Friday, December 25, 2009

காக்கா டாக்டர்

வீட்டை நெருங்க நெருங்க உள்ளுக்குள் கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு.

இவ்வளவுக்கும் நேத்தே அம்மாக்கிட்ட பேசினப்போ,"ரெண்டு மாசம் ஆயிடுச்சு அதெல்லாம் மறந்து போயிருக்கும்,நீ பயப்படாம வா" அப்படின்னு சொன்னாங்க, இருந்தாலும் எனக்கு பயம் இன்னும் போகல.

வீட்டுக்குப் பக்கத்துல வந்ததும் மெதுவாக அந்த மரத்தை நோக்கிப் பாத்தேன், அங்கே அது இருக்கிற மாதிரித் தெரியல, அப்பாடான்னு மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. என்னையுமறியாமல் அனிச்சையாய் ஒரு பாடலை முணுமுணுத்துக்கிட்டே வீறுநடை போட்டு வீட்டை நோக்கி நடக்கையில திடீர்ன்னு அந்தச் சத்தம்,

"கா.. கா... கா... கா.. கா" சத்தம் கேட்டு சப்த நாடியும் ஒடுங்கிப்போச்சு.

எந்தச் சத்தத்தைக் கேக்கக் கூடாதுன்னு இவ்வளவு நேரம் பயந்துக்கிட்டு வந்தேனோ அதேச் சத்தம்.

"நீ இன்னுமா மறக்கல"ன்னு சொல்லிட்டு கைகளைத் தலைக்கு மேலே விசிறிக்கிட்டே வீட்டுக்குள்ள ஓடினேன். வீட்டுக்குள்ள போனதுகப்புறமும் கொஞ்ச நேரம் அது கத்திக்கிட்டே இருந்துச்சு.

என்ன விஷயம்னா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி லீவுல ஊருக்கு வந்திருந்தப்போ வீட்டுக்கு முன்னால இருக்கிற இந்த வேப்ப மரத்து நெழலுல உக்காந்து நியூஸ் பேப்பர் படிச்சிகிட்ருந்தேன், அப்போ ஏதோ கிழே விழற சத்தம் கேட்டுத் திரும்பிப் பாத்தாக்க பொறந்து கொஞ்ச நாளேயான ஒரு காக்காக் குஞ்சு மரத்திலேருந்து விழுந்துத் தத்தளிச்சிக்கிட்டிருந்துச்சு.

ஐயோ பாவம்னு இரக்கப்பட்டு அதை மறுபடியும் கூட்லயே வச்சிடலாம்னு கையில எடுத்தா அதன் கால் வெரல் ஒண்ணு முறிஞ்சு தொங்கிட்ருந்துச்சு, வாயிலயும் லேசா ரத்தம் வழிஞ்சுகிட்டிருந்துச்சு. ரொம்பக் கவனமா கையாண்டும் அந்த முறிஞ்ச வெரல் தனியாக் கீழே விழுந்திருச்சு. சரி எதாவது முதலுதவி செய்யலாம்னு வீட்டுக்குள்ளக் கொண்டு வந்தேன்.

"ஐயையோ,அதத் தூக்கி வெளியிலே வீசுடா,வீட்டுக்குள்ள கொண்டு வராத தரித்திரியம்" அலறினாங்க அம்மா.

"போம்மா,இதப் பாத்தா பாவமா இல்ல"

"இந்த மாதிரிக் கிறுக்குத்தனமெல்லாம் பன்னாதேன்னா கேக்குறானா இவன்" அம்மா கத்திக்கிட்டே இருந்தாங்க.

நான் காதிலே வாங்கிக்கவே இல்ல, கொஞ்சமா மஞ்சத்தூளை அடிப்பட்ட இடத்திலத் தடவி,ஒரு கூடையில் கவுத்துப் போட்டு கொஞ்சம் சோத்துப் பருக்கய அதுக்கு முன்னால தூவுனேன்,கழுத்த சாச்சு என்னையேப் பாத்துக்கிட்ருந்துச்சு. காக்கைக்கு மட்டுமா அது பொன்குஞ்சு ,கழுத்த சாச்சுப் பாக்கையில எனக்கும் அப்படித்தாங்க தெரிஞ்சிச்சு.

இப்படியே ஒரு நாலு நாள் எனது பராமரிப்பில வச்சிருந்து ஓரளவுக்குக் காயம் ஆறின உடனே அதை மறுபடியும் கூட்லயே வச்சிடலாம்னு மரத்துல ஏறும்போது எங்கிருந்துதான் வந்துச்சுன்னேத் தெரியல, கொஞ்சமும் நான் எதிர்பாக்காத நேரத்துல ஒரு காக்கா தன் கால் நகத்தால அழுத்தமா என் தலையில கீறிட்டுப் போச்சு. தாய் காகமா இருக்கும் போலன்னு நெனச்சுகிட்டே, அவசர அவசரமாகக் காக்காக் குஞ்ச கூட்ல வச்சிட்டு நான் இறங்றதுக்குள்ளயே மேலும் ரெண்டுவாட்டி அதன் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியதாகிப்போச்சு.

அப்போ ஆரம்பிச்ச தாக்குதல் வீட்லருந்த ஒரு வாரத்துக்கும் தொடர்ந்துச்சு, வீட்டுக்கு வெளியில் என் தலை தெரிஞ்சாப் போதும், எங்கிருந்து வருதுன்னே தெரியாது, மாடார்ன்னு தலையில அடிச்சிட்டுப் போகும்.அந்த ஒருவாரமும் தொப்பியோடதான் திரிஞ்சேன்.விஷயம் கொஞ்சம் கொஞ்சமா எங்க தெருவுக்கே பரவி எல்லாரும் என்னைய "காக்கா டாக்டரு, காக்கா டாக்டரு"ன்னு நக்கல் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இது கூடப் பரவாயில்லை, "என் பணி நக்கல் செய்து கிடப்பதே"ங்கிற மாதிரியான ஒரு ஆள் எங்க ஊர்ல இருக்கான்,ரொம்பச் சாதாரணமா எல்லாரையும் நக்கலடிச்சிகிட்டே இருப்பான், இந்த விஷயம் அவனுக்குத் தெரிஞ்சா சும்மா விடுவானா, அன்னைக்கு ஒரு நாளு கூட்டாளிகளோட நின்னுப் பேசிக்கிட்டிருந்தேன், அந்தச் சமயம் பாத்து இந்த ஆள் அங்கே வந்தான்,

"என்ன மாப்ள,எப்போ ஊர்ல இருந்து வந்தாப்ல"-என்னைப் பாத்துத்தான் கேட்டார்.

"நாலஞ்சு நாளாச்சு"- நானும் ரொம்பப் பொறுப்பா பதில் சொன்னேன்.

"நல்ல உத்தியோகமாமே,பயலுவ பேசிக்கிட்டாய்ங்க"

"ம்ம்"

"பரவால்லடா,நீ ஒருத்தனாவது,ஒழுங்காப் படிச்சு நல்ல வேலைக்கும் போயிட்டே, உங்க அப்பா அம்மாவுக்கு மட்டுமில்ல நம்ம ஊருக்கேப் பெருமையான விஷயமுடா இது"-ரொம்பவேப் புகழ்ந்து பேசினாரு.

அப்படியே உச்சிக் குளுந்துபோயி நின்னேன்.மத்த பசங்கலெல்லாம் செம்ம கடுப்பா பார்த்துட்ருந்தானுங்க.

"சரி மாப்ள,அப்படியே நேரங்கெடச்சா,நம்ம வூட்டுப் பக்கம் வந்திட்டுப் போ, கோழி ஒண்ணு சொனங்குனாப்ல இருக்கு, நீதான் நல்லா வைத்தியம் பாப்பியாமுல்ல" - ரொம்பச் சாதாரணமாச் சொல்லிட்டு போயிட்டுருந்தான்.

கூட நின்ன அத்தன பேரும் சிரிச்சானுங்க பாருங்க, சரி அந்தாளு மட்டுமா அப்படின்னா, ஊர்ல இத்துணூண்டு வாண்டுங்கக்கூட,"அண்ணே பின்னாடி காக்கா வருது ஓடுங்க ஓடுங்க"ன்னுச் சொல்லி வெறுப்பேத்துசுங்க. ஒரு கட்டத்துல ஏன்டா இத பண்ணனோம்னு ஆயிடுச்சு.அப்புறம் விடுமுறை முடியறதுக்குள்ளேயே திரும்பி நான் வேலை பாக்குற ஊருக்கேப் போயிட்டேன்.

மறுபடியும் இப்போதுதான் ஊருக்கு வறேன்.நான் ஓடிவந்ததப் பாத்த அம்மா, ”இன்னுமா அந்த சனிய மறக்கல”ன்னு சொல்லிகிட்டே மரத்துல உட்கார்த்திருந்த அதப் பார்த்து,

"ஏ சனியனே ஒம்புள்ளய காப்பாத்தப் போயி இப்படி எம்புள்ளய படுத்தியெடுக்கிறியே"ன்னு கோபமா சத்தம் போட்டாங்க,என்னவோ அதுக்குப் புரியப்போறமாதிரி.

கொஞ்ச நேரங்கழிச்சு மறுபடியும் மெதுவா வாசல் பக்கம் வந்தேன். என் தலை வெளில தெரிஞ்சதோ இல்லையோ கத்த ஆரம்பிச்சுடுச்சு.அப்படியே நகராம நின்னுப் பார்த்துக்கிட்டே இருந்தேன், அது கத்திக்கிட்டே பறந்து வந்து நான் நின்ன இடத்துக்குக் கொஞ்சந்தள்ளி உக்காந்து கழுத்தச் சாச்சு என்னையேப் பாத்தப்பதான் கவனிச்சேன் அதோட ஒரு காலுல மூணு வெரல்கள்தான் இருந்தத. அடுத்த நொடியில சந்தோஷத்துல கத்தினேன்,

"அம்மா, இங்கே சீக்கிரமாக் கொஞ்சம் சாதம் எடுத்துட்டு வா!" .

Thursday, December 24, 2009

மலையாள சினிமாவின் அம்மாக்கள்

இந்திய அளவில் சிறந்த நடிகர்களை பட்டியலிட்டால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் நிறைய மலையாள நடிகர்கள் இடம்பெறுவார்கள். மோகன்லால், மம்முட்டி, நெடுமுடி வேணு, திலகன், ஜெகதி ஸ்ரீகுமார் என திறமையான ஒரு பெரிய நடிகர் கூட்டம் அங்கே இருக்கிறது.

இவர்கள் மட்டும் எப்படி எந்த கதாபாத்திரமானாலும் அப்படியே மாறிவிடுகிறார்கள் என்பதற்கு என்னளவில் காரணமாய் நினைப்பது, பொதுவாக மலையாளப் படங்கள் அதிகபட்சம் ஒரு மாதத்தில் எடுத்துவிடுவார்கள். எனவே மோகன்லால்,மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களே வருடத்திற்கு ஏழு,எட்டு படங்கள் செய்துவிடுகிறார்கள்.(இப்போது எண்ணிக்கை சிறிது குறைந்திருக்கிறது). மற்ற குணச்சித்திர நடிகர்களாக இருக்கும் நெடுமுடி வேணு, சமிபத்தில் மறைந்த முரளி போன்ற ஒரு பத்து பதினைந்து நடிகர்களே மாற்றி மாற்றி எல்லா ஹிரோக்களின் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பார்கள்.

இப்படி எண்ணிக்கையில் கூடுதலான படங்களில் நடிக்கும்போது நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் இயல்பாகவே அவர்களுக்கு கிடைத்துவிடுவதால் கிடைக்கும் அனுபவத்தில் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்துவிடுகிறார்கள் என்பது என் எண்ணம். இன்னொன்று பத்மராஜன்,பரதன்,சிபிமலயில்,சத்யன் அந்திக்காடு வேணு நாகவல்லி போன்று அவர்களுக்குக் கிடைத்த இயக்குனர்கள்.

இது நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் கேரள நடிகைகளுக்கும் மிகப் பொருந்தும், அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் மலையாள திரையுலகை நீண்ட வருடங்களாக அசத்திக்கொண்டிருக்கும் மூன்று நடிகைகளைப் பற்றியே இந்த இடுகை.

கவியூர் பொன்னம்மா:

மலையாள திரையுலகின் அம்மா என்று அழைப்படுபவர். சாந்தமான முகத்துடன் இவர் ஸ்கிரினில் வரும் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களின் அம்மாவை நினைவுக்கு கொண்டுவந்துவிடுவார். திலகன் போன்ற தன்னைவிட வயசில் சீனியர் நடிகர்கள் தொடங்கி குஞ்சாக்கோ கோபன் போன்ற இன்றைய இளம் கதாநாயகர்கள் வரை எல்லோருக்கும் அம்மாகியிருக்கிறார். மோகன்லாலின் அம்மா யாரென்றால் இவரின் முகம்தான் நினைவுக்கு வரும்,அந்த அளவிற்கு மோகன்லாலின் பெரும்பான்மையான படங்களில் இவர்தான் அம்மா. மலையாள திரையுலகின் பெஸ்ட் அம்மா-பையன் காம்பினேஷனும் மோகன்லால்- கவியூர் பொன்னம்மாதான். தமிழில் சத்யா படத்தில் அமலாவின் அம்மாவாக வருவார்.

கே.பி.ஏ.சி.லலிதா:


இயக்குனர் பரதனின் மனைவியான இவரை மலையாளத் திரையுலகி
ன் மனோரமா எனலாம். இரு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கும் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சகலகலா வல்லி. தமிழில் காதலுக்கு மரியாதைப் படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்திருப்பார்.மலையாளத்தின் லோக்கல் ஸ்லாங்குகள் அனைத்திலும் பேசி நடிக்கக் கூடியவர். வெகுளித்தனம், வில்லி,வேலைக்காரி, ஆர்வக்கோளாறு, திமிர்த்தனமான கதாபாத்திரம் என எதிலும் பெஸ்ட் என நிரூபித்துக்கொண்டிருப்பவர். பெரிய நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடிப்பார் ஒரு சீனில் தலைக்காட்டிப் போகும் குணச்சித்திரங்களுக்கும் ஜோடியாக நடிப்பார். வாய்ஸ் மாடுலேஷனிலும் டைமிங் சென்சிலும் இவருக்கு நிகர் இவர்தான்.சுகுமாரி:

பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். வேட்டைக்காரனில் கூட அனுஷ்காவின் பாட்டியாக வருபவர். மலையாள திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகே இவரின் திறமை எனக்கு தெரிய வந்தது. இவரும் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சோகம் அதற்கு நேர்மாறான காமெடி இரண்டிலுமே கலக்குவார். நாட்டிய பேரொளி பத்மினியின் உறவினரான இவர் பிரியதர்ஷனின் முதல் படமான ’பூச்சைக்கொரு மூக்குத்தி’ படத்தில் மோகன்லாலுடன் சேர்ந்து ஆடும் டிஸ்கோ நடனம் இவரை அப்பாவி அம்மாவாகவே பார்த்து பழகியவர்களுக்கு ஆச்சர்யப்பட வைக்கும். திமிர் பிடித்த பணக்கார அலட்டல் அம்மாவாகவும் சர்வ சாதாரணமாக நடிப்பார்.இவரின் முக அமைப்பு கோடீஸ்வர லுக்கிற்கு ஒத்துவராதது போல் இருக்கும் ஆனால் நடிப்பில் அந்த நினைப்பையே மாற்றிவிடுவார். தமிழில் மலையாள இயக்குனர்கள் இயக்கிய மௌனம் சம்மதம்,வருஷம் 16,கோபுர வாசலிலே போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மலையாள வாடையே இல்லாமல் தெளிவாய் தமிழை உச்சரிக்கக் கூடியவர்.

