Tuesday, December 30, 2008

இசைப்பிரியர்களுக்கு ஒரு சவால்...!

பொதுவாக நம்மில் பலர் இசை பிரியர்களாக இருப்போம்,ஆனாலும் ஒரு பாடலில் முதல் நான்கு வரிகளை தாண்டி பெரும்பாலும் கவனித்திருக்க மாட்டோம்.அதனால் பாடலின் இடையே வரும் ரசிக்கப்படபட வேண்டிய சில வரிகள் கவனிக்க படாமலேயே போயிருக்கும். எனக்கு பிடித்த திரைப் பாடல்களில் நான் ரசித்த சில வரிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். முடிந்தால் அந்த பாடல்களின் முதல் வரிகளை கண்டுபிடியுங்கள். (சின்னபுள்ளத்தனமாவுல்ல இருக்குன்னெல்லாம் சொல்லாம சமத்தா பதில் சொல்லுங்க மக்கா).

"நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை
நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்த பொழுதை"


"எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா?"

"உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்க்கவில்லை
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை"

"அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை"


"காதல் என்ற சொல்லில் காமம் கொஞ்சம் உண்டு
இடையில் சின்ன கோடு அட அதுதான் ரொம்பப்பாடு"(பெரும்பாடு)

"ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே"

"காதல்வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை"

"அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்து
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்"


"பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா"


"உன்னை செய்த பிரம்மனே
உன்னை பார்த்து ஏங்குவான்".


இப்போதைக்கு இந்த பத்து பாடல்கள் போதும்,அடுத்தடுத பதிவுகளில் இன்னும் நிறைய வரிகளை பார்க்கலாம்.

கொசுறு:காதல் பாடல்கள் கொஞ்சம் அதிகமா இருக்குல்ல அது நம்மை அறியாம வர்ர விஷயம்.

:)

விடைகள்:

1.அந்த உச்சிமலை -- எங்க தம்பி --
2.சாதிமல்லி பூச்சரமே --அழகன் -- புலமைபித்தன்
3.ஒரு காதல் என்பது -- சின்னதம்பி பெரிய தம்பி --
4.வானமழை போலே -- இது நம்ம பூமி -- வாலி
5.காதல் இல்லாதது -- மணிரத்னம் --
6.வா வா வா --வேலைக்காரன் -- மு.மேத்தா
7.முத்தமிழே முத்தமிழே -- ராமன் அப்துல்லா --அறிவுமதி
8.இளநெஞ்சே வா -- வண்ண வண்ண பூக்கள் -- வாலி
9.நினைத்து நினைத்து -- 7G ரெயின்போ காலனி -- ந.முத்துக்குமார்
10.அதோ மேக ஊர்வலம் -- ஈரமான ரோஜாவே --புலமைபித்தன்

பாடலாசிரியர் பெயர்கள் நினைவில் இருந்ததை மட்டும் எழுதியிருக்கேன், விடுபட்ட பாடல்களின் பாடலாசிரியர் தெரிந்தால் சொல்லிட்டு போங்க.

Sunday, December 28, 2008

மலையாள படங்களும்,பி.வாசுவும் பின்னே ஒரு அப்பாவி ரசிகனும்..!

1985லிருந்து 1995 வரை மலையாள சினிமாவின் பொற்காலம் என்பார்கள், அந்த காலகட்டத்தில் பத்மராஜன், பரதன், ஐ.வி.சசி, சிபிமலயில், ஃபாசில், பிரியதர்ஷன் என பெரும் இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான படங்கள்தான் இன்றளவும் மலையாள சினிமாவுக்கென்று ஒரு மரியாதையை சம்பாதித்து வைத்திருக்கிறதென்றால் மிகையில்லை.

நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்,தூவானத் தும்பிகள், தசரதம், தேவாசுரம், மணிசித்ரதாழு,பரதம், அமரம், ஒரு வடக்கன் வீர கதா,தனியாவர்த்தனம் என கணமான கதைகளை கொண்ட படங்களும்,கிலுக்கம்,சித்ரம், வந்தனம், வடக்கு நோக்கி எந்திரம்,நாடோடிக் காட்டு,அக்கரே அக்கரே போன்ற இன்றைக்கும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படங்களும், கோபால கிருஷ்ணன் எம்.ஏ, மிதுனம், வரவேழ்ப்பு, வெள்ளானக்கலுடே நாடு போன்ற நடுத்தர குடும்பங்களின் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக அனுகிய படங்களும் இந்த காலக் கட்டத்திலேயே வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன.

தமிழில் இதே காலகட்டத்தின் பிற்பகுதியில் செந்தமிழ்ப் பாட்டு, வால்டர் வெற்றிவேல் என மிகவும் தரமான படங்களை(?!!) தந்து கொண்டிருந்தார் இயக்குனர் பி.வாசு.(இந்த படங்களெல்லாம் எப்படி வெற்றிப் படங்களாச்சுங்கிறது இன்றுவரை ஒரு புரியாத புதிர்தான்).வாசு சார், நீங்க ஒரு நல்ல ரசிகர் என்பது மணிசித்ரதாழு, பரதம், கத பறயும்போள் ஆகிய படங்களை தமிழில் கொண்டு வந்து நல்ல படங்களை எல்லோரும் ரசிக்க வேண்டுமென்கிற உங்க ஆர்வத்திலேயே தெரிகிறது,ஆனால் நீங்க என்ன செய்தீங்க?

