Friday, May 26, 2017

உப்பு சோப்பு

வீட்டிற்குச் சென்றதும் அலக்கினை எடுத்துக் கொண்டு ஆடுகளுக்கு தழை ஒடிக்கச் செல்ல வேண்டும் என்று யோசனையோடு வந்து கொண்டிருந்தாள் நூறு நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நீலாவதி.எட்டு வைத்து வேகத்தைக் கூட்டி நடந்து வந்து கொண்டிருந்தவளின் கண்ணில் பட்டாளத்தார் வீட்டு எள்ளு வயற்காட்டில் கிடந்த நண்டுக்கால் புற்கள் படவும் சட்டென வயலில் இறங்கி புற்களைப் பிடுங்க ஆரம்பித்தாள். உழுத மணல், இறுகாமல் இருக்கும் வயற்காடுகளில் வேர் ஆழம் பாயாமல் கிடக்கும் நண்டுக்கால் புற்களைப் பிடுங்கி எடுப்பது என்பது அலுப்புத் தெரியாமல் இன்னும் இன்னும் என புற்களாக இருந்தால் தேவலாம் என்றிருக்கும். ஆடுகளின் பசியினை உணர்ந்தவள் நண்டுகாற் புற்களை அரித்து எடுப்பதில் காட்டிய வேகத்தில், சற்றைக்கெல்லாம் போதுமான அளவு புற்களைச் சேர்த்து விட்டிருந்தாள். அரித்த புற்களை வெயிலுக்கு தலைக்கு போட்டிருந்த பழந்துணியால், மூட்டையாகக் கட்டிக் கொண்டு வண்ணான் துணி மூட்டைக் கணக்காக தலையில் வைத்தபடி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த நீலாவதிக்கு அவளின் கை, காலை நம்பித்தான் பிழைப்பு.
சிறு வயதிலேயே கணவனை பறிகொடுத்த நீலாவதி, கூலி வேலை செய்து சிறுக சிறுகச் சேர்த்த சிறுவாட்டுக் காசினைக் கொண்டும் , இருந்த ஒரு மா நிலத்தை விற்றும்தான் யார் துணையுமின்றி இரண்டு வருடங்களுக்கு முன் தன்னுடைய ஒரே மகள் கலைவாணியை பக்கத்து ஊரில் கட்டிக் கொடுத்தாள். சொத்து என்று இப்போது அவளுக்கு இருப்பது ஒரு கூரை வீடும்,அதைச் சுற்றி இருக்கும் நான்கு செண்ட் கட்டு மனையும் ,ஆறு மாதத்திற்கு முன் கவர்மெண்ட்டில் கொடுத்த நான்கு வெள்ளாடுகளும் அவை ஈன்ற குட்டிகளும்தான்.
புல் மூட்டையை தலையில் வைத்த வாகிலேயே வந்துகொண்டிருந்தவளைப் பார்த்ததும் வீட்டிற்கு முன் பக்கமாக இருக்கும் மாமர நிழலில் படுத்துக்கிடந்த ஆட்டுக் குட்டிகளில் இரண்டு, ஆடா பூனையா என்று குழப்புகிறார் போல கத்திக்கொண்டே நீலாவதியை நோக்கி ஓடி வந்தன. வந்த வேகத்திலயே இரண்டு குட்டிகளும் தன் மீது தாவித் தாவி விழுந்ததைப் பார்த்த நீலாவதி , புள்ளையளா, செத்த இருங்க, ஒங்களுக்குத்தான கொண்டுக்கிட்டு வரேன் என்று ஏதோ பெற்றப் பிள்ளைகளிடம் பேசுவது போல பேசிக்கொண்டே, வருகிற வழியில புண்ணிய மூர்த்தி கடையில் , நூறு நாளு வேல செஞ்ச காசு வந்தொடனே ஓங்கடனெல்லாம் தீத்துர்ரேன், ஒரு உப்பு சோப்பு மட்டும் கொடுத்துரு புண்ணியம் என்று சங்கடமாக வழிந்தபடி வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டு வந்த உப்பு சோப்பினை எடுத்து, வீட்டின் புறக்கோடியில் கிடக்கும் துணி துவைக்கும் கல்லின் மீது போட்டுவிட்டு அப்படியே புல் மூட்டையினைக் கொண்டுவந்து திண்ணையை ஒட்டிக் கிடந்த ஆட்டுக்கல்லின் மேல் போடுகிறாள்.

