Wednesday, August 5, 2009

டிஜிட்டல் கிராமங்களும் வேடிக்கையான சம்பிரதாயங்களும்

நாகரிகத்தின் தாக்கம் வேகமாக கிராமங்களையும் டிஜிட்டல் கனவுகளில் சிக்க வைத்திருக்கும் இக்காலக் கட்டத்தில், குறுகிய கால இடைவெளியில் ஏகப்பட்ட மாற்றங்கள் கிராமப் புறங்களில் நிகழ்ந்திருக்கின்றன. "மாற்றங்கள் மாறாத ஒன்று" என்ற போதிலும், இன்றைய சூழலில் பல விஷயங்களில் அவை இயல்பாய் நிகழ்வதில்லை. அதிரடியாய் சில விஷயங்கள் கிராமங்களில் நுழைந்து (உம்:கேபிள் டீ.வியின் வருகை) கிராமங்களுக்கென்று இருக்கும் பல நல்ல அடையாளங்களை தொலைந்து போகச் செய்திருக்கிறது. அதே நேரத்தில் நல்ல விஷயங்கள் நடந்திருப்பதும் மறுப்பதற்கில்லை.

காண்வென்ட் கால் சட்டைகளில் உடலுக்கு வலிமைச் சேர்க்கும்
கிராமத்து விளையாட்டுகளை மறந்து போன சிறுவர்கள் தொடங்கி எந்நேரமும் சீரியலில் சிக்கி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெண்கள் உட்பட நிறைய விஷயங்களில் தனக்கான தனி அடையாளங்களை இழந்து நிற்கிற இன்றைய கிராமங்களில் சில சாஸ்திர சம்பிரதாயங்களும் காணாமல் போயிருக்கின்றன. அப்படிப்பட்ட சம்பிரதாயங்களில் எங்கள் பகுதியில் வழக்கத்தில் இருந்த, இருந்து கொண்டிருக்கிற வேடிக்கையான சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

’பெண் கேட்டல்’ ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை இப்பழக்கம் எங்க ஊர்ப் பக்கம் இருந்தது. நிச்சயதார்த்தத்தை அரைக் கல்யாணமென்றால் பெண் கேட்டல் நிகழ்ச்சி அரை நிச்சயதார்த்தம் என்று வைத்துக் கொள்ளலாம். மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார்களின் ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இரு வீட்டாருக்கும் சம்மதம் எனும் பட்சத்தில் மாப்பிள்ளையின் ஊரைச் சேர்ந்தவர்கள் (ஆண்கள் மட்டும்) ட்ராக்டரிலோ, மினிலாரியிலோ அவர்களின் வசதிக்கேற்ப திரண்டு இரவு 7மணிக்கு மேல் கையில் பெட்ரோமேக்ஸ் விளக்கோடு ( இது எப்படிண்ணே எரியும்? ) பெண் வீட்டிற்கு வருவார்கள். பெண் வீட்டில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வீடுதவறாமல் ஆண்களும், பெண்களும் வந்து குவிந்திருப்பர்.

மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கத் தயாராக இருக்கும் உள்ளூர்க்காரர்கள் விருந்தினர்களை வரவேற்று வாசலில் விரிக்கப்பட்டிருக்கும் தார்ப்பாயில்(ஊரில் எத்தனை வீட்டில் தார்ப்பாய் இருக்கிறதோ அத்தனையையும் ஓசியில் வாங்கி விரித்து வைத்திருப்பார்கள்) அமர வைப்பார்கள். இதற்குப் பிறகுதான் சுவராஸ்யங்கள் ஆரம்பிக்கும்.

மாப்பிளை வீட்டார் வந்து அமர்ந்த உடன் கொஞ்ச நேரம் மௌனம் நிலவும், அப்போது உள்ளூரைச் சேர்ந்த நாட்டாமைக்காரர்களில் ஒருவர் "ம்ம்க்கும்"என கணைத்தப்படியே ஆரம்பிப்பார்.

"என்ன உறவு முறைகளெல்லாம் சண்டைக்கு வந்திருக்கிற மாதிரி திரண்டு வந்திருக்குறியளே என்ன விஷேசம் ஒன்னும் புரியலய?"

