Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

Friday, August 21, 2009

மூணார் ஒரு பயணக் குறிப்பு.

மூணார் செல்லும் திட்டம் பல முறை ட்ராப் ஆகியதால், இந்த முறை வெயிலான் சொன்னதும் மிஸ் பண்ணக் கூடாது என்று உறுதியோடு இருந்தேன். பிளான்படி திருப்பூரிலிருந்து சென்ற வாரம் வெள்ளிக் கிழமை மாலை, மூணார் நோக்கிய எங்கள் பயணம் இனிதே துவங்கியது.

*பல்லடம் டூ உடுமலைப் பேட்டை சாலையின் இருமருங்கிலும் இருந்த ராட்சத காற்றாடிகளை (காற்றாலை மின்சாரம்) அருகில் சென்று பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. வெயிலான் காற்றாலை மின்சாரத் தயாரிப்புக் குறித்து ஏதோ கூறிக் கொண்டிருந்தார், அண்ணாச்சி வாங்கி வந்த கிரில்டு சிக்கன் கம்பாகவும், நான் காஞ்ச மாடாகவும் ஆகிப் போனதில் வெயிலான் சொல்லிக் கொண்டிருந்ததற்கெல்லாம் மையமாக தலையாட்டி வைத்தேன்.

*உடுமலைப் பேட்டையை அடைந்தபோதே நன்றாக இருட்டிவிட்டதால் அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். சின்னாறு செக்போஸ்ட்டை தாண்டியதும் யானைகளின் நடமாட்டம் ஜாஸ்தியாக இருக்கும் என்றும், இருட்டுவதற்கு முன்பே வனப் பகுதியைக் கடந்திருக்க வேண்டுமென்றும் பீதியைக் கிளப்பினார் டிரைவர்.இருந்தாலும் யானைகளை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை,ஏனெனில் எங்க கூடத் தான் கும்க்கி இருந்தாரே..!


*யானைக்கு பதிலாக காட்டெருமையை லைவா பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது. யானையைக் கூட முன்பொரு முறை பரம்பிக் குளத்தில் பார்த்திருக்கிறேன் (கோயில் யானையைச் சொல்லவில்லை). முதன் முறையாக காட்டெருமையை இப்போது தான் பார்க்கிறேன், பயங்கர த்திரில்லாக இருந்தது. (வெயிலான், இந்த இடத்தில ”அடடா ஒரு காட்டெருமையே காட்டெருமையை பத்தி .....! !” என்றுத் தோணுமே, அது ரொம்ப பழைய மொக்கை, சரியா ).

*நள்ளிரவு ஒரு மணியளவில் மூணாரின் ’த்ரீ ரிவர்’ தங்கும் விடுதியை அடைந்தோம். வீடு பெரிதாக இருப்பினும் ஆறு பேர் படுக்கை வசதி மட்டுமே இருந்தது, நாங்களோ எட்டு பேர். அட்ஜெஸ்ட் பண்ணி தூங்கியதில் விடிய விடிய கட்டிலில் ஃபுட் போர்ட் அடித்து தூ(தொ)ங்க வேண்டியதாகிப் போச்சு.(இடையில் யாருய்யா அது தலகானியை உருவியது).



*அடுத்த நாள்,காலை உணவை முடித்து கிளம்புவதற்கு மணி பதினொன்றாகிவிட்டது, கும்க்கி அவர்களின் ஆலோசனையின்படி மூணாரில் இருந்து தேனி, கம்பம் தெரியும் ’டாப் ஸ்டேஷன்’ வியூ பாயிண்ட்டுக்கு போக முடிவானது. ”வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு” என்ற பாடல் வரிகளுக்கேற்ப வழியெங்கும் அழகான தேயிலைத் தோட்டங்கள். காரில் போய்க் கொண்டிருந்த போதே ”குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தைப் பற்றி அண்ணாச்சி, கடற்கரைகாரன் சிவா ஒரு அணியிலும், கும்க்கி அவர்கள் தனியாகவும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். (கும்க்கி அண்ணா நீங்க விவாதித்த விதம் பிடித்திருந்தது, படத்தை பற்றிய உங்க பார்வை எனக்கு வித்தியாசமாகப் பட்டது).

