Monday, August 31, 2009

நானும் அவள்களும்.....2

இத்தொடரின் முதல் பகுதியை இங்கே படித்துவிட்டுத் தொடரவும்.

நித்யாவும் மலர்விழியும் என்னை மிக நெருங்கிவிட கோயிலின் வெளிப்புறக் கட்டைச் சுவரில் அமர்ந்திருந்தவன் எழுந்துவிட்டேன். சுற்றிலும் சிறு சிறு குன்றுகள் சூழ அமைந்திருந்த அக்கோயிலில் அந்த மெல்லிய மாலையில் சுகமான காற்று கொஞ்சம் பலமாகவே வீசிக்கொண்டிருந்தது.

”ஹாய் நவீன்” என்றபடியே நித்யா வர, அதுவரைச் சிரித்துப் பேசிக்கொண்டே வந்த மலர்விழியோ என்னைப் பார்த்ததும் கண்கள் படபடக்க நடையின் வேகம் குறைந்து என்ன உணர்ச்சியைக் காட்ட வேண்டுமென்று புரியாமல் தவித்ததிலேயே எனக்குப் புரிந்துவிட்டது, என்னை அவள் அங்கே எதிர்பார்க்கவில்லையென்பது. எனக்கும் அதே நிலைதான்.

என்ன நடந்தாலும் சரி இன்று நித்யாவிடம் என் காதலை எப்படியாவது சொல்லிவிட வேண்டுமென்பதற்காகப் பார்த்து வைத்திருந்த அத்தனை ஒத்திகைகளும் அடித்த காற்றில் பழுத்த இலைகளாய் உதிரத் தொடங்கியது.

இவள் எங்கே இங்கே என நான் குழம்பியபடியே நின்றிருந்ததைப் பார்த்த நித்யா ”இது என்னோட கிளாஸ்மேட் அண்ட் திக் ஃப்ரெண்ட் மலர்” என்றதும், ”ஏய்” என்று நித்யாவைச் செல்லமாய் தட்டிய மலர்விழி, என்னிடம்” எப்படி இருக்கீங்க” என்றாள்.

என்னைப் பற்றியப் பேச்சு அவர்களுக்குள் ஏற்கனவே இருந்திருக்க வேண்டுமென்பதை சட்டென்றுப் புரிந்து சுதாரித்துக் கொண்டவனாய் ”நல்லா இருக்கேன் மலர்” என்றபடியே அவளின் நலனையும் விசாரித்தேன். பள்ளி நாட்களில் விலங்கினங்களில் பெயரைக் கொண்டு எனையழைத்தவளின் ஒவ்வொரு பதிலிலும் இப்போது “ங்க”ச் சேர்ந்திருந்தது.

நாங்கள் பேசுவதை குறுநகையை முகத்தில் சுமந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தாள் நித்யா. நித்யாவிடம் காதலைச் சொல்லியே ஆகவேண்டும் என்பதைத் தாண்டியும் அந்த இடத்தைவிட்டு எப்போடா கிளம்புவோம் என்கிற மாதிரி அவஸ்தையாய் அந்த சூழலை எதிர் கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.

எங்களிருவரின் நிலையை உணர்ந்தவளாய் நித்யா, ”மலர் நீ கொஞ்சம் கீழே வெயிட் பண்ணு நான் நவீனிடம் கொஞ்சம் தனியா பேசிட்டு வறேன்” என்றாள். குழம்பியவளாய் என்னிடம் விடைபெற்றுக்கொண்ட மலர் சென்ற வேகத்திலேயேத் தெரிந்தது என்னைவிட அவள் இந்தச் சூழலிலிருந்தெப்போது விடுபடுவோம் என்றிருந்தது.

நானும் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பி நித்யா என்னச் சொல்லப் போகிறாளோ என்று அவளைப் பார்க்க,

”நவீன் நீ யாரையாவது லவ் பண்றியா?” பட்டென்று கேட்டாள். சற்றும் எதிர்பாரா இக்கேள்வியால் தடுமாறிச் சிறிது பதற்றத்தோடே,” ஏன் அப்படி கேட்கிற” என்றேன். கொஞ்ச நேரம் அமைதியாய் என்னையேப் பார்த்தாள்.

கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்ததை என்னால் நேர்கொள்ள இயலாது, எங்கெங்கோ பார்வையை அலையவிட்டு ஒரு வழியாய் மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு “ஆமாம் உன்னைத்தான் லவ் பண்றேன்” என்று சொல்ல எத்தணித்தபோது,

”மலர் உன்னை சின்சியரா லவ் பண்றா அதாவது உனக்குத் தெரியுமா?” என்று அடுத்த எரிகணையை வீசினாள். ”என்னது” அலறியேவிட்டேன்.

”ஏன் நீ அவளை லவ் பண்ணலையா?”என்றாள். இதற்கு நான் என்ன பதில் சொல்வதென்று எனக்கேத் தெரியவில்லை. இல்லைன்னு சொன்னா அது பொய், எனக்கு அவளிடம் பொய் சொல்ல விருப்பமில்லை. அதே நேரத்தில் ”இப்போது உன்னைத்தான் விரும்பறேன், முன்புதான் அவளை” என்று சொன்னாலும் அதைவிட அசிங்கம் வேறில்லை. இப்படியே பலவாறு குழம்பி நான் நிற்க, நித்யாவே தொடர்ந்தாள்.

மலரும், நித்யாவும் தோழிகளானதிலிருந்து என்னைப் பற்றிய பேச்சு வந்தது வரை எல்லாவற்றையும் ஒரு கதை போல் சொல்லி முடித்தாள். நான் முன்னெப்போதோ ஓரிரு முறை மலரின் ஊர்ப் பசங்களிடம் அவளைப் பற்றி எதார்த்தமாய் விசாரித்ததையெல்லாம் அவள் காதலாக இவளிடம் சொல்லியிருக்கிறாள். அவள் எங்கே படிக்கிறாள் என்பது கூடத் தெரியாமல் நானிருக்க,அவளோ என்னைப்பற்றி அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறாள். எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

”நீ வந்திருக்கிறதச் சொல்லாமத்தான் அவள இங்கே அழைச்சிட்டு வந்தேன். உன்னைப் பார்த்ததும் அவ நடந்துக்கிட்ட விதத்திலேயே உனக்குப் புரியலையா அவ எந்த அளவுக்கு உன்னை நேசிக்கிறான்னு” என்றாள்.

”ஏண்டி உன்னைப் பார்க்க இவ்வளோ தூரம் வந்து தவியா தவிச்சு நிக்குறேனே உனக்குப் புரியலையா ” என்று உள்ளுக்குள்ளே நினைத்துக்கொண்டே அவள் சொல்வதைத் தொடர்ந்துக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

”அவளை நீயும் விரும்புற என்பது அவளின் ஸ்ட்ராங்கான நம்பிக்கை, நீ எப்போ ப்ரபோஸ் பண்ணுவேன்னு அவ வெயிட்டிங்” என்றாள்.

ப்ரபோஸ் பண்ணத்தாண்டி போறேன் அவளிடம் இல்லை உன்னிடம்தான் என்று மலர்விழியை மறந்து நித்யாவால் நிரம்பியிருந்த இந்த மனசு ருத்ரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது.

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ”என்ன எதாவது சொல்லு” என்றாள்.

என்ன சொல்வதென்றே புரியாமல் ”எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றேன்.

”ஓகே, ஆனா சீக்கிரமாச் சொல்லிடு” என்றபடியே ஆல் தி பெஸ்ட் என்பதாய் கட்டைவிரல் உயர்த்தி வண்டியைக் கிளப்பினாள் நித்யா. மலர்விழி லேசாய் தலையாட்டியபடியே விடைபெற்றுக்கொண்டாள். என் பார்வை முழுதும் நித்யாவின் மேலேயே நிலைக் குத்தியிருந்தது.

(அடுத்த பகுதியில் நிறைவு பெறும்)

நிறைவுப் பகுதி இங்கே:

Friday, August 28, 2009

நானும் அவள்களும்.....

மலர்விழி,ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை ஒரே வகுப்பில் என்னுடன் பயின்றவள். அவளைக் கண்டாலே எனக்கு ஆகாது, சக மாணவர்களுக்கும் அவளென்றால் மகா எரிச்சல்தான். சாந்தி டீச்சருக்கு அடிவருடி, படிப்பில் ஆவரேஜ்தான் என்றாலும் சாந்தி டீச்சர் பஸ்ஸைவிட்டு இறங்கும் போது அவங்க ஹான்பேக்கை வாங்கி வருவதிலிருந்து டிஃபன் பாக்ஸ் கழுவி வைப்பது வரை சகலமும் அவளானதில் லீடரானவள்.

பேசியவர்கள் பெயர் லிஸ்ட்டில் மிக மிக அதிகம்,குரங்குபோல் தாவினான், ரமேஷை அடித்தான்,அனிதாவின் தலையில் கொட்டினான் என என் பெயருக்குப் பின் பலவாறு எழுதி வைத்து சாந்தி டீச்சரிடம் தினமும் அடிவாங்க வைப்பாள். அப்போதெல்லாம் அவளை என் ஜென்ம விரோதியாகப் பாவித்துப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தேன். அடுத்த இரண்டு வருடங்களும் தனது ஜால்ரா திறமையினாலாயே லீடர் பதவியில் ஹாட்ரிக் அடித்தாள்.

ஒன்பதாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருந்த சமயம் திடிரென ஒரு நாள் தாவணியில் வந்தாள். அவள் ஒரு பேரழகி என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. எப்படி சொல்றது, அவ ரொம்..ப அழகாய் இருந்தாள். முன்பு போலில்லாமல் அமைதியாக இருந்தாள், ஏதாவது கிண்டலடித்தால் கோபப்படாமல் வெட்கப்பட ஆரம்பித்தாள். அந்த வெட்கம்தான் என்னை அவளின்பால் கிறுக்கு பிடிக்க வைத்தது.

இத்தனை வருடமா எந்த கண்களை முண்ட கண்ணின்னு திட்டினேனோ அதேக் கண்கள் என்னை ஒரு முறை திரும்பிப் பார்க்காதா என்று ஏங்க ஆரம்பித்தேன். காரணமே இல்லாது அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்றேத் தோணும்.வழக்கம் போல் மற்ற பசங்க அவளை திட்டும்போது என்னையுமறியாமல் அவளுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்தேன்.

எப்போதும் போல் லீடர் பதவிக்கு விருப்பப்படும் மாணாக்கர்களின் பெயரை ஆசிரியர் கேட்ட போதும் கூட முந்திரிக்கொட்டையாக முந்தி கைதூக்குபவள் அன்று அமைதியாய் இருந்து ஓரக்கண்ணால் என்னை கைதூக்கச் சொல்லி ஜாடைக் காட்டினாள். மாமலையே ஓர் கடுகாகும் அர்த்தம் முழுதுமாய் உணர்ந்த தருணம் அது.

லீடர் பதவி என்றாலே எனக்கு அலர்ஜி, தினமும் பிளாக் போர்டை துடைக்கணும், சாக்பீஸ் வாங்கி வரணும் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய நானென்ன வேலைக்காரனா என்கிற நினைப்போடு இருந்தவன் அவளின் கண்காட்டலில் அனிச்சையாய் கையை உயர்த்தினேன்.

ஒரு நாள் வகுப்பில் யாருமே இல்லாத நேரத்தில் அவளின் மதிய உணவை காலி செய்துவிட்டு ஏதுமறியாதவன்
போல முகத்தை வைத்திருந்தேன். உணவு இடைவேளையில் அவசரமாய் டிஃபன் பாக்ஸை திறந்தவள் பாக்ஸ் காலியாய் இருந்ததை கண்ட நொடியில் யோசிக்காமல் என்னைப் பார்த்துச் சிரித்தாள். எப்படி அது? இன்னும் கூட எனக்கு புரியாத புதிர்தான்.

கண்களால் காதல் பேசுவதாய்த் தோன்றும்,பேசும் போதோ சக வகுப்புத் தோழர்களிடம் பேசுவது போலவே என்னிடமும் இயல்பாய்ப் பேசுவாள். என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியாதுத் தவித்துக்கொண்டிருந்தேன்.

சொல்லிவிடலாமென்று நெருங்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சனிய புடிச்சத் தயக்கம் முந்தி வந்து அமர்ந்துவிடும். பத்தாம் வகுப்புத் தேர்வு நெருங்கிய சமயம் இனிமேலும் தாமதித்தால் அவளை இனிமேல் பார்ப்பது கூட அரிதாகி விடுமென்பதால் அவளின் மேற்கொண்ட மையலை என் வகுப்புத் தோழனும் அவளின் ஊர் பையனுமான சக மாணவனிடம் தூது போக இரைஞ்சி நின்றபோதுதான் அவள் அவளின் தாய் மாமாவிற்காகவே வளர்க்கப்படுகிறாள் என்பதை அறிந்து என் காதலை எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன்.

ஒரு வழியாய்ப் பத்தாம் வகுப்பு முடிந்து நான் அருகில் இருக்கும் ஒரு சிறு நகரத்திலும் அவள் வேறொரு பெருநகரத்திலும் மேநிலை வகுப்பைத் தொடர்ந்தோம்.

புதிய பள்ளியில் வேறொரு நட்பு வட்டம் பெருக ஆரம்பித்ததில் கொஞ்ச கொஞ்சமாய் மலர்விழியை மறக்கத் தொடங்கினேன் காரணம் நித்யா. பதினொன்றாம் வகுப்பில் எனக்கு நட்பாகி பனிரெண்டாம் வகுப்பில் அவளில்லாமல் நானில்லை எனும் அளவிற்கு என்னைப் பைத்தியமாக்கியவள்.