இதைக் கேட்டதும் மாப்பிள்ளை வீட்டாரின் சார்பாக அந்த ஊர் முக்கியஸ்தர் ஒருவர் தெளிவானத் தமிழில் ஆரம்பிப்பார்.

"பெரியோர்களே, நாங்கள் சண்டைக்கு வரவில்லை நல்ல விஷயமாகத்தான் வந்திருக்கிறோம்" என்பார்.

"அப்படியா நல்லது,விஷயத்தைச் சொன்னால் தெரிந்து கொள்கிறோம்" என்பார் உள்ளூர் பெருசு.

இப்போது மாப்பிள்ளை ஊர்ப் பெருசு வீரபாண்டிய கட்டபொம்மன் கணக்கா ஆரம்பிக்கும் வசனம்தான் இந்நிகழ்ச்சியின் ஹைலைட்.

"நஞ்சையும்,புஞ்சையும் கொஞ்சிக் குலவும் தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியாம் கோனூர்நாட்டில் அமைந்துள்ள இன்ன ஊரில் வசிக்கும் இன்னார் மகன் திருநிறை செல்வன் இன்னாருக்கு, புதுக்கோட்டை மாவட்டம் மெய்சொல்லி நாட்டில் அமைந்திருக்கும் இன்ன கிராமத்தில் வசிக்கும் இன்னார் மகள் திருநிறை செல்வி இன்னாரை பெண் கேட்டு வந்துள்ளோம்" என்று முடிப்பார்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உள்ளூர் இளந்தாரிகள் "யோவ் மாம்ஸ் எங்கய்யா நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிக் குலாவுது, ஆடி மாசம் முடிஞ்சும் இன்னும் ஆத்துல தண்ணி வரல,கொஞ்சிக் குலாவுதாம்ல" என்று சவுண்ட் கொடுத்து கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் சூழலை கலகலப்பாக்குவார்கள்.

"யப்பா கொஞ்ச நேரம் சும்மா இருங்கடா" என்று எதாவது உள்ளூர் பெருசின் அரட்டலை ஏற்று அமைதியாகும் இளந்தாரிக் கூட்டம்.பிறகு உள்ளூர் நாட்டாமை மாப்பிள்ளை வீட்டாரிடம்,"பொன் கொடுத்தால் பெண் கொடுக்கிறோம்" என்பார்.

"அப்படியே செய்கிறோம்" என்று பதிலளிப்பார் மாப்பிள்ளை வீட்டுப் பெருசு.

இந்த வசனத்தில் இருந்தே பழங்காலத்தில் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் பொன் பொருளை சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்தது தெளிவாக விளங்கும்.ஆனால் இப்போது அந்த வசனம் மட்டுமே வழக்கில் .

அதன் பிறகு பெண்ணின் தாய் மாமனும் ,மாப்பிள்ளையின் தாய் மாமனும் வெற்றிலைப் பாக்கு வைத்து மரியாதை செய்யப்படுவார்கள். இந்த இரு மாமன்களின் சம்மதம் வாங்குவதும் இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கம். மாமன் வீட்டிற்கே பெண்ணை எடுத்துக் கொள்ள ஃபஸ்ட் பீரியாரிட்டி, அதனால் தனக்கு இந்த பெண்ணை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முழு சம்மதம் என்று அவர் தெரிவித்தே பின்னரே மற்ற சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கும். (அன்றைக்கு இந்த மாமன்காரன்கள் ஒரு மார்கமாத்தான் திறிவாய்ங்க).

இந்த சம்பிரதாயத்தின் இறுதியாக பெண்ணை அழைத்து வருவார்கள், வீட்டில் இருக்கிற பாண்ட்ஸ் பௌடரில் பாதியை காலி செய்து, ஐடெக்ஸ் மையில் துளி மிச்சமில்லாமல் கண்ணில் தடவி, புதிதாகக் கட்டிய சேலையில் நடக்க முடியாமல் தடுமாறி சபையோருக்கு முன்னால் வந்து டெரராய் ஒரு வணக்கம் வைத்துவிட்டு "வாம்மா மின்னல்" கணக்கா ஓடி மறைந்துவிடும்.

