Monday, May 11, 2009

சூரியனுக்கு டார்ச் அடிக்கிறேன்.

பொதுவாக பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை பெரும்பாலும் வாசிப்பதில்லை.விகடனில் வெளியான கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் கொஞ்ச வாரங்கள் தொடர்ந்து வாசித்துவிட்டு பிறகு புத்தகம் வந்த பிறகே முழுமூச்சாய் வாசித்து முடித்தேன்.ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் பொறுமை இருப்பதில்லை.

அதே போன்றே வலைப்பூக்களிலும் சிலர் எழுதும் தொடர் புனைவுகள் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன ஆனாலும் அவற்றையும் தொடர்ந்து வாசிப்பதில்லை.முழுதாக எழுதி முடிக்கட்டும் என்று காத்திருக்கிறேன்.(உ.ம்:நர்சிம் அவ்ர்கள் எழுதிவரும் மாறவர்மன்).இப்படி தொடர் கதைகளை வாரா வாரம் காத்திருந்து வாசிக்கும் பொறுமையில்லாத எனக்கு என்னையுமறியாமல் ஒரு தொடர்கதையை தொடந்து ஏழு வாரமாக வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு பிரபலத்தின் எழுத்து.

பொதுவாக வர்ணனை என்றாலே தாண்டி போய்விடும் என்னை இவரின் வர்ணனைகள்,"எங்கே இதை படிக்காமல் தாண்டி சென்றுவிடு பார்ப்போம்? என்று சவால் விடக்கூடிய வகையில் ரசனையாக இருக்கிறது. வாசித்த பின் அந்த காட்சியை ஒட்டிய கற்பனைகளில் ஒரு சில நிமிடங்களாவது வாசிப்போரை சஞ்சரிக்க வைத்துவிடுகிறார்.

அவரின் கதாபாத்திரங்கள் என்னென்ன உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறதோ அதே உணர்ச்சிகளை வாசகனுக்கும் துள்ளியமாக கடத்துகிறது அவரின் எழுத்தின் ஆழுமை.

"விலை உயர்ந்த ஷேம்பேன் நுரையைப் போல மூச்சுக் காற்றுப் பட்டாலே கரைந்து விடுவாளோ என்பதைப் போல மெல்லிய சதை அவளுக்கு. "

"இன்னும் பிறக்காத ஆண்கள் கூட அவளது உதட்டுச் சிவப்பின் முத்தத்துக்கு ஆசைப் படுவார்கள்"


"போதை மருந்துத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டிய அவளது மார்புகள்"

"அருகருகே இரண்டு ராமேஸ்வரம் கடல்களைக் கண்டாற் போல் இருந்தது அவளது கண்கள்."

"மீண்டும் ஒரு வாய் பீர் குடித்தவுடன்தான் நான் இந்த உலகத்து போதைக்கு வந்து நார்மலானேன்"

"மதர்த்த பெண்ணிடம் வரும் தீராத ஆசையும்,பெற்ற தாயிடம் வரும் கனிந்த பாசமும் என்னுள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் பிரவிகித்தன"

"இரண்டு அழகான பெண்களை ஒரே நேரத்தில் பார்ப்பது இரண்டு நாசிகளாலும் ஒரே நேரத்தில் மூச்சு விடுவதைப் போல சிரமமாக இருந்ததால் நான் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டேன்"

"அவளது உள்ளங்கையில் இருந்தால் எந்த மலரும் ஒரு வாரத்துக்கு வாடாது.அவ்வளவு குளுமையான,மிருதுவான கைகள்."

மேலே குறிப்பிட்டிருப்பது அக்கதையில் வரும் ஒரு சில வர்ணனைகள்,ஒரு சிலருக்கு இப்போதே புரிந்திருக்கும் எந்த கதையை பற்றி சொல்கிறேனென்று. ஆம் இயக்குனர் திரு.ஷண்முகப்ரியன் அவர்கள் தனது வலைப்பூவான படித்துறையில் எழுதிவரும் "கன்னிகா"வை(வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்) இன்னமும் நிறைய பேருக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற ஒரு ஆர்வத்தில்தான் சூரியனுக்கு டார்ச் அடிக்கும் வேலையாக இந்த பதிவு. மேலும் தொடர் கதை மட்டுமல்லாமல் பல்வேறு சுவாரஸ்யமான பதிவுகளை மிக ஆழமான கருத்துக்களோடும் எழுதிவருகிறார்.அவரின் வலைபூவிற்கு இந்த வழியாக போங்க.

Thursday, May 7, 2009

இளைய திலகம் பிரபு....

பர்ஸனலா எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக்(இப்போ அவர் காமடி பண்ணிட்டு இருக்காரு).இவரைப் பற்றி ஒரு பதிவு எழுதி வேறு யாரேனும் எழுதியிருக்கிறார்களா என வலையில் தேடிய போது அருண்மொழிவர்மனின் இந்த பதிவும்,முரளி கண்ணனின் இந்த பதிவும் நான் எழுதி வைத்திருந்தது ஒன்றுமே இல்லையென்று நினைக்க வைத்ததால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்.


எனக்கு பிடித்த இன்னொரு நடிகர் இளைய திலகம் பிரபு,நேற்று டீ.வியில் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் பார்த்தபோது திடிரென அவரைப் பற்றி ஒரு பதிவு போடலாம்னு தோணியதன் உடனடி விளைவு இப்பதிவு.