Wednesday, December 23, 2009

நொறுக்குத் தீனி 23/12/09

”படிக்காதவனுக்கு ஒரு இடத்தில் அசிங்கம், படிச்சவனுக்கு மூன்று இடங்களில்” இப்படி ஒரு சொலவடையை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் குரூப் ஸ்டெடிக்காக எங்கள் வீட்டிற்கு என்னுடன் படித்த சக மாணவ,மாணவிகள் வருவது வழக்கம். உரச் சாக்குகளை படுதாக்களாய்(தார்ப்பாய்) தைத்துக்கொடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு பெரியவர் வருடத்திற்கு இரண்டு,மூன்று முறை எங்கள் ஊருக்கும் வந்து ஓரிரு வாரங்கள் தங்கி வேலை செய்வார். இரவில் எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் படுத்துக்கொள்வார்.ஒரு முறை அவர் வந்திருந்த போது, நாங்கள் வழக்கமாய் திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கே வந்த ஒரு மாணவன் வாசலில் கிடந்த மாட்டு சாணத்தை மிதித்துவிட்டு அவன் செய்த செயலைக் கண்டுதான் ”படிச்சவனுக்கு மூனு இடத்தில,படிக்காதவனுக்கு ஒரு இடத்திலங்கிறது சரியாத்தான் போச்சு” என்று சொன்னார். 1:3 கணக்கிற்கு அவரிடம் விடை கேட்டபோது, ”சாணிய மிதிச்ச உடனே உங்க கூட்டாளி என்ன பண்ணான், ஐயையே சாணிய மிதிச்சிகிட்டேன்னு சொல்லி கையால துடச்சானா,அப்புறம் கை நாறுதான்னு மோந்து பாத்தானா மொத்தத்தில கை,காலு,மூக்குன்னு மூனு இடமாச்சா ” என்று சொல்லிவிட்டு மேலும், ”இதே படிக்காதவனா இருந்தா மிதிச்சது சாணின்னு தெரிஞ்சதும் அப்படியே காலை தரையிலேயே தேய்ச்சுட்டு போயிருப்பான்,படிக்கிற புள்ளை அதான் ஆராச்சி பண்ணுது” என்றார்.

மேலே ‘அசிங்கம்’ என்று சொன்ன வார்த்தையை அவர் வேறுவிதமாக ஓரெழுத்து ஒரு மொழியில் சொன்னார்.

********************

பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ட்ரைலர்(ட்ரைலரே என்று சொல்லலாம்தான்) மிரட்டுகிறது. கார்த்தி இன்னும் பருத்தி வீரன் ஹேங் ஓவரில் இருப்பது போலவும் தெரிகிறது. இருப்பினும் படம் வரட்டும். இன்னும் அஃபிஷியலா ட்ரைலர் வெளியிடவில்லையாம்,அதற்குள் யூடியூபில் உலா வருகிறது.********************
கொரிய மொழிக்கும் தமிழுக்கும் கிட்டத்தட்ட 500 ஒத்த வார்த்தைகள் உள்ளதாக ஓரிரு வருடங்களுக்கு முன் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. எனக்குத் தெரிந்து வார்த்தைகளைத் தாண்டி கலாச்சார அடிப்படையிலும் கூட தென்னிந்திய பழக்க வழக்கங்களை ஒத்தே அவர்களின் குடும்ப அமைப்புகளும் இருக்கின்றது. குடும்ப உறவுகளை அழைக்கும் வார்த்தைகள் தமிழை ஒட்டியே இருக்கின்றது. குறிப்பாக தாய்,தந்தையரை அவர்களும் அம்மா,அப்பா என்றே அழைக்கிறார்கள். அவர்களிலும் பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்து அமேரிக்க கலாச்சார மோகத்தால் மறைந்திருக்கிறது.

********************

மலையாளத்தில் நெடுமுடி வேணு,சாரதா,தேவன்,பார்வதி நடிப்பில் 1987 ல் வெளிவந்த ஒரு ’ஒரு மின்னாமினிகின்டே நுருன்னு வெட்டம்’ என்னும் படத்தை சமீபத்தில் பார்த்து நெகிழ்ந்துபோனேன்.

ஒரு சிறு நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் இல்லாத ஓய்வு பெற்ற ஆசிரியத் தம்பதி. அந்த ஆசிரியை முன்பு வேலை பார்த்த ஊரில் தங்கியிருந்த வீட்டு ஓனரின் மகள் ஆசிரியையின் வீட்டில் தங்கி படித்து வருகிறாள். அந்தப் பெண்ணின் அப்பா அவளின் அம்மாவைக் கொலை செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காட்டுமிராண்டித்தனமானவன். அப்படி ஒரு இடத்தில் வளர்ந்த அவளை பிள்ளைகள் இல்லாத ஆசிரியத் தம்பதி தங்களது மகளாகவே நேசிக்கிறார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில்தான் தெரிகிறது அவளை அவளின் அப்பா அங்கே கொண்டு வந்து சேர்த்தற்கான காரணம் காதல் என்று. அவளை நேசிப்பவன் நல்லவன் என அறிந்து அவளின் அப்பாவை எதிர்த்து ஆசிரியத் தம்பதி காதலர்களைச் சேர்த்து வைக்கிறார்கள். காதலன், வேலை விஷயமாக அமேரிக்கா சென்றுவிட தலைப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை ஈன்றுவிட்டு இறந்து போகிறாள் அந்தப் பெண். துடித்து ஓடிவரும் காதல் கணவன் தன் கைக்குழந்தையோடு அமேரிக்கா செல்ல முயல்கிறான். அவனால் குழந்தையை வளர்க்க முடியாது என்பதை பக்குவமாகச் சொல்லி அக்குழந்தையை தாங்களே வளர்க்கிறார்கள் ஆசிரியத் தம்பதி.குழந்தைக்கு ஐந்து வயது வந்ததும் குழந்தையின் தந்தை இனிமேலும் அவனை பிரிந்து தன்னால் இருக்க இயலாது மேலும் அவன் படிப்பும் அமேரிக்காவில் தொடர்ந்தால் எதிர்காலத்திற்கு நல்லது என்று கேட்கும்போது போக மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை மனசில்லாமல் அவனோடு வேறுவழியின்றி அனுப்புகிறார்கள். தங்களது சொத்துக்களை அக்குழந்தையின் பெயரிலேயே எழுதிவைத்து,தங்களின் இறுதிச் சடங்கை அக்குழந்தைதான் செய்ய வேண்டும் என்று கேட்பதோடு படம் முடிவடையும்.

ஆசிரியத் தம்பதியாக நடித்திருக்கும் நெடுமுடி வேணுவுக்கும் சாரதாவுக்கும் இப்படம் நடிப்பில் ஒரு மைல்கல். பார்வதி இவர்களை அம்மா,அப்பா என்று அழைக்கும்போது நெடுமுடி வேணுவும் சாரதாவும் காட்டுகிற எக்ஸ்பிரஷன்கள் சிறிதும் மிகை நடிப்பின்றி அத்தனை யதார்த்தம். மகளின் இறப்பிற்குப் பிறகு மீண்டும் சூன்யமாகிப்போன வாழ்க்கையைப் பூரணமாக்க வந்த அக்குழந்தையை தங்களது கண்ணுக்குள் வைத்து வளர்க்கும் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு அகலாதவை. இப்படத்தைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
youtube-ல் காண இங்கே கிளிக்கவும்:


********************

இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் நான் பார்த்ததில் எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்:

5.பொய் சொல்லப் போறோம்:
+ முகம் சுழிக்க வைக்காத நகைச்சுவைக் காட்சிகள்,மௌலி மற்றும் நாசரின் நடிப்பு
- நாடகத்தனம்

4.ஈரம்:
+ ஒளிப்பதிவு,கிராபிக்ஸ் காட்சிகள்
- முடிவு தெரிந்த பின்னர் நீளும் இறுதிக் காட்சிகள்

3.நாடோடிகள்:
+ திரைக்கதை வேகம்
- சேர்த்து வைத்த ஜோடிகள் சேர்ந்தேதான் இருக்க வேண்டுமென்பது போன்ற கடைசி நேர வசனங்கள்.

2.பேராண்மை:
+அட்வென்சர் காட்சிகள்
- ஹிரோவிற்கு தெரியாத விஷயமே இல்லை என்பது போன்ற கதாபாத்திர அமைப்பு.

1.பசங்க
+ எல்லாமே

இவ்வாண்டில் மொத்தமே பத்து படங்கள்தான் பார்த்திருப்பேன்.அதில் எனக்குப் பிடித்தவை இவை.இப்பட்டியலில் சேர்க்காமல் விட்ட பொம்மலாட்டமும் எனக்குப் பிடித்தப் படமே.

Sunday, December 20, 2009

சூழ்நிலைக் கைதிகள்..

”சூழ்நிலை அமையாத வரை எல்லோரும் நல்லவர்களே” என்பது எத்தனை சத்தியமான உண்மை. இதற்கு எழுத்தாளர் திரு எஸ்.ரா அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் சொன்ன இரண்டு விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
சம்பவம் 1:
ஒரு சிறிய நகரத்தின் நகைக்கடை ஒன்றில் தனது இருபதாவது வயதிலிருந்தே கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் வயது ஐம்பதைக் கடந்துவிட்ட நேர்மையான ஒரு மனிதர். அவரின் முதலாளி கணக்குப் பிள்ளையின் மீது இருக்கும் நம்பிக்கையில் பெரும்பாலும் கடைக்கு வருவதில்லை, பொறுப்பையுணர்ந்த கணக்குப் பிள்ளையும் முதலாளியின் மீது அளவு கடந்த விசுவாசத்தோடு இருந்தார். ஒரு நாள் முதலாளி தனக்கு வயதாகிவிட்டதாலும், கடையில் பெரிதாய் வருமானம் வராததாலும் நகைக்கடையை மூடிவிட முடிவு செய்து கணக்கப் பிள்ளைக்கு சேர வேண்டிய சம்பளத்தொகையையும் மேற்கொண்டு கொஞ்சம் பணமும் கொடுத்து, ”நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்,வேறு வேலை தேடிக்கொள்” என்கிறார்.

கணக்குப் பிள்ளை,”இந்த வயதில் என்னை எங்கே புதிதாய் வேலைக்குச் சேர்ப்பார்கள்” என்று ஆரம்பித்து, ”திருமணத்திற்கு காத்திருக்கும் மகள் மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்” என முதலாளியிடம் தொடர்ந்து கடையை நடத்துமாறு கெஞ்சிக் கேட்கிறார். முதலாளிக்கும் கணக்குப் பிள்ளையின் நிலை புரிந்தாலும் லாபமில்லாத கடையை இனிமேலும் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சொல்லிவிட்டு கைவிரித்து விடுகிறார்.

வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சாவியை முதலாளி வீட்டிற்கு கொடுக்க போகும்போது தன் மகளின் திருமணச் செலவுகளை நினைத்து பயம்கொண்ட கணக்குப்பிள்ளைக்கு அன்று வசூலான பணத்தையும்,நகையில் கொஞ்சமும் எடுத்தால் என்ன என்ற எண்ணம் வருகிறது.பெரிய மனப் போராட்டத்திற்கு ஆளாகிறார்.

சம்பவம் 2:
சின்ன வயதிலிருந்தே தன்னை வளர்த்த தனது அண்ணன் குடும்பம்தான் எல்லாமே என்று திருமணமே வேண்டாம் என்று இருக்கும் தம்பி தன் மொத்த வருமானத்தையும் அண்ணன் குடும்பத்திற்கே கொடுக்கிறான். அண்ணன் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறான்.

ஒரு நாள் அண்ணன் வீட்டில் இல்லாத போது சமையலறையில் தண்ணீர் குடிக்கச் செல்லும் தம்பி சமைத்துக்கொண்டிருக்கும் அண்ணியின் விலகிய முந்தானையைப் பார்த்து சபலம் கொண்டு வெறித்துப் பார்க்கிறான்.பிறகு தனது சம்பாத்தியத்தின் கீழ் இருப்பவர்கள்தானே தொட்டால் என்ன என்கிற எண்ணம் வர கையைப் பிடிக்கிறான் மிரண்டுபோய் செய்வறியாது நிற்கும் அண்ணியின் முகத்தைப் பார்த்து சுதாரித்து கையை விடுவித்துவிட்டு தனது அறைக்கு திரும்பி விடுகிறான்.

விஷயம் அறிந்துகொள்கிற அண்ணன் ஒரு பெரிய தொகை மற்றும் தம்பி பெயரிலான பேங்க் பாஸ்புக் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு,”தயவு செய்து வேறு எங்கேயாவது தங்கிக்கொள்” என்கிறான். அண்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் தம்பியை ஆறுதலாய் பிடித்துக்கொள்ளும் அண்ணன் சொல்கிறான்,”இதுக்குதான்டா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன் ” என்று கூறிவிட்டு மேலும் “இது உனக்கும் எனக்குமான பிரச்சனை இல்லை உலகத்துப் பிரச்சனையே இதுதான்டா” என்கிறான்.

சம்பவம் ஒன்றில் தனது வாழ்நாளின் பெரும்பான்மையை நேர்மையாக கடந்துவிட்ட ஒரு மனிதரை தனது நேர்மைக்கு எதிரான எண்ணத்தை அவரிடம் விதைத்தது எது? அவர் அந்த பணத்தை களவாடியிருப்பின் அதுநாள் வரை அவரின் மேலிருந்த நல்லவர் பிம்பத்தை எத்தனை எளிதாக கேலி செய்து அசிங்கப்படுத்திவிடும் சமூகம்.

சம்பவம் இரண்டில் தன்னைச் சார்ந்து இருக்கும் மனிதர்களையும் தனது உடமைகளைப் போல் எண்ணுகிற மனோபாவம் வந்துவிடுகிறது. மேலும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிக்கும்போது அவள் மிரண்டு நின்றாலும் எதிர்ப்பை தெரிவிக்காமல் செய்வதறியாது நிற்க வைத்தது எது?

அந்த கணக்குப் பிள்ளையும் சரி,தம்பியும் சரி தான் இப்படி நடந்து கொள்வோம் என்பதை அப்படியொரு சூழ்நிலை அமையும் வரை கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

நாம் எல்லோருமே தவறுகள் செய்யும்போது அதற்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்போம். அதே மற்றவர்களுக்கென்று வரும்போது அவர்களை நிராகரிப்பது, கார்னர் செய்து ஆளாளுக்கு நீதிமான்களாகி தண்டனை கொடுப்பது போன்றதைச் செய்வோம்.