மலர்விழியைப் போன்று நித்யா நல்ல நிறமில்லை ஆனாலும் அழகி. பள்ளி ஆண்டு விழாவில் கலை, இலக்கியமென நடக்கும் அத்தனை போட்டிகளிலும் எனக்கும் அவளுக்கும்தான் போட்டி நிகழும். கலை ஆர்வத்தில் எனக்கு நிகராக இருந்ததால் இயல்பாய் நிகழ்ந்தது எனக்கும் அவளுக்குமான ஈர்ப்பு. எனக்கு மட்டுமே அவளின் மேல் ஈர்ப்புக் கூட இருந்திருக்கலாம். இருந்தாலும் அவளுக்கும் என் மேல் ஈர்ப்புன்னு சொல்லும்போதே ஒரு தனி சுகம் மனசெங்கும் பரவுவதை நான் தடுக்க விரும்பவில்லை.

ஒரு நாள் தமிழாசிரியர் உவமைத் தொகைக்கு எடுத்துக்காட்டாக ’மலர்விழி’ என்று சொன்னார்.எனக்கு மீண்டும் மலர்விழியின் ஞாபகம் வந்து நித்யாவை நினைப்பது எதோ மலர்விழிக்கு செய்கிற துரோகம் போல குற்ற உணர்ச்சியாய் வேறு இருந்தது.


ஹார்மோன்கள் ஆடிய கதகளியில் நித்யா நித்யா நித்யாதான் அப்போது எனது அத்தனை செல்களிலும் பச்சை குத்தப்பட்டிருந்ததால் மலர்விழியை நேசித்தது ஒரு இனக்கவர்ச்சியென்றும் நித்யாமேல் உள்ளதுதான் காதல் என்பதாகவும் எனக்குப் பட்டது.

புத்தகம்,டெஸ்க் தொடங்கி கிடைக்கும் அத்தனை ரூபாய் தாள்களிலும் நித்யாவை எனக்கே நித்யமாக்கும் காதல் சங்கேத வார்த்தைகளை கிறுக்கிக்கொண்டிருந்தேன். ஆனாலும் நித்யாவிடமும் நேரில் சொல்லத் தயக்கம். மலர்விழி மாதிரி இவள் அமைதியானவள் இல்லை, எங்கே நான் காதலைச் சொல்லி அவளுக்கு இஷ்டமில்லையென்றால் பட்டென்று அறைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.கிட்டத்தட்ட பாரதியார் காணத் துடித்த புதுமைப் பெண்ணில் பாதியவள்.

இப்படியேத் தயங்கியதில் இரண்டு வருடம் முடிந்து பரஸ்பரம் முகவரி வாங்கிக்கொண்டு சொர்கத்தில் சேராக்காதலோடுப் பிரிந்து வெவ்வேறு கல்லூரிகளில் காலடி வைத்தோம்.

என்னால் நித்யாவை மறக்கவே முடியாமல் துணிந்து அவள் எங்கே படிக்கிறாள் என்பதை அறியும் பொருட்டு அவள் வீட்டிற்கு பல முறை கடிதம் எழுதியும் பதிலில்லாததால் அவள் கொடுத்த முகவரிக்கு நேரில் சென்று பார்த்தபோது அவளின் அப்பாவிற்குப் பணியிட மாறுதல் கிடைத்ததில் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள் என்ற செய்தியை மட்டுமேச் சேகரிக்க முடிந்தது.

இன்னும் கொஞ்ச நாள் அவளைப் பார்க்காமல் இருந்தால் நிச்சயம் சட்டையைப் பிய்த்துக்கொண்டு விடுகிற மாதிரியான நிலையில்தான் என்னுடன் பனிரெண்டாம் வகுப்பில் படித்த ஒரு நண்பனை எதார்த்தமாய்க் காண நேர்ந்தது. அவனுக்கு நான் நித்யாவை ரூட் விடுவது நன்றாகத் தெரியுமென்பதால், ”நித்யாவிடம் எதாவது சொல்ல வேண்டுமா?” என்று அவன் என்னிடம் கேட்டதைத் தொடர்ந்துதான் அவனும் நித்யாவும் ஒரே கல்லூரியில் படிப்பது தெரிய வந்தது.

அவனிடம் நடந்தவற்றைச் சொன்னதும் அவன் கொடுத்த ஐடியாவின் பேரில் நான்கு மணிநேரப் பயணத்தில் அவள் படிக்கும் கல்லூரிக்கு நண்பனை பார்க்கச் செல்வது போல் சென்றேன்.

யூனிஃபார்மிலேயே பார்த்துப் பழகிய அவளை முதன் முறையாக மாடர்ன் ட்ரெஸில் பார்த்ததும் காதல் கதைகளின் வர்ணிப்புகளில் வரும் அதே தேவதையாய்த்தான் எனக்கும் தெரிந்தாள். நான் அவளை எதார்த்தமாய் பார்ப்பது போல் இருப்பதற்கான ஒத்திகையை மனதினுள் நடத்திக்
கொண்டிருக்கும்போதே அவள் என்னைப் பார்த்துவிட்டு ஓடிவந்தாள். இதயம் தாறுமாறாய்த் துடித்து, உடம்பெங்கும் வேர்வைப் பூத்து கைகாலெல்லாம் நடுங்கும் தருவாயில் இருந்தது.

நேரே என்னிடம் வந்தவள் ரொம்ப சந்தோஷமாய் நலம் விசாரித்துவிட்டு , ”நானே உன்னைப் பார்கணும்னு நெனச்சிட்டிந்தேன் மை காட் நீயே வந்து நிக்குற” என்றாள். கபிலனைப் பார்க்க வந்தியா?” என்று அவளாகவேக் கேட்டாள். ”ஆமாம்”என்று ஒரு மாதிரி உளறினேன்.பிறகு எனது கல்லூரி,மற்ற நண்பர்கள் என பல விஷயங்களை விசாரித்தவள், கொஞ்சம் கிசுகிசுப்பான குரலில் ”உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றுச் சொல்லி சாயங்காலம் கல்லூரி முடிந்து வருவதாகவும், என்னை அந்த ஊரில் இருக்கும் பிரசித்திப் பெற்றதொரு கோவிலில் காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டு ”கிளாஸுக்கு நேரமாச்சு” என்றபடியே ஓடினாள்.

பழம் நழுவி பாலில் விழும் போலிருக்கேன்னு நினைத்தப்படியே கோவிலில் காத்திருந்தேன். காதலிக்காகக் காத்திருப்பதை யாருங்க சுகமென்று சொன்னது, எனக்கு மரண அவஸ்தையாய் கரைந்தது அந்நிமிடங்கள்.கிட்டத்தட்ட ஒரு வருடம் பார்க்காமல் இருந்ததை வி
டவும் அந்த சில மணித்துளிகள் கொடுமையாய் நகர்ந்தது.

பொதுவாக கோவிலுக்கு எதாவது நேர்ந்துகொள்வார்கள், ஆனால் அக்கோயிலே காதலுக்கு நேர்ந்து விட்டது போன்று எங்கும் காதலர்களால் நிரம்பி வழிந்தது.மற்றக் காதலர்களைப் பார்த்தபோது இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் கூட உங்களைப் போல என் நித்யாவின் கைபிடித்தப்படியே இந்தக் கோயிலை வலம் வருவேன் என்று மனதில் நினைத்தப்படியே நின்றிருந்தேன்.

தூரத்தில் என் தேவதை சன்னியில் வந்துகொண்டிருந்தாள், அவளின் பின்னால் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தாள்,அவளின் தோழியாக இருக்கக் கூடும். அவர்கள் என்னை நெருங்க நெருங்க மீண்டும் என்னை பரபரப்பு ஆட்கொண்டது.

அவர்கள் என்னை மிக நெருங்கிய சமயம் நித்யாவின் கூட வந்தவளைப் பார்த்ததும் எனக்கு ஒரு நிமிடம் மூச்சு நின்று வந்தது, ஆம் நீங்கள் நினைப்பது மிகவும் சரி மலர்விழியேதான்.

(தொடரும்)

டிஸ்கி:இதன் தொடர்ச்சியை எப்படிக் கொண்டு போவது என்பது இப்போதைக்கு எனக்கே தெரியாது, யாராவது ஹிண்ட் கொடுத்தால் அங்கிருந்து தொடருகிறேன்.


இரண்டாம் பகுதி இங்கே:

Thursday, August 27, 2009

நன்றி நாஞ்சில் நாதம்....

வாசிப்பு என்பதெல்லாம் என்னவென்றே அறியாத தருணத்தில் தான் என் கைகளில் அந்த புத்தகம் வந்தது.முதலில் அதன் அட்டைப் படத்தால் தான் கவரப்பட்டேன்.

பழுப்பும்,கருப்புமான வரிகளை தோலாகப் போர்த்தியபடி கம்பீரமான பார்வையோடு மரங்கள் அடர்ந்த வனத்தில் படுத்திருக்கும் புலியின் படத்தை அட்டையில் அச்சிடப்பட்டிருந்த அந்த புத்தகம் என் கைகளுக்கு வந்த நாளில் பார்த்து ரசித்து, ரசித்துப் பார்த்து என அத்தருணம் வற்றா நதியின் கரைக் கசியும் நீர்த் தடம் போல இன்னும் என்னுள் ஈரமாய்.

புத்தகத்தின் உள்ளே என்ன செய்தி இருக்கிறதென்பதெல்லாம் திறந்து பார்க்கும் முன்பு அந்த புலியின் படத்தைப் பற்றியே அருகில் இருந்த நண்பர்களிடமெல்லாம் வியந்து பேசிக் கொண்டிருந்தேன். நண்பர்களையும் வியப்பில் ஆழ்த்தியது அப்புலி.

புத்தகத்தை முதன் முறை பிரித்தபோது எழுந்த வாசத்தை இப்பொழுதும் கூட என்னால் நுகர முடிகிறது. மண் தொடும் மழையின் வாசத்தை விடவும் அந்த புத்தக வாசம் என்னை கட்டிப்போட்டது.

ஆரம்பத்தில் விருப்பமே இல்லாமல் தான் அப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.ஒரு வகையில் படித்தே ஆக வேண்டிய கட்டாயம் கூட இருந்தது எனலாம். புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே தீண்டாமைக் குறித்த ஆழ்ந்த கருத்துக்கள்.

புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கத்தில் இருந்த குறும் பாக்கள் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.ஒவ்வொரு பாக்களுக்கும் ஏற்ற காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தது. அவ்வோவியங்கள்,பாக்களில் சொல்லப் பட்டிருக்கும் கருத்தைத் தாண்டியும் வாசிப்போருக்கு பல கதைகளைச் சொல்லும். அவ்வோவியங்களில் மனம் லயித்து தனியானதொரு கற்பனை உலகத்தில் சஞ்சரித்து அவற்றோடு வாழ்ந்த காலமெல்லாம் இப்போதும் கூட கனவில் அவ்வப்போது வந்து போகிறது. அத்தனை சக்தி படைத்த ஓவியங்கள் அவை.

சாப்பிடும் போது, தூங்கும் போது என எப்போதும் அப்புத்தகத்தைச் சுமந்தபடியே திரிந்து கொண்டிருந்தேன். என் அம்மா அப்போதெல்லாம் சொல்வார் ”காக்காய்க்கொரு மூக்குத்தியாம் அதை போடுமாம் கழட்டுமாம்” என்று.அந்த அளவிற்கு ஒரு பொக்கிஷம் போல் என்னுடனேயே வைத்திருந்தேன்.

புத்தகத்தை எனக்குத் தந்தவர் அடிக்கடி நான் அதை சரியாக வாசிக்கிறேனா என்பதை சில கேள்விகள் கேட்டு சரி பார்த்துக் கொள்வார். நான் அப்புத்தகத்தை ரசித்து ரசித்துப் படித்ததால் எந்த பக்கத்தில் என்ன இருக்கிறதென்பதை கிளிப் பிள்ளை போல் ஒப்பிக்கும் அளவிற்கு தயாராகிவிட்டிருந்தேன்.

எனக்கு இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது அப்புத்தகத்தில் இருந்த பாடலொன்று,

ஆனை ஆனை
அழகர் ஆனை
அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்.


ஹி ஹி நான் வாசித்த ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வை இது. நண்பர் நாஞ்சில் நாதம் ஏதாவது புத்தகத்தைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை பதிவெழுத சொன்னார், அதான்.

Monday, August 24, 2009

உஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே...

நாங்கள் வழக்கமா செல்கிற டீக்கடையில் எப்போதும் வடை போட்டிருப்பார்கள், புதிதாக இப்போது சமோசாவும்.

கடை பையன்:அண்ணே, சமோசா சூப்பரா இருக்கும்ணே சாப்பிட்டுப் பாருங்க.

நண்பர்:வடை சாப்பிடலாம்னு நெனச்சேன், எனக்கு சமோசா பிடிக்காதுப்பா.

க.பை:அப்போ வடை தரவா?

நண்பர்: உங்க கடையில் சமோசா தானே நல்லாயிருக்கும்னு சொன்னே, அதனால எனக்கு வடை வேண்டாம்.

க.பை:?????

=================

அதே டீக்கடையில் மற்றொரு நாள் டீயின் விலை 3 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக திடீர் விலையேற்றம் செய்திருந்தார்கள்.

நண்பர்: என்ன இப்படி திடீன்னு வெலய ஏத்திட்டீங்க.

க.பை: மழை பெய்து தேயிலையெல்லாம் வெள்ளத்தில் மூழ்கிடுச்சாம், அதனால டீத்தூள் வெலையெல்லாம் ஏறி போச்சுண்ணே.

