Friday, July 19, 2013

நிரந்தரம் நிறைந்தவன் வாலி

நம் அன்றாடங்களின் ஒரு சில மணித்துளிகளையாவது அனுதினம் களவாடிக்கொண்டே இருக்கும் இயல்பு, அவரவர் பதின்மத்தின் நினைவுகளுக்கு உண்டு இல்லையா,அந்த வகையில் என்னின் இன்றைய பொழுதுகளை களவாடுவதில் 90களில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு, அதில் நிறைய பாடலாசிரியர் வாலி அவர்களுக்கும்.

இசைப் பிரியம் என்பது இயல்பாய் என்னுள் பால்யத்திலிருந்தே தொடர்ந்திருந்தாலும், ஒரு பாடலை அதன் வரிகளோடு சிலாகித்து ரசிக்க ஆரம்பித்தது எப்போதாய் இருக்கும் என்ற யோசனை, எனது பதின்மத்தின் தொடக்கத்தில் வெளிவந்த கோபுர வாசலிலே படத்தின் ’தேவதை போலொரு பெண்ணிங்கு’ பாடலில் முட்டி நிற்கிறது.

”சீதாவை பிரித்தது மான்தான் புள்ளி மான்தான்
தோதாகச் சேர்த்தது மான்தான் அனுமான்தான்”

என்ற இந்த வார்த்தை விளையாட்டின் மூலமாகத்தான் நான் வாலியை ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

60 களின் தொடக்கத்திலிருந்து தத்துவம் தொடங்கி காதல் வரை அவரின் வரிகளில் உச்சம் தொடாத உணர்வுகளே இல்லை என்பது மறுக்க முடியாது. ஆனாலும் எனக்கு மனதிற்கு மிக நெருக்கமாக உணரும் பாடல்கள் அனைத்தும் எண்பதுகளின் இறுதியிலோ தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயோ வெளிவந்த பாடல்களாகவே இருப்பதால் அந்த நெருக்கத்திற்குள் வாலியின் வார்த்தைகளுக்கு வசப்பட்டதின் சிலாகிப்பு மட்டுமே இங்கே.

”நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை
நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்தப் பொழுதை”

எங்க தம்பி படத்தின் ’உச்சிமல காட்டக் கேளு’ பாட்டின் இந்த வரிகள்தான் ரசிகனாய் இருந்த என்னை அவரின் வரிகளின்பால் பைத்தியமாக்கியது எனலாம். எளிமையான வரிகள்தான் என்றாலும் ஏனோ இவ்வரிகளில் ஒரு மயக்கம் இன்றுவரை தொடர்கிறது.

”ஆகாய வெண்ணிலாவே”, ”வராது வந்த நாயகன்” போன்ற பாடல்களை கேட்கும்தோறும் அந்த சொற் பிரயோகம்(சொற்பிரயோகம் என்பதைவிட சொற்பிரவாகம் என்பதுதான் சரியாய் இருக்கும்) கண்டு ”எங்கிருந்துடா இந்த ஆளு இந்த சொற்களை புடிக்கிறாரு” என்று மயிர் கூச்செறிய  வியந்திருக்கிறேன்.

”சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்”

என்று வண்ண வண்ணப் பூக்கள் படத்தின் இள நெஞ்சே வா பாடலில், காற்றுப் புக முடியாத அடர்த்தியான மூங்கில் காடுகளை, தென்றலும் தூங்கும் வீடுகளாய் கற்பனையைக் கொட்டி குவித்து, சிந்தனை தேர் ஏறி கம்பனை அல்லவா வம்பிக்கிழுந்திருப்பார் இந்த பாடல் முழுவதும்.

”விலை மீது விலை வைத்து 
கேட்டாலும் கொடுத்தாலும் 
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா”

”காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா”

அம்மாவைப் பற்றி நினைக்கையில், கூடவே வாலியின் இந்த வரிகளும் சேர்ந்து கொண்டல்லவா அவளை இன்னும் பெரிதாய் வணங்கச் சொல்கிறது.

”நட்பைக்கூட கற்பைப் போல எண்ணுவேன்”,”மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்” என்று  நட்பின் சிறப்பை இவ்வளவு சொற்ப வார்த்தைக்குள் பெரிதாய் விளக்க வாலியை விட்டால் வேறு யாரால் முடியும்.

