Wednesday, December 31, 2014

ஊனக் கண்

”அஞ்சு ரூவாய்க்கி வெத்தலாக்கு கொடுங்க” என்ற குரலில் தொலைக்காட்சியில் ’கண்ணுக்குள் நூறு நிலவா’ பாடிக்கொண்டிருந்த அமலாவிடமிருந்து முகத்தைத் திருப்பிய முத்து, வெயிலில் நடந்து வந்த களைப்போடு மூச்சு வாங்கியபடி கையில் ஐந்து ரூபாய் காசை நீட்டிக்கொண்டு ஐம்பதிற்கு ஒன்றிரண்டு வயது குறைவாய் மதிக்கத்தக்க தோற்றத்தில் நின்றவனைப் பார்த்ததும்  சற்றே ஆச்சர்யத்துடன் ”என்னய்யா வேலா இந்தப் பக்கம்” என்றான்.

 ”செவ்வாப்பட்டில ஒரு துக்கம்ங்க, அதுக்கு பொயிட்டு இங்கன மூண்ரோட்டுல பஸ் ஏறிக்கலாம்னு நடந்து வரேன்” என்று வார்த்தைகளை இழுத்து ”இது யாராய் இருக்கும் “ என்ற யோசனையோடு பதில் சொன்னான் வேலன்.

வேலனின் முகத்தில் தன்னை அடையாளம் கண்டுகொள்ளாத குழப்பத்தை கவனித்த முத்து,”என்னைய்யா என்னைய யாருன்னு தெரியலையா?  மயிலம்பா பேரன் முத்து, ஞாவகம் இருக்கா?” என்று கேட்டதும்,”அப்படிச் சொல்லுங்க சேதிய, செறு வயசுல பாத்தது, ஏட குறுக்க பாத்திருந்தா இன்னாருன்னு கண்டுகிட்டு இருந்திருப்பேன்,நல்லா இருக்கியளா? ” என்று காவியேறிய பற்கள் தெரிய பெரிதாய் சிரித்தான் வேலன்.

”நல்லாயிருக்கேன்,அப்புறம் ஊர்ல எல்லாரும் சௌர்யம்தானா? எங்க அம்மாச்சி வீட்டு பக்கமெல்லாம் போறதுண்டா?”

“ஏன் போவாம, நீங்கதான் அம்மாச்சி போன பின்னாடி அங்கிட்டு எட்டிக்கூட பாக்க மாட்டேங்குறிய, மாமனெல்லாம் வேண்டாமா”

“எங்கே, பொழப்ப பாக்கவே நேரம் சரியாயிருக்கு, தேவ தவசின்னா வந்து போறதுதான்”

“அங்க இருக்கயில எங்க பெரியாத்தாள சுத்தி சுத்தி வருவிய” 

பெரியாத்தா என்று வேலன் சொல்வது பவானியை.முத்து அப்போது அவனுடைய அம்மாச்சியின் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தான். முத்துவின் அம்மாச்சி வீட்டின் பங்காளி வீடுதான் பவானி வீடு. 

பவானி குழந்தையாய் இருந்த போது ஒரு அடைமழை நாளில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் அவளின் வலது காலை முட்டிக்குக் கீழே எடுக்க வேண்டியதாகிவிட்டது. இரு பக்க கக்கத்திலும் ஊன்று கோல் வைத்துதான் நடப்பாள். வீட்டிற்கு இவள்தான் மூத்தவள் என்றபோதும்,கூட பிறந்த இரண்டு பெண்களுக்கும் அப்போதே திருமணமாகிவிட்டிருந்தது.

 பள்ளிக்கூடம் பவானியின் வீட்டிற்கு அடுத்ததாகத்தான் இருக்கும். பள்ளியில் விளையாட்டுத் திடல் என்று ஒன்று இல்லாததால் பவானி வீட்டின் பின் புறம் விஸ்தாரமாய் கிடக்கும் இடத்தில்தான் பசங்க விளையாடுவது வழக்கம். பசங்களுக்குள் நடக்கும் சண்டைகளை தீர்த்து வைப்பது, விளையாட்டிற்கு நடுவராய் இருப்பது என பவானியும் அந்த நேரத்தில் அவர்களின் விளையாட்டில் கலந்துகொண்டு குழந்தைகளோடு குழந்தையாகிவிடுவாள். 

பள்ளியருகே உப்பு மாங்காய்,ஜவ்வு மிட்டாய்,வெள்ளரிக்காய் தேன் மிட்டாய் என மொத்த கடையையும் ஒரு கூடையில் அடக்கி உட்கார்ந்திருக்கும் ரெங்கம்மா கிழவியிடம் தேன் மிட்டாய்,கல்கோனா வாங்கி வரச் சொல்லி தினமும் முத்துவிடம் காசு கொடுத்துவிடுவாள். தேன் மிட்டாயை இவள் எடுத்துக்கொண்டு கல்கோனாவை காக்காக் கடி கடித்து பசங்களுக்கு பங்கு போட்டுத் தருவாள்.முத்து ஊருக்குப் போய் திரும்பும்போதும்கூட தன் அப்பாவின் பெட்டிக்கடையிலிருந்து நிறைய தேன் மிட்டாய்களைத்தான் பாவானிக்கு என்று கொண்டுவருவான். இப்படி அவளின் சிறுபிள்ளைத் தனங்களால் அவளை தங்கள் வயதை ஒத்த ஒருத்தியாகவே பாவிப்பார்கள் பள்ளிச் சிறுவர்கள்.

விடுமுறை நாட்களில் ஒரு வேலையும் ஓடாது இவளுக்கு.முத்துவும்கூட சனி ஞாயிறுகளில் அவனுடைய ஊருக்குப்போய் விடுவான்.எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் பிள்ளைகளோட விளையாடலாம் என்றே பார்த்துக்கொண்டிருப்பாள். 
பசங்க விளையாடும் இடத்தில் சில சமயம் நெல்,கடலை இப்படி ஏதாவது தானியங்களையோ,வைக்கோல்,கடலைக்கொடி போன்ற தீவனங்களையோ காய வைத்திருப்பார்கள். அந்த மாதிரி நேரங்களில் பவானியின் வீட்டில் ஊழியம் பார்க்கும்  வேலன் பசங்களை அங்கே விளையாடவிடாமல் விரட்டுவான்.

”இங்கரே இப்ப என்னத்துக்கு அதுவொள வெறட்டுற, அப்புறம் அதுவொ எங்கிட்டு போய் வெளையாடுங்க, வைக்கதானே மிறிச்சா மாடு திங்கலன்னா சொல்லப்பொவுது, உன் வேலை பாத்துகிட்டுப் போ” என்பது போல வேலனை  ஏசுவாள். 

அப்போதெல்லாம் வேலன் “ஆமா நீ ஒரு ஆளு பெரியாத்தா, நான் திருப்பி அள்ளி வைக்க வாவா காய வச்சிருக்கேன். இப்படி அங்கிட்டு இங்கிட்டும் எரச்சு போட்டா அள்ளுறதுக்கு செரமமா இருக்குமா இல்லியா, நீ செறு புள்ளையிலயும் சேத்தி இல்ல, வளர்ந்த பொம்பளையிலயும் சேத்தியில்ல. அம்மா என்னையதான் பேசும், நீ ஒம்பாட்டுக்கு குந்தியிருப்ப” என்று அங்கலாய்த்துக்கொள்வான்.