நண்பர்:அப்படின்னா சக்கரை செலவு மிச்சம், நீ விலைய கம்மிதானேப்பா செய்யணும்.

க.பை: எப்படிண்ணே சக்கரை செலவு மிச்சம்?

நண்பர்: நீதானே சொன்ன தேயிலையெல்லாம் வெல்லத்தில மூழ்கிடுச்சுன்னு.

க.பை: ஆரம்பிச்சிட்டீங்களா?

========================

இது இன்னொரு நாள், நண்பர் கேக் ஒன்றை எடுத்து சுவைத்துக் கொண்டே கடை பையனிடம்,

நண்பர்: தம்பி,பர்த்டே கொண்டாடினா எல்லோரும் என்ன கொடுப்பாங்க.

க.பை: கேக்’தாண்ணே கொடுப்பாங்க(சிரித்தபடியே சொன்னான்)

நண்பர்:உன் கடையில் ’கேக்’கே சில பர்த்டே கொண்டாடியிருக்கும் போல.

க.பை:????

Friday, August 21, 2009

மூணார் ஒரு பயணக் குறிப்பு.

மூணார் செல்லும் திட்டம் பல முறை ட்ராப் ஆகியதால், இந்த முறை வெயிலான் சொன்னதும் மிஸ் பண்ணக் கூடாது என்று உறுதியோடு இருந்தேன். பிளான்படி திருப்பூரிலிருந்து சென்ற வாரம் வெள்ளிக் கிழமை மாலை, மூணார் நோக்கிய எங்கள் பயணம் இனிதே துவங்கியது.

*பல்லடம் டூ உடுமலைப் பேட்டை சாலையின் இருமருங்கிலும் இருந்த ராட்சத காற்றாடிகளை (காற்றாலை மின்சாரம்) அருகில் சென்று பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. வெயிலான் காற்றாலை மின்சாரத் தயாரிப்புக் குறித்து ஏதோ கூறிக் கொண்டிருந்தார், அண்ணாச்சி வாங்கி வந்த கிரில்டு சிக்கன் கம்பாகவும், நான் காஞ்ச மாடாகவும் ஆகிப் போனதில் வெயிலான் சொல்லிக் கொண்டிருந்ததற்கெல்லாம் மையமாக தலையாட்டி வைத்தேன்.

*உடுமலைப் பேட்டையை அடைந்தபோதே நன்றாக இருட்டிவிட்டதால் அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். சின்னாறு செக்போஸ்ட்டை தாண்டியதும் யானைகளின் நடமாட்டம் ஜாஸ்தியாக இருக்கும் என்றும், இருட்டுவதற்கு முன்பே வனப் பகுதியைக் கடந்திருக்க வேண்டுமென்றும் பீதியைக் கிளப்பினார் டிரைவர்.இருந்தாலும் யானைகளை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை,ஏனெனில் எங்க கூடத் தான் கும்க்கி இருந்தாரே..!


*யானைக்கு பதிலாக காட்டெருமையை லைவா பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது. யானையைக் கூட முன்பொரு முறை பரம்பிக் குளத்தில் பார்த்திருக்கிறேன் (கோயில் யானையைச் சொல்லவில்லை). முதன் முறையாக காட்டெருமையை இப்போது தான் பார்க்கிறேன், பயங்கர த்திரில்லாக இருந்தது. (வெயிலான், இந்த இடத்தில ”அடடா ஒரு காட்டெருமையே காட்டெருமையை பத்தி .....! !” என்றுத் தோணுமே, அது ரொம்ப பழைய மொக்கை, சரியா ).

*நள்ளிரவு ஒரு மணியளவில் மூணாரின் ’த்ரீ ரிவர்’ தங்கும் விடுதியை அடைந்தோம். வீடு பெரிதாக இருப்பினும் ஆறு பேர் படுக்கை வசதி மட்டுமே இருந்தது, நாங்களோ எட்டு பேர். அட்ஜெஸ்ட் பண்ணி தூங்கியதில் விடிய விடிய கட்டிலில் ஃபுட் போர்ட் அடித்து தூ(தொ)ங்க வேண்டியதாகிப் போச்சு.(இடையில் யாருய்யா அது தலகானியை உருவியது).*அடுத்த நாள்,காலை உணவை முடித்து கிளம்புவதற்கு மணி பதினொன்றாகிவிட்டது, கும்க்கி அவர்களின் ஆலோசனையின்படி மூணாரில் இருந்து தேனி, கம்பம் தெரியும் ’டாப் ஸ்டேஷன்’ வியூ பாயிண்ட்டுக்கு போக முடிவானது. ”வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு” என்ற பாடல் வரிகளுக்கேற்ப வழியெங்கும் அழகான தேயிலைத் தோட்டங்கள். காரில் போய்க் கொண்டிருந்த போதே ”குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தைப் பற்றி அண்ணாச்சி, கடற்கரைகாரன் சிவா ஒரு அணியிலும், கும்க்கி அவர்கள் தனியாகவும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். (கும்க்கி அண்ணா நீங்க விவாதித்த விதம் பிடித்திருந்தது, படத்தை பற்றிய உங்க பார்வை எனக்கு வித்தியாசமாகப் பட்டது).

*ஒரு மணி நேர பயணத்தில் ஓரிரு நீர்தேக்கங்கள், ஏரிகள் ஆகியவற்றைக் கடந்து வியூ பாயிண்ட்டை அடைந்தோம். என்ன ஒரு அற்புதமான இடம். இந்த இடத்தின் அழகைப் பற்றி சொல்லணும்னா எந்த கோணத்தில் கிளிக்கினாலும் போட்டொ ஷாப்பின் அவசியமிராத அசத்தலான போட்டோஸ் கிடைக்கும். நீண்டு கிடந்த பள்ளத்தாக்கில் ஆங்காங்கே ஆதிவாசியினர் குடியிருப்பு, எப்படி அவர்கள் எந்த வசதியுமில்லாமல் அங்கே இருக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. பனிமூட்டம் அதிகமாதலால் தெளிவான வியூ கிடைக்காமல் தேனியையும், கம்பத்தையும் பார்க்க இயலவில்லை, மாறாக அருகே மலைத்தேன் விற்றவரைச் சுற்றி இருந்த தேனீக்களையும்,மரக் கம்பத்தையும் தான் பார்க்க முடிந்தது. (ஹி ஹி மொக்கைதான், முடியலைல ). 

 *வியூ பாயிண்ட்டில் போடப்பட்டிருந்த சேரில் இயற்கையை ரசித்தபடி அமர்ந்திருந்த போது இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருத்தர் என்னிடம் வந்து “ஷெல் ஐ டேக் எ போட்டொகிராஃப் ?”என்றார். ஏன் என்னிடம் வந்து கேட்கிறார் என்று குழம்பியபடியே நம்மல எதுக்கு போட்டொ புடிக்கட்டுமான்னு கேட்கிறான், ஒரு வேளை நாம் அம்புட்டு அழகாவா இருக்கோம்னு கொஞ்ச நேரத்தில் மணிரத்னம் பட கனவெல்லாம் வந்து போச்சு.ஒரு மாதிரி இஞ்சி தின்ன எஃபெக்டோட ஓகே என்றதும் நான் அமர்ந்திருந்த சேரைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு அழகான நார்த் இண்டியன் குழந்தையை போகஸ் பண்ண ஆரம்பித்த உடன் தான் எனக்கு வெளங்குச்சு. (ப்ச் பல்புதான், இமேஜின் ஹார்ஸை நிறுத்திவிட்டு தொடருங்க). 


*எங்கே என்னைத்தான் போட்டோ புடிக்கப் போறானோன்னு பொறாமையா பார்த்துகிட்டு இருந்த அண்ணாச்சி ”ஹா ஹா” என்று பயங்கரமா சிரித்துவிட்டு ”அதுக்கு நீங்க அவர்களிடமல்லவா பர்மிஷன் வாங்கணும்” என்று அருகில் இருந்த நார்த் இண்டியன் லேடியை கை காட்டினார். (அந்த குழந்தை செவ செவன்னு இருந்ததுங்க என்னத்த நெனச்சுகிட்டு எங்கிட்ட பர்மிஷன் கேட்டானோ).

*கும்க்கி அண்ணே, இள வயதிலேயே அம்மா வேஷம் போட்ட ஒரு நடிகையைப் பற்றி சொன்னீங்களே அவங்க திறமையான நடிகை,பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கணும்னு சொன்னதெல்லாம் நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். (எல்லாம் ஓகே கடைசியில் அவங்க நல்ல பியூட்டின்னு சொன்னீங்களே, அதுக்கு பேசாம என்னைய வியூ பாயிண்ட்டிலிருந்து புடிச்சு தள்ளிவிட்டிருக்கலாம்). 


*மதிய சாப்பாடாக பிரியாணி என்ற பெயரில் வெள்ளை சாதத்தில் இரண்டு சிக்கன் துண்டுகளை புதைத்து கொடுத்தார்கள்.பந்திக்கு முந்திய எல்லோருக்கும் கிழங்கு கிடைத்தது, நான் லேட்டா போனதால் கிழங்கு போச்சேன்னு பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியதா போச்சு. (ஏன்யா ஒரு கர்ட்டஸிக்காகக் கூடவா கேட்கக் கூடாது, நீங்க கிழங்கு திங்கும்போது என் நெலமையை நெனச்சு பார்த்தீங்களா ஹ்ம்).

*ஐந்தரை மணிக்கு விடுதியை அடைந்து கொஞ்ச நேரம் கேரள சேனல்களை மேய்ந்துவிட்டு (அண்ணாச்சி, நாம ரெண்டு பேரும் மலையாளச் சேனல்களை பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணனையும், ஜாக்கியையும் நீங்க பார்த்திருக்கனுமே) மீண்டும் பத்து மணி வாக்கில் இரவு உணவிற்காக கீழிறங்கி வந்த போது எல்லா உணவகங்களிலும் கூட்டம், பெரியதொரு கையேந்தி பவனில் மியூசிக் சேர் முயற்சியில் அண்ணாச்சி,சிவா மற்றும் நான் எப்படியோ இடம் பிடித்து ஆப்பத்தை நிரப்பி ஏப்பத்தை விட்டு விட்டு, மற்றவர்களுக்கு பார்சல் கேட்டால் ”பார்சல் கொடுக்காம் பட்டில்யா” என்று கையை விரிக்க, அடுத்தடுத்த கடைகளிலும் பார்சல் கிடையாது என்று கூற மற்றவர்கள் பிஸ்கட், ஸ்னாக்ஸில் வயிறை ரொப்ப வேண்டியதாகிவிட்டது.

*அன்றிரவு உஷாரா இன்னொரு கூடுதல் பெட் வாங்கி கீழே படுத்துக் கொண்டேன், தூக்கத்தில் பயங்கரமாக உளறி சிரித்தேனாம்,காலையில் சிவா சொன்னார். (நானாவது தூக்கத்தில் தான் உளறினேன்). *காலையில் பனிமூடிய சாலையூடாக ஒரு பேரருவியை அடைந்தோம். என்னே ஒரு பிரமாண்டமான அருவி!, ஒரு பெரிய நீர்த்தேக்கத்தில் பாலை நிரப்பி வைத்து திறந்துவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு வெள்ளை வெள்ளம்.

*அருவியின் எதிரே இருந்த பாலத்தின் கீழிருந்த குன்றில் எல்லோரும் சிறிது நேரம் யோகாசனம் செய்துவிட்டு சில பல போஸ்களில் போட்டோஸ் எடுத்துக்கொண்டு மீண்டும் அடுத்த இடத்திற்கு பயணமானோம். (அண்ணாச்சி, உங்க தலைப்பா கட்டு, ஜெர்க்கின் காஸ்ட்யூமில் அப்படியே எங்க அண்ணனை நினைவு படுத்தினீங்க, ஜக்கம்மா முன்னேற்ற கழகத்தில் ஆள் தேடுறாங்களாம் :) ).


*தேயிலை எஸ்ட்டேட்டில் இருக்கும் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு நாளாவது தங்க வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை (கும்க்கி அண்ணனும் அதே தான் சொன்னார்). அந்த ஆசை இப்பயணத்தில் நிறைவேறியது. நண்பர் ராஜ் (வெயிலானின் அலுவலக நண்பர்) கண்ணன் தேவன் எஸ்டேட்டில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீட்டின் எதிரே பல வண்ணங்களில் ஜினியா பூக்கள் மலர்ந்து வரவேற்றன. ராஜின் குடும்பத்தார் எங்களுக்கு அசர வைக்கும் வரவேற்பளித்தார்கள். அற்புதமான சுவையில் சிக்கனும், கேரள ஸ்பெஷல் மத்தி மீன் குழம்புமாக பெரிய விருந்தே கொடுத்து அசத்தி விட்டார்கள். (ராஜ்,நாடோடிகள் மேட்டரெல்லாம் சொல்லாமல் உங்களப் பத்தி பெருமையா சொல்லியிருக்கேன் அடுத்தத் தடவையும் பார்த்து செய்யுங்க, என்னா டேஸ்டுய்யா அந்த சாப்பாடு சான்சே இல்ல ராஜ்).

*அத்தனை சிறிய இடத்தை அவர்கள் யுட்டிலைஸ் பண்ணியிருக்கிற விதம் அசர வைத்தது. அங்கிருந்து கிளம்பும் போது ராஜையும் அவரின் அண்ணனையும் சேர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கச் சொன்னப்போ ராஜ் ரொம்ப தயங்கி அண்ணனை விட்டு கொஞ்சம் விலகியே நின்னார். சேர்ந்து நில்லுங்க என்று சொன்னதும் ராஜின் அண்ணன் டக்கென்று தன் தம்பியை அணைத்தபடி நின்று தம்பியை ஒரு பாச பார்வை பார்த்தார் பாருங்க, சே எனக்கு ஒரு மாதிரி சிலிர்த்துவிட்டது. ( சுத்தி போடச் சொல்லுங்கப்பா கண்ணு வச்சிட்டேன்).

