Wednesday, June 16, 2010

சின்னு .

"இப்புடியேத் தூணுக்குத் தொணையா குந்திக்க,ஒரு ரெண்டாயிர்ருவாப் பொறட்டறதுக்குத் துப்பு இல்ல,நீயும் ஒரு ஆம்பள" என்று தனது கணவன் சங்கரனைக் காலையிலேயே அர்ச்சனைச் செய்துக்கொண்டிருந்தாள் விஜயா.

"நிறுத்துடி,காலையிலேயே ஒ ராமாயணத்தை ஆரம்பிக்காத நா என்ன சும்மாவா இருக்கே நாலு இடத்திலே சொல்லிவச்சிருக்கேன் பாப்போம்"

"ஆமா கிழிச்ச இன்னேரம் ஒ அக்கா தங்கச்சி வூட்டு தேவைன்னா என்னா பரபரப்ப, இன்னும் நாலு நாளுதா கெடக்கு ஏ அண்ண புள்ளயக் காதுகுத்து அதுக்குள்ள எதுனா தோது பண்ணல அப்பற நா மனுஷியாவே இருக்க மாட்டே"

ஒரு வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிக்கிட்டு இருக்கு, சங்கரனும் பட்டாளத்தார் வீடு, கிட்டங்கிக்கார வீடு, காரவீட்டு அய்யாத்தொரன்னு பலபேருகிட்டக் கேட்டுப் பாத்துட்டான் ஒன்னும் வேலைக்காகல.

விஜயா இன்னும் ஏதோத் திட்டிக்கிட்டே இருக்குறாங்றது வீட்டுக்குள்ள பாத்திரங்கள் உருளும் சத்தத்திலேயேத் தெரிந்தது, இனியும் இங்கே உட்கார்ந்திருந்தா இருக்கிற மானத்தையும் ஏலம் போடுவான்னு நினைத்து கொடியில் கிடந்தக் காசித்துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு கூரையில் சொருகி வைத்த கணேஷ் பீடி கட்டில் பீடி ஒன்றையெடுத்துப் பத்த வைத்தபடியேக் கட்டிய லுங்கியோடு வெளியேக் கிளம்பினான் சங்கரன்.

சங்கரன் நல்ல பாட்டாளி,விவசாய சம்பந்தமான அத்தனை வேலைகளையும் செய்வான். வேலையில் படுசுத்தம், வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாம உழைப்பான்.ஆனா சம்பாதிக்கிற காசுல சாராயத்துக்கும், பீடிக்குமே பாதியைச் செலவழிச்சிடுவான்.


சங்கரனுக்கு சொத்துன்னு பார்த்தா நாலு செண்ட் இடமும், ஒரு சின்னக் குடிசையும், நாலு பசுமாடுகளும்தான்.மாடுகளை கவனித்துக் கொள்வது சங்கரனின் அம்மா சொர்ணம். சொர்ணத்திற்கு அந்த மாடுகள்தான் உசுரு.

வீட்டிலிருந்துக் கிளம்பிய சங்கரன் கறம்பக்குடியான் டீக்கடையில் நுழைந்தான். எட்டுக்கு ஆறு அளவில் மூனுபக்கம் களிமண்ணால் எழுப்பப்பட்டக் கட்டைச் சுவரும், சிமெண்ட்டால் பூசப்பட்ட ஒரு அடுப்பு மேடையும், கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் "காதல் பரிசு" ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக இருப்பதுதான் கறம்பக்குடியான் டீக்கடை.

உள்ளூர் பெரியசாமி மக ஓடிப் போனதிலிருந்து உலக அரசியல் வரை கறம்பக்குடியானுக்கு அத்துப்படி. டீ குடிக்க வர்ற பெருசுங்க கறம்பக்குடியான் பேசுறத, கறம்பக்குடியான் பொண்டாட்டி,சானம் தெளிச்சு மெழுகி பச்சையா வச்சிருகிற வாசலை "பொளிச் பொளிச்"சுன்னு வெத்லாக்கு எச்சியைத் துப்பி சிவப்பாக்கிக்கொண்டேக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

"அண்ணே ஒரு டீ" என்ற சங்கரனிடம் டீயை நீட்டியக் கறம்பக்குடியான், "சங்கரா, ஒன்னயப் பாத்தா வீட்டுக்கு வரச் சொல்லுன்னு பச்சத்துண்டுக்காரு சொன்னாரப்பா" என்றார்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி பச்சத்துண்டுக்காரிடம் பணம் கேட்டிருந்தது ஞாபகம்வர அவசர அவசரமாகக் கறம்பக்குடியானின் சக்கரத் தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு "கணக்குல வச்சுக்கண்ணே" என்று சொல்லியபடியே பச்சத்துண்டுக்காரர் வீட்டிற்குச் சென்றான்.

