொண்டே பக்கா பிளானிங்கா முன்கூட்டியே நடக்கும். இது சிறுவர்கள்,பெண்கள் தொடங்கி ஊரின் அத்தனை பேருக்கும் பொருந்தும். அப்படி இருக்கும் சமயத்தில் பவர் கட் ஆகிவிட்டால் துக்க வீடு கணக்கா யாரோடும் பேசும் மனநிலையற்று பித்து பிடித்ததைப் போன்று அமர்ந்திருப்பார்கள். பவர் வருவதற்கு முன்பாகவே எவனாவது “ஹைய்யா கரண்ட் வந்திடுச்சு ” என்று கத்தி கொலைவெறியை கிளப்புவானுங்க. அப்படிக் காத்துக் கிடந்து பார்ப்பது அரதப் பழசான ஒரு பூலோக ரம்பையோ, மாகாக்கவி காளிதாசோவோதான் இருக்கும். எப்போதாவது ”மூன்றாம் பிறை”, ”வேலைக்காரன்” போன்ற ரிலிஸாகி ஐந்தாறு வருடங்களேயான புதுப்படங்களை ஆச்சர்யமாய் ஒளிபரப்புவார்கள்.

தூர்தர்ஷனைத் தவிர வேறு சானல்களும் இல்லாததால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்களைக் கூட ஆர்டராக மனப்பாடம் செய்து ஒப்பித்த காலமது. ரொம்ப பிரசித்திப் பெற்ற விளம்பரம் ”என்ன ஆச்சு குழந்த அழுது” என்று ஆரம்பிக்கும் கிரேப் வாட்டருக்கான விளம்பரம்தான்.
இது போன்ற விளம்பரங்களைப் பார்க்கையில் மண்வாசனையோடு பசங்க உதிர்க்கும் கமெண்ட்ஸ், தடங்கலுக்கு வருந்தும்போது வரும் கூஊ...ஊ சவுண்டுக்கு கோரஸ் பாடுவது என ரகளையான நாட்கள் அவை.

பஞ்சாயத்து டீ.விதானே என்று ஆளாளுக்கு உரிமை கொண்டாடியதில் சீக்கிரமாகவே பல்லிளித்தது அந்த சாலிடர். ஸ்கிரினில் ”ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்தோடு தெரியும் மங்களான காட்சிகளைக் கூட விடாமல் பார்க்க ஆரம்பித்து வீடியோ இல்லாமல் வெறும் ஆடியோவை மட்டுமே கேட்கும் ரேடியோவாகவும் பரிணாமத் தேய்வு அடைந்து பல பரிமாணங்களில் வேலை செய்தது அந்த சாலிடர். பிறகு ஒரு நாள் யார் ஆப்பரேட் செய்வது என்ற சண்டையில் ஒன்றுக்கும் உதவாத ஜடமானது. சண்டையின் உச்சத்தில் அதுவரை அமைதியாக இருந்த ஒரு அண்ணன் ”எனக்கும் இந்த டீவியில் ஒரு நெட்டாவது பங்குண்டு” என்று சொல்லியபடியே பூஸ்டரை தூக்கி உடைத்துவிட்டு எழுந்து சென்றார். ஒரு வழியாய் பஞ்சாயத்து டீ.விக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள். அந்த சமயம்தான் ராஜிவ்காந்தி அஸாசினேஷன் நடந்தது. எங்க ஊரில் டீ.வி ஓடாததால் ராஜிவ் காந்தி அவர்களின் இறுதி ஊர்வலக் காட்சிகளைப் பார்ப்பதற்காக பக்கத்து ஊருக்கு குறுக்குப் பாதையில் காட்டாற்றில் இறங்கி கொளுத்தும் வெயிலில் கருவேலங்காட்டினுள் புகுந்து சென்று பார்த்ததெல்லாம் மறக்கமுடியாத நினைவுகள்.

இரண்டு வருடங்களாக தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்து பழகிவிட்ட எங்க அப்பா எங்கள் வீட்டிற்கு ஒனிடா 21 இன்ச் கலர் டீவியை 92ம் வருடம் திபாவளி அன்று வாங்கிவந்து எங்களை ஆச்சர்யப்படுத்தினார். அதுதான் எங்கள் பகுதிக்கே முதல் வண்ணத்தொலைக்காட்சி. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீட்டின் வாசலில் டீ.வியை எடுத்து வைத்து விடுவோம் ஊரே அன்று எங்கள் வீட்டின் வாசலில் இருக்கும். நான்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பக்கத்து ஊர் இளைஞர்கள் சிலர் சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு வேல்ட்கப் ஃபுட்பால், கிரிக்கெட் பார்க்க வந்த கதையெல்லாம் உண்டு. படம் பார்க்க வரும் மக்கள் எங்கள் வீட்டு வாசலையே டாய்லெட்டாக்கி அசிங்கம் செய்து வைத்ததால் என்னென்னவோ ரூல்ஸ் போட்டும் யாரும் மதிக்காததால் சில மாதங்களுக்குப் பிறகு டீ.வியை வெளியில் எடுத்து வைப்பதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

இலங்கை சேனல்களான ரூபவாஹிணியும், ஐ.டி.என்னும் அவ்வப்போது கிராஸ் ஆகும். அதில் ஐ.டி.என்னில் புத்தம் புது தமிழ் படங்கள் ஒளிபரப்புவார்கள். பாதி படம் வரை நன்றாகத் தெரியும் திடீரென சிக்னல் கட்டாகிவிடும் அந்த சமயத்தில் ஆண்டெனாவை திருப்பித் திருப்பியே நாளெல்லாம் மண்வெட்டி பிடித்து வெட்டுபவனைப் போல கடுமையாய் கை காய்த்துப் போய்விடும்.

இப்போது வீடு தவறாமல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், கேபிள் இணைப்பும் இருக்கிறது ஆனாலும் அளவோடு இருந்ததால் அமுதாய் தெரிந்த அந்த ஒலியும் ஒளியும் காத்திருப்பின் சுகமே தனிதான்.

Wednesday, August 19, 2009

வேடிக்கையான திருவிழாக்கள்..