1982-ல் சங்கிலியில் சிவாஜியுடன் அறிமுகமாகி தொடர்ந்து நீதிபதி, நேர்மை, சாதனை,வெள்ளை ரோஜா என மேலும் சில படங்களிளும் சிவாஜியுடன் நடித்துக்கொண்டிருந்த பிரபு பிறகு கோழிக்கூவுது, சூரக்கோட்டை சிங்கக்குட்டி போன்ற படங்களின் மூலம் தனிக் கதாநாயகன் ஆனார்.(ரெண்டிலுமே சில்க் ஸ்மிதாதான் ஜோடி). இந்த படங்களின் வெற்றியால் (வெற்றி படங்கள்தானே முரளி கண்ணன்) அன்றைய நயந்தாரா, திரிஷாக்களான அம்பிகா,ராதா போன்ற பெரிய நடிகைகளுடன் ஜோடிசேர்ந்து முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.


1987 ல் வெளியான ஆனந்த் படம் இவரை ஒரு நல்ல நடிகராகவும்,அதே படத்தில் இடம்பெற்ற "ஓல ஓலக் குடிசையிலே" பாடல் பிரபுவை ஒரு சிறந்த டான்ஸராகவும் அடையாளப்படுத்தியது."எப்படி இந்த உடம்பை தூக்கிட்டு அசத்தலா ஆடுறான் பாரு" என அப்போதைய சினிமா ரசிகர்களை ஆச்சர்ய படுத்தினார்.ஆனந்த் படத்திற்கு பிறகுதான் இளம் ரசிக,ரசிகைகள் அவருக்கு கிடைத்தார்கள் என்றால் மிகையில்லை.

முன்னணி நாயகனாக வலம் வந்த போதே எந்தவித ஈகோவும் இல்லாமல் அறிமுக நாயகர்கள் முதல் பெரிய நடிகர்கள்வரை எல்லோருடனும் இரண்டு நாயகர்களில் ஒருவராக சேர்ந்து நடித்த பெருமை தமிழ் திரையுலகில் இவரை மட்டுமே சாரும்.அதுவும் குறிப்பாக அப்போதிருந்த முன்னணி நடிகர்களான ரஜினி(குரு சிஷ்யன்,தர்மத்தின் தலைவன்,சந்திரமுகி), கமல்(வெற்றி விழா, வசூல்ராஜா), விஜயகாந்த்(காலையும் நீயே மாலையும் நீயே), சத்யராஜ்(சின்னத்தம்பி பெரியதம்பி,பாலைவன ரோஜாக்கள்,சிவசக்தி), கார்த்திக்(அக்னி நட்சத்திரம்,உரிமை கீதம்,தை பொறந்தாச்சு,குஸ்தி) ஆகிய எல்லோருடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

1986ம் வருடம் வெளிவந்த அறுவடை நாளில் பிரபுவும் அவரது அண்ணன் ராம்குமாரும் நடிப்பில் அசத்திருப்பார்கள்.இந்த படம்தான் பின்னாளில் பல படங்களில் அவர் ஏற்று நடித்த வெகுளித்தனமான கதாநாயக பாணிக்கு பிள்ளையார்சுழி போட்டது எனலாம்."சின்னப் பூவே மெல்ல பேசு","ஒருவர் வாழும் ஆலயம்" போன்ற படங்களில் இவர் கதாநாயகன் இல்லையென்றாலும் அப்படங்களில் இவர் எற்று நடித்த கதாபாத்திரங்களாலேயே அந்த படங்கள் பேசப்பட்டன.

பிறகு 90களில் பிரபு,குஷ்பு,பி.வாசு கூட்டணி "சின்னத்தம்பி"யில் ஆரம்பித்து பல வெற்றிபடங்களை கொடுத்தனர். பி.வாசுவின் படங்களில்தான் பிரபுவின் கண்ணக்குழி சிரிப்பு,திரு திரு முழிப்பு போன்ற பிரபுவின் மேனரிஸங்கள் பிரபலமாகியது எனலாம். மற்ற முன்னணி நடிகர்களைப் போன்றே இவரின் 100வது படமான ராஜகுமாரனும் ஊத்திக்கொண்டது இதே 90களின் நடுவில்தான்.(விதி விலக்கு விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்).


"சின்னத்தம்பி பெரியதம்பி""அரங்கேற்ற வேளை","சின்ன மாப்ளே","வியட்னாம் காலனி" ,"போன்ற படங்களில் இவரின் காமடி கலாட்டாக்கள் நினைத்தாலே சிரிப்பை வரவைக்கக் கூடியவை.அந்த அளவிற்கு காமெடியிலும் தனது திறமையை நிரூபித்தவர்.கெஸ்ட் ரோலில் இவர் நடித்த "அஞ்சலி","பிரியங்கா" ஆகிய படங்களிலும் சிறிது நேரமே வந்தாலும் அந்த படங்களை நினைக்கும்போது இவரின் நினைவு வருவது இவரின் நடிப்பின் திறமைக்குச் சான்று.


1994 - 1995 வருடங்களில் விஜய், அஜித் போன்ற இளம் நடிகர்களின் அறிமுகமான சமயத்தில் இவர்காலத்து நடிகர்களுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய நேரத்தில்தான் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் "டூயட்" வாய்ப்பும்,இயக்குனர் இமயத்தின் "பசும்பொன்னும்" இவருக்கு கிடைத்தது. இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்த பெருமை அவருக்கு கிடைத்தற்காக பெருமைபட்டிருப்பார்.



பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியதும்,"திருப்பதி ஏழுமலை வெங்கடேசா","கந்தா கடம்பா கதிர்வேலா","பட்ஜெட் பத்மநாபன்","பந்தா பரமசிவம்" போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் ஃபீல்ட் அவுட்டான ரோஜா,ரம்பா போன்ற நாயகிகளுடன் சேர்ந்து நடித்தார்.இவற்றில் சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றியும் பெற்றன.

அதன் பிறகு கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் தன் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கத்தொடங்கி "சம்திங் சம்திங்", "தாமிரபரணி","பில்லா","அயன்" என்று பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் பிரபு விளம்பரங்களிலும் அசத்துகிறார்.

கார்த்திக்கும் பிரபு பாணியை கையாண்டிருந்தால் என்னை போன்ற கார்த்திக்கின் ரசிகர்களுக்கு நன்றாக இருந்திருக்கும்.(ச்சே என்ன மாதிரி நடிகன் இப்படி கோமாளி மாதிரி சித்திரிப்பட்டுவிட்டார்
அரசியலில்). மணிரத்னத்தின் "ராவணா"வில் இருவரும் நடித்துவருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.பார்ப்போம் அக்னி நட்சத்திரங்கள் என்ன செய்திருக்கிறார்களென்று.

Wednesday, May 6, 2009

கேபிள் டீவியின் வருகையும் இயல்பை தொலைத்த கிராமங்களும்.

சின்ன பசங்க நாங்க என்னும் இந்த பதிவில் என்னுடைய சிறுபிராயத்தின் விளையாட்டுகளையும்,அந்த விளையாட்டுகளை கிரிக்கெட் எப்படி ஓரங்கட்டியது என்பதை எங்க ரு 20 - 20 என்னும் இந்த பதிவிலும் எழுதியதைத் தொடர்ந்து இன்று கேபிள் டீவியின் வருகையால் தன் சுயத்தை இழந்து கொண்டிருக்கிற எனது கிராமத்தின் இன்றைய நிலையை இப்பதிவில் காண்போம்.

2001ம் வருடம்தான் கேபிள் டீவி இணைப்பு எங்க ஊருக்கு வந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும், ஞாயிற்றுக்கிழமைக்கும் காத்திருந்து ஒளியும் ஒலியும் மற்றும் கருப்பு வெள்ளை திரைப்படமுமே பார்த்தவர்களுக்கு,இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன படங்களும்,புதுப் புது பாட்டுகளும் மொத்தமாய் சிறுசுங்க முதல் பெருசுங்கவரை டீ.வியின் முன் கட்டிப்போட்டது.

குழந்தைகள் அடுத்தவங்க வீட்டில் டீ.வி பார்க்கபோறத விரும்பாத அம்மாக்கள்(சீரியல் பார்க்க குழந்தைகளை சாக்காக வைத்து) உடனேயே தங்கள் வீட்டிற்கும் டீ.வி வாங்க ஆரம்பித்து டீ.வியின் எண்ணிக்கை பெருக பெருக சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.

வழக்கம்போல் சாயங்காலம் கிரிக்கெட் விளையாட கிளம்பினால் "பங்காளி இன்னைக்கு தலைவர் படம் போடுறான், நாளைக்கு விளையாடுவோண்டா" என ஆரம்பித்து வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தனின் தலைவர் படங்களுக்கும் ஒவ்வொருத்தனும் இப்படியே சொல்ல தினமும் கிரிக்கெட் விளையாடியது போக வாரத்திற்கு ஒரு நாள் , இரண்டு நாட்கள் என விளையாடுவது குறைந்தது. நாங்களாவது இன்றைக்கும் அப்பப்போ கிரிக்கெட் விளையாடுகிறோம் ஆனால் எங்களின் ஜூனியர்கள் முற்றிலும் WWE வில்(ரெஸ்லிங்) ஐக்கியமாகியும்,அவர்களின் ஜூனியர்ஸ் ஜெடிக்ஸ் போன்ற சேனல்களில் வரும் சாகச வீரர்களிடமும் ஒன்றிப்போய்கிடக்கிறார்கள்.

ஆற்காட்டார் புண்ணியத்தில் அப்பப்போ வீட்டைவிட்டு வெளியே வரும்போதும்கூட இவர்கள் விளையாடுவது டீவியில் பார்த்த அதே காட்சிகளின் சாகச நாயகர்களாக தங்களை பாவித்துக் கொண்டு "ஆ ஊ" என கத்தியும்,குத்தியும் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கிராமபுறத்து இளைஞர்கள் எப்போதும் உடல் வலிமைமிக்கவர்களாக இயல்பிலேயே இருப்பார்கள்.காரணம் உடல்வலிமையை மறைமுகமாக தந்துகொண்டிருந்த விளையாட்டுகள் கிராமங்களில் நிறைய இருந்ததுதான். இனிவரும் தலைமுறை அப்படியிருக்க வாய்ப்பில்லை,இந்த டீ.வி அவர்களை முழுச் சோம்பேறிகளாக்கி வைத்திருக்கிறது. உட்கார்ந்துகூட பார்ப்பதில்லை, படுத்து கொண்டேதான் டீவி பார்க்கிறார்கள்,விளைவு கொஞ்ச நேரம் நின்னாலே இடுப்புக்கு கையை முட்டுகொடுக்க வேண்டியிருக்கிறது.