* நாங்கள் இவ்வளவு ரகளையடித்துக் கொண்டிருக்க பதிவுலகிற்கு சம்பந்தமில்லாத நண்பர்களான கண்ணன் மற்றும் திரு.ரகுராம் இருவரும் தாமரை இலை நீர் போல ஒட்டி ஒட்டாமலே இருந்தார்கள்.( அனுஜன்யாவின் கவிதைகளைப் பற்றி பேசினால் பாவம் அவர்களும் தான் என்ன செய்வார்கள்).
*மீண்டும் உடுமலைப் பேட்டை வந்த உடன் நண்பர் ரங்ஸின் அன்பின் அழைப்பால் உடுமலைக்கு அருகே இருக்கும் அவரின் கிராமத்து வீட்டிற்குச் சென்றோம். அற்புதமான இயற்கைச் சூழலில் தென்னை மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் அவரின் வீடு. ரங்ஸின் வீட்டார் எங்களை அன்பு மழையில் நனைத்து விட்டார்கள். அங்கேயும் இட்லி, பூரி, உப்புமா, ஸ்வீட்ஸ், பழங்கள் என வெயிட்டான சாப்பாடு. (இந்த பதிவுலகம் என்ன செய்ததுன்னு யாராவது இனி கேட்பீங்க, "ரங்ஸ், மதிய நேரத்தில் வந்திருந்தால் நாட்டுக் கோழி ரெடியாக இருந்தது என்றீர்கள்,ஞாபகம் வச்சுக்கோங்க அந்த ஒரு விஷயத்திற்காகவே நம்ம ஃபிரண்ஷிப்பை தொடர்வதாக உத்தேசம்").*என்னடா திங்கிறத பற்றியே எழுதியிருக்கானே, மூணாரின் இயற்கையை வர்ணிக்கவில்லையேன்னு யோசிக்குறீங்களா. ”உனை பார்த்து பார்த்து வாழ நகக் கண்ணில் பார்வை வேண்டும்” என்ற பாடல் வரிகளைப் போன்று மூணாரின் அழகை ரசிக்க உடம்பெங்கும் கண்ணாக இருந்தாலும் பத்தாதுங்க. அதை எப்படி நான் எழுத்தில் கொண்டு வருவது. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் கண்டிப்பா ஒரு முறையேனும் மூணார் போய் வாருங்கள், சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் அமைத்துக் கொண்டாவது போய் வாருங்கள்.(நண்பர்களா என்னை மூணாரிலேயே தொலைத்துவிட்டு வந்திருக்கலாம்).

Wednesday, August 19, 2009

வேடிக்கையான திருவிழாக்கள்..

எங்க ஊர் பகுதிகளில் இருக்கும் சில வேடிக்கையான சம்பிரதாயங்களில் பெண்கேட்டல், பன்றிவேட்டை பாக்குத் திருவிழாவைத் தொடர்ந்து இன்று பகவதியம்மன் கோயில் பூஜை.

பெரும்பாலும் பகவதியம்மனுக்கு கேரளாவில் தான் கோயில்கள் இருக்கும். ஆச்சர்யமாக பகவதியம்மனுக்கு எங்க ஊரிலும் ஒரு கோயில். கோயில் என்று சொல்லுமிடத்தில் அடர்ந்த மரங்களும், செடி கொடிகளும் தான் சூழ்ந்து இருக்கும் கட்டிடமோ, சிலையோ எதுவுமே கிடையாது.


இந்தக் கோயில் என்றில்லை இன்னும் சிலவும் இருக்கிறது, அங்கேயும் சிலைகளோ, கட்டிடமோ இல்லாது பொட்டல் வெளியாக இருக்கும். ஆனால் அவ்விடத்தைக் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். கோயில்களுக்கான எந்த தடயமும் இல்லாது எப்படி அந்த இடங்கள் கோயில்களானது என்று அடுத்த முறை ஊருக்குப் போகும் போது ஏதாவது பெருசை புடிச்சு விசாரிக்கணும்.

இந்தக் கோயிலுக்கு பூஜை போடுவதைப் பற்றி ஒவ்வொரு வருடமும் ஊர் கூட்டம் கூடி பேசுவார்கள், ஆனாலும் கூட்டம் மட்டுமே வருடம் தோறும் நடக்கும், பூஜை நடக்காது. காரணம் சில கண்டிஷன்கள்.

* பூஜை நடக்கும் மாதத்தில் யாரும் மண்டைய போட்டிருக்கக் கூடாது, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தாலும் எங்கே பூஜையன்று கன்ஃபார்ம் ஆகிடும்மோன்னும் பூஜையை ஒத்தி வைத்துவிடுவார்கள்.

*அந்த மாதத்தில் பிரசவம் நடந்திருக்கக் கூடாது. இதிலும் வெயிட்டிங் லிஸ்ட் ரூல்ஸ் பின்பற்றுவார்கள்.

*பொண்ணுங்க புதுசா பச்சை ஓலைக்கு வேலை வைத்து விடக் கூடாது.

இப்படி பட்ட ரூல்ஸ் அந்த காலத்தில் மக்கள் தொகை கம்மியாக இருந்ததால் ஒர்க் அவுட் ஆகியிருக்கும், இப்போதும் ஃபாலோ பண்ணுவதால் பூஜை சாத்தியமில்லாமலேயே இருக்கு.


அப்படியே எல்லாம் கூடி வந்தாலும் அலும்புக்குன்னே ஊருக்கு நாலு பேரு இருப்பாய்ங்கல்ல அதில எவனாவது முப்பாட்டன் காலத்தில நடந்த வாய்க்கால் சண்டையை பஞ்சாயத்துக்கு கொண்டு வந்து தீர்க்கச் சொல்லுவாய்ங்க, இல்லாட்டி நீங்க எப்படி பூஜை போடுறீங்கன்னு நானும் பாக்குறேன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க. அப்புறம் எங்கிட்டு பூஜை நடத்துறது.

எனக்குத் தெரிந்து என்னுடைய ஐந்தாவது வயதிலும், பதிமூன்றாவது வயதிலும் இரண்டு பூஜைகளை பார்த்திருக்கிறேன்.கடைசியாக பூஜை நடந்தது 91 ம் வருடமென்று நினைவு.


பூஜையன்று கோயில் இருக்குமிடத்தை சுத்தம் செய்து வேட்டியாலேயே பந்தல் போட்டு நான்கு பக்கமும் வேட்டியைக் கொண்டே சுற்று சுவர் போலவும் மறைத்து விடுவார்கள்.பெண்கள் நாட் அலவ்டு (சாதாரண நாட்களிலும் பெண்கள் தூரத்தில் இருந்தே வழிபடுவார்கள்).

ஏகப்பட்ட ஆடுகள், கோழிகள் வேண்டுதலின் பேரில் பலி கொடுக்கப்படும். எங்க ஊருக்கு சம்பந்தமே இல்லாத தூரத்திலிருந்தெல்லாம் நிறைய பேர் இந்த பூஜைக்கு வேண்டிக் கொண்டு வருவார்கள்.


சாதத்தோடயே கறியையும் வேகவைத்து மசாலா சேர்க்காமல் மிளகாயை கையாலேயே பிச்சுப் போட்டு ஒரு மாதிரி வித்யாசமான சுவையுடன் இருக்கும். கைக்குத்தல் அரிசியைத் தான் பயன்படுத்துவார்கள் என்று நினைவு.
பொதுமக்களுக்கு அன்னதானம் பரிமாறவென தனி இடமெல்லாம் இருக்காது, அப்படியே வாழையிலையை ஏந்தி பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் அடர்ந்த கருவேலங் காட்டில் கிடைத்த இடத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். இப்போது அந்த கருவேலம் மரங்கள் இருந்த இடத்தில் வீடுகள் வந்துவிட்டது.

பூஜை தொடர்ந்து தடைபட்டு வருவதால் சாமி நம்ம ஊரைவிட்டு போயிடுச்சுப்பா என்றும், ஏதாவது அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்கும் போது, ”பகவதிக்கு பூசை போடததால் தான் இப்படியெல்லாம் நடக்குது” என்றும் பலவாறு பெருசுகள் பேசிக் கொள்வதை ஊரில் அடிக்கடி கேட்க முடியும்.

கோயிலுக்கு அருகில் இருந்த இடத்தை வீடு கட்டவென வாங்கியவர்கள் வீடு கட்டாமல் இருப்பதையறிந்து அவர்களிடம் விசாரித்த போது அந்த மனையில் சாமி ஓட்டம் இருப்பதாகவும், குறுக்கே வீடு கட்டினால் சாமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஜாதகம் பார்த்தவர்கள் சொன்னதாகவும் சொன்னார்கள். இந்த மாதிரி பல கதைகள் எங்க ஊரில் இன்னும் சில கோயில்களைப் பற்றியும் உலவுகிறது.

நம்ம பங்காளி மக்க வாய்க்கால் தகறாரை கொண்டு வர்ரதால இருக்கிற ஒரே நல்ல விஷயம் புளுகிராஸினர் வேலையை மறைமுகமாக இவர்களே செய்து விடுவது தான்.

டிஸ்கி:இந்தத் திருவிழாவை விபரமறிந்து நான் பார்த்ததில்லை என்பதால் என்னால் விரிவான தகவல்களை கோர்வையாக கொடுக்க இயலவில்லை.

அடுத்த பதிவில் பொன்னேர் பூட்டுதலின் இன்றைய பரிதாப நிலைப் பற்றிச் சொல்கிறேன்.

Tuesday, August 18, 2009

பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும்

எங்கள் ஊர்ப் பகுதியில் நடக்கும் சில வேடிக்கையான சம்பிரதாயங்களில் பெண் கேட்டல் என்ற நிகழ்வை எழுதியதைத் தொடர்ந்து இன்று பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் என்ற சுவாரஸ்யத் திருவிழாவைப் பற்றிப் பார்ப்போம்.

கிராமப்புறங்களில் நாட்டுத் திருவிழா என்று ஒன்று நடக்கும். பதினெட்டு கிராமங்கள் சேர்ந்தது ஒரு நாடு.(சோழர்களின் ஆட்சிக் காலத்தின் உள்ளாட்சிப் பிரிவுகளில் ஒன்றுதான் இந்த நாடுகள் எனும் அமைப்பு). கோனூர் நாடு, குளத்தூர் நாடு, காசவள நாடு, மெய்சொல்லி நாடு என ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பெயருண்டு.

தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு தாலுக்காவின் கீழ் வரும் கோனூர் நாட்டில் வருடா வருடம் ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும் நாட்டுத் திருவிழாவின் ஒரு சுவராஸ்யமான பகுதியே ”பன்றி வேட்டை பாக்குத் திருவிழா” .

பெரும்பாலான திருமண சம்பந்தங்கள் எல்லாமே இந்த பதினெட்டுப் பட்டிகளிலேயே இருக்கும்.(இப்போது பரவலா வெளியிலும் சம்பந்தம் பேசுகிறார்கள்) .இந்த பாக்குத் திருவிழாவன்று பதினெட்டு கிராம மக்களும் தங்கள் நாட்டிற்கென்று பொதுவாக இருக்கும் ஒரு கோயிலின் முன்பு கூடிவிடுவர்.

திருமணமானப் பெண்களுக்கு அவர்களின் தாய் வீட்டிலிருந்து சீதனமாக கொட்டப் பாக்குகளை கொடுப்பர்.இந்த பாக்குகளில் எண்ணிக்கை குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து அதிக பட்சமாக ஆயிரக்கணக்கிலும் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பார்கள்.(மக்கள் இப்போது நிஜாம் பாக்கிற்கு மாறி விட்டார்கள்).

இதில் முதல் பாக்கு என்று ஒன்று உண்டு. புதுமணப் பெண்ணிற்கு கொடுப்பதுதான் முதல் பாக்கு. பெண்ணின் உறவுக்காரர்கள் அனைவரும் புதுமணத் தம்பதியருக்கு தாம்பூலத்தில் பாக்கு, பணம் வைத்துக் கொடுப்பார்கள், பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் இனிப்பு வகைகளை கொடுப்பார்கள். எங்கெங்கு காணினும் நிறைய புதுமணத் தம்பதியரை பட்டுடைகளோடு காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த 18 பட்டிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படித்தவர்களாக இருப்பார்கள். திருமணமாகி திருவிழாவில் கணவனோடு நிற்கும் பெண்கள் தங்களோடு கூடப் படித்தப் பசங்களைப் பார்க்கும்போது ஒரு மாதிரி நாணிக் கோணுவாங்க பாருங்க அடடா அழகான கவிதை தருணம்ங்க அது.

இன்னும் சில பெண்கள் பார்த்தும் பாராதது போல பந்தாவாக கணவனின் கைகோர்த்தபடியே நின்று கொண்டிருப்பார்கள், அந்த மாதிரி பொண்ணுங்களைத்தான் ரௌண்டு கட்டுவானுங்க பசங்க, ”டேய் ஊள மூக்கு”, ”சுருட்டை” ,”கௌதாரி” என பள்ளி நாட்களில் வைத்த பட்டப் பெயர்களை வேறு யாரையோ கூப்பிடுவதுபோல் உரக்கச் சொல்லி டரியலாக்குவானுங்க. பதறி கையை உதறி யாரும் அறியாத வண்ணம் “சீ போ” என்று அந்த பொண்ணுங்க செல்லமாய் திட்டுவதையெல்லாம் ஒரு வாரத்திற்கு கதை கதையாய் பேசித் திரிவாய்ங்க.