எங்க ஊர் பகுதிகளில் இருக்கும் சில வேடிக்கையான சம்பிரதாயங்களில் பெண்கேட்டல், பன்றிவேட்டை பாக்குத் திருவிழாவைத் தொடர்ந்து இன்று பகவதியம்மன் கோயில் பூஜை.

பெரும்பாலும் பகவதியம்மனுக்கு கேரளாவில் தான் கோயில்கள் இருக்கும். ஆச்சர்யமாக பகவதியம்மனுக்கு எங்க ஊரிலும் ஒரு கோயில். கோயில் என்று சொல்லுமிடத்தில் அடர்ந்த மரங்களும், செடி கொடிகளும் தான் சூழ்ந்து இருக்கும் கட்டிடமோ, சிலையோ எதுவுமே கிடையாது.


இந்தக் கோயில் என்றில்லை இன்னும் சிலவும் இருக்கிறது, அங்கேயும் சிலைகளோ, கட்டிடமோ இல்லாது பொட்டல் வெளியாக இருக்கும். ஆனால் அவ்விடத்தைக் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். கோயில்களுக்கான எந்த தடயமும் இல்லாது எப்படி அந்த இடங்கள் கோயில்களானது என்று அடுத்த முறை ஊருக்குப் போகும் போது ஏதாவது பெருசை புடிச்சு விசாரிக்கணும்.

இந்தக் கோயிலுக்கு பூஜை போடுவதைப் பற்றி ஒவ்வொரு வருடமும் ஊர் கூட்டம் கூடி பேசுவார்கள், ஆனாலும் கூட்டம் மட்டுமே வருடம் தோறும் நடக்கும், பூஜை நடக்காது. காரணம் சில கண்டிஷன்கள்.

* பூஜை நடக்கும் மாதத்தில் யாரும் மண்டைய போட்டிருக்கக் கூடாது, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தாலும் எங்கே பூஜையன்று கன்ஃபார்ம் ஆகிடும்மோன்னும் பூஜையை ஒத்தி வைத்துவிடுவார்கள்.

*அந்த மாதத்தில் பிரசவம் நடந்திருக்கக் கூடாது. இதிலும் வெயிட்டிங் லிஸ்ட் ரூல்ஸ் பின்பற்றுவார்கள்.

*பொண்ணுங்க புதுசா பச்சை ஓலைக்கு வேலை வைத்து விடக் கூடாது.

இப்படி பட்ட ரூல்ஸ் அந்த காலத்தில் மக்கள் தொகை கம்மியாக இருந்ததால் ஒர்க் அவுட் ஆகியிருக்கும், இப்போதும் ஃபாலோ பண்ணுவதால் பூஜை சாத்தியமில்லாமலேயே இருக்கு.


அப்படியே எல்லாம் கூடி வந்தாலும் அலும்புக்குன்னே ஊருக்கு நாலு பேரு இருப்பாய்ங்கல்ல அதில எவனாவது முப்பாட்டன் காலத்தில நடந்த வாய்க்கால் சண்டையை பஞ்சாயத்துக்கு கொண்டு வந்து தீர்க்கச் சொல்லுவாய்ங்க, இல்லாட்டி நீங்க எப்படி பூஜை போடுறீங்கன்னு நானும் பாக்குறேன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க. அப்புறம் எங்கிட்டு பூஜை நடத்துறது.

எனக்குத் தெரிந்து என்னுடைய ஐந்தாவது வயதிலும், பதிமூன்றாவது வயதிலும் இரண்டு பூஜைகளை பார்த்திருக்கிறேன்.கடைசியாக பூஜை நடந்தது 91 ம் வருடமென்று நினைவு.


பூஜையன்று கோயில் இருக்குமிடத்தை சுத்தம் செய்து வேட்டியாலேயே பந்தல் போட்டு நான்கு பக்கமும் வேட்டியைக் கொண்டே சுற்று சுவர் போலவும் மறைத்து விடுவார்கள்.பெண்கள் நாட் அலவ்டு (சாதாரண நாட்களிலும் பெண்கள் தூரத்தில் இருந்தே வழிபடுவார்கள்).

ஏகப்பட்ட ஆடுகள், கோழிகள் வேண்டுதலின் பேரில் பலி கொடுக்கப்படும். எங்க ஊருக்கு சம்பந்தமே இல்லாத தூரத்திலிருந்தெல்லாம் நிறைய பேர் இந்த பூஜைக்கு வேண்டிக் கொண்டு வருவார்கள்.


சாதத்தோடயே கறியையும் வேகவைத்து மசாலா சேர்க்காமல் மிளகாயை கையாலேயே பிச்சுப் போட்டு ஒரு மாதிரி வித்யாசமான சுவையுடன் இருக்கும். கைக்குத்தல் அரிசியைத் தான் பயன்படுத்துவார்கள் என்று நினைவு.
பொதுமக்களுக்கு அன்னதானம் பரிமாறவென தனி இடமெல்லாம் இருக்காது, அப்படியே வாழையிலையை ஏந்தி பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் அடர்ந்த கருவேலங் காட்டில் கிடைத்த இடத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். இப்போது அந்த கருவேலம் மரங்கள் இருந்த இடத்தில் வீடுகள் வந்துவிட்டது.

பூஜை தொடர்ந்து தடைபட்டு வருவதால் சாமி நம்ம ஊரைவிட்டு போயிடுச்சுப்பா என்றும், ஏதாவது அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்கும் போது, ”பகவதிக்கு பூசை போடததால் தான் இப்படியெல்லாம் நடக்குது” என்றும் பலவாறு பெருசுகள் பேசிக் கொள்வதை ஊரில் அடிக்கடி கேட்க முடியும்.

கோயிலுக்கு அருகில் இருந்த இடத்தை வீடு கட்டவென வாங்கியவர்கள் வீடு கட்டாமல் இருப்பதையறிந்து அவர்களிடம் விசாரித்த போது அந்த மனையில் சாமி ஓட்டம் இருப்பதாகவும், குறுக்கே வீடு கட்டினால் சாமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஜாதகம் பார்த்தவர்கள் சொன்னதாகவும் சொன்னார்கள். இந்த மாதிரி பல கதைகள் எங்க ஊரில் இன்னும் சில கோயில்களைப் பற்றியும் உலவுகிறது.