இப்படி பசங்க தானியங்களை மிதித்து ,இரைத்து நாசம் செய்து வைக்கும் போதெல்லாம் தன் அம்மாவிடம் கெட்ட வார்த்தைகளால் வசவுகள் வாங்கிக்கொள்வாள். ஆனாலும் பசங்க விளையாடுவதற்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொள்வாள்.

பள்ளி முடிந்ததும்  பவானியின் வீட்டிற்குத்தான் ஓடுவான் முத்து. பவானியும் இவன் எப்போ வருவானென்று பார்த்துக்கொண்டே இருப்பாள். இவன் வந்த பிறகு இருவரும் அவர்களின் வீட்டு தோப்பிற்கு போவார்கள். அங்கே காய்த்திருக்கும் மாங்காய்,நெல்லிக்காய்,கொய்யாக்காய் என எதையாவது ஒன்றை பறித்துக்கொண்டு பம்ப் செட் அருகே இருக்கும் புளிய மரத்தின் தனிந்த கிளையில் அமர்ந்து ஊஞ்சல் போல மேலும் கீழுமாக கிளையை அசைத்து ஆடிக்கொண்டே இருவரும் எதையாவது பேசிக்கொண்டே தின்றுகொண்டிருப்பார்கள்.

பெரும்பாலும் சினிமாக் கதைகளைத்தான் பேசுவாள் பவானி. அவளுக்கு கார்த்திக்  படங்கள் என்றால் மிகப் பிடிக்கும். ’பாண்டி நாட்டுத் தங்கம்’ படம் பார்த்ததிலிருந்து கார்த்திக்கின் மேல் பைத்தியமாக இருந்தாள். இதே ஊஞ்சலில் அமர்ந்து  ”உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது” என்று கார்த்திக்கை நினைத்து உருகிப் போய் பாடியியிருக்கிறாள். இந்த மாதிரி சமயங்களில் ”நீயும் அந்த படத்துல வர அக்கா மாதிரியே அழகா இருக்கக்கா” என்பான் முத்து. அதுதான் அவளது எதிர்பார்ப்பாகவும் இருக்கும். முத்து அப்படி சொல்லும்போது கூடுதலாய் இரண்டு நெல்லிக்காய்கள் கிடைக்கும் என்றாலும் அவன் அதற்காக அவளை அழகியென்றும் சொன்னதில்லை. உண்மையில் அவளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். சும்மா சும்மா அவளையே பார்த்துக்கொண்டிருப்பான். அவளுக்கும் அது தெரியும். கமுக்கமாகச் சிரித்துக் கொள்வாள். விலகியிருக்கும் முடி கற்றைகளை காது மடல்களில் கதாநாயகி பாவனையிலேயே அவள் சரி செய்வது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று இவள் கவனித்து வைத்திருந்ததால் அடிக்கடி அதை செய்து அவன் இவளை ரசிப்பதை ரசிப்பாள்.தனது ஊனமே பிரதானமாய் தெரிந்து அனைவரும் பரிதாப பார்வைகளை தன் மேல் வீசுகிற போது முத்துவின் இந்த இயல்பினாலேயே அவனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.

முத்து  ஒரு முறை மாமரத்தின் உச்சியில் நின்று மாங்காய் பறித்துக்கொண்டிருந்தபோது பவானியின் அம்மா பார்த்துவிட்டு பவானியைத் திட்டினாள், “ஏண்டி சின்னப்புள்ளய அங்க தெக்க ஏறச்சொல்லியிருக்கிய கூறு இருக்கா, அவன் அம்மாச்சிக்கு மட்டும் தெரிஞ்சிச்சு என்ன பண்ணுவான்னு தெரியாது ஆமா” என்றுவிட்டு, “ஏலேய் இறங்குறியா இல்லியா” என்று சத்தம் போட்டாள்.

இவளின் சத்தத்தில் பதறியவன் அவசர அவசரமாய் இறங்க முயல்கையில் மரத்தின் பாதியிலிருந்து சறுக்கி கீழே விழுந்தான். 

முட்டியில் கை,கால்களில் சிராய்ப்போடு விழுந்த கிடந்தவனைப் பார்த்து பதறி ஊன்று கோலை மறந்து ஒற்றைக்காலால் நொண்டி நொண்டி ஓடிவந்து அவனின் அருகே அமர்ந்தவள் , தன் அம்மாவை “உன் அண்டா தொண்டய வச்சி அலறியதுலதான் அவன் பயந்து விழுந்துட்டான்” என்று ஏசினாள்.
“ஊராமூட்டுப் புள்ளய மரத்துல ஏத்திவிட்டதுமில்லாம, என்னையவா பேசுர, ஆக்கி போடுறத தின்னுட்டு அடங்கி ஒடங்கி ஒரு இடத்துல குந்தாம பொழுதேனைக்கும் நண்டு சிண்டுவொளோடதான் ஆட்டம், வயசு ஆவுதே புத்தி வேண்டாம்” என்று திட்டிய பவானியின் அம்மா, அருகே ஓடிய வாய்க்காலில் படிந்திருந்த பொறுக்கு மண்ணை எடுத்து சிராய்ப்பில் தடவச் சொல்லி பவானியிடம் கொடுத்துவிட்டு , ”யய்யா ராசா ஒங்க அம்மாச்சிகிட்ட சொல்லிடாதய்யா” என்று முத்துவின் தாவாயில் கை வைத்தபடி சொன்னவள் தொடர்ந்து, “இனிமே இவனை அழச்சிக்கிட்டு இங்கிட்டு வா, இன்னொரு காலையும் முறிச்சு ஒக்கார வைக்கிறேன்” என்று மகளை மறுபடியும் திட்டிக்கொண்டே,”நேரமா வீட்டுக்குப் போய் சேருங்க” என்றபடி செடிகளுக்கு  தண்ணீர் பாய்ச்ச போய்விட்டாள்.

”முத்து, ரொம்ப வலிக்குதாடா” என்று கேட்டபடியே சிராய்ப்பில் பொறுக்கு மண்ணைத் தடவியவள். ”வேற எங்கினயும் அடிகிடி படலையே” என்று அவன் காலை இப்படி அப்படியுமாக மாத்தி பார்த்துக்கொண்டே “வந்துட்டா காட்டுச் செறுக்கி கத்திகிட்டே, புள்ளைக்கு நல்லா அடிபட்டுச்சு” என்று மீண்டும் தன் தாயை ஏசியவளின் கண் கலங்கியிருந்ததைப் பார்த்து சிராய்ப்பில் சின்னதாய் இருந்த வலியும் அவனுக்கு மறத்துப் போனதுபோல இருந்தது.

நினைவுகளில் மூழ்கி இருந்த முத்துவின் பார்வை அனிச்சையாய் மணிகட்டுத் தழும்பில்  விழுந்ததில் முகத்தில் மெல்லிய புன்னகை  படரத்தொடங்கியது.

“பெரியாத்தாதான் ஒங்க ஊரு சனத்த யார பாத்தாலும் ஒங்கள பத்தி விசாரிச்சுகிட்டே கெடக்கும். பெத்த புள்ளயாட்டமா அதுக்கு நெனப்பு” என்ற வேலனின் பேச்சில்  நிமிர்ந்தவன் ,“இப்பவும் நீ அங்கதான் பண்ணயத்துக்கு இருக்கியா?” என்றான்.