*ஒரு மணி நேர பயணத்தில் ஓரிரு நீர்தேக்கங்கள், ஏரிகள் ஆகியவற்றைக் கடந்து வியூ பாயிண்ட்டை அடைந்தோம். என்ன ஒரு அற்புதமான இடம். இந்த இடத்தின் அழகைப் பற்றி சொல்லணும்னா எந்த கோணத்தில் கிளிக்கினாலும் போட்டொ ஷாப்பின் அவசியமிராத அசத்தலான போட்டோஸ் கிடைக்கும். நீண்டு கிடந்த பள்ளத்தாக்கில் ஆங்காங்கே ஆதிவாசியினர் குடியிருப்பு, எப்படி அவர்கள் எந்த வசதியுமில்லாமல் அங்கே இருக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. பனிமூட்டம் அதிகமாதலால் தெளிவான வியூ கிடைக்காமல் தேனியையும், கம்பத்தையும் பார்க்க இயலவில்லை, மாறாக அருகே மலைத்தேன் விற்றவரைச் சுற்றி இருந்த தேனீக்களையும்,மரக் கம்பத்தையும் தான் பார்க்க முடிந்தது. (ஹி ஹி மொக்கைதான், முடியலைல ). 

 *வியூ பாயிண்ட்டில் போடப்பட்டிருந்த சேரில் இயற்கையை ரசித்தபடி அமர்ந்திருந்த போது இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருத்தர் என்னிடம் வந்து “ஷெல் ஐ டேக் எ போட்டொகிராஃப் ?”என்றார். ஏன் என்னிடம் வந்து கேட்கிறார் என்று குழம்பியபடியே நம்மல எதுக்கு போட்டொ புடிக்கட்டுமான்னு கேட்கிறான், ஒரு வேளை நாம் அம்புட்டு அழகாவா இருக்கோம்னு கொஞ்ச நேரத்தில் மணிரத்னம் பட கனவெல்லாம் வந்து போச்சு.ஒரு மாதிரி இஞ்சி தின்ன எஃபெக்டோட ஓகே என்றதும் நான் அமர்ந்திருந்த சேரைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு அழகான நார்த் இண்டியன் குழந்தையை போகஸ் பண்ண ஆரம்பித்த உடன் தான் எனக்கு வெளங்குச்சு. (ப்ச் பல்புதான், இமேஜின் ஹார்ஸை நிறுத்திவிட்டு தொடருங்க). 


*எங்கே என்னைத்தான் போட்டோ புடிக்கப் போறானோன்னு பொறாமையா பார்த்துகிட்டு இருந்த அண்ணாச்சி ”ஹா ஹா” என்று பயங்கரமா சிரித்துவிட்டு ”அதுக்கு நீங்க அவர்களிடமல்லவா பர்மிஷன் வாங்கணும்” என்று அருகில் இருந்த நார்த் இண்டியன் லேடியை கை காட்டினார். (அந்த குழந்தை செவ செவன்னு இருந்ததுங்க என்னத்த நெனச்சுகிட்டு எங்கிட்ட பர்மிஷன் கேட்டானோ).

*கும்க்கி அண்ணே, இள வயதிலேயே அம்மா வேஷம் போட்ட ஒரு நடிகையைப் பற்றி சொன்னீங்களே அவங்க திறமையான நடிகை,பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கணும்னு சொன்னதெல்லாம் நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். (எல்லாம் ஓகே கடைசியில் அவங்க நல்ல பியூட்டின்னு சொன்னீங்களே, அதுக்கு பேசாம என்னைய வியூ பாயிண்ட்டிலிருந்து புடிச்சு தள்ளிவிட்டிருக்கலாம்). 


*மதிய சாப்பாடாக பிரியாணி என்ற பெயரில் வெள்ளை சாதத்தில் இரண்டு சிக்கன் துண்டுகளை புதைத்து கொடுத்தார்கள்.பந்திக்கு முந்திய எல்லோருக்கும் கிழங்கு கிடைத்தது, நான் லேட்டா போனதால் கிழங்கு போச்சேன்னு பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியதா போச்சு. (ஏன்யா ஒரு கர்ட்டஸிக்காகக் கூடவா கேட்கக் கூடாது, நீங்க கிழங்கு திங்கும்போது என் நெலமையை நெனச்சு பார்த்தீங்களா ஹ்ம்).

*ஐந்தரை மணிக்கு விடுதியை அடைந்து கொஞ்ச நேரம் கேரள சேனல்களை மேய்ந்துவிட்டு (அண்ணாச்சி, நாம ரெண்டு பேரும் மலையாளச் சேனல்களை பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணனையும், ஜாக்கியையும் நீங்க பார்த்திருக்கனுமே) மீண்டும் பத்து மணி வாக்கில் இரவு உணவிற்காக கீழிறங்கி வந்த போது எல்லா உணவகங்களிலும் கூட்டம், பெரியதொரு கையேந்தி பவனில் மியூசிக் சேர் முயற்சியில் அண்ணாச்சி,சிவா மற்றும் நான் எப்படியோ இடம் பிடித்து ஆப்பத்தை நிரப்பி ஏப்பத்தை விட்டு விட்டு, மற்றவர்களுக்கு பார்சல் கேட்டால் ”பார்சல் கொடுக்காம் பட்டில்யா” என்று கையை விரிக்க, அடுத்தடுத்த கடைகளிலும் பார்சல் கிடையாது என்று கூற மற்றவர்கள் பிஸ்கட், ஸ்னாக்ஸில் வயிறை ரொப்ப வேண்டியதாகிவிட்டது.

