Monday, June 29, 2009

நாடோடிகள் என் பார்வையில்..........


நண்பனின் காதலுக்கு உதவும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. பெரும்பாலும் இந்த மாதிரிக் கதைகளில் காதலர்களைப் பற்றி இடைவேளை வரையிலும், அதன் பிறகு காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளை சாமாளித்து, நண்பர்கள் அவர்களைப் பத்திரமாக ட்ரெயினிலோ, பஸ்ஸிலோ அல்லது நெடுஞ்சாலைகளில் செல்லும் ஏதோ ஒரு வாகனத்திலோ பல கஷ்டங்களுக்கிடையே வழியனுப்பிவிட்டு டாட்டா காட்டுவதோடு படம் முடிவடையும். ரசிகனும் நட்புன்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வெளியே வருவான்.ஆனால் இயக்குனர் சமுத்திரகனி காதலுக்கு உதவும் நண்பர்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக்கி காதலர்களைச் சேர்த்து வைத்தபிறகு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும்,நட்பு என்றப் பெயரில் இளமை வேகத்தில் பின்விளைவுகள் எதையும் யோசிக்காத இளைஞர்களுக்கு ஒரு பாடத்தையும் இந்தப் படத்தின் மூலம் மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அறிவுரைக் காட்சிகளை நேரடியாக வைக்காமலேயே இளைஞர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

சிறந்த இயக்குனராக மற்றும் தயாரிப்பாளராக ஏற்கனவே வெற்றிப் பெற்றிருக்கும் சசிக்குமார், தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். சுப்ரமணியபுரத்திலேயே அவரின் நடிப்பு நன்றாக இருந்தது அதைவிட இந்தப் படத்தில் நிறைய ஸ்கோப் நடிப்பில் ஸ்கோர் செய்ய. ரொமான்ஸ், காதலர்களைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சிகளில் காட்டும் வேகம், குடும்பத்தாரிடம் காட்டும் பாசம், நண்பர்களோடு அடிக்கும் லூட்டி என எல்லா ஏரியாவிலும் பட்டாசாய் இருக்கும் சசி, டான்ஸ் மூவ்மென்ட்ஸ்களில் நிறையவே சிரமப்படுகிறார், எனினும் நல்ல முயற்சியே. (ஆட்டோகிராஃப் படத்தில் சேரன் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்போய் அவர் அதையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு தான் இயக்கும் எல்லாப் படங்களிலும் அவரே நடித்து எப்படி சேரன் படமென்றாலே அலறும் அளவிற்கு கொண்டுவந்து விட்டாரோ, அதுமாதிரி ஏதும் செய்துவிடாதீர்கள், உங்களின் இயக்கத்தில் நிறையப் படங்களை எதிர்ப்பார்க்கிறோம்).
சசியின் நண்பர்களாக வரும் விஜயும், பரணியும் தத்தம் கதாப் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரணியின் நடிப்பை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போக முடியாது. தான் வரும் அத்தனைக் காட்சிகளிலும் தூள் கிளப்பியிருக்கிறார். காமெடிக் கலந்த குணச்சித்திர வேடங்களுக்கு நல்லதொரு நடிகராக பரணி கிடைத்திருக்கிறார்.

கதாநாயகிகளில் சசியின் ஜோடியாக நடித்திருப்பவர் கொஞ்சம் "தூள்" ஜோதிகாவையும், கோபிகாவையும் நினைவூட்டும்படியான முகவெட்டு. குறைவான காட்சிகளில் வந்தாலும் அழகிலும், நடிப்பிலும் நம் மனதில் நிறைகிறார். சசியின் தங்கையாக நடித்திருக்கும் அந்த அழகுப் பெண் உண்மையில் காது கேட்காத வாய் பேச இயலாதவராம். ஆனால் இது ஒரு மேட்டரே இல்லை என்பதுபோல் அத்தனை அசத்தலாய் நடித்திருக்கிறார். அவரை வசனம் பேச வைத்து சிறப்பான நடிப்பையும் வாங்கியிருக்கும் இயக்குனர் சமுத்திரகனிக்கு ஒரு பெரிய சல்யூட்.

