Tuesday, April 9, 2013

வண்டல் மண் கதைகள்-6

ஆலக்காட்டுக்கு எப்படியாலங்க போகணும்?” குரலைக்கேட்டு தனது டீக்கடை கல்லாவில் உட்கார்ந்திருந்த கோனார், படிச்சிக்கிட்டு இருந்த தினத்தந்தியிலிருந்து தலையை நிமித்தாம, மூக்குக் கண்ணாடிக்கும் புருவத்துக்கும் இடையில பார்வையை மட்டும் நிமுத்திப் பார்த்தார்.

வெள்ளையுஞ் சொள்ளையுமாக ஸ்ப்ளண்டர் ப்ளஸ்ல உட்கார்ந்தபடி கோனாரின் பதிலை எதிர்பார்த்துக்கிட்டு நின்னவனுக்கு ஒரு முப்பத்தஞ்சு வயசிருக்கும்.

“ஆலக்காட்டுக்கு வழி” என்று மீண்டும் ஆரம்பித்தவனுக்கு, “ஆலக்காட்டுக்கா, இந்தா இப்படியே ஆத்துக் கரையிலேயே போனியள்னா ரெண்டாவது பாலத்தோட தெக்கால திரும்பிக்கிருங்க” என்ற கோனார்,தொடர்ந்து “அந்தா அங்ன பஸ்டாப்ல கால்ல கட்டு போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்காரு பாருங்க, அவரு ஆலக்காடுதான், பாவம் ரொம்ப நேரமா பஸ்ஸுக்கு ஒக்காந்திருக்காரு, முடிஞ்சா அவரையும் ஏத்திக்கிட்டு போறியளா?” என்று நிழற்குடையில் உட்கார்ந்திருந்த சிவலிங்கத்தை காட்டிவிட்டார்.

“அதுக்கென்ன ஏத்திக்கிட்டாப் போச்சு” என்றவன் நன்றிங்கங்கிற மாதிரி கோனாரைப் பார்த்து தலையாட்டிவிட்டு வண்டியை பஸ் ஸ்டாப்பை நோக்கி விட்டான்.

நிழற்குடை கட்டையில் கால் ரெண்டையும் மடக்கி குத்துக்காலிட்டு ஐயப்பஞ்சாமி கணக்கா உட்கார்ந்தபடிக்கு பஸ் வராத எரிச்சல் உள்ளேயும், கொளுத்தியெடுக்கும் வெயில் வெளியேயும் சேர்ந்து அனத்தியதை, கையில் வைத்திருந்த குத்தாலத் துண்டைக் கொண்டு விசிறி விரட்டிக்கொண்டிருந்த சிவலிங்கம், ”ஆலக்காட்டுக்குத்தான போறிய? ஏறிக்கங்க” என்று யாரோ முன்ன பின்ன தெரியாதவன் சொன்னதைக் கேட்டதும் , விசுறுவதை நிறுத்தி, குத்துக்காலை பட்டுன்னு தொங்கவிட்டு, அறிக்காத தலையை சொறிந்துமென மாறி, ”ஆமா, ஆலக்காட்டுக்குத்தான் போகணும், ஆனா தம்பி யாருன்னு புடிபடலியே” என்று வழிசலாய் சிரிச்சுக்கிட்டு இருக்கையிலேயே, ”ஆலகாட்டாரேய்ய்ய்ய்” என்ற கோனாரின் குரல் வரவும், திரும்பினான்.

தினத்தந்திக்குள்ள விரலை வச்சபடிக்கு கையை ஆட்டி ஆட்டி ”நாந்தான் சொன்னேன், ஏறிக்கங்க” ங்கிற மாதிரி சைகை செய்ததை புரிஞ்சிக்கிட்ட சிவலிங்கம், தலையை ஆட்டிக்கிட்டே இன்னும் பெரிசா வழிஞ்சபடி, வண்டியில் ஏறிக்கொண்டு, ”வரட்டுமா” ங்கிற மாதிரி பதில் சைகை காட்டினான்.

சட்டுன்னு தினத்தந்திக்கு பார்வையைத் திருப்பிய கோனார், வண்டியில ஏறிய சிவலிங்கத்திடமிருந்து நினைப்பைத் திருப்ப கொஞ்ச நேரம் பிடிச்சிச்சுங்கிறது, அவர் மொகத்தில தேங்கிக் கிடந்த சிரிப்பை வச்சே கண்டுக்க முடிஞ்சிது. மனசப் பய மனசு சின்னதா யாருக்கும் ஒரு ஒத்தாசை பண்ணாலும் என்னாமா பூரிச்சுப் போவுது.