தவறு செய்வது எல்லோருக்கும் பொதுவான இயல்பு என்பதையும், நாம் அனைவருமே தண்ணீரைப் போன்றவர்கள் சூழ்நிலை என்னும் பாத்திரம் மட்டுமே நமது வடிவத்தை தீர்மானிக்கும் சக்தி என்பதை அறிந்தும் அடுத்தவரின் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு சக மனிதர்களை நேசிப்போம்.

டிஸ்கி: அடிப்பதற்கும்,கொலை செய்வதற்கும் கூட ஏதோ சூழ்நிலையிருக்கும் என்றெல்லாம் கேட்க மாட்டீங்க தானே. :)))))

Saturday, December 19, 2009

வேட்டைக்காரன் எனது பார்வையில்

விஜய் ஒரு நல்ல நடிகர் என அறியப்பட்ட ‘பூவே உனக்காக’ காலத்திற்கு முன்பே வெளியான ’தேவா’, ’கோயமுத்தூர் மாப்ளே’ காலத்திலிருந்தே விஜயை எனக்குப் பிடிக்கும். குருவி,வில்லு ஆகிய படங்களைப் பார்த்தப் பிறகு விஜயைப் பிடிக்கும் என்பதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அடுத்தமுறை சரி செய்துவிடுவார் என்று சுய சமாதானம் செய்து கொண்டான் எனக்குள் இருக்கும் விஜய் ரசிகன் (கட் அவுட்,பாலாபிஷேகம் டைப் ரசிகன் இல்லை, ஜஸ்ட் பிடிக்கும்). ஆனால் ”இதுக்கு மேலயும் நீ சுய சமாதானம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?” என்று குமுற ஆரம்பித்திருக்கிறான் அதே ரசிகன். (முடியல).

சரி கதைக்கு(?) வருவோம்,எத்தனையோ படத்தில் பார்த்து பார்த்து சலித்துப்போன சிட்டியில் அட்டகாசம் செய்யும் தாதாவை ஒழிப்பதுதான். திருப்பாச்சி படத்தில் திருப்பாச்சியிலிருந்து சென்னைக்கு வந்து வதம் செய்தார். இதில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்து அவதாரம் எடுக்கிறார்.இம்மாதிரியான கதைகளில் இருக்கும் பரபரப்பான திரைக்கதை இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங். படத்தின் முக்கியத் திருப்பமாக வரும் இடத்தில் வில்லன் சலிம்கௌஸ் விஜயிடம் தன் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும் காட்சி ஆரம்பிக்கும் போது சுவாரஸ்யமாய் இருந்து போகப்போக எஸ்.பி.முத்துராமன் காலத்துக்கெல்லாம் அழைச்சிட்டுப்போய் கொட்டாவி விட வைக்கிறது. காதல் காட்சிகளிலிருந்து ஆக்‌ஷன் காட்சிகள் வரை ஒரு கண்டினியூட்டி இல்லாதது போலவே தெரிந்தது.

விஜயின் அறிமுகக் காட்சி நன்றாகயிருந்தது அதைத் தொடர்ந்து வரும் சில குளோசப் காட்சிகளிலும் விஜய் அழகாய் தெரிந்தார்.தூத்துக்குடியில் நடக்கும் நண்பனின் திருமணத்தில் விஜய் செய்யும் கலாட்டாக்கள் ஆஹா ஓஹோ இல்லையென்றாலும் ரசிக்கலாம். சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. காதல் காட்சிகளில் விஜய்க்கென்றே இருக்கும் சில மேனரிஸங்களையே செய்திருந்தால் கைதட்டல் வாங்கியிருக்கும் இடங்களில் ரஜினியை இமிடேட் செய்து சொதப்பியிருக்கிறார். வில்லனை சந்திக்கும் காட்சிகளிலும் பாட்ஷாவை ஃபாலோ பண்ணியிருக்கிறார்.

விஜய் படங்களில் முக்கிய பங்காற்றும் நடன அமைப்புகளில் இந்த படம் மிகப் பெரிய ஏமாற்றம். ’சின்னத்தாமரை’ பாடலில் விஜயின் தீவிர ரசிகர்கள் கூட ஏற்றுகொள்ள முடியாத அளவுக்கான ஹேர்ஸ்டைல். (என்ன கொடுமை ஸார் அது). அனுஷ்காவை வில்லன் கடத்தி வைத்திருக்கும்போது வில்லனிடம் விஜய் பேசும் ”என்னமோ பேசனும்னு சொன்னியே” காட்சி மட்டும்தான் விஜய் இருப்பிற்கான அடையாளம்.

குருவி ரயில்வே பிரிட்ஜ் ஜம்ப் அளவிற்கு காமெடி இல்லாவிட்டாலும் கைவிலங்கோடு போலிஸிடமிருந்து தப்பிக்கும்போது ஓடிக்கொண்டே விலங்கை வாயில் சாவியை வைத்து நொடிப்பொழுதில் திறப்பது,பிரமாண்ட உயர அருவியிலிருந்து குதிப்பது என இதிலும் சில காட்சிகள் அந்த வகையில் இருக்கிறது. என்னவோ பால்காரன்,பேப்பர் போடுகிறவன் போல் சர்வ சாதாரணமாய் வில்லனின் வீட்டுக்கு போயிட்டு வருவதெல்லாம் ரொம்ப ஓவர். ஹிரோயிச துதிபாடும் காட்களிலெல்லாம் ’தான்’ என்ற ஆங்காரத் தோரணை விஜயிடம்.(ண்ணா கொஞ்சம் அடக்கியே வாசிங்க). ஒரே ஆறுதல் பஞ்ச் டயலாக் அதிகமாக இல்லை.

அனுஷ்கா வழக்கமான விஜய் படத்தின் கதாநாயகிகள் என்ன செய்வார்களோ அதைச் செய்திருக்கிறார். தொழிலதிபரை மணக்கும் வயதில் இருப்பது போன்று தெரிவதால் அனுஷ்கா- விஜய்” சோடி பொருத்தம் அம்புட்டு ஒன்னும் சொகமாயில்லை”. பொண்ணு என்னா உயரம்(சிங்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாமே காம்பினேஷன் காட்சியிலெல்லாம் ஸ்டூல் தேவை படும்),சிரிக்கும்போது மனசை அள்ளுகிறார்.

வில்லனாய் நீண்ட நாட்களுக்குப் பிறகு சலிம்கௌஸ்(சின்னக் கவுண்டர் வில்லன்) , இவரின் கேரக்டரைசேஷன் ரசிக்கும்படி அமையாவிட்டாலும் நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் ரசிக்க வைக்கிறார். இவரின் வில்லத்தனங்களாக சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளெல்லாம் அதரப் பழசானவை.இவரின் மகனாக இன்னொரு வில்லன் படம் நெடுக எரிச்சலைக் கிளப்புகிறார். அவரைப் பெண்பித்தனாய்க் காட்ட சித்திரித்திருக்கும் காட்சிகளெல்லாம் மகா மட்டமான சிந்தனை.

தேவராஜாக வரும் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது,ஆனாலும் கண்பார்வை இழந்த அவர் கிளைமேக்ஸில் விஜயோடு சேர்ந்து நல்லா காமெடி செய்திருக்கிறார்.(யப்பா டைரக்டரு எப்படி இப்படியெல்லாம்).

ஷாயாஜிஷிண்டே,கொச்சின் ஹனிஃபா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். சத்யன் நட்பு சென்டிமெண்ட்டுக்காக.கொச்சின் ஹனிஃபாவின் அந்த ”ஆறு பேரு சேர்ந்து ....... என்னாகும்” ரொம்ப ஓவரு. (இருந்தாலும் நான் சத்தமாய் சிரித்தக் காட்சி அது ஒன்னுதான்).

இசை விஜய் ஆண்டெனி,பாடல்கள் ஏற்கனவே ஹிட். பேக்கிரவுண்ட் மியூசிக்கிலும் நன்றாகவே செய்திருக்கிறார் குறிப்பாய் சண்டை காட்களில் பயன்படுத்தியிருக்கும் பறையடிப்பது போன்ற சத்தம்.பாடல்கள் ரகளையாக இருந்தும் காட்சிப் படுத்துதலில் சொதப்பியிருக்கிறார்கள்.

திரைக்கு மிக அருகில் அமர்ந்து படம் பார்த்ததால் ஒளிப்பதிவைப் பற்றி நான் பேசுவது கூடாது.

டைரக்‌ஷன் பாபு சிவன், இவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ”எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?” என்று கேட்பதைத் தவிர.

வேட்டைக்காரன் - ரஜினிகள் ஆசையால் போட்டுக்கொண்ட சூடு .

டிஸ்கி: ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது நீண்ட க்யூவில் தாய்குலங்கள் உட்பட செகண்ட்ஷோவிற்கு நின்றார்கள். இவ்வளோ ஆர்வமா வர்றவங்களுக்கு கமர்சியல் ஃபார்முலாவிலேயே விஜய் வேற ரூட் பிடிச்சா நல்லாயிருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு எழுதிய கற்பனை வேட்டைக்காரனின் விமர்சனம் இங்கே:

Thursday, December 17, 2009

கீதாரி மவ

ஆடுக அய்யங்கோயில் இலுப்பமர நெழலுல அடைக்கலமாகியிருந்த சித்திரையின் உச்சி வெயில் நேரம். இலுப்ப வேர்ல துண்ட சுருட்டி தலமாட்டுக்கு வச்சபடி” வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு ரெண்டு வாழமரம் கட்டப் போறேண்டி”ன்னு பாடியபடியே ஆடுகளோட ஆடா படுத்திருந்த பாண்டி எப்போதுமே இப்படித்தான் எதாச்சும் பாடிக்கிட்டே இருப்பான்.

கத்தரி சித்திரைங்கிறதால வெயில்ல மேஞ்ச ஆடுக சில படுத்துக்கிட்டு ’கர்ர்ர்..புர்ர்ர்’ ன்னு மூச்சிறைச்சபடியும்,சில நின்ன வாக்குல கண்கள மூடிகிட்டு வேகமாக அசைபோட்டபடியும், கொட அடங்காத ஒன்னு ரெண்டு ஆடுக நெழல்ல நின்னபடியே மேஞ்சிகிட்டும் இருந்துச்சுக. ஆடுகள நெழலுல பத்திவிட்ட பிறகு மத்தியானத்துல எப்போதும் ஒரு குட்டித் தூக்கம் போட்டுருவான் பாண்டி. ஆனா இன்னைக்கி தூங்காம அவன் பாடுறதுல விசியமிருக்கு, நெசமாவே வைகாசியில மாம மவ சோதிமணிய கல்யாணம் பண்ணிக்கப் போறான்ல அந்த சந்தோசம்தான்.

”கீதாரி குட்டி அய்யரூட்டு பொண்ணுக மாதிரில்ல இருக்கா” ன்னு ஊருக்குள்ள பேசிக்குற அளவுக்கு சோதிமணி நல்ல செவப்பு,பாண்டியோ அய்யனாரு சிலைக்கு பக்கத்துல கொஞ்ச நேரம் நின்னான்னா அவனுக்கு தேங்கா ஒடச்சு கற்பூரம் காட்டிட்டு போயிருவாய்ங்க.

பாண்டியின் மாமன் சின்னச்சாமி கீதாரிக்கு, சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம், பாண்டிக்கும் அங்கிட்டுதான். ஒவ்வொரு வருசமும் மாசி கடைசிக்கு வந்து ஆடி மாசம் ஆத்துல தண்னி வர்ற வரைக்கும் இங்கே தங்கி வயக்காடுகளுக்கு கெட வைக்கிறதுதான் பொழப்பு. ஒத்த புள்ளயும் பொட்டப்புள்ளயாப் போனதால தன் தங்கச்சி மவன் பாண்டிய ஆடுமேய்க்க தொணைக்கு வச்சிருக்கான்.

ஊர் நாட்டாம வீட்டின் கொல்லைபுறத்துலதான் கீதாரி குடும்பம் டேரா போடுவது வழக்கம். சின்னச்சாமியின் அப்பன் காலத்துலருந்தே அங்கதான் தங்குறதால நாட்டாமைக் குடும்பத்தோடு ரொம்ப நெருக்கம்.

சின்னச்சாமிக்கும் நாட்டாமை மாரியப்பனுக்கும் சின்ன வயசிலிருந்தே நல்ல நட்பு. மாரியப்பனுக்கு பக்கத்து ஊர் பேங்குக்கு போறதலருந்து எந்த வேலையாக இருந்தாலும் சைக்கிள்தான்.ஆனால் ஒரு ட்ரைவர் வச்சிகிட்டுதான் போவார். இவ்வளவுக்கும் நாட்டாமையின் மகன் பஜாஜ் பல்சர் வைத்திருக்கிறான். ஆனால் அதில் அமர்ந்து செல்ல பயந்து `சே சே இந்தப் பழம் புளிக்கும்` என்பதாய் ஏறவே மாட்டார்.

சின்னச்சாமி இங்கே இருக்கிற இந்த ஆறுமாசமும் நாட்டாமைக்கு ட்ரைவர் வேலைப் பார்க்க வேண்டியிருக்கும். சின்னச்சாமியும் விரும்பியே செய்வான். இருவரும் சின்ன வயது கதைகள சத்தமா பேசிக்கிட்டே மெதுவாக சைக்கிளில் போறத பாத்து,”ரெண்டும் கிளம்பிருச்சுடா”ன்னு சொல்லி நக்கலா சிரிப்பாய்ங்க இளந்தாரிக.


சின்னச்சாமி வேலை விசயமா வெளியில போறப்பவெல்லாம் சோதிமணிதான் பாண்டிக்குத் தொணையா ஆடுமேய்க்க போவா. சின்னச்சாமியோட பொண்டாட்டி ரஞ்சிதத்துக்கு மகளை வயசு பயலோடு ஆடு மேய்க்க அனுப்புவதில் உடன்பாடு இல்லைனாலும் அடிக்கடி நோவுல படுத்துக்குற அவளால வேற ஒன்னுஞ் சொல்லமுடியாம இருந்துட்டா. என்னதான் கல்யாணம் பண்ணிக்க போறவந்தான்னாலும் அதுக்கு முந்தி ஏதாவது எசகுபெசகாயிருச்சுன்னா அசிங்கமா போயிருமேங்கிற பயம் அவளுக்கு.

சோதிமணி,ஆடுமேய்க்க வர்றப்பயெல்லாம் பாண்டிய பாடச் சொல்லி கேட்டுகிட்டே இருப்பா. அந்த மாதிரி நேரத்துல தொறட்டிக்கம்ப பொறடில வச்சு கம்பின் நீட்டிக்கிட்டிருக்குற ரெண்டுபக்கட்டும் கைகள போட்டபடி ரொம்ப லயிச்சு பாடுவான். தினமும் நாட்டாமைக்கு வெளியூர் போற வேலை இருந்துகிட்டே இருக்கணும்னு மனசுக்குள் நெனச்சுக்குவான் பாண்டி.

”கிட்ட வராதய்யா ஒரே மொச்ச நாத்தம்”

”உங்கப்ப மேலுல செண்டு வாசம் அடிக்குமா?”

”ம்ம் என்ன இருந்தாலும் அது எங்க அப்பா”

”அவரு ஓ அப்பன்னா, நான் ஒம்...” நிறுத்திவிட்டுச் சிரிப்பான்.