நம்ம பங்காளி மக்க வாய்க்கால் தகறாரை கொண்டு வர்ரதால இருக்கிற ஒரே நல்ல விஷயம் புளுகிராஸினர் வேலையை மறைமுகமாக இவர்களே செய்து விடுவது தான்.

டிஸ்கி:இந்தத் திருவிழாவை விபரமறிந்து நான் பார்த்ததில்லை என்பதால் என்னால் விரிவான தகவல்களை கோர்வையாக கொடுக்க இயலவில்லை.

அடுத்த பதிவில் பொன்னேர் பூட்டுதலின் இன்றைய பரிதாப நிலைப் பற்றிச் சொல்கிறேன்.

Tuesday, August 18, 2009

பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும்

எங்கள் ஊர்ப் பகுதியில் நடக்கும் சில வேடிக்கையான சம்பிரதாயங்களில் பெண் கேட்டல் என்ற நிகழ்வை எழுதியதைத் தொடர்ந்து இன்று பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் என்ற சுவாரஸ்யத் திருவிழாவைப் பற்றிப் பார்ப்போம்.

கிராமப்புறங்களில் நாட்டுத் திருவிழா என்று ஒன்று நடக்கும். பதினெட்டு கிராமங்கள் சேர்ந்தது ஒரு நாடு.(சோழர்களின் ஆட்சிக் காலத்தின் உள்ளாட்சிப் பிரிவுகளில் ஒன்றுதான் இந்த நாடுகள் எனும் அமைப்பு). கோனூர் நாடு, குளத்தூர் நாடு, காசவள நாடு, மெய்சொல்லி நாடு என ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பெயருண்டு.

தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு தாலுக்காவின் கீழ் வரும் கோனூர் நாட்டில் வருடா வருடம் ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும் நாட்டுத் திருவிழாவின் ஒரு சுவராஸ்யமான பகுதியே ”பன்றி வேட்டை பாக்குத் திருவிழா” .

பெரும்பாலான திருமண சம்பந்தங்கள் எல்லாமே இந்த பதினெட்டுப் பட்டிகளிலேயே இருக்கும்.(இப்போது பரவலா வெளியிலும் சம்பந்தம் பேசுகிறார்கள்) .இந்த பாக்குத் திருவிழாவன்று பதினெட்டு கிராம மக்களும் தங்கள் நாட்டிற்கென்று பொதுவாக இருக்கும் ஒரு கோயிலின் முன்பு கூடிவிடுவர்.

திருமணமானப் பெண்களுக்கு அவர்களின் தாய் வீட்டிலிருந்து சீதனமாக கொட்டப் பாக்குகளை கொடுப்பர்.இந்த பாக்குகளில் எண்ணிக்கை குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து அதிக பட்சமாக ஆயிரக்கணக்கிலும் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பார்கள்.(மக்கள் இப்போது நிஜாம் பாக்கிற்கு மாறி விட்டார்கள்).

இதில் முதல் பாக்கு என்று ஒன்று உண்டு. புதுமணப் பெண்ணிற்கு கொடுப்பதுதான் முதல் பாக்கு. பெண்ணின் உறவுக்காரர்கள் அனைவரும் புதுமணத் தம்பதியருக்கு தாம்பூலத்தில் பாக்கு, பணம் வைத்துக் கொடுப்பார்கள், பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் இனிப்பு வகைகளை கொடுப்பார்கள். எங்கெங்கு காணினும் நிறைய புதுமணத் தம்பதியரை பட்டுடைகளோடு காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த 18 பட்டிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படித்தவர்களாக இருப்பார்கள். திருமணமாகி திருவிழாவில் கணவனோடு நிற்கும் பெண்கள் தங்களோடு கூடப் படித்தப் பசங்களைப் பார்க்கும்போது ஒரு மாதிரி நாணிக் கோணுவாங்க பாருங்க அடடா அழகான கவிதை தருணம்ங்க அது.

இன்னும் சில பெண்கள் பார்த்தும் பாராதது போல பந்தாவாக கணவனின் கைகோர்த்தபடியே நின்று கொண்டிருப்பார்கள், அந்த மாதிரி பொண்ணுங்களைத்தான் ரௌண்டு கட்டுவானுங்க பசங்க, ”டேய் ஊள மூக்கு”, ”சுருட்டை” ,”கௌதாரி” என பள்ளி நாட்களில் வைத்த பட்டப் பெயர்களை வேறு யாரையோ கூப்பிடுவதுபோல் உரக்கச் சொல்லி டரியலாக்குவானுங்க. பதறி கையை உதறி யாரும் அறியாத வண்ணம் “சீ போ” என்று அந்த பொண்ணுங்க செல்லமாய் திட்டுவதையெல்லாம் ஒரு வாரத்திற்கு கதை கதையாய் பேசித் திரிவாய்ங்க.

இன்னொரு பக்கம் பழைய காதலிகளை கண்களாலேயே நலம் விசாரித்த படியே மென்சோகத்தோடு நகர்ந்து போகும் நடுத்தர வயது மனிதர்களையும் இங்கே காணமுடியும்.

பாக்கு கொடுக்கும் வழக்கம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக கொண்டாடப் படுவதாகும். பிறந்த வீட்டோடு என்ன பிரச்சனை இருந்தாலும் பாக்கு திருவிழாவில் ஒன்று கூடிவிடுவார்கள். என்ன சண்டை இருந்தாலும் இந்த பாக்கு கொடுப்பதை தொடர்வதற்குக் காரணம் பாக்கு கொடுக்கப் படவில்லை என்று தெரிந்தால் சம்பந்தப் பட்ட பெண்மணியின் ஊரில் நடக்கும் குழாயடிச் சண்டையில்“போடி சொத்த பாக்குக்கு வக்கத்தவள” என்ற ஏச்சு பேச்சுக்கு ஆளாகி பிறந்த வீட்டின் மானம் கப்பலேற்றப்படும் அபாயம் இருப்பதே. அதே போன்று ”கூடப் பொறந்தவளுக்கு பத்து ரூவாய்க்கு பாக்கு வாங்கிக் கொடுக்க துப்பு இல்ல இவனெல்லாம் தோளில் துண்டு போட்டுகிட்டு திரியிறான்” என்று அண்ணன்,தம்பிகளும் அட்டாக்கிற்கு ஆளாக நேரிடும். அந்த கௌரவப் பிரச்சினைக்காகவே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