துணி மூட்டையிலிருந்து வெளியில் நீட்டிக்கொண்டிருந்த புற்களைம்ம்ம்ம்ம் என்று முனகிக்கொண்டும், பரபர என்று வாலினை ஆட்டிக் கொண்டும் கடித்துக் கொண்டிருந்த ஆட்டுக் குட்டிகளைப் பார்த்ததும், அடிக்கிற வெயிலில் வேதனைப் பாவ வந்தவளின் முகம், சட்டென மண்பானைத் தண்ணீரை முகத்தில் அடித்தாற் போன்று பூரித்துப் போனது.

கையில் வைத்திருந்த நூறு நாள் வேலை அட்டையினை கூரையில் சொறுகி வைத்த நீலாவதி , வீட்டிற்குத் தெற்கு புறமாய் இருக்கும் கொய்யாச் செடியின் அடியில் பாத்திரம் கழுவ இருக்கும் இடத்தில் இருந்தத் தொட்டியில் முகம் , கை, கால் கழுவிவிட்டு, உரச் சாக்குவைத்துத் தைத்து மூடியிருந்த மூங்கில் தட்டியிலானக் கதவைத் தள்ளிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அந்த மூங்கில் தட்டிக் கதவிற்கென்று பூட்டெல்லாம் கிடையாது. தட்டியில் கட்டியிருக்கும் சணலை எடுத்து சுவரில் இருக்கும் ஆணியில் முடிச்சுப் போட்டுவிட்டுப் போறதுதான். அந்த சணல் முடிச்சும் எதற்கென்றால் மூங்கில் தட்டியை தள்ளிவிட்டுட்டு இருக்கிற பழையக் கஞ்சியினை நாய்கள் வாய் வைத்துவிடாமல் இருக்கத்தான்.

குண்டான் ஒன்றில் இருந்தப் பழையக் கஞ்சியயையும் , கடித்துக்கொள்ள நேற்று வச்ச புளிக்குழம்பில் கிடந்த மாங்காய்க் கீற்றுகளில் இரண்டினை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தவள், சாணி இட்டு மெழுகி பச்சைப் பசேல் என்றிருருந்தத் திண்ணையில், சுவரில் சாய்ந்த மேனிக்குக் காலை நீட்டி ஒன்றின் மேல் ஒன்றாகப் போட்டு உட்கார்ந்துகொண்டு கஞ்சியினைக் கரைத்துக் குடிக்க ஆரம்பித்தாள்.

வீட்டிற்குப் பின் புறமிருந்தும்ம்ம்மே என்று ஒண்ணு மாற்றி ஒண்ணாகக் கத்திக்கொண்டு இருந்த பெரிய ஆடுகளின் சத்தத்தைக் கேட்டதும் கஞ்சியைக் குடித்த வாக்கிலேயே, இங்கரே காலமரதான அவ்வளோ தழ ஒடிச்சி போட்டுட்டுப் போனேன், ஒங்கக் கொட பசிக்கிற மாறிதான எனக்கும் பசிக்கும், சும்மா கெடங்க செத்த நேரம், கஞ்சியக் குடிச்சிட்டு வாரேன் என்று ஆடுகளுக்கு பதில் குரல் கொடுத்தவள், பிறகு மனசு கேட்காமல் கஞ்சியை அப்படியே வைத்துவிட்டு, புற்களில் கொஞ்சத்தை சோற்றுக்கையில தண்டாமல் வல்லாங்கையாலயே இடுப்போடவே இடுக்கி அள்ளிக்கொண்டு ஆடுகளுக்குப் போடப் போனாள்.

