Saturday, October 31, 2009

அது என்னண்ணே மீசை வச்ச பிறகும்....

நான்:மணி, மரத்துக்கு எவ்வளவுடா?

மணி:10 ரூவாண்ணே,47 மரம் ஏறியிருக்கேன்.

நான்:முன்னெல்லாம் மரத்துக்கு ஒரு காய்தானே பேச்சு.நீ என்ன மரத்துக்கு 10 ரூபாய் கேக்குற.

மணி:நீ எந்த காலத்திலண்ணே இருக்க,ரெண்டு வருஷமாவே 10 ரூவாதான் வாங்கிட்டு இருக்கேன்,இந்தா காலையில் அம்பலார் வீட்டுக்கு 30 மரம் ஏறினேன் 300 ரூவா கையோடு வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.வேணா 47ல ரெண்டு மரத்த தள்ளிகிட்டு 450 கொடுண்ணே.

நான்:சரி சரி சாயங்காலம் 6 மணிக்கு வந்து வாங்கிக்க,ஆமா ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பாதிக்குறியே எதாவது சேமிச்சு வச்சிருக்குறியாடா, இல்ல எல்லாத்தயும் குடிச்சிடுவியா?

மணி:நீ ஒரு ஆளுண்ணே,எல்லாத்துக்குமா குடிப்பாக,5000 ரூவாய் சம்பாதிச்சு வீட்டுல கொடுத்துட்டு அப்புறமா சின்ன சின்ன வேலையா செஞ்சிகிட்டு ஜாலியா இருப்பேன். மறுபடியும் வீட்டுக்கு எப்போ தேவையோ அப்போ மரம் ஏறுவேன்.

நான்: ஏன்டா ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும்போது சம்பாதிச்சு சேமிப்புல வச்சுக்க வேண்டியதுதானே.

மணி:அதெல்லாம் உங்க ஆளுங்களுக்குத்தானே சரிப்பட்டு வரும். காச சேமிச்சு வச்சா பெருசா வீடு கட்டத் தோனும்,நிலம்,தோப்பு தொறவுன்னு சொத்து சேக்க புத்தி போகும்.

நான்:ஏன்டா சொத்து சேர்த்து வச்சா உன் எதிர்காலத்துக்கு நல்லதுதானே.

மணி: ஆமாண்ணே, இந்தா அஞ்சு நாளா தேங்காய் பறிக்க ஆளு கிடைக்காம என் பின்னாலயே சுத்திக்கிட்டு இருக்க. நான் இப்போ உன்கிட்ட பணம் வாங்கிட்டு கிளம்பிடுவேன், நீ இனி இந்த தேங்காய வித்து காசாக்குறதுக்குள்ள ஒரு வழியாயிடுவ, இதெல்லாம் எனக்குத் தேவையா? எங்க ஆளுங்க எல்லாம் தெனமும் உடலை வருத்தி உழைக்கிறோம் அதனால ஒம்போது மணிக்கெல்லாம் அசந்து தூங்கிடுறோம்.உங்க தெருவுல பாருங்க ராத்திரி ஒரு மணிக்கு தூக்கம் வராம கட்டையில் ஒக்காந்து வெட்டி நாயம் பேசிட்டு இருப்பாக.

நான்:வாஸ்தவம்தான்டா.

மணி:என்னைவிட நீ நாலஞ்சு வயசு பெரியவர்,ஆனா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, என் பையன் ஸ்கூலுக்கு போகப்போறான். கிட்டத்தட்ட அரைக்கிழவானா ஆகும்போதுதான் உங்கள்ள கல்யாணம் பண்றீங்க, நாங்க 20 வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கிடுறோம், எனக்கு 40 வயசாகும்போது எம்மவன் ஆளாயிறுவான்.அதுதாண்ணே சந்தோஷம். அப்புறமா இன்னொன்னு அது என்னண்ணே மீசை வச்ச பின்னாடியும் படிச்சிட்டே இருக்கிய?

நான்: ?????

Thursday, October 29, 2009

பாடல் வரிகளில் ஒரே சிந்தனை....