கஞ்சா கருப்புக்கு இது இன்னொரு டக்ளஸ் கேரக்டர்.அவரும் பரணியும் பேசிக் கொள்ளும் இடத்திலெல்லாம் தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது. காதலர்களின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றும் அந்த அரசியல் பெண்மணியும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் கதிரின் கேமரா.காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க நடக்கும் அந்த சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். கண்ணுக்கு குளிர்ச்சியாக புதுப்புது லொகேஷன்களை அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
பின்னணி இசையில் கலக்கியிருக்கும் சுந்தர்.சி பாபு பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார். இருப்பினும் இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை என்பது என் கருத்து.

படத்தின் இன்னொரு பெரிய பலம் வசனங்கள் குறிப்பாக ஜெயப்பிரகாஷ் சசியிடம் சொல்லும் "நட்புன்னா அதற்குள் எல்லா உறவும் அடங்கிடும்னு சொன்ன, இப்போ என்னாச்சு" என ஆரம்பித்து பேசும் வசனங்களும், காதலர்களுக்கு காவலாக இருக்கும் நபர், பப்ளிக் டாய்லெட்டைக் காட்டி "அவனுங்க காதலிக்க இந்த இடம் போதும்டா" என பேசும் வசனங்களும் ரொம்ப ஷார்ப்.

விளம்பர விரும்பி அரசியல்வாதி,எதற்கெடுத்தாலும் தற்கொலை மிரட்டல் விடுத்துக் காரியம் சாதிக்கும் கதாநாயகியின் அப்பா, இளைய மனைவிக்குப் பயந்து மூத்த மனைவியின் மகனை திட்டுவதுபோல் நடிக்கும் பரணியின் அப்பா மற்றும் விஜயின் அப்பாவாக வரும் எக்ஸ் மிலிட்டரிமேன் கேரக்டர் என ரசனையான கேரக்டர்களை செதுக்கியதில் இயக்குனரை பாராட்டலாம் என்றாலும் அந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களிடம் ஒரு செயற்கைத்தனம் படம் நெடுக தெரிந்ததையும் மறுப்பதற்கில்லை. அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது, நடிப்பையும் கேமராவையும் பற்றி அறிந்திராத அவர்களை படத்தின் நேட்டிவிட்டிக்காக பயன்படுத்த நினைக்கும்போது இயக்குனர்தான் மிகுந்த சிரத்தையோடு வேலை வாங்கியிருக்க வேண்டும். (பருத்தி வீரனில் இந்த மாதிரியான கதாப்பாத்திரங்களிடம் அமீர் வேலை வாங்கியிருந்த நேர்த்தி இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது).

இயக்குனர் சமுத்திரகனி, படத்தை ரொம்பவும் யதார்த்தமாக எடுக்க நினைத்த இன்னும் சில காட்சிகளிலும் செயற்கைத்தனம் தெரிகிறது, குறிப்பாக சசியின் நண்பன் தற்கொலைக்கு முயலும் காட்சியிலும், கதாநாயகியின் அப்பா தற்கொலைக்கு முயலும் காட்சியிலும் காப்பாற்ற ஓடிவருபர்கள் ரெடியாக நிறுத்தி வைக்கப்பட்டு ஓடிவருவது அப்பட்டமாகவேத் தெரிகிறது. விளம்பர விரும்பி அரசியல்வாதியிடம் சமையல் கான்ட்ராக்ட் கேட்கபோய் திரும்பும் சசி டீம் திரும்பிச் செல்லும்போது அவர்கள் நடையின் வேகமே திரும்பவும் அரசியல்வாதி கூப்பிடப் போகிறார் என்பதை உணர்த்திவிடுகிறது.

படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மொக்கையாகவே செல்வது, நண்பனின் காதலை அவ்வளவு ரிஸ்க் எடுத்து சேர்த்து வைக்கும் சசியின் கேரக்டர் தனது காதலை எளிதாக விட்டுக் கொடுப்பது, படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் வரும் அந்த குத்துப் பாடல் என சில குறைகளும் இருப்பினும் மேற்சொன்ன நல்ல விஷயங்களில் இவை காணாமல் போகின்றன.