“இல்லீங்க, பயலுவொ தலையெடுத்த பின்னாடி பெருசா வேலை வெட்டிக்குன்னு போறதில்லை. பெரியாத்தாளுக்கு எதுனா கடை கன்னின்னு போவணும்னா தாக்கல் விடும். அதுக்கு இப்படி எதுனா ஒத்தாசை செய்யிறதோட சரி” என்றவன் தொடர்ந்து,”அங்கிட்டு வந்தா ஒரு எட்டு அதை பாக்காம வந்துராதிய பாவம். தாய் தாப்பன் போன பின்னாடி இப்ப பெரியாத்தா தனியாதான் பொங்கி சாப்பிடுது, நீங்கல்லாம் வந்து பாத்தா சந்தோஷப்படும்” என்றான்.

பெத்த தாயாட்டமா என்றதும் நினைவுகள் திரும்ப பின்னோக்கி ஓடியது,
தன் வீட்டில் விஷேசமாக என்ன செய்தாலும் இவனுக்கென்று எடுத்து வைத்துக் கொடுப்பாள். இன்னும் சொல்லப்போனால் இட்லி,தோசையெல்லாம் முத்துவின் அம்மாச்சியை பொருத்த வரையில் பொங்கல் தீபாவளி என்று பண்டிகை நாட்களில் செய்யப்படும் பலகார வகைகளில் ஒன்று. தினமும் பழைய சோறுதான் காலையில் ஊற்றி வைப்பாள். அப்படியிருக்க தன் வீட்டில் எப்போதெல்லாம் இட்லி,தோசையோ அப்போதெல்லாம் “பாவம்மா அந்த பய அந்த பெரியம்மா எப்பயும் பழய சோத்தையே போடுது” என்று தன் அம்மாவிடம் நயந்து பேசி இவனுக்கென்று கொஞ்சம் கொண்டு வந்து கொடுத்துவிடுவாள்.

இப்போது கரிசனத்தோடு பவானி பற்றிய நினைவுகளை அசைபோடுபவன்தான் ஒரு கட்டத்தில் அவளை பார்ப்பதே பாவம் என்பது போல நடந்து கொண்டான். அப்போதைய அவனின் செயலைக் குறித்து இப்போது சங்கடமாய் யோசிப்பது அவனின் முகத்தில் தெரிந்தது. 

ஒரு விடுமுறையின் போது ஊருக்குப் போய்விட்டு திரும்பிய போது பவானியைத் தேடிக்கொண்டு அவங்க வீட்டிற்கு  ஓடியவன், சற்று நேரத்திலேயே திரும்ப அம்மாச்சியின் வீட்டிற்கே ஓடிவந்து படபடப்போடு உட்கார்ந்திருந்தான்.

”என்னடா அக்காவ தேடிகிட்டு ஓடுன,பொசுக்குன்னு திரும்ப வந்து குந்தியிருக்க?” என்றாள் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்த அம்மாச்சி.

”உன் வேலைய பாரு” என்று கத்தினான். படபடப்போடு நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த அவனின் அம்மாச்சி,

”இப்ப என்ன சொன்னேன்னு இப்படி கத்துறிய தொர, தென்னண்ட வீட்டு அம்மாச்சி வெரட்டிவிட்டுட்டாளா, ஒரு நேரம் போனோம் வெளையாண்டோம்னு இல்லாம பொழுதேனைக்கும் அங்கயே குடியிருந்தா அப்படித்தான் பேசுவாளுவோ, இங்கன செத்த தரிக்கிதா சூத்து, ஓடினியல்ல வாங்கிகிட்டு வா” என்றாள்.

“அந்த அம்மாச்சி ஒண்ணும் சொல்லல” என்றுவிட்டு அமைதியா உட்கார்ந்திருவன், சற்று நேரம் கழித்து, “அம்மாச்சி” என்றான்.

“ம்” என்றவள் தொடர்ந்து பெருக்கிக்கொண்டே வாசல் பக்கம் போனாள்.

”அம்மாச்சியோவ்” என்றான் சற்று உரக்க.

”சோறு போடவா?”

”வேண்டாம், நீ இங்க வாவே ஒன்ட்ட ஒண்ணு சொல்லணும்”

”ஆமா, வேலை கிடக்கு ஒங்கிட்ட கதை கேக்க முடியாமத்தான் இருக்கேன்” என்றவள். தொடர்ந்து “ம் என்னான்னு சொல்லு?” என்றாள்.

“அது” என்று எச்சில் முழுங்கியவன், பவானி வீட்டை நோக்கி அனிச்சையாய் ஒரு பார்வையை வீசிவிட்டு, ”அந்த பவானி இருக்குல்ல அதுவும் அந்த வேலனும் வைக்க போரு இடுக்குல ஒண்ணா படுத்திருக்கவோ” என்றான்.

”ஏலேய்” என்று பதறிய அம்மாச்சி, ”இங்கரு ஒரு பொம்பள் புள்ளய அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றவள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலை தணித்து ”ஆமா நெசமாவாய்யா?” என்றாள். முத்துவிடமிருந்த படபடப்பு இப்போது அம்மாச்சியிடமும் தாவியிருந்தது. 

”சத்தியமா அம்மாச்சி நான் பார்த்தேன்” என்றான்.

அம்மாச்சிக்கு படபடப்பு எகிற ஆரம்பித்தது, ”இங்கரு ராசா யாருகிட்டயும் இதப் பத்தி மூச்சு விட்டுக்கக் கூடாது”. என்றவள் தொடர்ந்து படபடபோடவே,”கொல விழுந்து போவுமுடா, பண்ட ஒருத்திய இப்படி சாதிகெட்டவனோட பொழங்கினான்னு உசுரோட பொதச்ச ஊரு இது”. என்றவள். ”இங்கப் பாரு எவளாச்சும் எங்கிட்டாச்சும் போறாளுவோ பள்ளியொடம் உண்டு வீடு உண்டுன்னு கம்முன்னு இருக்கணும்” என்றவள். எங்கே தன் பேரன் யாருகிட்டயும் இதைச் சொல்லிவிடுவானோ என்று அன்று முழுக்க திரும்ப திரும்ப அவனிடம் பல விஷயங்களைச் சொல்லி பயமுறுத்தி தானும் பயந்து கொண்டிருந்தாள். 

அடுத்த நாள் பள்ளி மதிய இடைவேளையின்போது பிள்ளைகள் எல்லாம் பவானி வீட்டுத் திடலில் விளையாட சென்றபோது, முத்து மட்டும் போகவில்லை. முத்துவின் அம்மாச்சியிடம்,”என்ன பெரியம்மா ஒம்பேரன காலையிலிருந்து இங்கிட்டு காணும்” என்றாள் பவானி.

”தெரியலையேடி, அவன் ஊர்லேர்ந்து வந்தப்ப கிரிகிட்டி அடிக்கிற பேட்டு கொண்டுகிட்டு வந்தான். அதை தூக்கிக்கிட்டு வடக்கித் தெரு பக்கமா ஓடினான், அங்கிட்டு உள்ள பயலுவளோட விளையாட போயித்தான் போலருக்கு” என்றாள் எதுவுமே அறிந்திராத பாவனையில். 