1.”சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன”

2.”பலகோடி பெண்களிலே எதற்கு என்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்”

3.”இடது விழியில் தூசு விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே”

4.”ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்”

5.“கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா”

6.”மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது”

7.“கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி”

8.”கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்”

9.“இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க”

10.“ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல”

Friday, October 23, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க 24/10/09

நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக்கொண்ட இரு நண்பர்கள் பழைய கதையெல்லாம் பேசி முடித்து சகஜ நிலைக்குத் திரும்பியதும் பேசிய டயலாக்,

நண்பர் 1:மாப்ள உன்னையெல்லாம் மறுபடியும் பார்க்க முடியுமான்னு பல தடவை ஏங்கியிருக்கேண்டா.

நண்பர் 2: விடுடா அதான் இப்போ பார்த்தாச்சுல்ல.

நண்பர் 1: அதில்லடா உன்னை பார்த்த பிறகுதானே புரியுது பேசாம ஏங்கிக்கிட்டே இருந்திருக்கலாம்னு.

நன்பர் 2:??????

@@@@@@@@@@@@

ஆயுத பூஜையன்று ஊருக்குச் சென்றிருந்தேன்.நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது அருகில் கோயில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் கூட்டம் என்னிடம், ”அண்ணே எங்க கோயில் நல்லாயிருக்கான்னு வந்து பாருங்க” என்றனர். என் நண்பர்களில் ஒருத்தன் "போங்கடா போயி விளையாடுங்க பேசிட்டிருக்கோம்ல" என்றான். நானோ "இருடா ஆசையா கூப்பிடுறானுங்க போய் பார்த்துட்டு வறேன்" என்று கிளம்பினேன். கூடவே என் நண்பர்களும் வருவதற்காக எத்தணிக்க அத்தனை சிறுவர்களும், ”அண்ணன் மட்டும் வந்தா போதும் பெரிய ஆளுங்க வேண்டாம்” என்றனர். இவ்வளவுக்கும் அந்த கூட்டத்தில் வயதில் மூத்தவன் நான் தான். அது என்னவோ தெரியல சின்ன பசங்க என்னை அவர்களில் ஒருவராகவே நினைக்கிறார்கள். நானும் பெரிதாய் வித்தியாசம் தெரியாமல் அவர்களோடு விளையாடுவேன். அன்று என்னை அழைத்த சிறுவர்களின் சிலரின் தந்தைகள் எனக்கு ஒரு சில வருடங்களே சீனியர்கள், அவர்களுடனும் நான் விளையாடியிருக்கேன். இப்போ என் வயது நண்பர்களின் வாரிசுகளும் வந்துவிட்டார்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் அவர்களுடனும் விளையாடுவேன்னு நினைக்கிறேன் பார்க்கலாம்.(சின்ன பசங்க சகவாசம் எனக்கு மட்டும் இது வரை பிரச்சனையில்லை).

@@@@@@@@@@@@@@@@

பதிவுலகில் நாளுக்கு நாள் ஜால்ரா பதிவுகளும், குழுமனப்பான்மையும்(இது தவறு கிடையாது இருப்பினும் அக்குழுவில் இல்லாதவர்களும் தொடர்பவர்களாக இருப்பதால் சில விஷயங்களை குறைத்துக் கொள்வது நல்லது, மற்றபடி அவரவர் விருப்பம்) நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் போன்றே நல்ல புதிய எழுத்துக்களோடும் பலர் பதிவுலகில் இணைந்த வண்ணம் இருப்பது ஆறுதல். அவ்வகையில் எனக்குப் பிடித்த சில புதிய பதிவர்கள்,

ஆரூரன் விசுவநாதன்:தங்கமணி பதிவில் இருந்து திராவிட சிந்தனை வரை எல்லாவிதமான இடுகைகளும் எழுதுவது இவரின் ஸ்பெஷாலிடி.இவரின் சில இடுகைகளில் நகைச்சுவை நடையில் கலக்கியிருப்பார் .