புது மணப் பெண்ணிலிருந்து பாக்கின் அவசியம் உணர்ந்த பழைய குமரிகள் வரை திருமணமான அனைவருக்கும் பாக்கு அவரவர் பிறந்த வீட்டிலிருந்து வந்துவிடும். சகோதரர்கள் இருவரைக் கொண்ட பெண்கள் என்றால் இரண்டு தனித் தனிப் பாக்குகள் வரும், அதே பெண்ணின் கணவருக்கு இரு சகோதரிகள் என்றால் சகோதரர்களிடம் வாங்கிய பாக்குகளை கணவரின் சகோதரிகளிடம் கொடுத்துவிட்டு செலவை மிச்சப் படுத்திவிடுவார்கள்.

அலைபேசி இல்லாத காலத்தில் பாக்கை கையில் வைத்துக் கொண்டு அவரவர் உறவினர்களை கூட்டத்தில் அலைந்துத் தேடிக் கண்டிபிடித்து
” யுரேகா யுரேகா” என்று கத்தாத குறையாக பாக்கை கொடுப்பார்கள். அந்த கண்ணாமூச்சி விளையாட்டு இப்போது இல்லை.

தன் பிறந்த ஊரின் மக்களைப் பார்த்ததும்”பெரியம்மா”, ”தம்பிகளா”, ”சித்தப்பா” என எதாவது ஒரு உறவுமுறையை கொண்டு அழைத்தபடியே ஓடி வந்து நலம் விசாரிக்கும் பெண்களைப் பார்க்கும் போது பசங்களுக்கும் கூட கண் கலங்கிவிடும்.

இளந்தாரிக் கூட்டம் அடுத்த வருட புதுப் பாக்கிற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவரவர்களுக்கேற்ற ஜில், ஜங், ஜக்கிற்குப் பின்னால் ரூட் விட்டபடியே திரிவது ஆண்டாண்டு காலமாக தொடரும் மரபுக் கவிதையின்
நீட்சிகள். சில ஜக்கெல்லாம்கூட தாவணியில் அன்று ஜில்லாகக் காட்சியளிக்கும், அதே மாதிரி பொருந்தா சுடிதாரில் ஜில்லும் ஜக்காக திரிந்துகொண்டிருக்கும்.

”பாம் பாம்” ஓசையை குழந்தைகள் இருக்கும் இடமாகப் பார்த்து அழுத்தும் ஐஸ் வண்டிக்காரர்,கலர் பலூனை குழந்தைகளிடம் காட்டி கண்ஜாடையில் வாங்கச் சொல்லும் பலூன் கடைக்காரர், வெரைட்டி ஸ்வீட் என்ற பெயரில் வித விதமான வடிவங்களில் ஒரே சுவையுடைய சக்கரைப் பாகு கட்டிகளை அழகாக அடுக்கி வைத்திருக்கும் திருவிழா ஸ்வீட் ஸ்டால்கள், ரங்கராட்டினம் என சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு தனி உலகத்தில் பெரியவனாகியும் பலமுறை தொலைந்திருக்கிறேன்.

மாமன்,மச்சானெல்லாம் ஒதுக்குப்புற இடத்தில் கள்ளத்தனமாக விற்கப்படும் சோமபானங்களில் மூழ்கி,கிங்,குயின்,ஜாக் என்ற வேத மந்திரங்களை ஓதி மகிழவென்று விழா சார்பாகவே ஒதுக்கப் பட்டிருக்கும் தனியிடத்தில் சமத்தாக அடைந்திருப்பர்.

இத்திருவிழாவின் இன்னொரு அங்கம்தான் ”பன்றி வேட்டை”. பால்குடம், காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வதைப்போல பன்றி வேடமிடுவதாக வேண்டிக் கொண்டு அக்கோயிலின் அருகே இருக்கும் சிறு குட்டையின் சேற்றை உடலெங்கும் பூசியபடியே கோயிலின் முன்பு படுத்திருப்பார்கள். இதில் எல்லோரும் கலந்து கொள்வதில்லை இவ்விழா நடக்கும் ஊரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரில் பதிமூன்று வயதுவரைக்கும் உள்ள சிறுவர்கள் மட்டுமே இப்படி பன்றி வேடமிடுவார்கள்.

உடலெங்கும் சேற்றைப் பூசியபடி இருக்கும் இச்சிறுவர்கள் பாக்குத் திருவிழாவிற்கு வந்திருக்கும் மக்களின் மேல் சேற்றுடம்போடு ஓடிவந்து உரசுவார்கள். இதனால் இந்த பன்றி வேடமிட்ட பசங்களைப் பார்த்ததும் மக்கள் தெரித்து ஓடுவதைப் பார்க்க ரகளையாக இருக்கும். பளிச்சென்று உடை தறித்தவர்களாகப் பார்த்து இந்த பன்றி பசங்க சேற்றை பூசிவிட்டு ஓடிவிடுவார்கள். அழுக்கான சட்டையோடு அசடு வழிந்து நிற்கும் சில மைனர் குஞ்சுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.

பல அம்சங்களை உள்ளடக்கிய இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் உறவை புதுப்பித்தலே. பிரச்சனைகள் நிலவும் உறவினர்களுக்கிடையே பகை மறந்து உறவாட நினைக்கும் நேரத்தில் மூன்றாவது நபர் சமரசம் தேவையிராமல் இயல்பாகவே அவர்கள் கூடிக் குலவவே இத்திருவிழா என்பது என் எண்ணம்.

கொசுறு:
பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் ஊரில் இருந்தேன், ஏதேதோ பிரச்சனைகளால் இந்த வருடம் நாட்டுத் திருவிழா நடக்கவில்லை. வட போச்சேன்னு ஆகிப்போச்சு. (நீ ஊரில் இருந்தியல்ல அப்புறம் எப்படின்னு யாருங்க அங்கே முனகுறது).

அடுத்தது பகவதியம்மன் கோயில் பூஜையோடு வருகிறேன்.

