Wednesday, December 31, 2014

ஊனக் கண்

”அஞ்சு ரூவாய்க்கி வெத்தலாக்கு கொடுங்க” என்ற குரலில் தொலைக்காட்சியில் ’கண்ணுக்குள் நூறு நிலவா’ பாடிக்கொண்டிருந்த அமலாவிடமிருந்து முகத்தைத் திருப்பிய முத்து, வெயிலில் நடந்து வந்த களைப்போடு மூச்சு வாங்கியபடி கையில் ஐந்து ரூபாய் காசை நீட்டிக்கொண்டு ஐம்பதிற்கு ஒன்றிரண்டு வயது குறைவாய் மதிக்கத்தக்க தோற்றத்தில் நின்றவனைப் பார்த்ததும்  சற்றே ஆச்சர்யத்துடன் ”என்னய்யா வேலா இந்தப் பக்கம்” என்றான்.

 ”செவ்வாப்பட்டில ஒரு துக்கம்ங்க, அதுக்கு பொயிட்டு இங்கன மூண்ரோட்டுல பஸ் ஏறிக்கலாம்னு நடந்து வரேன்” என்று வார்த்தைகளை இழுத்து ”இது யாராய் இருக்கும் “ என்ற யோசனையோடு பதில் சொன்னான் வேலன்.

வேலனின் முகத்தில் தன்னை அடையாளம் கண்டுகொள்ளாத குழப்பத்தை கவனித்த முத்து,”என்னைய்யா என்னைய யாருன்னு தெரியலையா?  மயிலம்பா பேரன் முத்து, ஞாவகம் இருக்கா?” என்று கேட்டதும்,”அப்படிச் சொல்லுங்க சேதிய, செறு வயசுல பாத்தது, ஏட குறுக்க பாத்திருந்தா இன்னாருன்னு கண்டுகிட்டு இருந்திருப்பேன்,நல்லா இருக்கியளா? ” என்று காவியேறிய பற்கள் தெரிய பெரிதாய் சிரித்தான் வேலன்.

”நல்லாயிருக்கேன்,அப்புறம் ஊர்ல எல்லாரும் சௌர்யம்தானா? எங்க அம்மாச்சி வீட்டு பக்கமெல்லாம் போறதுண்டா?”

“ஏன் போவாம, நீங்கதான் அம்மாச்சி போன பின்னாடி அங்கிட்டு எட்டிக்கூட பாக்க மாட்டேங்குறிய, மாமனெல்லாம் வேண்டாமா”

“எங்கே, பொழப்ப பாக்கவே நேரம் சரியாயிருக்கு, தேவ தவசின்னா வந்து போறதுதான்”

“அங்க இருக்கயில எங்க பெரியாத்தாள சுத்தி சுத்தி வருவிய” 

பெரியாத்தா என்று வேலன் சொல்வது பவானியை.முத்து அப்போது அவனுடைய அம்மாச்சியின் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தான். முத்துவின் அம்மாச்சி வீட்டின் பங்காளி வீடுதான் பவானி வீடு. 

பவானி குழந்தையாய் இருந்த போது ஒரு அடைமழை நாளில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் அவளின் வலது காலை முட்டிக்குக் கீழே எடுக்க வேண்டியதாகிவிட்டது. இரு பக்க கக்கத்திலும் ஊன்று கோல் வைத்துதான் நடப்பாள். வீட்டிற்கு இவள்தான் மூத்தவள் என்றபோதும்,கூட பிறந்த இரண்டு பெண்களுக்கும் அப்போதே திருமணமாகிவிட்டிருந்தது.

 பள்ளிக்கூடம் பவானியின் வீட்டிற்கு அடுத்ததாகத்தான் இருக்கும். பள்ளியில் விளையாட்டுத் திடல் என்று ஒன்று இல்லாததால் பவானி வீட்டின் பின் புறம் விஸ்தாரமாய் கிடக்கும் இடத்தில்தான் பசங்க விளையாடுவது வழக்கம். பசங்களுக்குள் நடக்கும் சண்டைகளை தீர்த்து வைப்பது, விளையாட்டிற்கு நடுவராய் இருப்பது என பவானியும் அந்த நேரத்தில் அவர்களின் விளையாட்டில் கலந்துகொண்டு குழந்தைகளோடு குழந்தையாகிவிடுவாள். 