இன்னொரு பக்கம் பழைய காதலிகளை கண்களாலேயே நலம் விசாரித்த படியே மென்சோகத்தோடு நகர்ந்து போகும் நடுத்தர வயது மனிதர்களையும் இங்கே காணமுடியும்.

பாக்கு கொடுக்கும் வழக்கம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக கொண்டாடப் படுவதாகும். பிறந்த வீட்டோடு என்ன பிரச்சனை இருந்தாலும் பாக்கு திருவிழாவில் ஒன்று கூடிவிடுவார்கள். என்ன சண்டை இருந்தாலும் இந்த பாக்கு கொடுப்பதை தொடர்வதற்குக் காரணம் பாக்கு கொடுக்கப் படவில்லை என்று தெரிந்தால் சம்பந்தப் பட்ட பெண்மணியின் ஊரில் நடக்கும் குழாயடிச் சண்டையில்“போடி சொத்த பாக்குக்கு வக்கத்தவள” என்ற ஏச்சு பேச்சுக்கு ஆளாகி பிறந்த வீட்டின் மானம் கப்பலேற்றப்படும் அபாயம் இருப்பதே. அதே போன்று ”கூடப் பொறந்தவளுக்கு பத்து ரூவாய்க்கு பாக்கு வாங்கிக் கொடுக்க துப்பு இல்ல இவனெல்லாம் தோளில் துண்டு போட்டுகிட்டு திரியிறான்” என்று அண்ணன்,தம்பிகளும் அட்டாக்கிற்கு ஆளாக நேரிடும். அந்த கௌரவப் பிரச்சினைக்காகவே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

புது மணப் பெண்ணிலிருந்து பாக்கின் அவசியம் உணர்ந்த பழைய குமரிகள் வரை திருமணமான அனைவருக்கும் பாக்கு அவரவர் பிறந்த வீட்டிலிருந்து வந்துவிடும். சகோதரர்கள் இருவரைக் கொண்ட பெண்கள் என்றால் இரண்டு தனித் தனிப் பாக்குகள் வரும், அதே பெண்ணின் கணவருக்கு இரு சகோதரிகள் என்றால் சகோதரர்களிடம் வாங்கிய பாக்குகளை கணவரின் சகோதரிகளிடம் கொடுத்துவிட்டு செலவை மிச்சப் படுத்திவிடுவார்கள்.

அலைபேசி இல்லாத காலத்தில் பாக்கை கையில் வைத்துக் கொண்டு அவரவர் உறவினர்களை கூட்டத்தில் அலைந்துத் தேடிக் கண்டிபிடித்து
” யுரேகா யுரேகா” என்று கத்தாத குறையாக பாக்கை கொடுப்பார்கள். அந்த கண்ணாமூச்சி விளையாட்டு இப்போது இல்லை.

தன் பிறந்த ஊரின் மக்களைப் பார்த்ததும்”பெரியம்மா”, ”தம்பிகளா”, ”சித்தப்பா” என எதாவது ஒரு உறவுமுறையை கொண்டு அழைத்தபடியே ஓடி வந்து நலம் விசாரிக்கும் பெண்களைப் பார்க்கும் போது பசங்களுக்கும் கூட கண் கலங்கிவிடும்.

இளந்தாரிக் கூட்டம் அடுத்த வருட புதுப் பாக்கிற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவரவர்களுக்கேற்ற ஜில், ஜங், ஜக்கிற்குப் பின்னால் ரூட் விட்டபடியே திரிவது ஆண்டாண்டு காலமாக தொடரும் மரபுக் கவிதையின்
நீட்சிகள். சில ஜக்கெல்லாம்கூட தாவணியில் அன்று ஜில்லாகக் காட்சியளிக்கும், அதே மாதிரி பொருந்தா சுடிதாரில் ஜில்லும் ஜக்காக திரிந்துகொண்டிருக்கும்.

”பாம் பாம்” ஓசையை குழந்தைகள் இருக்கும் இடமாகப் பார்த்து அழுத்தும் ஐஸ் வண்டிக்காரர்,கலர் பலூனை குழந்தைகளிடம் காட்டி கண்ஜாடையில் வாங்கச் சொல்லும் பலூன் கடைக்காரர், வெரைட்டி ஸ்வீட் என்ற பெயரில் வித விதமான வடிவங்களில் ஒரே சுவையுடைய சக்கரைப் பாகு கட்டிகளை அழகாக அடுக்கி வைத்திருக்கும் திருவிழா ஸ்வீட் ஸ்டால்கள், ரங்கராட்டினம் என சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு தனி உலகத்தில் பெரியவனாகியும் பலமுறை தொலைந்திருக்கிறேன்.

மாமன்,மச்சானெல்லாம் ஒதுக்குப்புற இடத்தில் கள்ளத்தனமாக விற்கப்படும் சோமபானங்களில் மூழ்கி,கிங்,குயின்,ஜாக் என்ற வேத மந்திரங்களை ஓதி மகிழவென்று விழா சார்பாகவே ஒதுக்கப் பட்டிருக்கும் தனியிடத்தில் சமத்தாக அடைந்திருப்பர்.

இத்திருவிழாவின் இன்னொரு அங்கம்தான் ”பன்றி வேட்டை”. பால்குடம், காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வதைப்போல பன்றி வேடமிடுவதாக வேண்டிக் கொண்டு அக்கோயிலின் அருகே இருக்கும் சிறு குட்டையின் சேற்றை உடலெங்கும் பூசியபடியே கோயிலின் முன்பு படுத்திருப்பார்கள். இதில் எல்லோரும் கலந்து கொள்வதில்லை இவ்விழா நடக்கும் ஊரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரில் பதிமூன்று வயதுவரைக்கும் உள்ள சிறுவர்கள் மட்டுமே இப்படி பன்றி வேடமிடுவார்கள்.

உடலெங்கும் சேற்றைப் பூசியபடி இருக்கும் இச்சிறுவர்கள் பாக்குத் திருவிழாவிற்கு வந்திருக்கும் மக்களின் மேல் சேற்றுடம்போடு ஓடிவந்து உரசுவார்கள். இதனால் இந்த பன்றி வேடமிட்ட பசங்களைப் பார்த்ததும் மக்கள் தெரித்து ஓடுவதைப் பார்க்க ரகளையாக இருக்கும். பளிச்சென்று உடை தறித்தவர்களாகப் பார்த்து இந்த பன்றி பசங்க சேற்றை பூசிவிட்டு ஓடிவிடுவார்கள். அழுக்கான சட்டையோடு அசடு வழிந்து நிற்கும் சில மைனர் குஞ்சுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.

பல அம்சங்களை உள்ளடக்கிய இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் உறவை புதுப்பித்தலே. பிரச்சனைகள் நிலவும் உறவினர்களுக்கிடையே பகை மறந்து உறவாட நினைக்கும் நேரத்தில் மூன்றாவது நபர் சமரசம் தேவையிராமல் இயல்பாகவே அவர்கள் கூடிக் குலவவே இத்திருவிழா என்பது என் எண்ணம்.

கொசுறு:
பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் ஊரில் இருந்தேன், ஏதேதோ பிரச்சனைகளால் இந்த வருடம் நாட்டுத் திருவிழா நடக்கவில்லை. வட போச்சேன்னு ஆகிப்போச்சு. (நீ ஊரில் இருந்தியல்ல அப்புறம் எப்படின்னு யாருங்க அங்கே முனகுறது).

அடுத்தது பகவதியம்மன் கோயில் பூஜையோடு வருகிறேன்.

Monday, August 10, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க...10/08/09

குழந்தைகளின் குறும்புகளை எல்லோருமே ரசித்து மகிழ்வோம், அதுவும் அவரவர் குழந்தைகள் என்று வரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு இல்லையா,அப்படி சமீபத்தில் என்னை பெரிதுவக்க வைத்தார்கள் எங்கள் வீட்டு மழலையர்.

எனது அண்ணன்கள் இருவரின் மகள்களுக்கும் இப்போது வயது ஐந்து.பெரிய அண்ணனின் மகள் 'ங்' கிற்குப் பதிலாக 'ந்' என்றுதான் உச்சரிப்பாள்.பொங்கல் என்று சொன்னால் பொந்தல் என்பாள்.சமீபத்தில் என்னிடம் அவள் பேசிய டயலாக் இது,

மேஹா:சித்தப்பா,நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ(?) மாங்காயை மாந்தாய்ன்னுதானே சொல்லுவேன்,இப்போ நான் கரெக்டா சொல்லுவேனே.

(இங்கேயே காமெடி முடிஞ்சு போச்சு ,இருந்தாலும் தொடருங்க)

நான்:பாப்பா பொய்தானே சொல்றீங்க.

மேஹா: நிஜம்மா சித்தப்பா,நீங்க வேணா மாங்காய்னு சொல்லச் சொல்லுங்க, நான் மாங்காய்னு கரெக்ட்டா சொல்வேன்.

நான்:சரி எங்கே 'மாங்காய்' சொல்லு.

மேஹா:'மாங்காய்',சொல்லிட்டோம்ல,எப்பூ...டி.

சின்ன அண்ணனின் மகள் ஹரிணி,அயல் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து கொண்டிருந்தாலும் சமீபத்தில் ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு "சங்கத் தமிழ் மூன்றும் தா","ஆயர்பாடி மாளிகையில்" பாடல்களை தெளிவான உச்சரிப்பில் பாடியதை காணொலியில் பார்த்ததும்,உச்சிமுகர வேண்டும் போல் இருந்தது.இந்த இருவரில் ஹரிணியே தமிழை அட்சர சுத்தமாகப் பேசுகிறாள். அந்த ஒரு விஷயம்தான் இந்த சுயதம்பட்டம் எழுதக் காரணம்.

===========================================================================
இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்க ஊரில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கந்தர்வக்கோட்டைக்கு(புதுக்கோட்டை மாவட்டம்) அருகே இருக்கும் வீரம்மாகாளி கோவிலுக்கு ஊர் பசங்களோடுச் சென்றேன்.

கந்தர்வக்கோட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் என்னுடைய டூவீலருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது எதிரே இன்னொருத்தரும் தொப்பை தள்ளியபடி லுங்கியோடு, வெற்றிலை குதப்பியபடியே டிப்பிகல் விவசாயிக்கான லெட்சனத்தோடு வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார், அவரைப் பார்த்ததும் சட்டென்று "உங்க பேரு வடிவேலா?" என்றேன். அவரும் "ஆமாம்" என்றார்.

அடுத்தக் கேள்வியை "என்னை உனக்குத் தெரியுதாடா?” என்று ஒருமையில் கேட்டதும், அவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, "குழப்பத்தோடவே யாருன்னு தெரியலியே” என்றார். "நீ கருக்காடிபட்டியில்தானே படிச்ச” என்று நான் கேட்டதும், "ஆமாம்" என ஆச்சர்யபட்டதோடு "அது 92 -94ம் வருடமாச்சே" என்று சொல்லியபடியே "நீங்க யாருன்னு தெரியலியே” என்றார்.

"நான் உன்னோட கிளாஸ்மெட்டுதான் யாருன்னு சொல்லு பார்ப்போம்" என்றேன். ரொம்ப யோசித்தும் முடியாமல் போக, "சரி அங்கே வேலை பார்த்த ஆசிரியர் யாராவது உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றேன், பட்டென்று "என்.ஏ ஸார்" என்றார். "நான் அவரு மகன் தாண்டா" என்றதும், என்னுடைய பெயரைச் சொல்லிவிட்டான். "அடையாளமே தெரியலப்பா, இவ்வளோ வருஷம் கழித்தும் எப்படி என்னை கரக்டாக் கண்டுபிடிச்ச" என்றான்.

12 அல்லது 13 வயதில் அவனை கடைசியாகப் பார்த்தது,ஆனாலும் அந்த முகம் இப்போதும் அப்படியே ஏழாம் வகுப்பில் இருந்தது போலவே எனக்குத் தெரிந்தது. பிறகு கொஞ்ச நேரம் பழைய நினைவில் மூழ்கி இருவரும் உரையாடி விடைபெற்றுக் கொண்டோம்.

எதிர்பாரா தருணங்களில் வாழ்க்கை நம்மிடம் விளையாடும் இப்படியான சின்னச் சின்ன கண்ணாமூச்சிகளில் தான் எத்தனை சுவாரஸ்யம். ஊரில் உள்ள மற்ற என்னோட கிளாஸ்மெட்கிட்ட," நான் வடிவேலை பார்த்தேண்டா" என்றால் ஒரு பயலுக்கும் அவனை ஞாபகம் இல்லை.

===========================================================================
நான் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்த சமயம், தமிழ்த் திரையுலகினர் ஏதோ பிரச்சனையால் இரு குழுவாய் செயல்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால் நேரடித் தமிழ் படங்கள் ரிலீஸாகாமல் நிறைய மலையாள மற்றும் தெலுங்குப் படங்கள் டப் செய்து வெளிவந்துக் கொண்டிருந்தது.

அந்த நாட்களில் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஏழு படமாவது பார்க்காவிடில் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். எனவே இந்த டப்பிங் படங்களைக் கூட விடாமல் பார்த்திருக்கிறேன்.

