Thursday, March 6, 2008

தசரதம் - மலையாள சினிமா

சந்தரமுகி படம் வெளிவருவதற்கு முன்பு அப்படத்தைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவந்துகொண்டிருந்தன,அப்படி வெளியான செய்திகளில் முக்கியமானது ,பாசில் இயக்கத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா ஆகியோரது நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான மணிச்சித்திரதாழு என்ற மலையாளப் படம்தான் தமிழில் சந்திரமுகியாகிறது என்பதாகும்.உடனே ஒரு ஆர்வக்கோளாறில் அந்தப் படத்தின் வி.சி.டி வாங்கிப் பார்த்தேன்.

அப்படத்தின் திரைக்கதை மற்றும் மோகன்லால்,ஷோபனாவின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு சிறைச்சாலை படம் பார்த்த பொழுதே மோகன்லாலின் நடிப்பின் மீது ஒரு மரியாதை இருந்தது. மணிச்சித்ரதாழ் பார்த்ததும் அவருடைய மற்ற படங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இப்படித்தான் எனக்கு மலையாளத் திரைபடங்களின் அறிமுகம் கிடைத்தது.

அந்த வகையில் எனக்குப் பிடித்த சில படங்கள் இங்கே:



தசரதம்:

இயக்கம்:சிபி மலயில்

நடிகர்கள்:மோகன்லால்,நெடுமுடி வேணு,முரளி,ரேகா
வெளிவந்த ஆண்டு:1989

இப்படத்தில் ராஜீவ் மேனன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.கதைப்படி சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து  மேனேஜரால் வளர்க்கப்படும் ராஜீவ் மேனன் ஒரு கோடீஸ்வரன். பொறுப்புன்றி எப்போதும்  குடித்துவிட்டு ஊதாரியாய் சுற்றுகிறான்.அவனின் குடித்துணை நெடுமுடி வேணு, இவர் ஒரு எல்.ஐ.சி ஏஜண்ட், ஆனால் முழுநேரமும் ராஜிவ் மேனனோடு சுற்றுவதுதான் முக்கிய வேலையாக வைத்திருக்கிறார். 


ஒரு முறை இவர்கள் குடித்துவிட்டு செய்யும் சில செயல்களால் போலீஸாரால் ராஜீவ் கைது செய்யப்படுகிறான். இந்த விஷயத்தில் மிகவும் மன வேதனை அடைகிற மேனேஜர்,"இனிமேல் என்னால் இங்கே இருக்க முடியாது, எனக்கு வயதாகிவிட்டது,உன்னுடைய சொத்துக்களை நீயே பார்த்துக்கொள்" என்று கூறுகிறார். அவரை சமாதனப்படுத்தும் ராஜீவிடம், கல்யாணத்தைப் பற்றி பேசுகிறார் மேனேஜர். கல்யாணம் என்பது என் வாழ்வில் கிடையாது என்று பிடிவாதமாக மறுக்கிறான் ராஜீவ். அவனின் அம்மா அவளின் பழையக் காதலனோடு சென்றதால் ஏற்படுத்திச் சென்ற ரணம்,அவன் பெண்கள் மீதும், கல்யாணத்தின் மீதும் வெறுப்பாக இருக்கக் காரணமாய் இருக்கிறது.


ஒரு சமயம் ஏதோ சிந்தனையில் இருக்கும் வேணுவிடம் என்னவென்று கேட்கிறான் ராஜீவ். அதற்கு தன் குழந்தைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை, அவர்களை எங்கேயாவது வெளியில் அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தேன்,அதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அதற்கு தன் வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என்று ராஜீவ் சொல்வதைத் தொடர்ந்து  தன்  மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியோடு ராஜீவின் வீட்டில் தங்குகிறார் வேணு. அவர்கள் தங்கியிருக்கிற ஒரு வாரமும் குழந்தைகள் மூன்றும் ராஜீவிடம் நன்கு ஒட்டிக் கொள்கின்றன.குறிப்பாக வேணுவின் கடைசி மகனை மிகவும் பிடித்துவிடுகிறது ராஜீவிற்கு. விடுமுறை முடிந்து வேணுவின் குடும்பம் கிளம்பிச் சென்றுவிடுகிறது.அவர்கள் சென்ற பிறகான வீட்டின் அமைதி ராஜீவை மிகவும் டிஸ்ட்ரப் செய்கிறது. 