மேற்சொன்ன மலையாளப் படங்கள் தமிழில் வெளிவந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததுண்டு, அந்த சமயத்தில் முதலில் உங்க பார்வை பதிந்தது "பரதம்"படத்தில்,இந்த படத்துக்காகத் தான் மோகன்லால் முதல் தேசிய விருதை பெற்றார்.அண்ணன் தம்பிக்கு இடையேயான ஈகோ பிரச்சினையை மிகவும் உணர்வுப் பூர்வமாக பேசிய இந்த படத்தில் மோகன்லாலும், நெடுமுடி வேணுவும் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார்கள். படத்தைப் பார்க்கும்போது அந்தக் குடும்பத்தில் நம்மையும் ஒரு நபராக உணரச் செய்யும்படி இருக்கும் அப்படத்தின் திரைக்கதை,ஆனால் தமிழிலில் நீங்களும்,கார்த்திக்கும் நல்லாவே மொக்கை போட்டிருப்பீர்கள்.(கார்த்திக் ஒரு நல்ல நடிகர் ஆனாலும் வாசு படத்தில் மோகன்லாலே நடித்தாலும் மொக்கை போட்டுத்தானே ஆகணும்.) படத்தை நீங்க ரீமேக் செய்யப் போகும் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தபோதே அந்த படத்தின் ரிசல்ட்டும் தெரிந்துவிட்டது, நான் நினைத்தைப் போன்றே உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ரணகளமாக்கி "சீனு" என்ற பெயரில் வெளியாகி அட்டர் ஃபிளாப்பானது.பரதம் படத்தை இயக்கிய சிபி மலயில் சீனுவை பார்த்திருந்தால் கண்டிப்பாக ரூம் புக் பண்ணியிருப்பார்.

அத்தோடு விட்டீர்களா அடுத்தது பாசிலின் மணிச்சித்தரதாழு, மதுமுட்டம் அவர்கள் எழுதிய இந்த கதையை ஃபாசில் அவர்கள் ரொம்பக் கவனமாக கையாண்டிருப்பார்,கொஞ்சம் பிசகினாலும் காமெடியாகிவிடக் கூடிய அபாயம் உள்ள ஸ்கிரிப்ட்,split personality என்னும் ஒருவகை மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஷோபனா கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருப்பார், ஆனால் உங்க சந்திரமுகியில் ஜோதிகா நன்றாக நடித்திருப்பதாக பலரும் கூறினார்கள், நானும் ஒத்துக்கொள்கிறேன் என்ன ஒன்னு ஷோபனா Split personality என்ற ஒரே ஒரு நோயால் பாதிக்க பட்டவராய் நடித்திருப்பார், ஜோதிகாவோ மல்டிபிள் டிசீஸ் உள்ளவரை போல் நடித்திருப்பார்.(ஜோதிகாவைத் தப்பு சொல்ல முடியாது,எல்லாம் உங்க ஆசிர்’வாதம்’ ). இந்த படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ரஜினி,நயந்தாரா மற்றும் விஜயகுமாரின் காதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் அச்சு அசலாக ஆறாம் தம்புரான் படத்திலிருந்து உருவப்பட்டது. "அத்திந்தோம்"பாடலுக்கான காட்சியும் அப்படியே. கிட்டத்தட்ட சந்ரமுகியின் முதல் பாதி ஆறாம் தம்புரான்,இரண்டாம் பாதி மணிச்சித்ரதாழு. ஒரு சீரியசான படத்தை செம்ம காமெடியாக்கும் வித்தை உங்களுக்கு ரொம்ப இயல்பா கைவருது வாசு சார்,ஹாட்ஸ் ஆப் டூ யூ. இந்தக் கதையை உங்க சொந்த ஸ்க்ரிப்ட்ன்னு சொல்லி உச்சபட்ச காமெடியெல்லாம் வேற பண்ணீங்க. இந்த ஸ்டேட்மெண்டை கேட்ட மதுமுட்டம் எந்த சுவத்துல முட்டிகிட்டாரோ.

கதபறயும் போள் படத்தை குசேலனாக்கி குதறிய கதையை ஏற்கனவே வலையுலகில் பலமுனைத் தாக்குதல் நடந்திருப்பதால் நான் வேறு தனியாச் சொல்ல வேண்டியதில்லை.

மலையாளப் படங்களின் ரசிகரான சுந்தர்.சி உங்களை போன்று ஒரு முழு படத்தையும் ரீமேக் செய்வதில்லை,மாறாக பல வெற்றிப் படங்களிலிருந்து ஒவ்வொரு சீனாக உருவி ஒரு புது படத்தையே ரசிக்கும்படி கொடுத்து விடுவார். உதாரணமாய் "உள்ளத்தை அள்ளித்தா". பழைய சாபாஷ் மீனாவில் தொடங்கி கிலுக்கம்,வந்தனம், சித்ரம் ஆகிய படங்களிலிருந்தெல்லாம் காட்சிகளை சுட்டு அதை இன்னும் மெருகேற்றி ரசிகர்களின் உள்ளத்தை அள்ளினார்.உங்களால முடிஞ்சா அந்த மாதிரி செய்யுங்க, வேண்டாம் வேண்டாம் பேசாம நீங்க நடிக்கிறதையே கண்டினியூ பண்ணுங்க சார்.அதைக்கூட பார்த்துடலாம்.ஆனா மறுபடியும் நீங்க .... சரி வேண்டாம் இத்தோட நிறுத்திக்கிறேன்.