எதுக்கு இப்புடி பறக்குறிய ஹே என்று ஆடுகளைத் திட்டிக்கொண்டே புற்களைப் போட்டுவிட்டு திரும்பியவளின் கண்ணில் ரோட்டில் போய்க்கொண்டிருந்த அம்பலார் மாரிமுத்து படவும், சட்டென்று பிள்ளையார் கோயில் திருநாளுக்கக் கொடுக்க வேண்டிய வரிப்பணம் ஞாபகம் வந்தது.உடனே அனிச்சையாய் செவ்வா, பொத,சாழன் என்று நூறு நாள் வேலைக்கு எத்தனை நாள் சென்றிருக்கிறாள் என்பதனை விரலை விட்டு எண்ணிக்கொண்டே வந்து திண்ணையில் உட்கார்ந்து மறுபடியும் கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்தாள்.
போன வருடம் திருநாள் சமயத்தில் பஞ்சம் பெரிதாக இருந்ததால் , ஒத்தப் பொம்பளயா க்கெடந்து அல்லாடிக்கிட்டுக்கிட்டு கெடக்கா, அவக் கிட்ட என்னத்த வரிப்பணம் கேட்டோம், பாவம் என்று யதார்த்தமாக இவளிடம் வரிப்பணத்தை கேட்காம விட்டுவிட்டான் மாரிமுத்து. ஒருத்தர் விடாம மற்ற பங்காளி வீடுகளில் வரி வசூலிச்சதை அறிந்து கொண்ட நீலாவதி, தன்னிடம் வரிப்பணம் கேட்காம விட்டதை தாங்கிக்க முடியாமல் ஆத்தாத்துப் போனாள். மிஞ்சிப்போனால் வருடத்தில் ஒரு முறை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடைபயணமாப் போவதும், அரை சாமான் வாங்க அரியலூர் போறதையும் தாண்டி அவளின் உலகம் என்பது ஒரு ஐந்து கிலோ மீட்டருக்குள்ளாகத்தான். அப்படியாப்பட்டவளுக்கு அவள் வாழும் சூழலில் இருக்கிற பெரிய கௌரவம் என்பது கோயிலுக்கு வரி கொடுக்கின்ற குடியானவளா இருப்பதுதான்.

அம்பலார் ,இப்படி தன்னை அசிங்கப்படுத்திட்டானே என்று நிலை கொள்ளாமல் தவித்தவள், தன் புருஷன் செத்ததும் கழட்டி வைத்த ஒரு கிராம் மூக்குத்திய எடுத்துக்கொண்டு நேராக ஊரணிக்காடு செட்டியார் அடகுக் கடையில் அடகு வைத்துவிட்டுக் கொண்டு வந்த பணத்தோடு அம்பலார் வீட்டு வாசலில் போய் நின்று,அம்பலாரு மாமா, இதெல்லாம் மொறையா? ஊரெல்லாம் ஒருத்த வீடு பாக்கியில்லாம வரி வாங்கியிருக்கிய, என்ன மட்டும் எதுக்கு ஒதுக்கினிய, நானென்ன தள்ளுப்பட்ட சாதியா? , கோயிலுக்கு வரிப்பணம் கொடுக்க முடியாம வக்கில்லாமயா பொயித்தேன் என்று ஆங்காரமா மூச்சு விடமாப் பேசிவிட்டு ,இல்லப்புள்ள ஒன்னைய செரமப்படுத்தபுடாதுன்னுதான் என்று இடை மறித்து பேச வந்த மாரிமுத்தோட பேச்சைக் காது கொடுத்துக் கூட கேட்காமல், ஐறூறு ரூபாயை எடுத்து அம்பலார் வீட்டு திண்ணையில் வைத்துவிட்டு அவள் பாட்டுக்கும் போய்க்கொண்டிருந்தாள்.