*அன்றிரவு உஷாரா இன்னொரு கூடுதல் பெட் வாங்கி கீழே படுத்துக் கொண்டேன், தூக்கத்தில் பயங்கரமாக உளறி சிரித்தேனாம்,காலையில் சிவா சொன்னார். (நானாவது தூக்கத்தில் தான் உளறினேன்). *காலையில் பனிமூடிய சாலையூடாக ஒரு பேரருவியை அடைந்தோம். என்னே ஒரு பிரமாண்டமான அருவி!, ஒரு பெரிய நீர்த்தேக்கத்தில் பாலை நிரப்பி வைத்து திறந்துவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு வெள்ளை வெள்ளம்.

*அருவியின் எதிரே இருந்த பாலத்தின் கீழிருந்த குன்றில் எல்லோரும் சிறிது நேரம் யோகாசனம் செய்துவிட்டு சில பல போஸ்களில் போட்டோஸ் எடுத்துக்கொண்டு மீண்டும் அடுத்த இடத்திற்கு பயணமானோம். (அண்ணாச்சி, உங்க தலைப்பா கட்டு, ஜெர்க்கின் காஸ்ட்யூமில் அப்படியே எங்க அண்ணனை நினைவு படுத்தினீங்க, ஜக்கம்மா முன்னேற்ற கழகத்தில் ஆள் தேடுறாங்களாம் :) ).


*தேயிலை எஸ்ட்டேட்டில் இருக்கும் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு நாளாவது தங்க வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை (கும்க்கி அண்ணனும் அதே தான் சொன்னார்). அந்த ஆசை இப்பயணத்தில் நிறைவேறியது. நண்பர் ராஜ் (வெயிலானின் அலுவலக நண்பர்) கண்ணன் தேவன் எஸ்டேட்டில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டின் எதிரே பல வண்ணங்களில் ஜினியா பூக்கள் மலர்ந்து வரவேற்றன. ராஜின் குடும்பத்தார் எங்களுக்கு அசர வைக்கும் வரவேற்பளித்தார்கள். அற்புதமான சுவையில் சிக்கனும், கேரள ஸ்பெஷல் மத்தி மீன் குழம்புமாக பெரிய விருந்தே கொடுத்து அசத்தி விட்டார்கள். (ராஜ்,நாடோடிகள் மேட்டரெல்லாம் சொல்லாமல் உங்களப் பத்தி பெருமையா சொல்லியிருக்கேன் அடுத்தத் தடவையும் பார்த்து செய்யுங்க, என்னா டேஸ்டுய்யா அந்த சாப்பாடு சான்சே இல்ல ராஜ்).

*அத்தனை சிறிய இடத்தை அவர்கள் யுட்டிலைஸ் பண்ணியிருக்கிற விதம் அசர வைத்தது. அங்கிருந்து கிளம்பும் போது ராஜையும் அவரின் அண்ணனையும் சேர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கச் சொன்னப்போ ராஜ் ரொம்ப தயங்கி அண்ணனை விட்டு கொஞ்சம் விலகியே நின்னார். சேர்ந்து நில்லுங்க என்று சொன்னதும் ராஜின் அண்ணன் டக்கென்று தன் தம்பியை அணைத்தபடி நின்று தம்பியை ஒரு பாச பார்வை பார்த்தார் பாருங்க, சே எனக்கு ஒரு மாதிரி சிலிர்த்துவிட்டது. ( சுத்தி போடச் சொல்லுங்கப்பா கண்ணு வச்சிட்டேன்).

* நாங்கள் இவ்வளவு ரகளையடித்துக் கொண்டிருக்க பதிவுலகிற்கு சம்பந்தமில்லாத நண்பர்களான கண்ணன் மற்றும் திரு.ரகுராம் இருவரும் தாமரை இலை நீர் போல ஒட்டி ஒட்டாமலே இருந்தார்கள்.( அனுஜன்யாவின் கவிதைகளைப் பற்றி பேசினால் பாவம் அவர்களும் தான் என்ன செய்வார்கள்).
*மீண்டும் உடுமலைப் பேட்டை வந்த உடன் நண்பர் ரங்ஸின் அன்பின் அழைப்பால் உடுமலைக்கு அருகே இருக்கும் அவரின் கிராமத்து வீட்டிற்குச் சென்றோம். அற்புதமான இயற்கைச் சூழலில் தென்னை மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் அவரின் வீடு. ரங்ஸின் வீட்டார் எங்களை அன்பு மழையில் நனைத்து விட்டார்கள். அங்கேயும் இட்லி, பூரி, உப்புமா, ஸ்வீட்ஸ், பழங்கள் என வெயிட்டான சாப்பாடு. (இந்த பதிவுலகம் என்ன செய்ததுன்னு யாராவது இனி கேட்பீங்க, "ரங்ஸ், மதிய நேரத்தில் வந்திருந்தால் நாட்டுக் கோழி ரெடியாக இருந்தது என்றீர்கள்,ஞாபகம் வச்சுக்கோங்க அந்த ஒரு விஷயத்திற்காகவே நம்ம ஃபிரண்ஷிப்பை தொடர்வதாக உத்தேசம்").