நேத்து இரண்டாவது முறையாக "தசரதம்" படத்தை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது,இந்த மாதிரி நல்ல படங்களை பார்க்கும்போது கூடவே ஐயையோ எங்கே வாசுவின் பார்வை இந்த மாதிரி படத்தின் மேலெல்லாம் விழுந்து விடுமோன்னு பயமாகவும் இருக்கிறது. நான் நடைவண்டியில் நடை பழகிய காலத்தில் வெளிவந்த "பன்னீர் புஷ்பங்கள்" என்ற அருமையான படத்தை சந்தான பாரதியோடு இணைந்து தந்த நீங்க அதன் பிறகு எதாவது ஒரு நல்ல படம் கொடுத்துடுவீங்கன்னு ஒவ்வொரு முறையும் நானும் எமார்ந்தது தான் மிச்சம் இப்போ எனக்கு தலைமுடியெல்லாம் ஒன்னு ஒன்னா நரைக்க ஆரம்பிச்சிடுச்சு, என்னாலேயே முடியல அடுத்த ஜெனரேஷன் பசங்க பாவம் சார். எனவே வாசு சாரிடம் நான் வைக்கும் ஹம்பிள் ரிக்வெஸ்ட் இதுதான் தயவு செய்து இனிமேல் நீங்க நடிக்கிறத மட்டும் கண்ட்டினியூ பண்ணுங்க சார்.

கொசுறு 1:லவ் பேட்ஸ் திரைப்படம் வெளிவந்த போது ரசிகர்கள் அடித்த கமெண்ட்,"ஒரு வாசு டைரக்ட் பண்ணாலே தாங்காது,இது நூறு வாசு சேர்ந்து இயக்கிய படம்டோய்". :)

கொசுறு 2:உங்க இயக்கத்தில் வெளியாகி சரியாக போகாத "இது நம்ம பூமி" படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது என்பதையும் நான் இங்கே சொல்லிக்கிறேன்.

Friday, December 26, 2008

மண்வாசனை பாட்டிகள்........!

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் காந்திமதி அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை போல எப்போதும் கேலியும்,கிண்டலும்,சிலேடை பேச்சுமாய் அதகளம் செய்கிற பாட்டிகள் கிராமங்களில் ஊருக்கு ஒன்றிரண்டு பேராவது இருப்பார்கள்.எங்க ஊர்லகூட இப்படி நாலஞ்சு பா(ர்)ட்டிகளுண்டு, அதில் ஒரு பாட்டியின் தனிச்சிறப்புகளத்தான் இங்கே பகிர்ந்துக்க போறேன்.

*வண்டிமாடு கட்டுத்தறியைவிட்டு அவிழ்த்துக் கொண்டு நின்றதைப் பார்த்த பாட்டி தனது கணவரிடம் மாட்டை பிடித்துக் கட்டுமாறு சொன்னதற்கு, படுத்திருந்த தாத்தாவோ,"ஏண்டி நீ அங்கேதானே நிக்கிற நீயே புடிச்சு கட்டிடு" என்றார். இதற்கு பாட்டி ரொம்ப கேஷுவலாக தாத்தாவிடம்,"நீ கட்டியிருக்கற வேட்டிய அவுத்து கொடு அதை நான் கட்டிக்கிறேன்" என்றதும், தாத்தா தலைதெறிக்க எழுந்து மாட்டை நோக்கி ஓடினார்.

*அருகிலுள்ள கிராமத்திலிருந்து தாத்தாவின் அக்கா காலையிலேயே வந்துகொண்டிருந்தார், இவர் மாததிற்கு குறைந்தது ஒரு முப்பது தடவையாவது பிறந்த வீட்டிற்கு வந்துவிடுவார் .இவரைக் கண்டாலே நம்ம பாட்டிக்கு ஆகாது, எனினும் அதை நேரடியாக காட்டிக்கொள்ளமாட்டார். அப்போது வீட்டின் வாசலில் கோவிலுக்காக நேர்ந்துவிடப்பட்ட கன்றுகுட்டி படுத்திருந்தது. தாய்ப் பசு பாட்டி வீட்டில் இருப்பதால் அந்த கன்றுக் குட்டி அங்கே படுத்துக் கொள்வது வழக்கம். நம்ம பாட்டி கன்றுக் குட்டியையும், விருந்தாளி பாட்டியையும் மாற்றி மாற்றி பார்த்தார், அருகில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து படுத்திருந்த கன்று குட்டியை நோக்கி "சனியனே உன்னதான் முறையா சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்த்தாச்சுல்ல இன்னும் எதுக்கு இங்கே வந்து டேரா போடுற,சாவுற வரைக்குமா ஒனக்கு பொறந்த இடம் கேக்குது" என்று கன்றுக் குட்டியை அடித்து விரட்டிவிட்டு அப்படியே கூலாக முகத்தை வைத்துக்கொண்டு,"வாங்க வாங்க"என்று அக்கா பாட்டியை வறவேற்றார். விருந்தாளி பாட்டியும் எல்லாம் புரிந்தாலும் "எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்க மாட்டோமா?"என்கிற ரேஞ்சில் எதையுமே கண்டுகொள்ளவில்லை.

*பாட்டிக்கும், அவரின் கணவரின் தம்பி மனைவிக்கும் இடையே ஏதோ பிரச்சனையில் நம்ம பாட்டியின் பிறந்த வீட்டைப் பற்றி சின்ன பாட்டி ஏதோ இழிவாக பேசிவிட்டார். பதிலுக்கு நம்ம பாட்டி எந்த வித ஆர்ப்பாட்டமின்றி ஒரே வார்த்தையில் அவரை கிளீன் போல்ட் ஆக்கினார். "உன்னை பொண்ணு பாக்க வந்தப்போ உங்க அப்பன் வீட்டு வைக்க(வைக்கோல்) போர அண்ணார்ந்து பார்த்தப்போ விழுந்த சுளுக்குதான் இன்னும் எடுபடல". இதை கேட்ட சின்ன பாட்டி கப்சிப்.காரணம் சின்ன பாட்டியின் டாடி வீட்டில்தான் நிலமே கிடையாதே, அப்படியிருக்க ஏது வைக்கோல் போர்(முன்னெல்லாம் கிராமத்தில் ஒருத்தர் எவ்வளவு பணக்காரர் என்பதை அறிய அவர் வீட்டு வைக்கோல் போரை பார்த்தால் தெரியுமென்பார்கள்).