Monday, August 10, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க...10/08/09

குழந்தைகளின் குறும்புகளை எல்லோருமே ரசித்து மகிழ்வோம், அதுவும் அவரவர் குழந்தைகள் என்று வரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு இல்லையா,அப்படி சமீபத்தில் என்னை பெரிதுவக்க வைத்தார்கள் எங்கள் வீட்டு மழலையர்.

எனது அண்ணன்கள் இருவரின் மகள்களுக்கும் இப்போது வயது ஐந்து.பெரிய அண்ணனின் மகள் 'ங்' கிற்குப் பதிலாக 'ந்' என்றுதான் உச்சரிப்பாள்.பொங்கல் என்று சொன்னால் பொந்தல் என்பாள்.சமீபத்தில் என்னிடம் அவள் பேசிய டயலாக் இது,

மேஹா:சித்தப்பா,நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ(?) மாங்காயை மாந்தாய்ன்னுதானே சொல்லுவேன்,இப்போ நான் கரெக்டா சொல்லுவேனே.

(இங்கேயே காமெடி முடிஞ்சு போச்சு ,இருந்தாலும் தொடருங்க)

நான்:பாப்பா பொய்தானே சொல்றீங்க.

மேஹா: நிஜம்மா சித்தப்பா,நீங்க வேணா மாங்காய்னு சொல்லச் சொல்லுங்க, நான் மாங்காய்னு கரெக்ட்டா சொல்வேன்.

நான்:சரி எங்கே 'மாங்காய்' சொல்லு.

மேஹா:'மாங்காய்',சொல்லிட்டோம்ல,எப்பூ...டி.

சின்ன அண்ணனின் மகள் ஹரிணி,அயல் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து கொண்டிருந்தாலும் சமீபத்தில் ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு "சங்கத் தமிழ் மூன்றும் தா","ஆயர்பாடி மாளிகையில்" பாடல்களை தெளிவான உச்சரிப்பில் பாடியதை காணொலியில் பார்த்ததும்,உச்சிமுகர வேண்டும் போல் இருந்தது.இந்த இருவரில் ஹரிணியே தமிழை அட்சர சுத்தமாகப் பேசுகிறாள். அந்த ஒரு விஷயம்தான் இந்த சுயதம்பட்டம் எழுதக் காரணம்.

===========================================================================
இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்க ஊரில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கந்தர்வக்கோட்டைக்கு(புதுக்கோட்டை மாவட்டம்) அருகே இருக்கும் வீரம்மாகாளி கோவிலுக்கு ஊர் பசங்களோடுச் சென்றேன்.

கந்தர்வக்கோட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் என்னுடைய டூவீலருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது எதிரே இன்னொருத்தரும் தொப்பை தள்ளியபடி லுங்கியோடு, வெற்றிலை குதப்பியபடியே டிப்பிகல் விவசாயிக்கான லெட்சனத்தோடு வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார், அவரைப் பார்த்ததும் சட்டென்று "உங்க பேரு வடிவேலா?" என்றேன். அவரும் "ஆமாம்" என்றார்.

அடுத்தக் கேள்வியை "என்னை உனக்குத் தெரியுதாடா?” என்று ஒருமையில் கேட்டதும், அவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, "குழப்பத்தோடவே யாருன்னு தெரியலியே” என்றார். "நீ கருக்காடிபட்டியில்தானே படிச்ச” என்று நான் கேட்டதும், "ஆமாம்" என ஆச்சர்யபட்டதோடு "அது 92 -94ம் வருடமாச்சே" என்று சொல்லியபடியே "நீங்க யாருன்னு தெரியலியே” என்றார்.

"நான் உன்னோட கிளாஸ்மெட்டுதான் யாருன்னு சொல்லு பார்ப்போம்" என்றேன். ரொம்ப யோசித்தும் முடியாமல் போக, "சரி அங்கே வேலை பார்த்த ஆசிரியர் யாராவது உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றேன், பட்டென்று "என்.ஏ ஸார்" என்றார். "நான் அவரு மகன் தாண்டா" என்றதும், என்னுடைய பெயரைச் சொல்லிவிட்டான். "அடையாளமே தெரியலப்பா, இவ்வளோ வருஷம் கழித்தும் எப்படி என்னை கரக்டாக் கண்டுபிடிச்ச" என்றான்.

12 அல்லது 13 வயதில் அவனை கடைசியாகப் பார்த்தது,ஆனாலும் அந்த முகம் இப்போதும் அப்படியே ஏழாம் வகுப்பில் இருந்தது போலவே எனக்குத் தெரிந்தது. பிறகு கொஞ்ச நேரம் பழைய நினைவில் மூழ்கி இருவரும் உரையாடி விடைபெற்றுக் கொண்டோம்.

எதிர்பாரா தருணங்களில் வாழ்க்கை நம்மிடம் விளையாடும் இப்படியான சின்னச் சின்ன கண்ணாமூச்சிகளில் தான் எத்தனை சுவாரஸ்யம். ஊரில் உள்ள மற்ற என்னோட கிளாஸ்மெட்கிட்ட," நான் வடிவேலை பார்த்தேண்டா" என்றால் ஒரு பயலுக்கும் அவனை ஞாபகம் இல்லை.

===========================================================================
நான் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்த சமயம், தமிழ்த் திரையுலகினர் ஏதோ பிரச்சனையால் இரு குழுவாய் செயல்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால் நேரடித் தமிழ் படங்கள் ரிலீஸாகாமல் நிறைய மலையாள மற்றும் தெலுங்குப் படங்கள் டப் செய்து வெளிவந்துக் கொண்டிருந்தது.

அந்த நாட்களில் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஏழு படமாவது பார்க்காவிடில் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். எனவே இந்த டப்பிங் படங்களைக் கூட விடாமல் பார்த்திருக்கிறேன்.