நாங்க சின்ன பசங்களா இருந்தபோது இப்படி வீட்டிற்குள்ளே உட்கார்ந்திருந்தால் பெற்றோர்கள் "ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்க வெளிலபோயி கைய கால உதறி நாலுபேரோட சேர்ந்து விளையாடு"என்று கூறுவார்கள்.ஆனால் இப்போ வெயிலில் கிடந்து அலையாதே கருத்து போயிடுவ(விளம்பர குழந்தைகளின் சிவப்பு படுத்தும்பாடு), ஊர்பயலுவலோட சேராம இங்கேயே டீவிய பாரு" என்று பசங்களின் தாய்குலங்களே சொல்கிறார்கள்.இப்படிதான் நகர்கிறது இன்றைய எங்க ஊர்ப் பசங்களின் கோடைவிடுமுறை.

பசங்களின் நிலை இப்படியென்றால் ஒட்டுமொத்த கிராமத்தின் நிலை இன்னும் பரிதாபம்.முன்னெல்லாம் இரவு பத்து மணிவரை ஆள்நடமாட்டம் வீதிகளிள் தெரியும், இப்போது ஆறு மணியாகிவிட்டால் "மேகலா" விற்காகவும், " கஸ்தூரி"க்காகவும் கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள் தங்கமணிகள். தங்கமணிகள் மட்டுமல்ல ரங்கமணிகளும் இப்போது சீரியல் வலையில் சிக்கியிருக்கிறார்கள்.கிராமத்தில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஊரே திரண்டுவிடும்.இப்போது வீட்டிற்கு பக்கத்திலேயே எதாவது அசம்பாவிதம் நடந்தாலும்கூட எதுவுமே தெரியாமல் "என் கடன் டீ.வி பார்ப்பதே" என்றிருக்கிறார்கள்.

இப்போது வீட்டிற்கு வீடு கலைஞர் டீ.வி.வேறு(இது சேனல் இல்லை தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சியைத்தான் இப்படி சொல்றாங்க).கூலி வேலை செய்யும் இடத்தில் எப்போதும் அடுத்தவங்க வீட்டு கதை பேசும் பெண்கள் இப்போது அபியின் கல்யாண பேச்சில் இருக்கிறார்கள்(இது ஒன்னுதான் நல்ல விஷயம்னு நினைக்கிறேன்). எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென்றால்கூட அன்றைய சீரியலின் சூழல்தான் இவர்களின் பயணத்தை போகலாமா? வேண்டாமா என்று நிர்ணயிக்கின்ற அளவு சீரியல் பைத்தியம் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது.இது இப்படியே தொடர்ந்தால் "யாருக்கு எது நடந்தா நமக்கென்ன" என்றிருக்கும் நகரபாணி வாழ்க்கை கிராமங்களிலும் வந்துவிடக்கூடிய சூழல் ரொம்ப தூரத்தில் இல்லை.

எப்படி கிரிக்கெட் எங்க ஊரின் பாரம்பரிய விளையாட்டுகளை மறக்கடிக்கச் செய்ததோ,அதே மாதிரியே இந்த டீ.வியின் மோகம் கிராமங்களின் தனித்துவத்தையும், இயல்பு நிலையையும் தொலையச் செய்து கொண்டிருக்கிறது. பாரதி இப்போதிருந்தால் "என்று தணியும் இந்த டீ.வியின் மோகம்" என்று பாடியிருப்பார்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு எனது கிராமத்தில் சில நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்த மாதிரியான மாற்றங்களைக் கண்டு வேதனையாக இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருப்பது ஒரே ஆறுதலான விஷயம்.

Tuesday, May 5, 2009

எங்க ஊரு 20 - 20

90களின் முதல் பகுதி,அப்போதுதான் எங்கள் ஊரிலிருந்து ஓரிருவர் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்.அதற்கு முன்பு பத்தாவது தாண்டுவதே தம்பிரான் செயல்.ஓரிரு வருடங்களில் கல்லூரி செல்வோரின் எண்ணிக்கை கூடியது.அது B.E ஆக இருந்தாலும் B.A ஆக இருந்தாலும் எங்க கணக்குப்படி காலேஜ் படிப்பு பெரிய படிப்பு. வெளியூருக்கு ரொம்பதூரம் சென்று (25 கிலோமீட்டர் தூரமே உள்ள தஞ்சாவூரில்தான்) படிக்கச் சென்ற காலேஜ்கார அண்ணன்மாருங்கதான் எங்க ஊருக்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினவங்க.

ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாத சிறுவர் கூட்டம் தொடர்ந்து கிட்டி புல்லு,பம்பரம் என்றே விளையாடிக் கொண்டிருந்தோம்.ஆள் பற்றாக் குறையின் காரணமாக அண்ணன்மாருங்க எங்களையும் தங்கள் டீமில் ஐக்கியமாக்கிக் கொண்டார்கள்.எங்களுக்கு ஒன்லி ஃபீல்டிங் மட்டும்தான். ரொம்ப காலமாக பேட்டிங் எங்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருந்தது, பட்டுன்னு சொன்னா எங்களை பந்து பொறுக்கி போட மட்டும் வச்சிருந்தாங்க.