"மாஃபியாகேங்", "சிட்டி", "ஏகலைவன்", "கமிஷ்னர்" என சுரேஷ் கோபியின் ஆக்‌ஷன் படங்கள் வரிசையாக வெளிவந்து வசூலைக் குவித்தது. இந்த படங்களும் விறு விறுப்பான திரைக்கதையமைப்பில் பட்டாசாக இருக்கும். இது ஒரு புறமிருக்க "பிக்பாஸ்", "ரௌடி பாஸ்", "போக்கிரிக் காதலன்", "சின்ன பண்ணை" என தெலுங்கு டப்பிங் படங்கள் ரோஜா, மீனா, நக்மா, ரம்பா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் புரட்சிகரமான நடிப்பால் கல்லாவை நிறைத்தன. (தியேட்டரில் கூட்டம் அம்மு அம்முன்னு அம்மும்,ஷகிலா டைப் படம் ஓட்டியே பொழப்பு நடத்திய தியேட்டர்காரர்கள், இப்படி நம்ம பொழப்புல மண்ண போட்டாய்ங்களேன்னு புலம்புகிற அளவிற்கு வாடிக்கையாளர்கள் எல்லாம் அங்கே போயிட்டாங்க).

"அர்ஜூனா" தெலுங்கு டப்பிங் பட போஸ்டரில் நக்மாவே பிரதானமாக இருந்தார். ஹீரோ யாரென்றுத் தேடினால் குணச்சித்திர நடிகர்கள் மாதிரி ஒரு ஓரத்தில் சிறிய கட்டத்தில் நானும் இப்படத்தில் இருக்கிறேன்னு சொல்ற மாதிரி இருந்தவர் சிரஞ்சீவி!(மன்னன் படத்தின் தெலுங்கு பதிப்பு மீண்டும் தமிழில் இந்த பெயரில்).

இப்போ எதற்கு இந்த ஃபீளாஷ்பேக் என்றால் நேற்று zee தொலைக்காட்சியில் நாகார்ஜூன், சிம்ரன், ரீமாசென் நடித்த ஏதோ ஒரு டப்பிங் படம் ஓடிக் கொண்டிருந்தது. சேனல் மாற்றிக் கொண்டே வந்ததில் இதைப் பார்த்ததும் பழைய நினைவில் அப்படியே கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று பார்த்தேன், சிம்ரன் தனது தங்கையான ரீமா தனது கணவனை(நாகார்ஜூனா) லவ் பண்ணுவதை அறிந்து தங்கையை கணவனுக்கே கல்யாணம் செய்து வைக்க ஆசைப்பட்டு கணவனிடம் கேட்க, அவர் மறுக்கிறார். அப்போது சிம்ரனின் அப்பாவாக வருபவர் ஹீரோவிடம் பேசும் வசனம்,

மாமா:மாப்ள என் ரெண்டு பொண்ணுங்களும் எனக்கு ரெண்டு கண்ணுங்க மாதிரி,என்னதான் கண்ணு ரெண்டா இருந்தாலும் பார்வை ஒன்னுதானே, அதனால என் ரெண்டாவது பொண்ணையும் நீங்களே கட்டிக்கோங்க.

ஹீரோ:ஆஹா பார்வைக்கு இப்படி ஒரு அருமையான விளக்கமா?.

மாமா:இன்னொன்னும் சொல்றேன் கேளுங்க, என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் நான் ஒருத்தனே அப்பாவாக இருக்கும்போது ஏன் நீங்க ரெண்டு பேருக்கும் ஒரே புருஷனாக இருக்கக் கூடாது.

இந்த வசனத்தை கேட்டப்போ எழுதியவரின் முகவரி கிடைத்தால் எந்த குறுக்கு சந்தில் இருந்தாலும் தேடிப் போய் "தெய்வமே"ன்னு காலில் விழணும்னு தோணுச்சு.
===========================================================================
எங்க ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களோடு நன்றாகப் பழகினாலும் தண்ணீர் உட்பட எதுவுமே கொடுக்க மாட்டார்களாம். ”முறைப்பாடு இருக்கிறது தெய்வ குத்தம் ஆகிடும்” என்று சொல்வார்களாம்.

இதன் பின்னணியில் ஏதோ ஒரு சுவாரஸ்யம் இருப்பதையறிந்து ஊர் பெருசு ஒன்றிடம் கேட்டபோதுதான் எங்க ஊரின் வரலாறு எனக்குத் தெரிய வந்தது.

எந்த காலக் கட்டத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, தற்போது எங்கள் ஊர் அமைந்திருக்கும் இடத்திற்கு 2கி.மீ தொலைவில் ஊரின் தெற்கு எல்லையாக காட்டாறு இருக்கும். அந்த காட்டாற்றின் மறுகரையில் தான் எங்களின் பூர்வீகக் கிராமம் இருந்ததாம். நான் சொல்லிக் கொண்டிருக்கும் கதை நடந்த காலத்தில் அடிக்கடி பெரு மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கே குடியிருந்த எங்கள் முன்னோர்கள் வீடு, கால்நடைகள் முதலிய எல்லாவற்றையும் இழக்க நேர்ந்ததால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போது இருக்கும் இவ்விடத்திற்கு வந்தார்களாம். அப்படி வந்தபோது அங்கே ஏற்கனவே பூர்வீகக் குடியாய் இருந்த சொற்ப எண்ணிக்கையிலான மற்றொரு சமுதாயத்தினரை மெஜாரிட்டியான எம்முன்னோர்கள் விரட்டியிருக்கிறார்கள். அப்படி விரட்டப்பட்டவர்கள் தான் தற்போதும் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கும் அம்மக்கள்.(நியாயம்தான்).

எனது முன்னோர்கள் வாழ்ந்த இடமாகச் சொல்லப்படும் அந்த காட்டாற்றின் மறுகரையில் இன்றும் பாழடைந்த நிலையில் மிகவும் சிறிய அளவிலான பொன்னியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் இருக்கிறது.

பொன்னியம்மன் கோவிலில் அம்மனின் சிலை மட்டுமே இருக்கிறது, சுற்றுச் சுவர் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது, சிவன் கோவில் பொன்னியம்மன் கோவிலைவிட சற்று பெரியது, மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும் இக்கோயிலில் தற்போது மூலவர் அறை மட்டுமே முழுதாய் இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாததால் புதர்களும், மரங்களும், பாம்பு சட்டைகளுமாய் ஒரு வித அச்சத்தை தருவிக்கும் தோற்றத்தோடு இருக்கிறது. கோயிலைக் கட்டப் பயன்படுத்தியிருக்கும் சுட்ட கற்களில் வடிவமும்,அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணாம்புக் கலவையால் பூசியிருக்கும் விதமும் அக்காலக் கட்டிடக் கலையின் நேர்த்தியை எண்ணி வியக்க வைத்தது.

இப்படி ஒரு கோயில் இருப்பதே எங்கள் ஊரின் இளைய தலைமுறையினர் நிறைய பேருக்குத் தெரியவில்லை. நானும் கூட இக்கதையை அறிந்த பிறகே அங்கே சென்று பார்த்தேன். அந்த கோயிலினுள் நின்ற போது பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளன் மாதிரி பயங்கரமான ஒரு ஃபீல்.(உள்ளுக்குள் உதறலோடு).வைரமுத்து மாதிரி “வண்டல்மண் இதிகாசம்” என்று ஒன்று எழுத வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு அங்கே நின்றபோது வந்ததுன்னு சொன்னா நீங்க சிரிப்பீங்கதானே,ஆனா நிஜமாவே அப்படித்தாங்க நெனச்சேன்.

Wednesday, August 5, 2009

டிஜிட்டல் கிராமங்களும் வேடிக்கையான சம்பிரதாயங்களும்

நாகரிகத்தின் தாக்கம் வேகமாக கிராமங்களையும் டிஜிட்டல் கனவுகளில் சிக்க வைத்திருக்கும் இக்காலக் கட்டத்தில், குறுகிய கால இடைவெளியில் ஏகப்பட்ட மாற்றங்கள் கிராமப் புறங்களில் நிகழ்ந்திருக்கின்றன. "மாற்றங்கள் மாறாத ஒன்று" என்ற போதிலும், இன்றைய சூழலில் பல விஷயங்களில் அவை இயல்பாய் நிகழ்வதில்லை. அதிரடியாய் சில விஷயங்கள் கிராமங்களில் நுழைந்து (உம்:கேபிள் டீ.வியின் வருகை) கிராமங்களுக்கென்று இருக்கும் பல நல்ல அடையாளங்களை தொலைந்து போகச் செய்திருக்கிறது. அதே நேரத்தில் நல்ல விஷயங்கள் நடந்திருப்பதும் மறுப்பதற்கில்லை.

காண்வென்ட் கால் சட்டைகளில் உடலுக்கு வலிமைச் சேர்க்கும்
கிராமத்து விளையாட்டுகளை மறந்து போன சிறுவர்கள் தொடங்கி எந்நேரமும் சீரியலில் சிக்கி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெண்கள் உட்பட நிறைய விஷயங்களில் தனக்கான தனி அடையாளங்களை இழந்து நிற்கிற இன்றைய கிராமங்களில் சில சாஸ்திர சம்பிரதாயங்களும் காணாமல் போயிருக்கின்றன. அப்படிப்பட்ட சம்பிரதாயங்களில் எங்கள் பகுதியில் வழக்கத்தில் இருந்த, இருந்து கொண்டிருக்கிற வேடிக்கையான சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

’பெண் கேட்டல்’ ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை இப்பழக்கம் எங்க ஊர்ப் பக்கம் இருந்தது. நிச்சயதார்த்தத்தை அரைக் கல்யாணமென்றால் பெண் கேட்டல் நிகழ்ச்சி அரை நிச்சயதார்த்தம் என்று வைத்துக் கொள்ளலாம். மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார்களின் ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இரு வீட்டாருக்கும் சம்மதம் எனும் பட்சத்தில் மாப்பிள்ளையின் ஊரைச் சேர்ந்தவர்கள் (ஆண்கள் மட்டும்) ட்ராக்டரிலோ, மினிலாரியிலோ அவர்களின் வசதிக்கேற்ப திரண்டு இரவு 7மணிக்கு மேல் கையில் பெட்ரோமேக்ஸ் விளக்கோடு ( இது எப்படிண்ணே எரியும்? ) பெண் வீட்டிற்கு வருவார்கள். பெண் வீட்டில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் வீடுதவறாமல் ஆண்களும், பெண்களும் வந்து குவிந்திருப்பர்.

மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கத் தயாராக இருக்கும் உள்ளூர்க்காரர்கள் விருந்தினர்களை வரவேற்று வாசலில் விரிக்கப்பட்டிருக்கும் தார்ப்பாயில்(ஊரில் எத்தனை வீட்டில் தார்ப்பாய் இருக்கிறதோ அத்தனையையும் ஓசியில் வாங்கி விரித்து வைத்திருப்பார்கள்) அமர வைப்பார்கள். இதற்குப் பிறகுதான் சுவராஸ்யங்கள் ஆரம்பிக்கும்.

மாப்பிளை வீட்டார் வந்து அமர்ந்த உடன் கொஞ்ச நேரம் மௌனம் நிலவும், அப்போது உள்ளூரைச் சேர்ந்த நாட்டாமைக்காரர்களில் ஒருவர் "ம்ம்க்கும்"என கணைத்தப்படியே ஆரம்பிப்பார்.

"என்ன உறவு முறைகளெல்லாம் சண்டைக்கு வந்திருக்கிற மாதிரி திரண்டு வந்திருக்குறியளே என்ன விஷேசம் ஒன்னும் புரியலய?"

இதைக் கேட்டதும் மாப்பிள்ளை வீட்டாரின் சார்பாக அந்த ஊர் முக்கியஸ்தர் ஒருவர் தெளிவானத் தமிழில் ஆரம்பிப்பார்.

"பெரியோர்களே, நாங்கள் சண்டைக்கு வரவில்லை நல்ல விஷயமாகத்தான் வந்திருக்கிறோம்" என்பார்.

"அப்படியா நல்லது,விஷயத்தைச் சொன்னால் தெரிந்து கொள்கிறோம்" என்பார் உள்ளூர் பெருசு.

இப்போது மாப்பிள்ளை ஊர்ப் பெருசு வீரபாண்டிய கட்டபொம்மன் கணக்கா ஆரம்பிக்கும் வசனம்தான் இந்நிகழ்ச்சியின் ஹைலைட்.

"நஞ்சையும்,புஞ்சையும் கொஞ்சிக் குலவும் தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியாம் கோனூர்நாட்டில் அமைந்துள்ள இன்ன ஊரில் வசிக்கும் இன்னார் மகன் திருநிறை செல்வன் இன்னாருக்கு, புதுக்கோட்டை மாவட்டம் மெய்சொல்லி நாட்டில் அமைந்திருக்கும் இன்ன கிராமத்தில் வசிக்கும் இன்னார் மகள் திருநிறை செல்வி இன்னாரை பெண் கேட்டு வந்துள்ளோம்" என்று முடிப்பார்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உள்ளூர் இளந்தாரிகள் "யோவ் மாம்ஸ் எங்கய்யா நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிக் குலாவுது, ஆடி மாசம் முடிஞ்சும் இன்னும் ஆத்துல தண்ணி வரல,கொஞ்சிக் குலாவுதாம்ல" என்று சவுண்ட் கொடுத்து கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் சூழலை கலகலப்பாக்குவார்கள்.

"யப்பா கொஞ்ச நேரம் சும்மா இருங்கடா" என்று எதாவது உள்ளூர் பெருசின் அரட்டலை ஏற்று அமைதியாகும் இளந்தாரிக் கூட்டம்.பிறகு உள்ளூர் நாட்டாமை மாப்பிள்ளை வீட்டாரிடம்,"பொன் கொடுத்தால் பெண் கொடுக்கிறோம்" என்பார்.