”என்னா கால்ல கட்டு?” ஸ்பெளண்டர்காரன்தான் ஆரம்பிச்சான்.

“அதுவாப்பா, நாலு நாளைக்கி முந்தி எள்ளுக்கா அறிக்கையிலெ கட்டை குத்திப்புடிச்சு, ஓத்திரியம் தாங்காய்க்கல, அதான் ஓபில காட்டி மருந்து வச்சிக்கிட்டு வாறேன்” என்ற சிவலிங்கம்,”வெகு நேரமா குந்தியிருக்கேன் உள்ள போன பஸ்ஸு இன்னும் திரும்பல, சீர் கெட்டு பொயித்துதான்னு தெரியல, கால் சரியாயிருந்தாவா இப்படி குந்தியிருக்கேன், இந்நேரம் முனியங்கோயிலோட ஒத்தயடி பாதைய புடிச்சு வீட்டுக்கு போயி பழைய ஆளாயிருப்பேன்” என்றான்.

“சமையல் கான்ராக்டரு செல்லத்துரை இருக்காரே அவர தெரியுமா?”

“ஆமா சொல்லுங்க , அவ்வொ வீட்டுக்கிட்டதான் நம்ம வீடு, தொரய பாக்கத்தான் போறியளா?”

“ஆமாமா, நமக்கு ஊரு செவவிடுதி , இதுக்கு முந்தி ஒங்க ஊருக்கு வந்ததில்ல,ஆனா சமையல்காரர் நம்ம ஊருக்கு வந்து போவாரு, அப்புடி பழக்கம்” என்று நிறுத்திக்கொண்டான் ஸ்பெளெண்டர்.

எதுக்காகப் பாக்க போறான் என்று சொல்லுவான்னு எதிர்பார்த்த சிவலிங்கத்துக்கு மேற்கொண்டு ஒண்ணுஞ் சொல்லாம வண்டிய ஓட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருந்தவனின் செயல் கொஞ்சம் ஏமாத்தத்தை தந்துச்சு.

கொஞ்ச நேரம் கம்முன்னு வந்த சிவலிங்கம், “வீட்ல கல்யாணம் காச்சியா இருக்கும், சமையலுக்கு ஆடரு கொடுக்க போறிய போலருக்கு?” என்று மறுபடியும் ஆரம்பிச்சான். தனக்கு சம்பந்தமில்லாத விஷயந்தான்னாலும் மனுசப்பய மனசாச்சே, சும்மா இருக்க விடுமா,அதான் ஒரு கொக்கியைப் போட்டான்.

“கல்யாண விசியந்தான் , ஆனா சமையலுக்கு ஆடரு கொடுக்கப் போவல, வேற ஒரு விசியமாப் போறேன் ” என்று மறுபடியும் சிவலிங்கத்தின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு கப்சிப்புன்னு வண்டியை ஓட்டிக்கிட்டு போனான்.

”சரி, இதுக்கு மேலயும் நோண்டிக் கேட்டா அசிங்கமா போயிரும்” என்று நினைத்த சிவலிங்கம், ”அவனா சொன்னா கேட்டுக்குவோம்”ங்கிற மாதிரி மேற்கொண்டு பேசாமல் வந்தான்.

சிவலிங்கத்தின் நெனப்பு சரியாவே இருந்துச்சு, “செல்லக்கோட்டைக்காரரு சுந்தரம்னு , ஒங்கூர்ல பொண்ணு எடுத்தவரு, அங்கய பொண்ணோட காணியா இருக்காராம்ல, அவரு வீடு எங்ன இருக்கு?” என்று மீண்டும் ஆரம்பித்தான் ஸ்ப்ளெண்டர்.

“ஆமாமா, வடக்கி வீட்டு சுந்தரம், நம்ம வீட்டுக்கு பத்து வீடு தள்ளிதான் அவ்வொ வீடு. சொல்லுங்க தெரியும்”

“எப்புடி குடும்பம்”

என்ன திடீன்னு வடக்கி வீட்டப் பத்தி விசாரிக்கிறான் என்று யோசிச்சிக்கிட்டே,”ம்ம் நல்ல குடும்பம்தான், பத்து பாஞ்சு மா நெலம் இருக்கு, முந்தி கொஞ்சம் நொடிச்சி போயிருந்தவோ, இப்போ சுந்தரம் தலப்பட்டு கொஞ்சம் காசு பணம்னு பச புடிப்பாத்தான் இருக்கவோ” என்று சொன்னவன், “ஆமா,எதுக்கு இப்போ அவ்வூட்ட பத்தி விசாரிக்கிறிய , கல்யாண விசியும்னு வேற சொன்னிய , அவ்வூட்டு பொண்ண கேக்கப் போறியளோ?” என்று விசியத்தை நெருங்கிவிட்ட திருப்தியில் கேட்டான்.