கிரவுண்ட் பக்கமா எதாவது ஃபிகருங்க கிராஸ் பண்ணா(இப்போதான் ஃபிகரு அப்போ அக்காங்க) என்னைய மாதிரி ஒரு சின்ன பையன்கிட்ட பௌலிங் போடச் சொல்லி சிக்ஸ் அடித்து ஹிரோயிசம் காட்டுவார்கள். இதிலென்ன வேடிக்கையின்னா பலதடவை இப்படி சீன் போடும்போது கிளீன் போல்டாகிவிட்டு "பால்போட சொன்னா என்னடா மாங்கா அடிக்கிறியா, இப்படியெல்லாம் போடக்கூடாது இது 'நோ'பால்" என்று அவர்கள் சிக்ஸ் அடிக்கும்வரை எங்கள் பௌலிங்கை தொடரச் செய்வார்கள். சில சமயம் நாங்க பௌலிங் போடும்போது ஒய்டு ஆகிவிட்டால் இரண்டு ரன்கள் சேர்த்துக் கொள்வார்கள்,ஏன்னு கேட்டால் இது பெரிய ஒய்டுடா அதனாலதான்னு சொல்லுவாங்க. நாங்களும் அது நெஜம்னு நம்பி இனி ஒய்டு போட்டாலும் சின்ன ஒய்டா போடுங்கடான்னு சொல்லிகிட்டு விளையாடியிருக்கோம்.

இப்படியாக பந்து பொறுக்கி போடப்போயி கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட் எங்களை சில மாதங்களிலேயே முழுவதும் ஆக்ரமித்தது.அப்புறம் சின்ன பசங்க எல்லோரும் சேர்ந்து தனி டீம் ஃபார்ம் பண்ணி தென்னை மட்டையில் பேட்டும்,தேங்காய் நாரை சுருட்டி பேப்பரில் வைத்து டைட்டாக கட்டி பந்தும் செய்து (இதில் முத்துகுமாருதான் எக்ஸ்பர்ட், மத்தவய்ங்க செய்யும் பந்து ஒரு ஓவர்கூட தாங்காது,ஆனால் அவன் ஒரிஜினல் பந்து ஷேப்பில் அசத்தலாக செய்துவிடுவான்)வயல்வெளிகளில் தனியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய டீமில் பேட்டிங் புடிக்கிற அளவிற்கு முன்னேறினோம்(எப்போதாவது கடைசி ஓவர் முடிய ஒன்னு ரெண்டு பந்து இருக்கும்போது கொடுப்பாங்க).

எங்க ஊரைத் தொடர்ந்து ஆதனக்கோட்டை, கருக்காடிப்பட்டி, வெட்டிக்காடு, சில்லத்தூர் என அருகில் உள்ள எல்லா கிராமத்திலும் கிரிக்கெட் டீம் உருவாகி ஒவ்வொரு சனி ஞாயிறுகளிலும் கருக்காடிப்பட்டி பள்ளி மைதானத்தில் ஃபிரண்ட்லி மேட்ச் விளையாட ஆரம்பித்து அப்படியே ஒவ்வொரு ஊரிலும் டோர்ணமெண்ட் வைக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து கில்லி,பம்பரம்,கோலி குண்டு போன்ற விளையாட்டுகளுக்கு ஆப்பு வைத்தது கிரிக்கெட்.

டோர்ணமெண்டுகள் பெரும்பாலும் கோடைவிடுமுறையில்தான் நடக்கும், இப்படி பக்கத்து ஊரில் நடக்கும் டோர்ணமெண்ட்டுக்கு செல்ல எல்லோர் வீட்டிலும் பெர்மிஷன் கிடைக்காது பிளேயர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் தேங்காய் பறிப்பு, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்,வாழைக்கு கீங்கட்டை வெட்டுதல்,ஆடு மாடு மேய்த்தல் என ஏதாவது ஒரு வேலை இருக்கும்.இந்த மாதிரி வேலை இருக்கும் நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு டேக்கா கொடுத்துவிட்டு விளையாட கிளம்புவது ஒரு சிறுகதைக்குண்டான அத்தனை சுவராஸ்யம் அடங்கியது.

உள்ளூர் போட்டியின்போது லுங்கி கட்டி விளையாடிடுவோம், ஆனால் டோர்ணமெண்ட் செல்லும்போது கண்டிப்பாக பேண்ட்,டீசேர்ட் அணிந்துதான் விளையாட வேண்டும்(நோட்டீஸ்லயே பெரிதாக அச்சடித்துவிடுவார்கள் கண்டிப்பாக லுங்கி அணிந்து விளையாடக் கூடாதென்று).ஒவ்வொருத்தரும் வீட்டிலிருந்து பேண்ட்டை லுங்கிக்குள் ஒளித்து வைத்து மெல்ல வீட்டிலிருந்து வெளியேறி,ஊரிலிருந்து ஒவ்வொருவராக தனித் தனியாக கிளம்பி ஊரின் வெளிப்புறத்தில்தான் ஒன்றுசேர்ந்து செல்வோம்.பிறகு அப்பா பாக்கெட்டிலும், அம்மாவின் அரிசிப்பானை சேகரிப்பிலும் சுட்ட காசுகளை ஒன்று சேர்த்து எண்ட்ரென்ஸ் ஃபீஸ் ரெடியாகிவிடும்.சில வீட்டில் பாட்டியின் சுருக்கு பைகளிலும் கைவைக்கப்படும்.