இதனாலேயே இந்த வருடம் முதல் ஆளாக இவளிடம்தான் வரியைக் கேட்டான் மாரிமுத்து. அடுத்த வாரம் கொடுக்குறேன் என்று சொல்லியிருந்தாள் நிலாவதி, இந்தக் கதையெல்லாம் மனசுக்குள்ள ஓட விட்டவள், இன்னும் மூணு நாள் கெடக்கு காசு வரதுக்கு , இல்லாட்டியும் ஏங்க தாங்கலுக்குன்னு வச்சிருக்க மூக்குத்திய வச்சிக்க வேண்டியததுதான் என்று நினைத்துக்கொண்டே கஞ்சியைக் குடித்து முடித்தவள், அங்கே இருந்த மண்பானையில் இருந்து கொஞ்சமாத் தண்ணீரை வார்த்துக் கு டித்துவிட்டு அப்படியே பாத்திரத்தையும் அலசி சுவரோரமாக வைத்துவிட்டு, முந்தானையை உதறிப் போட்டு அப்படியே கட்டையைச் சாய்த்து கண்ணை மூடினாள்.

நீலாவதி கண்ணசந்த அந்த நேரத்தில், சொசைட்டியில் இருந்து சுமிலி எண்ணெய் வாங்கிக்கொண்டு அந்தப் பக்கமாக வந்துக்கொண்டிருந்தாள் பக்கத்து வீட்டு ரஞ்சிதம். நீலாவதியின் வீட்டின் புறக்கோடி வழியாக வந்தவளின் கண்ணில் துணித் துவைக்கிற இடத்தில கிடந்த உப்பு சோப்புப் படவும் படக்கென்று குனிந்து அதை எடுத்தவள் அதே வேகத்தில் மடியில் சொறுகிக்கொண்டு அவள் பாட்டுக்கும் போய்க்கொண்டிருந்தாள்.

சற்று நேரம் அப்படியே கண்ணை மூடி படத்துக்கிடந்த நீலாவதி, நாய்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் குரைக்கின்ற சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்து, நேப்பண்ணையளா, போறியளா அங்கிட்டு என்று சத்தம் போட்டபடியே பக்கத்தில் கிடந்த மூங்கில் கழியைத் தூக்கி நாய்களைப் பார்த்து வீசி எறிந்தவள், அப்படியே எழுந்து கொடிக் கயிற்றில் கிடந்த அழுக்குத் துணிகளை அள்ளிக்கொண்டு புறக்கோடியை நோக்கிப் போனாள்.

தண்ணீர் பிடித்து வைத்திருந்த அன்னக்கூடையில் துணிகளை முக்கி வைத்துவிட்டு திரும்பியவள், தோய்க்கிற கல்லில் சோப்பு இல்லாததைப் பார்த்ததும், ங்கொப்புரான கொப்பந்தன்னான, எங்கடி இங்கின வச்ச உப்பு சோப்பக் காணும் என்று சத்தம் போட்டுப் பேச ஆரம்பித்தாள்.
ஏட்டியே நீலாதி, என்னாடி கத்திக்கிட்டு கெடக்குற என்றபடியே நீலாவதி நிற்கிற இடத்திற்கு வந்த தெக்கி வீட்டு ராசாமணியிடம்,ங்கொப்புரான, இப்பதாண்டி இங்கின சோப்பப் போட்டுட்டுட்டுப் போயி, கஞ்சியக் குடிச்சிட்டு துணியள அள்ளிக்கிட்டு வரேன் அதுக்குள்ளார தூக்கிக்கிட்டுப் பொயித்தாளுவொ என்றாள் நீலாவதி.

உம்மா, உப்பு சோப்பத் தூக்க வராளுவொள, வெக்கங்கெட்ட தீவினடி இதெல்லாம், இங்கனதான் எங்கினாச்சும் கெடக்கும் பாரு என்று சொன்ன ராசாமணி ,தானும் நீலாவதியோடு சேர்ந்து சுத்தி முத்தியும் சோப்பு கிடக்கிறதா என்று தேடினாள்.

இவர்கள் இருவரும் சோப்பைத் தேடிக்கொண்டு நிற்பதை வேலியோரமக மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சிதம், கையில் குடத்தை வைத்துக்கொண்டு அதில் கொஞ்சமே இருந்தத் தண்ணியைக் குலுக்கிக் குலுக்கி குடத்தை கழுவிக்கொண்டே, ராசாமணி, என்னாடி ஏதோ சத்தம் போட்டாள அவ என்று குரல் கொடுத்தாள் .