*என்னடா திங்கிறத பற்றியே எழுதியிருக்கானே, மூணாரின் இயற்கையை வர்ணிக்கவில்லையேன்னு யோசிக்குறீங்களா. ”உனை பார்த்து பார்த்து வாழ நகக் கண்ணில் பார்வை வேண்டும்” என்ற பாடல் வரிகளைப் போன்று மூணாரின் அழகை ரசிக்க உடம்பெங்கும் கண்ணாக இருந்தாலும் பத்தாதுங்க. அதை எப்படி நான் எழுத்தில் கொண்டு வருவது. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் கண்டிப்பா ஒரு முறையேனும் மூணார் போய் வாருங்கள், சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் அமைத்துக் கொண்டாவது போய் வாருங்கள்.(நண்பர்களா என்னை மூணாரிலேயே தொலைத்துவிட்டு வந்திருக்கலாம்).

Wednesday, July 15, 2009

அண்ணாச்சியும்,வெயிலானும் பின்னே நாங்களும்

வார இறுதிக்கு எங்காவது போய்வரலாமென நண்பர் வெயிலான் அலை பேசியதைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை மதியம் திருப்பூரிலிருந்து கோவைக்கு நண்பர் தேவாவின் காரில் கிளம்பினோம்.கோவையில் அண்ணாச்சி வடகரை வேலன், கடற்கரைக்காரன் சிவா மற்றும் சஞ்சய் ஆகியோருடன் இணைந்து பிக்னிக் செல்வதாகப் பிளான்.
 


 கோவை செல்லும் வரை நண்பர் தேவாவின் அப்பா தனது காவல்துறை அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டு வந்தார்.அப்போது அங்கிளும் பிளாக் ஒன்றை ஆரம்பித்தால் கலக்குவார் போலிருக்கிறதே என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்அதையே வெயிலானும் தேவாவின் தந்தையிடம் கூறினார்.இவர்களின் பேச்சில் காவல் துறை சார்ந்த வார்த்தைகளை புரிந்து கொள்வதில் எனக்கு கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் வெயிலான் காவல் துறை சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார். அதுமட்டுமல்ல இன்னும் நிறைய துறைகளைப் பற்றிய அறிவும் வெயிலானுக்கு உண்டு. சுவையான இவர்களின் உரையாடலில் லயித்தபடியே கோவை வந்ததும் தேவாவும் அவரது தந்தையும் விடைபெற்றுக்கொள்ள நானும் வெயிலானும் எங்களுக்காகக் காத்திருந்த அண்ணாச்சி மற்றும் சிவாவோடு இணைந்து கொண்டு அண்ணாச்சியின் காரில் சஞ்சய் வெயிட்டிக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்தோம்.

சஞ்சய் வெயிட் செய்வதாக சொல்லியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்ற பின் சிறிது நேரம் கழித்தே சஞ்சய் வந்தார்.நாங்கள் நால்வரும் காரிலேயே அமர்ந்துக் கொண்டு சஞ்சய் எங்களைத் தேடுவதை ரசித்துக் கொண்டிருந்தோம். காரின் முன்னாலேயே நின்று கொண்டு அண்ணாச்சியின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டார், அவரின் அழைப்பை அட்டெண்ட் செய்யாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம், அப்போதும், எங்களைப் பார்த்தப் பிறகும் சஞ்சயின் எக்ஸ்பிரஷன்கள் ரசனையான விஷுவல் ஹைக்கூ.