மற்ற எந்த உணர்வையும்விட வாலியின் காதல் வரிகளை அவ்வளவு காதலித்திருக்கிறேன். 

"கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப் பெண்ணா மாறாதோ
மையேந்தும் கண்ணக் காட்டி மையல் தீரப் பேசாதோ"

”உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதிற்குள் சிறு ஊஞ்சலாடி உலகை மறந்தேன்” 

“இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கிவிடுமே
இருட்டில்கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்”

”உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே”

என்று மயிலிறகால் வருடினாலும்,

”ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்”

“காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே”

என்று சோக ரசம் தோய்த்துக் கொடுத்தாலும், அந்தக் காதலே சொக்கிப் போகிற மாதிரியல்லவா எழுதி குவித்திருக்கிறார்.

எப்போதும் ஏதேனும் பாடலை முணுமுணுத்தபடியே இருப்பது என்பது எனது இயல்பென்றாகிவிட்டது. வீட்டில் சொல்லுவார்கள் "இப்படி வீட்டுக்குள்ளேயே பாடிகிட்டு இருக்கதுக்கு , முறையா கத்துகிட்டு எதாவது போட்டி கீட்டினு போயி பாட வேண்டியதுதானே” என்று. அவர்களுக்கு பதில் சொல்ல,

“அறையில் பாட்டெடுப்பேன் 
அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க 
குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க 
தினமும் பாடுகிறேன்”.

என்ற வாலியின் ’வானமழை போலே’ பாடலின் வரிகளைத்தான் கடன் வாங்கியிருக்கேன்.

”மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதை கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே” 

மீரா படத்திற்காக எழுதிய இவ்வரிகளில்,பட்டர்ஃப்ளையிடம் மனதை இரவல் கேட்கும் அந்த குழந்தை மனதை, கொஞ்ச நேரமேனும் இரவல் கொடுக்க மாட்டாரா வாலி என்று ஏங்கியிருக்கின்றேன்.அதே பாடலில் “எனக்கும் கூட அடிமை கோலம் பிடிப்பதில்லையே” என்று எழுதி அவரின் வரிகளுக்கு நம்மை அடிமையாக்கியது முரண்.

”தூங்காத விழிகள் ரெண்டு” மற்றும் “மன்றம் வந்தத் தென்றலுக்கு” பாடல்களில்,

”மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூகள் மடி மீது நான் தூங்கவோ” 

“தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன” 

என்ற வரிகளில் கூடலுக்கும்,ஊடலுக்கும் அவர் பயன்படுத்தியிருக்கும் அந்த உவமைகளை ஒப்பிட்டு ரசித்திருக்கிறேன்.

வாலி அதிவிரசமாய் எழுதியதாய் சொல்லப்பட்ட, இந்து பட பாடல்கள்தான் எங்களின் விடலை பருவத்தின் தேசியகீதங்களாய் இருந்தன.கொஞ்சம் மெச்சூர்ட் ஆன பிறகு, 

“ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ”

“காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு 
இக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு”

என்று காமத்தை அழகியலோடு ரசிக்கவும் அவரின் வரிகளே தலைவாசலைத் திறந்தன.

தலைவனை பிரிந்த தலைவியின் விரகதாப உணர்வை கண்ணதாசனின் பல பாடல்களில் ரசித்திருக்கிறேன். 

“எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்”

“ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க”

என்று வாலியும் அதில் குறை வைக்கவில்லை.

தாங்கள் எழுதிய வரிகளையோ அல்லது அதை ஒத்த சிந்தனையையோ பாடலாசிரியர்கள் மீண்டும் மீண்டும் வேறு வடிவங்களில் கொடுத்திருப்பதை தமிழ் திரைப்பாடல்களில் நிறைய கவனிக்கலாம். வாலியும் அப்படி எழுதியிருக்கிறார். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால்,

”ஒரு காதல் கடிதம் விழி போடும்” என்று சத்யாவின் வலையோசை பாடலில் எழுதியதை, ஓ பட்டர் ஃப்ளையில் “விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே” என்றும்,

”உன்னை காணாதுருகும் நொடி நேரம் 
பல மாதம் வருடம் என மாறும்” 

என்று சத்யாவின் வலையோசையில் வெளிப்பட்ட இந்த சிந்தனைதான்,பின்பு தளபதியின் சுந்தரி கண்ணால் ஒரு சேதியில்,

”மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்”

என்றும், காதல் தேசத்தின் எனைக் காணவில்லையே நேற்றோடு பாடலில்,

"நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே,
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே"

என்றும் வெளிப்படுத்தியிருப்பார். சிந்தனை ஒன்றென்ற போதிலும் அதை வெவ்வேறு சொற்கோர்வையில் பின்னி ரசிக்க வைப்பத்தில் வாலிக்கு நிகர் வாலியே.