உப்பு சோப்பக் காணும்னு கத்திக்கிட்டுக் கெடக்குறா என்று பதிலுக்கு குரல் கொடுத்த ராசாமணியிடம், என்னாது சோப்பத் தூக்குனாளுவொளா, ச்சை அவளும் பாவந்தானே, அவ பாவத்திலயெல்லாம் போயி விழுவலாமா? என்று சொல்லிக்கொண்டே குலுக்கின தண்ணீரை வேலி ஓரமா இருக்கும் கனகாம்பரச் செடியில் ஊற்றிக்கோண்டே, ஏட்டி நீலாதி, அங்கனதான் கெடக்கும் நல்லா தேடிப் பாருடி என்றாள்.

ரஞ்சிதம் சொன்னதைக் கேட்டதும் திரும்பிய நீலாவதி, இந்த மாதிரி நப்பி வேலையெல்லாம் இவதான் செய்வா என்பதாய் ரஞ்சிதத்தை முறைத்த மேனிக்கே பாத்துவிட்டு, ம்ம்ம் எந்தக் குச்சிக்காரியோ தூக்கிக்கிட்டு போயித்தாளுவோங்கிறேன், என்னத்த தேடிப் பாக்க சொல்ற என்று மெதுவாக ஆரம்பித்தவள், அவ கையில கட்ட மொளைக்க, மடிஞ்சி மண்ணாப் போவ, குடி குட்டிச்சாரப் போவ என்று மூச்சு விடாம தெருவிற்கே கேட்கும்படி சத்தம் போட்டு சாபம் விட்டுக் கொண்டிருந்தாள் . நீலாவதி பேசப் பேச அதை ரசித்துப் பாத்துக்கொண்டு நின்றிருந்தாள் ராசாமணி.

இந்த மாதிரி சண்டை என்றால் இன்னும் அதனை சொறிந்து விட்டு வேடிக்கைப் பார்ப்பாள் ராசாமணி. ராசாமணியின் இந்தக் குணம் தெரிந்த அவள் புருஷன் வீரையன், ஏய் இங்கிட்டு நீ வறியா இல்லையாடி என்று குரல் விட்டான். இந்தாளு வேற என்று முணுமுணுத்துக்கொண்டே, இப்ப என்னாங்கிறேன், ஒங்கோமணத்துக்குள்ளயேதான் குந்தியிருக்கணுமே, அங்கிட்டு இங்கிட்டு செத்த போப்புடதே? என்று வேடிக்கைப் பார்க்க விடாம கூப்பிடும் வீரையனிடம் எரிஞ்சி விழுந்துபடியே வீட்டை நோக்கி நடந்தாள் ராசாமணி.

அரை மணி நேரத்துக்கு மேல மொய் மொய் என்று சாபம் விட்டவள் கடைசியாக அடச்சுப் பட சாத்த என முடித்து, இருங்கடி மினியய்யா கோயில்ல போயி எலுமிச்சம்பழம் மத்திரிச்சு எடுத்தாந்து வச்சிட்டுதான் மறு வேல என்று சொல்லிவிட்டு கையோடு முனியய்யா கோயில் திசையப் பார்த்து நடக்க ஆரம்பித்தாள்.

அவள் அங்கிட்டுப் போன சற்று நேரத்திற்கெல்லாம் குடத்துக்குள்ளே சோப்பை வைத்து எடுத்துக்கொண்டு, நீலாவதி வீட்டின் புறக்கோடிக்கு வந்த ரஞ்சிதம், துணித் துவைக்கிற கல்லின் அருகே ஈர மண்ணை, கோழி கிளறுவதைப் போல கிளறி அதில் மண் மூடிக் கிடக்கிற மாதிரி சோப்பை வைத்துவிட்டு அவசர அவசரமாக தெருக் குழாயடியைப் பார்த்துத் தண்ணீர் பிடிக்கப் போகிற மாதிரி போய்க்கொண்டு இருந்தாள்.