"மாஃபியாகேங்", "சிட்டி", "ஏகலைவன்", "கமிஷ்னர்" என சுரேஷ் கோபியின் ஆக்‌ஷன் படங்கள் வரிசையாக வெளிவந்து வசூலைக் குவித்தது. இந்த படங்களும் விறு விறுப்பான திரைக்கதையமைப்பில் பட்டாசாக இருக்கும். இது ஒரு புறமிருக்க "பிக்பாஸ்", "ரௌடி பாஸ்", "போக்கிரிக் காதலன்", "சின்ன பண்ணை" என தெலுங்கு டப்பிங் படங்கள் ரோஜா, மீனா, நக்மா, ரம்பா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் புரட்சிகரமான நடிப்பால் கல்லாவை நிறைத்தன. (தியேட்டரில் கூட்டம் அம்மு அம்முன்னு அம்மும்,ஷகிலா டைப் படம் ஓட்டியே பொழப்பு நடத்திய தியேட்டர்காரர்கள், இப்படி நம்ம பொழப்புல மண்ண போட்டாய்ங்களேன்னு புலம்புகிற அளவிற்கு வாடிக்கையாளர்கள் எல்லாம் அங்கே போயிட்டாங்க).

"அர்ஜூனா" தெலுங்கு டப்பிங் பட போஸ்டரில் நக்மாவே பிரதானமாக இருந்தார். ஹீரோ யாரென்றுத் தேடினால் குணச்சித்திர நடிகர்கள் மாதிரி ஒரு ஓரத்தில் சிறிய கட்டத்தில் நானும் இப்படத்தில் இருக்கிறேன்னு சொல்ற மாதிரி இருந்தவர் சிரஞ்சீவி!(மன்னன் படத்தின் தெலுங்கு பதிப்பு மீண்டும் தமிழில் இந்த பெயரில்).

இப்போ எதற்கு இந்த ஃபீளாஷ்பேக் என்றால் நேற்று zee தொலைக்காட்சியில் நாகார்ஜூன், சிம்ரன், ரீமாசென் நடித்த ஏதோ ஒரு டப்பிங் படம் ஓடிக் கொண்டிருந்தது. சேனல் மாற்றிக் கொண்டே வந்ததில் இதைப் பார்த்ததும் பழைய நினைவில் அப்படியே கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று பார்த்தேன், சிம்ரன் தனது தங்கையான ரீமா தனது கணவனை(நாகார்ஜூனா) லவ் பண்ணுவதை அறிந்து தங்கையை கணவனுக்கே கல்யாணம் செய்து வைக்க ஆசைப்பட்டு கணவனிடம் கேட்க, அவர் மறுக்கிறார். அப்போது சிம்ரனின் அப்பாவாக வருபவர் ஹீரோவிடம் பேசும் வசனம்,

மாமா:மாப்ள என் ரெண்டு பொண்ணுங்களும் எனக்கு ரெண்டு கண்ணுங்க மாதிரி,என்னதான் கண்ணு ரெண்டா இருந்தாலும் பார்வை ஒன்னுதானே, அதனால என் ரெண்டாவது பொண்ணையும் நீங்களே கட்டிக்கோங்க.

ஹீரோ:ஆஹா பார்வைக்கு இப்படி ஒரு அருமையான விளக்கமா?.

மாமா:இன்னொன்னும் சொல்றேன் கேளுங்க, என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் நான் ஒருத்தனே அப்பாவாக இருக்கும்போது ஏன் நீங்க ரெண்டு பேருக்கும் ஒரே புருஷனாக இருக்கக் கூடாது.

இந்த வசனத்தை கேட்டப்போ எழுதியவரின் முகவரி கிடைத்தால் எந்த குறுக்கு சந்தில் இருந்தாலும் தேடிப் போய் "தெய்வமே"ன்னு காலில் விழணும்னு தோணுச்சு.
===========================================================================
எங்க ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களோடு நன்றாகப் பழகினாலும் தண்ணீர் உட்பட எதுவுமே கொடுக்க மாட்டார்களாம். ”முறைப்பாடு இருக்கிறது தெய்வ குத்தம் ஆகிடும்” என்று சொல்வார்களாம்.

இதன் பின்னணியில் ஏதோ ஒரு சுவாரஸ்யம் இருப்பதையறிந்து ஊர் பெருசு ஒன்றிடம் கேட்டபோதுதான் எங்க ஊரின் வரலாறு எனக்குத் தெரிய வந்தது.

எந்த காலக் கட்டத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, தற்போது எங்கள் ஊர் அமைந்திருக்கும் இடத்திற்கு 2கி.மீ தொலைவில் ஊரின் தெற்கு எல்லையாக காட்டாறு இருக்கும். அந்த காட்டாற்றின் மறுகரையில் தான் எங்களின் பூர்வீகக் கிராமம் இருந்ததாம். நான் சொல்லிக் கொண்டிருக்கும் கதை நடந்த காலத்தில் அடிக்கடி பெரு மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கே குடியிருந்த எங்கள் முன்னோர்கள் வீடு, கால்நடைகள் முதலிய எல்லாவற்றையும் இழக்க நேர்ந்ததால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போது இருக்கும் இவ்விடத்திற்கு வந்தார்களாம். அப்படி வந்தபோது அங்கே ஏற்கனவே பூர்வீகக் குடியாய் இருந்த சொற்ப எண்ணிக்கையிலான மற்றொரு சமுதாயத்தினரை மெஜாரிட்டியான எம்முன்னோர்கள் விரட்டியிருக்கிறார்கள். அப்படி விரட்டப்பட்டவர்கள் தான் தற்போதும் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கும் அம்மக்கள்.(நியாயம்தான்).

எனது முன்னோர்கள் வாழ்ந்த இடமாகச் சொல்லப்படும் அந்த காட்டாற்றின் மறுகரையில் இன்றும் பாழடைந்த நிலையில் மிகவும் சிறிய அளவிலான பொன்னியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் இருக்கிறது.

பொன்னியம்மன் கோவிலில் அம்மனின் சிலை மட்டுமே இருக்கிறது, சுற்றுச் சுவர் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது, சிவன் கோவில் பொன்னியம்மன் கோவிலைவிட சற்று பெரியது, மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும் இக்கோயிலில் தற்போது மூலவர் அறை மட்டுமே முழுதாய் இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாததால் புதர்களும், மரங்களும், பாம்பு சட்டைகளுமாய் ஒரு வித அச்சத்தை தருவிக்கும் தோற்றத்தோடு இருக்கிறது. கோயிலைக் கட்டப் பயன்படுத்தியிருக்கும் சுட்ட கற்களில் வடிவமும்,அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணாம்புக் கலவையால் பூசியிருக்கும் விதமும் அக்காலக் கட்டிடக் கலையின் நேர்த்தியை எண்ணி வியக்க வைத்தது.