“வந்தா நான் கூப்பிட்டேன்னு சொல்லு பெரியம்மா” என்றபடி போனாள்.
அவ்வளவுதான் அதன் பின் பவானி வீட்டுப்பக்கம் அவன் போவதை அறவே நிறுத்திவிட்டான். சில தடவை பவானியின் எதிரே தென்படுகையிலும் பட்டும் படாமல் எரிச்சலாய் முகத்தை வைத்துக் கொண்டு எதையாவது சொல்லிவிட்டு ஓடிவிடுவான். அவன் எவ்வளவு பாராமுகமாய் இருந்தும், ”விளையாட்டுப் புள்ள அவன் சோட்டு பசங்களோடு விளையாட்டு நோக்கத்துல இங்கிட்டு வருவதில்லை” என்பது போலதான் பவானியின் நினைப்பு இருந்தது. முத்து அங்கே இருந்தவரைக்கும் எப்போதும் போல தன் வீட்டில் என்ன விஷேசம் என்றாலும் இவனுக்கு என்று எதையாவது கொண்டு வந்து கொடுத்துக்கொண்டேதான் இருந்தாள் பவானி.

இவன் அதை தொட்டுக்கூட பார்க்க மாட்டான். ”தூக்கி வீசு எங்கிட்டாச்சும்” என்று பவானி சென்ற பிறகு அம்மாச்சியிடம் சத்தம் போடுவான். தன் அம்மாச்சி வீட்டுப் பக்கம் பவானி சும்மா வந்தாலும்கூட ”அவ எதுக்கு இங்க வரா, அவ கூடயெல்லாம் பேதாத” என்று அம்மாச்சியைக் கண்டிக்கத் தொடங்கினான்.இந்த மாதிரி நேரங்களில் ”இங்கரே முதல்ல ஊரு பக்கம் ஒன்னைய வெரட்டிவிட்டாத்தான் சரிபடும், பெரிய பலி பாவத்துல கொண்டுவந்து விட்டுருவ போலருக்கு” என்று திட்டுவாள்.

”யாருங்க இது” என்ற தன் மனைவியின் குரலில் மீண்டும் நினைவு கலைந்தவன், ”எங்க அம்மாச்சி ஊரு” என்று சுருக்கமாய் வேலனைப் பற்றி தன் மனைவியிடம் கூறினான்.

”தம்பி செறு புள்ளயில அங்கதான இருந்துச்சு. அவுக அம்மாச்சி வீட்டுல இருந்தத விட எங்க குடியானவுக வீட்டுலதான் அப்பயெல்லாம் தம்பி இருக்கும்” என்று ஒரு மாதிரி அசடு வழிஞ்சிகிட்டே வேலன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் பஸ் வருகிற சத்தம் கேட்டு ,” பஸ் வர மாதிரி தெரியிது, நான் கெளம்புறேய்யா” என்றான்.

“கொஞ்சம் இருய்யா ” என்ற முத்து, வேலன் கேட்ட வெற்றிலை பாக்கோடு தேன் மிட்டாய் பாக்கெட் ஒன்றையும் எடுத்து வைத்தான்.

Thursday, September 18, 2014

பாடலாசிரியர் பிறைசூடன்..

திரைப்பாடலாசிரியர்கள் பொறுத்த வரையில் எண்ணிக்கையில் ஏராளமானோர் வந்திருந்தாலும் கண்ணதாசனுக்குப் பிறகு வாலி,வைரமுத்து ஆகிய இரண்டு பேர்களைத் தவிர புலமைபித்தன்,முத்துலிங்கம், மு.மேத்தா, பொன்னடியான், காமகோடியான் என நீளும் பல பாடலாசிரியர்களை தீவிர திரை இசை ரசிகர்களைத் தாண்டி பலருக்குத் தெரிவதில்லை.

சில பாடல்களைக் கேட்கும்போது இத்தனை திறமையான பாடலாசிரியர்களை ஏன் இந்தத் திரையுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற எண்ணம் இசைரசிகர்களுக்குத் தோன்றும். மிக பிரபலமான பாடல்களை எழுதியிருந்தும் வாலி,வைரமுத்து ஆகியோரைப் போன்று தொடர்  வாய்ப்புகளைப் 
இவர்கள் பெறாமல் போனதன் பின்னணியில் இப்படியும் சில காரணங்களை யூகிக்கிறேன். திரைப்பாடல் சூழல் என்பது மெட்டைச் சொன்னதும் சொற்களை அதன் சூழலுக்கேற்ப கோர்த்தாக வேண்டும். அங்கே கவிஞனின் சிந்தனைக்கு எல்லை வகுக்கப்பட்டுவிடுகிறது. இந்த பரப்பிற்குள், இந்த கால கெடுவிற்குள் எழுதியாக வேண்டிய நிர்பந்தம் இருக்கும். இவர்களில் சிலருக்கு அதில் பொருந்திப் போகக்கூடிய தன்மை இல்லாதிருந்திருக்கலாம். அப்படியே இந்த எல்லைக்குள் எழுதும் திறமை இருந்தாலும் அது குறிப்பிட்ட வகைப் பாடல்களில் மட்டும் வெளிப்பட்டு மற்ற வகைகளில் தடுமாற்றம் நிகழ்திருக்கலாம். வாய்ப்புகளைத் தேடி பெறுவதற்கு சுயம் சார்ந்த கொள்கைகள் எதிராகவும் அமைந்து இருந்திருக்கலாம். ஆனாலும் கொடுத்த வரையிலும் சிறப்பான பங்களிப்பையே செய்திருக்கிறார்கள் அந்த வகையில் இவர்கள் நினைவு கூறத்தக்கவர்கள். 

பாடல்களுக்காக மட்டுமேயான தொலைக்காட்சி சேனல்களிலும்கூட பாடலாசிரியர்களின் பெயர்கள் இரட்டடிப்பு செய்தே பாடல்களை ஒளிபரப்பப்புகிறார்கள். அட்லீஸ்ட் இந்த சேனல்களாவது பாடலாசிரியர்களின் பெயர்களையும் பாடல் பற்றிய தகவல்களில் கொடுத்தால் இவர்களைப் பற்றி இன்னும் பரவலாக தெரிய வரும் என்ற ஆதங்கம் எப்போதுமே உண்டு. வாய்ப்புகள் இன்றி மற்றும் வயோதிகம் காரணமாய் ஒதுங்கியிருக்கும் இவர்களுக்கு இந்த விஷயம் சற்றே ஆறுதலைத் தருவதாகக்கூட இருக்கும்.

மேற்சொன்ன பாடலாசிரியர்கள் வரிசையில் தற்போதும் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் பாடலாசிரியர்களில் இன்னும் பெரிதாய் அங்கீகரிக்கப்பட வேண்டும் என நான் நினைப்பவர் கவிஞர் பிறைசூடன். இவரைப் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன்.
எண்பதுகளின் இறுதியிலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஏராளமான பாடல்களை எழுதியிருக்கிறார். இப்போதும் கிடைக்கிற வாய்ப்புகளில் திறமையை காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.

கிராமப்புற பின்னணிக்கு மண்வாசனையோடு எழுதுவதிலும் நகர்புற காதலுக்கும் அதற்கே உண்டான அழகிலோடு எழுதிவதிலும் கைதேர்ந்தவராய் இருப்பது இவரின் சிறப்பு.

