Saturday, January 17, 2009

படிக்காதவன் என் பார்வையில்:

7G ரெயின்போ காலனி,பருத்திவீரன் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு எனது தூக்கத்தை கெடுத்த படம் படிக்காதவன். தூக்கம் தொலைந்தது மட்டுமே ஒற்றுமை, மற்றபடி காரணம் வேறு. இப்ப‌ட‌த்தைப் ப‌ற்றி எங்கேயிருந்து ஆரம்பிக்க, ஒன்னுமே புரியல , படத்தோட ஸ்கிரீன்பிளே மாதிரி.

கதையென்று பார்த்தால் எல்லோரும் படித்தவர்களாக இருக்கும் குடும்பத்தில் படிக்காதவன் தனுஷ். வழக்காமான தனுஷ் படத்தின் அப்பாக்கள் போலவே இதிலும் அப்பா(பிரதாப் போத்தன்) திட்டிக் கொண்டே இருக்கிறார். இதனால் எப்படியாவது ஒரு டிகிரி வாங்கிவிட முயல்கிறார் தனுஷ்,முயற்சிகள் தோல்வியில் முடிய நண்பர்களின் தூண்டுதலில் படித்த பெண்ணான தமனாவை லவ் பண்ணுகிறார்.(
இதுவரைக்கும் ஏதோ ஸ்டோரி இருக்கிற மாதிரியே இருக்கும் ஆனால் இல்லை). இதற்கிடையில் தனுஷ் ஒரு வில்லன் கும்பலோடு மோத நேரிடுகிறது, அதனால் அவர்கள் தனுஷை ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்க, தனுஷைத்தான் ஃபாலோ செய்கிறார்கள் என நாம் நினைக்கும் போது திடிரென தமனாவை துரத்துகிறார்கள். அங்கே இன்னொரு புது வில்லன் குரூப் வந்து தமனாவை காப்பாற்றுகிறார்கள். அப்போது தமனாவின் அப்பாவாக வில்லன் சுமன் என்டராகி தமனாவை ஆந்திராவிற்கு அழைத்துச் செல்கிறார். இங்கே நீங்க கவனிக்க வேண்டியது தனுஷை துரத்தியது வேறொரு வில்லன் குரூப் (என்ன மண்ட காயுதா).

பிறகு விவேக்கை(இவரும் ஒரு ரௌடி) அழைத்துக்கொண்டு தனுஷ் ஆந்திரா செல்கிறார். அதன் பின் பொல்லாதவன் படத்தை நினைவூட்டும் ஒரு பிளாஷ்பேக், அதுனுள் ஒரு வில்லன் குரூப்(ஜண்டுபாம் தடவிகிட்டு கண்டினியூ பண்ணுங்க) பிறகு ரன் படத்தின் கிளைமாக்ஸோடு அதே ரன் அதுல் குல்கர்னியோடு மோதி காதலில் வெற்றிபெறுகிறார்.

மேலே சொன்னது எதுவும் புரியவில்லையெனில் படத்தை பற்றிய சரியான விமர்சனத்தை நான் எழுதியிருக்கிறேன் என்றே அர்த்தம்.

தனுஷ் நன்றாகவே நடித்திருக்கிறார். கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு தமனாவிடம்"எஸ்சுஸ்மி ஐ லவ் யூ " என்று ரொமான்ஸ் பண்ணும்போதும், வயது வித்யாசமின்றி இருக்கும் நட்பு வட்டத்தில் அடிக்கும் லூட்டிகளிலும் கலக்கியிருக்கிறார். தனுஷ், உங்க உடலமைப்பை பற்றி எழுதப்படும் வசனங்களும், காட்சிகளும் நிறைய படங்களில் பார்த்து போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு,கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்.

தமனா,அழகாக இருக்குது பாப்பா, படத்தின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது அவ்ளோதான்.

தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தின் இரண்டாம் பாகத்தை இந்த படத்தில் விவேக் செய்திருக்கிறார். பாடிலாங்வேஜ் உட்பட அப்படியே வடிவேலு மாதிரியே செய்திருக்கிறார்.(புதுசா ஏதும் அறிவுரை தோணலையா கருத்து கந்தசாமிக்கு).

மணிஷர்மாவின் இசையில் "காதலும் கடவுளும்" பாடல் நல்ல மெலடி, மற்ற பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கும்படி இல்லை.