'சுப்ரமணியபுரம்' சசிக்குமார் நடித்தப் படம் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் செல்லாமல் "உன்னைச் சரணடைந்தேன்","நெறஞ்ச மனசு" படங்களை இயக்கிய சமுத்திரகனியின் படம் என்று நினைத்து பார்த்தால் கண்டிப்பாக நெறஞ்ச மனசோடுத் திரும்பலாம்.
பொதுவாக நல்ல படங்கள் ரிலிஸாகும்போது, "ரொம்ப நாள் கழித்து நல்லதொரு படம் பார்த்தேன்" என்று சொல்வார்கள், ஆனால் "பசங்க" என்ற அற்புதமான படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் சினிமா நல்லதொரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதத்தில் அடுத்ததாய் வந்திருக்கிறது இந்த நாடோடிகள்.

நாடோடிகள் - நிரந்தர முகவரியோடு.

Thursday, June 25, 2009

நான்.... அவள்..... நட்பு....!

பாலின வேறுபாடுகள் கூட அறிந்திராத வயதிலிருந்தே நமக்குள் அறிமுகம். காக்காக்கடி கல்கோனாவிலிருந்து காடையன் தோட்டத்தில் திருடித் தின்ற மாங்காய்வரை உன்னுடனான எத்தனையோ நினைவுகள் என்னோடு பயணித்துக்கொண்டே இருக்கின்றது.

ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த அன்று மருதப்பன் ஆசிரியர், "ஆம்பள பசங்க தனியாகவும், பொம்பள புள்ளைங்க தனியாகவும் உட்காருங்க" என்று ஒன்றாக அமர்ந்திருந்த நம்மை பிரித்து உட்கார வைத்தபோது ஏனென்று புரியாமல் விழித்தது, ஓணாங்கொடி பஸ் விளையாட்டில் ஓட்டுனராய் இருந்த நான் எனது சட்டைப் பொத்தான்களை அவிழ்த்துவிட்டு வேகமாய் பஸ் ஓட்டியபோது காற்றில் படபடக்கும் எனது சட்டையில் ஒரு குட்டி ரஜினியாய் என்னைப் பார்த்ததும், பின்பக்கம் பொத்தான் வைத்து காலர் இல்லாத பெண்பிளைகள் சட்டையில் இருந்த நீ, ஒரு உப்பு மாங்காய் கீற்றை லஞ்சமாகக் கொடுத்து என்னுடைய சட்டையை ஓசியில் வாங்கி அணிந்து நீயும் ரஜினியானது என என்னின் பால்யத்தின் மலரும் நினைவெங்கும் ஆக்ரமித்துச் சிரிப்பவள் நீ.

ஆறாம் வகுப்பு வந்ததும் உன்னை வெளியூர் பள்ளியில் தங்கும் விடுதியில் சேர்த்தபோது, ஒவ்வொரு விடுமுறை நாட்களுக்காகவும் காத்திருந்து உன் வருகையைக் கொண்டாடும் மனது. நீ உனது புதிய பள்ளியின் கதைகளைச் சொல்லச் சொல்ல ஆசையாய்க் கேட்டுக் கொண்டிருப்பேன். "எங்க பள்ளிக்கொடத்துல காரு, பஸ்ஸு, ஏரோப்பிளேனு, எலியாப்டருலெயெல்லாம் பிள்ளைங்க படிக்க வருவாங்க" என்று நீ விட்ட புருடாக்களை ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருந்ததையெல்லாம் இப்போது அடிக்கடி நினைத்துச் சிரித்துக் கொள்வேன்.

கால ஓட்டத்தில் நான் கட்டவிழ்ந்த காளையாகவும், நீ மொட்டவிழ்ந்து மலராகவும் ஆன பின்பு எப்போதும் போல் நானிருக்க, உன்னிடமோ நிறைய மாற்றங்கள். கொஞ்சம் வெட்கம்,கொஞ்சம் தயக்கமுமாய் என்னிடமிருந்து மெல்ல விலக ஆரம்பித்த உனது நட்பு "நல்லாயிருக்கியா?" என்ற சம்பிரதாய விசாரிப்புகளாய், ஒன்றிரண்டு வார்த்தைகளாய் சுருங்கி பின் கடந்து போன ரயிலின் ஓசையாய் மெல்ல மெல்ல சிறு புள்ளியாய் தேய்ந்து மறைந்தே போனது.