பள்ளியருகே உப்பு மாங்காய்,ஜவ்வு மிட்டாய்,வெள்ளரிக்காய் தேன் மிட்டாய் என மொத்த கடையையும் ஒரு கூடையில் அடக்கி உட்கார்ந்திருக்கும் ரெங்கம்மா கிழவியிடம் தேன் மிட்டாய்,கல்கோனா வாங்கி வரச் சொல்லி தினமும் முத்துவிடம் காசு கொடுத்துவிடுவாள். தேன் மிட்டாயை இவள் எடுத்துக்கொண்டு கல்கோனாவை காக்காக் கடி கடித்து பசங்களுக்கு பங்கு போட்டுத் தருவாள்.முத்து ஊருக்குப் போய் திரும்பும்போதும்கூட தன் அப்பாவின் பெட்டிக்கடையிலிருந்து நிறைய தேன் மிட்டாய்களைத்தான் பாவானிக்கு என்று கொண்டுவருவான். இப்படி அவளின் சிறுபிள்ளைத் தனங்களால் அவளை தங்கள் வயதை ஒத்த ஒருத்தியாகவே பாவிப்பார்கள் பள்ளிச் சிறுவர்கள்.

விடுமுறை நாட்களில் ஒரு வேலையும் ஓடாது இவளுக்கு.முத்துவும்கூட சனி ஞாயிறுகளில் அவனுடைய ஊருக்குப்போய் விடுவான்.எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் பிள்ளைகளோட விளையாடலாம் என்றே பார்த்துக்கொண்டிருப்பாள். 
பசங்க விளையாடும் இடத்தில் சில சமயம் நெல்,கடலை இப்படி ஏதாவது தானியங்களையோ,வைக்கோல்,கடலைக்கொடி போன்ற தீவனங்களையோ காய வைத்திருப்பார்கள். அந்த மாதிரி நேரங்களில் பவானியின் வீட்டில் ஊழியம் பார்க்கும்  வேலன் பசங்களை அங்கே விளையாடவிடாமல் விரட்டுவான்.

”இங்கரே இப்ப என்னத்துக்கு அதுவொள வெறட்டுற, அப்புறம் அதுவொ எங்கிட்டு போய் வெளையாடுங்க, வைக்கதானே மிறிச்சா மாடு திங்கலன்னா சொல்லப்பொவுது, உன் வேலை பாத்துகிட்டுப் போ” என்பது போல வேலனை  ஏசுவாள். 

அப்போதெல்லாம் வேலன் “ஆமா நீ ஒரு ஆளு பெரியாத்தா, நான் திருப்பி அள்ளி வைக்க வாவா காய வச்சிருக்கேன். இப்படி அங்கிட்டு இங்கிட்டும் எரச்சு போட்டா அள்ளுறதுக்கு செரமமா இருக்குமா இல்லியா, நீ செறு புள்ளையிலயும் சேத்தி இல்ல, வளர்ந்த பொம்பளையிலயும் சேத்தியில்ல. அம்மா என்னையதான் பேசும், நீ ஒம்பாட்டுக்கு குந்தியிருப்ப” என்று அங்கலாய்த்துக்கொள்வான்.

இப்படி பசங்க தானியங்களை மிதித்து ,இரைத்து நாசம் செய்து வைக்கும் போதெல்லாம் தன் அம்மாவிடம் கெட்ட வார்த்தைகளால் வசவுகள் வாங்கிக்கொள்வாள். ஆனாலும் பசங்க விளையாடுவதற்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொள்வாள்.

பள்ளி முடிந்ததும்  பவானியின் வீட்டிற்குத்தான் ஓடுவான் முத்து. பவானியும் இவன் எப்போ வருவானென்று பார்த்துக்கொண்டே இருப்பாள். இவன் வந்த பிறகு இருவரும் அவர்களின் வீட்டு தோப்பிற்கு போவார்கள். அங்கே காய்த்திருக்கும் மாங்காய்,நெல்லிக்காய்,கொய்யாக்காய் என எதையாவது ஒன்றை பறித்துக்கொண்டு பம்ப் செட் அருகே இருக்கும் புளிய மரத்தின் தனிந்த கிளையில் அமர்ந்து ஊஞ்சல் போல மேலும் கீழுமாக கிளையை அசைத்து ஆடிக்கொண்டே இருவரும் எதையாவது பேசிக்கொண்டே தின்றுகொண்டிருப்பார்கள்.

