Friday, July 30, 2010

புரியாத‌ புதிர்...

டீக்கடைகளில் ”கற்பூர நாயகியே கனகவல்லி”சத்தமாய் ஒலித்துக்கொண்டிருந்த இருள்வில‌கா அதிகாலை.

புறநகர் பகுதியில் உங்களை அன்புடன் அழைத்துக்கொண்டிருந்த காவேரி நகர் ஆர்ச்சினுள் நுழைந்து ”சாமிநாதன் எம்.காம்,நகராட்சி வருவாய் துறை ஆய்வாளர்” என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்த‌ இளம் பச்சை நிற காம்பவுண்ட் சுவ‌ர் வீட்டினருகே வந்து நின்ற டாட்டா சுமோவிலிருந்து இறங்கியவருக்கு ஐம்பதை கடந்த அரசாங்க உத்தியோகஸ்தர் தோற்றம். அனேகமாய் சாமிநாதன். அவரைத் தொடர்ந்து கசங்கிய பட்டுச் சேலையில் கன‌த்த சரீரத்தில் ஏகப்பட்ட நகைகளணிந்து கையில் தாம்பூலப் பையோடு மிகவும் களைப்பாய் இறங்கினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. பார்த்ததுமே தெரிந்தது அவரின் மனைவியென்பது . ஏதோ திருமணத்திற்கு போய்விட்டு வருகிறார்கள்போல.

கேட்டை திறக்கச் சொல்லும் விதமாக ட்ரைவர் காரிலிருந்தபடியே ஹாரன் ஒலியை பலமுறையடித்தும் உள்ளிருந்து யாரும் வ‌ராத‌தால், ”வள்ளி வள்ள்ள்ளீளீ..” என்று வீட்டிற்குள் இருக்கும் யாரையோ உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் அப்பெண்மணி.

மீண்டும் வீட்டிலிருந்து அமைதி,”சனிய இவ்வளோ சத்தம் போட்டும் அப்படியென்ன தூக்கம் அவளுக்கு” என்று அப்பெண்மணி களைப்பில் வெறுப்பாய் முணகியதிலிருந்தே வள்ளி வேலைக்காரியாய் இருக்கக் கூடுமென்பதை ஊகிக்க முடிந்தது,

“திவாகர்...திவ்யா டேய் யாராச்சும் கேட்ட திறந்து விடுங்கடா” என்று சாமிநாதனும் குரல் கொடுத்தார். ம்ஹும்,எந்தப் பலனுமில்லை. மொபைல் போனில் இரண்டு மூன்று தடவை டயல் செய்துவிட்டு “சுச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான், லேண்ட் லைனும் போக மாட்டேங்குது” என்றுவிட்டு, டிரைவரிடம் ”பழனி, காம்பவுண்ட் சுவரேறிக் குதித்து காலிங் பெல்லை அடி” என்றார்.

டிரைவர்,காம்பவுண்ட் சுவரில் ஏறுகையில் அருகில் படுத்திருந்த தெருநாய் குரைக்கத் தொடங்கியது.”ச்சூ போ ” என்றபடியே கீழே குனிந்து கல்லை எடுப்பதாய் டிரைவர் பாவனை செய்ததுதான் தாமதம் பெரிதாய் அடிவாங்கிய மாதிரி ”வீல்” என்றலரியபடியே ஓடத்தொடங்கிய அந்நாய்,` நானும் எரிகிறேன்` என்பதாய் சன்னமாய் எரிந்துகொண்டிருந்ததொரு தெருவிளக்கு கம்பத்தினருகே நின்றுகொண்டு மீண்டும் குரைத்துக்கொண்டிருந்தது.

பலமுறை காலிங் பெல்லை அழுத்தியும் உள்ளிருந்து பெரும் அமைதியே நிலவியதால் கதவினை வேகமாய் தட்டியபடியே “தம்பி திவா கதவ திறங்கய்யா” என்று கத்திய டிரைவர் மெல்ல திரும்பி இப்போ நான் என்ன பண்ணட்டும் என்பதாய் தனது முதலாளியை நோக்க,” ஜன்னல் வழியா பாருப்பா” என்ற முதலாளியின் முகம் குழ‌ப்ப‌த்தில் ஆழ்ந்தது.