என்னிடமிருந்து உன்னின் விலகலுக்கான காரணம் உன்னையும் என்னையும் நம்பிய உனது வீட்டாருக்கு அச்சுறுத்தியது நமது வயதே என்பதை நான் அறிந்து கொண்டபோது கல்லூரியில் அடி வைத்திருந்தேன்.

நீ என்னிடம்தான் பேசுவதை நிறுத்திவிட்டாலும் எனது தங்கையிடம் என்னைப் பற்றி விசாரித்துக் கொள்வதை நான் அறிந்தே இருந்தேன். கல்லூரிப் பேச்சு போட்டிக்கு நான் தயாராகும் போது இலக்கியத்தில் அப்போதே ஆர்வமாய் இருந்த உன்னிடம் குறிப்புகள் கேட்டு என் தங்கையை அனுப்பும்போதெல்லாம் அவ்வளவு ஆர்வமாய் எனக்காக பல புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எடுத்து உன் கையாலேயே எழுதிக் கொடுப்பாய்.குண்டு குண்டாய் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும் உனது கையெழுத்து.
விடுமுறை நாட்களில் ஊரில் இருக்கும்போதும் கூட சில சமயம் உன்னை நேரில் காண நேரிடும்போதும் காணாதது போலவே சென்றுவிடுவாய். எனக்குத் தெரியும், சிறு வயதில் சுற்றித் திரிந்த அதே ஊர், அதே மக்கள்தான் என்றாலும் அதே பார்வை இருக்குமா? லேசாக சிரித்துவிட்டால் கூடப் போதுமே எனது மீசையும், உனது தாவணியும் அவர்களுக்கு ஆயிரம் புனைவுகளுக்கான 'கரு'க் களஞ்சியமாகிவிடுமே. ஆனால் எந்த ஒரு சூழலிலும் சிறுவயதில் உன்னை எப்படிப் பார்த்தேனோ அதே பார்வைதான் என்னிடத்தில். உனக்கும் அப்படித்தான் என்பதையும் அறிவேன்.

நான், பட்ட மேற்படிப்பை படித்துக் கொண்டிருந்த போதே உனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது.திருமணக்கோலத்தில் உன் கணவருடன் மேடையில் நின்ற உன்னருகே நானும் எனது தங்கையும் பரிசுப் பொருட்களோடு வந்தபோது, "இவங்க பக்கத்து வீட்டு பசங்க" என்றபடியே எளிதாக முடிந்துபோனது நம் ஏரோப்பிளேன் கதைகள்.

கால ஓட்டத்தில் என் வாழ்விலும் ஒருத்தி, இதோ இன்று வேண்டியவங்க வீட்டுத் திருமணத்திற்கு ஊருக்கு வந்திருக்கிறோம் நான் என்னவளோடும், நீ உன்னவனோடும். இப்போதும் பார்த்தும் பார்க்காத மாதிரியே போய்க் கொண்டிருக்கிறாய், அன்று ஊர்க் கண்களுக்காய்த் தவிர்த்தாய்,இன்று யார் கண்களுக்காய்த் தவிர்க்கிறாய் என்பதையும் அறிவேன். சின்ன சின்ன குழந்தைகள் பந்தலில் அங்கும் இங்கும் பாலின வேறுபாடின்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், நம் பால்யத்தை நினைவூட்டியபடியே. இப்படி நிறையச் சந்தர்ப்பங்களில் உன்னை நான் நினைத்துக் கொள்வேன், ஆனால் உனக்கு அப்படி இருக்காதோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது என் தங்கையிடம் சேட்டை செய்துகொண்டிருந்த என் மகனை, யாரும் அறிமுகப் படுத்தாமலே, "இது உன் அண்ணன் மகன் தானே அப்படியே அவனை மாதிரியே இருக்கான்,அதே சேட்டை" என்று கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டபடியே நகர்ந்து செல்கிறாய். எனக்கு கண்கள் லேசாய் கலங்குவது போல் உணர்ந்து அவசரமாய்த் துடைக்க முற்படுகையில் கையில் தட்டுப்பட்டது நீ சிலேட்டால் வெட்டிய கன்னத் தழும்பு.