பச்சத்துண்டுக்காரர் எப்போதுமேத் தோளில் பச்சைக் கலர் சால்வையை அணிந்தபடியேதான் இருப்பார். ஊரில் எல்லோரும் காசித்துண்டோடு இருக்கையில் குஞ்சமெல்லாம் வச்ச சால்வையை அணிந்து செல்வதைப் பெரிய கௌரவமாக நினைப்பார். மெட்ராஸ்ல வேல பாக்குற அவரு மகன் சுரேசு வந்தா அந்தத் துண்டை போட்டுக்க மாட்டாரு. அவனுக்கு அது புடிக்காது. "யேம்ப்பா இத போட்டுக்கிட்டு எம் மானத்த வாங்குற ஃபிரண்ஸ்ஸெல்லாம் கிண்டல் பண்றாங்க" என்பான். சுரேசுக்குத் தெரியாது ஊருக்குள்ள நிறைய பேர் பச்சத்துண்டுக்காரு மாதிரி ஒரு சால்வ வாங்கணும்னு பெரிய லட்சியத்தோட இருக்கிறது.

"வாய்யா சங்கரா,காசு கேட்டிருந்தில்ல,ஒரு ஆயிர்ரூவா சாயங்காலமா வாங்கிக்க" என்றவர் கூடவே " கொஞ்சம் நெல்லு இருக்குது டி.என்.சியில போட்டுட்டு வந்திடு" என்றார். ஆத்திர அவசரத்திற்கு ஆயிரமோ ஐநூறோ பச்சத்துண்டுகாரருதான் கொடுத்து உதவுவாரு அதனால இப்படிச் சின்ன சின்ன வேலைகளும் அவருக்கு அப்பப்போ ஓசியாச் செய்ய வேண்டியிருக்கும்.

ஆயிர்ரூவாப் பொறட்டியாச்சு இன்னும் ஆயிரந்தான் எப்படியாவது தேத்திடலாம்னு மனதிலேயெ நினைத்தவன், சொன்ன வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.

"என்னாச்சு" என்றாள் விஜயா.

"ஆயிர்ருவா சாயங்காலமாப் பச்சத்துண்டுக்காரு கொடுக்குறேன்னிருக்காரு"

"ஆயிரம் ஓவாயா,அத வச்சு என்னாத்தப் பண்றது. ஏற்கனவே ஏ அண்ணிக்காரி சாட பேசுறா, நீ சபையில ஏ மானத்த வாங்காம விடமாட்ட போலிருக்கு" என்று மறுபடியும் ஆரம்பித்தவளிடம்,

"ஏண்டி எழவெடுத்தவளே, எந்தலய அடமானம் வச்சாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணிர்றேன்,செத்த நொய் நொய்யிங்காம வவுத்த பசிக்குது சோத்தப் போடுறியா" என்று சங்கரன் கோபமாய் சீறியபோது,

"ம்ம்ம்ம்....மா"அலறியது பசுமாடு.

"யம்மோவ்,சின்னு கத்துது பாரு அதுக்கு ரெண்டு எரயெடுத்துப் போடு"என்று தன் தாய் சொர்ணத்திடம் கூறினான் சங்கரன்.

"ம்ம்ம் சின்ன்ன்னு" என்று அழுத்தி இழுத்த விஜயா,"ஏய்யா இந்தக் கிழட்டு மாட்ட எதுக்கு இன்னமும் வச்சுக்கிட்டு இனிமேல் அது கன்னு ஈனப் போறதில்ல எதுக்கு தீனிக்குத் தெண்டமா கெடக்கு,பேசாம அத வித்துடலாம். நீயும் யார்கிட்டயும் காசுக்காகக் கையகட்டி நிக்கவேண்டாம்"என்றாள். மேலும் "மாட்டுயாவாரி கோயிந்தன வரச்சொல்லி சட்டுப்புட்டுன்னு தள்ளிவுட்ற வழியப் பாரு" என்றாள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. பெத்தப் புள்ளயாட்டமா வளத்த மாட்ட அடிமாட்டுக்கு விக்கச் சொல்றாளே என எண்ணிக்கொண்டே சங்கரன் என்ன சொல்ல போறானோன்னு ஏற்கனவே தட்டி முடித்த ராட்டிக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் மெதுவா தட்டியவாறே காதைத் தீட்டினாள்.