பெரும்பாலும் சினிமாக் கதைகளைத்தான் பேசுவாள் பவானி. அவளுக்கு கார்த்திக்  படங்கள் என்றால் மிகப் பிடிக்கும். ’பாண்டி நாட்டுத் தங்கம்’ படம் பார்த்ததிலிருந்து கார்த்திக்கின் மேல் பைத்தியமாக இருந்தாள். இதே ஊஞ்சலில் அமர்ந்து  ”உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது” என்று கார்த்திக்கை நினைத்து உருகிப் போய் பாடியியிருக்கிறாள். இந்த மாதிரி சமயங்களில் ”நீயும் அந்த படத்துல வர அக்கா மாதிரியே அழகா இருக்கக்கா” என்பான் முத்து. அதுதான் அவளது எதிர்பார்ப்பாகவும் இருக்கும். முத்து அப்படி சொல்லும்போது கூடுதலாய் இரண்டு நெல்லிக்காய்கள் கிடைக்கும் என்றாலும் அவன் அதற்காக அவளை அழகியென்றும் சொன்னதில்லை. உண்மையில் அவளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். சும்மா சும்மா அவளையே பார்த்துக்கொண்டிருப்பான். அவளுக்கும் அது தெரியும். கமுக்கமாகச் சிரித்துக் கொள்வாள். விலகியிருக்கும் முடி கற்றைகளை காது மடல்களில் கதாநாயகி பாவனையிலேயே அவள் சரி செய்வது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று இவள் கவனித்து வைத்திருந்ததால் அடிக்கடி அதை செய்து அவன் இவளை ரசிப்பதை ரசிப்பாள்.தனது ஊனமே பிரதானமாய் தெரிந்து அனைவரும் பரிதாப பார்வைகளை தன் மேல் வீசுகிற போது முத்துவின் இந்த இயல்பினாலேயே அவனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.

முத்து  ஒரு முறை மாமரத்தின் உச்சியில் நின்று மாங்காய் பறித்துக்கொண்டிருந்தபோது பவானியின் அம்மா பார்த்துவிட்டு பவானியைத் திட்டினாள், “ஏண்டி சின்னப்புள்ளய அங்க தெக்க ஏறச்சொல்லியிருக்கிய கூறு இருக்கா, அவன் அம்மாச்சிக்கு மட்டும் தெரிஞ்சிச்சு என்ன பண்ணுவான்னு தெரியாது ஆமா” என்றுவிட்டு, “ஏலேய் இறங்குறியா இல்லியா” என்று சத்தம் போட்டாள்.

இவளின் சத்தத்தில் பதறியவன் அவசர அவசரமாய் இறங்க முயல்கையில் மரத்தின் பாதியிலிருந்து சறுக்கி கீழே விழுந்தான். 

முட்டியில் கை,கால்களில் சிராய்ப்போடு விழுந்த கிடந்தவனைப் பார்த்து பதறி ஊன்று கோலை மறந்து ஒற்றைக்காலால் நொண்டி நொண்டி ஓடிவந்து அவனின் அருகே அமர்ந்தவள் , தன் அம்மாவை “உன் அண்டா தொண்டய வச்சி அலறியதுலதான் அவன் பயந்து விழுந்துட்டான்” என்று ஏசினாள்.
“ஊராமூட்டுப் புள்ளய மரத்துல ஏத்திவிட்டதுமில்லாம, என்னையவா பேசுர, ஆக்கி போடுறத தின்னுட்டு அடங்கி ஒடங்கி ஒரு இடத்துல குந்தாம பொழுதேனைக்கும் நண்டு சிண்டுவொளோடதான் ஆட்டம், வயசு ஆவுதே புத்தி வேண்டாம்” என்று திட்டிய பவானியின் அம்மா, அருகே ஓடிய வாய்க்காலில் படிந்திருந்த பொறுக்கு மண்ணை எடுத்து சிராய்ப்பில் தடவச் சொல்லி பவானியிடம் கொடுத்துவிட்டு , ”யய்யா ராசா ஒங்க அம்மாச்சிகிட்ட சொல்லிடாதய்யா” என்று முத்துவின் தாவாயில் கை வைத்தபடி சொன்னவள் தொடர்ந்து, “இனிமே இவனை அழச்சிக்கிட்டு இங்கிட்டு வா, இன்னொரு காலையும் முறிச்சு ஒக்கார வைக்கிறேன்” என்று மகளை மறுபடியும் திட்டிக்கொண்டே,”நேரமா வீட்டுக்குப் போய் சேருங்க” என்றபடி செடிகளுக்கு  தண்ணீர் பாய்ச்ச போய்விட்டாள்.

