Wednesday, August 1, 2012

நண்பேன்டா..!

திவாகர், என்னுடைய பள்ளித் தோழன். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒரே டெஸ்க்கில் அமர்ந்ததிலிருந்து  ஒன்னுக்கடிக்கப்போனது வரை எங்கேயும் ஒன்றாய்ச் சுற்றித் திரிந்த நட்பு. எங்களிருவரின் அப்பாக்களும் அதே பள்ளியில் ஆசிரியர்களாக இருந்ததால் அறிமுகமான சில நாட்களிலேயே எங்களின் நட்பு இறுக்கமானது. 

திவாகர், ரொம்ப சுவாரஸ்யமான கேரக்டர். அவனது டைமிங் சென்ஸ்க்காகவே அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். பாடம் நடத்தும்போது அவன் கேட்கும் சந்தேகங்களைக் கேட்டு ஆசிரியர் உட்பட மொத்த வகுப்புமே அல்லோகலப்படும். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன், ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் நடந்தது இது. வகுப்பறையின் நுழையுமிடத்தில் இருக்கும் சமையல் கொட்டகையில் அமர்ந்து வேகவைத்த முட்டைகளின் ஓடுகளை அகற்றிக்கொண்டிருந்தார் சமையல் செய்யும் ஆயா. முட்டைகளை உரிக்கும்போது அதன் ஓட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் சதையை, ஆயா தன் கட்டைவிரலால் மேல் நோக்கிச் சுண்ட, அடுத்த கணம் மேலே பறக்கும் சதையானது சரியாய் ஆயாவின் வாயில் விழும். இவ்வளவுக்கும் ஆயா குனியவோ ,நிமிரவோ மாட்டார். அசையாமல் அமர்ந்திருப்பார். கையும் வாயும் வேகமாய் வேலை செய்தபடியே இருந்ததை விடாமல் பார்த்துக்கொண்டிந்தவன், “எந்த ஒரு பொருளையும் மேல்நோக்கி வீசினால் அது புவியீர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி வந்துவிடும்” என்று புவியீர்ப்பு விசையைப் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை இடைமறித்து ,”டீச்சர், நியூட்டன் பொய் சொல்லியிருக்காரு, கொஞ்சம் இங்கே வந்து பாருங்க உங்களுக்கேத் தெரியும்” என்று சொல்லி ஆசிரியையிடம் ஆயாவின் செயலைக் காட்டியதும், வந்த சிரிப்பை அடக்கியபடியே,”பாடத்தைக் கவனிக்காம என்ன வேடிக்கை” என்று அவனின் தலையில் கொட்டப் போனவரை ”டீச்சர் டீச்சர் இப்போ பாருங்க” என்று மீண்டும் ஆயாவைக் காட்டி, ஆயா சுண்டும்போது பறக்கும் முட்டைக்கு ”சொய்யிங்” என்றும், வாயில் விழும்போது ”கச்சக்” என்றும் பிஜிஎம் வாசித்தான். மீண்டும் மீண்டும் ”சொய்யிங்”,”கச்சக் ”,”சொய்யிங்”,”கச்சக்” என்று சொல்லிக்கொண்டிருந்தவனைப் பார்த்து ஆசிரியை குழந்தைபோல சத்தமாய் சிரித்துக்கொண்டே ஓடி நாற்காலியில் அமர்ந்து நீண்ட நேரம் கண்ணில் நீர் வர சிரித்துக்கொண்டிருந்தார்.


தோட்டக்கலை ஆசிரியரான அவனின் அப்பா, ஆசிரியர்கள் யாரேனும் விடுப்பில் இருக்கும்போது பாடமும் நடத்துவார். அப்போது வருகைப் பதிவு எடுக்கும்போது “எஸ் சார்” என்று கூறிவிட்டு பசங்களுக்கு மட்டும் கேட்கும் விதமாய், ”வீட்டில் இவர் சொல்றதை நான் கேட்கவே மாட்டேன், அதான் இப்படி என் வாயால அவரை சார் என்று சொல்ல வைக்கிறதுக்காகவே அட்டெண்டென்ஸ் எடுக்குறார்” என்பான்.

இப்படித்தான், சமைக்கிற ஆயாவில் ஆரம்பித்து தனது அப்பாவரைக்கும் யாரையும் விட்டு வைக்க மாட்டான். அவனது இந்த இயல்பால் வகுப்பில் நன்றாய் படிக்கிற மாணவனிலிருந்து கடைசி பெஞ்ச் மாணவன் வரைக்கும் எல்லோருக்குமே நெருக்கமான நண்பனாக அவனால் இருக்க முடிந்தது.