திறந்தே இருந்த ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்த டிரைவர் உள்ளே லைட் எரியாததால் தனது செல்போன் வெளிச்சத்தை வீட்டினுள் பாய்ச்சிய அடுத்த நொடியில் ”ஸாஆஆ...ர் அந்த பொண்ணு வள்ளி ஃபேன்ல தொங்கிட்டுருக்கு” என்று பெரிதாய் அலறியபடியே தெரித்து ஓடிவந்தார்.

”அடிப்பாவி” என்று அலறிய அப்பெண்மணி தொடர்ந்து “என்னங்க உள்ளே நம்ம பசங்க “ என்று பயத்தில் நடுங்கியபடியே தனது கணவனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு சத்தமாய் அழ ஆரம்பித்துவிட்டாள்.

தெருமுனை டீக்கடையில், க‌ன‌க‌வ‌ல்லியை முடித்து ஏற்காட்டில் வீற்றிருக்கும் ஏகவல்லியை பக்தி பரவசத்தோடு அழைத்துக்கொண்டிருந்த எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும்கூட அச்சூழலில் அச்சம் தருவதாய் இருந்தது. தெருநாய் இன்னமும் விட்டு விட்டு குரைத்தபடியே இருந்தது.

“பழனி, உள்ளே திவாகரும் திவ்யாவும் இருக்காங்களான்னு பாரு” என்றபடியே சாமிநாதனும் கேட்டின் மேல் சிரமப்பட்டு ஏறி குதித்து உள்ளே ஓடினார் .

"எக்ஸ்கியூஸ்மி , என்னுடைய‌ ஸ்டேஷ‌ன் வ‌ந்திடுச்சு" என்று சொன்ன‌ அந்த‌ இளைஞ‌னிட‌ம் ஓசியில் வாங்கி ப‌டித்துக்கொண்டிருந்த‌ பாக்கெட் நாவ‌லை கொடுத்துவிட்டு உங்க‌ளைப் போல‌வே நானும் முடிவு என்ன‌வாக‌யிருக்கும் என‌ யோசித்துக்கொண்டே ப‌ய‌ண‌த்தைத் தொட‌ர்ந்தேன்.

Tuesday, July 27, 2010

ம‌ம்முட்டியின் ப‌ட‌ங்க‌ளும் இய‌க்குன‌ர் பாலாவும் ..

த‌னியாவ‌ர்த்த‌ன‌ம் ம‌ற்றும் மிருக‌யா ம‌ம்முட்டியின் இந்த‌ இரு ம‌லையாள‌த் திரைப்ப‌ட‌ங்க‌ளையும் பார்க்கும் வாய்ப்பு சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் கிடைத்த‌து. இவ்விரு ப‌ட‌ங்க‌ளின் க‌தை,க‌ள‌ம் ம‌ற்றும் ம‌ம்முட்டியின் அசாத்திய‌மான‌ ந‌டிப்பையும் ர‌சித்த‌ வேளையில் இன்னொரு விஷ‌ய‌மும் என‌க்குத் தோன்றிய‌து , அது என்ன‌வென‌ பார்ப்ப‌த‌ற்கு முன் இப்ப‌ட‌ங்க‌ளைப் ப‌ற்றி மேலோட்ட‌மான‌ பார்வை.