சின்ன பசங்களாகிய எங்களை, டீமில் இருந்தாலும் இல்லாவிடிலும் பௌண்டரி, சிக்ஸர்,விக்கெட் எடுக்கும் நேரங்களில் கைதட்டுவதற்காக கூடவே அழைத்து செல்வார்கள். சில அண்ணன்மார்கள் வீட்டு வேலைகளில் மாட்டிக்கொண்டு வரமுடியாத சந்தர்ப்பங்களில் சின்ன பசங்களுக்கு அடிக்கும் பெரிய டீமில் விளையாடும் யோகம். பெரும்பாலும் எங்க டீம்தான் முதல் பரிசை தட்டி வருவார்கள்.முதல் பரிசாக சுழற்கோப்பையுடன் வாங்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களை வைத்தே டீமிற்கு தேவையான பேட், கிளவுஸ், ஸ்டம்ப் போன்ற பொருட்களை வாங்கிவிடுவோம்.சரக்கு பார்ட்டியெல்லாம் இப்போதான், அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் பெரும்பாலான பசங்க குடிக்க மாட்டாங்க தவிரவும் ஒயின்ஸ் வசதி அப்போது எங்க ஏரியாவில் இல்லை.

நமக்கு அப்புறமா கிரிக்கெட் டீம் ஃபார்ம் பண்ணவங்கெல்லாம் டோர்ணமெண்ட் வைத்துக் கொண்டிருக்க, நாம் வைக்காமல் இருந்தால் மத்த டீமிடம் மரியாதை இருக்காது என்றெண்ணி எங்க ஊரிலும் டோர்ணமெண்ட் வைப்பதற்காக இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒன்றுகூடி எப்படி செய்யலாம் என விவாதித்தபோது எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது மைதானம், டோர்ணமென்ட் வைக்கும் அளவிற்கு பெரிய மைதானம் எங்க ஊரில் இல்லை,எங்கே வைக்கலாம் என்று பல இடங்களை தேர்வு செய்து இறுதியில் ஏரியின் உள்ளே(கோடையில்தாங்க) வைக்கலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளிலும் துரிதமாக செயல்பட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் டோர்ணமெண்டுக்கான நாளும் குறிக்கப்பட்டது.


பஞ்சாயத்துத் தலைவர்,வாத்தியார் மற்றும் பெரும் மிராசுதார் முறையே முதல் மூன்று பரிசுகளுக்கும் ஸ்பான்சர் எளிதாக கிடைத்த போதும் நோட்டீஸ் அடிப்பதற்கு யாரை கேட்பது என புரியாமல் நின்றபோது வெளிநாடு சென்று வந்த அண்ணாச்சி ஆபத்பாந்தவனாக வந்து நோட்டீஸ் அடிக்க உதவினார்,நோட்டீஸில் அவர் பெயரை கொட்டை எழுத்தில் போடவேண்டுமென்ற கண்டிஷனோடு.ஒலி ஒளி அமைப்பு ஏவிஎம் மணிமாறன் அண்ணன்கிட்ட கடன் சொல்லி ரெண்டு ஸ்பீக்கர்,ரெண்டு மைக்,ஐந்து ட்யூப் லைட் வாங்கி கட்டியாகிவிட்டது. இது ஆஃபிஸ் ரூம் யூசுக்கு,நான்கு மூங்கில் கால் ஊன்றி,பத்து கீற்று போட்டு சுற்றிலும் படுதாவால்(தார்ப்பாய்) சூழப்பட்டதுதான் ஆஃபிஸ் ரூம்.

டோர்ணமெண்ட் அன்று பௌண்டரி லைனில் குச்சி ஊன்றுவது,பிட்ச்சில் சுண்ணாம்பு கோடு போடுவது,வெளியூர் டீமிற்கு தண்ணீர் சப்ளை ஆகிய பொறுப்புகள் சின்ன டீமிற்கு வழங்கப்பட்டது.ரொம்ப சந்தோஷமா எல்லா வேலைகளையும் செய்தோம் காரணம் உள்ளூர் டோர்ணமெண்ட் என்பதால் சின்ன டீமையும் தனியா விளையாட அனுமதி கொடுத்ததுதான்.(அனுமதி கொடுக்காமல் இருந்திருந்தால் சீறும் சிங்கங்கள் 11 என்ற பெயரில் புது டீமை உருவாக்குவதாகத் திட்டம் இருந்தது).

வெளியூர் டீம் ஒவ்வொன்றாக வந்து டோர்ணமெண்ட் களைகட்டத் தொடங்கியது.நேர்முக வர்ணனை சுடர் அண்ணாச்சிதான் வர்ணனையில் பின்னி பெடலெடுப்பார். "சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருக்கை சரவணன், பூஜ்ஜியத்திலேயே தனது ராஜ்ஜியத்தை முடித்துக்கொண்டு பெவிலியன் திரும்புகிறார்" என்ற ரேஞ்சில் பட்டையை கிளப்புவார் வர்ணனையில்.

