Monday, March 29, 2010

எங்க ஊரின் வரலாறு


 எங்க ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களோடு நன்றாகப் பழகினாலும் தண்ணீர் உட்பட எதுவுமே கொடுக்க மாட்டார்களாம். ”முறைப்பாடு இருக்கிறது தெய்வ குத்தம் ஆகிடும்” என்று சொல்வார்களாம்.இதன் பின்னணியில் ஏதோ ஒரு சுவாரஸ்யம் இருப்பதையறிந்து ஊர் பெருசு ஒன்றிடம் கேட்டபோதுதான் எங்க ஊரின் வரலாறு எனக்குத் தெரிய வந்தது.

எந்த காலக் கட்டத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, தற்போது எங்கள் ஊர் அமைந்திருக்கும் இடத்திற்கு 2கி.மீ தொலைவில் ஊரின் தெற்கு எல்லையாக காட்டாறு இருக்கும். அந்த காட்டாற்றின் மறுகரையில் தான் எங்களின் பூர்வீகக் கிராமம் இருந்ததாம். நான் சொல்லிக் கொண்டிருக்கும் கதை நடந்த காலத்தில் அடிக்கடி பெரு மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கே குடியிருந்த எங்கள் முன்னோர்கள் வீடு, கால்நடைகள் முதலிய எல்லாவற்றையும் இழக்க நேர்ந்ததால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போது இருக்கும் இவ்விடத்திற்கு வந்தார்களாம். அப்படி வந்தபோது அங்கே ஏற்கனவே பூர்வீகக் குடியாய் இருந்த சொற்ப எண்ணிக்கையிலான மற்றொரு சமுதாயத்தினரை மெஜாரிட்டியான எம்முன்னோர்கள் விரட்டியிருக்கிறார்கள். அப்படி விரட்டப்பட்டவர்கள் தான் தற்போதும் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கும் அம்மக்கள்.(நியாயம்தான்).

எனது முன்னோர்கள் வாழ்ந்த இடமாகச் சொல்லப்படும் அந்த காட்டாற்றின்
மறுகரையில் இன்றும் பாழடைந்த நிலையில் மிகவும் சிறிய அளவிலான பொன்னியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் இருக்கின்றன.

பொன்னியம்மன் சிலை

பொன்னியம்மன் கோவிலில் அம்மனின் சிலை மட்டுமே இருக்கிறது, சுற்றுச் சுவர் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது.

சிவன் கோவில் பொன்னியம்மன் கோவிலைவிட சற்று பெரியது, மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும் இக்கோயிலில் தற்போது மூலவர் அறை மட்டுமே முழுதாய் இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாததால் புதர்களும், மரங்களும், பாம்பு சட்டைகளுமாய் ஒரு வித அச்சத்தை தருவிக்கும் தோற்றத்தோடு இருக்கிறது.


சிவன் கோவில்

இப்படி ஒரு கோயில் இருப்பதே எங்கள் ஊரின் இளைய தலைமுறையினர் நிறைய பேருக்குத் தெரியவில்லை. நானும் கூட இக்கதையை அறிந்த பிறகே அங்கே சென்று பார்த்தேன்.
நந்தி
மூலவர் அறைஇந்த செங்கற்கலின் வடிவங்கள் மூன்று விதங்களில் இருக்கின்றன.

கோயிலைக் கட்டப் பயன்படுத்தியிருக்கும் சுட்ட கற்களில் வடிவமும்,அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணாம்புக் கலவையால் பூசியிருக்கும் விதமும் அக்காலக் கட்டிடக் கலையின் நேர்த்தியை எண்ணி வியக்க வைத்தது.


சிவன் கோவிலின் உட்புறம் இருக்கும் பெண் சிலை


முட்செடிகளுக்கிடையில் இருக்கும் சிவன் கோவில்

அந்த கோயிலினுள் நின்ற போது பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளன் மாதிரி பயங்கரமான ஒரு ஃபீல்.(உள்ளுக்குள் உதறலோடு).வைரமுத்து மாதிரி “வண்டல்மண் இதிகாசம்” என்று ஒன்று எழுத வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு அங்கே நின்றபோது வந்ததுன்னு சொன்னா நீங்க சிரிப்பீங்கதானே,ஆனா நிஜமாவே அப்படித்தாங்க நெனச்சேன்.

கொசுறு:படங்கள் மட்டுமே புதிது, கட்டுரை மீள் பதிவு.

ஊருக்குப் போயிருந்தேன்-4

செப்பனிடப்பட்டுக் கொண்டிருக்கும் பஞ்சாயத்து சாலை.(இதன் தரம் நிரந்தரம் அல்ல என்பது இப்போதேத் தெரிகிறது) .மூக்குத்தி பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா...


எள்ளுச் செடிநெய்வேலி காட்டாமணக்கு அல்லது ஜனதா காட்டாமணக்கு (இந்தச் செடியை அழிக்க பலமுறை பல வழிகளில் முயன்றும் முடியாமல் இருக்கிறது).


ஓணான் கொடி (சிறுவயதில் இந்த கொடிகளை இணைத்துதான் பஸ் ஓட்டி விளையாடுவோம்).


ஆற்றுப் பூண்டுச் செடி (காயம் பட்ட இடத்தில் இதன் காம்பில் வடியும் பாலை மருந்தாக இட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்).

ரம்மியமான மாலையில் காட்டாறு.


ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் அழகாய் வளர்ந்திருக்கும் தென்னைகள்.