இளையராஜா-வைரமுத்து விரிசலுக்குப் பின் வாலி எத்தனையோ கிராமியப் பாடல்களை ராஜாவின் இசையில் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவற்றில் தமிழ் வாசத்தை நுகர்ந்த அளவிற்கு அப்பட்டமான மண்வாசத்தை என்னால் நுகர முடிந்ததில்லை. எடுத்துக்காட்டாக ’நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடல் கிராமியச் சூழல்தான்;வரிகளும் அப்படித்தான் இருக்கும். ஆனாலும் ’ஏந்திழைக்கு காத்திருந்தேன்’ என கிராமச் சூழலுக்கு பொருந்தாத வாலியிசம் எட்டிப்பார்க்கும்.இந்த ஏரியாவில் வைரமுத்து இறங்கி அடிப்பார். ராஜா இசையில் வைரமுத்து எழுத முடியாது போன சூழலில் அந்த இடத்தில் பிறைசூடனை ராஜா இன்னமும் பயன்படுத்தியிருக்கலாமோ என்கிற எண்ணம் ’என் ராசாவின் மனசில’ படத்தின் ’சோலப் பசுங்கிளியே’ பாடலை கேட்கும் தோறும் தோன்றும்.

வாலியின் வார்த்தை விளையாட்டு மற்றும் மெட்டுக்குள் சொற்களை அடக்கும் வித்தை ஆகியவற்றிற்காக மிகப் பிடிக்கும். அந்த வகையில் வாலிக்குப் பிறகு என்னைக் கவர்ந்தவர் பிறைசூடனே. சொல்லப்போனால் பிறைசூடனின் பல பாடல்களை வாலி எழுதியதாகவே நம்பியதுண்டு.

”பெண் மனசு காணாத இந்திரஜாலத்தை
அள்ளித்தர தானாக வந்துவிடு
என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு”
என்று ’உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தின் ’என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி’ பாடல் வரிகளில் இடம்பெற்ற சொற்களின் தேர்விலும்,

“கோயிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவோ
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ”


என்று கோபுர வாசலிலே படத்தின் ’காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ பாடலில் காதலில் தெய்வீகத்தை தொட்டுச் செல்லும் இந்த வரிகளை கொடுக்க வாலியைத் தவிர வேறு யாருமாக இருக்க முடியாது என நம்பிய என் ஆணித்தரமான நம்பிக்கையயும்,

“திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்
மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்
அதில் கன்னம் இடும் கன்னம் எனக் கெஞ்சும்”


என்று ஈரமான ரோஜாவின் ‘கலகலக்கும் மணியோசை’ பாடலின் சொற்கோர்வையும், வார்த்தை விளையாட்டும் வாலிக்கே உரித்தானது என்ற எனது நினைப்பையும் பிறைசூடன்தான் அசைத்துப் பார்த்தார்.

கோபுர வாசலிலே படத்தின் ’கேளடி என் பாவையே’ மற்றும் ’நாதம் எழுந்ததடி’ ஆகிய பாடல்களிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்திருப்பார். குறிப்பாக நாதம் எழுந்ததடி பாடலின் சூழலுக்கு இளையராஜா வாலியைவிடுத்து பிறைசூடனை தேர்வு செய்ததையும், அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய பிறைசூடனையும் வியந்திருக்கிறேன். இத்தனைக்கும் அந்த படத்தில் வாலியும் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இம்மாதிரி ஒப்புமை படுத்த முடியாத தனித்துவமான பிறைசூடனையும் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் கேளடி கண்மணி படத்தின் பாடலொன்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.இந்த பாடலை அவர் எழுதிய சூழலே மிக சுவாரஸ்யமானது.  பாடலின் மெட்டை கேசட்டில் பதிவு செய்து பாடலாசிரியரிடம் கொடுத்துவிடும் வழக்கமிருந்த அந்த நாட்களில் ஆரம்பத்தில் டேப் ரெக்கார்டர்கூட இல்லாமல், பக்கத்து வீடுகளில் கேசட்டை கொடுத்து ஒலிக்கவிடச் சொல்லியெல்லாம் பாட்டு எழுதியிருப்பதாக சில தொலைக்காட்சி நேர்காணல்களில் அவரே சொல்லியிருக்கிறார். அந்த மாதிரி பதிவு செய்யப்பட்டு இவர் கைக்கு கேசட் கிடைத்தும், சொன்ன நாட்களுக்குள் இவரால் அந்த மெட்டிற்கு பாடலை எழுத முடியாமல் ரைட்டர்ஸ் பிளாக் போல எதையுமே யோசிக்க முடியாமல் தவித்திருக்கிறார். ஒலிப்பதிவுக்கான நாளன்று ராஜாவின் அலுவலகத்திலிருந்து போன் வந்த போதும் எழுதிவிட்டதாகச் சொல்லிவிட்டு டாக்ஸி பிடித்து ஸ்டுடியோவிற்கு கிளம்பியிருக்கிறார்.பாதி வழி வரைக்குகூட எதுவுமே எழுதவில்லையாம். சிக்னலொன்றில் 
டாக்ஸி நின்றபோது,

“தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்” என்ற பழைய பாடல் டாக்ஸியிலிருந்து ஒலிக்கவும், தன்னையுமறியாமல் தென்றல் திங்கள் என்று முணுமுணுத்தவர் அப்படியே லீட் பிடித்து எழுதியதுதான், “தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும்” பாடல்.இந்த பாடலின் சரணத்தில்,


”காவேரி ஆற்றின் மீனிங்கே
காதோடு மோதும் ஆனந்தம்” 


என்று கொள்ளிடக்கரையில் பிறந்த பிறைசூடனின் அனுபவத்தில் விளைந்த இந்த வரிகளில் எத்தனை கவித்துவம்.

”ஆற்று நீரில் ஆட்டம் போட்டு ஆடி வந்த நாட்களும்
நேற்று வந்த காற்றைப் போலே நெஞ்சைவிட்டுப் போகுமா” 


என்று தங்கமனசுக்காரன் படத்தின் ’மணிக்குயில் இசைக்குதடி’ பாடலில் நாம் சுமந்தலையும் பால்யத்தின் நினைவுகளை இரண்டே வரிகளில் சொல்லி அந்த நாட்களின் மொத்த நினைவுகளையும் கொக்கிப் போட்டு இழுத்து வரச் செய்திருப்பார்.

”இறக்கை உள்ள குஞ்சு இது 
கூடு ஒண்ணும் தேவையில்லை 
புத்தியுள்ள பிள்ளை இது 
கெட்டு நிற்கப்போவதில்லை”

என்று செம்பருத்தி படத்தின் ’நடந்தால் இரண்டடி’ பாடலில் தத்துவமாய் ஆரம்பித்து தன்னம்பிக்கை விதைக்கும் வரிகளை நேர்த்தியாய் கதையின் போக்கிற்கும் தனித்துப் பார்த்தாலும் ரசிக்குபடியும் கொடுத்திருப்பார்.

ராஜாதி ராஜாவின் ”மீனம்மா மீனம்மா”, அதிசயபிறவியின் ”தானந்தன கும்மி கொட்டி”, கேப்டன் பிரபாகரனின் ‘ஆட்டமாதேரோட்டமா’ , தெனாலியின் ”போர்க்களம் எங்கே” , எல்லாமே என் காதலியின் ”உயிரே உயிரே இது தெய்வீக சம்மந்தமோ”, அரண்மனைக்கிளியின் “நட்டு வச்ச ரோசாச் செடி நாந்தான்” , பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் ‘உயிரே உயிரின் ஒளியே’ , மைடியர் மார்த்தாண்டனின் ‘ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்’ , சின்ன மாப்ளேயின் ‘வெண்ணிலவு கொதிப்பதென்ன ‘ என இவரின் வரிகளில் என விருப்பப் பாடல்களின் பட்டியல் பெரிதாய் நீளும்.