இப்படியாக ஆரம்பித்த உள்ளூர் டோர்ணமெண்ட் வருடா வருடம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் சீனியர் பிளேயர்ஸ் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருவராக சென்றுவிட சின்ன பசங்களாக இருந்த நாங்க மெயின் பிளேயர்ஸ் ஆனபோது எங்களுக்கு பந்து பொறுக்கிபோட வேண்டிய எங்களது ஜூனியர்ஸை அப்போது எங்க ஊருக்குள் நுழைந்த கேபிள் டீ.வியின் வருகை எப்படி அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கியது என்பதனை நாளைய பதிவில் பார்ப்போம்.


இந்த பதிவின் முதல் பகுதி : சின்ன பசங்க நாங்க

Monday, May 4, 2009

சின்ன பசங்க நாங்க..!

கோடைவிடுமுறை வந்துவிட்டாலே பாட்டு,டான்ஸ்,கராத்தே, கம்ப்யூட்டர் இப்படி எந்த ஒரு சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல வேண்டுமே என்ற பயமில்லாத காலம் எனது பால்யம்(வயசெல்லாம் கேட்கக்கூடாது). விடுமுறையை விடாமல் முறையாக அனுபவித்த அந்த நாட்களின் நினைவுகள் ஆனந்தத்தை மட்டுமே குறையாது கொடுக்கும் ஒரு அட்சயப் பாத்திரம். அதுவும் எனது பால்யம் கிராமத்தில் அமைந்தது இன்னும் சிறப்பு.

விடுமுறை நாட்களில் மட்டும் ஏனோ ஆறுமணிக்கெல்லாம் முழிப்பு (முழிப்பா/விழிப்பா?)வந்துவிடும், எழுந்ததும் முகத்தைக் கூட ஒழுங்காக கழுவாமல் நேராக பள்ளிக்கூடத்திற்கு எதிரே இருக்கும் வேப்பமரத்தின் கீழ் ஊரின் அனைத்து சிறுவர்களும் கூடி சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து கிட்டிப்புல், கோலிக்குண்டு(இதை வைத்து பேந்தாஸ், லாக்கு,மாண்டா இப்படி நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன), புட்டு,பம்பரம்,பிள்ளையார் பந்து, எர்த் குச்சி, ஆபியம் சுதாபியம்(பச்சக் குதிர) என பிரிந்து விளையாட ஆரம்பித்தால் வெயில், பசி, தாகம் எதுவுமே தெரியாமல் நேரம் போய்க்கொண்டிருக்கும்.

அந்த வழியா போற பெருசுங்க "ஓரே அமாவாசையிலே போட்ட குட்டிங்க மாதிரி கிடந்துகிட்டு என்னா சத்தம் போடுறாய்ங்க,மறுபடியும் பள்ளிக்கொடம் தொறக்குற வரைக்கும் இவய்ங்க இம்சை பெரும் இம்சையால்ல இருக்கும்" என்று புலம்பியபடியே செல்வது ஒவ்வொரு கோடையிலும் நடக்கும்.

மதியம் பணிரெண்டு மணிக்குமேல் வெயிலின் உக்கிரத்தை தணித்துக்கொள்ள அப்படியே ஒரு பெரும்படையாக  திரண்டு ஏரிக்கு செல்வோம், எங்க ஏரியாவிலேயே எங்க ஊரு ஏரி கொஞ்சம் பெரியது, கோடையில் பக்கத்து ஊர் குளத்திலெல்லாம் தண்ணீர் வற்றிவிட்டாலும் எங்க ஊர் ஏரியில் ஓர் ஒரத்தில் குட்டை மாதிரி ஒரு சின்ன ஏரியாவில் தண்ணீர் கிடக்கும். நன்கு தெளிந்து கிடக்கும் நீரில் திமுதிமுவென்று இறங்கியதும் முங்கு நீர் போட்டி,ஓந்தி,பேபே என்று நீர் விளையாட்டுகள் ஆரம்பமாகிவிடும்.

விளையாட்டில் ஆழ்ந்திருக்கும்போது எங்கிருந்துதான் வருவாரென்றே தெரியாது முருகையன்,முருகையன் சுருங்கச் சொன்னால் மீசையில்லா ஐயனார்.மனிதர் அப்படி ஒரு பிரமாண்ட உயரம்.அத்தனை பசங்களின் ட்ரௌசரையும் ஒரே அள்ளாக அள்ளி முட்டாக குவித்து கையில் ஒரு பெரிய பூவரசங்குச்சியோடு நின்று கொண்டு "எல்லா பயலும் அப்படியே வாயையும் ,........ பொத்திகிட்டு கரையேரி இங்கே வாங்க" என்று சிம்மக் குரலிடுவார்.(இதுவும் எல்லா கோடையிலும் நடக்கும்).ஒவ்வொருவராக பிறந்த(திறந்த)மேனியாக அவரின் முன் நடுங்கியயபடியே அணிவகுத்து நிற்போம். இரண்டிரண்டு பேராக ஒருத்தர் காதை இன்னொருத்தர் பிடித்துக் கொண்டு,இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என்று சொல்லிக்கொண்டே தோப்புகரணம் போடச் சொல்வார். பிறகு அப்படியே திரும்பி நீங்க குளிச்ச தண்ணிய பாருங்கடா என்பார்,சேச்சே இந்த தண்னியிலயா குளிச்சோங்கிற லெவெலில் சேறும் சகதியுமாக இருக்கும்."இப்படி பண்ணி வெச்சா எப்படிடா நாங்க குளிப்பது" என்று கூறிவிட்டு "ஐந்து நிமிசத்திலே எல்லோரும் ஓடிப்போகணும்" என்று விரட்டிவிடுவார்.