பிறகு "உம்பா உம்பா" என்ற மியூசிஸிக் இல்லாத பஞ்ச தந்திரர்களாய் பாலக்காடு செல்லும் ரோடில் மஞ்சு துஞ்சும் மலைகளை ரசித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த சிவாவிடம் மெல்ல ,"நண்பா நாம இப்போ எங்கே போறோம்" என நான் கேட்க, "யாருக்குத் தெரியும்" என சிவா சொல்ல இதைக் கேட்ட அண்ணாச்சி எங்கே போறோம்னே தெரியாம கிளம்பிட்டீங்களாடா" என்று கூறிச் சிரிக்க முதல் சந்திப்பில் இருக்கும் ஒரு சிறிய தயக்கம் மெல்ல மெல்ல மறைந்து பல நாட்கள் பழகிய நண்பர்களைப் போல் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டே கேரளாவின் நெல்லியம்பதியை நான்கு மணி நேர பயணத்தில் அடைந்தோம்.

நெம்மாரா என்னும் இடத்திலிருந்து நெல்லியம்பதிக்கு செல்லும் மலைப்பாதை ஆரம்பமாகி விடுகிறது. மலைப்பாதையில் நாங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது மெல்ல இருட்டத் தொடங்கிவிட்டது. மலைப்பாதையின் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்த மரங்களில் சில எப்போது வேணாலும் விழுவோம் என பயமுறுத்தியபடி நின்றுக் கொண்டிருந்தன.சாலை ஓரத்திலேயே அருவியில் கொட்டும் நீரின் சலசலப்பு கேட்டு கொண்டே இருந்தது.கொஞ்சம் நேரத்தோடு வந்திருந்தால் அருவிகளை ரசித்திருக்கலாம் என்று சொல்லியபடியே நாங்கள் புக் செய்திருந்த ரிஸார்ட்டுக்கு இரவு ஒன்பது மணிக்கு சென்று சேர்ந்தோம்.



எட்டு பேர் தங்குவதற்காக புக் செய்திருந்த விசாலமான அறையில் ஐவரும் அடைக்கலமாகி உடைமாற்றி பிறகு ரிஸார்ட்டின் முன்புறம் ஒரு சிறிய சதுர மேஜை குறுநாடு (மாநாட்டிற்கு எதிர்பதம் குறுநாடுதானே வரும்?) நடத்தினோம்.இந்த குறுநாட்டில் இலக்கியம், அரசியல், பதிவுலகம், சினிமா என பல சுவராஸ்யமான விஷயங்கள் அலசப்பட்டது. இங்கே வேலன் அண்ணாச்சியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். எல்லோருக்குள்ளும் இருக்கும் நிறை,குறை கடந்து மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும்,நேசிக்கும் அருமையான மனிதர் அண்ணாச்சி. ஒருவன் தவறானவன் என சமுதாயம் அடையாளப் படுத்தினாலும் தவறே செய்யாமல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் சமுதாயத்தின் பார்வைக்கு குற்றவாளியாகக் காட்டும் என்ற உண்மையை நன்கு அறிந்திருக்கும் அண்ணாச்சியின் நட்பு கிடைத்தது பதிவுலகம் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய கொடை. நம்மில் எத்தனை பேர் தீர விசாரித்தலின் அவசியத்தை புரிந்தவர்களாய் இருக்கிறோம். கண்ணால் பார்ப்பதையும், காதால் கேட்பதையும் (blog படிப்பதையும் சேர்த்துக்கலாமோ) வைத்துத்தானே பல நேரங்களில் அடுத்தவர்களின் பிம்பத்தைக் கட்டமைக்கிறோம். மனிதர்களை புரிந்து கொள்ளும் கலையை அண்ணாச்சியிடம் கற்றுக் கொள்ளலாம். இப்படியெல்லாம் சொல்வதால் அண்ணாச்சியை பெருசோ என்று நினைத்து விடாதீர்கள் நமது கல்லூரி காலத்து நட்புகளையும், அரட்டைகளையும் நினைவுபடுத்தும்படி படு ஜாலியான மனிதர்.

இந்த குறுநாட்டின் இறுதியில் சஞ்சய் ஒரு கேள்வியைக் கேட்டார்.அதாவது தற்போது நாம் பேசும் தமிழும் தற்கால இலக்கியங்களில் இருக்கும் தமிழும் ஒரே மாதிரியாக இருக்கிறது,அப்படியானால் சங்க இலக்கியங்களில் இருக்கும் வார்தைகளைத் தான் அப்போதிருந்த மக்கள் பேசியிருக்கக் கூடும். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்காலத் தமிழுக்கும் சங்கத் தமிழுக்கும் இருக்கும் இத்தனை பெரிய வேறுபாடு எப்படி வந்தது? என்றார்.இதற்கு சில நல்ல விளக்கங்கள் அண்ணாச்சி மற்றும் சிவாவும் தர சில நொல்ல விளக்கங்கள் என்னால் தரப்பட இதில் எந்த பதிலும் சஞ்சய்க்கு திருப்தியை தரவில்லை. (யாராவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்கப்பா). பிறகு இரவு உணவை அங்கேயே வரவழைத்து உண்டு மகிழ்ந்து உறங்கச் செல்கையில் மணி ஒன்றாகிவிட்டது.