ஒரு வாரமா பணத்துக்காகக் கிடந்து அலைந்ததை நினைத்துப் பார்த்த சங்கரன் விஜயாவின் யோசனைக்கு சரியென்று தலையாட்டினான்.

அன்னிக்கி ராத்திரி முச்சூடும் சொர்ணத்தாலத் தூங்க முடியல, பதினஞ்சு வருசத்துக்கு முந்தி சின்னுவை ஈன்ற மூனாவது நாளே அதன் தாய், பாம்பு கடித்து இறந்து போக, சொர்ணந்தான் புட்டி பால் கொடுத்து சின்னு என்று பேர் வைத்து புள்ள மாதிரி வளர்த்து வந்தாள். சொர்ணம் கிணத்துக்குத் தண்ணி எடுக்கப் போறப்பவெல்லாம் கூடவே சின்னுவும் ஒவ்வொரு நடைக்கும் சொர்ணத்தோடவே போய் வந்துக் கொண்டிருக்கும். தண்ணியெடுக்க வரும் மற்ற பொம்பளைங்க "என்ன சொர்ணத்தக்கா ஒம்மவ ஒன்னிய விட்டு பிரியமாட்டாளா" என்று கிண்டலடிப்பார்கள். அப்போவெல்லாம் "ஆமாண்டி சொன்னாலுஞ் சொல்லாட்டியும் எம்மவதான்" என்று கூறியபடியே சின்னுவின் முகத்தை வருடி திருஷ்டி முறிப்பாள்.

சின்னு முதல் கன்றை ஈன்ற போது நல்லபடியாகக் கன்றை ஈன்றுவிட்டால் பாலத்தளி செல்லியம்மனுக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக் கொண்டது, சின்னுவின் பால் காசில் தன் மகள் செல்வியை கட்டிக் கொடுத்தது, ஒரு முறை சங்கரன் குடித்துவிட்டு வந்தபோது சொர்ணம் அவனை ஏதோத் திட்டிவிட,சங்கரன் கோபத்தில் சொர்ணத்தைக் கீழேத் தள்ளிவிட்டபோது பக்கத்தில் நின்ற சின்னு சங்கரனை ஆக்ரோஷமாக முட்டியது என ஒன்னு ஒன்னா நினைவுக்கு வந்து அவளைத் தூங்கவிடாமல் செய்தது. பாதி ராத்திரியில் எழுந்துக் கொட்டடியில் கட்டிக்கிடந்த சின்னுவின் அருகில் போய் சின்னுவின் தாடையை மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தாள்,அவளின் இடுக்கியக் கண்ணில் கண்ணீர் வழிந்துக்கொண்டேயிருந்தது.

காலையிலேயே மாட்டுயாவாரி கோயிந்தன் வந்து நின்னதை எதிர்பார்க்காத சங்கரன், "என்னய்யா கோயிந்தா, நானே ஒன்னய பாக்கனும்னுட்டு இருந்தேன்,நீயே வந்து நிக்குற"
என்றான்.

"மாடு நிக்குதாம்ல,அதா பாத்துட்டு போலாம்னு வந்தேன்" என்ற கோவிந்தன் அதே ஊரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி, கேரளாவிற்கு மாடுகளை வாங்கி அனுப்புவதுதான் அவனுக்குத் தொழில்.

"கொப்ப மவளே என்னா வேகமா வேலப் பாத்திருக்கா" என்று விஜயாவை மனசுக்குள்ளேயேத் திட்டிக்கொண்டு, சின்னு கட்டிக் கிடக்கும் கொட்டடிக்கு கோவிந்தனை அழைத்துச் சென்றான் சங்கரன்.