எல்லோரும் அவரவர் ட்ரௌசரையும்,சின்னக்கவுண்டர்(விஜயகாந்த் வித் பம்பரம்),எஜமான்,அமரன் பெயர்கள் அச்சிடப்பட்ட பனியன்களையும் எடுத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடிவந்து,"போய்யா முருகையா, எங்க இப்ப அடி பாக்கலாம்" என்று பின்பக்கத்தை அவருக்கு காட்டி ஒரு குத்து டான்ஸ் போட்டு அவரை வெறுப்பேத்தி தெறித்து ஓடுவோம். திரும்பவும் அடுத்த நாள் அதே நேரம், அதே குட்டை ,அதே சேறும் சகதியும் விடுமுறை முடியும்வரை தொடரும்.

பிறகு சாயங்காலம் கபடி, ஆறுபேர் சந்தன பேர்,ஐஸ் பாய்ஸ்,திருடன் போலீஸ் என மீண்டும் ஒரு பெரிய பட்டியல் விளையாட்டுகள் (இந்த விளையாட்டுகளை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவிடலாம்)இரவு பத்து மணிவரை நீளும். இப்படியாக கழிந்த எனது பால்ய நாட்களின் உண்ணதம் அப்போது கடக்குபோது தெரியவில்லை,இப்போது நினைக்கும்போது இனிக்கிறது.

இப்படி கட்டுதறி இல்லாது பலவிதமான விளையாட்டுகளில் மூழ்கி சிறகடித்துப் பறந்த அந்த சமயத்தில் எப்படி கிரிக்கெட் எங்கள் ஊருக்குள் அதிரடியாய் நுழைந்து அத்தனை விளையாட்டுகளையும் கிளீன் போல்டாக்கி தனியாவர்த்தனம் செய்தது என்பதனையும், எங்களுக்கு அடுத்த தலைமுறையை கேபிள் டீவி எப்படி ஆக்கிரமிப்பு செய்து எனது கிராமத்தின் இயல்புநிலை தொலைந்து போனதென்பதையும் அடுத்த பதிவில் காணலாம்.

இந்த பதிவை யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்ஸ் பகுதியில் தேர்வு செய்ததற்கு நன்றி யூத்ஃபுல் விகடன்...!
இந்த கட்டுரையின் தொடர்ச்சி இங்கே:

எங்க ஊரு 20 - 20

கேபிள் டீவியின் வருகையும் இயல்பை தொலைத்த கிராமங்களும்.

Saturday, May 2, 2009

கானக்குயில் - சுவர்ணலதா..!

1982 ல் வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி யால்  அறிமுகபடுத்தப்பட்டவர். முந்தைய தலைமுறை பாடகிகளில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு எப்படி ஒரு தனித்த அடையாளம் கிடைத்ததோ அது போன்றே கேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான சொர்ண குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ண லதா.

எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 90-ல் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல்தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையில்லை.அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தின் "போவோமா ஊர்கோலத்திற்காக" தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்று தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பல படங்களுக்கு பாடும் வாய்ப்பை பெற்று 90களில் தமிழ் திரையுலகில் கோலாச்சினார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

இளையராஜாவின் அற்புதமான இசையில் இவர் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச","என்னுள்ளே என்னுள்ளே" போன்ற பாடல்களால் இசைப் பிரியர்கள் மட்டுமன்றி சக பின்னணி பாடகர்கள்,பாடகிகளையே தன் குரலால் மதிமயங்கவைத்தவர்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்த்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவரின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடியிருக்கிறார்.1996ம் ஆண்டு வெளியான "கருத்தம்மா" படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருது இவரைத் தேடிவந்தது. ரஹ்மானின் இசையில் சில ஹிந்தி படங்களிலும் பாடியிருக்கிறார்.

இவர் பாடிய மேலும் சில பாடல்கள்:

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட -உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்ம துரை
அடி ராக்கம்மா கையத் தட்டு - தளபதி
கண்ணில் ஆடும் ரோஜா -கேப்டன்
உன்னை எதிர் பார்த்தேன் - வனஜா கிரிஜா
அந்தியில வானம் - சின்னவர்
உசிலம்பட்டி பெண்குட்டி - ஜென்டில் மேன்
முக்காலா முக்காபுல்லா -காதலன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
புது ரோஜா பூத்திருக்கு -கோகுலம்
மல்லியே சின்ன முல்லையே -பாண்டித்துரை
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
அக்கடான்னு நாங்க -இந்தியன்
குச்சி குச்சி ராக்கம்மா - பம்பாய்
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் - பாட்டு வாத்தியார்
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா - உடன் பிறப்பு
சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை
(ரொம்ப நீளமான பட்டியல் இருக்கு)

இசையமைப்பாளர்கள் தேவா,சிற்பி,பரத்வாஜ்,வித்யாசாகர்,ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட்பாடல்களை பாடியிருக்கும் இவரின் குரலை இப்போது வரும் பாடல்களில் கேட்க முடிவதில்லை,சுவர்ணலதாவின் காந்த குரலை மீண்டும் நிறைய பாடல்களில் கேட்க வேண்டும் என்ற ஒரு சாதாரண ரசிகனின் வேண்டுகோளாய் இந்த பதிவு.