அதன் பின் நடக்கும் சிறிய விருந்தில் பந்தி பறிமாறும் போது சில பெருசுகள் ரொம்ப ஸ்டைலா சொல்வதாக நினைத்து "ரஜம் கொடுங்க" என்பார்கள், இதற்காகவே காத்திருந்தது போலவே நம்ம இளைஞர் பட்டாளம் ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள்."டேய் பங்க்ஸு மாமாவுக்கு ரம் ஊத்துங்கடா, ஜோறு ஆறிட போவுது","ஜாம்பார் யாருக்குப்பா வேணும்","உறவு முறைகளா, நிதானமா சாப்பிடுங்க இன்னும் பாயாம் இருக்கு" என்று எல்லாத்திற்கும் 'ச'விற்கு பதிலாய் 'ஜ'வை வைத்து பெருசுகளை டரியலாக்கிக் கொண்டிருப்பார்கள். மாமன், மச்சான், பங்காளிகளென்று ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்தபடியே இந்நிகழ்ச்சி முடிவடையும்.

இப்போது இந்த சம்பிரதாயம் தேவையில்லாத செலவு என்பதாலும், நாகரிகத்தின் தாக்கத்தாலும் நாட்டுக் கூட்டம் போட்டு (18 பட்டி,நெளிஞ்ச சொம்பு, அரசமரத்தடி ஞாபகம் வருதா, அதேதான்) இந்த வழக்கத்தை வழக்கில் இருந்து தூக்கிவிட்டார்கள்.

இதேப் போன்று இன்னும் சில சம்பிரதாயங்களும் காலச் சூழலுக்கேற்ப தேவையில்லாத சடங்குகள் என்று கருதப்பட்டு வழக்கொழிந்து போய்விட்டன. அவற்றில் சில வரவேற்கத் தக்கதாக இருப்பினும் இம்மாதிரியான சடங்குகள் ஒவ்வொன்றாய் மறைந்து கொண்டே வரும் சூழலில் கிராமங்களின் தனித்துவங்களான ஒற்றுமை, அன்பு பாராட்டல், பரஸ்பர உதவி புரிதல் போன்றவையும் இதில் அடிபட்டு போகக்கூடிய அபாயமும் இருக்கிறது. ஏனெனில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில்தான் பகையுணர்வு மறந்து எல்லோரும் ஒன்று கூடுவார்கள், தனியொருத்தர் வீட்டுத் தேவையை தன் வீட்டு தேவையாக நினைத்து உதவி செய்வார்கள். பெரிய பகைகள் இருப்பினும் கூட இம்மாதிரி விஷேசங்களில் உறவாடி பகை மறப்பார்கள். இப்போதே பல கிராமங்களில் "எங்க ஊர்" என்பது மறைந்து "எங்க வீடு" என்ற உணர்வு வரத் தொடங்கிவிட்டது. தனித் தனித் தீவுகளாக வாழ பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் என்ற ஒரு வேடிக்கையான திருவிழாவைப் பற்றிய பதிவோடு வருகிறேன்.

21 comments:

யாசவி said...

ur writing nice to visualize

:-)

ஈரோடு கதிர் said...

இலக்கியன் பின்னீட்டிங்க...

கிராமத்தின் மெருகு சிறிதும் குறையாமல் கொடுத்துள்றீர்கள்

//நாட்டாமைக்காரர்களில் ஒருவர் "ம்ம்க்கும்"என கணைத்தப்படியே ஆரம்பிப்பார்.//

// டெரராய் ஒரு வணக்கம்//

சிரிப்பை அடக்கமுடியவில்லை....

அருமையான பதிவு

கடைசியா எப்படியோ கத்துக்கிட்டு தமிழ்மணத்துல ஓட்டுப்போட்டுட்டேன்

நாஞ்சில் நாதம் said...

\\ பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் //

தலைப்பே சும்மா டெரர் மாதிரி இருக்கு

தேவன் மாயம் said...