நாகா:இவரின் பதிவுகளை மிகச் சமீபமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் அனுபவ பகிர்வுகள் ஆனாலும் ரசனையான நடையில் வசிகரிக்கிறார். கவிதையிலும் அசத்துகிறார்.

இவர்களை நீங்களும் படித்து உற்சாக படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். மேலும் சில பதிவர்கள் அடுத்த நொறுக்குத்தீனியில் .

@@@@@@@@@@@@@@@@@

சென்னையின் திருவல்லிக்கேணியில் மேன்ஷனில் தங்கியிருந்த நாட்களில் எனக்கு ஜாவா சொல்லிக் கொடுத்து ஒரு குருவாக அறிமுகமான நண்பர் அர்ஜுனின் அறையில் கதாவிலாசம், துணையெழுத்து என எஸ்.ராவின் புத்தகங்களாக இருப்பதைப் பார்த்து ஜாவாவைத் தாண்டியும் எங்களிடம் நிறைய ஒற்றுமை இருப்பதை அறிந்து குரு ஸ்தானத்தில் பார்த்த அவர் நெருங்கிய நண்பரானார். அவசரத் தேவைக்கு பைனான்ஸ் பண்ணும்போது ஒரு அண்ணன் ஸ்தானத்திலும் இருந்திருக்கிறார்.சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி அவருடைய நினைவுகளை சில நாட்கள் இழந்திருந்தார். அப்போது அம்மா அப்பாவையே அடையாளப்படுத்திக் கொள்வதில் சிரமப்பட்டவர் எங்களின் மேன்ஷன் நட்புகளின் பெயர்களை ஞாபகம் வைத்திருந்தார். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அவரோடு தினமும் போனில் பேசுவேன். அப்போது அவரை ஒரு குழந்தையாகவும் பார்த்திருக்கிறேன், அந்த நேரத்திலும் எஸ்.ராவின் எழுத்துக்களை அவரோடு என்னால் சகஜமாக பேசமுடிந்தது. எஸ்.ராவைப் பற்றிப் பேசும்போது உற்சாகமாகிவிடுவார். வலையுலகிற்கு புதியவனாக இருந்தபோது வெறும் காதல் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்தவனை,”கவிதைகளோடு மற்ற விஷயங்களையும் எழுதுங்க உங்களால் முடியும்” என தடம் மாற்றியதும் அர்ஜுன்தான். சங்கடமோ, சந்தோஷமோ எதுவாகினும் நான் மனம் விட்டு பேசக்கூடியவர்களில் அர்ஜுன் முக்கியமானவர். தற்போது பிராஜெக்ட் மேனஜராக ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். எங்களின் நட்பு இறுகக் காரணமாயிருந்த எஸ்.ராவின் முன்பாக என்னை கொண்டுபோய் நிறுத்தினார் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் நண்பர் வெயிலான். எதிர்பாரா சந்திப்பால் என்னால் எதுவுமே பேச இயலாது ஆட்டோகிராஃப் மட்டும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். இந்த மனிதரா இப்படியெல்லாம் எழுதறாருன்னு ஆச்சர்யப்படுத்தும் வகையில் அவ்வளவு எளிமையாக இருந்தார்.

@@@@@@@@@@@@@@

விஜய் டி.வியில் ஒளிபரப்பான கமலின் பாராட்டு விழாவில் நடிகை ராதிகாவின் பேச்சு நல்ல சுவாரஸ்யம்.அதில் கமலுடன் அவர் நடித்த சிப்பிக்குள் முத்து படத்தின் ”துள்ளி துள்ளி நீ பாடம்மா” பாடலை படமாக்கிய விதத்தைப் பற்றி சொன்ன விஷயங்கள் ரசிக்கும் படி இருந்தது.ராதிகா சொன்னது போல் எப்போது அப்பாடலை கேட்டாலும் தாளம் விட்டு கமல் ஆடும் அந்த நடன அசைவுகள் தான் கண்முன்னே வரும். கமல் ஸார் யூ ஆர் ரியலி கிரேட்.