*இன்னொரு சுவையான சம்பவம்,பாட்டியின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் ஏதோ அவசர வேலையாய் வந்துவிட்டு உடனே வீடு திரும்ப எத்தணித்தபோது, பாட்டியின் மகன் உறவினரிடம்"இருங்கண்ணே காலையிலே போகலாம் ரொம்ப நேரமாச்சு" என்றதற்கு உறவினரோ,"இல்ல தம்பி நான் பஸ்ல போயிடுறேன்" என்றதைக் கேட்ட பாட்டி,"ஏண்டா தம்பி, நீ பசுவுல போனது இருக்கட்டும் காளையிலே போகலாம்டா"என்று சிலேடையில் பேசி அசரடித்தார்.

*குடிப் பழக்கத்தால் 60 வயதிலேயே தாத்தா கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு நாள் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்துக் கொண்டிருந்தார், அதை பார்த்த பாட்டி "என்னத்த பாக்குற குடிக்காதைய்யா குடிக்காதைய்யா உடம்புல ஒன்னும் இல்லன்னு சொன்னப்பெல்லாம் பார்க்கல இப்போ என்னாத்துக்கு பாடி(body) பாக்குற, இனியா தேற போவுது" என்று அன்பை பொழிந்தார்.

*கிட்டத்தட்ட அதே சமயத்தில் வங்கியில் தாத்தாபேரில் இருக்கும் ஏதோ கடனுக்காக அவரிடம் கையெழுத்து வாங்க வந்திருந்த அதிகாரிகள் தாத்தாவிடம் "பெரியவரே மெல்லமா பேங்க் வரைக்கும் வரமுடியுமா"என கேட்க நம்ம பாட்டி "மெல்லமா வரமுடியுமாவா? அவரு வேகமா போறத்துக்குள்ள இருக்காரு, இப்போ அவரு எங்கிட்டு வர்ரது" என்றதும் அதிகாரிகள் கொஞ்சம் பாட்டியை பார்த்து மிரண்டுதான் போனார்கள்.

*ஒருமுறை ஏதோ சொத்து பிரச்சினையில் பாட்டியின் மகன் மேல் ஒருத்தர் வழக்கு தொடர்ந்ததையடுத்து பாட்டியின் மகனைத் தேடி வீட்டிற்கு போலிஸ் வந்து "உன் மகன் எங்கே"யென விசாரித்து கொண்டிருந்தனர், நம்ம பாட்டி போலிஸாரிடமும் வழக்கம் போல் அகட விகடமாய்ப் பேச, கடுப்பான போலிஸ்காரர் "ஏய் கிழவி ஓவரா பேசுன ஜீப்பிலே ஏத்திடுவேன்" என்று சொல்ல, அதற்கும் அசராத பாட்டி,"கொஞ்சம் இருய்யா நல்ல சேலையா கட்டிகிட்டு வரேன், எனக்கும் ரொம்ப நாளா இந்த வண்டியில எல்லாம் ஏறி பார்க்கணும்னு ஆச" என்றதைத் தொடர்ந்து தெரிச்சு ஓடினார்கள் போலிஸ்.

கொசுறு:இங்கே சொன்னது பாட்டியின் சாகசங்களில் மிகவும் சொற்பமே.

Friday, December 19, 2008

இந்த நடிகர்களை உங்களுக்குப் பிடிக்குமா?

பத்துபேரை ஒரே நேரத்தில் பந்தாடி புவி ஈர்ப்புவிசையையே கேள்விக் குறியாக்குவது,டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என ஹைடெசிபலில் கத்தி பஞ்ச் டயலாக் பேசி காதுகளை பஞ்சராக்குவது,அந்நிய நாட்டு தெருக்களில் அத்தனைபேர் பார்க்க கார்த்திகை மாத தெருவோர நன்றியுள்ள ஜீவன்களின் நடவடிக்கைகளையொத்த செயல்களில் டூயட் என்ற பெயரில் கதாநாயகிகளின் அங்கங்களை ஆராய்ச்சி செய்வது என சாகசங்கள் பலவும் செய்ய வேண்டியிராத, கேரக்டர் ஆர்டிஸ்ட் என்றழைக்கப்படும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பெரிதாக அங்கீகரிக்கப் படாமல் இருக்கும் சில சிறந்த தமிழ் நடிகர்களை பற்றி ஒரு நினைவூட்டல் இப்பதிவு.

வழக்கமாய் பிறமாநிலங்களில் இருந்து கதாநாயகிகளை இறக்குமதி செய்யும் தமிழ்சினிமாவில் இப்போதெல்லாம் வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களுக்கும் பிறமாநில நடிகர்களை நடிக்க வைப்பது அதிகரித்திருக்கிறது.


கோட்டா சீனிவாசராவ்,ஆந்திராவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.தெலுங்கு "யாரடி நீ மோகினி"யில் தமிழில் ரகுவரன் ஏற்ற கதாபாத்திரத்தை இவர்தான் செய்திருப்பார். மிகவும் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார், அதே மாதிரி இன்னும் நிறைய படங்களில் தான் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிறுபித்திருப்பார். ஆனால் தமிழில் இவர் நடிக்கும்போது தெலுங்கு படம் பார்ப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தும்படிதான் இருக்கும் இவரது பாடிலாங்வேஜ்.ஆஷிஸ் வித்யார்த்தி ஒரு சிறந்த நடிகர் என்றபோதிலும் தமிழில் இவர் வசனங்களை உச்சரிக்கும்போது இவரின் வாயசைவு தமிழ் உச்சரிப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதை கவனிக்கலாம், நெடுமுடி வேணு இந்தியாவில் உள்ள மிக அற்புதமான நடிகர்களை பட்டியலிட்டால் முதல் பத்து இடங்களுக்குள் இவருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு, ஆனால் தமிழில் இவருக்கும், இன்னொரு மலையாள நடிகரான முரளிக்கும் நடிகர் ராஜேஷின் இரவல் குரல் தேவைபடுகிறது.