”முத்து, ரொம்ப வலிக்குதாடா” என்று கேட்டபடியே சிராய்ப்பில் பொறுக்கு மண்ணைத் தடவியவள். ”வேற எங்கினயும் அடிகிடி படலையே” என்று அவன் காலை இப்படி அப்படியுமாக மாத்தி பார்த்துக்கொண்டே “வந்துட்டா காட்டுச் செறுக்கி கத்திகிட்டே, புள்ளைக்கு நல்லா அடிபட்டுச்சு” என்று மீண்டும் தன் தாயை ஏசியவளின் கண் கலங்கியிருந்ததைப் பார்த்து சிராய்ப்பில் சின்னதாய் இருந்த வலியும் அவனுக்கு மறத்துப் போனதுபோல இருந்தது.

நினைவுகளில் மூழ்கி இருந்த முத்துவின் பார்வை அனிச்சையாய் மணிகட்டுத் தழும்பில்  விழுந்ததில் முகத்தில் மெல்லிய புன்னகை  படரத்தொடங்கியது.

“பெரியாத்தாதான் ஒங்க ஊரு சனத்த யார பாத்தாலும் ஒங்கள பத்தி விசாரிச்சுகிட்டே கெடக்கும். பெத்த புள்ளயாட்டமா அதுக்கு நெனப்பு” என்ற வேலனின் பேச்சில்  நிமிர்ந்தவன் ,“இப்பவும் நீ அங்கதான் பண்ணயத்துக்கு இருக்கியா?” என்றான்.

“இல்லீங்க, பயலுவொ தலையெடுத்த பின்னாடி பெருசா வேலை வெட்டிக்குன்னு போறதில்லை. பெரியாத்தாளுக்கு எதுனா கடை கன்னின்னு போவணும்னா தாக்கல் விடும். அதுக்கு இப்படி எதுனா ஒத்தாசை செய்யிறதோட சரி” என்றவன் தொடர்ந்து,”அங்கிட்டு வந்தா ஒரு எட்டு அதை பாக்காம வந்துராதிய பாவம். தாய் தாப்பன் போன பின்னாடி இப்ப பெரியாத்தா தனியாதான் பொங்கி சாப்பிடுது, நீங்கல்லாம் வந்து பாத்தா சந்தோஷப்படும்” என்றான்.

பெத்த தாயாட்டமா என்றதும் நினைவுகள் திரும்ப பின்னோக்கி ஓடியது,
தன் வீட்டில் விஷேசமாக என்ன செய்தாலும் இவனுக்கென்று எடுத்து வைத்துக் கொடுப்பாள். இன்னும் சொல்லப்போனால் இட்லி,தோசையெல்லாம் முத்துவின் அம்மாச்சியை பொருத்த வரையில் பொங்கல் தீபாவளி என்று பண்டிகை நாட்களில் செய்யப்படும் பலகார வகைகளில் ஒன்று. தினமும் பழைய சோறுதான் காலையில் ஊற்றி வைப்பாள். அப்படியிருக்க தன் வீட்டில் எப்போதெல்லாம் இட்லி,தோசையோ அப்போதெல்லாம் “பாவம்மா அந்த பய அந்த பெரியம்மா எப்பயும் பழய சோத்தையே போடுது” என்று தன் அம்மாவிடம் நயந்து பேசி இவனுக்கென்று கொஞ்சம் கொண்டு வந்து கொடுத்துவிடுவாள்.