“அதான் பட்டுன்னு புரிஞ்சிக்கிட்டியளே, நம்ம தம்பி ஒருத்தனுக்கு பொண்ணு பாத்துக்கிட்டு இருக்கோம், பாப்பாநாட்டு புரோக்கர்கிட்ட அந்தப் பொண்ணோட சாதகம் இருந்திச்சு, அதான் காண்ட்ராக்டர் செல்லத்துரைக்கிட்ட சாரிச்சிட்டு போவலாம்னு வந்தேன்”.

“அப்படி சொல்லுங்க சேதிய ” என்ற சிவலிங்கம் , ”நல்ல்ல்...ல குடும்பம்தான்” என்று இழுத்து, ”எதுக்கும் தொரைக்கிட்டயும் கொஞ்சம் நல்லா சாரிச்சுகிடுங்க” என்று ஒரு மாதிரி சொன்னான்.

“என்னங்க இன்னமுட்டும் நல்ல குடும்பம்னிய, இப்ப என்னமோ இழுத்தாப்ல பேசுறிய”

“அப்படியில்ல, கல்யாண விசியம் எதுக்கும் ஒண்ணுக்கு ரெண்டு தடவ சாரிச்சிக்கிறது நல்லதுன்னு சொல்றேன்” என்ற சிவலிங்கத்தின் பதிலில் ஏதோ விசியம் இருப்பதை புரிஞ்சிக்கிட்ட ஸ்ப்ளெண்டர்,

“இங்கருங்க ஏதோ இக்கு வச்சே பேசுறிய, என்னான்னு சொல்லுங்க, நீங்களே சொல்றிய நல்லா சாரிச்சுகிடுங்கன்னு,தெரிஞ்சத சொல்லலாம்ல” என்று சேதியில கவனமா இருந்தவன் ரோட்டில் இருந்த சின்னக் குழியை கவனிக்காம வண்டியை விட்டுவிட்டான்.

வண்டி குழியில் இறங்கி ஏறி தடுமாறியதில், ”என்னத்த ரோடு போடுறாய்ங்க, ஒரு மழைக்கு தாங்கலைங்கிது, ரோட்ல ஆரம்பிச்சு புள்ளய படிக்கிற பள்ளியோடம் வரைக்கும் இந்த பவுசுலதான் இருக்கு” என்று பேச்சை மாத்தினான் கேட்டக் கேள்விக்கு புடிகொடுக்காத சிவலிங்கம்.

இந்த முறை ஸ்ப்ளெண்டருக்கு இருப்புக் கொள்ளவில்லை, “ அது இருக்கட்டும்ங்க, இப்ப நம்ம பேசிட்டு இருந்த விசியத்துக்கு வாங்க, எதுவானாலும் பட்டுன்னு தேங்கா ஒடச்ச மாதிரி சொல்லுங்க” என்று சொன்னவன் வண்டியை அருகில் இருந்த நாவ மரத்துக்கிட்ட நிறுத்தினான்.

”வசதி வாய்ப்புல கூட கொறச்சு இருந்தாலும் பிரச்சனை இல்லை, கௌரவமான குடும்பமா இருந்தாப் போதும், வேற பெருசால்லாம் எதிர்பார்ப்பு இல்லங்க, பொண்ணு கிடைக்கிறது ரொம்பக் கடுசா இருக்குல்ல அதான்” என்றவன், பாக்கெட்டிலிருந்து கோல்ட் ஃப்ளேக் ஒண்ணை எடுத்து பத்த வச்சபடி, ”பொண்ணு எதுவும் அப்படி இப்படி ” என்று இழுத்தான்,

“சே சே பொண்ணு மேலயெல்லாம் கொற சொல்ல வாய்க்காது, ஆனா..” என்ற ஏதோ சொல்ல வாயெடுத்த சிவலிங்கம், பட்டுன்னு சுதாரிச்சு “ யார பத்தியும் நாம ஒண்ணு சொன்னம்னு இருக்கப்டாது, என்னைய கேக்காதிய, அதான் தொரைய பாக்கப் போறியல்ல அங்க கேட்டுக்கிருங்க" என்று மடையடச்சு பேசினான்.