அந்த ஐந்து வருடத்தில் எங்கும் ஒன்றாகவே திரிந்த எங்களுக்கு ”அபூர்வ சகோதரர்கள் ”என்று பெயர் வைத்தார் கணிதஆசிரியர். காரணம் நான் ஆறாம் வகுப்பு படித்த போதே பத்தாம் வகுப்பு மாணவர்களைப் போன்ற உயரத்தில் இருப்பேன், அவன் அப்படியே உல்ட்டா. நாங்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் எங்கள் வகுப்பு மாணவர்களிடையே பிரபலம். அதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் மதிய இடைவேளையின் போது எலி பிடிப்பது. 

சத்துணவுப் பொருட்கள் இருக்கும் அறையின் பெரிய மரப்பெட்டியின் மீது சமையல் பாத்திரங்கள் கழுவி வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாத்திரங்களில் இருக்கும் நீரைக் குடிக்க மரப்பெட்டியிலிருந்து மெல்ல வெளியில் வரும் எலிகளை பிடிக்க, தண்ணீர் இருக்கும் வட்டாவின் மேல்,அதன் பெரிய மூடியை சிறிது இடைவெளி தெரியும்படி திறந்து வைத்துவிட்டு, பக்கத்து அறையில் ஒளிந்து ஒரு துளையின் வழியாக பார்த்துக்கொண்டிருப்போம். ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாய் உள்ளே நுழையும் எலிகள், சிறிது ஓசைக்கேட்டாலும் கண் இமைக்கும் நேரத்தில் மரப்பெட்டிக்குள் அடைக்கலமாகிவிடும் . அதனால் காற்றில் நடப்பதுபோல ஓசையில்லாமல் மெதுவாய் பதுங்கி வந்து மூடியை மூடவேண்டும். இதில் நான் எக்ஸ்பெர்ட். என்னதான் எக்ஸ்பெர்ட்டா இருப்பினும் ஒவ்வொரு முறையும் முதல் சில முயற்சிகள் தோல்வியிலேயே முடியும் . இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்று கற்றுத் தந்த அதே பள்ளியில் அக்கூற்றை எலிபிடிப்பதில் பரிசோதித்துப் பார்த்து வெற்றிகண்டோம். மூடியை இறுகப் பிடித்தபடி திவாகருக்கு சிக்னல் கொடுப்பேன். அதன் பின் வட்டாவைத் தூக்கியபடி விளையாட்டு மைதானத்திற்குள் ஓடுவான். வட்டாவோடு அவனைப்பார்த்ததும் மைதானத்தில் விளையாடும் அத்தனை மாணவர்களும் ஆளுக்கொரு குச்சியோடு அவன் பின்னால் ஓடுவார்கள். மைதானத்தின் மையப்பகுதியில் எலிகளைத் திறந்து விடுவான். திசைக்கொன்றாய் ஓடும் எலிகளை யார் அடித்துக் கொல்வது என்பதில் பசங்களிடம் பெரும் போட்டி நடக்கும். இவ்வளவுக்கும் நான் வகுப்பில் இருந்தபடியே  எலி பிடிப்பதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பேன். 

இதை அடிக்கடி கவனித்த கணித ஆசிரியர் திவாகரிடம்  எலி பிடிக்கும் வித்தையைக் கேட்க,அவனோ, “சார் நான் வெறும் அம்பு, சூத்ரதாரி அங்கே இருக்கான்” என்று என்னைக் கைகாட்டிவிட்டான். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு டெமோ நடத்திக் காட்ட வேண்டியதாகிவிட்டது. டெமோவைப் பார்த்து அசந்த கணித ஆசிரியர், முதன்முறையாய் என்னை ஊமைக் குசும்பன் என்று தனது திருவாயால்  சொன்னார். இன்றுவரை பல சந்தர்பங்களில் இந்த ஊமைக்குசும்பன் பட்டம் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நாங்கள் இருவரும் ஒரத்தநாட்டிற்கு ட்யூஷன் சென்றுக்கொண்டிருந்தோம். பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும் ஒரு தள்ளு வண்டிக் கடையில் முட்டை போண்டா ஃபேமஸ். அந்த முட்டை போண்டாவிற்காகவே ட்யூஷன் செல்வதை அடாத மழையிலும் விடாது செய்து கொண்டிருந்தோம். சைக்கிளில் வரும்போதே முட்டை போண்டாவை தின்றுகொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் போண்டாவை தின்று முடித்ததும் ,”தின்னுட்டியாடா ”என்று கேட்டான். ”ஆமாம்” என்றதும் போண்டாவின் மேலுள்ள மாவை மட்டும் தின்றுவிட்டு பேண்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த முட்டையை எடுத்து ”ஆஹா என்னா ருசி என்னா ருசி ”என்ற படியே என்னிடம் காட்டி காட்டி வெறுப்பேத்திக்கொண்டு வந்தான். ”டேய் டேய் எனக்கு கொஞ்சோண்டு கொடுடா” என்று கெஞ்சியும் கடைசிவரை கொடுக்காமல் தின்று தீர்த்துவிட்டு அவன் சைக்கிளை, என் சைக்கிளோடு ஒட்டியபடி கொண்டு வந்து முகத்திற்கெ நேராக ஏப்பம் விட்டு கடுப்பேற்றினான். 