த‌னியாவ‌ர்த்த‌ன‌ம் , 1987 ம் ஆண்டு சிபிம‌லையில் இய‌க்க‌த்தில் லோகிதாஸின் திரைக்க‌தையில் வெளிவ‌ந்த‌ இத்திரைப்ப‌ட‌த்தில் ஆர‌ம்ப‌ப் ப‌ள்ளி ஆசிரிய‌ரான‌ ம‌ம்முட்டியின் குடும்ப‌த்தில் வ‌ழி வ‌ழியாய் யாரேனும் ஒருவ‌ர் ம‌ன‌நிலை பாதிப்புக்குள்ளாகிறார்க‌ள். அப்ப‌டி ம‌ன‌நிலை பாதிப்புள்ளாகி த‌னிய‌றையில் ச‌ங்கிலியால் க‌ட்டிப்போட‌ப்ப‌ட்டிருக்கும் ம‌ம்முட்டியின் மாமா ஒரு த‌ருண‌த்தில் இற‌க்கிறார். அத‌னைத் தொட‌ர்ந்து அந்த‌ வீட்டில் அடுத்து ம‌ன‌நிலை பாதிப்பிற்குள்ளாக‌ப் போவ‌து ம‌ம்முட்டிதான் என‌ ஊர்ம‌க்க‌ள் தொட‌ங்கி உற‌வின‌ர்க‌ள்வ‌ரை அனைவ‌ரும் ந‌ம்ப‌த் தொட‌ங்குகின்ற‌ன‌ர். அத‌ன் பின் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளால் ம‌ம்முட்டி என்ன‌வாகிறார் என்ப‌து க‌தை.

தான் பைத்திய‌ம் இல்லையென்ப‌தை நிரூபிக்க‌ ம‌ம்முட்டி செய்யும் செய‌ல்க‌ளும் கூட‌ சூழ்நிலையால் அவ‌ரை எல்லோரின் முன்பும் பைத்திய‌க்கார‌னாக‌வே காட்டும்போதும், பாட‌ம் எடுக்கையில் மாண‌வ‌ர்க‌ள் ப‌ய‌ந்து ந‌டுங்கும்போதும், த‌லைமையாசிரிய‌ர் ம‌ம்முட்டியின் செய‌ல்க‌ளை க‌வ‌னிக்க‌ ஒளிந்து நின்று ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ பார்க்கும்போதும் என‌ ப‌ட‌ம் நெடுக‌ ந‌டிப்பில் த‌னியாவ‌ர்த்த‌ன‌ம் ந‌ட‌த்திக்காட்டியிருக்கிறார் ம‌ம்முட்டி.

அப்ப‌ட‌த்தைப் ப‌ற்றிய‌ சிந்த‌னையில் இருந்து வெளிவ‌ர‌ என‌க்கு சில‌ நாட்க‌ள் ஆன‌து. கார‌ண‌ம் ம‌ன‌தை க‌ன‌க்க‌ச் செய்யும் இறுதிக் காட்சிக‌ள். நிஜ‌த்தில் யாருக்கும் இப்ப‌டி ந‌ட‌ந்து விட‌க்கூடாது என்று ப‌த‌றும்ப‌டியான‌ கிளைமேக்ஸ்.

1989ல் ஐ.வி ச‌சியின் இய‌க்க‌த்தில் லோகிதாஸின் திரைக்க‌தையில் வெளிவ‌ந்த‌ மிருக‌யாவில் ம‌ம்முட்டியின் க‌தாபாத்திர‌த்தைச் சுருக்க‌மாக‌ச் சொன்னால் ம‌னித‌ வ‌டிவில் மிருக‌ம். ஊருக்குள் அடிக்க‌டி புகுந்துவிடும் புலியை வேட்டையாடுவ‌த‌ற்கென‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌டும் ம‌ம்முட்டியின் செய‌ல்க‌ளைப் பார்த்து இவ‌னுக்கு புலியே ப‌ர‌வாயில்லையென‌ நினைக்க‌ வைக்கும்ப‌டியான‌ கேர‌க்ட‌ர். எதிர்பாராம‌ல் ந‌ட‌க்கும் ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் ஒருவ‌ரின் ம‌ர‌ண‌த்திற்கு கார‌ண‌மாகிவிடுகிறார் ம‌ம்முட்டி. அச்ச‌ம்ப‌வ‌த்தைத் தொட‌ர்ந்து ம‌ம்முட்டிக்குள் இருக்கும் ம‌னித‌ம் வெளிப்ப‌டுவ‌தால் ஏற்ப‌டும் மாற்ற‌ங்க‌ளே மீதி ப‌ட‌ம். இந்த‌ப் ப‌ட‌ம் த‌னியாவ‌ர்த்த‌ன‌ம் அள‌விற்கு என்னை க‌வ‌ர‌வில்லையெனினும் இந்த‌க் க‌தாபாத்திர‌ம் ரொம்ப‌வே புதுமையாக‌ இருந்தது.