படுத்துக்கிடந்த சின்னுவின் முதுகில் கோவிந்தன் தட்டியதும்,சோம்பல் முறித்தபடி எழுந்து நின்ற சின்னுவைச் சுற்றி வந்துப் பார்த்த கோவிந்தன், "டங்கரா இத ரெண்டு வருடத்துக்கு முன்னாடியே வித்துருக்கணுமப்பா" என்றான். கோவிந்தனுக்கு ’ச’ வரிசை உச்சரிக்க வராது, 'ச'வுக்கு பதில 'ட' சவுண்ட்தான் வரும். இதில என்ன கொடுமைன்னா அவன் பொண்டாட்டி பேரு சரசு. கல்யாணமான புதுசுல இவன் "டரடு டரடு" சொன்னதக் கேட்டு மெரண்டுபோன சரசு தன் பேரையே இவனுக்காக ராணின்னு மாத்திக்கிட்டா.

"டங்கரா மாட்டுல வெறுந்தோலுதான் இருக்கு" என்று தன் யாவார புத்தியோடப் பேசிக்கிட்டே"என்ன வெல சொல்ற?" என்றான்.

"நீயே சொல்லுய்யா,என்ன கொடுக்கலாம்"

"இல்லப்பா ஒனக்கு ஒரு கணக்கு இருக்குமுல்ல"

"சரி ரெண்டாயிரத்தைனூறு கொடுத்துட்டு ஓட்டிக்க"

"என்ன நக்கலா பண்ற, ஆயிரத்தைனூறுதான் எங்கணிப்பு. அதுக்கு மேல இதில ஒன்னுமில்ல"

"யோவ் ஒ மாட்டுயாவாரி புத்தியக் காட்டாம உள்ளூருகார மாதிரி பேசு, கொஞ்சம் பாத்து சொல்லுய்யா"

"டரி உனக்கு வேண்டா எனக்கு வேண்டா, ஆயிரத்தி எண்ணூறு இதுக்குமேல பிடிறாதே" என்று கூறிக்கொண்டே சங்கரன் கையில் நூறு ரூபாய் அட்வான்ஸையும் திணித்துவிட்டு இரண்டு நாள் கழித்து மாட்டை ஓட்டிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

சங்கரன் வாங்கிய அட்வான்ஸைப் பார்த்தும் விஜயாவும்,சொர்ணமும் எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்.

அடுத்த ரெண்டு நாளும் சொர்ணத்தால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இதற்கு முன் எத்தனையோ மாடுகளை விற்றிருக்கிறாள்,ஆனால் சின்னு விஷயத்தில் மட்டும் அவளால் ஏதோ மாடுதானேன்னு இருக்க முடியவில்லை. வழக்கம் போல் மாடு மேய்க்கப் போனவளின் அருகிலேயே நின்று மேய்ந்து கொண்டிருந்த சின்னு, சொர்ணத்தின் கையை முகர்ந்துப் பார்த்தது, எப்போதும் எதாவது தீனி கொறித்துக்கொண்டே இருக்கும் சொர்ணம் சின்னுவுக்கும் ஊட்டிவிடுவது வழக்கம். இன்றைக்கும் அந்த நினைப்பில் கையை முகர்ந்துப் பார்த்த சின்னுவை,"சனியன போ அங்கிட்டு " என்று கையில் வைத்திருந்தக் குச்சியால் அடித்து விரட்டி தன் ஆற்றாமையை சின்னுவிடம் காட்டினாள்.இதை எதிர்பாராத சின்னு சற்று மிரண்டு சிறிது ஓடித் திரும்பி சொர்ணத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

இரண்டு நாள் கழித்து அந்தப் பகுதியில் வாங்கிய நிறைய மாடுகளை லாரியில் ஏற்றியபடியே வந்து இறங்கிய கோவிந்தனையும், லாரியில் விழிபிதுங்கி நிற்கும் மாடுகளையும் பார்த்த சொர்ணத்திற்கு சின்னுவை நினைத்துத் துக்கம் தொண்டையை அடைத்தது.

லாரியைவிட்டு இறங்கி வந்த கோவிந்தன் சங்கரனிடம்,"இந்தாப்பா மீதி பணம் டரியா இருக்கான்னு பாத்துக்க, அப்படியே மாட்டையும் கயிறு மாத்தி புடிட்டுக் கொடு" என்றான்.