அடியாட்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக இருக்கிறது வில்லன்களின் எண்ணிக்கை. யாருக்கு யாரோட என்ன பிரச்சினை ஒன்னும் புரியல. எல்லா அடியாட்களும் யூனிஃபார்ம் அணிந்து ஆளுக்கொரு கொக்கு சுடும் துப்பாக்கியோடு திரிகிறார்கள்(எங்கேயிருந்துதான் திங் பண்றா(னு)ங்களோ).


சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் தரத்தையும் ,தமிழனின் ரசனையையும் வேறு தளத்திற்கு நகர்த்தும் முயற்சியில் இருக்க, இயக்குனர் சுராஜ் நம்ம ரசனையை பக்கத்து மாநிலத்திற்கு(ஆந்திரா) நகர்த்த செய்த முயற்சி இந்த படம்.


மொத்தத்தில் வில்லுவின் வெற்றியை உறுதி செய்ய வந்த படம் இந்த படிக்காதவன்.

Tuesday, January 13, 2009

வில்லு என் பார்வையில்..

விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று பெரிதாய் எதிர்பார்ப்பின்றி சென்றதாலோ என்னவோ படத்தின் முதல் பாதி பரவாயில்லைங்கிற மாதிரி இருந்தது.பிரபுதேவாவை "கேசினோ ராயல்" படம் ரொம்ப கவர்ந்திருக்கும் போல இடைவேளைக்கு சற்று முன்னும்,பின்னும் வரக்கூடிய காட்சிகளில் ராயலின் சாயல் தெரிகிறது.

"கதை"- தந்தையை தேச துரோகி என்று வீண்பழி சுமத்தி கொன்றவர்களை மகன் பந்தாடும் மற்றுமொரு ரிவெண்ஜ் ஸ்டோரி,அதற்காக ஒரு தெலுங்குத் தனமான ஃபிளாஷ்பேக்.ஓரளவுக்கு ஓடக்கூடிய கமர்சியல் விஷயங்கள் இருக்கும் இப்படம் ஊத்திக்கொண்டால் அதற்கு இந்த பிளாஷ்பேக்கே காரணமாய் இருக்கும்.

விஜய் தன்னிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வழக்கமான டான்ஸ், காமெடி, சண்டை என தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்.காதல் காட்சிகளில் நயன்தாராவுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜை சந்திக்கும் இடங்களில் பட்டையை கிளப்பாவிட்டாலும் ஓரளவிற்கு ஏலக்காயையாவது கிளப்பும்படி சுவராஸ்யமாகவே செய்திருக்கிறார்.

நயன்தாரா, விஜய் படங்களில் நாயகிகள் செய்யும் அத்தனை லூஸ் தனங்களையும் செய்கிறார்.சரக்கடித்துவிட்டு ரகளை செய்யும் இடத்தில் உண்மையிலேயே நன்றாக நடித்திருக்கிறார்.பார்ப்பதற்கும் ஒரு சில காட்சிகளை தவிர்த்து அழகாகவே தெரிகிறார்.எப்போது அவிழ்ந்து விழும் என்கிற பயத்தையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது இவரின் மேல் மற்றும் கீழ் ஆடைகள்.

வடிவேலுக்கு இந்த படம் ஒரு பெரிய திருஷ்டி.மொக்கையின் உச்சம். ஆரம்பத்தில் வரும் ஓரிரு காட்சிகளில் கூட லேசாக சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தது.போகப் போக ம்ஹும் ஒன்னும் வேலைக்காகல. வடிவேலுவின் பாணியிலே சொன்னால் ஆரம்பத்திலேயே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சு.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பேக்ரவுண்ட் மியூசிக்கில் சில இடங்களில் பில்லாவை நினைவூட்டுகிறது,ஒரு வேளை படத்தின் சில காட்சிகளும் பில்லாவை போன்றே இருப்பதாலோ என்னவோ.(பில்லாவில் பென்டிரைவ் இங்கே டிஸ்க் தேடும் காட்சிகள்).