அதே போல பாடல் வரிகளில் இடம்பெறும் சொற்களுக்கு என்ன பொருள் என்று அதிகமாய் தேட வைத்தவர் வாலிதான். எனக்கு சட்டென்று நினைவிற்கு வருகிற சொல் ’புன்னை வனம்’,

”புன்ன வனத்தினிலே பேடைக் குயில் கூவயிலே”

"புன்னை வனத்துக் குயிலே நீ

என்னை நினைத்து இசைப் பாடு"

”இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்

அடி புன்னைவனக் குயிலே”

என்று அவரின் பாடல்களின் மூலமாகத்தான் புன்னை மரங்களைப் பற்றியும், சங்க இலங்கியங்களில் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் இடம் பெற்ற பூக்களில் புன்னையும் ஒன்று என்பதுபோல தகவல்களையும் அறிந்து கொண்டேன். இதே சொல்லை இளையராஜா,” கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி பாட்டில் “புன்னை வனத் தோப்போரம் உன்னை நினைந்து” என்று வண்ண வண்ண பூக்களிலும், பிறைசூடன்,” புன்னை வன பூங்குயிலே” என்று செவ்வந்தியிலும் எழுதியிருக்கிறார்கள், எனினும் வாலியின் வரிகளில்தான் புன்னை எனக்கு அறிமுகமானது. அதே போல மணிவாசல்,மணிக்கதவு என இன்னும்கூட நிறைய சொற்கள் அவருடைய பாடல்களில் மட்டும் காணக் கிடைக்கும்.

சில்லுன்னு ஒரு காதல் படம் வெளிவந்த நேரத்தில், “முன்பே வா ” பாடலின் பல்லவி குறித்து சக பாடலாசிரியர்களே வியந்து பேசியிருந்தார்கள். பா.விஜய் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், ”இத்தனை வருடம் எத்தனையோ பாடல்களையும், பாடலாசிரியர்களையும் இந்தத் திரையுலகம் கண்டிருந்தும் இந்த ”முன்பே வா” யாருக்கேனும் தோணுச்சா,அவருக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றும்” என்று அதிசயத்திருந்தார். 

”ஆர்.வி.உதயகுமார், சிங்கார வேலன் படத்தில்  ’இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்’ பாடலிலேயே இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்காரே”  என்று அப்போது நினைத்துக்கொண்டேன். பிறகு ஆர்.வி.உதயகுமார் குறித்து எழுதிய ஒரு இடுகையின் தகவல்  திரட்டின்போது ஆர்.வி.உதயகுமார், எஃப்.எம்.ரேடியோ ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார்.

”இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே” என்று முதல் வரியை எழுதிவிட்டு இரண்டாவது வரிக்கு யோசித்துக்கொண்டிருக்கையில் அங்கே வந்த வாலி, ”அன்பேன்னு முடிச்சிருக்கியா அடுத்த வரியில் முன்பே,கின்பேன்னு எதையாவது போட்டு யோசிய்யா” என்று முன்பே என்னும் வார்த்தையை எடுத்துக்கொடுத்தாராம். இதைப் படித்ததும் ‘முன்பே’ முன்பே வந்திருந்தாலும் வாலிதான் அதற்கு சொந்தக்காரர் என்று அறிய வந்தபோது ’அட’ என்றிருந்தது.

இன்னும்கூட என்னால் நான் ரசித்த வாலியை முற்றிலுமாய் வெளிப்படுத்த இயலவில்லை . உணர்வுகளில் கலந்த உறவொன்று நம்மைவிட்டு பிரிகையில் எழும் துக்கத்தை அந்த ஆத்மாவிற்கு மரியாதை செய்யும் விதமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தை எனக்குத் தெரிந்த வகையில்  வெளிப்படுத்தியிருக்கேன். வேறொரு சந்தர்ப்பத்தில் அவரைக் குறித்த இன்னும் இன்னும் எனக்குள் ஊறிக்கிடக்கும் நினைவுகளை சரியாக வெளிப்படுத்த வேண்டும்.