த‌னியாவ‌ர்த்த‌ன‌ம் ப‌ட‌த்தின் கிளைமேக்ஸ் அப்ப‌டியே இய‌க்குன‌ர் பாலாவின் ந‌ந்தாவின் கிளைமேக்ஸ் ஆனால் க‌தையும் ச‌ரி க‌ள‌மும் ச‌ரி முற்றிலும் மாறுப‌ட்டு இருந்த‌து. மிருக‌யாவின் ம‌ம்முட்டி ஏற்று ந‌டித்த‌ வ‌ருண்ணி க‌தாபாத்திர‌த்தை பிதாம‌க‌ன் விக்ர‌ம் க‌தாபாத்திர‌த்தோடு சில‌ இட‌ங்க‌ளில் என்னால் ஒப்பிட்டு பார்க்க‌ முடிந்த‌து. குறிப்பாய் விக்ர‌ம் ஊருக்குள் நுழைந்து ப‌ரோட்டாக் க‌டையில் ச‌ண்டையிடும் காட்சி மிருக‌யாவில் க‌ள்ளுக் கடையில் ந‌ட‌ப்ப‌து போன்று இருக்கும். அச்ச‌ண்டைக் காட்சியில் ம‌ம்முட்டியின் மேன‌ரிஸ‌மும் விக்ர‌மின் மேன‌ரிஸ‌மும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒன்று போல‌வே இருக்கும். ஆனாலும் இங்கும் க‌தையும் க‌ள‌மும் வேறு. ஒரு வேளை ந‌ந்தாவிற்கும் , பிதாம‌க‌னுக்கும் இந்த‌ இரு ப‌ட‌ங்க‌ளும் இன்ஸ்பிரேஷ‌னா இருந்திருக்க‌லாமோ என்ப‌துதான் என‌க்கு தோன்றிய‌ மேற்சொன்ன‌ விஷ‌ய‌ம்.

Thursday, July 15, 2010

நான் ர‌சித்த‌ க‌ள‌வாணி...

க‌ள‌வாணி திரைப்ப‌ட‌த்தின் டிரைல‌ரை பார்த்த‌போதே ப‌ட‌த்தை பார்க்க‌ வேண்டுமென்று நினைத்திருந்தேன்.ப‌ட‌ம் என் எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்த‌து என்றே சொல்ல‌லாம். ப‌ழ‌கிய‌ க‌தைதான் என்றாலும் ஒரு சாதார‌ண‌ க‌தையை நேட்டிவிட்டியோடு கொடுத்து ர‌ச‌னையான‌ திரைக்க‌தையால் ர‌சிக்க‌ வைத்திருக்கிறார் இய‌க்குன‌ர்.

* இப்ப‌ட‌த்தின் வ‌ட்டார‌ப் பேச்சு வ‌ழ‌க்கு அவ்வ‌ள‌வு இய‌ல்பாக‌ வ‌ந்திருக்கிற‌து. "போக‌னும்ல‌", "சொல்றோம்ல‌" என்ற‌ ம‌துரையின் ஸ்லாங்கும் "ஏனுங்", "சொல்றேனுங்" என்ற‌ கொங்கு த‌மிழையும் வ‌ட்டார‌ வ‌ழ‌க்காக்கியே கிராம‌த்தை க‌தைக்க‌ள‌மாக‌க் கொண்டிருக்கும் திரைப்ப‌ட‌ங்க‌ள் அதிக‌ அள‌வில் வெளிவ‌ந்திருக்கின்ற‌ன‌. ஆனால் முத‌ன் முத‌லாக‌ த‌ஞ்சை மாவ‌ட்ட‌த்தின் ஒர‌த்த‌நாட்டைச் சுற்றியுள்ள‌ கிராம‌ங்க‌ளில் பேச‌ப்ப‌டும் "இங்க‌ர்ள‌ கேக்குற‌ன்ன‌"("இங்கே பாரு புள்ள‌ கேட்கிறேன்ல‌"), "அவ‌னும் போட்டா எடுக்க‌னும்ன‌", "அண்ணாந்து பார‌", "அய்ய‌னார் கோயிலுக்கெல்லாமா மால‌ போடுவோ", "அவ்வோ ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ க‌ள‌வாணித்த‌ன‌ம் ப‌ண்ற‌வோ" மேலும் க‌ண‌வ‌ன்மார்க‌ள் ம‌னைவிக‌ளை "ஏட்டி"(ஏன்டி)என‌ அழைப்ப‌து என‌ இப்ப‌டியான‌ வ‌ட்டார‌ வ‌ழ‌க்கை அப்ப‌டியே கொண்டுவ‌ந்திருப்ப‌தை பார்த்து ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட்டேன். கார‌ண‌ம் நானும் இதே ஸ்லாங்கை பேசும் ஒர‌த்த‌நாட்டுக்கார‌ன்.