படத்தில் பிரகாஷ்ராஜ்,ஆனந்தராஜ் இன்னும் சில அல்லக்கைகளும் வில்லன்களாக நடமாடுகிறார்கள் மேலும் இவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மகன் விஜயை உயிரோடு புதைக்கும் காட்சியில் அப்பா விஜய் புதையுண்ட இடத்திலிருந்து புறப்படும் புயல்,பிரபுதேவா நடனத்தில் மட்டுமே புயல் என்பதை காட்டுகிறது.குருவி ரயில்வே ட்ராக் ஜம்ப்பைவிட கொடுமை, கொன்னு கொலையில விடுரானுங்களேன்னு இருக்கு இந்த காட்சி.(பிரபு தேவா சார் நீங்க கதையை பற்றிதான் யோசிக்கல அட்லீஸ்ட் எடுக்க போறது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமான்னு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்).

ஃபிளாஷ்பேக்கில் வரும் விஜயின் கெட்-அப் "என்ன கொடுமை சார் இது" ரகம்.போக்கிரியின் இறுதில் வாட்ச்மேன் மாதிரி வருவாரே,இதில் ராணுவ உடையில் மற்றபடி படத்தில் காமெடி சீனில் வராத சிரிப்பு சத்தம் இந்த காட்சியில் தியேட்டரில் பரவலாக கேட்டது.

மொத்தத்தில் வில்லு குருவி அளவிற்கு மோசமில்லை.அப்போ பார்க்கலாமான்னு கேட்டால் எவ்வளவோ பார்துட்டோம்ங்கிற மாதிரி இருப்பீர்களேயானால்,"beware of flahback" என்ற எச்சரிக்கையோடு ஒரு முறை பார்க்கலாம் என்பேன்.

டிஸ்கி:பாக்ஸ் டீக்கெட் எடுத்துவிட்டு பஸ்ட் கிளாஸில் உட்கார்ந்து படம் பார்த்தோம்,கூட வந்தவரிடம் 40 ரூபாய் வேஸ்ட்டா கொடுத்திட்டோமேன்னு சொன்னேன்,அவரோ படம் முடிந்த பிறகு , இருனூறு ரூபாயும் வேஸ்டா போச்சேடான்னு சொன்னார்.

Thursday, January 8, 2009

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள்:

கவிஞர் கண்ணதாசன்,வாலி,வைரமுத்து ஆகியோரைப் போன்று திரைப் படங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பாடல்களை எழுதாவிட்டாலும் பல மறக்க முடியாத பாடல்களை எழுதியிருக்கும் சில பாடலாசிரியர்கள் பற்றிய ஒரு சிறு நினைவூட்டல் இப்பதிவு.


கவிஞர் மு.மேத்தா:


புதுக் கவிதைகள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வரக்கூடியவர் கவிஞர் மு.மேத்தா. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் மற்றும் திரைத்துறை என இரண்டு தளங்களில் தனது பங்களிப்பை செய்து வருபவர். இன்றைக்கும் திரை இசை சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பலராலும் விரும்பி கேட்க/பாடப்படுகிற "ராஜ ராஜ சோழன் நான்" பாடலை எழுதியவர்.
ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தில் இவர் எழுதிய"வா வா வா கண்ணா வா" பாடலில் இந்த வரிதான் சிறப்பானது என்று சொல்லமுடியாத அளவிற்கு பாடலில் ஆரம்ப வரியில் இருந்து கடைசி வரிவரை கவிநயத்தோடு காதலைச் சொல்லி அதனுள் மதநல்லினக்கம் பற்றிய ஆழமான கருத்தையும் கூறியிருப்பார்.இவர் திரைப்படங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களையே எழுதியிருக்கிறார் அதற்கு என்ன காரணமென அவரே கூறியிருக்கார், இங்கே சொடுக்கவும்.
இவரின் சில பாடல்கள்:


கற்பூர பொம்மை ஒன்று-கேளடி கண்மணி
என் மன வானில் சிறகை விரிக்கும்-காசி
பெண்மானே சங்கீதம் பாடவா- நான் சிகப்பு மனிதன்
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ - இதயக்கோயில்
மயில் போல பொண்ணு ஒன்னு- பாரதி