"இறந்தும் இறவாநிலை எதிர் பார்க்கிறேன்" என்று எழுதினார். அவரின் எதிர்பார்ப்பும் அவரை ஏமாற்றவில்லை, அவர் சொன்னபடியெல்லாம் கேட்டு மக்கர் பண்ணாத தமிழைப் போல. 

Monday, July 15, 2013

டைம் பாஸ்-6


வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நமக்கு தரப்படும்ஆப்ஷன்கள் பௌலிங்கா?, ஃபீல்டிங்கா? வகையையிலேயே இருக்கின்றன.
# இந்த ஸ்டேட்டஸ் உங்களுக்கு புடிச்சிருக்கா? இல்லை நல்லாயிருக்கா?

சொல்வதெல்லாம் உண்மையில் குந்தியிருக்கும் ஜட்ஜம்மாக்களிடம், 90களின் கவுண்டமணியை எதுனா ஒரு பஞ்சாயத்துக்கு பிராது கொடுக்கச் சொல்லி கற்பனை செய்து பார்த்து திருப்திபட்டுக்கொள்கிறேன்.
#கொண்ட போட்டவளுக்கெல்லாம் நான் தீர்ப்பு சொல்றதில்ல

மற்றவரை குறைகளோடு நேசி;குறை உன்னிடமே என்றால் கொஞ்சம் யோசி.
# ஆகையினால எல்லோரும் என்னை நேசிங்க.

எம்பொண்டாட்டிக்கு இத்தனை வகை சட்னி வைக்க தெரியுங்கறதே இன்னிக்குத்தான் தெரியும்.
#மச்சான் வந்திருக்கான்.


பகல் தூக்கம், அன்றைய மீதியை நரகமாக்கும்.
#ஆனா தூங்கும்போது சொர்க்கம்யா.

சிறைதான் என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும் சிறகுகள். 
# டேய் சத்தியமா புரியலடா

வயிறு சரியில்லையென்று மணத்தக்காளி சாம்பார் வச்சு கொடுத்தாய்ங்க. அதைப் பார்ததிலிருந்து மனசு சரியில்லை.
#என் கடன் அசைவம் சாப்பிட்டுக் கிடப்பதே

முகத்துல மொளச்சா முகமுடின்னுதானே சொல்லணும், அப்புறம் ஏண்ணே தாடிங்கிறாய்ங்க.
#மாத்தி யோசி என்ற பதத்திற்கான விதையை அனாயசமாய் தூவிய கேரக்டர். 


” டேய் மச்சி நீ எப்பயும் போகாத ஊருக்கே வழி சொல்ற”
“ங்கொய்யால போகாத ஊரு என்ன, போகாத நாட்டுக்கே வழி சொல்லுவேன்..” 
# கூகிள் மேப்ஸ்

நாம் சென்ற பாதையில் இதோ போய்க்கொண்டிருக்கிறேன்,சில கணங்களில் நானும்
சில கணங்களில் நாமுமாய்.

#அப்படியே போய்க்கொண்டே இரு,திரும்ப வந்துறாத

எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ பழகுதல் என்பதுதான் இப்போதைய எனது எதிர்பார்ப்பு.
#இதுக்கு பேருதான்  விசு’வாசம்

எந்த சொல்லிற்குள்ளும்  புதைந்திருக்கும்  என்பதால் கோபமும்கூட ஒரு  கன்னிவெடிதான்.
#வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம எங்கேயோ போய் வாங்கி கட்டிகிட்டு வந்து இங்க தத்துவம் சொல்லிகிட்டு இருக்கான்.

டைம் பாஸ்-5

கூகிள் பிளஸில் கிறுக்கியவற்றின் தொகுப்பு

நாவை அடக்க, நானை அடக்கு.
#சொல்லிட்டாருப்பா சாக்ரடீசு

”எக்ஸ்கியூஸ் மீ” என்பது ” கொஞ்சம் நகர்ந்துக்கோங்க ” என்கிற அர்த்தத்திலேயே பெரும்பாலும் சொல்லப்படுகிறது.
#அவதானிப்பு

நெருக்கடிகளில் எண்ணத்தைப் பேசாமல் என்னத்தையாவது பேசித் தொலைக்கும் இந்த பொல்லாத நாக்கு.
#  நீ வாயைத் தொறந்தாலே நெருக்கடிதானடா

தெரியாமல் செய்துவிட்ட தவறுக்கான நியாயத் தேடல்களில் தெரிந்தே பிறக்கிறது மற்றொரு தவறு.
# தெரியாம கிளிக்கி இங்க வந்தது தப்புத்தான் .