அடுத்த நாள் சைக்கிளில் வரும்போது அதே காட்சி மீண்டும். இருவரும் போண்டாவை தின்றுகொண்டு வரும்போதே அன்றும் முட்டையை மட்டும் விறுட்டென்று பாக்கெட்டில் வைத்தான். இருட்ட ஆரம்பிதிருந்ததால் நான் கவனிப்பதுஅவனுக்குத் தெரியவில்லை. திரும்ப அவனை பார்க்கும்போது போண்டாவை  வேகமாய் கடித்து சாப்பிட்டு ஏப்பம் விடுவதாய் பாவனைக் காட்டிவிட்டு என்னிடம்,”டேய் அண்ணா கொஞ்சூண்டு குர்ரா” என்று கெஞ்சிக்கொண்டு வந்தான். நான் வேக வேகமாய் தின்றுவிட்டு ஏப்ப ரீவென்ஞ் கொடுத்தேன். 

”முடிச்சிட்டியா” என்றவன் ”டொடடொடடோய்ங்” என்று பிஜிஎம் வாசித்து ஒளித்து வைத்த முட்டையை காண்பித்து மீண்டும் அதே ஆஹா வசனத்தைப் பேசியபடியே தின்றுகொண்டு வந்தான். நான் கண்டுகொள்ளாமல் வந்ததைப் பார்த்து பாதி முட்டையை என்னிடம் நீட்டி, ”போனா போவுது இந்தாத் தின்னுத் தொல” என்று கொடுத்தான். நானும் வாங்கி தின்றுவிட்டு வந்தேன். எங்களிருவரின் ஊர்களின் பிரிவு சாலை வந்ததும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிரிவது வழக்கம். அப்படி பேசிக்கொண்டிருக்கையில் என்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து  சாப்பிடாமல் ஒளித்து வைத்திருந்த முழுபோண்டாவையும் எடுத்து அவனிடம் காட்டி, அதே பிஜிஎம்மை பாடிவிட்டு சுவைக்க ஆரம்பித்தேன். கெஞ்சினான், கொடுக்கவில்லை. சகிக்கமுடியாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானான். மீண்டும் அதே பிஜிஎம், காரணம் என் கையில் அவனின் சைக்கிள் சாவி. முற்றிலும் அவனை பார்க்க வைத்து தின்று திருப்தியாய்  பெரிய செயற்கை ஏப்பம் விட்டப்பிறகே சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு டாட்டா காட்டி விடைபெற்றேன். 

இது போல ஏகப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி கதைகள் எங்கள் இருவரிடையே உண்டு. எல்லோரும் இருக்கும் இடத்தில் அடித்துக்கொள்வோம், அரைமணி நேரம்கூட ஆகியிருக்காது வெட்கமே இல்லாமல் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு முன்பாகவே விளையாடுவோம்.

மேநிலைப் பள்ளிக்குக்கூட இருவரும் தஞ்சையில் ஒரே ஸ்கூலில்தான் சேர்ந்தோம் என்றாலும் வெவ்வேறு பாடப்பிரிவுகளை எடுத்ததால் முன்புபோல் சேர்ந்திருக்கும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து, பள்ளிபடிப்போடு மொத்தமாய் படிப்பிற்கு முழுக்குபோட்டுவிட்ட அவனோடு தொடர்புகள் முற்றிலும் இல்லாமலே போய்விட்டது. சில வருடங்களுக்கு முன் அவனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோதும்கூட அவனைப் பார்த்துப் பேசமுடியாது அவசரமாய் கிளம்ப வேண்டிய சூழ்நிலையாகிவிட்டது.

எனக்குத் திருமணமான பின் அடிக்கடி அதே பிரிவு சாலையில் செல்கிற வாய்ப்பு. மாமனார் ஊருக்கு அதுதான் வழி. ஒவ்வொரு முறையும் அந்த இடம் வந்ததும் என் மனைவி ”நீங்களும் உங்க ஃப்ரெண்டும் போண்டா தின்ன இடம் வந்திடுச்சுங்க ”என்று சிரிப்பார்.

சில நாட்களுக்கு முன் திவாகர் எனக்கு போன் செய்து ,”டேய் அண்ணா, பிரிவு சாலைக்கிட்டே நிக்குறேன், இந்த எடத்துக்கு வந்த உடனே  உன்னோட நெனப்பு வந்திச்சு, அதான் கூப்பிட்டேன்” என்றான், என்னைப்போலவே.