இத்தனை நல்ல பாடல்களை தந்திருந்தும் பெரிய எண்ணிக்கையிலான பாடல்கள் இவரிடமிருந்து வராமல் போனதற்கு அவரே பல இடங்களில் சொல்லியிருப்பது போல அவரின் பிடிவாதகுணமும், வாய்த்துடுக்கான பேச்சுமேக்கூட காரணமாய் இருந்திருக்கலாம்.கொஞ்சம் நெளிவு சுளிவுகளோடு இருந்திருந்தால்  இன்னும் சில நூறு பாடல்கள் அவரிடமிருந்து கிடைத்திருக்குமே என்ற ஒரு ரசிகனின் ஆதங்கமாய்  இதை இங்கே வெளிப்படுத்துகிறேன்.

ராஜா தொடங்கி ரஹ்மான் வரை பாடல்கள் எழுதியிருக்கும் பிறைசூடன் நிறைய பக்தி பாடல்களையும் எழுதி குவித்திருக்கிறார்.திரைப்பாடல் வாய்ப்புகள் அவருக்கு அத்திப்பூச் செயலாய் இருந்து வரும் சூழலில் பக்தி பாடல்கள்தான் தொடர்ந்து 
அவர் இயங்க உதவியாக இருந்திருக்கக்கூடும் என்பது அவரைப் பற்றிய தகவல் திரட்டலில் எனக்கு தோன்றிய விஷயம்.

’ஒரு மோதல் ஒரு காதல்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராய் அறிமுகமாகியிருக்கும் கே.ஆர்.கவின் பிறைசூடனின் வாரிசு. தனது தந்தையின் திறமையை இன்னும்  அழுத்தமாய் 
வெளி உலகிற்கு கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்போடு அவரை வாழ்த்துகிறேன்.

Friday, July 4, 2014

டைம் பாஸ்-7

கூகிள் பிளஸில் அவ்வப்போது கிறுக்கியவற்றின் தொகுப்பு.

ஊடல் பொழுதுகளில் அஃறினையெல்லாம் பேசுகின்றன.
#டீ கோப்பை வைக்கப்பட்டது, நங் என்ற ஓசையுடன்.

”இளையராஜாவின் பாடல்களைக் கேட்க முடியாதே” என்று நினைக்கிறபோதுதான் மரணம் குறித்த அச்சம் வருகிறது.
#இளையராஜாயணம்

கணவனிடம் மட்டுமே கொஞ்சலாம், கெஞ்சலாம், மிஞ்சலாம் என்கிற உண்மை ஒரு பொண்ணுக்கு புரிய வருகிற நேரம் அந்த கணவன் கணவனான பிறகு ஆசிர்வதிக்கபடுகிற முதல் தருணம்.
# மிஞ்சலாம் என்பதில் தூக்கிப்போட்டு மிதிக்கலாம் வந்திடும்ல?


சோப்பு தீர்ந்துவிடும் நாட்களில் மனைவியின் சோப்பை  பயன்படுத்தும்போது மனசெங்கும் கமழ்கிறது காதலின் வாசம்.
#அதையும் தாண்டி புனிதமானது மொமண்ட்


மாலையானால் கூடு திரும்பும் பறவைகளைப்போல இரவானால் இளையராஜாவிடம் திரும்புகிறது நெஞ்சாங்கூடு.
#இளையராஜாயணம்

அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவதென்பது மன்மதலீலையை வெல்வதற்கு ஒப்பானதாய் என்னளவில்.
#வேண்டாம் மைண்ட் வாய்ஸ் தெளிவா கேட்குது.

ராமராஜனுக்கு அப்புறம் ரொம்ப நல்லவன்னா அது நாதஸ்வரம் கோபிதான்.
#விருச்சிககாந்தின் முன்னோடி ஸ்ட்ரைட்டா ஹீரோதான்.

நேற்றுபோல் இன்று இல்லையாம்
இன்று போல் நாளை இல்லையாம்
வாரம் முச்சூடும் ஒரே மாதிரிதான் தெரியுது.
#கூலிக்கு குப்பை கொட்டுபவனின் பிழைப்பு

சாயலைக் குறித்த பிரக்ஞை இல்லாதவனின் உலகில் கழுதைகளுக்கான இடம் இருப்பதில்லை.
#எல்லாமே குதிரைதான்

பழகிய பாதையில்தான் பயணம்,
எங்கோ ஆழமாய்
நினைவுகளின் நங்கூரம்.
#பறத்தல் ஆசை


எதுக்காவது எரிச்சல் படலாம்; எல்லாத்துக்குமே என்றால் குழப்பம் உலக இயக்கத்தில் இல்லை,உங்கள் உள்ளத்தின் இயக்கத்தில் என்றறிக.
#தத்துவமாமாம்

பறவைக்கு சிறகு அழகு
பறவைக்கா என்றால் இல்லை.
#பறவையே வந்து உன்னாண்ட சொல்லுச்சா?

ஒத்த ரசனையுடைய நண்பர்களை புதிதாய் பெறும்போது இருக்கும் சிக்கல், தேய்ஞ்சு போன ரெக்கார்டையே திரும்ப திரும்ப தேய்க்க வேண்டியதாய் இருப்பதுதான்.
#ஆனாலும் சொறிய சொறிய சொகமாவுல்ல இருக்கு.

தம்பியா பிறந்தவன் கல்யாணமும், ஐ.ஆர்.சி.டி.சியில் டிக்கெட் புக் பண்ணுவதும் ஒண்ணுதான்..
#ஆல்வேஸ்_இன் _வெயிட்டிங்_லிஸ்ட்

சில நேரங்களில் சில மனிதர்கள்.
#பல நேரங்களில் பல ’நான்’கள்

”இனியும் வாழணுமா” என்கிற எண்ணம் ரசம் சாதத்திற்கு அவிச்ச முட்டையை தொட்டுக்க வைக்கும் தருணத்திலும் வரலாம்.
#என்னமோ போடா மாதவா

அட்டகாசம் என்பதன் சுருக்கமே ஆஸம்.
#செம, என்னா கண்டுபிடிப்பு

Friday, April 11, 2014

ராஜாவின் பாடல்களோடு ....

நேற்று, சூரியன் FMல் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் அந்தநாள் ஞாபகம் நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்தேன். ரொம்ப அரிதாகத்தான் FM கேட்பது வழமை. எனினும் எப்போதெல்லாம் கேட்க மனநிலை வாய்க்குதோ அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் இனி இதை தொடரவேண்டுமென. 

நமக்குப் பிடித்த பாடல்களை பிளே லிஸ்ட்டில் தேர்வு செய்து வரிசையாகக் கேட்பதைக்காட்டிலும்,இந்த FMல் கேட்கும்போது அடுத்து என்ன பாட்டாய் இருக்கும் என்று ஒரு குறுகுறுப்பை நமக்குள் கடத்துவது இதில் பிடித்த விஷயமாக இருக்கிறது. சமயத்தில் ஒரு பாடலைக் கேட்டுக்கொண்டிருக்குபோது அதன் நீட்சியாய் மற்றொரு பாடல் குறித்து யோசனை உதிக்கும். பார்த்தால் அடுத்ததாய் அதே பாடல் ஒலிக்கும். அப்போது ஏற்படுகிற பரவசம் ஒரு குழந்தையின் குதூகலத்தை ஒத்திருக்கும். அது இந்தFM களின் மற்றொரு சிறப்பு.