காலையில் வெயிலான்,சிவா மற்றும் நான் மூவரும் எழுந்து சிறிது தூரம் காலைப்பனியூடாக மலைச்சாலையில் உறையவைக்கும் குளிரில் நடக்கலானோம். வெயிலான் சில பல கோணங்களில் மலைகளின் அழகை தனது கேமராவில் அள்ளிக்கொண்டிருந்தார். அங்குள்ள காஃபி எஸ்ட்டேட்டைப் பற்றியும்,குறு மிளகுச் செடிகளையும் பற்றியும் வெயிலான் சொல்ல ஆர்வமாக கேட்டுக் கொண்டே மீண்டும் எங்களது அறைக்கு திரும்புகையில் அடுத்தாகச் செல்லவிருக்கும் மாம்பாறா என்ற இடத்திற்குச் செல்ல ஜீப் எட்டரைக்கெல்லாம் வந்துவிடும் என்று ரூம் சர்வெண்ட் சொல்ல அவசரமாகக் கிளம்பத் தயாரானோம். (இந்த ரிஸார்ட்டுக்குள் வந்த உடன் எங்களது மலையாளப் புலமையைக் காட்ட ஓட்டை மலையாளத்தில் ரூம் சர்வண்ட்டிடம் ஏதோ கேட்க, அவரோ தெளிவான தமிழில் பேசி எங்களை டரியலாக்கினார்.)

"குளிக்காமல் கிளம்பி விடலாமா" என வெயிலான் கேட்க எல்லோருக்கும் அந்தக் குளிரில் அது சரியெனப் பட்டாலும் யாரும் ஓங்கிச் சொல்லாததால் வெயிலானே முதல் குளியலைப் போட்டு மற்ற எல்லோரும் குளித்தே ஆக வேண்டிய இக்கட்டான சூழலை உருவாக்கியதால் எல்லோரும் வேறு வழியின்றி குளித்துவிட்டு காலை உணவாக கொண்டுவரப்பட்ட புட்டை, புட்டு புட்டு சாப்பிட்டு விட்டு மாம்பாறாவை நோக்கி பயணித்தோம்.


வழி நெடுக இருந்த தேயிலைத் தோட்டங்களும்,சிறு சிறு ஓடைகளும்,சின்ன சின்ன நீர்த் தேக்கங்களும்,வண்ண வண்ணப் பூக்களுமாய் எத்தனை அற்புதக் காட்சிகள். அந்த ஜீப் பயணமும் மலைக்காட்சிகளும் "மலையின் காட்சி இறைவன் ஆட்சி" என்ற முள்ளும் மலரும் பாடல் வரிகளை நினைவு படுத்தியது. வானம், விட்டு விட்டுத் தூறிக் கொண்டிருந்தது. தார்ச் சாலையிலேயே சென்றுக் கொண்டிருந்த ஜீப் திடீரென மண் சாலைக்குத் தாவியது. மண் சாலை என்பதுக் கூடத் தவறு மேடு பள்ளங்களாய் கற்களும் மர வேர்களுமாய் இருக்கும் மண்தடம் என்றால் சரியாக இருக்கும். இப்படியான பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப், நின்ற நிலையில் கிட்டத் தட்ட செங்குத்தாக இறங்கத் தொடங்கியது.இறங்கத் தொடங்கியது என்பதைவிட வழுக்கத் தொடங்கியது என்றால் மிகையில்லை.அண்ணாச்சி எங்களை ஜாக்கிரதையாக கம்பியை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கப்பா என்றதும், "இது கூட எங்களுக்கு பயமாக இல்லை அண்ணாச்சி, இவர் ஜீப்பை ஜீப்பாகத்தான் ஓட்டுறார்,நேற்று நீங்க காரை ஃபிளைட்டாக்கினீங்களே அதை நெனச்சாத்தான் உதறுது" என்றேன் அடியேன்.

எங்களுக்கு முன்பாகச் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு ஜீப், கொண்டை ஊசி
வளைவைப் போன்றதொரு இடத்தில் சேற்றில் மாட்டிக் கொண்டு மேலே செல்ல முடியாமல் நின்றுக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த கேரள இளைஞர்கள் அந்த ஜீப்பை மேலேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். பல நிமிட போராட்டங்களுக்குப் பிறகு மேலேற்றியதைத் தொடர்ந்து அதே இடத்தில் நாங்கள் சென்ற ஜீப்பும் மாட்டிக் கொண்டது.பிறகு அதே முயற்சி, இந்த முறை சிவாவும், சஞ்சயும் கயிற்றின் உதவியோடு தங்களது புஜ பராகிரமங்களைக் காட்டியதில் எங்கள் ஜீப்பும் மேலேறியது. எங்களுக்கு பின் வந்த அத்தனை ஜீப்பிற்கும் அதே நிலைதான்.இதே மாதிரி இரண்டு இடங்களில் செய்ய வேண்டியதாய் இருந்தது. எங்களுக்கு அது பயங்கர என் ஜாய்மென்ட்டாக இருந்தது. அடுத்ததாக இந்த மண்பாதையும் முடிவுற்று பாறைகளில் தாவி ஏறியது ஜீப்.