"அப்படியே செய்கிறோம்" என்று பதிலளிப்பார் மாப்பிள்ளை வீட்டுப் பெருசு.

இந்த வசனத்தில் இருந்தே பழங்காலத்தில் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் பொன் பொருளை சீதனமாகக் கொடுத்து திருமணம் செய்தது தெளிவாக விளங்கும்.ஆனால் இப்போது அந்த வசனம் மட்டுமே வழக்கில் .

அதன் பிறகு பெண்ணின் தாய் மாமனும் ,மாப்பிள்ளையின் தாய் மாமனும் வெற்றிலைப் பாக்கு வைத்து மரியாதை செய்யப்படுவார்கள். இந்த இரு மாமன்களின் சம்மதம் வாங்குவதும் இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கம். மாமன் வீட்டிற்கே பெண்ணை எடுத்துக் கொள்ள ஃபஸ்ட் பீரியாரிட்டி, அதனால் தனக்கு இந்த பெண்ணை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முழு சம்மதம் என்று அவர் தெரிவித்தே பின்னரே மற்ற சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கும். (அன்றைக்கு இந்த மாமன்காரன்கள் ஒரு மார்கமாத்தான் திறிவாய்ங்க).

இந்த சம்பிரதாயத்தின் இறுதியாக பெண்ணை அழைத்து வருவார்கள், வீட்டில் இருக்கிற பாண்ட்ஸ் பௌடரில் பாதியை காலி செய்து, ஐடெக்ஸ் மையில் துளி மிச்சமில்லாமல் கண்ணில் தடவி, புதிதாகக் கட்டிய சேலையில் நடக்க முடியாமல் தடுமாறி சபையோருக்கு முன்னால் வந்து டெரராய் ஒரு வணக்கம் வைத்துவிட்டு "வாம்மா மின்னல்" கணக்கா ஓடி மறைந்துவிடும்.

அதன் பின் நடக்கும் சிறிய விருந்தில் பந்தி பறிமாறும் போது சில பெருசுகள் ரொம்ப ஸ்டைலா சொல்வதாக நினைத்து "ரஜம் கொடுங்க" என்பார்கள், இதற்காகவே காத்திருந்தது போலவே நம்ம இளைஞர் பட்டாளம் ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள்."டேய் பங்க்ஸு மாமாவுக்கு ரம் ஊத்துங்கடா, ஜோறு ஆறிட போவுது","ஜாம்பார் யாருக்குப்பா வேணும்","உறவு முறைகளா, நிதானமா சாப்பிடுங்க இன்னும் பாயாம் இருக்கு" என்று எல்லாத்திற்கும் 'ச'விற்கு பதிலாய் 'ஜ'வை வைத்து பெருசுகளை டரியலாக்கிக் கொண்டிருப்பார்கள். மாமன், மச்சான், பங்காளிகளென்று ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்தபடியே இந்நிகழ்ச்சி முடிவடையும்.

இப்போது இந்த சம்பிரதாயம் தேவையில்லாத செலவு என்பதாலும், நாகரிகத்தின் தாக்கத்தாலும் நாட்டுக் கூட்டம் போட்டு (18 பட்டி,நெளிஞ்ச சொம்பு, அரசமரத்தடி ஞாபகம் வருதா, அதேதான்) இந்த வழக்கத்தை வழக்கில் இருந்து தூக்கிவிட்டார்கள்.

இதேப் போன்று இன்னும் சில சம்பிரதாயங்களும் காலச் சூழலுக்கேற்ப தேவையில்லாத சடங்குகள் என்று கருதப்பட்டு வழக்கொழிந்து போய்விட்டன. அவற்றில் சில வரவேற்கத் தக்கதாக இருப்பினும் இம்மாதிரியான சடங்குகள் ஒவ்வொன்றாய் மறைந்து கொண்டே வரும் சூழலில் கிராமங்களின் தனித்துவங்களான ஒற்றுமை, அன்பு பாராட்டல், பரஸ்பர உதவி புரிதல் போன்றவையும் இதில் அடிபட்டு போகக்கூடிய அபாயமும் இருக்கிறது. ஏனெனில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில்தான் பகையுணர்வு மறந்து எல்லோரும் ஒன்று கூடுவார்கள், தனியொருத்தர் வீட்டுத் தேவையை தன் வீட்டு தேவையாக நினைத்து உதவி செய்வார்கள். பெரிய பகைகள் இருப்பினும் கூட இம்மாதிரி விஷேசங்களில் உறவாடி பகை மறப்பார்கள். இப்போதே பல கிராமங்களில் "எங்க ஊர்" என்பது மறைந்து "எங்க வீடு" என்ற உணர்வு வரத் தொடங்கிவிட்டது. தனித் தனித் தீவுகளாக வாழ பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் என்ற ஒரு வேடிக்கையான திருவிழாவைப் பற்றிய பதிவோடு வருகிறேன்.

Tuesday, August 4, 2009

சின்னக் குயில் சித்ராவின் பாடல்கள்..

நீதானா அந்தக் குயில் படத்தின் "பூஜைக்கேத்த பூவிது" பாடலின் மூலம் தமிழில் இசைஞானியால் அறிமுகப்படுத்தப்பட்டு, பூவே பூச்சூடவா படத்தின் "சின்னக் குயில் பாடும் பாட்டு" மூலமாக புகழின் உச்சிக்குச் சென்று, பிறகு அப்பாடலின் பல்லவியே இவரின் அடைமொழியானது.ஆறு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளியவர், அள்ளிக்கொண்டிருப்பவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தியென பல இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே.


சித்ராவின் பாடல்களில் சிறந்த பாடல் என்ற அடிப்படையில் பார்த்தால் பட்டியல் ரொம்பப் பெரியதாக இருக்கும்.அதனால் எனக்குப் பிடித்த பாடல்களில் சித்ரா அவர்கள் சோலோவாகப் பாடிய சில பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
(பாடல்களின் மேல் கிளிக்கி பாடல்களைக் கேட்கலாம்.)

"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" புன்னகை மன்னனில் இடம் பெற்ற இப்பாடல் சின்னக் குயில் சித்ரா என்றாலே இசைப் பிரியர்கள் அனைவரின் நினைவிலும் சட்டென்று வரும் பாடல்.இந்த பதிவின் தலைப்பை கிளிக்கியபோதும் இப்பாடலே உங்களுக்கு நினைவில் வந்திருக்கும்.சித்ரா அவர்கள், தான் பாடிய பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்தப் பாடலாக இந்தப் பாடலையே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆரம்பக் கால சித்ராவின் குரலில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும், அது இப்பாடலில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். வைரமுத்துவின் வைர வரிகளில்,ராஜாவின் மாஸ்டர் பீஸ்களில் இப்பாடலுக்கு ஒரு தனியிடம் உண்டு.


"மழையின் துளியில் லயம் இருக்குது" சின்னத்தம்பி பெரியத்தம்பி படத்தில் இடம் பெற்ற இப்பாடலில் இசையமைப்பாளர் (ராஜாவா?கங்கை அமரனா?) பியானோவில் கலக்கியிருப்பார். பாடலின் ஆரம்பத்தில் வரும் தூறல் விழுவதைப் போன்ற இசைச் சிதறல் அருமையாக இருக்கும். இப்பாடலின் அற்புதமான வரிகளைக் கேட்கும்போது கங்கை அமரன் ஏன் நிறைய பாடல்கள் எழுதவில்லை என்றக் கேள்வி கண்டிப்பாக எழும்.சித்ரா அவர்கள் பாடலின் பல்லவியின் முடிவில் மாமா என்று முடிக்கும் அழகிற்கே பல முறை விரும்பிக் கேட்டிருக்கிறேன்.


"சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதா" பூவே பூச்சூடவா படப் பாடலான இப்பாடல் பலருக்கும் விருப்பப் பாடலாக இருக்கும். குட்டிப் பசங்களோடு நதியா சைக்கிளில் பாடிக்கொண்டே வருவதை படமாக்கியிருக்கும் விதத்திற்காகவே பலரும் விரும்பிய பாடல். சித்ராவிற்கு மிகப் பெரிய அங்கிகாரத்தை தமிழ் திரையுலகில் வழங்கியப் பாடலும் கூட.


"தேவனின் கோவில் மூடிய நேரம்" அறுவடை நாள் படத்தில் இடம் பெற்ற இப்பாடலைக் குறிப்பிடும்போதே எனக்கு மெய்சிலிர்க்கிறது. இளையராஜாவின் இசையில் எத்தனையோ பாடல்கள் என் விருப்பப் பாடல்களாக இருக்கின்றன, அவறிலும் இது ரொம்ப ஸ்பெஷல். இப்பாடல் படத்தின் கதையோடு பயணிக்கும், இன்னும் சொல்வதென்றால் அப்படத்தின் ஜீவனே இப்பாடல்தான் என்பேன். அலைகள் ஓய்வதில்லை படப் பாடலான "காதல் ஓவியம்" பாடலின் சாயலை லேசாகக் கொண்டிருக்கும் இப்பாடலை சித்ராவின் குரலில் கேட்கும்போது ராஜாவின் இசை, சித்ராவின் குரல் என்பதையும் தாண்டி இப்படதைப் பார்த்தவர்களுக்கு நடிகை பல்லவி இப்படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரமும் அவரின் நடிப்பும் நினைவில் வந்து போகும். மிஸ் பண்ணக் கூடாத திரைப்படம்.

"குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்" இந்தப் பாடலின் சிறப்பை தனியாக விளக்க வேன்டியதில்லை.மெல்லிசை மன்னரும்,இசைஞானியும் இணைந்து உருவாக்கிய பாடல்."கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்கிறதா" என்ற குறும்பான வரிகளுக்கு சித்ராவின் குரலும் குறும்பு செய்யும். இதே மெட்டை ராஜா இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான சீனி கம் ஹிந்தி படத்திலும் பயன்படுத்தியிருப்பார். ஸ்ரேயா கோஷலின் குரலில் அப்பாடலும் நன்றாக இருப்பினும் இந்த பாடல் அளவிற்கு வசீகரிக்கவில்லை.

"பாடறியேன் படிப்பறியேன்" சிந்து பைரவி படப் பாடலான இப்பாடலில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி முதல் தேசிய விருதை வென்றார் சித்ரா.
இப்பாடல் பதிவின் போது சித்ரா இசை கல்லூரி மாணவி, அப்போது அவருக்கு எக்ஸாம் இருந்ததாம்,இருப்பினும் "அதைவிட உனக்கு பெரிய அங்கிகாரம் கிடைக்கப் போகும் பாடலை கம்போஸ் பண்ணியிருக்கேன் எக்ஸாம் பிறகு எழுதிக்கலாம் வந்து பாடிட்டு போ" என்ற இளையராஜாவின் அன்பு கட்டளையை மீற முடியாமல் வந்து பாடினாராம்.அப்பாடல்தான் தன் இசை வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாகவும் பல இசை நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார்.

"ஜானகிதேவி ராமனைத் தேடி" சங்கர் கணேஷ் இசையில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இடம்பெற்ற அற்புதமான மெலடி. இப்பாடலின் இடையில் வரும் "நானம் வந்து தடைபோட நாயகன் அங்கங்கே எடைபோட" என்ற வரிகளை காட்சிப் படுத்தியிருக்கும் விதம் அசத்தலாக இருக்கும். படத்தில் இப்பாடலின் கடைசியில் கமலா காமேஷ் பாடுவதாக முடியும்போது விசுவின் ரியாக்ஷன் எழுதும்போதே சிரிப்பை வரவழைக்கிறது. விசுவின் பெரும்பாலான படங்கள் எனக்கு பிடிக்காது ஆனாலும் இந்த படத்தை தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பினாலும் மிஸ் பண்ணுவதே இல்லை.


"நின்னுக்கோரி வர்ணம்" ராஜாவின் மியூசிக் த்ரில்லர் என்று வர்ணிக்கப்படும் அக்னி நட்சத்திரம் படப் பாடல், படமாக்கியிருக்கும் விதம்தான் கொஞ்சம் கடுப்பேற்றும் இருப்பினும் சித்ராவின் குரல் அந்தக் குறையை மறைத்துவிடும். அற்புதமான வரிகளும், சித்ராவின் இனிமையான குரலும், அமலாவின் துடிப்பான நடனமும் இப்பாடல் என்னுடைய ஆல்டைம் பேவரைட்டுக்கான காரணங்கள். 85ற்குப் பிறகு அக்னி நட்சத்திரம், புது புது அர்த்தங்கள் மற்றும் கோபுர வாசலிலே ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைக்குபோது பயங்கர ஹேப்பி மூடில் ராஜா இருந்திருக்க வேண்டும், இம்மூன்று படங்களில் இடம் பெற்றிருக்கும் அத்தனைப் பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டானவை.

"புத்தம் புது ஓலை வரும்" வேதம் புதிது படப் பாடல்.பாரதிராஜா முதன் முதலில் இளையராஜாவைத் தவிர்த்து வேறொரு இசையமைப்பாளர் இசையில் இயக்கிய படம். தேவேந்திரனின் இசையில் அத்தனைப் பாடல்களும் ஹிட்டானவை. பாடலின் வரிகளில் வைரமுத்து புகுந்து விளையாடியிருப்பார். "கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி காலம் கழித்திருப்பேன், உலகம் அழிகின்ற போதும் உன்னை நினைத்திருப்பேன்" என்ற வரிகளை கேட்கும்போதெல்லாம் ரிவைண்ட் செய்து கேட்க வைக்கும் அளவிற்கு காதலின் ஏக்கத்தை தனது குரலில் சித்ரா ஜீவனோடு வெளிப்படுத்தியிருப்பார்.