புலவர் புலமைபித்தன்:
கம்யூனிஸ்ட் சிந்தனைவாதியான இவரின் திரைப்பாடல்களின் வரிகளில் இலக்கியத் தரமும்,புரட்சி சிந்தனைகளும் ஓங்கி நிற்கும்.உன்னால் முடியும் தம்பி படத்திற்காக இவர் எழுதிய
"புஞ்சையுண்டு நஞ்சையுண்டு" பாடலில்
"வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது"
என்ற வரிகளில் சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வை சாடியிருப்பார்.குழந்தை வளர்ப்பில் ஒரு தாயின் பங்கு எவ்வளவு முக்கியமென்பதை எடுத்துரைக்க இன்றளவும் மேற்கோள் காட்டப்படும் ."எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரும் இவரே.
இவரின் சில பாடல்கள்:
சாதிமல்லி பூச்சரமே -அழகன்
தத்திதோம் வித்தைகள் கற்றிட-அழகன்
அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடும்போது நான் தென்றல் காற்று-நேற்று இன்று நாளை.
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு :


கவிஞர் முத்துலிங்கம்:
சிறந்த திரையிசைப் பாடலுக்கான தமிழக அரசின் விருதை இருமுறை பெற்ற இவருக்கு அரசவை கவிஞராக இருந்த சிறப்பும் உண்டு.தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியான இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப் பாடல்களை எழுதியுள்ளார்.
இவரின் சில பாடல்கள்:
இதழில் கதை எழுதும் நேரமிது-உன்னால் முடியும் தம்பி
மாஞ்சோலை கிளிதானோ-கிழக்கே போகும் ரயில்
சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு
பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
கூட்டத்திலே கோயில் புறா- இதய கோயில்
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு


கவிஞர் பிறைசூடன்:
எண்பதுகளின் இறுதியிலும்,தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார். 

”காவேரி ஆற்றின் மீனிங்கே 
காதோடு மோதும் ஆனந்தம்” 

கை வீசிடும் தென்றல்  கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ

போன்ற இவரின் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் பிறைசூடன் இன்னும் பெரிதாய் கொண்டாடப்பட வேண்டியவர் என்று தோன்றும். சற்றே பிடிவாதக் குணம்,திமிர்த்தனமான பேச்சு என்பதை இயல்பாய் உடையவர் என்பது இவரின் தொலைக்காட்சி பேட்டிகள் சிலவற்றை பார்த்ததிலிருந்து அறிய முடிந்தது. நம் தமிழ் திரைச்சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து போகக்கூடிய இயல்பில் இருந்திருந்தால் இன்னும்கூட அதிக எண்ணிக்கையிலான பாடல்களை இவரிடமிருந்து கிடைத்திருக்குமோ என்ற எண்ணமும் எனக்குண்டு.

மீனம்மா மீனம்மா-ராஜாதி ராஜா 

திங்கள்தான் தென்றல்தான் - கேளடி கண்மணி 
கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே 
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட  - உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்
சோலை பசுங்கிளியே - என் ராசாவின் மனசில
மணிக்குயில் இசைக்குதடி - தங்க மனசுக்காரன்
நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
உயிரே உயிரே இது தெய்வீக - எல்லாமே என் காதலி
ரசிகா ரசிகா - ஸ்டார்
போர்க்களம் இங்கே - தெனாலி



இவர்களை தவிர "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு","பாட்டு தலைவன் பாடினான்" போன்ற பாடல்களை எழுதிய ந.காமராசன், "மலையோரம் மயிலே",
"எங்கிட்ட மோதாதே","குயில் பாட்டு ஓ வந்ததென்ன" போன்ற பாடல்களை எழுதிய கவிஞர் பொன்னடியான், "கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு", "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்","எங்கெங்கு நீ சென்ற போதும்"போன்ற பாடல்களை எழுதிய கவிஞர் காமகோடியான்,பஞ்சு அருணாச்சலம் போன்ற இன்னும் சில கவிஞர்களும் பல மறக்க முடியாத பாடல்களை தந்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரின் படங்களுக்கு பெரும்பாலும் அவரே பாடல்களை எழுதியிருப்பார்.இயக்குனர் கங்கை அமரனும் "சிந்திய வெண்மணி", "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே" போன்ற நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார்.இயக்குனர் ஆபாவானனும் இணைந்த கைகள்,செந்தூர பூவே, ஊமை விழிகள் போன்ற தனது படங்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதியிருக்கிறார்.