ஒரு பாடலை வீடியோ வடிவில் பார்ப்பதைவிட இப்படி ஆடியோவை மட்டும் கேட்கும்போதுதான் நிறைய சுவாரஸ்யங்களை கவனிக்க ஏதுவாய் இருக்கிறது. குறிப்பாக அது இளையராஜாவின் பாடல்கள் என்று வரும்போது மயிர் கூச்செறிய வைக்கும் அளவிற்கு அந்த சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.எத்தனையோ முறை கேட்ட பாடல்கள்தான் என்றாலும் சில பாடல்களை பெரிய இடைவெளிக்குப் பிறகு நேற்று கேட்டபோது, மீள் வாசிப்பில் புதிய கதவுகளைத் திறக்கும் கவிதையைப்போல மொட்டையின் மெட்டுகள் புதுப்புது பூங்கதவுகளைத் திறந்த வண்ணம் இருந்தன.

எஜமானின் ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் பாடலில் ’கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க’ என்று ஹைபிட்சில் தொடங்கும் கோரஸ் முடிந்து சிதறும் ஒலிச்சிதறலைத் தொடர்ந்து ஒரு பட்டாம்பூச்சியின் சிறகை வருடுவதைப்போல அத்துனை மெல்லிய குரலில் ’ஒரு நாளும் உனை மறவாத’ என்று ஜானகி ஆரம்பிக்கும் போது எங்கேயோ ஹைபிட்ச்சில் ஆரம்பிச்ச ட்யூன் இத்துனை சாஃப்டா மாறி நிற்கிறதே எப்போ எங்கே நடந்தது அந்த டிரான்சிஷன் என்று யோசிக்கிறேன். எந்த நெருடலும் இல்லாமல் அழகாய் பயணிக்கிறது பாடல். அதுதான் மொட்டை.

அடுத்து மானே தேனே கட்டிப்புடி என்று உதயகீதத்திலிருந்து பாடல். இந்த பாடலில் ராஜாவின் பாராட்டப்பட வேண்டிய விஷயம் எஸ்.பி.பியை பாட வைத்திருப்பது. சில மெட்டுக்கள் எஸ்.பி.பியை மனதில் கொண்டே ராஜா யோசிச்சிருப்பாரோ என்ற கோணத்தில் இந்த பாடலை ரசிக்க ஆரம்பிக்கிறேன். பெரிதாய் சிலிர்க்கிற மாதிரியான வாத்தியக் கலவை இல்லாத பாடல் எனினும் அதையெல்லாம் யோசிக்கத் தேவையே இல்லை என்பதுபோல எஸ்.பி.பி எத்தனை விதமான பாவங்களை அதுவும் ஓடிக்கொண்டே இருக்கிற தாளக்கட்டில் அசால்ட்டாக கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இவ்வளவுக்கும் அப்போதெல்லாம் லைவ் ரெக்கார்டிங் வேறு. அவ்வப்போது கொடுக்கிற சின்ன சின்ன சில்மிஷ சேட்டைகள்கூட அந்த தாளக்கட்டில் பிசகாமல் உட்கார்ந்துகொண்டே இருந்தன.சிம்பிள் மெட்டைக்கூட பெரிதாய் சிலாகிக்க வைத்த விதத்தில் இந்த பாடலை பொருத்தமட்டில் ராஜாக்கு நிகரான கிரெடிட்டை எஸ்.பி.பிக்கும் கொடுக்க வேண்டும்.

தானந்தன கும்மி கொட்டி, அவ்வப்போது கேட்டிருக்கேன், அத்தனை விருப்பமாய் இருந்ததிராத இப்பாடலை நேற்றுதான் முழுவதுமாய் அனுபவித்துக் கேட்டேன். மலேசியா வாசுதேவனின் குரலில் இந்த பாடலில் வேறு எந்த பாட்டிலும் கேட்காத ஒரு வசிகரத்தைக் கவனித்தேன். ”புது மாக்கோலம் விழி மீன்போட” ,”சிறுவானி கெண்டைய போல மின்னுது கண்ராசி” என்ற வரிகளில் மலேசியாவின் குரல் ஒலிக்கும் தொனியைக் கவனித்ததும் இனி இவரின் மற்ற பாடல்களையும் இப்படி கேட்டு பார்க்க வேண்டும், நிறைய மிஸ் பண்ணியிருக்கேன் என யோசனை ஓடியது. எஸ்.பி.பி, மனோ போன்றோரின் வாய்ஸ் மாடுலேஷன்கள் குறித்து நாள் முழுக்க பேசச்சொன்னாலும் பேசுவேன். அந்த லிஸ்ட்டில் மலேஷியாவையும் இனி சேர்க்க வேண்டும்.

தபேலா டாமினேட்டிங் செய்யும் தெம்மாங்கு மெட்டுகளை ராஜா 90களில் அடிச்சி துவம்சம் பண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் வந்த பாடல் இது. எனினும் இந்த பாடல் தனக்கென்று ஒரு சுவாரஸ்யத்தை தக்க வைத்திருப்பதை நேற்றுதான் கவனித்தேன். அது அந்த மெட்டு பயணிக்கும் போக்கு, சரணத்தில் கிட்டத்தட்ட இரு வரிகளுக்கு ஒரு முறை மாறுகிறது மெட்டின் அமைப்பு. ஆனாலும் அந்த மாற்றம் அத்தனையும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் பாடல் ஆரம்பித்ததும் தானாய் ஆட ஆரம்பிக்கிற தலையை அப்படியே ஆட்ட வைத்தபடியே மொத்த பாடலும் இருந்தது. மேலும் ராஜா, தான் பாடும் பாடல்களில் உச்சரிப்பிற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுப்பாரென்று நாம் அறிந்ததே, இந்த பாட்டில் மலேசியாவும் சரி ஜானகியும் சரி உச்சரிப்பில் ராஜாவின் உச்சரிப்பிற்கு சற்றும் குறையாத அளவில் பாடியிருப்பதையும் கவனிக்க முடிந்தது.

உதயகீதம் படத்திலிருந்து மறுபடியும் ஒரு பாடல் வந்தது. என்னோடு பாட்டு பாடுங்கள் என்று. எண்பதுகளில் ராஜா உச்சத்தில் இருந்த டைமில் வந்த பல முத்துகளில் ஒன்று. இந்த பாடலை எப்போது கேட்டாலும் என்னை வெகுவாக கவர்வது வரிகள்தான். குறிப்பாக ’பௌர்ணமி புன்னகை பால் மொழி கன்னிகை’ என்ற வரிகள். கன்னிகை என்ற வார்த்தை பிரயோகத்தை மட்டுமே வைத்து வாலியாக இருக்கலாம் என முடிவிற்கு வந்தேன்.இன்று இணைய தேடலில் எம்.ஜி.வல்லபன் என்ற தகவல் கிடைக்கப் பெற்று ஆச்சர்யம். இவர் வேறு என்ன பாடல்களையெல்லாம் தந்திருக்கிறார் என தேட வேண்டும்.

”நேரம் ஆகிவிட்டது இந்த பாட்டோடு தூங்கிடலாம்” என்ற எண்ணம் தோன்றிய பின்னும் அடுத்த பாட்டோடு நிறுத்திக்கலாம் என ஒரு மணி நேரத்திற்கு மேலாக தவணை வாங்க வைப்பது ராஜாவின் பாடல்களை கேட்கும்போது மட்டுமே நிகழும் அனிச்சை என்றாகிவிட்டது. நள்ளிரவு ஒன்றரை மணிக்குத்தான் மனசில்லாமல் தூங்கவே சென்றேன்.