இப்படி ஒரு கோயில் இருப்பதே எங்கள் ஊரின் இளைய தலைமுறையினர் நிறைய பேருக்குத் தெரியவில்லை. நானும் கூட இக்கதையை அறிந்த பிறகே அங்கே சென்று பார்த்தேன். அந்த கோயிலினுள் நின்ற போது பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளன் மாதிரி பயங்கரமான ஒரு ஃபீல்.(உள்ளுக்குள் உதறலோடு).வைரமுத்து மாதிரி “வண்டல்மண் இதிகாசம்” என்று ஒன்று எழுத வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு அங்கே நின்றபோது வந்ததுன்னு சொன்னா நீங்க சிரிப்பீங்கதானே,ஆனா நிஜமாவே அப்படித்தாங்க நெனச்சேன்.

Wednesday, August 5, 2009

டிஜிட்டல் கிராமங்களும் வேடிக்கையான சம்பிரதாயங்களும்

நாகரிகத்தின் தாக்கம் வேகமாக கிராமங்களையும் டிஜிட்டல் கனவுகளில் சிக்க வைத்திருக்கும் இக்காலக் கட்டத்தில், குறுகிய கால இடைவெளியில் ஏகப்பட்ட மாற்றங்கள் கிராமப் புறங்களில் நிகழ்ந்திருக்கின்றன. "மாற்றங்கள் மாறாத ஒன்று" என்ற போதிலும், இன்றைய சூழலில் பல விஷயங்களில் அவை இயல்பாய் நிகழ்வதில்லை. அதிரடியாய் சில விஷயங்கள் கிராமங்களில் நுழைந்து (உம்:கேபிள் டீ.வியின் வருகை) கிராமங்களுக்கென்று இருக்கும் பல நல்ல அடையாளங்களை தொலைந்து போகச் செய்திருக்கிறது. அதே நேரத்தில் நல்ல விஷயங்கள் நடந்திருப்பதும் மறுப்பதற்கில்லை.

காண்வென்ட் கால் சட்டைகளில் உடலுக்கு வலிமைச் சேர்க்கும்
கிராமத்து விளையாட்டுகளை மறந்து போன சிறுவர்கள் தொடங்கி எந்நேரமும் சீரியலில் சிக்கி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெண்கள் உட்பட நிறைய விஷயங்களில் தனக்கான தனி அடையாளங்களை இழந்து நிற்கிற இன்றைய கிராமங்களில் சில சாஸ்திர சம்பிரதாயங்களும் காணாமல் போயிருக்கின்றன. அப்படிப்பட்ட சம்பிரதாயங்களில் எங்கள் பகுதியில் வழக்கத்தில் இருந்த, இருந்து கொண்டிருக்கிற வேடிக்கையான சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

’பெண் கேட்டல்’ ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை இப்பழக்கம் எங்க ஊர்ப் பக்கம் இருந்தது. நிச்சயதார்த்தத்தை அரைக் கல்யாணமென்றால் பெண் கேட்டல் நிகழ்ச்சி அரை நிச்சயதார்த்தம் என்று வைத்துக் கொள்ளலாம். மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார்களின் ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இரு வீட்டாருக்கும் சம்மதம் எனும் பட்சத்தில் மாப்பிள்ளையின் ஊரைச் சேர்ந்தவர்கள் (ஆண்கள் மட்டும்) ட்ராக்டரிலோ, மினிலாரியிலோ அவர்களின் வசதிக்கேற்ப திரண்டு இரவு 7மணிக்கு மேல் கையில் பெட்ரோமேக்ஸ் விளக்கோடு ( இது எப்படிண்ணே எரியும்? ) பெண் வீட்டிற்கு வருவார்கள். பெண் வீட்டில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வீடுதவறாமல் ஆண்களும், பெண்களும் வந்து குவிந்திருப்பர்.

மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கத் தயாராக இருக்கும் உள்ளூர்க்காரர்கள் விருந்தினர்களை வரவேற்று வாசலில் விரிக்கப்பட்டிருக்கும் தார்ப்பாயில்(ஊரில் எத்தனை வீட்டில் தார்ப்பாய் இருக்கிறதோ அத்தனையையும் ஓசியில் வாங்கி விரித்து வைத்திருப்பார்கள்) அமர வைப்பார்கள். இதற்குப் பிறகுதான் சுவராஸ்யங்கள் ஆரம்பிக்கும்.

மாப்பிளை வீட்டார் வந்து அமர்ந்த உடன் கொஞ்ச நேரம் மௌனம் நிலவும், அப்போது உள்ளூரைச் சேர்ந்த நாட்டாமைக்காரர்களில் ஒருவர் "ம்ம்க்கும்"என கணைத்தப்படியே ஆரம்பிப்பார்.

"என்ன உறவு முறைகளெல்லாம் சண்டைக்கு வந்திருக்கிற மாதிரி திரண்டு வந்திருக்குறியளே என்ன விஷேசம் ஒன்னும் புரியலய?"

இதைக் கேட்டதும் மாப்பிள்ளை வீட்டாரின் சார்பாக அந்த ஊர் முக்கியஸ்தர் ஒருவர் தெளிவானத் தமிழில் ஆரம்பிப்பார்.

"பெரியோர்களே, நாங்கள் சண்டைக்கு வரவில்லை நல்ல விஷயமாகத்தான் வந்திருக்கிறோம்" என்பார்.

"அப்படியா நல்லது,விஷயத்தைச் சொன்னால் தெரிந்து கொள்கிறோம்" என்பார் உள்ளூர் பெருசு.

இப்போது மாப்பிள்ளை ஊர்ப் பெருசு வீரபாண்டிய கட்டபொம்மன் கணக்கா ஆரம்பிக்கும் வசனம்தான் இந்நிகழ்ச்சியின் ஹைலைட்.