கலைக்கு மொழியில்லை என்பார்கள் ஆனால் மேற்சொன்ன இந்த நடிகர்களுக்கு மொழி காரணமாகவே தங்களது உண்மையான திறமையை இங்கே வெளிப்படுத்த முடியாமல் போகிறது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம்,இப்படி பிறமாநில கலைஞர்களை வரவழைத்தும் வாழவைப்பது தமிழனின் பரந்த மனப்பாண்மையை காட்டினாலும் பிஸியாக இருக்கும் பிறமாநில நடிகர்களை தேடிப்போய் வாய்ப்பை வழங்கி அவர்களையும் கஷ்டப்படுத்தி, பார்க்கும் ரசிகனையும் கஷ்டபடுத்தும் நம் இயக்குனர்கள், குணச்சித்திர நடிப்பில் அற்புதமாக நடிக்கக் கூடிய சில தமிழ் நடிகர்கள், வாய்ப்புகள் இல்லாமலோ அல்லது சரியாக பயன்படுத்த படாமலோ இருப்பதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அந்த வகையில் சிறந்த தமிழ் நடிகர்களாக நான் நினைக்கும் சில நடிகர்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

டெல்லி கணேஷ்:

உலக நாயகன் கமலின் ஆஸ்த்தான நடிகர்களில் ஒருவரான இவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இவரின் முழுமையான திறமையை இன்னும் எந்த இயக்குனரும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றுதான் தோன்றுகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த "ஆஹா" படத்தில் காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பில் பின்னியெடுத்திருப்பார். கொஞ்ச காலங்களுக்கு முன் வாய்ப்புகளே இல்லாமல் இருந்தபோது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். அதில் ஒரு புது பாணி காமெடி நடிப்பை வழங்கி இப்போது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ராஜீவ்:
ஒரு கதாநாயகனுக்கு ஏற்ற வசீகரமான முகம் மற்றும் திறமை இருந்தும் இவர் நடிக்க வந்த காலகட்டத்தில் நான்கு நாயகர்களில் ஒருவர், இரண்டாவது நாயகன்,வில்லன் என ஆரம்பித்த இவரது திரை வாழ்க்கை அடுத்தடுத்து பெரிதாக வாய்ப்பின்றி இரண்டு சீன்களில் தலைகாட்டும் துக்கடா ரோல்களில் நடிக்கத் தொடங்கி,"காதல் கோட்டை","ஜெயம்" என்று அவ்வப்போது சில படங்களில் நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கேற்ப மிக இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர்.இவரிடம் எனக்கு பிடித்த மற்றுமொரு விஷயம் வளமான குரல் மற்றும் தமிழை உச்சரிக்கும் விதம்.

நிழல்கள் ரவி:

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுக படுத்தப்பட்ட இவரின் திறமைக்கு பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.1985 லிருந்து 1995 வரை வெளிவந்த பல படங்களில் கதாநாயகன்,வில்லன் எனத் தொடங்கி கிட்டத்தட்ட அனைத்துவிதமான கதாபாத்திரதிலும் நடித்திருக்கிறார். விசுவின் இயக்கத்தில் வெளிவந்த"திருமதி ஒரு வெகுமதி" படத்தில் இவரின் நடிப்பு இவர் ஒரு மிகச் சிறந்த கலைஞன் என்பதற்கு ஒரு சோறு பதம்.இவரின் இன்னொரு சிறப்பு இயல்பாகவும் நடிப்பார்,ஓவர் ஆக்டிங்கிலும் வெளுத்து வாங்குவார்.கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான இயக்குனர்களின் படங்களிலும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு.

ரஞ்சித்:

முன்னதாகக் குறிப்பிட்ட நடிகர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகரான இவரும் ஒரு சிறந்த நடிகர் என்பது என் எண்ணம். அறிமுகமான "சிந்து நதிப்பூ"படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார், தொடர்ந்து "பாரதிக் கண்ணம்மா" படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி" நேசம் புதுசு" படத்தின் மூலம் கதாநாயகனாக புரமோஷன் பெற்றார்.பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் பீஷ்மர் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்,படம் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டாலும் தோல்வியைத் தழுவியது இருப்பினும் இவர், வரும் நாட்களில் சிறந்ததொரு இயக்குனர் ஆவதற்கான அறிகுறிகள் அந்த படத்தில் தெரிந்தது.விக்ரம் அவர்களுக்கு ஒரு பாலா கிடைத்த மாதிரி இவருக்கு யாராவது கிடைத்தால் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு வருவார்.

நடிப்பு என்பது பொய், அந்த பொய்யை  உண்மையென நம்பவைப்பவன் சிறந்த நடிகன், அந்த வகையில் மேற்சொன்னவர்கள் மிகச் சிறந்த நடிகர்கள். இவர்களை போன்று திறமை படைத்த இன்னும் சில நடிகர்களும் இருக்கிறார்கள். நம் இயக்குனர்கள் இவர்களையும் கொஞ்சம் கண்டுகொண்டால் நன்றாக இருக்கும்.