ஹோட்டல் மெனு கார்டில் , மாதத்தின் ஆரம்பத்தில் ஐட்டங்களை பார்த்தும், மாதக் கடைசியில் விலையைப் பார்த்தும் ஆர்டர் செய்வதை வழக்கமாக கொண்டவனென்றால் நீயும் என் நண்பனே.
#இப்படி நல்லதா பேசிப் பழகு

கேபிள் கனெக்‌ஷன்,செய்தித் தாள் ,பால் பாக்கெட் மாதிரி இப்போ எங்க வீட்டில் மாதச் செலவுகளில் இடம் பிடித்திருக்கும் புது வரவு(செலவு) ரிமோட் கண்ட்ரோல், டேட்டா கார்ட் மற்றும் செல் போன் பேட்டரி.
வாலு வாழும் வீடு

காட்டிலே காயும் நிலவை கண்டு கொள்ள யாருமில்லை இந்த வரியை கேட்கும்போதெல்லாம் தூர்தர்ஷன் நினைவும் கூடவே வந்துவிடுகிறது.
#எப்புடி இருந்த நீ இப்படி ஆயிட்ட

பழி வாங்க காத்திருக்கும் தருணங்கள் உன்னை பழிவாங்கும்.
# என்னை பழி வாங்கினாலும் பரவாயில்லடா கையில என்னைகாவது மாட்டாமயா போயிடுவ.

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நிறைமாத கர்ப்பிணிகளாக சிலர் வருட கணக்கில் வலம் வருகிறார்கள்.
#நிறைய மாத கர்ப்பிணிகள்

”அதுல பாருங்க”
 #வி.கே.ராமசாமியோடு வழக்கொழிந்து போய்விட்ட வசனம்.

தப்பை என்னைக்காவது  தட்டி கேட்டுறுக்கியா?
#கேட்டிறுக்கியாவா? தப்பை தட்டி கேக்கும்போது வர்ர அந்த டண்டனக்கு டனக்கு னக்கு என்னா ரிதம்யா, சூப்பரா இருக்கும்.


தன்னை வெல்லுதல் என்பது கடினமான காரியமாம்.
bubble buster கேமில் நேற்றைய எனது ஸ்கோரை இன்று நானே சர்வ சாதாரணமாய் வென்றேன் அப்படி ஒண்ணும் கஷ்டாமா இல்லையே.
#லூசு எதை எதோட கோக்குது பாரு.

கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன..
#ஆமாமா, நிச்சயிக்கப்படும்போது சொர்க்கமாத்தான் தெரியும்.


அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
#ரைட்டு, அர்த்த ராத்திரியில் மழை பெய்தால் குடை பிடிப்பவனெல்லாம் வாழ்வு வந்தவன் என எடுத்துக்கலாமா?

ஸ்ரீதேவி,கஸ்தூரி என பாட்டிகளை வைத்து விளம்பரங்கள் எடுப்பவர்கள் மோகன்லால் ரசிகர்களாக இருக்க வேண்டும் என்று அவதானிக்கிறேன்.
#ஆண்ட்டி ஹிரோ

மனக்கடலில் மட்டும் அலைகளின் சீற்றம் ஆழத்தில்தான் அதிகமாய்.
#ஆழக் கடலில் தேடிய தத்துவ முத்து

ரயில்வே ஸ்டேஷன்களில் ”காப்பி காப்பி” என்று கூவி, ’இது காஃபியின் காப்பியேயன்றி  ஒரிஜினல் அல்ல’ என்று விற்பவர்களே உங்களுக்கு சூசகமாக  உணர்த்திவிடுகிறார்கள்.
# இனி காஃபி சரியில்லை என்று புலம்புவதை விடுத்து காப்பியை காப்பியா குடிக்கணும் சரியா?

நாளும் ஒரு நான்.
#ம்க்கும் நாளும் ஒரு நீயா? நீ, நேரத்துக்கு ஒரு நீ.

முரண் படுதல் மற்றவரிடத்து எனும் போது இயல்பாய் ; நம்மிலிருந்தே எனும் போது அவஸ்தை.
#ஆமாமா அவஸ்தையோ அவஸ்தை இனி இங்கே வருவேன்