இப்போது கரிசனத்தோடு பவானி பற்றிய நினைவுகளை அசைபோடுபவன்தான் ஒரு கட்டத்தில் அவளை பார்ப்பதே பாவம் என்பது போல நடந்து கொண்டான். அப்போதைய அவனின் செயலைக் குறித்து இப்போது சங்கடமாய் யோசிப்பது அவனின் முகத்தில் தெரிந்தது. 

ஒரு விடுமுறையின் போது ஊருக்குப் போய்விட்டு திரும்பிய போது பவானியைத் தேடிக்கொண்டு அவங்க வீட்டிற்கு  ஓடியவன், சற்று நேரத்திலேயே திரும்ப அம்மாச்சியின் வீட்டிற்கே ஓடிவந்து படபடப்போடு உட்கார்ந்திருந்தான்.

”என்னடா அக்காவ தேடிகிட்டு ஓடுன,பொசுக்குன்னு திரும்ப வந்து குந்தியிருக்க?” என்றாள் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்த அம்மாச்சி.

”உன் வேலைய பாரு” என்று கத்தினான். படபடப்போடு நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த அவனின் அம்மாச்சி,

”இப்ப என்ன சொன்னேன்னு இப்படி கத்துறிய தொர, தென்னண்ட வீட்டு அம்மாச்சி வெரட்டிவிட்டுட்டாளா, ஒரு நேரம் போனோம் வெளையாண்டோம்னு இல்லாம பொழுதேனைக்கும் அங்கயே குடியிருந்தா அப்படித்தான் பேசுவாளுவோ, இங்கன செத்த தரிக்கிதா சூத்து, ஓடினியல்ல வாங்கிகிட்டு வா” என்றாள்.

“அந்த அம்மாச்சி ஒண்ணும் சொல்லல” என்றுவிட்டு அமைதியா உட்கார்ந்திருவன், சற்று நேரம் கழித்து, “அம்மாச்சி” என்றான்.

“ம்” என்றவள் தொடர்ந்து பெருக்கிக்கொண்டே வாசல் பக்கம் போனாள்.

”அம்மாச்சியோவ்” என்றான் சற்று உரக்க.

”சோறு போடவா?”

”வேண்டாம், நீ இங்க வாவே ஒன்ட்ட ஒண்ணு சொல்லணும்”

”ஆமா, வேலை கிடக்கு ஒங்கிட்ட கதை கேக்க முடியாமத்தான் இருக்கேன்” என்றவள். தொடர்ந்து “ம் என்னான்னு சொல்லு?” என்றாள்.

“அது” என்று எச்சில் முழுங்கியவன், பவானி வீட்டை நோக்கி அனிச்சையாய் ஒரு பார்வையை வீசிவிட்டு, ”அந்த பவானி இருக்குல்ல அதுவும் அந்த வேலனும் வைக்க போரு இடுக்குல ஒண்ணா படுத்திருக்கவோ” என்றான்.

”ஏலேய்” என்று பதறிய அம்மாச்சி, ”இங்கரு ஒரு பொம்பள் புள்ளய அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றவள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலை தணித்து ”ஆமா நெசமாவாய்யா?” என்றாள். முத்துவிடமிருந்த படபடப்பு இப்போது அம்மாச்சியிடமும் தாவியிருந்தது. 

”சத்தியமா அம்மாச்சி நான் பார்த்தேன்” என்றான்.

அம்மாச்சிக்கு படபடப்பு எகிற ஆரம்பித்தது, ”இங்கரு ராசா யாருகிட்டயும் இதப் பத்தி மூச்சு விட்டுக்கக் கூடாது”. என்றவள் தொடர்ந்து படபடபோடவே,”கொல விழுந்து போவுமுடா, பண்ட ஒருத்திய இப்படி சாதிகெட்டவனோட பொழங்கினான்னு உசுரோட பொதச்ச ஊரு இது”. என்றவள். ”இங்கப் பாரு எவளாச்சும் எங்கிட்டாச்சும் போறாளுவோ பள்ளியொடம் உண்டு வீடு உண்டுன்னு கம்முன்னு இருக்கணும்” என்றவள். எங்கே தன் பேரன் யாருகிட்டயும் இதைச் சொல்லிவிடுவானோ என்று அன்று முழுக்க திரும்ப திரும்ப அவனிடம் பல விஷயங்களைச் சொல்லி பயமுறுத்தி தானும் பயந்து கொண்டிருந்தாள். 