 மேனேஜரிடம் சொல்கிறான்,"சவம் விழுந்த வீடு மாதிரி இருக்குல்ல, அங்கிள்" என்று.



"நீயும் கல்யாணம் செய்திருந்தால் உனக்கும் குழந்தைகள் பிறந்திருக்கும், வீடே கலகலப்பாக இருந்திருக்கும்" என்று கூறுகிறார் மேனேஜர்.

அன்றிரவு அந்த குழந்தைகள் நினைவால் தூங்க முடியாமல் தவிக்கிறான்.
மறுநாள் வேணுவை சந்தித்து,"உன்னுடைய கடைசி மகனை எனக்கு தத்து கொடுப்பாயா?.என் சொத்து முழுவதும் அவன் பெயருக்கே எழுதி வைக்கிறேன்,அவனை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறேன்" என்கிறான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத வேணு,சிறிது அமைதிக்குப் பின்,தான் ஏழையா இருக்கலாம்,அதுக்காக பெற்ற குழந்தையை தத்துகொடுக்க முடியாதென்றும், அப்படி கொடுத்தால் தான் ஒரு அப்பன் என்று சொல்லிக்கவே தகுதிகிடையாது என்றும்,என் குழந்தைகள் அப்பான்னு கூப்பிடும்போது நான் அனுபவிவிக்கும் சுகம் உனக்கு சொன்னால் புரியாது,அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்"என்று  சற்று கோபமாய் கூரிவிடுகிறார்.

அடுத்த நாளே தனது குடும்ப மருத்துவரைப் பார்த்து தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன், உங்களுக்கு தெரிந்து ஏதாவது குழந்தை இருந்தால் சொல்லுங்கள் என்கிறான்,அதற்கு "எதாவது ஒரு அனாதை குழந்தை விடுதிக்குத்தான் சென்று பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர்.

”எனக்கு அந்த மாதிரி குழந்தைங்க வேண்டாம்,பிறந்த உடனே தாயை இழந்த அனாதை குழந்தை இருந்தா சொல்லுங்க", என்கிறான்.

"அது மிகவும் கஷ்டம்" என்று சொல்லி "வாடகைத்தாய் முறையில் நீ குழந்தை பெற்றுக்கலாம்,அது உன்னுடைய சொந்த குழந்தையாகவும் இருக்கும்" என்று யோசனை கூறுகிறார் டாக்டர். அதைக் கேட்டு சந்தோஷப்படுகிற ராஜீவ் அதற்கான ஏற்பாடுகளை பண்ணச் சொல்கிறான்.

டாக்டரின் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சந்திரதாஸின் (முரளி) மனைவி ஆனி(ரேகா),தன் கணவனின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான இரண்டு லட்சம் ரூபாய்க்காக வாடகைத் தாயாக சம்மதிக்கிறாள்.பரஸ்பரம் இருதரப்பினரும் எழுத்தின் மூலம் ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர்.
முரளியின் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது, அதே சமயத்தில் ஆனியின் வயிற்றில் ராஜிவின் வாரிசு வளர்கிறது. 