"கோயிந்தா, ரெண்டு நாளா மனசேச் சரியில்லப்பா, இந்த மாட்ட பெத்தப் புள்ளயாட்டமா வளத்துட்டோம், அதப் போயி அறுப்புக்குக் கொடுக்க மனசு ஒப்பல, சாவுற வரைக்கும் அது இங்கனயே கெடந்துட்டு போகட்டும், எம் பொண்டாட்டிதான் ஏதுனா திட்டுவா அவ என்ன புதுசாவா திட்டப்போறா. இந்தா நீ கொடுத்த அட்வான்ஸ், கோச்சுக்காதப்பா" என்றபடியே சங்கரன் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்ததைப் பார்த்தச் சொர்ணம் சின்னுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு " எம் மக்க்க்...கா" என்று விம்மி வெடித்து அழத் தொடங்கினாள்.

Tuesday, June 1, 2010

நொறுக்குத் தீனி

ச‌ராச‌ரிக்கும் குறைவான‌ உய‌ர‌த்தில் இருக்கும் ந‌ண்ப‌ரொருவ‌ர் த‌ன‌து ஓங்கிவ‌ளர்ந்த‌ ந‌ண்ப‌னை மூன்றாவ‌து ந‌ண்ப‌ரிட‌ம் அறிமுக‌ம் செய்த‌போது உய‌ர‌த்தை வைத்து அவ‌ர்க‌ளுக்குள் ந‌ட‌ந்த‌ உரையாட‌ல்.

குட்டை ந‌ண்ப‌ர்:கேட்க‌ ஆளில்ல‌ அதான் அவ‌ன் பாட்டுக்கு வ‌ள‌ர்ந்துட்டான் .

நெட்டை ந‌ண்ப‌ர்:ஆமா என்னைய‌ கேட்க‌ ஆளில்ல‌,உன்னைய‌ கேட்க‌ நிறைய‌ ஆளு இருந்திருக்கும் போல‌.

குட்டை ந‌ண்ப‌ர்:???


இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன் சென்னை காம‌ராஜ‌ர் அர‌ங்க‌த்தில் ந‌டைபெற்ற‌ ந‌வ‌ர‌ச‌ம் நிக‌ழ்ச்சியில் ந‌டிகை ஷோப‌னாவின் நாட்டிய‌ நிக‌ழ்ச்சிக்கு க‌ம்பெனியிலிருந்து ஓசியில் டிக்கெட் கிடைத்த‌தால், ந‌ம்ம‌ ச‌ரித்திர‌த்தில‌யும் ஒரு ந‌டிகையை நேரில் பார்த்த‌தாக‌ இருக்க‌ட்டுமேயென்று அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ருட‌ன் சென்றேன். இதெல்லாம் ந‌ம‌க்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ராது ஒரு ப‌த்து நிமிஷ‌ம் பாத்துட்டு கிள‌ம்பிட‌லாம் என்ற‌ப‌டியே அர‌ங்க‌த்தில் நுழைந்தோம்.பாம‌ர‌னும் ர‌சிக்கும்ப‌டி நிறைய‌ புதுமைக‌ளைப் புகுத்தி இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ஒட்டு மொத்த‌ அர‌ங்க‌த்தையும் த‌ன் வ‌ச‌ப்ப‌டுத்தினார் ஷோப‌னா. குறிப்பாய் "விஷ‌ம‌க்கார‌ க‌ண்ண‌ன்" என்ற‌ பாட‌லுக்கு அவ‌ர் ஆடிய‌போது இருமுறை தேசிய‌ விருதை வென்ற‌த‌ற்கான‌ கார‌ணம் புரிந்த‌து.அப்ப‌டியே ஒரு சினிமா பார்ப்ப‌தைப் போன்றே இருந்த‌து. கிரிக்கெட்,ஃபேஷ‌ன் ஷோ போன்ற‌ நிறைய‌ இன்ட்ர‌ஸ்டிங்கான‌ விஷ‌ய‌ங்க‌ளை வ‌ந்தேமாத‌ர‌ம் பாட‌லில் நாட்டிய‌த்தில் கொண்டுவ‌ந்த‌து ர‌சிக்கும்ப‌டி இருந்த‌து.எட்டு வ‌ய‌திலிருந்து இருப‌து வ‌ய‌து வ‌ரை ம‌திக்கும்ப‌டி அச‌த்த‌லாய் ந‌ட‌ன‌மாடிய‌ அவ‌ரின் சிஷ்யைக‌ளைவிட‌வும் சுறுசுறுப்பாய் சுழ‌ன்றார் ஷோப‌னா. எதிர்பாராத‌ சுவார‌ஸ்ய‌மான‌ அனுப‌வ‌மாக‌ இருந்த‌து அந்நிக‌ழ்ச்சி.