கொசுறு: இது ஒரு மீள் பதிவு.எப்படியோ இந்த இடுகை மட்டும் மிஸ் ஆகிவிட்டது.பேக் அப் எடுத்து வைத்திருந்ததிலிருந்து copy செய்து போட்டிருக்கிறேன். இருப்பினும் பழைய பின்னூட்டங்களெல்லாம் போச்சு.

Friday, December 12, 2008

மினிபஸ் பயணமும் ராமராஜன் பாடல்களும்:


எப்போதாவது கிராமப்புறங்களில் செல்லும் மினிபஸ்ஸில் பயணித்திருக்கின்றீர்களா? இல்லையெனில் ஒருமுறைச் சென்று பாருங்கள், சுவாரஸ்யங்களும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்த நல்லதொரு சிறுகதைத் தொகுப்பை படிக்கும் உணர்வை தரவல்லது இந்த மினிபஸ் பயணம்.

பஸ் வசதியில்லா கிராமங்களிலிருந்து அருகில் உள்ள பேரூராட்சி அல்லது நகராட்சி அந்தஸ்த்துள்ள ஊர்களுக்கு விடப்பட்டிருக்கும் மினிபஸ்களின் சேவை மகத்தானது.

கிராமப்புறங்களில் புழக்கத்திலுள்ள பதினெட்டுப் பட்டி என்ற சொல் அனேகர் அறிந்ததே, திருமணத்திற்கு பெண் கொடுப்பது,எடுப்பது என எல்லாமே பெரும்பாலும் இந்த பதினெட்டு ஊர்களுக்குள்ளாகவே நடக்கும்.குறிப்பிட்ட இந்த பட்டிகளில் ஏதோ ஒரு பட்டியில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த மினிபஸ்கள், குறைந்தது ஒரு பத்து பட்டிகளிலாவது நுழைந்து இருபது நிமிடத்தில் அடையவேண்டிய தூரத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து வந்து சேரும்.இதிலென்ன சுவராஸ்யம் என்கிறீர்களா?நிறைய இருக்கிறது.

பயணிகள் வசதி நிறுத்தம்(passengers dependent bus stop), நாம் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், இறங்கிக்கொள்ளலாம். இதில் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் இருவர் ஒரே நேரத்தில் பயணித்தால் இருவரும் அவரவர் வீட்டு வாசலிலேயே இறங்கிக்கொள்ள முயல்வர், அவர்களிடம் நடத்துனர், "ஏங்க ஒரே இடத்திலே இறங்கிக்கலாம்ல" என்று சொல்லிவிட்டால் போச்சு ,"ஏன் அவன் வீட்டு வாசலில நிக்கிற வண்டி ஏவீட்டு வாசலில நிக்காதோ" என்று பெரிய கௌரவப்பிரச்சினை கிளம்பிவிடும்.

டிரைவரிடம்,"தம்பி,எம்மவகிட்ட இத மறக்காம கொடுத்துடுங்க, அவ வந்து வாங்கிக்குவா" என பக்கத்து ஊரில் கட்டிகொடுத்திருக்கும் தனது மகள் வீட்டிற்கு பால் முதல் பனியாரம் வரை பார்சல் அனுப்பும் தாய்க்குலங்கள், மருந்துச் சீட்டை கொடுத்து மாத்திரைகள் வாங்கிவரச் சொல்லும் பெருசுகள், அண்ணே அடுத்த நடை வரும்போது ரெண்டு முழம் பூ வாங்கிட்டு வந்துருங்கண்ணே என்று காசை நீட்டும் குமரிகள் இப்படியாக ஒரு இலவச கூரியர் சர்விஸ் வேலையையும் செய்து கொண்டிருக்கும் இந்த மினிபஸ்களில் நடக்கும் சுவாரஸ்யங்களின் பட்டியல் இன்னும் நீளும்.

சாலையில் பஸ் செல்வதை பார்த்திருப்போம்,ஆனால் இந்த மினிபஸ்கள் பல இடங்களில் சாலையென்ற ஒரு யூகத்தின் அடிப்படையிலேயேச் சென்று கொண்டிருக்கும். ஒரு சில இடங்களில் நல்ல நிலையில் சாலைகளிருக்கும், ஆனால் கண்டிப்பாக அங்கே ஒரு பெண்மணி தானியங்களை காயவைத்துக்கொண்டிருப்பார், டிரைவர் அவரிடம்,"ஏம்மா இப்படி நடுரோட்ல காயவெச்சீங்கன்னா எப்படி வண்டி ஓட்றது" என்று கேட்டால்,"ஆமா நீ ஒரு நாளைக்கு வருவ ஒம்போது நாளைக்கு ரிப்பேருன்னு வரமாட்ட, இன்னைக்கு நீ வருவேன்னு எனக்கென்ன சோசியமா தெரியும்" என்பதுதான் அந்தப் பெண்மணியின் பதிலாக இருக்கும். அதற்குள் பஸ்ஸினுள் இருக்கும் எதாவது ஒரு பெருசு, "தம்பி கிராமம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும், அட்சஜ்ட் பண்ணிப் போப்பா" என்று குரல் கொடுக்கும்,ஏன்னா அடுத்த திருப்பத்துல அவர்வீட்டு நெல் காய்ந்து கொண்டிருக்கும்.

சாலையின் நடுவே சில இடங்களில் கால்நடைகள் கும்பலாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்,அவற்றை எழுப்ப நடத்துனர் படும்பாடு இன்னும் வேடிக்கையாக இருக்கும்(அவருக்கல்ல). ஹேர்பின் பென்ட்டைவிட அபாயகரமான வளைவுகளைக் கடந்து நம்ம பென்ட்டைக் கழட்டிவிடும் இந்த மினிபஸ் பயணத்தில் இப்படி சில அசௌகர்யங்கள் இருப்பினும் நான் ஒவ்வொருமுறை ஊருக்குபோகும்போதும் இதில் பயணிப்பதை மிஸ் பண்ணுவதில்லை,அதற்கு முக்கியமான காரணமென்றால் இளயராஜாவின் பாடல்கள்தான்.