"அவ‌ய்ங்க‌","வ‌ராய்ங்க‌","போறாய்ங்க‌" என்ப‌து ம‌துரையின் வ‌ட்டார‌ வ‌ழ‌க்கு அதை இந்த‌ப் ப‌ட‌த்திலும் பேசுகிறார்க‌ள் என்று சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளில் ப‌டித்தேன். இந்த‌ "வ‌ந்துட்டாய்ங்க‌", "போயிட்டாய்ங்க‌" என்ப‌து ஒர‌த்த‌நாட்டு வ‌ட்டார‌ வ‌ழ‌க்கிலும் உண்டு. எங்க‌ள் ப‌குதியில் பெண்பிள்ளைக‌ளை "ஆயி", "ஆத்தா", "புள்ள‌" என்று அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதையும் இப்ப‌ட‌த்தில் அழ‌காய் ப‌ய‌ன்ப‌டுத்தியிடுக்கிறார் இய‌க்குன‌ர்.

* "க‌ட்டிக்கிறேன்னு சொல்லு" என‌ பார்க்கும் பொண்ணுங்க‌ளிட‌மெல்லாம் ல‌ந்த‌டிக்கும் ஹீரோ விம‌ல், ப‌ஸ்ஸில் அம‌ர்ந்திருக்கும் இர‌ண்டு பெண்க‌ளுக்கு ஒரே நேர‌த்தில் ரூட் விடுமிட‌த்தில் இளைஞ‌ர்க‌ளிட‌ம் கிளாப்ஸை அள்ளுகிறார். ஹீரோயின் ஓவியாவிட‌ம் நிறைய‌ ரிப்பீட்ட‌ட் எக்ஸ்பிர‌ஷ‌ன்க‌ளாக‌வே இருந்தாலும் ப‌ர‌வாயில்லாம‌ல் ந‌டித்திருக்கிறார். குறிப்பாய் விம‌லிட‌ம் "அறிவ‌ழ‌க‌ன்" என‌ சொல்லுமிட‌த்தில் ந‌ன்றாக‌வே செய்திருக்கிறார்.