ஐஸ்கிரீம் பார்ல‌ரில் வெணிலா ஐஸ்கிரீம் ஒன்று வாங்கி அதை மெதுவாக‌ பிரித்து நான்கு வ‌ய‌து சிறுவ‌னுக்கு ஊட்டிக்கொண்டிருந்த‌ அவ‌னின் த‌ந்தை ம‌க‌ன் ருசித்து சிரித்து சாப்பிடுவ‌தை ர‌சித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். க‌டைசி ட்ராப் வ‌ரை ஸ்பூனில் வ‌ழித்து ஊட்டிவிட்டு அவ‌ன‌து முக‌த்தை பொறுமையாய் துடைத்துவிட்டு அழைத்துச் சென்றார். இதிலென்ன‌ விஷேச‌ம் என்கிறீர்க‌ளா? இர‌ண்டு வெணிலா ஐஸ்கிரீம் கொடுங்க‌ என்ற‌ப‌டியேதான் க‌டையினுள் அவ‌ர் நுழைந்தார்.வெணிலா ஒன்றின் விலை 15 ரூபாய் என்ற‌தும் த‌ன‌க்காக‌ கையில் வாங்கிய‌ ஐஸ்கிரீமை திரும்ப‌வும் கொடுத்துவிட்டு ஒன்று போதும் என்று த‌ன் ம‌க‌னுக்கு ம‌ட்டும் வாங்கிக்கொண்டார்.இதே சூழ‌லில் ஒரு அம்மா இருந்திருந்தால் க‌ண்டிப்பாய் ஐஸ்கிரிமை அட்லீஸ்ட் ஒரு வாயாவ‌து சுவைத்திருப்பார். இப்ப‌டியெல்லாம் நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளில் குழ‌ந்தைக‌ளுக்காக‌ தியாக‌ வாழ்க்கை வாழும் த‌ந்தைக‌ளின் பாச‌ம் தாய்ப்பாச‌த்திட‌ம் பெரும்பாலும் தோற்றுவிடுவ‌து ஏன்? (இதில் நிறைய‌ விஷ‌ய‌ம் இருக்குல்ல‌).


த‌ள‌ப‌தி ப‌ட‌த்தில் ர‌ஜினி த‌ன் தாயை க‌ண்டுபிடித்த‌தும்," நான் இருக்க‌ வேண்டிய‌ இட‌ம் இதுவ‌ல்ல‌,இது நாற்ற‌ம‌டிக்குமிட‌ம்" என‌ த‌ன்னை வ‌ள‌ர்த்துவிட்ட‌ குப்ப‌த்து ம‌க்க‌ளை நோக்கி வ‌ச‌ன‌ம் பேசியிருந்தால் எப்ப‌டி இருக்குமோ அப்ப‌டி இருந்த‌து நான் மிக‌வும் விரும்பி ப‌டிக்கும் ஒரு ப‌திவ‌ரின் ச‌மீப‌த்திய‌ இடுகை. அனுப‌விப்ப‌வ‌னுக்குத்தான் வ‌லி தெரியும் என்றாலும் இவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌ ஒரு இடுகையை அங்கே எதிர்பார்க்க‌வில்லை. யாருக்கோ புத்தி புக‌ட்ட‌ எண்ணி பொத்தாம் பொதுவாக‌ ஒட்டுமொத்த‌ ப‌திவுலகையும் கேவ‌ல‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌வும் அவ‌ர் எழுதியிருந்த‌ சில‌ வார்த்தைக‌ளை ப‌டித்த‌போது என்னைப் போன்று அவ‌ரை ரெகுல‌ராக‌ ப‌டிக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ அதிர்ச்சியாய் இருந்திருக்கும். அந்த‌ குறிப்பிட்ட‌ இடுகை அவ‌ரின் மொழியிலேயே சொன்னால் சாக்க‌டை. அவ‌ரின் எத்த‌னையோ ப‌திவுக‌ளைப் ப‌டித்து ர‌சித்து ந‌ட்பு வ‌ட்ட‌த்தில் சிலாகித்திருக்கிறேன், இப்போ அவ‌ரே ஒரு த‌வ‌று செய்கிறார் எனும்போது அதை சுட்டிக்காட்டுவ‌துதானே ந‌ட்பு.