சென்ற முறை பயணத்தின்போது ராமராஜன் பாடல்களை ரொம்ப நாளைக்கு பிறகு கேட்கும் வாய்ப்பு அதுவும் வயல்வெளிகளினூடாக பஸ் வரும்போது "சொர்கமே என்றாலும்" பாடலை கேட்டபோது இதற்கு முன் பலதடவை கேட்ட பாடல்தானென்றாலும் அந்த ரம்மியமான சூழலில் பாடலின் வரிகளுக்கேற்ற காட்சிகளை நேரில் பார்த்துக்கொண்டே பயணித்தபோது அந்த பாடலின் வீச்சை முழுமையாக உணரமுடிந்தது.
தொடர்ந்து "தினமும் சிரிச்சு மயக்கி", "ராசாத்தி மனசுல","அரும்பாகி மொட்டாகி","நேத்து ஒருத்தர ஒருதர பார்த்தோம்", "மதுர மரிக்கொழுந்து வாசம்", "செண்பகமே" ஆகிய பாடல்கள் வரிசையாக ஒலித்துக்கொண்டே வந்தது. அதென்னவோ தெரியல,மோகன் மற்றும் ராமராஜன் படங்களுக்கு இளயராஜா அவர்கள் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையமைத்திருக்கிறார். இந்த மாதிரியான கிராமத்துக் கீதங்களை சத்தமாக ஒலிக்கவிட்டுக்கொண்டு செல்லும் மினிபஸ்கள் வாழ்க.

கொசுறு:எங்க பக்கத்து வீட்டுக்காரரும் அன்று என்னோடு பஸ்ஸில் வந்தார்,இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அவரவர் கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டோம் என்பதை இங்கே சொல்லிக்கிறேன்.
:)

Tuesday, December 2, 2008

அக்கரைப் பச்சை

ஐந்து வருடங்கள் அன்னிய நாட்டில் குப்பைக் கொட்டிவிட்டு இப்போது தான் எனது சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன்.

புதிதாக ஓரிரு மாடி வீடுகள்,புழுதியை கிளப்பியபடி போகும் மினிபஸ் தவிர இத்தனை வருடத்தில் பெரிதாக மாற்றம் ஒன்றுமில்லை. இன்னொரு பெரிய மாற்றம் என்றால் அனேக பெண்கள் நைட்டிக்கு மாறியிருக்கிறார்கள், அதென்னவோ தெரியவில்லை நைட்டியை அணிந்துகொண்டு,மேலே துண்டு ஒன்றையும் போட்டிருக்கிறார்கள் 'காலாச்சார தடுமாற்றம்'. யோசித்தபடியே நட்ராஜின் வீட்டை நோக்கி பைக்கைச் செலுத்தினேன்.

"நட்ராஜ்" என்னுடைய நண்பன்.நட்பு,நண்பன் போன்ற வார்த்தைகளை நான் கேட்டிராத காலத்திலிருந்தே அவனை எனக்குத் தெரியும்.கால ஓட்டத்தில் எத்தனையோ நண்பர்கள் எனக்கு கிடைத்திருந்தாலும் நட்ராஜ் கொஞ்சம் ஸ்பெஷல்.

சிறுவயதில் தட்டாம் பூச்சி பிடித்ததிலிருந்து கல்லூரியில் பட்டாம்பூச்சிகள் பார்த்தது வரை எங்களுக்குள் பகிர்ந்துகொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பினும் அவனை எனக்கு மற்றவர்களிடமிருந்து வித்யாசபடுத்திக் காட்டியது அவனுடைய இலக்கிய ஆர்வமும்,புரட்சி சிந்தனைகளும்தான். பத்தாம் வகுப்பு படித்தபோதே சேகுவாரா,லெனின் பற்றியெல்லாம் பேசுவான்.

கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதுகிறேன் பேர்வழியென்று "வானத்துல தெரியுது நீலம், நீதான் எனக்கு பாலம்" மாதிரியான மொக்கைகளாக எழுதிக் கொண்டிருந்த எனக்கு கல்யாண்ஜி, கலாப்பிரியா என இலக்கியவாதிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தியதும் அவன்தான்.

விடுமுறை நாட்களில் எங்களுடைய மற்ற நண்பர்கள் பெரும்பாலும் சாவடியில் அமர்ந்து சரோஜா தேவியில் மூழ்கியோ அல்லது ஏதாவது பெண்களின் அந்தரங்க நடவடிக்கைகளை ஆராய்ந்து கொண்டோ இருக்கும் வேளைகளில், நாங்களிருவரும் ஏரிக்கரை ஆலமரத்தின் தணிந்த கிளையில் அமர்ந்தோ அல்லது காட்டாற்று அணைக்கட்டில் அமர்ந்தோ கல்கியையோ, சாண்டில்யனையோ வாசித்துக்கொண்டிருப்போம்.

கல்லூரி படிப்பு முடிந்து நான் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது அவனுக்கு ஊரைவிட்டு வரமனமில்லாமலும் ,அவனுக்கு பிடித்த லெக்சரர் வேலைக்கு முயற்சி செய்யும் பொருட்டும் ஊரிலேயே இருந்துவிட்டான்.

இப்படியாக அவனைப் பற்றி யோசித்தபடியே போய்கொண்டிருந்தபோதே நட்ராஜ் எதிரே வந்துகொண்டிருந்தான்.