* க‌தாபாத்திர‌ங்க‌ளின் ப‌டைப்பும் தேர்வும் மிக‌வும் ர‌சிக்கும்ப‌டி இருந்த‌து. "இந்தா வந்திட்டாரு அறிக்கி" என‌ பொருப்பில்லா ம‌க‌னை க‌டிந்துகொள்ளும் அப்பாவாக‌ இள‌வ‌ர‌ச‌ன், ஹிரோ என்ன‌ க‌ள‌வாணித்த‌ன‌ம் ப‌ண்ணாலும் "அவனா ப‌ண்றான் அவ‌ன் கெர‌க‌ம் அப்ப‌டியிருக்கு"என‌ ம‌க‌னை விட்டுக்கொடுக்காத‌ அம்மாவாக‌ வ‌ரும் ச‌ர‌ண்யா,நெல்வியாபாரியாக‌ வ‌ரும் க‌தாநாய‌கியின் அப்பா,சில‌ காட்சிக‌ளிலேயே வ‌ந்தாலும் இய‌ல்பாய் ந‌டித்திருக்கும் க‌தாநாய‌கியின் அம்மா,வ‌ண்ட‌ல் ம‌ண்ணின் மைந்த‌னாக‌வே முறுக்கித் திரியும் க‌தாநாய‌கியின் கோப‌க்கார‌ அண்ண‌ன்,ப‌ஞ்சாய‌த்தாக‌ வ‌ரும் க‌ஞ்சா க‌ருப்பு என‌ இன்னும் நிறைய‌ சுவார‌ஸ்ய‌மான‌ க‌தாபாத்திர‌ங்க‌ள் அழ‌காய் உலாவருகிறார்க‌ள்.ம‌க‌ன் திடீர் க‌ல்யாண‌ம் செய்து கொள்ளும்போதும் கூட‌ அசால்ட்டாய் ம‌க‌னுக்கு ச‌ப்போர்ட் ப‌ண்ணும் ச‌ர‌ண்யா கேர‌க்ட‌ர் ம‌ற்ற‌ எல்லா துணைக் கதாபாத்திர‌ங்க‌ளை விட‌வும் முந்தி நிற்கிற‌து. ராம்,த‌வ‌மாய் த‌வ‌மிருந்து,எம்ட‌ன் ம‌க‌ன் என வித‌வித‌மான‌ கேர‌க்ட‌ர்க‌ளில் அச‌த்திய‌ ச‌ர‌ண்யா இந்த‌ப் ப‌ட‌த்தில் அசால்ட்டான‌ ந‌டிப்பில் பின்னியிருக்கிறார்.

*ஹிரோ விம‌ல் ஹீரோயினை காத‌லிக்க‌ச் சொல்லி க‌லாட்டா செய்யும் "அறிக்கி LCII2 கூட்டு "காட்சிக‌ள் க‌விதையென்றால் ஹீரோயின் ந‌ட்டு வைக்கும் நாற்றுக‌ள் செழித்து வ‌ள‌ரும் காட்சிக‌ள் வ‌ண்ட‌ல் ம‌ண் ஹைக்கூ. அறிவ‌ழ‌க‌ன் என்னும் பேரை "அறிக்கி" என‌ ந‌ண்ப‌ர்க‌ள் அழைப்ப‌தைப் பிடிக்காத‌ ஹீரோயின்,"அறிவ‌ழ‌க‌ன் என்றுதான் கூப்பிட‌ணும்" என்ப‌தைத் தொட‌ர்ந்து ந‌ண்ப‌ர்க‌ள் ஹீரோவை க‌லாய்க்கும் காட்சி கிச்சு கிச்சு.

* ஃபிள‌க்ஸ் பேன‌ரில் வித்தியாச‌மான‌ கோண‌ங்க‌ளில் போஸ் கொடுப்ப‌துத் தொட‌ங்கி க‌ஞ்சா க‌ருப்பை காணுமிட‌த்திலெல்லாம் க‌லாட்டா செய்து காலியாக்குவ‌து என‌ ஹீரோவின் ந‌ண்டப‌ர்க‌ளாக‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் ர‌சிக்க‌ வைத்திருக்கிறார்க‌ள் சில‌ காட்சிக‌ளில் சொத‌ப்பினாலும் .

* "ம‌ல்லியே மெல்ல‌ வ‌ந்து கிள்ளி போ","மாடி மாடி ஒன்னு" போன்ற‌ மெல்ல‌ மெல்ல‌ தொலைந்து கொண்டிருக்கும் வ‌ண்ட‌ல் ம‌ண் விளையாட்டுக‌ளை திரைக்க‌தையின் ஓட்ட‌த்தில் இய‌ல்பாய் தொட்டுச் சென்ற‌து ர‌ச‌னை.