இந்த வசனத்தில் இருந்தே பழங்காலத்தில் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் பொன் பொருளை சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்தது தெளிவாக விளங்கும்.ஆனால் இப்போது அந்த வசனம் மட்டுமே வழக்கில்.///

சில சுவாரசியங்களுக்காக இவை தேவைதான்!

Thamira said...

நான் இதுவரை கேள்விப்படாத வழக்கமாக மிகவும் சுவாரசியமானதாக இருந்தது. இது போன்ற வழக்கங்கள் அழிந்துவருவது வேதனைக்குரியதே.!

எனக்கும் திருமணத்தின் போது நிச்சயதார்த்தத்தில் பெண்ணை மறியல் செய்த அனுபவம் உண்டு. இந்த வழக்கத்தில் மாப்பிள்ளை பெண்ணை அழைத்துச்செல்லமுடியாமல் முறைப்பையன் மறிப்பதும், மாப்பிள்ளை பணம் கொடுத்து சரிகட்டி பின்னர் பெண்ணை அழைத்துச் செல்வதுமாய் ஒரு வழக்கம்.

என் மதினியாரின் திருமணத்தில் அவரை மறித்தபோது எனக்கு வயது 8. கிடைத்த பணம் ரூபாய் 5.

☼ வெயிலான் said...

எல்லாஞ்சரி! டிஜிட்டல் கிராமங்கள்னா என்னா? ;)

நாடோடி இலக்கியன் said...

நன்றி யாசவி,(பேரு நல்லாயிருக்குங்க).

நன்றி கதிர்,(உங்களை சிரிக்க வைத்ததற்கு மகிழ்சியடைகிறேன் நண்பா).

நன்றி நாஞ்சில் நாதம்,(வந்தது வந்திட்டோம் அப்படின்னு போட்ட பின்னூட்டம் மாதிரி தெரியுதே நண்பா, பிடிக்கவில்லையென்றால் சொல்லிடுங்க).

நன்றி தேவன் மாயம்,(இதில ஏதும் உள்குத்து இல்லையே)

நன்றி ஆதி,
(நேரம் கிடைக்கும் போது உங்க ஐந்து ரூபாய் சம்பாத்திய அனுபவத்தை விரிவாக எழுதுங்க படிக்க ஆவலோடு இருக்கேன்).

நன்றி வெயிலான்,
("பேச வந்தேன் நூறு வார்த்தை பேசிபோனேன் வேறு வார்த்தை" இது ஒரு பாடலின் வரிகள்,அந்த மாதிரி ஆகிபோச்சு என்னமோ எழுத நினைத்து, என்னத்தையோ எழுதியிருக்கேன்,உங்கள் கேள்விக்கு நேர்மையா பதில் சொன்னா தலைப்பிற்கும் பதிவிற்கும் சம்பந்தம் இல்லைங்கிறதுதான் உண்மை).

தினேஷ் said...

தல கூட்டத்துல உக்காந்துருந்த உங்க பங்காளி மாதிரி தெளிவ சொல்லியிருக்கீங்க

Unknown said...

உங்களுடைய 'மலையாளத் திரைப்படங்கள் ஒரு பார்வை' நன்றாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். பகிர்விற்கு நன்றி.

நாடோடி இலக்கியன் said...

நன்றி சூரியன்.
(ஆணி அதிகமோ?)

நன்றி கிருஷ்ண பிரபு,(அப்போ இந்த பதிவு நல்லா எழுதலையா நண்பா.மலையாள படங்களின் தொடர்ச்சி நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதிவிடுவேன்).

சிவக்குமரன் said...

என் வீட்டில் இருபது வருடங்களுக்கு முன்பு என் அக்காவைப் பெண் பார்த்து சென்றதற்கும், நான் பெண் பார்க்க சென்றதற்கும் உள்ள வித்தியாசத்தை நான் யோசித்து இருக்கிறேன். என் அக்காவை பெண் பார்க்க வரும்போது விழுந்த இலைகளின் எண்ணிக்கை 120. நான் பெண் பார்க்க சென்ற போது விழுந்த இலைகளின் எண்ணிக்கை 8. இதைப் போல் சொல்வதென்றால் நிறைய சொல்லலாம். நான் விளையாடிய பல விளையாட்டுக்கள் இப்போது பல பேருக்கு என்னவென்றே தெரியாது. ஓடியாடி விளையாடுவதேன்பதே இப்போதைய பழக்க வழக்கங்களில் மறைந்துகொண்டே வருகிறது.