”சீ ரொம்பதான்” .

என்னைக்கிருந்தாலும் தனக்கு பொண்டாட்டியா வரப்போறவதானேன்னு அப்பப்போ சோதிமணிகிட்ட ஏதாவது சில்மிஷம் பண்ணிக்கிட்டே இருப்பான். அப்பயெல்லாம் இப்படித்தான் கழுவுற மீனுல நழுவுற மீனா பேசுவா.

நாட்டாமையோட சின்னச்சாமி வெளியில் போயிருந்த ஒரு நாளுலதான் ஆடு மேய்க்க போன சோதிமணி மத்தியானத்தோட வீட்டுக்குத் திரும்பி சோந்து படுத்துக்கெடந்தா.

எங்கேயோ வெளியில போயிட்டு வந்த ரஞ்சிதம் சோதிமணிய பாத்துட்டு,

“ஏண்டி வந்திட்ட”

“தலய வலிக்குது,கொஞ்சம் சும்மா இருக்கியா”

“என்னத்துக்குடி இப்படி சடத்துக்குற” என்னு சொல்லிட்டு அடுப்பு பத்த வைக்க போகும்போது ’உவ்வே’ குடிசைக்குள்ளேயே வாந்தி எடுத்துவிட்டாள் சோதிமணி.

“என்னடி பண்ணுது”ன்னு பதறுன ரஞ்சிதத்தின் கேள்விக்கு எதுவுஞ்சொல்லாம சுருட்டிக்கிட்டு படுத்த மகளை கொஞ்ச நேரம் பாத்துகிட்டிருந்துட்டு,

“தலைக்கி குளிச்சு எத்தன நாளாச்சு”

“ ”
“சொல்லுடி”

“ ”

“கொழுப்பெடுத்த முண்ட,ஆடு மேய்க்க போறதுன்னா குதிச்சுகிட்டு கெளம்பயலயே தெரியுண்டி” ன்னு சொல்லிகிட்டே கையில் வைத்திருந்த ஈயக் குண்டானால மூஞ்சியிலேயே இடிச்சா. தாவணியால் போத்திகிட்டு விசும்பிக்கிட்டிருந்த மகளைப் பாத்து தானும் சோந்து போய் உக்காந்துட்டா.

விசயத்த சின்னச்சாமிகிட்ட சொன்னப்பவும் என்னைக்கு இருந்தாலும் நடக்குறதுதானேங்கிற மாதிரி அவனும் பெருசா அலட்டிக்கல.ஆனாலும் இப்படியொரு விசயத்தை சின்னச்சாமியும் சரி, அவன் பொண்டாட்டியும் சரி யாரிடமும் காட்டிக்கல. பாண்டிகிட்டயும் கூட. ஒருவேள சோதிமணி பாண்டிகிட்ட சொல்லியிருந்தா அவனோட சேத்து நாலு பேருக்குத்தான் தெரியும்.

ரெண்டு வருஷம் கழிச்சு நடக்க இருந்த கல்யாணம் அவசர அவசரமாக முடிவானது இதுனாலதான்.

ஊருக்குப்போயி கூடி பண்ற மாதிரியான சூழல் இல்லாததால் கல்யாணத்த இங்கயே கோயில்ல வச்சிக்கலாம்னு முடிவுபண்ணி, நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு மட்டும் தகவல் சொல்லிவிட்டாச்சு.

கல்யாணத்துக்கு மொத நாளு சாயங்காலத்திலிருந்து கீதாரி வீட்டுக்கு சொந்த பந்தங்கள் வர ஒவ்வொருத்தரையும் பாண்டிதான் பஸ்ஸ்டாண்டிலிருந்து நாட்டாமை வீட்டு பல்சரில் அழைச்சுட்டு வந்துகிட்டிருந்தான்.

பெரிய பெரிய தண்டட்டியோடு கெண்டைக்கால் தெரிய சேலைகட்டி வந்திறங்கிய கீதாரியின் சொந்த பந்தங்களை விசித்திரமாய் பாத்த உள்ளூர் சனம், கீதாரிக் குட்டியின் கல்யாணத்துல நடக்குற சடங்குகள பாக்க ஆவலா இருந்துச்சு.

நாட்டாமை வீட்டு சனங்கதான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சிட்டு இருந்துச்சுக. அன்னிக்கு ராத்திரி நாட்டாமை வீட்டுலே ஏற்பாடாயிருந்த விருந்து முடிஞ்சதும் முகூர்த்தம் காலையில் ஆறுலேர்ந்து ஏழு மணிக்குள்ளங்கிறதால நேரமாய் எல்லாரும் உறங்கிவிட விடிய காலம் நாலு மணி வாக்கில் மணப்பொண்ணுக்கு அலங்காரம் செய்ய எழுந்திரிச்ச உறவுக்காரப் பொண்ணு ஒருத்தி ரஞ்சிதத்தை மெல்ல எழுப்பி,

“யத்தே,சோதிமணிய ரொம்ப நேரமாக் காணும்”

“என்னடி சொல்ற இங்கதான் எங்கயாச்சும் இருப்பா”ன்னு சொல்லிகிட்டே வெளியில் வந்து சுத்தும் முத்தும் பாத்து ”சோதிமணி சோதிமணி”ன்னு கூப்பிட்ட ரஞ்சிதத்தின் குரல் கேட்டு மெல்ல சிலபேரு எந்திரிக்க,விஷயம் கொஞ்சம் கொஞ்சமாப் பரவி அந்த விடிய காலை நேரத்தில் எல்லோரும் பரபரப்பாக, ”கல்யாணத்துல விருப்பமில்லாம இருந்தாளோ?”,”எதுக்கும் பக்கத்துல இருக்க கேணியெல்லாம் பாருங்க”,”மரங்கிரத்துல தொங்கிட்டாளோ”ன்னுஆளாளுக்கு ஒன்னு ஒன்னச் சொல்ல ரஞ்சிதம் வெடிச்சு ஒப்பாரி வைக்க ஆரம்பிசிட்டா. சின்னச்சாமிக்கு நெஞ்ச அடைக்குற மாதிரி இருக்க அப்படியே சுவத்த புடிச்சுகிட்டு உக்காந்துட்டான்.

“யாரோ விடிஞ்சும் விடியாம இருக்குறப்ப பஸ்ஸ்டாண்டு பக்கம் போனத பாத்தேன்”ன்னு உள்ளூர்காரர் ஒருத்தர் சொல்ல பல்சரை எடுக்க ஓடுனான் பாண்டி, அங்கே பல்சரையும் காணும்.

Monday, December 14, 2009

தமாஷ் தாத்தா

கிராமங்களில் சில வேடிக்கையான குணாதிசயங்களைக்கொண்ட மனிதர்களைக் காணலாம்.அப்படி ஒரு வேடிக்கையான தாத்தாவின் சாகசங்கள் இங்கே.

ஒரு தடவை கடலை விதைப்பின்போது ஏர் ஓட்டிக்கொண்டிருந்த தாத்தாவின் அண்ணன், விதைத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம் நெருக்கமா விதைக்கும்படி சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.தாத்தாவும் அண்ணன் சொல் தட்டாமல் தன்னால் முடிந்தவரை நெருக்கமாக விதைகளை விதைத்தும், பெரியவருக்குத் திருப்தியில்லாமல் மீண்டும் மீண்டும் ”இன்னும் கிட்ட கிட்ட போடுடா,அப்பத்தான் நல்லா நெருக்க மொளைக்கும்” என்றபடியே தனது சீனியாரிட்டியைக் காட்டிக்கொண்டே இருக்க கடுப்பான தாத்தா, மண்வெட்டியால் வேக வேகமாக ஒரு குழியைத் தோண்டி கூடையில் வைத்திருந்த மொத்த விதையையும் அதிலே கொட்டிவிட்டு “வெதச்சாச்சு, நல்லா நெருக்க மொளைக்கும்” என்ற சொல்லிவிட்டு விடு விடுவென்று வீட்டை நோக்கி நடந்திருக்கிறார்.

====================
தாத்தா, ஊரின் நாட்டாமைக்காரர்களில் ஒருவர்.அது திருவிழா சமயம் கோயிலுக்கு வாங்க வேண்டிய பொருட்களை எழுதி வைப்பதற்காக,ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த தனது பேரனை அழைக்க, பேரனும் பேப்பர் பேனா சகிதம் வர, ”பூ,பழம் என்று ஒவ்வொன்றாய் நான் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டே வா” என்றுவிட்டு முதலில் ”பூ” என்று சொல்லியிருக்கிறார். பேரனும் ’பூ’ என்று எழுதிவிட்டு ”அப்புறம்” என்க. ”அதுக்குள்ள எழுதிட்டியா” என்றபடியே பேப்பரைப் பார்த்த தாத்தா ஒரே ஒரு எழுத்து மட்டும் இருந்ததைக் கண்டு செம்ம கடுப்பாகி “இதான் உங்க வாத்தி சொல்லிக்கொடுத்ததா” என்று பேரனின் காதைத் திருகியபடியே உள்ளூரில் இருக்கும் வாத்தியார் வீட்டிற்கே இழுத்துச் சென்று, ”யோவ் வாத்தி என்னய்யா பாடம் சொல்லிக் கொடுக்குற” என்று கூறிவிட்டு நடந்தவற்றைச் சொல்ல, வாத்தியாரும் ”அவன் சரியாத்தான் எழுதியிருக்கான்” என்றதும், ”என்னய்யா கோயிலுக்கு பூ வாங்குறது உங்களுக்கு பொசுக்குன்னு ஒத்த எழுத்துல எழுதுற விசியமா போச்சா, உங்கிட்ட படிச்சு இவன் உருப்பட்ட மாதிரிதான்” என்று வாத்தியாரையும் திட்டியபடியே பேரனை அழைத்துச் சென்றார்.

======================
அப்போதெல்லாம் கிராமங்களில் முடிவெட்டும் தொழிலாளர்களுக்கு கூலியாய் வருடத்திற்கு இவ்வளவு என்று நெல் கொடுப்பதுதான் வழக்கம். எங்க ஊரின் முடிவெட்டும் கடை வைத்திருப்பவர் சரியான நக்கல் பேர்வழி. யாரையும் எளிதாய் நக்கலடிப்பார். ஒரு முறை தாத்தா முடி வெட்டிக் கொண்டிருந்தபோது முதல் நாளின் மொச்சைப் பயிர் வேலை செய்ய காற்று சற்று சத்தமாகவே பிரிந்துவிட,”ஐயையோ,இவன் சும்மாவே நக்கலடிப்பான், இதை வைத்து மானத்தை வாங்கிட போறான்” என்று பயந்த தாத்தா பேச்சை மாற்றும் விதமாக ”என்னடா ராமா, கூலியெல்லாம் ஒழுங்கா கொடுக்குறாய்ங்களா?” என்றதும்,அமைதியாய் முடிவெட்டிக்கொண்டிருந்த ராமனோ ரொம்பவும் கேஷுவலாக, ”ப்ச் என்னத்த, கொடுத்தவுக கொடுத்தவுகதான் உங்கள மாதிரி கு-வுனவுக கு-வுனவுகதான்” என்று தாத்தாவை டரியலாக்க, முடிவெட்டக் காத்திருந்த மற்றவர்கள் அடக்க மாட்டாமல் சிரிக்க,ஷேவ் பண்ணிக்கொள்ளாமல் தெறித்து ஓடிவந்திருக்கிறார் தமாஷ் தாத்தா.

==================

கடும் காய்ச்சலால் அவதியுற்ற தாத்தாவை முதன் முறையாக லோக்கல் டாக்டரிடம்(RMPH என்று ஏதோ ஒரு படிப்பு படித்தவர். பரம்பரைத் தொழிலாக வாரிசுகளும் இப்போது டாக்டர்ஸ்) அழைத்துச் சென்றார்கள். ஊசி என்றாலே பயப்படும் தாத்தா,மருத்துவரை அனுகுவதே இல்லை.இந்த முறை வேறுவழியின்றி உயிர்பயம்கொண்டு வந்துவிட்டார். டாக்டரின் அறைக்குள் சென்ற பெரியவரை அங்கிருந்த குஷன் சேரில் அமரச் சொன்னதும், அதுவரை அப்படியான சேரில் அமர்ந்திராத தாத்தா மிகவும் பயந்து சீட்டின் நுனியில் பட்டும் படாமலும் உட்கார, டாக்டர் அதிவேக செக் அப் செய்துவிட்டு, ஒன்றும் பயப்பட வேண்டாம்,இந்த மாத்திரைகளை சாப்பிட்டா ரெண்டு நாளில் சரியாகிடும்” என்றபடியே பிரிஸ்கிரிப்ஷனை கொடுத்துவிட்டு, ஃபீஸ் இருபது ரூபாய் கேட்க,அவ்வளவு பெரிய தொகையை ஃபீஸாக எதிர்பார்த்திராத தாத்தா, ”ஏன் டாக்டர்,வந்த உடனே உக்காரச் சொன்ன, கையபுடிச்சுப் பாத்த,சீட்டுல என்னமோ கிறுக்குன, இதுக்குபோயி இருபது ரூவாயா?, இப்படி பட்டும் படாமலும் உக்காந்ததுக்கே இருபது ரூவாய்னா கொஞ்சம் அழுத்தி உக்காந்தா அம்பது ரூவா கேப்ப போலிருக்கே?,படிக்காத பயன்னு ஏமாத்த பாக்குறியா” என்று கலாட்டா செய்ய ஃபீஸே வேண்டாம் என்று டரியலானார் டாக்டர்.

இவரைப் பற்றி இன்னும் சில ரகளையான நினைவுகள் உண்டு. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்

Friday, December 11, 2009

போட்டோ கலாட்டா

டிஸ்கி:முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே.

Wednesday, December 9, 2009

நொறுக்குத் தீனி 09/12/09

ரயில் சினேகம்போல் அன்றாட வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் எதிர்பாரா மனிதர்களைச் சந்திக்க நேரிடும். அப்படியான சந்திப்புகளில் சில நம்மில் ஆழமாய் தங்கிவிடும். அப்படி என்னுள் ஆழமாய் தங்கிவிட்ட நிகழ்வு இது, ஒருமுறை திருப்பூரிலிருந்து ஆழியாறு வரை எனது பெரியப்பா பையனும் நானும் டூவீலரில் ஒரு வீக் எண்ட் ட்ரிப் அடித்தோம். திரும்பி வரும்போது மிகவும் சோர்வாக உணர்ந்ததால் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் தென்னை, பாக்கு மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் இருந்த பேருந்து நிழற்குடையில் ஓய்வெடுத்தபடியே, பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தோம். பெரியவர் அந்த ஏரியாவில் உள்ள யாரோ ஒரு பெருந்தனக்காரரின் பண்ணையில் கூலிவேலை செய்வதாகவும், உடல் நலமின்றி இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தனது தாயார் தன்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதால் ரொம்ப நாள் கழித்து அவரைக் காணச் செல்வதாகவும் அழகான கொங்குத்தமிழில் சொன்னார். அந்த பெரியவருக்கே கிட்டதட்ட எழுபது வயதிருக்கும். தனது தாய் விரும்பி சாப்பிடும் திண்பண்டங்களை வாங்கி வைத்திருந்தார். எனக்கு எங்க அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் கூடவே ”என்ர தாயாருக்கு நானெண்டா உசுருங்க” என்றபடி கண்கலங்கிய அந்த பெரியவரின் நினைவும் வந்துவிடும். அம்மா என்ற உறவுக்குத்தான் எத்தனை வலிமை..!
================

கொரியாவிற்கு சென்ற புதிதில் எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது, வித்யாசமே தெரியாதது என இரண்டு விஷயங்கள் உண்டு.முதலாவது அந்நாட்டுப் பெண்களின் உடைகள். அம்மாதிரி நம்ம ஊரில் சினிமாவில் அணிந்து வந்தால் சென்சாரில் 'A' முத்திரை நிச்சயம். அந்த ஊர் அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க அதாவது அந்த ஊர் பொண்ணுங்களே முகம் சுழிக்கிற அளவிற்கு உடையணிந்து செல்பவர்களின் உடைகளை நம்ம ஊரில் திரைப்படங்களில்கூட போட முடியாது. முதலில் ஓரிரு வாரங்கள் ’குஷி’ விஜயாய் இருந்த எனது பார்வை பின்பு முட்டிக்கு மேலே ரொம்ப தூரத்தில் இருக்கும் உடையணிந்து ரம்பாவாவை விட தெம்பாய் இருக்கும் பெண்களின் அருகில் அமரும்போதும் கூட மிகவும் இயல்பாய் தெரிந்தது.