அடுத்த நாள் பள்ளி மதிய இடைவேளையின்போது பிள்ளைகள் எல்லாம் பவானி வீட்டுத் திடலில் விளையாட சென்றபோது, முத்து மட்டும் போகவில்லை. முத்துவின் அம்மாச்சியிடம்,”என்ன பெரியம்மா ஒம்பேரன காலையிலிருந்து இங்கிட்டு காணும்” என்றாள் பவானி.

”தெரியலையேடி, அவன் ஊர்லேர்ந்து வந்தப்ப கிரிகிட்டி அடிக்கிற பேட்டு கொண்டுகிட்டு வந்தான். அதை தூக்கிக்கிட்டு வடக்கித் தெரு பக்கமா ஓடினான், அங்கிட்டு உள்ள பயலுவளோட விளையாட போயித்தான் போலருக்கு” என்றாள் எதுவுமே அறிந்திராத பாவனையில். 

“வந்தா நான் கூப்பிட்டேன்னு சொல்லு பெரியம்மா” என்றபடி போனாள்.
அவ்வளவுதான் அதன் பின் பவானி வீட்டுப்பக்கம் அவன் போவதை அறவே நிறுத்திவிட்டான். சில தடவை பவானியின் எதிரே தென்படுகையிலும் பட்டும் படாமல் எரிச்சலாய் முகத்தை வைத்துக் கொண்டு எதையாவது சொல்லிவிட்டு ஓடிவிடுவான். அவன் எவ்வளவு பாராமுகமாய் இருந்தும், ”விளையாட்டுப் புள்ள அவன் சோட்டு பசங்களோடு விளையாட்டு நோக்கத்துல இங்கிட்டு வருவதில்லை” என்பது போலதான் பவானியின் நினைப்பு இருந்தது. முத்து அங்கே இருந்தவரைக்கும் எப்போதும் போல தன் வீட்டில் என்ன விஷேசம் என்றாலும் இவனுக்கு என்று எதையாவது கொண்டு வந்து கொடுத்துக்கொண்டேதான் இருந்தாள் பவானி.

இவன் அதை தொட்டுக்கூட பார்க்க மாட்டான். ”தூக்கி வீசு எங்கிட்டாச்சும்” என்று பவானி சென்ற பிறகு அம்மாச்சியிடம் சத்தம் போடுவான். தன் அம்மாச்சி வீட்டுப் பக்கம் பவானி சும்மா வந்தாலும்கூட ”அவ எதுக்கு இங்க வரா, அவ கூடயெல்லாம் பேதாத” என்று அம்மாச்சியைக் கண்டிக்கத் தொடங்கினான்.இந்த மாதிரி நேரங்களில் ”இங்கரே முதல்ல ஊரு பக்கம் ஒன்னைய வெரட்டிவிட்டாத்தான் சரிபடும், பெரிய பலி பாவத்துல கொண்டுவந்து விட்டுருவ போலருக்கு” என்று திட்டுவாள்.

”யாருங்க இது” என்ற தன் மனைவியின் குரலில் மீண்டும் நினைவு கலைந்தவன், ”எங்க அம்மாச்சி ஊரு” என்று சுருக்கமாய் வேலனைப் பற்றி தன் மனைவியிடம் கூறினான்.

”தம்பி செறு புள்ளயில அங்கதான இருந்துச்சு. அவுக அம்மாச்சி வீட்டுல இருந்தத விட எங்க குடியானவுக வீட்டுலதான் அப்பயெல்லாம் தம்பி இருக்கும்” என்று ஒரு மாதிரி அசடு வழிஞ்சிகிட்டே வேலன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் பஸ் வருகிற சத்தம் கேட்டு ,” பஸ் வர மாதிரி தெரியிது, நான் கெளம்புறேய்யா” என்றான்.

“கொஞ்சம் இருய்யா ” என்ற முத்து, வேலன் கேட்ட வெற்றிலை பாக்கோடு தேன் மிட்டாய் பாக்கெட் ஒன்றையும் எடுத்து வைத்தான்.