* மினிப‌ஸ்ஸில் ஹீரோயினின் சைக்கிளை ர‌ன்னிங்கிலேயே ஹீரோ தூக்கும் காட்சி,க‌ஞ்சா க‌ருப்பு இற‌ந்துவிட்ட‌தாக‌ அனொன்ஸ் ப‌ண்ணுமிட‌ம், ஹீரோயினிட‌மிருந்து ஹீரோவிற்கு போன் கால் வ‌ரும்போது சிக்ன‌ல் கிடைக்காம‌ல் ஹீரோ மாட்டு வ‌ண்டியை அப்ப‌டியே ரோட்டிலேயே விட்டு விட்டு சிக்ன‌ல் தேடுமிட‌ம் என‌ ப‌ட‌ம் நெடுக‌ ப‌டு சுவார‌ஸ்ய‌மான‌ காட்சிக‌ள் ர‌சிக்கும்ப‌டி கையாள‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

* ஒர‌த்த‌நாட்டின் ப‌சுமைக் காட்சிக‌ளை க‌ள‌வாடி வ‌ந்திருக்கும் ஓம்பிர‌காஷின் கேம‌ராவிற்கு ஒரு பெரிய‌ ச‌பாஷ். மிக‌ அழ‌காய் ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்ப‌திவு செய்திருக்கிறார். ப‌ட‌த்தின் இன்னொரு பெரிய‌ பிள‌ஸ் ம‌ண்வாச‌ம் வீசும் ய‌தார்த்த‌மான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் .

* குறையென்று பார்த்தால் ப‌ள்ளிக்கூட‌ மாண‌வியை காத‌ல் செய்வ‌து போன்ற‌ காட்சிக‌ள். மேலும் ஹீரோ விம‌ல் த‌ன‌து க‌தாபாத்திர‌த்தை மிக‌ச் சிற‌ப்பாக‌ உள்வாங்கி ந‌டித்திருந்த‌ போதும் என்ன‌தான் ஒர‌த்த‌நாட்டின் வ‌ட்டார‌ வ‌ழ‌க்கை உச்ச‌ரித்தாலும் அவ‌ரின் வாய்ஸ் மாடுலேஷ‌ன் ம‌துரைக்கே இழுத்துச் செல்கிற‌து. அதே போன்று ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ஸ்லாங்கிலிருந்து மாறுப‌ட்டு "ப‌ருத்தி வீர‌ன்" சுஜாதாவின் வாய்ஸும் ஒட்ட‌வில்லை. ரீட்டா டான்ஸ் இட‌ம்பெறும் திருவிழாக் காட்சிக‌ளை கொஞ்ச‌ம் குறைத்திருக்க‌லாம். எப்படா முடியுமென‌ நினைக்கும்ப‌டி வெகு நீள‌ம். நேட்டிவிட்டிக்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கும் சில‌ க‌தாபாத்திர‌ங்க‌ளின் முக‌த்தில் கேம‌ரா ப‌ய‌த்தினால் செய‌ற்கைத் த‌ன‌ம் தெரிவ‌தையும் கொஞ்ச‌ம் க‌வ‌னித்திருக்க‌லாம். இம்மாதிரியான‌ சின்ன‌ச் சின்ன‌ குறைக‌ளைத் தாண்டி ர‌க‌ளையாய் ம‌ன‌தை க‌ள‌வாடுகிறான் இந்த‌க் க‌ள‌வாணி.

* ப‌ஞ்ச் ட‌ய‌லாக்,குத்துப்பாட்டு இவ‌ற்றையெல்லாம் ந‌ம்பாம‌ல் அழ‌கான‌ திரைப்ப‌ட‌த்தைத் த‌ந்த‌ இய‌க்குன‌ர் ச‌ற்குண‌த்திற்கு ம‌ன‌ம் நிறைந்த‌ பாராட்டுக்க‌ள்.

டிஸ்கி:இப்ப‌ட‌த்தில் ஓரிரு காட்க‌ளில் ந‌டித்திருக்கும் சில‌ரை ப‌ட‌ம் பார்த்த‌ அன்றே ஒர‌த்த‌நாட்டில் பார்க்க‌ நேர்ந்த‌து."நீங்க‌தானே க‌ள‌வாணியில‌..." என்று கேட்கும்போது அவ‌ர்க‌ளின் முக‌த்தில் தெரிந்த‌ ச‌ந்தோஷ‌த்தைப் பார்த்திருக்க‌ணும் ....