இரண்டாவது அவர்களின் முகம். பனிப்படர்ந்த மலை பிரதேசத்தில் நடந்த கம்பெனியின் ஆண்டு விழாவில் நிறைய விளையாட்டுப் போட்டிகள் வைத்தார்கள்.அதில் ஒரு போட்டியில் குறுக்கும் நெடுக்குமாக பதினாறு கட்டங்கள் உள்ள ஒரு தாளில் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு நபர்களின் கையெழுத்தை வாங்கி வரச் சொன்னார்கள். நான் ஒரே நபரிடம் நான்கு முறை சென்று கையெழுத்திடுமாறு கேட்டிருக்கிறேன் எனக்கே தெரியாமல்.ஒவ்வொரு முறையும் ஏற்கனவே போட்டுவிட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கோ குழப்பம். ஐந்தாவது முறையும் அவரை நோக்கி போகும்போது ”ஆர்.யூ.ஓகே” என்றார். பிறகு சில வாரங்கள் கழித்துதான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வித்தியாசத்தை அறியமுடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் என்னோடு இன்னொரு தமிழரும் வேலை பார்த்தார். எங்கள் இருவரின் முகச்சாயலுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் கொரியன்ஸ் என்னிடம் சொல்ல வேண்டியதை அவரிடம் சொல்வார்கள்,அவரென்று நினைத்து என்னிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் பார்வையில் இந்திய முகங்கள் ஒரே மாதிரி தெரிவதுதான் காரணம்.

==================

கல்கியின் பொன்னியின் செல்வனை திரைப்படமாகவும்,தொலைக்காட்சித் தொடராகவும் கொண்டுவர செய்த முயற்சிகள் முயற்சிகளாகவே இருக்கும் வேளையில் பொன்னியின் செல்வனை அனிமேஷனில் கொண்டு வருவதற்கான ட்ரைலரை சமீபத்தில் யூடியூப் தளத்தில் பார்த்து அசந்துவிட்டேன். இதுவும் ட்ரைலரோடு நின்றுவிட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் முன்னோட்டமே அருமையாக இருக்கிறது. நீருக்குள் மீன்கள் கூட்டமாய் செல்லும் காட்சி பொற்கீரிடத்தில் வைரமாய்.==================

பதிவுலகம் நல்லதொரு பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய் மேலும் சிறப்பு சேர்க்க ஈரோடு பதிவர் சங்கமம் வரும் 20 தேதி ஈரோடில் நடக்க இருக்கிறது. அதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.மேலும் விபரங்களுக்கு இங்கே.

==================
”பேராண்மை” மற்றும் “பொம்மலாட்டம்” ஆகிய படங்களை சென்ற வாரம் பர்த்தேன். நல்ல படங்கள்.பேராண்மை குறித்து ஆரம்பத்தில் வெளியான சில பதிவுலக விமர்சனங்களால் படத்தை பார்க்காமல் இருந்தேன். இதைவிட மோசமாக லாஜிக்கே இல்லாத வேறு மொழி படங்களைக் கொண்டாடும் நாம், தமிழில் இப்படியான நல்ல முயற்சிகள் வரும்போது சில குறைகள் இருப்பினும் பாராட்ட வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம். த(ல)ளபதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்ற இப்படியான முயற்சிகளை வரவேற்போம் .

”பொம்மலாட்டம்” ஓடியிருக்க வேண்டிய படம். அருமையான திரைக்கதையமைப்பு. நானா படேகரின் கேரக்டர், அநாயசமாய் அவர் வெளிப்படுத்தும் சின்ன சின்ன ரியாக்ஷன்கள்,உடல் மொழியென மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். பாரதிராஜாவிடம் இன்னும் பெரிய எதிர்பார்ப்பை தூண்ட வைத்திருக்கிறார். பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு சொல்லுங்க.
==================
இறுதியாக கவிதை மாதிரி ஒன்று ,
எதுவுமே சாத்தியம்
சச்சினின் சதத்தைக் கொண்டாட
சத்தியத்தில் ’உன்னைப்போல் ஒருவன்’,
நள்ளிரவு வீடு திரும்பி
உறக்கம் வாராமல்
பொன்னியின் செல்வனை
புரட்டிக் கொண்டிருக்கையில்
கண்கள் சொக்க,
சச்சின் அடித்த சிக்சரை
பூங்குழலியோடு பயணிக்கும் கமல்
கச்சிதமாய் பிடித்தார்..!

Tuesday, December 8, 2009

ஒரே மெட்டு ஐந்து வடிவங்களில்

தமிழில் சங்கத்தில் பாடாத கவிதை, மலையாளத்தில் தும்பி வா, தெலுங்கில் ஆகாசம் ஏனாகி இப்போது ஹிந்தியில் கும்சும் என்று ஹிட்டடித்திருக்கும் இதே மெட்டை ராஜா ஏற்கனவே ஹிந்தியில் போட்டிருக்கிறார். Aur Ek Prem Kahani என்ற படத்தில் காற்றில் எந்தன் கீதம்,காதல் ஓவியம் உட்பட சில பாடல்கள் ஹிந்தி வடிவம் பெற்றிருக்கும். இப்படத்தின் ’சண்டே தோ’ பாடலின் காணொளி.ஆனாலும் எத்தனை முறைக் கேட்டாலும் எந்த மொழியில் கேட்டாலும் சலிக்காத மெட்டு.ராஜா ராஜாதான்.

Saturday, December 5, 2009

கல்லூரி நினைவுகள்

ஒவ்வொருவருக்கும் அவரவர் கல்லூரி கால நட்புகள்,கலாட்டாக்கள் போல மற்றவர்களுக்கும் கிடைத்திருக்குமா என்ற நினைப்பு இருக்கும்,எனக்கும் அப்படித்தான். ஆசிர்வதிக்கப்பட்ட நாட்கள் அவை.கொண்டாட்டங்கள், கலாட்டாக்கள், நெகிழ்ச்சியான தருணங்கள் என நினைத்தாலே இனிக்கும் எத்தனையோ நினைவுகள். துள்ளித்திரிந்த அக்காலத்தின் நினைவுகளில் ஒன்று இங்கே,

SAD(systems Analysis and Design) என்று ஒரு பாடம். பெயருக்கேற்றார்போல் மிகவும் து(தூ)க்கமான சப்ஜெக்ட். SAD லெக்சரரும் நன்றாக தாலாட்டுவார். மற்ற பாடவேளைகளில் விருப்பம் இல்லாவிட்டால் வெளியில் வந்துவிடலாம். ஆனால் இவரோ எங்களை வெளியில் விடாமல் தூங்கவைப்பதிலேயே ஆர்வமாய் இருப்பார். இவ்வளவுக்கும் அது ஃபுல் அண்ட் ஃபுல் தியரி பேப்பர், தியரி பேப்பரென்றால் பக்கங்களின் எண்ணிக்கைதான் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாக்கும் என்பது இரண்டரை வருட அனுபவத்தில் அறிந்து வைத்திருந்ததால் யாரும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.

பெரும்பாலும் மூன்று பீரியடுகளுக்கு மேல் மாஸ்கட் அடிப்பது முதலாமாண்டிலிருந்தே ஒரு சம்பிரதாயமாக கடைபிடித்து வந்ததால் ஆறு மணிவரை நடக்கும் கல்லூரியில் நான்கு மணி ட்ரெயினுக்கே சீஸன் டிக்கெட் எடுத்து வைத்திருந்தோம்.அப்படியிருக்க SAD நான்காவது பீரியடாக இருந்தது.கடைசி செமஸ்டர் என்பதால் நாங்களும் ரொம்பவும் பொறுமையாய் நான்கு பாடவேளைகள் வரை இருந்து பார்த்தோம்.ஒரு வாரத்திற்கு மேல் முடியவில்லை, மனுஷன் பாடம் நடத்தும்போது தூக்கம் தூக்கும். “சார் முடியல பிளிஸ்”னு கெஞ்சி பார்த்தோம் மனுஷன் விடுவதாய் இல்லை. லெக்சரர் வேலைக்கு புதிது என்பதால் வேலையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு கடமையுணர்ச்சியின் உச்சத்தில் நின்று எங்களை கொன்றார்.

ஒரு நாள் கிராஃபிக்ஸ் லெக்சரர் வராததால் அந்தப் பீரியடையும் சேர்த்து SAD எடுக்கப்போகிறேன் என்றபடியே வகுப்பினுள் நுழைந்தார். “கண்ணுகளா இவரை இப்படியே விட்டோம்னா சரிவராது பொறுத்தது போதுமடா பொங்கி எழுங்க”என மனோகரா கண்ணாம்பாளாய் ஒருவன் மிமிக்ரி செய்ய, லெக்சரருக்கோ கோபம் தாறுமாறாய் எகிறிவிட்டது.மரியாதை செய்ய எழுந்து நின்ற எங்களை அப்படியே நிற்க வைத்து அவர் மனோகராவாய் மாறி ஒரு பத்து நிமிடம் கேப்பே விடாமல் பொங்கிவிட்டார்.பிறகு நிதானத்திற்கு வந்து ”இனி இப்படி நடந்துக்காதீங்க” என்று சொல்லிவிட்டு எல்லோரையும் உட்காரச் சொன்னார்.

எல்லோரும் அமர்ந்ததும் அவர் ஏதோ எழுத பிளாக் போர்ட் பக்கமாக திரும்பிய நொடியில் ”மியாவ்” என ஒருவன் கத்த,சட்டென்று திரும்பி ”யாருய்யா அது?”என்றார்.ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளைப் போல கைகளைக் கட்டியபடியே டெஸ்கின் கீழிருந்து ஒருவன் எழுந்து ”நான்தான் ஸார்” என்றான் பவ்யமாய்.

”இனிமேல் பூனை மாதிரி கத்துன நேரா பிரின்ஸிபால் ரூமுக்கு போகவேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டு ”உட்காருய்யா” என்றார் ஏக கடுப்பாக.

மீண்டும் எழுதுவதற்காகத் திரும்ப ”லொல் லொல்” என நாய் குரைப்பதைப் போன்று யாரோ குரைக்க செம்ம கடுப்பாகி, ”எவண்டா அது” என்றார். மீண்டும் அதே மாணவன் டெஸ்கின் கீழிருந்து கைகட்டி வாய்பொத்தி எழுந்து நின்றான்.

”என்ன நக்கலா?இப்போதானே சொன்னேன் பிரின்ஸ்பால் ரூமுக்கு நடையைகட்டு” என்றார்.

“நீங்க பூனை மாதிரி கத்துனாதானே பிரின்ஸ்பாலை பார்க்கனும்னு சொன்னீங்க, நான் நாய் மாதிரிதானே கொலச்சேன் இதெல்லாம் ரொம்ப அநியாயம் ஸார்” என்றான்.

“முதல்ல கிளாஸ் ரூமைவிட்டு வெளில போய்யா”என்றார்.

“இதுக்குத்தானே இவ்வளோ போராட்டமும்“ என்று முனுமுனுத்துவிட்டு ”ரொம்ப தேங்ஸ் ஸார்” என்றப‌டியே த‌ப்பிச்சா போதும்ங்கிற‌ மாதிரி ஓடினான்.

“இதெல்லாம் எங்கே உருப்படப் போகுது” என்றபடியே மீண்டும் திரும்பினார். முதல் பெஞ்சில் இருந்து கடைசி பெஞ்ச்வரை சொல்லிவைத்தார் போல் அத்தனை பேரும் “லொல் லொல்”என்று குரைக்க கையில் வைத்திருந்த நோட்ஸை கீழே வீசிவிட்டு “ஜென்மத்துக்கும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது,H.O.D யோட வரேன்” என்றபடியே கிளாஸைவிட்டு வேகமாக வெளியேறினார். அவர் வெளியேறுவதற்கு முன்பாக “மணி நாலாச்சுடா ட்ரெயின் வந்திடும் ஓடுங்க” என்றபடியே எல்லோரும் வெளியில் ஓடினோம். ”ஏய் ஏய்”என்று தெலுங்கு ப‌ட‌ வில்ல‌ன் ரேஞ்சில் கத்திக்கொண்டே இருந்தார். யாருமே அவரைக் கண்டுக்கவில்லை.

ம‌றுநாள் பிரின்ஸ்பால்,க‌ண்ட்ரோல‌ர்,H.O.D என‌ ஒரு ஐவ‌ர் குழு மிர‌ட்ட‌லாய் ஆர‌ம்பித்து பிற‌கு அன்பாய் அறிவுரை வழங்கி "இனி இது போன்று செய்ய‌ மாட்டோம்" என்று ம‌ன்னிப்புக்க‌டித‌ம் எழுதி கொடுக்கும்ப‌டிக் கூறி, "இவ‌ரின் வ‌குப்பில் இனி எதாவ‌து பிர‌ச்ச‌னை செய்தீர்க‌ளென்றால் பெற்றோர்க‌ளை அழைத்துவ‌ர‌ வேண்டியிருக்கும்"என்று முடித்த‌ன‌ர்.

ம‌ன்னிப்புக்க‌டித‌ம் முத‌லாமாண்டிலிருந்தே எழுதிக்கொண்டிருந்ததால் எப்போதுமே கைவ‌ச‌ம் நான்கைந்து வைத்திருப்போம்.அத‌னால் சொன்ன‌ சிறிது நேர‌த்தில் எல்லோரும் ம‌ன்னிப்புக்க‌டித‌ம் கொடுத்த‌தும் பிரின்ஸி குரூப் கிள‌ம்பிய‌து.