முரளியும்,ஆனியும் சேர்ந்து இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து என்று வேணு,ராஜீவிடம் கூறுகிறார்,இதனால் ஆனியை ஒரு மலை பங்களாவில் இரு செவிலியர்,ஒரு ஹவுஸ் கீப்பர்(சுகுமாரி),ஒரு வாட்ச்மேன் சகிதம் தங்கவைக்கிறான்.மாதங்கள் உருண்டோட ஆனி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.பிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக டாக்டரின் அறிவுறுத்தலோடும், தன் கணவரின் சம்மதத்தோடும்
மேலும் சில நாட்கள்,ஆனி ராஜீவின் வீட்டில் தங்க நேரிடுகிறது. குழந்தை புட்டிப்பால் குடிக்க ஆரம்பித்தவுடன் ராஜிவ் ஆனியை வழியனுப்பத் தயாராகிறார்.அப்போது ஆனியின் செயலும்,அதைத் தொடர்ந்து வரும் இருபது நிமிடக் காட்சிகளும் படத்தின் உயிரோட்டமான பகுதிகள்.


இந்தப் படத்தில் வரும் ராஜீவ் மேனன் காதாபாத்திரத்தை மோகன்லாலைத் தவிர வேறு எந்த நடிகராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்கமுடியாது என்பது என் எண்ணம்.படத்தின் ஆரம்பத்தில் குடித்துவிட்டு அவர் நடந்துகொள்கிற விதமும்,வேணுவின் குழந்தைகளைப் பிரியும்போது அவர் படுகிற வேதனைகளும்,ஆனி கருவுற்ற செய்தி கிடைக்கும் வரையில் தவிக்கிற தவிப்பும், பிறகு செய்தி கேள்விப்பட்டு சந்தோஷத்தில் கூடை,கூடையாய் பழங்கள் வாங்கிக்கொண்டு ஆனியை பார்க்கச் செல்லும்போது, "தயவு செய்து இனிமேல் என்னை பார்க்க வாராதீர்கள்" என்று ஆனி கூறும் போது மனசொடிந்து திரும்பி செல்லும் போதும்,குழந்தை வளர்ப்பது பற்றிய புத்தகங்களை வாங்கி படிக்கும் போதும்,குழந்தை பிறந்தவுடன் "யார் குழந்தையின் அப்பா" என்று நர்ஸ் கேட்க்கும் போது அருகிலேயே முரளியும் இருக்க சந்தோஷமும்,சங்கடமுமாய் அவர் கொடுக்கும் அந்த உணர்ச்சியும்,"என்னுடைய குழந்தை இல்லையென்றாலும், இது என்னோட ஆனியின் குழந்தை,அதனால் எனக்கும் பாசமுண்டு" என்று முரளி கூறும்போது, சட்டென்று முளைக்கிற கோபமும்,குழந்தைக்கு வைத்திருக்கும் புட்டிப்பாலை எடுத்து குடிக்கும் போது பார்த்துவிடுகிற சுகுமாரியின் முன் ஒரு குழந்தையைபோல் நெளிவதும் என்று மனிதர் என்னமாய் அசத்துகிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை மோகன்லாலின் ராஜ்ஜியம்தான்,எந்த ஒரு இடத்திலும் மிகைநடிப்பை பார்க்கவே முடியாது.

இறுதிக்காட்சியில் அவர் ரேகாவிடமும்,சுகுமாரியிடமும் பேசும் வசனங்களும், நடிப்பும் கண்ணில் நீரை திரள வைக்கும்.
குறிப்பாக சுகுமாரியிடம்,"ஆண்ட்டி,எல்லா அம்மாவும் ஆனியை போலத்தான் இருப்பாங்களா?"எனும்போது,



"ஆமாம்"என்பார் சுகுமாரி.

"அப்போ,என் அம்மா?"என்று ஒரு குழந்தையின் ஏக்கத்தோடு அவர் கேட்கும்போது நமக்கு என்னமோபோல் ஆகிவிடுகிறது.