"சரவணா,வா வா வா இப்போ தான் வந்தியா?,காலையிலிருந்து உங்க வீட்லதாண்டா இருந்தேன்" முகமெங்கும் பிரகாசமாய் என்னை வரவேற்றான்.

"டேய் நல்லா குண்டடிச்சிட்ட,அமேரிக்கா கிளைமேட்டுக்கு நல்லா கலராவும் ஆயிட்டடா" என்றான்.

"அது சரி நான் அப்போதிலிருந்தே கொஞ்சம் குண்டாத்தான் இருப்பேன்,நீ என்னடா இவ்ளோ பெருசா இருக்கே" என்று கேட்டபடியே அவனை பைக்கில் ஏற்றிக்கொண்டு அணைக்கட்டு பக்கமாய் வண்டியை செலுத்தினேன்.

"சரவணா,இன்னும் எவ்ளோ நாள்டா இங்கே இருப்ப"

"இன்னும் ஒரு வாரம் இருப்பேன்டா, அடுத்தவாரம் சென்னையில் புது கம்பெனியில் ஜாய்ன் பண்ணனும்"

"அப்படியா,எனக்கும் கூட காலேஜ்ல செமெஸ்டர் லீவு முடிய இன்னும் பத்து நாள் இருக்குடா" என்று அவன் சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்படியே ஆரம்பித்த எங்கள் பேச்சு கடந்த ஐந்து வருடங்களில் ஊரில் நடந்த சம்பங்கள்,அவன் வேலை பார்க்கும் கல்லூரியின் சுவையான நிகழ்ச்சிகள் என ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சிறுவயதில் எங்கெல்லாம் சுற்றினோமோ அங்கெல்லாம் சுற்றி,ஏராளமான கதைகள் பேசியபடியே நான்கைந்து நாட்கள் ஓடிவிட்டது.நான் ஊருக்கு புறப்படுவதற்கு முதல்நாள் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அவனுடைய சில மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினான்.

அந்த மாணவர்கள் நட்ராஜின் மேல் வைத்திருந்த அன்பு கலந்த மரியாதை என்னை ஆச்சர்யபடுத்தியது,அவர்களிடம் பேசியபோது அவர்கள் நட்ராஜை பற்றி என்னிடம் கூறிய வார்த்தைகள் ,நான் நட்ராஜை வாடா போடா என்று கூப்பிடுவதற்கே கொஞ்சம் தயக்கமாக இருந்தது, அந்த அளவிற்கு அவன் எல்லோராலும் மதிக்கபடும் நபராய் இருக்கிறான்.

பிறகு அவர்கள் ஒரு சிறிய இலக்கிய கூட்டம்போல் நடத்தினார்கள்,நட்ராஜும் அவன் மாணவர்களும் கலந்துரையாடியதை கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.


அன்று இரவு தூங்கமுடியாமல் ஏதேதோ சிந்தனை.எதையோ மிஸ் பண்ணிட்ட மாதிரி இருந்தது,"சே,நட்ராஜ் எவ்ளோ அருமையான ஒரு வாழ்க்கை வாழறான்",நான் வாழ்றது ஒரு வாழ்க்கையா" என மனசு நிலை கொள்ளாமல் தவித்தது.

இன்னும் இரண்டு வருடத்தில் நாமும் ஊர்பக்கமாக வந்து செட்டில் ஆகிட வேண்டியதுதான்.சம்பளம் குறைவாக இருப்பினும் நிறைவான வாழ்க்கையல்லவா நட்ராஜ் வாழ்கிறான் என பலவாறு யோசித்துக் கொண்டே உறங்கிப்போனேன்.


அடுத்த நாள் ஊருக்கு வழியனுப்ப நட்ராஜ் தான் பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் வந்திருந்தான்.பஸ் வந்து கொண்டிருந்தது.

"ஹூம் நாளையிலிருந்து லாஜிக்,பக்(bug) என மீண்டும் நரக வாழ்க்கையென" மனதிற்குள் நினைத்துக் கொண்டே,

"சரி நட்ராஜ் நான் வரேன்டா,போயிட்டு போன் பன்றேன்"என்றதும்,

நட்ராஜ் என் கைகளை பிடித்துக் கொண்டு , "சரவணா ,சென்னையிலே ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுடா" நானும் வந்திடுறேன்,எவ்ளோ நாளைக்குதாண்டா குண்டுசட்டியிலேயே குதிரை ஓட்டுறது,எதாவது ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுதுடா"என்றவனிடம் என்ன சொல்வதென தெரியாமல் பஸ் ஏறிய என்னை புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றான் நட்ராஜ்.

கொசுறு:இந்த சிறுகதைக்கு எதாவது பொருத்தமான பெயர் சொல்லுங்க,நான் நினைத்திருக்கும் பெயரை யாராவது சொல்றீங்களான்னு பார்க்கலாம் என்று கேட்டிருந்ததை தொடர்ந்து "அக்கரைப் பச்சை"யென்று நான் நினைத்திருந்த தலைப்பையே அருணா அவர்களும் கூறியிருக்கிறார்கள்.மேலும் நண்பர்கள் முரளி கண்ணன்,வெங்கட்ராமன்,குடுகுடுப்பை,வெயிலான் மற்றும் ராஜூ ஆகியோர் சொன்ன தலைப்பில் வெங்கட்ராமன் சொல்லியிருந்த மனக்குரங்கு மற்றும் ராஜூவின் விட்டில் பூச்சிகள் ஆகிய தலைப்புகள் எனக்குப் பிடித்திருந்தது.வெயிலான் சொல்லியிருக்கும் தலைப்பிற்கு எனக்கு வேறொரு நாட் தோன்றியிருக்கிறது. கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.