"முத்தமிழே முத்தமிழே","செம்பூவே பூவே உன் மேகம் நான்" என அசத்தல் பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி மற்றும் அவரின் வழித் தோன்றல்களான ந.முத்துகுமார்,பழனிபாரதி,பா.விஜய்,யுகபாரதி,சினேகன் என இன்றைய திரையுலகில் உலாவரும் சில கவிஞர்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


இங்கே குறிப்பிட்டிருக்கும் கவிஞர்களை பற்றி எனக்குத் தெரிந்த/திரட்ட முடிந்த வரையில் தகவல்களை கொடுத்திருக்கிறேன்.இவர்களை பற்றிய உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
டிஸ்கி 1:
டி.ராஜேந்தரின் பாடல்களைப் பற்றி தனி பதிவிடயிருப்பதால் இங்கே குறிப்பிடவில்லை.
டிஸ்கி 2:
பொதுவாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் திரைப் பாடல்கள் ஒலிபரப்பப்படும் போது படத்தின் பெயரும்,இசையமைப்பாளர் மற்றும் பாடியவர்கள் பெயரை மட்டுமே அறிவித்துவிட்டு பாடலாசிரியரை குறிப்பிடுவதில்லை அதை மனதில் கொண்டே இப்பதிவை எழுதினேன்.

Thursday, January 1, 2009

குட்டி கதைகள்

1.Me.. the first (தலைப்பு உபயம்-கே.ரவிஷங்கர்)

ரொம்ப படபடப்போடு இருந்தான் அருண்.நேரம் நெருங்க நெருங்க இதயத் துடிப்பு தாறுமாறாய் எகிறியது.

இன்னும் ஒரு சில நொடிகளுக்குள் சிக்னல் கிடைத்ததும் கையில் உள்ள பொருளை ராகுலிடம் எவ்வளவு விரைவாக ஒப்படைக்க முடியுமோ அவ்வளவு வேகமாக கொடுக்க வேண்டும்.

"சிக்னல் கிடைத்ததும் தாமதிக்காம கிளம்பிடு அருண், உனக்காக ராகுல் ரெடியா இருப்பான் எந்த சந்தர்ப்பத்திலேயும் பின்னால யாரும் வறாங்களான்னு திரும்பி திரும்பி பார்க்காம போயிட்டே இரு,எதாவது சொதப்பின நாம இத்தனை வருட எடுத்த பயிற்சி,போட்ட திட்டம் எல்லாத்துக்கும் அர்த்தம் இல்லாம போயிடும்" என்று பாஸ் சொன்னதை மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தபோதே துப்பாக்கி சுடும் சத்தம்.

சத்தம் கேட்ட நொடியில் கையில் மரக்குழலோடு ராகுலை நோக்கி தனக்கான ட்ராக்கில் ஓடினான் அருண் அந்த மாநிலம் தழுவிய 4x100 ரலே ஓட்டத்தில்,நினைத்தது போலவே முதலிடம் பெற்ற தனது மாணவர்களை ஆரத்தழுவி கொண்டார் அவர்களுடைய கோச் பாஸ் என்கிற பாஸ்கர்.

2.வேலிதாண்டி விளையாடு:(தலைப்பு உபயம்-கே.ரவிஷங்கர்)

புறநகர் பகுதியில் இருக்கும் அந்த வீட்டின் வெளிப்புற கேட்டில் பெரிதாக பூட்டு தொங்கியது.காம்பவுன்ட் சுவர் அருகே நின்று சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான் மணி.ஆள் நடமாட்டம் இல்லை.

"டேய் சீக்கிரண்டா"சொன்னான் அவன் கூட்டாளியான கதிர்.

"கதிரு நல்லா தெரியுமாடா,உள்ள யாரும் இல்லைன்னு"

"தெரியுண்டா,மூனு நாளைக்கு முன்னால எல்லோரும் எங்கேயோ கிளம்பி போனத நான் பார்த்தேன்,இன்னும் வரல"

"வாட்ச்மேன்?"

"இந்த வீட்டுக்கு வாட்ச்மேனே இல்லடா,சும்மா பேசிட்டே இருக்காம யாராவது வரதுக்குள்ள சுவரேறி குதிடா"

"சரிடா"என்று சொன்னபடியே ஒரே ஜம்பில் காம்பவுண்டில் ஏறி உள்ளே குதித்து, பரபரப்பாய் தேடினான், அந்த காம்பவுண்டுக்குள் தவறி விழுந்த கிரிக்கெட் பந்தை.