கரடு முரடான பாறையில் அசால்ட்டாக வண்டி ஓட்டிய ஜீப் டிரைவரை பார்க்க அப்போது என் கண்களுக்கு பெரிய சாகச நாயகனாகத் தெரிந்தார்.அதேப் பாறையில் செங்குத்தாக ஏறத் தொடங்கி ஒரு பத்து நிமிடத்தில் மலை உச்சியான மாம்பாறையை அடைந்தோம். "இறைவா எத்தனைக் கோடி இயற்கை வைத்தாய் இந்த கேரளாவில்" என்று கத்தனும் போல் தோன்றியது நாங்கள் அங்கு கண்ட காட்சி.

உலகமே எங்கள் காலடியில் இருப்பது போன்றதொரு உயரம்."காற்று மேலே ஏறி மேகத்தையெல்லாம் தாண்டி" என்று ஒரு பாடலில் வருமே அப்படி உண்மையிலேயே மேகத்திற்கு மேலே நின்று கீழே வெண்பஞ்சாய் பறக்கும் மேகக் கூட்டத்தை ரசித்ததை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம்.

கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லக் கூடிய உயரத்தில் இருக்கும் அந்த மாம்பழ வடிவப் பாறையில் அமர்ந்து ஏரியல் வியூவில் தெரிந்த காட்சிகளை ரசித்துப்படியே அரட்டையடித்துக் கொண்டிருந்த போது மெல்ல எங்களை மூடிச் சென்றது ஒரு பெரிய மேகக் கூட்டம்.மூடிய மேகம் விலகியதும் சிவா தனது காலில் ஏதோ ஊர்வதாகணர்ந்து பார்த்ததில் சில மில்லி லிட்டர் ரத்தத்தை உறிஞ்சி விட்டு ஹாயாக ஊர்ந்து கொண்டிருந்த காட்டு அட்டை, சிவாவின் சந்தோஷத்தையும் சேர்த்து உறிஞ்சிவிட்டு பாறையிடுக்கில் அடைக்கலமானது. இதைப் பார்த்த நாங்கள் முதலில் பதறி பிறகு சிரித்தோம், காரணம் "இவ்வளோ ரத்தத்தை உறிஞ்சும் வரைக்கும் உனக்குத் தெரியவே இல்லையா" என்று கேட்ட சஞ்சய் எதார்த்தமாய் தனது காலைப் பார்க்க அங்கே ஏற்கனவே ரத்தம் உறிஞ்சப்பட்டு உறைந்து போயிருந்ததுதான்.

பிறகு எல்லோரும் அவரவர் உடைகளை பதறி உதறிக் கொண்டிருக்கையில் மெல்ல சிறு தூரலும் இல்லாமல் பெரு மழையாகவும் இல்லாமல் சன்னமான மழை பெய்யத் தொடங்கியது.அப்படியே நனைந்து களித்தோம்,களித்தே நனைந்தோம்.
சிவா தனது கைகளை விரித்து,கண்களை மூடியபடியே நனைந்ததைப் பார்த்தபோது எனக்கு பிரேசிலின் மலையுச்சி ஜீஸஸ் சிலை ஞாபகம் வந்தது. இன்னொரு புறம் சஞ்சய் சிறு குழந்தைகளின் நடன அசைவை ஒத்தபடி ஆடிக்கொண்டும், நர்சரி குழந்தைகளின் ரைம்ஸ் போல் ஏதோ பாடியபடியே நனைந்து கொண்டிருந்தார். முந்தின நாள் இரவு, டாம் அன்ட் ஜெர்ரியை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்ததிலிருந்து இதோ இப்போது இந்த மலை உச்சியில் சில கேரள இளைஞர்கள், நம்ம ஊர் பெண்கள் சுற்றி நின்று கும்மியடிப்பதுபோல் வட்டமா நின்றுக்கொண்டு டான்ஸ் மாதிரி ஏதோ ஆடிக்கொண்டிருந்ததை சிறு குழந்தையின் ஆச்சர்யத்தோடு அவர்களின் அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந்ததுவரை கவனித்ததில் சஞ்சயை 100% மீசை வைத்தக் குழந்தையென்பேன்.(சஞ்சய் உன்னோட ஐஸ்பைஸ் பதிவை அவ்வளவு நேர்த்தியாக நீ எழுதியிருப்பதன் காரணம் புரியுதுப்பா,உனக்குள் இருக்கும் அந்த குழந்தைத்தனம் எப்போதுமே இருக்கட்டும்).