"சரிங்க என்னத்தையோ மறைக்கிறிய, நல்ல விசியமா இருந்தாத்தான் சொல்லியிருப்பியளே, அப்புறம் என்னத்த நான் அங்க வந்து சாரிக்கிறது" என்றபடி புகையிற சிகரெட்டை கையில் வச்சபடிக்கே கட்டைவிரலால் நெத்தி வேர்வையை வழிச்சு சுண்டிவிட்டவனின் பார்வை கீழே எதுவுமே இல்லாத கட்டாந்தரையில் குத்தியிருந்தது, அவன் தீவிரமான யோசனையில் இருப்பதைக் காட்டியது.

”எங்கே இவன் இங்கிட்டாலயே திரும்பிருவானோ, வெயிலு வேற உச்சிக்கு வந்திடுச்சு” என்று தனக்குள்ளயே குழம்பிக்கிட்டு இருந்த சிவலிங்கம், " அடியெடுத்து வைக்கறதே பெருஞ் செரமமா இருக்கு" என்று தன்னை இப்படியே விட்டுவிட்டு போய்விடக்கூடாதேங்கிற கவலையில் கொஞ்சம் கூடுதலாய் வலியை வெளிக்காட்டியபடியே கிழே மறுபடியும் ஐயப்பஞ்சாமியாய் உட்கார்ந்தான்.

ஏதோ ஒரு முடிவு எடுத்தவனாய் அவசர அவசரமாய் மிச்ச சிகரெட்டையும் இழுத்துவிட்டு சிகரெட் துண்டை கீழேப் போட்டு, அட்டப் பூச்சியை நசுக்குவது மாதிரி காலை வழட்டி நெருப்பை அணைச்சவன், கட்டியிருந்த வேட்டியை கொஞ்சம் லூஸாக்கி மறுபடியும் இறுக்கிக் கட்டிக்கிட்டு, "சரி ஏந்திரிங்க, வந்தது வந்துட்டேன் ஒங்கள ஊர்ல விட்டுட்டு கெளம்பறேன்" என்றதும் அவசர அவசரமாய் வண்டியில் ஏறிக்கிட்டான் சிவலிங்கம்.

கரடி பத்தை பாலம் வர்ர வரைக்கும் எதுவுமே பேசிக்கல ரெண்டு பேரும். இந்த இடம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாலும் அட அப்படி என்னத்தைத்தான் இந்த ஆளு மறைக்கிறாங்கிறதை தெரிஞ்சிக்க ஸ்ப்ளெண்டருக்கு ஆர்வம் வந்திடுச்சு. அவன் மட்டும் என்ன வானத்திலேர்ந்தா குதிச்சான், மனுஷப்பயதானே,

“இந்த பாலத்திலதான் திரும்பணுமா?”என்று ஸ்ப்ளெண்டர்தான் மறுபடியும் ஆரம்பிச்சான்.

”இல்ல இல்ல, அடுத்த பாலம், நீங்க அங்னயே விட்டுட்டியள்னாகூட போதும்”

"இந்த இடம் சரிப்படாதுன்னு பட்டுடுச்சுங்க, இருந்தாலும் என்னா ஏதுன்னு தெரியாம போறோமேன்னுதான் கொஞ்சம் இதுவா இருக்கு" என்று ஒரு கொக்கியைப் போட்டான்.

தன்னைக் கொண்டு வந்து விடுவதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வரானே ,விசியத்தை சொல்லிடுவோமா என்று கொஞ்சம் குழம்பியபடியே வந்துக்கிட்டு இருந்த சிவலிங்கத்துக்கு, அவன் மறுபடியும் இப்படிக் கேட்டதும் வடி மடையை வெட்டிவிட்ட மாதிரி கடகடன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டான்.