ப‌த்து நிமிட‌ம் க‌ழித்து SAD லெக்ச‌ர‌ர் மிக‌வும் வெற்றிப் புன்ன‌கையோடு வ‌ந்தார். எல்லோரும் அமைதியாக‌ இருந்த‌தைப் பார்த்து 'வ‌ச்சோம்ல‌ ஆப்பு என்ற‌ ரீதியில்' மிக‌ ச‌ந்தோஷ‌மாய் பாட‌ம் ந‌ட‌த்த‌ ஆர‌ம்பித்தார். வ‌குப்பில் ஐந்து செம‌ஸ்ட‌ர்வ‌ரை இல்லாத‌ அள‌விற்கு பெரும் அமைதி. பாட‌ம் ந‌ட‌த்திவிட்டு வ‌ருகைப்ப‌திவை எடுத்து வ‌ழ‌க்க‌ம்போல் ஒவ்வொருத்த‌ரின் எண்ணைச் சொல்லி அழைத்தார். அப்போதும் அமைதியாக‌ எல்லோரும் உட்கார்ந்து அவ‌ரையே விடாம‌ல் பார்த்துக் கொண்டிருந்த‌தை க‌ண்ட‌தும்தான் "ஆஹா இவ‌னுங்க‌ அட‌ங்க‌ல‌,அட‌க்க‌வும் முடியாது போலிருக்கு" என்ப‌தை அறிந்து இறுதியில் அவ‌ரும் த‌ண்ணீர் தெளித்து எங்க‌ளை எங்க‌ள் வ‌ழியிலேயே விட்டுவிட்டார்.

இப்போது அவரின் நிலமையில் இருந்து யோசித்துப் பார்த்தால் ”சே” என்று இருக்கிறது,இருப்பினும் அந்த வயசுக்கு அதுக்கூட இல்லாட்டி எப்பூ..டி?

Thursday, December 3, 2009

ஆப்பிள் குழி

கிராமத்தில் உள்ள எங்களது வீட்டின் முன்பக்கம் தானியங்கள் காயவைப்பதற்காக கான்கிரீட் தளம் போடப்பட்டிருக்கும். அத்தளத்தில் வீட்டை ஒட்டிய ஓரிடத்தில் சதுர வடிவில் ஒரு சிறிய குழியிருக்கும். எங்க‌ள் வீட்டிற்கு புதிதாக வ‌ருப‌வ‌ர்க‌ள் "ஏன் அங்கேட்டும் கான்கிரீட் போடவில்லை?" என்று கேட்பார்கள் . அப்படி எல்லோரையும் கேட்க வைக்கும் குழிதான் ஆப்பிள் குழி, அக்குழியின் பின்னணியில் ஏழு ருட‌ சுவாரஸ்ய கதையொன்று இருக்கிறது.

கி.பி 2000ம் ஆண்டு ஒரு நாள் காலை தெருவில் பழக்கன்றுகளை விற்றுக்கொண்டு வந்தவரிடம் மாதுளை,ஆப்பிள் மற்றும் சப்போட்டா ஆகியவற்றில் வகைக்கொன்றாய் வாங்கி வீட்டிற்கு முன்பாக இருக்கும் தோட்டத்தில் நட்டுவைத்தேன். நாட்கள் வாரங்களானது வாரங்கள் மாதங்களானது ஆனால் அந்த மூன்று செடிகளும் வைத்தபடியே இருந்தன. ”வைத்த கன்/ண் வைத்ததுதானோடி அப்படியே நிற்கின்றாய்” என்ற பாடல் மட்டும் 2000ம் வருடத்தில் வந்திருந்தால் அம்மூன்று செடிகளுக்கும் பொருத்தமாய் இருந்திருக்கும்.

மாதங்கள் வருடங்களாவதற்குள் பெய்த ஒரு பெருமழைக்காலத்தில் ஆப்பிள் கன்று மட்டும் சிறிது இரக்கம் கொண்டு வளரத்தொடங்கியது. மற்ற இரண்டு செடிகளுக்கும் இயற்கை,செயற்கையென ஊட்டச்சத்துகள் கொடுத்தும் “யாருகிட்ட” என்பதாய் நட்டபோது இருந்த நான்கு இலைகளோடு அப்படியே இருந்தன.

ஆப்பிள் செடி வேகமெடுத்து வளரத்தொடங்கியபோதுதான் கான்கிரீட் தளம் போடுவதற்கான வேலை ஆரம்பமானது. சரியாக ஆப்பிள் செடி மட்டும் தளத்தின் எல்லைக்குள் சிக்கிக்கொண்டது. எனது குடும்பத்தார், நண்பர்கள், கொத்தனார் என பலரும் என்னிடம் அந்தச் செடியை வேரோடு பெயர்த்து வேறி்டத்தில் நட்டுவிடலாம் என்றுச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டதால் வேறு வழியின்றி ஆப்பிள் செடியை அப்படியே வைத்து சுற்றிலும் தளம் போட்டுவிட்டார்கள்.

2000-2004 ஆண்டுவரை 4ஆம் வகுப்புத் தொடங்கி 12ஆம் வகுப்புவரையான மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அக் காலக்கட்டத்தில் எங்கள் வீடு ஒரு குருகுலம் போல இருந்தது. மாலை நேரத்தில் மட்டுமே பாடம் எடுப்பேன் என்றாலும் விடுமுறை நாட்களில் காலை ஆறு மணியிலிருந்தே எங்கள் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். (அந்த நாட்களைப் பற்றி தனியே ஒரு பதிவிடலாம் அத்தனை சுவாரஸ்யங்கள் அடங்கியவை). மாணவர்களும் என்னுடன் சேர்ந்து ஆப்பிள் செடி வளர்ப்பில் ஆர்வமாய் இருந்தனர். நான் ஊரில் இல்லாவிட்டாலும் யாராவது ஒருவர் தவறாமல் அதற்கு தண்ணீர் ஊற்றி பாராமரித்து வந்தனர்.

வழக்கமாய் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து திரும்பிய மாணவனொருவன் மைதானத்தில் இருந்த என்னிடம் ஆப்பிள் செடியை ஆடுகள் சேதப்படுத்திவிட்டதாக சொன்னதையடுத்து வேகமாக வீடு திரும்பினால் அத்தனை மாணாக்கர்களும் யூனிஃபார்மோடு சோகத்தோடு வாசலிலேயே உட்கார்ந்திருந்தனர். என்னைப் பார்த்ததும் ”அண்ணே எல்லாம் போச்சு” என்றபடியே அழவே தொடங்கிவிட்டாள் பத்தாம் வகுப்பு மாணவியொருத்தி.பெரும்பான்மையான நாட்களில் அந்த மாணவிதான் ஆப்பிள் செடியை சிரத்தையோடு கவனித்து வந்தவள்.

செடியில் இருந்த கிளைகள்,இலைகள் ஏதுமின்றி வெறும் குச்சி மட்டுமே மிச்சம் இருந்ததைப் பார்த்து வெகுண்டெழுந்த நான் எனது மாணவப் படைகளோடு ஆடுகளுக்குச் சொந்தக்காரர் வீட்டிற்குச் சென்றேன். “ஆடுகளை சும்மா பொத்தாம் பொதுவில் அவுத்து விடுகிற வேலையெல்லாம் இத்தோடு நிறுத்திக்கோங்க” என்று நான் ஆரம்பித்ததுதான் தாமதம் என் மாணவக் கண்மணிகள் ”இனிமேல் ஆடுகள் எங்க வீட்டு பக்கம் வந்தால் பிரியாணிதான்” என்கிற ரேஞ்சில் ஆளாளுக்கு பொங்கி எழுந்துவிட்டனர்.

பிறகு இலைகள் ஏதுமற்ற அந்த ஆப்பிள் செடியைச் சுற்றி வேலியடைத்து வைத்ததில் மீண்டும் வளரத்தொடங்கியது.முன்னை விட நிறைய கிளைகள் பரப்பி தளதளவென்று வேகமெடுத்து வளர்ந்ததைப் பார்த்த குறும்புக்கார மாணவனொருவன் இன்னும் அடமாய் நான்கு இலைகளோடு இருந்த மாதுளையையும்,சப்போட்டாவையும் பார்த்து ”ஒரு தடவ இந்தச் செடிகளையும் ஆடுகளை விட்டு மேயவிடணும்” என்றான்.

ஆப்பிள் செடி மீண்டும் வேகமாய் வளர்ந்து கிட்டத்தட்ட ஒரு மினி சைஸ் மரம் போன்று இருந்தபோது எனது அண்ணனின் திருமணத்தை முன்னிட்டு பந்தல் போடுவதற்காக கான்கிரீட் தளத்தின் உயரத்திற்கு நிகராக மற்ற இடங்களிலும் மண் பரப்பியபோது ‘என் கடன் வளராமல் இருப்பதே’ என அதே நான்கு இலைகளோடு இருந்த மாதுளையையும், சப்போட்டாவையும் பார்த்த வேலையாட்கள் அவற்றின் பின்னணி தெரியாமல், ”நல்ல கன்னுகளா இருக்கே தம்பி வேறிடத்தில் பிடுங்கி நட்டு வைக்கலாமே” என்றனர் . பதறிப்போய் “வேண்டாம் வேண்டாம் அப்படியே வைத்து மூடிவிடுங்க” என்றேன்.

பந்தல் போடுவதற்கு ஆப்பிள் செடி இடைஞ்சலாய் இருந்ததால் எனது பங்காளி ஒருவர் யாரிடமும் கேட்காமல் அரிவாளால் ஆப்பிள் செடியை வெட்ட முற்பட்டதைப் பார்த்த எனது மாணவன் ஒருவன் பதறியோடி தடுக்கையில் ”எதுக்குடா வீட்டுக்கு எதுக்க நாவ மரத்தை வளக்குறான் உங்கண்ணன்” என்றதும், ”இது நாவ மரமில்ல ஆப்பிள் செடி” என்றிருக்கிறான். “ஆப்பிள் செடியா?நம்ம ஊர் கிளைமேட்டுக்கு ஆப்பிள் செடியெல்லாம் வளராதுடா,இது நாவ மரம் மாதிரிதான் இருக்கு” என்றபடியே இலையைக் கிள்ளி முகர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில் வீட்டிற்கு திரும்பிய என்னிடம் அவர் ”டேய் இது நாவ மரம்தான் வெட்டி தூர வீசுங்கடா” என்றார். இதைக் கேட்ட நான், எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் நாவ மரத்தின் இலையையும், ஆப்பிள் செடியின் இலையையும் அவரிடத்தில் கொடுத்து கசக்கி முகர்ந்து பார்க்கச் சொன்னேன்.அவரும் முகர்ந்துவிட்டு ”ஆமாடா இது வேற வாசம்தான் அடிக்குது” என்றார். அதைத் தொடர்ந்து எனது பிளஸ் டூ ஹர்பேரியம் நினைவுக்குவர அவரிடத்தில் மால்வேஸி, அஸ்ட்ரேஸி என ஆரம்பித்து தாவரக் குடும்பங்களைப் பற்றி விளக்கி ” நாவமரமும், ஆப்பிள் செடியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் அதனால் தான் பார்வைக்கு ஒரே மாதிரியாக தெரிகிறது” என்றேன். மேலும் நாவ இலையை ஆடுகள் திங்காது என்றுவிட்டு இந்தச் செடியை ஆடுகள் மேய்ந்த கதையையும் அவரிடத்தில் சொன்னதும்தான் அவர் நம்பினார்.

எனது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக எனது மாணவர்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வீக்கோ பௌடர் விளம்பரத்தில் வரும் ஆப்பிள் செடி தொடங்கி செய்திதாள்களில் வெளியான ஆப்பிள் செடிகளின் படங்களையெல்லாம் காட்டி சந்தேகப்படும் எல்லோருக்கும் விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

பிறகு நிறைய பேர் அதே சந்தேகத்தை எழுப்ப ஒரு கட்டத்தில் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் நாவ மரத்தின் இலையையும், சந்தேகத்துக்குரிய இலையையும் பக்கத்து வீட்டு ஆடுகளிடம் கொடுத்துப் பார்க்கையில் நாவ இலையை முகர்ந்துக் கூட பார்க்காத ஆடுகள் ஆப்பிள் செடியின் இலைகளை வேகவேகமாக ஸ்வாகா செய்ததும்தான் எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

இப்படி பல கட்ட சோதனைகளைத் தாண்டி செழித்து வளர்ந்து கொண்டிருந்த ஆப்பிள் செடியை எனது மாணவர்களை நம்பி ஒப்படைத்துவிட்டு நான் வேலைத்தேடி சென்னைக்கு பயணமானேன். வருடங்கள் உருண்டோட ஒரு நாள் எனது மாணவியொருத்தி எனக்கு போன் செய்து “அண்ணே ஆப்பிள் செடி காய்ச்சிருக்கு” என்றாள்.”வாவ்” என்ற அலறிய நான் ”எத்தனை காய்கள்” என்றேன். “தனித்தனியா காய்க்கலண்ணே கொத்து கொத்தா காய்ச்சிருக்கு” என்றதும் எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது.”ஆமாமா ஆப்பிள் கொத்து கொத்தாத்தான் காய்க்கும், இந்த வாரம் சனி ஞாயிறு இதுக்காகவே நான் ஊருக்கு வரேன்” என்றதும், ”இதுக்காக வர வேண்டாம்ணே ஏன்னா எல்லாமே நாவக்காய்ணே” என்றாள். சிறிது நேர அமைதிக்குப் பிறகு “ஊருக்குள்ள யாரும் பார்ப்பதற்குள் பசங்ககிட்டச் சொல்லி அந்த சனியன வெட்டி தூர வீசச்சொல்லு” என்றபடியே போன்காலை அவசரமாகக் கட் செய்தேன்.

மரத்தை வெட்டியெறிந்துவிட்டாலும் அந்தக் குழி நாவினால் சுட்ட வடுவாய் ஆப்பிள் கதையை ஞாபகப்படுத்தியபடியே இருக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு முருங்கை விதை ஊன்றிக் கொண்டிருந்தபோது எங்க ஊரு பெருசு ஒன்று ”பார்த்துடா பூசணிக்காய் எதுவும் காய்ச்சுட போவுது” என்றார். முன்னெல்லாம் இப்படி நக்கலடிக்கும்போது கோபமாய் வரும் இப்போதெல்லாம் சிரிக்க ஆரம்பித்திருக்கிறேன்.பின்னே பழகிடுச்சுல்ல.

கொசுறு:எலுமிச்சை என்று வளர்த்தச் செடியொன்று இப்போது காய்த்துக் கொண்டிருக்கிறது ஆரஞ்சுகளாய். ஆரஞ்சுகளை இங்கே கிளிக்கி பார்க்கலாம்.

Saturday, November 28, 2009

எங்க‌ ஊர் 20 - 20

90களின் முதல் பகுதி,அப்போதுதான் எங்கள் ஊரிலிருந்து ஓரிருவர் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்.அதற்கு முன்பு பத்தாவது தாண்டுவதே தம்பிரான் செயல்.ஓரிரு வருடங்களில் கல்லூரி செல்வோரின் எண்ணிக்கை கூடியது.அது B.E ஆக இருந்தாலும் B.A ஆக இருந்தாலும் எங்க கணக்குப்படி காலேஜ் படிப்பு பெரிய படிப்பு. வெளியூருக்கு ரொம்பதூரம் சென்று (25 கிலோமீட்டர் தூரமே உள்ள தஞ்சாவூரில்தான்) படிக்கச் சென்ற காலேஜ்கார அண்ணன்மாருங்கதான் எங்க ஊருக்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினவங்க.

ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாத சிறுவர் கூட்டம் தொடர்ந்து கிட்டி புல்லு,பம்பரம் என்றே விளையாடிக் கொண்டிருந்தோம்.ஆள் பற்றாக் குறையின் காரணமாக அண்ணன்மாருங்க எங்களையும் தங்கள் டீமில் ஐக்கியமாக்கிக் கொண்டார்கள்.எங்களுக்கு ஒன்லி ஃபீல்டிங் மட்டும்தான். ரொம்ப காலமாக பேட்டிங் எங்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருந்தது, பட்டுன்னு சொன்னா எங்களை பந்து பொறுக்கி போட மட்டும் வச்சிருந்தாங்க.

கிரவுண்ட் பக்கமா எதாவது ஃபிகருங்க கிராஸ் பண்ணா(இப்போதான் ஃபிகரு அப்போ அக்காங்க) என்னைய மாதிரி ஒரு சின்ன பையன்கிட்ட பௌலிங் போடச் சொல்லி சிக்ஸ் அடித்து ஹிரோயிசம் காட்டுவார்கள். இதிலென்ன வேடிக்கையின்னா பலதடவை இப்படி சீன் போடும்போது கிளீன் போல்டாகிவிட்டு "பால்போட சொன்னா என்னடா மாங்கா அடிக்கிறியா, இப்படியெல்லாம் போடக்கூடாது இது 'நோ'பால்" என்று அவர்கள் சிக்ஸ் அடிக்கும்வரை எங்கள் பௌலிங்கை தொடரச் செய்வார்கள். சில சமயம் நாங்க பௌலிங் போடும்போது ஒய்டு ஆகிவிட்டால் இரண்டு ரன்கள் சேர்த்துக் கொள்வார்கள்,ஏன்னு கேட்டால் இது பெரிய ஒய்டுடா அதனாலதான்னு சொல்லுவாங்க. நாங்களும் அது நெஜம்னு நம்பி இனி ஒய்டு போட்டாலும் சின்ன ஒய்டா போடுங்கடான்னு சொல்லிகிட்டு விளையாடியிருக்கோம்.

இப்படியாக பந்து பொறுக்கி போடப்போயி கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட் எங்களை சில மாதங்களிலேயே முழுவதும் ஆக்ரமித்தது.அப்புறம் சின்ன பசங்க எல்லோரும் சேர்ந்து தனி டீம் ஃபார்ம் பண்ணி தென்னை மட்டையில் பேட்டும்,தேங்காய் நாரை சுருட்டி பேப்பரில் வைத்து டைட்டாக கட்டி பந்தும் செய்து (இதில் முத்துகுமாருதான் எக்ஸ்பர்ட், மத்தவய்ங்க செய்யும் பந்து ஒரு ஓவர்கூட தாங்காது,ஆனால் அவன் ஒரிஜினல் பந்து ஷேப்பில் அசத்தலாக செய்துவிடுவான்)வயல்வெளிகளில் தனியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய டீமில் பேட்டிங் புடிக்கிற அளவிற்கு முன்னேறினோம்(எப்போதாவது கடைசி ஓவர் முடிய ஒன்னு ரெண்டு பந்து இருக்கும்போது கொடுப்பாங்க).

எங்க ஊரைத் தொடர்ந்து ஆதனக்கோட்டை, கருக்காடிப்பட்டி, வெட்டிக்காடு, சில்லத்தூர் என அருகில் உள்ள எல்லா கிராமத்திலும் கிரிக்கெட் டீம் உருவாகி ஒவ்வொரு சனி ஞாயிறுகளிலும் கருக்காடிப்பட்டி பள்ளி மைதானத்தில் ஃபிரண்ட்லி மேட்ச் விளையாட ஆரம்பித்து அப்படியே ஒவ்வொரு ஊரிலும் டோர்ணமெண்ட் வைக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து கில்லி,பம்பரம்,கோலி குண்டு போன்ற விளையாட்டுகளுக்கு ஆப்பு வைத்தது கிரிக்கெட்.

டோர்ணமெண்டுகள் பெரும்பாலும் கோடைவிடுமுறையில்தான் நடக்கும், இப்படி பக்கத்து ஊரில் நடக்கும் டோர்ணமெண்ட்டுக்கு செல்ல எல்லோர் வீட்டிலும் பெர்மிஷன் கிடைக்காது பிளேயர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் தேங்காய் பறிப்பு, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்,வாழைக்கு கீங்கட்டை வெட்டுதல்,ஆடு மாடு மேய்த்தல் என ஏதாவது ஒரு வேலை இருக்கும்.இந்த மாதிரி வேலை இருக்கும் நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு டேக்கா கொடுத்துவிட்டு விளையாட கிளம்புவது ஒரு சிறுகதைக்குண்டான அத்தனை சுவராஸ்யம் அடங்கியது. உள்ளூர் போட்டியின்போது லுங்கி கட்டி விளையாடிடுவோம், ஆனால் டோர்ணமெண்ட் செல்லும்போது கண்டிப்பாக பேண்ட்,டீசேர்ட் அணிந்துதான் விளையாட வேண்டும்(நோட்டீஸ்லயே பெரிதாக அச்சடித்துவிடுவார்கள் கண்டிப்பாக லுங்கி அணிந்து விளையாடக் கூடாதென்று).ஒவ்வொருத்தரும் வீட்டிலிருந்து பேண்ட்டை லுங்கிக்குள் ஒளித்து வைத்து மெல்ல வீட்டிலிருந்து வெளியேறி,ஊரிலிருந்து ஒவ்வொருவராக தனித் தனியாக கிளம்பி ஊரின் வெளிப்புறத்தில்தான் ஒன்றுசேர்ந்து செல்வோம்.பிறகு அப்பா பாக்கெட்டிலும், அம்மாவின் அரிசிப்பானை சேகரிப்பிலும் சுட்ட காசுகளை ஒன்று சேர்த்து எண்ட்ரென்ஸ் ஃபீஸ் ரெடியாகிவிடும்.சில வீட்டில் பாட்டியின் சுருக்கு பைகளிலும் கைவைக்கப்படும்.

சின்ன பசங்களாகிய எங்களை, டீமில் இருந்தாலும் இல்லாவிடிலும் பௌண்டரி, சிக்ஸர்,விக்கெட் எடுக்கும் நேரங்களில் கைதட்டுவதற்காக கூடவே அழைத்து செல்வார்கள். சில அண்ணன்மார்கள் வீட்டு வேலைகளில் மாட்டிக்கொண்டு வரமுடியாத சந்தர்ப்பங்களில் சின்ன பசங்களுக்கு அடிக்கும் பெரிய டீமில் விளையாடும் யோகம். பெரும்பாலும் எங்க டீம்தான் முதல் பரிசை தட்டி வருவார்கள்.முதல் பரிசாக சுழற்கோப்பையுடன் வாங்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களை வைத்தே டீமிற்கு தேவையான பேட், கிளவுஸ், ஸ்டம்ப் போன்ற பொருட்களை வாங்கிவிடுவோம்.சரக்கு பார்ட்டியெல்லாம் இப்போதான், அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் பெரும்பாலான பசங்க குடிக்க மாட்டாங்க தவிரவும் ஒயின்ஸ் வசதி அப்போது எங்க ஏரியாவில் இல்லை.

நமக்கு அப்புறமா கிரிக்கெட் டீம் ஃபார்ம் பண்ணவங்கெல்லாம் டோர்ணமெண்ட் வைத்துக் கொண்டிருக்க, நாம் வைக்காமல் இருந்தால் மத்த டீமிடம் மரியாதை இருக்காது என்றெண்ணி எங்க ஊரிலும் டோர்ணமெண்ட் வைப்பதற்காக இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒன்றுகூடி எப்படி செய்யலாம் என விவாதித்தபோது எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது மைதானம், டோர்ணமென்ட் வைக்கும் அளவிற்கு பெரிய மைதானம் எங்க ஊரில் இல்லை,எங்கே வைக்கலாம் என்று பல இடங்களை தேர்வு செய்து இறுதியில் ஏரியின் உள்ளே(கோடையில்தாங்க) வைக்கலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளிலும் துரிதமாக செயல்பட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் டோர்ணமெண்டுக்கான நாளும் குறிக்கப்பட்டது.

பஞ்சாயத்துத் தலைவர்,வாத்தியார் மற்றும் பெரும் மிராசுதார் முறையே முதல் மூன்று பரிசுகளுக்கும் ஸ்பான்சர் எளிதாக கிடைத்த போதும் நோட்டீஸ் அடிப்பதற்கு யாரை கேட்பது என புரியாமல் நின்றபோது வெளிநாடு சென்று வந்த அண்ணாச்சி ஆபத்பாந்தவனாக வந்து உதவினார், நோட்டீஸில் அவர் பெயரை கொட்டை எழுத்தில் போடவேண்டுமென்ற கண்டிஷனோடு.ஒலி ஒளி அமைப்பு ஏவிஎம் மணிமாறன் அண்ணன்கிட்ட கடன் சொல்லி ரெண்டு ஸ்பீக்கர்,ரெண்டு மைக்,ஐந்து ட்யூப் லைட் வாங்கி கட்டியாகிவிட்டது. இது ஆஃபிஸ் ரூம் யூசுக்கு,நான்கு மூங்கில் கால் ஊன்றி,பத்து கீற்று போட்டு சுற்றிலும் படுதாவால்(தார்ப்பாய்) சூழப்பட்டதுதான் ஆஃபிஸ் ரூம்.

டோர்ணமெண்ட் அன்று பௌண்டரி லைனில் குச்சி ஊன்றுவது,பிட்ச்சில் சுண்ணாம்பு கோடு போடுவது,வெளியூர் டீமிற்கு தண்ணீர் சப்ளை ஆகிய பொறுப்புகள் சின்ன டீமிற்கு வழங்கப்பட்டது.ரொம்ப சந்தோஷமா எல்லா வேலைகளையும் செய்தோம் காரணம் உள்ளூர் டோர்ணமெண்ட் என்பதால் சின்ன டீமையும் தனியா விளையாட அனுமதி கொடுத்ததுதான்.(அனுமதி கொடுக்காமல் இருந்திருந்தால் சீறும் சிங்கங்கள் 11 என்ற பெயரில் புது டீமை உருவாக்குவதாகத் திட்டம் இருந்தது).

வெளியூர் டீம் ஒவ்வொன்றாக வந்து டோர்ணமெண்ட் களைகட்டத் தொடங்கியது.நேர்முக வர்ணனை சுடர் அண்ணாச்சிதான் வர்ணனையில் பின்னி பெடலெடுப்பார். "சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருக்கை சரவணன், பூஜ்ஜியத்திலேயே தனது ராஜ்ஜியத்தை முடித்துக்கொண்டு பெவிலியன் திரும்புகிறார்" என்ற ரேஞ்சில் பட்டையை கிளப்புவார். இப்படியாக ஆரம்பித்த உள்ளூர் டோர்ணமெண்ட் வருடா வருடம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் சீனியர் பிளேயர்ஸ் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருவராக சென்றுவிட சின்ன பசங்களாக இருந்த நாங்க மெயின் பிளேயர்ஸ் ஆனபோது எங்களுக்கு பந்து பொறுக்கிபோட வேண்டிய எங்களது ஜூனியர்ஸை அப்போது எங்க ஊருக்குள் நுழைந்த கேபிள் டீ.வியின் வருகை எப்படி அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கியது என்பதனை நாளைய பதிவில் பார்ப்போம்.

(இது ஒரு மீள் இடுகை).

இந்த பதிவின் முதல் பகுதி : சின்ன பசங்க நாங்க .

Tuesday, November 24, 2009

பொன்னேர் பூட்டுதல்


வருடம்தோறும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் கொண்டாடப்படும் அல்லது பின்பற்றப்படும் ஒரு சிறிய நிகழ்ச்சி பொன்னேர் பூட்டுதல்.எங்கள் பகுதியில் நல்லேர் கட்டுதல் என்பார்கள்.

பெரும்பாலான கிராமங்களில் சித்திரையின் முதல்நாளே நல்லேர் கட்டுவார்கள்.எங்கள் ஊரில் சித்திரையின் முதல் வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கட்டுவார்கள்.எனது ஆரம்பப்பள்ளி நாட்களில் பாடப்புத்தகங்களில் கிராமங்கள் சார்ந்த விழாக்களைப் பற்றிய பாடங்களில் சூரிய உதயத்தில் உழவன் ஒருவன் கலப்பையை தோளில் தாங்கியபடி எருதுகளை ஓட்டிச் செல்வது போலவும்,உழத்தி ஒருத்தி அவன் பின்னால் கஞ்சிப்பானை சுமந்து செல்வது போலவும் ஒரு டெம்ப்ளேட் படம் அச்சிட்டிருப்பார்கள். இந்தக் காட்சி அப்படியே நல்லேர் கட்டுமன்று எங்கள் ஊரில் காணக்கிடைக்கும் .

அதிகாலையிலேயே வீடுகளை கழுவி,மாடுகளை குளிப்பாட்டி அதனோடு கண்டிப்பாக மனிதர்களும் குளித்து கலப்பையை தோளில் சுமந்து எருதுகளை ஓட்டியபடி வயல்களை நோக்கி ஆண்கள் நடக்க அவர்களின் பின்னால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் பூஜை பொருட்கள், நவதானியங்கள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துச் செல்வர்.கூடவே ஒரு கூடையில் மாட்டு எரு,பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பாட்டிமார்களின் தலையில் இந்த எரு அள்ளிக்கொண்டு வருவதை கட்டிவிடுவார்கள்.

வயலில் மண்ணால் சிறு மேடை அமைத்து அதன் மேல் சாணம் அல்லது மஞ்சள் தூள் குழைத்து பிள்ளையார் செய்து, கொண்டுவ‌ந்திருக்கும் பொருட்களை அதன் முன் பரப்பி வைத்துவிட்டு, பஞ்சாங்கத்தின்படி அன்று எந்த திசை நல்ல திசையாக சொல்லப்பட்டிருக்கிறதோ அத்திசையை நோக்கி எருதுகளை நிற்க வைத்து ஏர் பூட்டி உழுவார்கள். குழந்தைகள் உட்பட குடும்ப‌ உறுபின‌ர்க‌ள் ஒவ்வொருவரும் அன்று ஏர் ஓட்டுவார்கள் அதாவது மெயின் டிரைவர் ஒருவர் இருப்பார் மற்றவர்கள் சம்பிரதாயத்திற்காக கொஞ்ச கொஞ்ச நேரம் கலப்பையின் கைப்பிடியைத் தொட்டுக்கொண்டு நடப்பார்கள். இது சம்பிரதாய உழவு என்பதால் வயலின் ஒரு சிறுபகுதியை மட்டும் உழவு செய்துவிட்டு எருதுகளை அவிழ்த்துவிடுவார்கள். பிறகு உழவு செய்த இடத்தில் எருவை கொட்டி அதன் மீது நவதானியங்களை விதைத்துவிட்டு அந்த வருடம் விளைச்சல் சிறப்பாய் இருக்க இறைவ‌னை வேண்டி பூஜைகள் செய்து எருதுகள், கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, கொண்டுவந்திருக்கும் நீராகாரத்தை எல்லோரும் பருகிவிட்டு பிரசாதமாக இனிப்புக் கலந்த பச்சரிசியை சுவைத்தபடியே வீட்டிற்குத் திரும்புவர். சுற்றிலும் இருக்கும் வ‌ய‌ல்வெளி எங்கும் அந்த‌ அதிகாலை நேர‌த்தில் கிராம‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் அவ‌ர‌வ‌ர் வ‌யல்க‌ளில் பொன்னேர் பூட்டும் காட்சி திருவிழாக்கோல‌மாக‌ அவ்வ‌ள‌வு ர‌ம்மிய‌மாக‌ இருக்கும்.