Wednesday, February 26, 2014

புரியுதா புதிர்-2

1234


குறிப்பு: 

1.இட வலம்,வல இடம்,கலைந்து என எப்படியும் இருக்கலாம்.

2.எழுத்துப் பிழை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.ஓசையை வைத்து சில குறிப்புகள் இருக்கலாம்.

3.சில படங்களை இணைத்து பொருள் கொள்ள வேண்டும்.

Wednesday, February 5, 2014

புரியுதா புதிர்..


புதிர்-1 


புதிர்-2


புதிர்-3


புதிர்-4
புதிர்-5குறிப்பு: விடைகள் இட வலம்,வல இடம்,கலைந்து என எந்த ஆர்டரிலும் இருக்கலாம்.

Thursday, January 23, 2014

80’s - 90's சினிமா டெம்ப்ளேட்

ஊரில் பெரிய பண்ணையார், அவருக்கு பட்டணத்தில் படிக்கும் ஒரு மகள் இருப்பார். மகன்கள் இருந்தாலும் அவர்கள் டம்மி பீஸாகவே இருந்து தங்கச்சி சொல்வதே வேதவாக்காக நினைத்து வாழும் ஆத்மாக்களாக இருப்பார்கள். கல்லூரி விடுமுறையில் பண்ணையாரின் மகள் தனது தோழிகளான நான்கு சப்பை ஃபிகர்களோடு சொந்த ஊருக்கு வருவார். அதே ஊரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து என்ன வேலை பார்க்கிறார் என்பதே சொல்லப்பாடாத ஹீரோவிடம் ‘ஏய் மேன்’ என்று சொடுக்கு போட்டு அழைத்து தனது பண்ணையார் மகள் செல்வாக்கைக் காட்டுவார். அடுத்த நொடியிலிருந்து ஹீரோவிற்கு வேலை கிடைத்துவிடும், அதாவது பண்ணையார் மகளின் திமிரை அடக்குவதையே முழுநேர வேலையாகக் கொண்டு களத்தில் குதித்துவிடுவார்.

இந்த இடத்தில் ஹீரோயினை சீண்டி ஹீரோ தனது நண்பர்களோடு ஒரு பாட்டு பாடியே ஆகவேண்டும்.இங்கே ஹீரோவிற்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு 50 லிருந்து 70 வயது வரை குறைந்த பட்சம் இருக்க வேண்டும். ஏனெனில் எப்படி படு மொக்கை ஃபிகர்களை தோழிகளாக வைத்தால்தான் சாத மொக்கை ஃபிகரை ஹீரோயினா ஆடியன்ஸான நாம் ஏத்துக்குவோமோ அதே போல 40-ல் இருக்கும் ஹீரோவை இளமையாகக் காட்ட இந்த டெக்னிக் ,அதெல்லாம் தொழில் ரகசியமாமாம்.

பாட்டு முடிந்ததும் ஹீரோயின் ஹீரோவைப் பார்த்து,”யூ யூ யூ” என்று கோபமாய் மூன்று முறை  சொல்ல வேண்டும்.மேலும் ‘இடியட்’, ’ஸ்கவுன்ட்ரல்’,’ஸ்டுப்பிட்’,’கெட் லாஸ்ட்’ போன்ற அறிய சொற்களை அவ்வப்போது உதிர்ப்பதில் ஹீரோயின் புலமை வாய்ந்தவராகவும் இருப்பார்.இதன் மூலம் ஹீரோயின் பெரிய படிப்பு படித்தவர் என்பதை பார்வையாளனுக்கு சூசகமாக கடத்துகிறார்கள் இயக்குனர்கள். அந்த வகையில் அவை தவிர்க்க முடியாதவை ஆகின்றன. 

தனது ஆங்கிலப் புலமையை நிரூபித்துவிட்ட ஹீரோயின் அதே கோபத்தோடு கிளம்பிப்போய் ஹீரோ தன்னிடம் செய்த ரவுஸை பண்ணையாரிடம் போட்டுக் கொடுத்து விடுவார். அதுவரை சின்ன வீடுகளுக்கு போய் வருவதை மட்டுமே செய்து கொண்டிருக்கும் பண்ணையார், ஹீரோவை பழி வாங்கக் கிளம்பிவிடுவார். எப்படின்னா சொதப்பலான அடியாட்களோடு படு சொதப்பலான பிளான்களை போட்டு ஹீரோவிடம் வரிசையா பல்ப் வாங்கிகிட்டே இருப்பார். கட்ட கடைசியா ஒரு சுமாரான பிளானை, இசையமைப்பாளரின் பி.ஜி.எம் உதவியோடு படு பயங்கர பிளானாய் நம்மை நம்ப வைத்து இறுதி பல்புக்கு ரெடியாகிவிடுவார். அதுவும் பல்பாத்தான் இருக்குமென்று நூறு சதவிகிதம் தெரிந்தாலும் வெட்கமே இல்லாமல் நாமும் சீட்டு நுனியில் குந்தி பார்க்க ஆரம்பிச்சிடுவோம்.

இதற்கிடையில் ஹீரோவோட ஒரு மொன்னை ஃப்ளாஷ் பேக்கை அந்த ஊரில் உள்ள ஒரு பாவப்பட்ட கேரக்டர் மூலமா அறிந்துகொண்டோ அல்லது ஹீரோவின் உதவும் குணத்தைப் பார்த்தோ ஹீரோவை லவ்ஸ்விட ஆரம்பித்து இரண்டு டூயட்கள்,ஒரு சோகப் பாடலை பாடி முடிச்சிருக்கும் ஹீரோயின், இந்த பிளானை நேரடியாகவோ அல்லது இதற்கென்றே பிரத்யேகமாக எண்டராகும் ஒரு வேலையாளின் மூலமாகவோ ஹீரோவிடம் சொல்லிவிடுவார்.

ஹீரோவும், ஹீரோயின் சொன்ன இடத்திற்குப் போய் அந்த படு பயங்கர பிளானான ஹீரோவின் அப்பா,அம்மாவை கட்டி வைத்திருக்கும் குடோனிலிருந்து அவர்களை மீட்டு வெற்றிக் கொடி நாட்டிவிடுவார்.(ஹீரோவோட தங்கையை பண்ணையாரோ அல்லது அவரது ஆட்களோ ரேப் செய்ததால் தங்கை தூக்கில் தொங்கியதையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை).அங்கே நடக்கும் கலவரத்தில் ஹீரோவிற்காக செதுக்கி கூரா வைத்திருக்கும் ஆப்பில் பண்ணையார் குந்தி உயிரிழந்து விடுவார்.அப்பாலிக்கா ஹீரோயின் குடும்ப குத்துவிளக்காகி ஹீரோவின் குடிசை வீட்டுக்கு போயிடுவார்.

இதே டெம்ப்ளேட்டில் ட்விஸ்ட் ஒண்ணும் வைப்பாய்ங்க அதாவது ஹீரோவும் ஹீரோயினும் அத்தை புள்ள மாமா புள்ள உறவு முறையாக்கும்னு.

1980லிருந்து 1995 வரையிலான தமிழ் சினிமாவில் ரஜினியிலிருந்து ராமராஜன் வரை இந்த டெம்ப்ளேட்டிற்கு தப்பிய ஹீரோக்கள் இல்லை .