“தம்பி , நீங்க பாக்கப் போற பொண்ணோட அம்மா கொஞ்சம் அப்படி இப்படி, பாஞ்சு இருவது வருஷத்துக்கு முந்தி கண்ணுச்சாமின்னு மேக்கித்தியான் ஒருத்தன் அவ்வொ வீட்டுல இருந்து வேல வெட்டி செஞ்சிக்கிட்டு இருந்தான், அவனோட பழக்கமாயி பொறந்த புள்ளதான் நீங்க பாக்கப்போற பொண்ணு. இந்த விசியம் வெளில தெரியறதுக்கு முந்தி, நம்ம சாதிக்கார பயலான தாய்,தாப்பன் இல்லாத இந்த சுந்தரத்துக்கு சொத்த எழுதிவச்சு, நாலாம் பேருக்குத் தெரியாம மூடி மறச்சி கல்யாணம் பண்ணிவச்சிட்டாய்ங்க, ஊருக்குள்ள அரச பொரசலா ஒண்ணு ரெண்டு பேருக்குத்தான் இந்த விசியம் தெரியும்” என்றவனுக்கு சட்டுன்னு ,தான் சொன்ன விசியத்தை எங்க ஸ்ப்ளெண்டர் யாருகிட்டயும் சொல்லிப்புடுவானோங்கிற பயம் வந்திடுச்சு. தனக்கு தேவையில்லாத விசயங்கள்ல தலையைக் கொடுத்துப்புட்டு பிறகு யோசிக்கிறதுதானே மனசப்பய குணம். இப்போ சொன்னதை யாருகிட்டயும் சொல்லிடக்கூடாதேங்கிற எண்ணத்தில் ஸ்ப்ளெண்டரை குளுமைப் படுத்த ”உங்களப் பாத்தா பெரிய இடத்து புள்ள மாதிரி தெரியிது ,அதான் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்” என்று சொல்லி முடிக்கவும், ஆலக்காட்டு பாலம் வரவும் சரியா இருந்துச்சு.

“தம்பி இப்படியே நிப்பாட்டிக்கிருங்க, நான் எறங்கிக்கிறேன்” என்ற சிவலிங்கம், ”உங்களுக்குள்ளயே வச்சிக்கிடுங்க தம்பி, நான் சொன்னேன்னு தெரிஞ்சா பொல்லாப்பாயிரும்” என்று வெளிறிய முகத்தோட சொன்னான்.

“சே சே, நான் யாருக்கிட்டயும் விட்டுக்கிற மாட்டேன், நல்ல வேளை, விசியத்தை சொன்னிய, சரி பாத்துப் போங்க” என்று சிவலிங்கத்தை இறக்கிவிட்டுவிட்டு ஒரே முறுக்காய் முறுக்கி மின்னல் வேகத்தில் பறந்தான் ஸ்ப்ளெண்டர்.

செட்டியார் கடையில் வெத்தலை சீவல் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு நடையை கட்டிய சிவலிங்கத்துக்கு, வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி வந்தப்பவே அவன் பொண்டாட்டி ஒப்பாரி வச்சு அழவுற சத்தம் கேட்டுச்சு, சட்டுன்னு குழப்பமான சிவலிங்கம் நடையை விரட்டி வீட்டைத் தொட்டதும், அவன் பொண்டாட்டி இன்னும் சத்தமாய் ,”ஏங்க, இந்தப் பய வடக்கி வீட்டுக் குட்டிய இழுத்துக்கிட்டு ஓடிட்டானாம்ங்க” என்று வாசலுக்கு ஓடி வந்தாள் தலைவிரி கோலமாய்.

சிவலிங்கம் சுத்தி முத்தியும் பாத்தான்,பக்கத்து வீட்டு பரமசிவம் வைக்கோல் புடுங்குற மாதிரி, கண்ணை வைக்கோல் போர்லயும் கருத்தை சிவலிங்கத்து வீட்லயுமா வச்சி நின்னுக்கிட்டு இருந்தான். தெரு பைப்புல தண்ணி புடிச்சிக்கிட்டு இருந்த காரவீட்டு சரசு, நீர் கடுப்புல சொட்டு மூத்திரம் வர கணக்குல பைப்ப கொஞ்சமா திருப்பி வச்சிக்கிட்டு தண்ணி புடிக்கிற மாதிரி நின்னுக்கிட்டிருந்தா. பாலக்கட்டையில ஒக்காந்துக்கிட்டு வேற என்னத்தையோ பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி இருந்த இளவட்டப் பயலுக சிவலிங்கத்தைப் பார்த்ததும் ஆர்வமானதை எல்லாம் கவனிச்சவன்,தம் பொண்டாட்டி கன்னத்துல ஓங்கி ஒரு அறையை விட்டு ”இப்ப என்ன எழவா விழுந்திடுச்சுன்னு ஒப்பாரி வக்கிற, மத்த நாயிவொ மாதிரி,கண்ட சாதிக்குள்ளயுமா போயி நொழஞ்சான், சாதிக்காரியோடதான போயிருக்கான்,போயி சோலியப் பாருடி” என்று மிகச் சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு நெனப்போட பவுசு மூஞ்சில தெரியுங்கிறதையெல்லாம் பொய்யாக்கி எப்பயும்போல வெத்தலைப் பொட்டலத்தைப் பிரிச்சபடி திண்ணையில் உட்கார்ந்தான்.

#வண்டல்_மண்_கதைகள்