வீட்டு வாசலில் வேப்பங்குழை மற்றும் மாவிலைகளோடு ஒரு குடத்தில் நீர் வைத்து அதன் மேல் ஒரு சொம்பில் பசும்பால் வைத்திருப்பார்கள். வயலிலிருந்து திரும்பும் ஒவ்வொருத்தரும் அந்த நீரில் கால்களை சுத்தப்படுத்திக்கொண்டு பசும்பாலை சிறிது சுவைத்து, வேப்பங்குழைகளை வீட்டின் கூரையில் சொறுகிவிட்டு வீட்டினுள் நுழைவார்கள்.

புது வருடம் பிறந்ததும் நல்லேர் கட்டுவதற்கு முன்பாக வேறு எந்த விவசாய வேலைகளையும் செய்யக் கூடாது.அதனாலேயே சித்திரை பிறக்கும் அன்றே பெரும்பாலான கிராமங்களில் நல்லேர் கட்டிவிடுவார்கள்.சித்திரைப் பட்டம் உளுந்து,கடலை போன்ற தானியங்கள் நன்றாக விளையும்.நல்லேர் கட்டுவதற்கு முன்பாகவே மழை பெய்துவிட்டால் ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும் என்பதற்காக நல்லேர் ரூல்ஸை மீறவும் செய்வார்கள், அப்படி ரூல்ஸை மீறுபவர்கள் கண்டிப்பாக பஞ்சாயத்தில் அபராதம் செலுத்த பணிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் எல்லாமும் தெரியுமென்றாலும் எல்லாத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்து பருவத்தே பயிர் செய்துவிட்டு ஃபைனையும் கட்டுவார்கள்.

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய விவசாயத்தில் முதலில் காணாமல் போனது உழவு மாடுகள். அதனால் கலப்பைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இன்றும் நல்லேர் சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது. வீட்டிற்கு ஒருத்தரோ இருவரோ வயலுக்குச் சென்று மண்வெட்டியால் வயலில் சிறிது கொத்திவிட்டு ஜவுளிக்கடை கேரிபேக்கில் பார்சல் செய்யப்பட்ட எருவை கொட்டி நவதானியங்களை அதில் தூவிவிட்டு அவசர பிரார்த்தனை செய்துவிட்டு மினரல் வாட்டர் பாட்டிலில் கொண்டுவந்திருக்கும் நீராகாரத்தை பருகிவிட்டு,அனைத்துப் பொருட்களையும் கையடக்க நவீன பையில் எடுத்துவைத்தபடியே டூவீலரில் கிளம்பிவிடுகிறார்கள்.

ஆள்பற்றாக்குறை,எகிறிய கூலி,போதிய விளைச்சலின்மை, விளைந்த பொருட்களுக்கு நியாயமான விலையின்மை என‌ பல காரணங்களால் எங்கள் பகுதியில் சவுக்கு, யூக்களிப்டஸ் போன்றவற்றை நெல், கடலை, உளுந்து, எள், கரும்பு என நன்றாக விளையக்கூடிய நன்செய் நிலங்களிலும் தரிசாகப் போடக்கூடாதென்பதற்காக நட்டு வைத்திருக்கிறார்கள். விவசாயம் நலிவடைந்திருக்கும் இன்றையச் சூழலில் நல்லேர் பூட்டுவதை ஒரு கடமைக்கேனும் செய்து கொண்டிருப்பதே பெரிய விஷயம்தான்.

Saturday, November 21, 2009

நொறுக்குத் தீனி 21/11/09

சிங்கைக்கு வந்த புதிதில் நான் மிரண்ட விஷயம் பெரிய சைஸ் கிளாஸில் தழும்ப தழும்ப குடித்த டீ தான். ஒரு டீ வாங்கினால் நம்ம ஊரில் ஒரு ஃபேமிலியே சாப்பிடலாம் அவ்வளவு இருக்கும். இதைப் பார்த்ததும் பேராவூரணிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றதுதான் நினைவுக்கு வந்தது. எனது உறவினர் ஒருவரின் பூர்வீகம் அந்தக் கிராமம்,ஒரு முறை அங்கே என்னையும் அழைத்துச் சென்றார்.ரொம்ப நாட்களுக்குப் பிறகு சென்றதால் அங்காளி, பங்காளி வீடுகளில் உறவினருக்கு ஏகப்பட்ட மரியாதை. ஒவ்வொரு வீட்டிலும் தேனீர் கொடுத்து ஒரு வழி செய்துவிட்டார்கள். ”பரவாயில்லைங்க இப்போதான் டீ குடித்தோம்” என்றாலும் கேட்காமல் எல்லோர் வீட்டிலும் தேனீர் அதுவும் பெரிய சைஸ் லோட்டா மாதிரியான டம்ளரில். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வீட்டில் கொடுத்த டீ குடிக்கவே முடியாத அளவிற்கு வித்தியாசமாய் இருந்தது, நான் உறவினரைப் பார்க்க அவர் ”எப்படியாவது அட்ஜெஸ்ட் செய்து குடிச்சிடு” என்று கிசுகிசுத்தார்.பிறகு அங்கிருந்து கிளம்பியதும் சொன்னார் ”அது தேங்காய் பாலில் போட்ட டீடா தம்பி” என்று. பால் இல்லாவிட்டால் தேங்காய் பாலில் டீ போடுவது அந்த பகுதியின் வழக்கமாம்.(நல்ல வேளை பஸ் ஸ்டாப் வருகிற வழியில் ஒரு ஏரி இருந்தது).

******************************

சென்ற வாரம் நண்பர் ஒருவரை (ஒருவரையா?,ஒருத்தரையா?) பார்க்க மெரினா பே(Bay) சென்றிருந்தேன். அப்போது அலைபேசியில் மற்றொரு நண்பர் அழைக்க அட்டெண்ட் செய்து ரொம்ப சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கையில் திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றால் போதுமான பேலன்ஸ் இல்லையென்றது. “அட நேற்றுதானப்பா ரீசார்ஜ் பண்ணேன்” என்று குழம்பியபடி நிற்கவும், நண்பர் சொன்னார், ”போன் செட்டிங்ஸ் ஆட்டோமேட்டிக்ல இருக்கா பாருங்க,இங்கே இந்தோனேஷியா நெட்வொர்க் கவராகும் ஒரு வேளை ரோமிங்ல பேசிட்டீங்க போல” என்றார். உடனே சிக்னலை செக் பண்ணினால் axis நெட்வொர்க் இந்தோனேஷியான்னு இருக்கு. முற்றிலும் என்னுடைய கவனக்குறைவு, நெட்வொர்க் மாறியதற்கான குறுஞ்செய்தியை நான் கவனிக்கவில்லை. பிறகு ஒரு பட்டியலே கொடுத்தார்கள் எந்த ஏரியாவுக்கெல்லாம் போனால் அண்டை நாடுகளின் நெட்வொர்க் அல்வா கொடுக்குமென்று.

******************************

நண்பர் ஒருவருடன் சற்று முன்பு சாட்டிக் கொண்டிருந்த போது மீண்டும் ஐ.டிக்கே போய்விட்டீர்களா? என்றார். நானும் Donkey கெட்டா ல் little wall என்றேன். உடனே அவர் ”CHILD WHO TEMPLE SALT MOTHER NEEDLE GONE !” என்று சாட்டி இதற்கான தமிழாக்கம் கேட்டார். திங்கோ திங்குன்னு திங்கியும் தெரியாததால் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன்.நீங்களும் முயற்சி பண்ணி ட்ரான்ஸ்லேட்டுங்களேன்.(மரண மொக்கை, ஏற்கனவே தெரிஞ்சவங்க கம்முன்னு கண்டுக்காம இருங்க).

******************************

“குயில் பாட்டு ஓ வந்ததென்ன”,”பூத்தது பூந்தோப்பு”,”மல்லியே சின்ன முல்லையே”, ”இந்த மாமனோட மனசு”இப்படியான பாடல்களை எங்க ஊர் பக்கம் மினிபஸ்களில் கேட்டிருக்கிறேன்.சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் இருக்கும் எனது அறையில் அமர்ந்து இந்த இடுகை எழுதுகையில் அருகில் இருக்கும் கடைகளில் இருந்து வரிசையாக இப்படியான பாடல்களை கேட்டபடியே எழுதுகிறேன்.லிட்டில் இந்தியாவில் இருப்பது சொந்த நாட்டில் இருப்பதைக் காட்டிலும் சொந்த கிராமத்தில் இருப்பதைப் போன்று இருக்கிறது.
******************************
ஆரவாரமில்லாமல் அசத்தலான பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும் மேலும் இரண்டு பதிவர்களை இந்த நொறுக்குத் தீனியில் குறிப்பிடுவதில் பெருமையடைகிறேன்.

ரகுநாதன்:இவரின் சுழற்பந்து என்ற சிறுகதையைத்தான் முதலில் வாசித்தேன். அருமையான நடையில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.எல்லாவிதமான இடுகைகளும் எழுதுகிறார்.எழுத்து நடையால் எவ்வளவு பெரிய இடுகையானாலும் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுவார்.

சே.குமார்:கவிதை,சிறுகதை,நெடுங்கவிதைகள் எனப் பிரித்து மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். சிறுகதைகளுக்கு இவர் எடுத்துக் கொள்ளும் கதைக் களங்களும், உரையாடல்களும் மிக யதார்த்தமானதாகவும்,ரசிக்கும் படியும் இருக்கின்றன. இவரின் கவிதையொன்று,

விளைநிலம்:
விளைநிலங்களில்
அங்கொன்றும்...
இங்கொன்றுமாய்...
முளைத்தன...
வீடுகள்..!

Wednesday, November 4, 2009

பிடித்த/பிடிக்காத 10

தோழர் மாதவராஜ் ஆரம்பித்த இத்தொடர் விளையாட்டு நண்பர் ஈரோடு கதிர் மூலமாக என்னிடமும் வந்திருக்கிறது.

இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் : யாருமில்லை என்று சொல்ல நினைச்சேன் ஸ்டாலினை கொஞ்சம் பிடிக்கும்.

பிடிக்காதவர் : வை.கோ(ஒரு காலத்தில் இவரை ரொம்ப நம்பினேன்).

எழுத்தாளர்

பிடித்தவர் : எஸ்.ரா,கி.ரா

பிடிக்காதவர் : பாலகுமாரன்(கல்லூரி நாட்களில் இவரின் சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன் அப்போது புரியவில்லை,இப்போது படித்து பார்ப்போமே என்று முயற்சித்தேன் இப்போதும் முடியவில்லை,பெரிய பெரிய பத்தியாக வேறு எழுதுகிறார்,ஒரு வேளை இன்னும் மெச்சூர்ட் ஆகி படித்தால் விளங்குமோ என்னவோ)

கவிஞர்

பிடித்தவர் : மு.மேத்தா,வைரமுத்து,ந.முத்துக்குமார்

பிடிக்காதவர் : கபிலன்(நல்ல சிந்தனையாளர் ஆனால் ஓவரா குத்துப்பாட்டு எழுதவதால் இவர் மேல் ஒரு வெறுப்பு).

இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்னம்,அமீர்

பிடிக்காதவர் : தங்கர்பச்சான்(கடலூரைத் தாண்டி வெளியில் வந்தா பார்க்கலாம்), பேரரசு(உங்க டைரக்‌ஷனில் சிம்பு,எஸ்.ஜே.சூர்யா,நமிதா நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசைக்க,டீ.ஆர் வசனத்தில் ஒரு படம் கொடுங்க ஸார்), சமீபமாக சேரன்(இவர் மாயக்கண்ணாடியில மட்டுதான் முகம் பார்ப்பார் போல).

நடிகர்

பிடித்தவர் : மோகன்லால்,கார்த்தி(க்)

பிடிக்காதவர் : சேரன்,பிரசாந்த்,விஷால்

நடிகை

பிடித்தவர் : அமலா,கோவை சரளா(திறமைக்கேற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நடிகை).

பிடிக்காதவர் : த்ரிஷா(பாருங்க நேற்று வந்த தமனா மொழி தெரியாமல் நடிப்பில் பின்னுகிறார் இவரோ நடிப்பைப் பற்றி யோசிப்பதாகவே தெரியவில்லை).

இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான்

பிடிக்காதவர் : ஸ்ரீகாந்த் தேவா(இவங்க அப்பா கானா பாட்டால் காணாமல் போனது போல் இவருக்கு குத்து பாட்டு),எஸ்.ஏ.ராஜ்குமார்(இவரின் ஆரம்பகால பாடல்களை கேட்கும்போதெல்லாம் இப்படி அருமையான பாடல்களைத் தந்துவிட்டு ஏன் லாலாலா.. போட்டு ஒற்றை ட்யூனையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும்).

பட்டிமன்ற பேச்சாளர்

பிடித்தவர் : அறிவொளி,பாரதி பாஸ்கர்

பிடிக்காதவர் : லியோனி குரூப்பில் பேசுபவர்கள் அத்தனை பேரும்


செய்தி வாசிப்பாளர்

பிடித்தவர் : ஜெயஸ்ரீ சுந்தர்(தெளிவான உச்சரிப்பு).

பிடிக்காதவர் : ஃபாத்திமா பாபு(சீரியலை விட செய்தி வாசிக்கும்போது இவரின் நடிப்பு நன்றாக இருக்கும்,ஓவர் மேக்கப் போட்டு கவனத்தை சிதறடிப்பார்).


ஓவியர்

பிடித்தவர் : மணியம் செல்வன்(இவரின் ஓவியங்களில் கண்கள் குறிப்பாய் பெண்களின் கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும்),ஷ்யாம்(குவிந்த உதட்டோடு இருக்கும் சுருள் முடி பெண்கள் இவரின் ஓவியங்களில் எனக்குப் பிடிக்கும்)

பிடிக்காதவர் : அரஸ்


அழைக்க விரும்புவது

ஊர்சுற்றி

பீர்

ப்ரியமுடன் வசந்த்

டிஸ்கி:இதற்கு முன் பல தொடர் விளையாட்டுகளில் அழைக்கப்பட்டு திண்ணை என்ற ஒரே ஒரு தொடர் பதிவைத் தவிர எதையும் எழுதியதில்லை. சோம்பலன்றி வேறொன்றும் காரணமில்லை.மேலும் இந்தத் தொடர் மிகச் சிறியதாகவும் பெரிதாய் யோசிக்கத் தேவையில்லாததாகவும் தோன்றியாதால் எழுதிவிட்டேன்.