"வந்ததே ஓ ஓ குங்குமம்" கிழக்கு வாசல் படத்தில் இடம் பெற்ற இப்பாடலில் சித்ராவின் ஹைபிட்ச் நன்றாக இருக்கும்.எனது சகோதரி தனது பள்ளி நாட்களில் இப்பாடலையே எப்போதும் பாடிக் கொண்டிருப்பார்,அவரின் மூலமாகவே நானும் இப்பாடலை ரசிக்க ஆரம்பித்தேன்.

"தத்தித்தோம் வித்தைகள் கற்றிட" மரகதமணியின் இசையில் அழகன் படத்தில் இடம் பெற்றப் பாடல்.தான் பாடிய பாடல்களில் கொஞ்சம் சிரமப்பட்டு பாடிய பாடலாக சித்ரா அவர்கள் முன்பொருமுறை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார். புலவர் புலமை பித்தனின் கவிதை நயம் ததும்பும் ஒவ்வொரு வரிகளுக்கும் இடையில் கீபோர்டில் மரகதமணி பின்னியெடுத்திருப்பார். பாடலை இயக்குனர் பாலச்சந்தர் படமாக்கியிருக்கும் விதமும் நன்றாக இருக்கும்.
பாடலின் இறுதியில் ஸ்வரங்களை முடித்து வெஸ்டன் ஸ்டைலில் தாவும் ட்யூனை அத்தனை பர்ஃபெக்டா வேறு யாரும் பாடியிருக்க முடியாது என்று சொல்லுமளவிற்கு பிரமாதப்படுத்தியிருப்பார் தனது வசீகரக் குரலில் சித்ரா.

"தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே" சின்னத்தம்பி படப் பாடலான இப்பாடலில் ல,ள,ழ ஆகியவற்றை சித்ரா அவர்கள் உச்சரிக்கும் விதத்தைக் கவனித்துப் பாருங்கள் அத்தனை தெளிவாக இருக்கும்.கொஞ்சம் நாட்டுபுற சாயலில் வார்த்தைகளை உச்சரிக்கும் விதமும் இப்பாடலை நான் மிகவும் ரசிக்கக் காரணம்.


இங்கே சொல்லியிருக்கும் பாடல்கள் 80 - 95 ரேஞ்சில் வந்தவைகள் மட்டுமே, இன்னும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "கண்ணாளனே","எங்கே எனது கவிதை", "கண்ணாமூச்சி ஏனடா" போ
ன்ற பாடல்களும், தேவாவின் இசையில் "கருப்பு நிலா" போன்ற நிறைய சோலோஸ் பாடியிருக்கிறார்.நேரம் கிடைக்கும் போது இப்பதிவின் இரண்டாவது பகுதியாக அப்பாடல்களையும் பார்க்கலாம்.

Sunday, August 2, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க-03/08/09

கடந்த வாரம் சனிக்கிழமையன்று திருப்பூரில் வழக்கமாகச் செல்லும் சலூனில்(இன்னும் கொஞ்ச நாள்தான் அப்புறம் அங்கே எனக்கென்ன வேலை) தலையை முடி வெட்டுபவரிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ஆட்டிவைத்தப்படியே ஆடிக்கொண்டிருந்தேன்.

சன் தொலைக்காட்சியில் எம்டன் மகன் ஓடிக்கொண்டிருந்தது. முடி திருத்துபவர் என் தலையில் கண்ணும் தொலைக்காட்சிப் பெட்டியில் கருத்துமாக வெட்டிக் கொண்டிருந்தார்."அண்ணே டீவியைப் பார்த்துக் கொண்டே சிகைச் சேதத்திற்கு பதிலா சிரச்சேதம் பண்ணிடாதீங்க" என்ற
என் வேண்டுகோளை ஏற்று ஒருவழியா தலையை முடித்துவிட்டு, முகச் சவரத்திற்கு வந்தார்.

டீவியில் நாசர் ஃபுல் மப்பில் பரத்திற்கு சிக்கனை மல்லுக் கட்டி ஊட்ட முயலும் போது,"எனக்கு ஈரல் பிடிக்காதுப்பா" என்று பரத் சொல்லச் சொல்ல கேளாமல்,
" நீ இதை சாப்பிட்டே ஆகணும்" என நாசர் அலும்பு பண்ண அருகில் இருக்கும் வடிவேல் "இப்போ என்ன அந்த ஈரலை சாப்பிடணும் அம்புட்டுதானே இப்படி கொடுங்க நான் சாப்பிடுறேன்" என்று கேட்க சற்றும் எதிர் பாரா நேரத்தில் நாசர் பளீரென வடிவேலுக்கு அறைவிட கன்னத்தில் கைவைத்தப் படியே வடிவேல், "ரைட்டு" என்றதும் பார்பர் அண்ணன் பொங்கி வந்தச் சிரிப்பை மிகுந்த சிரமத்தோடு அடக்கியபடியே ஷேவ் செய்து கொண்டிருந்தார்.அவருடைய ஃபேஸ் ரியாக்ஷனைப் பார்த்த என்னால் சிரிப்பைக் கன்ட்ரோல் பண்ணமுடியாமல்
வெடித்துச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன், பார்பரும் என்னைவிட பயங்கரமாக சிரித்துக் கொண்டே கையில் கத்தியோடு சலூனை விட்டு வெளியிலேயே ஓடிவிட்டார். நான் பாதி ஷேவ் செய்யப்பட்ட முகத்தோடும், கழுத்தில் சுற்றப் பட்ட துணியோடும் சலூனில் நின்று சிரித்துக் கொண்டிருந்த போது சாப்பிட போயிருந்த இன்னொரு பார்பரும் வந்துவிட்டார். "என்னண்ணே இப்படிச் சிரிக்கறீங்க" என்று எங்கள் இருவரிடமும் கேட்டதற்கு," ஒன்றுமில்லை" என்ற படியே மீண்டும் ஷேவ் பண்ண ஆரம்பித்தார்.

மீண்டும் சிறிது நேரத்திலேயே சொல்லி வைத்தார் போல் இருவருக்கும் அடக்க முடியாமல் சிரிப்புவர, மீண்டும் அவர் வெளியில் ஓட எதுக்கு இப்படிச் சிரிக்கிறோம் என்றேத் தெரியாத இன்னொரு பார்பரும் எங்கள் இருவரையும் பார்த்து கண்ணில் நீர்வர பயங்கரமா(உண்மையிலேயே பயங்கரமா) சிரிக்க ஆரம்பித்துவிட்டார். வேலை விஷயமாக அலைந்து கொண்டே இருந்ததில் மிகுந்த டென்ஷனோடு இருந்த நான், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு படு ரிலாக்ஸ்டாக ஃபீல் பண்ணினேன். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிக்கப் பழகிவிட்டால் வாழ்க்கைதான் எவ்வளவு சுவாரஸ்யமாகிவிடுகிறது.


==================================
பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு கல்லூரிக்கு விரிவுரையாளர் பணிக்காக சமீபத்தில் ஒரு தினசரியில் வந்திருந்த விளம்பரத்தைப் பார்த்து அதில் கொடுத்திருந்த அலைபேசிக்கு தொடர்பு கொண்டு என்னுடைய நண்பர் தன்னுடைய விபரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தபோதே எதிர் முனையில் இருந்தவர் கொஞ்சம் கூட சிரத்தையில்லாமல், "ம்ம் சீக்கிரம் சொல்லுங்க" என்று எதையும் முழுதாகச் சொல்ல விடாமல் நக்கலடிக்கும் தோரணையில் ,"சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்குறீங்க" என்றிருக்கிறார். எதிர்பார்ப்பைச் சொன்னதும்," நீங்க இப்போ பார்க்கிற வேலையையே பாருங்க அவ்வளோ சம்பளமெல்லாம் கொடுக்க முடியாது " என்று பட்டென்று இணைப்பைத் துண்டித்திருக்கிறார். இந்த மாதிரி ஆளுங்க வைத்து நடத்தும் கல்லூரிகளின் தரத்தைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அனேகமாக அவர் இதற்கு முன்பு தேங்காய் வியாபாரியாய் இருந்து ஸ்ட்ரெய்ட்டா இந்த புது வியாபாரத்திற்கு வந்திருக்கக் கூடும். நல்ல வேளை நேரில் செல்லவில்லை,நேரில் மாட்டு வியாபாரி மாதிரி துண்டை கையில் போட்டு சம்பளம் பேசியிருந்தாலும் பேசியிருப்பார்.

==================================
gtalk கில் என்னுடைய ஸ்டேட்டஸ் மெஸேஜாக "குழல் இனிது யாழ் இனிது என்பர், நான் பேசிக் கேளாதார்" என்று வைத்திருந்ததற்கு உல்டாவாக நண்பர் லக்கிலுக் அவர்கள் "குழலினிது யாழினிது என்பார் - நடுநிசி தூக்கத்தில் தம் மழலை சொல் கேட்டவர்!" என்று வைத்திருந்தார்.பதிவுலகில்தான் எதிர் பதிவு,எதிர் கவுஜ என்றுப் பார்த்தால் இங்கேயுமா, முடியல. (குட்டீஸ் தூங்கவே விடுவதில்லையா நண்பா).

==================================
டைமிங் சென்ஸ் சிலருக்குக் கை வந்த கலையாக இருக்கும். எதைச் சொன்னாலும் அதிலிருந்து காமெடி செய்வார்கள். அதுவும் நண்பர்கள் கும்பலாக இருக்கும் இடத்தில் அசால்ட்டாக வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். நம்ம பதிவுலகத்தை இந்த மாதிரி நிறைய டைமிங் சென்ஸ்காரர்கள் விரவிக் கிடக்கும் இடமாகப் பார்க்கிறேன். ரொம்ப சீரியஸாக எழுதியிருப்போம், ஜஸ்ட் லைக் தட்னு நாம நினைத்துப் பார்த்திராத அளவிற்கு மனதும் நோகாமல் எல்லோரும் ரசிக்கும்படி வார்த்தைப் பகடி செய்துவிட்டு போயிருப்பார்கள் பின்னூட்டத்தில்.

ஆனால் இதே டைமிங் சென்ஸ் தங்களுக்கு மட்டும்தான் வரும் என்கிற மாதிரி சிலர் சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் சீரியஸ்னஸ் புரியாமல் தங்களது திறமையை காட்டுகிறேன் பேர்வழியென்று எரிச்சலைக் கிளப்புவார்கள். அதுவும் இந்த மாதிரி நபர்களின் ஓரிரு ஜோக்கிற்கு சிரித்துவிட்டால் போதும், அவ்வளவுதான் அதன் பின் நாம் என்ன பேசினாலும் அவர்களின் கவனம் முழுவதும் வெறும் வார்த்தைகளிலேயே(ஓட்டுவதற்கு) இருக்குமேத் தவிர என்ன சொல்கிறோம் என்பதை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் டைமிங் சென்ஸ் என்ற பெயரில் மொக்கை போட ஆரம்பித்துவிடுவார்கள், பழகிய தோஷத்துக்கு நேரடியாக சொல்ல முடியாமல் விதியேன்னு கேட்க வேண்டியதாய் இருக்கும்.

சமீபத்தில் என்னுடைய நண்பர்கள் சிலரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அதில் ஒருவர் இப்படித்தான் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தார், இவ்வளவுக்கும் அவர் நல்ல புத்திசாலி, திறமையானவர். எனக்குத் தெரிந்து அங்கிருந்த அனைவருமே பக்கா டைமிங் சென்ஸ் உடையவர்கள்.ஆனாலும் சூழ்நிலையின் காரணமாக அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொண்டார்கள் அந்த குறிப்பிட்ட நண்பரைத் தவிர. சில சமயம் அவரின் வார்த்தைகளிலிருந்து வேறு யாரேனும் அவரை மடக்கினால் ஒரு மாதிரி டென்ஷனானார். அடுத்தவர்களை நக்கலடிக்கும் அவர் தன்னை யாரும் அப்படி செய்தால் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை. நல்ல சிந்தனையாளர் இருப்பினும் அவரிடம் இப்படி ஒரு ஆட்டிடியூட்.(ப்ச் என்ன பண்றது கேவலம் மனுஷ பிறவியா பிறந்தாச்சு, இப்படி ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு விஷயத்தில் கண்ட்ரோல் இல்லாமல்தான் இருந்து விடுகிறோம் சமயங்களில்).

அடிப்படையில் நாம் நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் பொது இடங்களில் நமது பிகேவியரை வைத்துத்தான் நமது கேரக்டர் தீர்மானிக்கப்படும், "ஐயோ நீங்க தவறாக புரிந்து கொண்டுவிட்டீ
ர்கள்" என்று பிறகு விளக்கம் கொடுப்பதைவிட இயன்றவரை நம்மை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நலம்.

==================================
இறுதியாக இந்த வாரம் படித்ததில் பிடித்தப் பதிவு , நண்பர் கதிர் ஈரோடு அவர்களின் மூன்றாம் உலகப் போர் பதிவு. பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டியதின் அவசியத்தை சுவாரஸ்யமான நடையில் அவரின் அன்றாட நிகழ்வுகளோடு இணைத்து எழுதியிருந்தது மிகவும் பிடித்திருந்தது.கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவும் கூட.கதிர் அவர்களைப் போன்று நன்றாக எழுதும் பல பதிவர்களின் வலைப் பக்கங்கள் இப்போதுதான் என் கண்ணில் சிக்குகிறது. தொடர்ந்து நல்ல பதிவுகளைத் தாருங்கள் நண்பரே,வாழ்த்துகள்.