"நஞ்சையும்,புஞ்சையும் கொஞ்சிக் குலவும் தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியாம் கோனூர்நாட்டில் அமைந்துள்ள இன்ன ஊரில் வசிக்கும் இன்னார் மகன் திருநிறை செல்வன் இன்னாருக்கு, புதுக்கோட்டை மாவட்டம் மெய்சொல்லி நாட்டில் அமைந்திருக்கும் இன்ன கிராமத்தில் வசிக்கும் இன்னார் மகள் திருநிறை செல்வி இன்னாரை பெண் கேட்டு வந்துள்ளோம்" என்று முடிப்பார்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உள்ளூர் இளந்தாரிகள் "யோவ் மாம்ஸ் எங்கய்யா நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிக் குலாவுது, ஆடி மாசம் முடிஞ்சும் இன்னும் ஆத்துல தண்ணி வரல,கொஞ்சிக் குலாவுதாம்ல" என்று சவுண்ட் கொடுத்து கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் சூழலை கலகலப்பாக்குவார்கள்.

"யப்பா கொஞ்ச நேரம் சும்மா இருங்கடா" என்று எதாவது உள்ளூர் பெருசின் அரட்டலை ஏற்று அமைதியாகும் இளந்தாரிக் கூட்டம்.பிறகு உள்ளூர் நாட்டாமை மாப்பிள்ளை வீட்டாரிடம்,"பொன் கொடுத்தால் பெண் கொடுக்கிறோம்" என்பார்.

"அப்படியே செய்கிறோம்" என்று பதிலளிப்பார் மாப்பிள்ளை வீட்டுப் பெருசு.

இந்த வசனத்தில் இருந்தே பழங்காலத்தில் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் பொன் பொருளை சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்தது தெளிவாக விளங்கும்.ஆனால் இப்போது அந்த வசனம் மட்டுமே வழக்கில் .

அதன் பிறகு பெண்ணின் தாய் மாமனும் ,மாப்பிள்ளையின் தாய் மாமனும் வெற்றிலைப் பாக்கு வைத்து மரியாதை செய்யப்படுவார்கள். இந்த இரு மாமன்களின் சம்மதம் வாங்குவதும் இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கம். மாமன் வீட்டிற்கே பெண்ணை எடுத்துக் கொள்ள ஃபஸ்ட் பீரியாரிட்டி, அதனால் தனக்கு இந்த பெண்ணை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முழு சம்மதம் என்று அவர் தெரிவித்தே பின்னரே மற்ற சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கும். (அன்றைக்கு இந்த மாமன்காரன்கள் ஒரு மார்கமாத்தான் திறிவாய்ங்க).

இந்த சம்பிரதாயத்தின் இறுதியாக பெண்ணை அழைத்து வருவார்கள், வீட்டில் இருக்கிற பாண்ட்ஸ் பௌடரில் பாதியை காலி செய்து, ஐடெக்ஸ் மையில் துளி மிச்சமில்லாமல் கண்ணில் தடவி, புதிதாகக் கட்டிய சேலையில் நடக்க முடியாமல் தடுமாறி சபையோருக்கு முன்னால் வந்து டெரராய் ஒரு வணக்கம் வைத்துவிட்டு "வாம்மா மின்னல்" கணக்கா ஓடி மறைந்துவிடும்.

அதன் பின் நடக்கும் சிறிய விருந்தில் பந்தி பறிமாறும் போது சில பெருசுகள் ரொம்ப ஸ்டைலா சொல்வதாக நினைத்து "ரஜம் கொடுங்க" என்பார்கள், இதற்காகவே காத்திருந்தது போலவே நம்ம இளைஞர் பட்டாளம் ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள்."டேய் பங்க்ஸு மாமாவுக்கு ரம் ஊத்துங்கடா, ஜோறு ஆறிட போவுது","ஜாம்பார் யாருக்குப்பா வேணும்","உறவு முறைகளா, நிதானமா சாப்பிடுங்க இன்னும் பாயாம் இருக்கு" என்று எல்லாத்திற்கும் 'ச'விற்கு பதிலாய் 'ஜ'வை வைத்து பெருசுகளை டரியலாக்கிக் கொண்டிருப்பார்கள். மாமன், மச்சான், பங்காளிகளென்று ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்தபடியே இந்நிகழ்ச்சி முடிவடையும்.

இப்போது இந்த சம்பிரதாயம் தேவையில்லாத செலவு என்பதாலும், நாகரிகத்தின் தாக்கத்தாலும் நாட்டுக் கூட்டம் போட்டு (18 பட்டி,நெளிஞ்ச சொம்பு, அரசமரத்தடி ஞாபகம் வருதா, அதேதான்) இந்த வழக்கத்தை வழக்கில் இருந்து தூக்கிவிட்டார்கள்.

இதேப் போன்று இன்னும் சில சம்பிரதாயங்களும் காலச் சூழலுக்கேற்ப தேவையில்லாத சடங்குகள் என்று கருதப்பட்டு வழக்கொழிந்து போய்விட்டன. அவற்றில் சில வரவேற்கத் தக்கதாக இருப்பினும் இம்மாதிரியான சடங்குகள் ஒவ்வொன்றாய் மறைந்து கொண்டே வரும் சூழலில் கிராமங்களின் தனித்துவங்களான ஒற்றுமை, அன்பு பாராட்டல், பரஸ்பர உதவி புரிதல் போன்றவையும் இதில் அடிபட்டு போகக்கூடிய அபாயமும் இருக்கிறது. ஏனெனில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில்தான் பகையுணர்வு மறந்து எல்லோரும் ஒன்று கூடுவார்கள், தனியொருத்தர் வீட்டுத் தேவையை தன் வீட்டு தேவையாக நினைத்து உதவி செய்வார்கள். பெரிய பகைகள் இருப்பினும் கூட இம்மாதிரி விஷேசங்களில் உறவாடி பகை மறப்பார்கள். இப்போதே பல கிராமங்களில் "எங்க ஊர்" என்பது மறைந்து "எங்க வீடு" என்ற உணர்வு வரத் தொடங்கிவிட்டது. தனித் தனித் தீவுகளாக வாழ பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் என்ற ஒரு வேடிக்கையான திருவிழாவைப் பற்றிய பதிவோடு வருகிறேன்.