முனியன் கோயிலுக்கு போறேன் என்று சொல்லிவிட்டுப் போன நீலாவதி புண்ணிய மூர்த்தி கடைக்குச் சென்று மறுபடியும் ஒரு உப்பு சோப்பை வாங்கிக்கொண்டு வந்து துணிகளைத் துவைக்க உட்கார்ந்தாள்.

உட்கார்ந்த வேகத்திலேயே மண் மூடிக் கிடந்த சோப்பு கண்ணில் பட்டுவிட்டது. மறுபடியும் ரஞ்சிதத்தை வாயிக்குள்ளயே திட்டிக்கொண்டே அவளின் வீட்டை நோக்கி பார்த்தாள் . ரஞ்சிதம் இந்தப் பக்கம் திரும்பாமலேயே கவனத்தை நீலாவதியின் மேல் வைத்துக்கொண்டு நடமாடிக்கொண்டிருப்பதை பார்த்த நீலாவதி கண்டார ஓழி, நடைய பாத்தியன்ன என்று திட்டிக்கொண்டே அந்த சோப்பை எடுத்து மறுபடியும் கல்லின் வைத்துவிட்டு துணிகளைத் துவைக்க ஆரம்பித்தாள்.

முனியங்கோயில்ல நெசமாவே மந்திரிச்சு எதுவும் கொண்டு வந்து வச்சிருப்பாளோ என்று பயம் தொற்றிக்கொள்ள குழம்பியபடி நடமாடிக்கொண்டிருந்த ரஞ்சிதம், வீட்டிலிருந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வந்து, ஏட்டி கொழம்பு எதுவுமா வச்ச என்றபடி நீலாவதியின் அருகில் வந்து நின்றாள்.

ஆமா, நாங்கொழம்புனேன், நேத்து ரவையில வச்ச புளித்தண்ணிதான் கொஞ்சூண்டு கெடக்கு என்று கடுப்பாகச் சொன்ன நீலாவதியிடம் , அதுல இத்திக் குடுடி, அந்தாளு கொழம்பு வைக்கலயான்னு கத்துவான் என்ற ரஞ்சிதம், அதுக்குள்ளயுமாடி முனியங் கோயில் போயி திரும்பிட்ட என்றாள்.

உம்மா, இந்த வெயில்ல அத்தேர்தி போவ வாய்க்கும்ன்னா? என்று அலுப்பாவும் கடுப்பாவும் சொன்ன நீலாவதி ,தட்டுவாணி முண்டைய பொயித்து போறாளுவோ போ என்றபடியே சோப்புக்கையைக் கழுவிவிட்டு கையை உதறி எழுந்து ரஞ்சிதத்திடம் கிண்ணத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் போய் நுழைந்தாள்.

அவளின் பின்னாலேயே சென்ற ரஞ்சிதம்,அப்படியே திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, ஏட்டி போன திருநாளு கிட்டன்சுலதான ஒம்பேர பொறந்தான், தல முடி எறக்கணும்னா, மொவ வராளா, என்னாடி செய்வன செய்யப்போற, நவ எதுவும் போடுறியா? என்றாள்.

குழம்பை ஊற்றி எடுத்துக்கொண்டு வந்த நீலாவதி, ஆமா, நவ போடுறேன் என்று தன் இயலாமையைக் கடுப்பாகச் சொன்னவள் மேற்கொண்டு, ஊரணிக்காட்டுக்குப் போயி புதுத்துணிதான் எடுத்தாந்து போடணும், வெள்ளி அரணா ஒண்ணு போடுவோம்னு நெனப்பு, ம்ம்ம் பாப்போம் என்று விட்டேத்தியா சொன்னவள், சட்டென முகம் பூரா பூரிப்பாக மாறி, “எம்பேரன இப்பக் கிட்டன்சுல நீ பாக்கலைன்னா, என்னைய கண்டுட்டான்னா போதும், அப்படித்தான் நச்சத்திரம் மாதிரி சிரிப்பான் என்றபடியே ஆட்டுக்கல்லுல உட்கார்ந்து ரஞ்சிதத்திடம் தன் பேரன் பெருமையை சொல்ல ஆரம்பித்தாள்.

#வண்டல்_மண்_கதைகள்