மங்களூர் சிவா said...

பதிவு மிக சுவாரசியமானதாக இருந்தது.

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு.

//இப்போதே பல கிராமங்களில் "எங்க ஊர்" என்பது மறைந்து "எங்க வீடு" என்ற உணர்வு வரத் தொடங்கிவிட்டது. தனித் தனித் தீவுகளாக வாழ பழகிக் கொண்டிருக்கிறார்கள்.//

உண்மைதான்.

//அடுத்து பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் என்ற ஒரு வேடிக்கையான திருவிழாவைப் பற்றிய பதிவோடு வருகிறேன்//

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ஆதி சொன்ன மாதிரி எங்க ஊருபக்கம் எல்லா மாமாக்கள் மற்றும் முறைப்பையன்களுக்கும் பத்திரிக்கை வைக்கும்போதே 'அழைப்புச்சுருள்' ன்னு 5 ரூபாய் வைக்கிற பழக்கம் இன்னும் இருக்கு.

TamilhackX said...

மிகவும் சுவாரசியமான பதிவு

நாடோடி இலக்கியன் said...

நன்றி சிவக்குமரன்,
//நான் விளையாடிய பல விளையாட்டுக்கள் இப்போது பல பேருக்கு என்னவென்றே தெரியாது//

இதைப் பற்றி முன்பு ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் சிவா.முடிந்தால்
உங்கள் பகுதியின் காணாமல் போன விளையாட்டுகளைப் பற்றியும் ஒரு பதிவிடுங்கள்,படிக்க ஆவலாக இருக்கிறேன்.

நன்றி மங்களூர் சிவா,

நன்றி துபாய் ராஜா,
பன்றி வேட்டை திருவிழாவைப் பற்றிய பதிவு விரைவில்.

நன்றி தமிழ்ஹேக்ஸ்.

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா பதிவு... :))) படிச்சிக்கிட்டே வந்து,

//அதன் பின் நடக்கும் சிறிய விருந்தில் பந்தி பறிமாறும் போது சில பெருசுகள் ரொம்ப ஸ்டைலா சொல்வதாக நினைத்து "ரஜம் கொடுங்க" என்பார்கள், இதற்காகவே காத்திருந்தது போலவே நம்ம இளைஞர் பட்டாளம் ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள்."டேய் பங்க்ஸு மாமாவுக்கு ரஜம் ஊத்துங்கடா, ஜோறு ஆறிட போவுது","ஜாம்பார் யாருக்குப்பா வேணும்","உறவு முறைகளா, நிதானமா சாப்பிடுங்க இன்னும் பாயாஜம் இருக்கு" என்று எல்லாத்திற்கும் 'ச'விற்கு பதிலாய் 'ஜ'வை வைத்து பெருசுகளை டரியலாக்கிக் கொண்டிருப்பார்கள். மாமன், மச்சான், பங்காளிகளென்று ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்தபடியே இந்நிகழ்ச்சி முடிவடையும்.//

இந்த இடத்துல பயங்கரமா சிரிச்சிட்டடேன்.. :)))))))))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி,(அப்பாடா இப்போதுதான் நிம்மதி எங்கடா தங்கையை இன்னும் காணோமேன்னு நெனச்சேன்).

Unknown said...

//நாடோடி இலக்கியன் said...
நன்றி ஸ்ரீமதி,(அப்பாடா இப்போதுதான் நிம்மதி எங்கடா தங்கையை இன்னும் காணோமேன்னு நெனச்சேன்).//

கண்டிப்பா வந்துடுவேன் அண்ணா.. :)))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி.

vasu balaji said...

அருமையாய் சொல்றீங்க. வாழ்த்துகள்

நாடோடி இலக்கியன் said...

நன்றி வானம்பாடிகள்,(உங்க பெயரை உச்சரிக்கும் போதே மனசுக்கு இறக்கை முளைக்குதுங்க நண்பரே ).