3. லஞ்சம் வாங்காத போலீஸ் ( தலைப்பு உபயம்-சின்ன அம்மிணி)

வாகனங்கள் அடர்த்தியாய் செல்லும் அந்த ஹைவேயில் ஜான்சனின் பைக் அசுர வேகத்தில் போய்கொண்டிருந்தது,பைக் சிட்டி லிமிட்டுக்குள் நுழைந்தும் அதே வேகம்.

பாதசாரிகள், மின்னல் வேகத்தில் கடந்த ஜான்சனை மிரட்சியோடு பார்த்தனர்.
வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கமால் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடியே போய்க்கொண்டிருந்த ஜான்சன் அடுத்து எதிர்பட்ட சிக்னலில் எரிந்த சிவப்பு விளக்கையும் மதிக்காமல் போனதைக் கண்ட ட்ராபிக் போலிஸ் அவனை விரட்டத் தொடங்கினார்.

கொஞ்சமும் சட்டையே செய்யாமல் போய்கொண்டே இருந்த ஜான்சனை போலிஸ் மிகவும் நெருங்கிவிட, இனியும் தாமதம் வேண்டாமென அவசரமாய் அழுத்தினான் விசைப் பலகையில் உதைப்பதற்கான கட்டளை பொத்தானை, கம்ப்யூட்டரில் ரோட் ரேஸ் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஜான்சன்.

4.அ(ட)ப்பாவி ( தலைப்பு உபயம்-நிலோஃபர் அன்பரசு)
பொங்கல் சமயமென்பாதால் பஸ்ஸில் சரியான கூட்டம்.அனேக பயணிகளின் கையில் பர்சேஸ் செய்த பொருட்கள்.

"பையெல்லாம் பத்திரமா வெச்சுகோங்க" கண்டக்டர் அடிக்கடி எச்சரித்தபடியே இருந்தார்.

முத்து திருதிருவென முழித்துக்கொண்டே பஸ்ஸில் இருக்கும் எல்லோரையும் நோட்டமிட்டபடி இருந்தான்.

பஸ்ஸில் ஆங்காங்கே திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்துகொண்டே திரும்பியவன் அந்த இளம்பெண் தன்னை கவனிப்பதை பார்த்தான்.தன்னைத்தான் பார்க்கிறாளா என்பதை அறிய வேறுபக்கமாய் முகத்தைத் திருப்பி சிறிதுநேரம் கழித்து மீண்டும் அவளைப் பார்த்தான்,இப்போது அவள் அருகே அமர்ந்திருக்கும் அவளது கணவனிடம் இவனைக் காட்டி ஏதோ காதுக்குள் கிசுகிசுத்தாள்.

"மாட்டினா தனது நிலை என்னவாகும்"என நினைத்தவன் வேகமாக நகர்ந்து படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டான்.


இப்போது பஸ்ஸில் உள்ள மேலும் சிலர் இவனை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாய் உணர்ந்து அடுத்து வந்த ஸ்டாப்பில் பஸ் நிற்பதற்கு முன்னமே குதித்து"அப்பாடா" என பெரு மூச்சு விட்டான், பர்ஸை தொலைத்துவிட்டு டிக்கெட் வாங்க கூட காசு இல்லாமல் வித் அவுட்டில் வந்ததால் பயந்த முத்து.


கொசுறு:இங்கே இருக்கும் இந்த நான்கு குட்டி கதைகளுக்கும் என்ன தலைப்பு வைக்கலாமென்று சொல்லிட்டு போங்க நண்பர்களே.பொருத்தமான தலைப்பிற்கு பரிசெல்லாம் கிடையாது,ஆனால் நீங்கள் கொடுக்கும் தலைப்பையே சூட்டி அருகே தலைப்பு உபயம் என உங்கள் பெயரை வலைவெட்டில்(கல்லில் எழுதினா கல்வெட்டு,வலையில் எழுதினா வலைவெட்டுதானே ஹி ஹி) பொறித்துவிடுகிறேன்.அப்படியே கதையை பற்றிய உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க மக்கா.


கொசுறு புதுசு:தலைப்பு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.