சில நிமிடங்களில் மழை நின்று ஜில்லென காற்று வீசத் தொடங்கியது, அப்போது சஞ்சய் தூரத்தில் தெரிந்த ஏரி ஒன்றைக் காட்டி, "அதோ ஏரி பாருங்க" என்றார். "ஏறி பார்க்க முடியாது,இறங்கித்தான் பார்க்கனும்" என்று மொக்கினேன் நான்.ஒரு மணி நேரம் போனதேத் தெரியாமல் சொர்கமே இதுதானோங்கிற மாதிரி இருந்த அந்த மலையும் மழையும் காட்சி எனக்குள் இனி பசுமரத்தாணி.பிறகு அதே "ஏற்றிவிடப்பா, தூக்கிவிடப்பா" பாதையில் மீண்டும் சாகசப் பயணத்தைத் தொடர்ந்து ரிஸார்ட்டுக்கு வந்தடைந்ததும் சுடச்சுட வந்த மதிய உணவை ஒரு வெட்டு வெட்டிவிட்டு எல்லோரும் சிறிது நேரம் உறங்கி விழித்து மாலை மூன்று மணிக்கு கோவைக்கு புறப்பட்டோம். திரும்ப வரும்போதுதான் தெரிந்தது முதல் நாள் எத்தனை அற்புதமானக் காட்சிகளை மிஸ் செய்திருக்கிறோம் என்பது. ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் குறைந்தது இரண்டு அருவிகளை காண முடிந்தது.செங்குத்தாய்,கிடைமட்டமாய் பெரிதும், சிறிதுமாக மனதை அள்ளும் பல வித அருவிகளை ஒவ்வொரு இடத்திலும் நின்று ரசித்துக் கொண்டே வந்ததில் மேலும் ஒரு முறை சிவாவும்,சஞ்சயும் அட்டையின் அட்டாக்கிற்கு ஆளானார்கள்.


நேரத்தோடு கோவை சென்றுவிட வேண்டும் என்றபடியே காரை விரட்டிய அண்ணாச்சி திடீரென வேக வேகமாக கார் கண்ணாடிகளை ஏற்றிய படியே காரை நிறுத்திவிட்டு மெல்ல சொன்னார், முன்பக்க கண்ணாடியில் நெளிந்து கொண்டிருந்த பச்சைப் பாம்பை அடிக்கும்படி. காரில் இருந்து வேகமாக இறங்கிய சஞ்சய் ஒரு சிறு குச்சியால் அந்த பாம்பை எடுத்து அருகில் இருந்த செடிகளின் மேல் வீசிவிட்டு,"அடிகிடி பட்டிருக்குமோ, பாவம் சின்னக் குட்டிதான் பொழச்சு போகட்டும்" என்றார். சஞ்சயின் அந்த பாம்பாபிமானத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.
இந்த இனிமையான பயணத்தில் அண்ணாச்சி,வெயிலான்,சிவா மற்றும் சஞ்சய் என ஒவ்வொருத்தரிடமும் ஒரு சில விஷயங்களில் என்னையே பார்க்க முடிந்தது. இப்படியான ஒத்த ரசனையுள்ளவர்களின் நட்பிற்கு பலநாள் ஏங்கியிருக்கிறேன். ஏதாவது ஒரு கவிதையையோ, கதையையோ யோசித்துவிட்டு "நல்லாயிருக்கா" என நண்பர்களிடம், "டேய் நீ கேளேன்,மச்சி நீ கேளேன்" என கெஞ்சத் தேவையிராத நட்பு வட்டத்தை எனக்குக் கொடுத்த இணையத்திற்கு இத்தருணத்தில் ஒரு பெரிய நன்றி.

எப்போதும் போல்
weak end ஆக செல்ல இருந்த week end ஐ மறக்க முடியாத நாட்களாக மாற்றிய நண்பர் வெயிலானுக்கு நன்றிகள் பல.(வெயிலான், வார இறுதியை வர இறுதியாக மாற்றிவிட்டீங்க நண்பா தேங்க்ஸ்).

இதே பயணத்தைப் பற்றி மேலும் தகவலுக்கு நண்பர் வெயிலானின் பக்கத்திற்கு இங்கே அழுத்தவும்.

நெல்லியம்பதி பற்றி மேலும் தகலுக்கு: இங்கேயும்
, இங்கேயும் அழுத்தவும்.