"உன் அம்மா உன்னை விட்டு சென்றிருந்தாலும்,அவளால் ஒரு நாளும் நிம்மதியாக இருந்திருக்க முடியாது" என்று சுகுமாரி கூறும் போது,

"ஆண்ட்டி,உங்க குழந்தைகளையும் நீங்க இப்படித்தான் நேசிப்பீங்களா?"என்று கேட்பதற்கு,

"ஆம்" என்று தலையசைப்பார் சுகுமாரி,

அதைத் தொடர்ந்து,"ஆண்ட்டி என்னையும் அது மாதிரி

நேசிப்பீங்களா?"என்று கேட்பதோடு படம் முடிவடையும்.


அடுத்தடுத்தப் பதிவுகளில் இன்னும் சில படங்களை பற்றி சொல்கிறேன்.

6 comments:

மஞ்சூர் ராசா said...

கிட்டத்தட்ட மோகன்லாலின் எல்லாப்படங்களுமே சுவாரஸ்யமாக இருக்கும். அவருடைய நடிப்பு நடிப்பாகவே இருக்காது. தொடர்ந்து அவரது படங்களை பார்த்து வருபவன்.

பல படங்களின் பெயர்கள் மற்ந்துவிட்டாலும்: தேவாசுரம், கிரீடம், தேன்மாவின் கொம்பத்து போன்ற படங்களை வாங்கி பார்க்கவும்.
இதில் கிரீடம் சமீபத்தில் அஜீத் நடித்து தமிழில் வெளியானது.
தேன்மாவின் கொம்பத்து ரஜினி நடித்து முத்து என்ற பெயரில் வெளியானது.

இன்னும் சில நல்ல படங்கள் இருக்கின்றன. குறிப்பாக சீனிவாசனுடன் மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் படங்களை கண்டிப்பாக பார்க்கவும். சீனிவாசனும் மிகவும் அற்புதமான நடிகர். அவரது படங்களையும் தவற விட வேண்டாம். சமீபத்திய அவரது கதை பறையும்போழ் என்னும் படம் தான் குசேலன் என்ற பெயரில் ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் படம்.

நன்றி.

துளசி கோபால் said...

சமீபத்தியப் படங்களைவிட பழைய படங்கள் (உதா: வெள்ளானகளுடெ நாடு) அட்டகாசமா இருக்கும்.

ஒல்லி மோகன்லால்.

நான் நேத்துப் பார்த்தது 10ம் வருசம் பழசு. 'ஆயாள் கத எழுதுகயாணு'

ஸ்ரீனிவாசனின் படங்களும் ரொம்ப நல்லாவே இருக்கும்.

நாடோடி இலக்கியன் said...

மஞ்சூர் ராசா,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீங்கள் குறிப்பிட்டுள்ள தேவசுரம்,கிரீடம் மற்றும் மோகன்லால் சீனிவாசன் இணைந்து நடித்த நாடோடிகாட்டு,பட்டிண பிரவேசம்,அக்கரே அக்கரே,மழபெய்யுந்நு மத்தாளம் கொட்டுந்நு,வரவேழ்பு முதல் சமிபத்தில் வெளிவந்த உதயநானு தாரம் வரைக்கும் மிக நல்ல படங்களை தேர்வு செய்து பார்திருக்கிறேன்.
நீங்கள் சொல்வது போல் மோகன்லால் நடிப்பது போன்றே தெரியாது,அவ்வளவு இயல்பான நடிகர்.

நாடோடி இலக்கியன் said...

வாருங்கள் துளசி!
நீங்கள் குறிப்பிட்டுள்ள படத்தை சென்ற வாரம்தான் பார்த்தேன்,இந்த படத்தில்தான் நான் பார்த்தவரையில் சீனிவாசன் நகைச்சுவை விடுத்து சீரியசான கதாபாத்திரத்தில் வருவார்.

முரளிகண்ணன் said...

nice review

நாடோடி இலக்கியன் said...

வாங்க முரளி கண்ணன்,
பழைய பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் அளித்திருப்பதற்கு நன்றிங்க.