"பள்ளித் தோழர்களின் நட்பு
அப்படியே இருக்க,
தோழிகளின் நட்போ
நினைவில் ஏதேதோவாய்
எதிரிலே ஏதுமற்றதாய்
..!"

Tuesday, June 23, 2009

பெயரில் என்ன இருக்கிறது?

நாகரீகத்தின் தாக்கம் கிராமப்புறங்களில் பல விதத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது, அதில் ஒன்று பெயர் சூட்டுதல் அதை பற்றி ஒரு சுவாரஸ்ய அலசல். இங்கே எனது கிராமத்தின் பெயர்களை மட்டுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அறுபது வயதைக் கடந்தவர்களின் பெயர்கள் சில:
ஆண்டியப்பன், அய்யாச்சாமி,அய்யாவு,பிச்சையன்,வீராச்சாமி, ஆறுமுகம்,
அருணாச்சலம்,சிங்காரம்,ராமசாமி, பொன்னம்மாள், அஞ்சலை,வள்ளியம்மை,
அழகம்மை (இந்த டைப்பான பெயர்களைக் கொண்டவர்களின் பிள்ளைகள் பள்ளியிலும், கல்லூரிகளிலும் படிக்கும்போது, ஆசிரியர்கள் ஏதாவது காரணத்திற்காக பெற்றோர் பெயர்களை கேட்கும்போது மேற்சொன்ன பெயர்களைச் சொன்னால் சிலர் சிரித்து வைப்பார்கள் அப்போது வரும் பாருங்க அந்த பெயர்களைச் சூட்டிய பாட்டன்களின் மேல் கோபம்,நானே எங்க தாத்தாவிடம் "ஏன் எங்க அப்பாவிற்கு இப்படி பேர் வச்ச?"என்று கேட்டிருக்கிறேன். 'பெயரில் என்ன இருக்கிறது' அப்படிங்கிற எண்ணமெல்லாம் இருபதைக் கடந்த பிறகே வரும், எனக்கெல்லாம் அப்படிதாங்க வந்திச்சு).

ஐம்பதுகளில் இருப்பவர்களின் பெயர்கள் சில: ராமமூர்த்தி,செல்வராஜ்,புண்ணியமூர்த்தி,கணபதி,பூமணி,தவமணி,சரோஜா,
நீலாவதி (இந்த டைப்பான பெயர்களைக் கொண்டவர்களின் மூத்த வாரிசுகளும், மேற்சொன்ன "சாமி"வகையறா பெயர்களைக் கொண்டவர்களின் இளைய வாரிசுகளும் ஒரே வகுப்பில் படிக்க நேரிடும்போது அப்பா பெயர்களை வைத்து கிண்டல் செய்து எரிச்சலை கிளப்புவார்கள்).

இருபத்தைந்திலிருந்து முப்பத்தைந்து வரை உள்ளவர்களின் பெயர்கள் சில:
எங்கள் ஊரில் இந்த இடைவெளியில் உள்ளவர்கள் பிறந்த நேரத்தில் திராவிட,கம்யூனிஸ மற்றும் தமிழார்வம் பொங்கிய நேரமென நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக சில பெயர்கள் பேரின்பன், நிறைமதி,கனிமொழி,கயல்விழி, கலைவாணன்,பாரி,அறிவுச்சுடர்,அறிவொளி, தமிழ்வாணன், கவிமணி, புகழ்நம்பி,புகழ்வேந்தன், பூங்குழலி, பொற்கொடி,வானதி,இலக்கியா போன்ற தூய தமிழ் பெயர்களும்,லெனின்,ஸ்டாலின்,பூபேஸ்,ஜென்னி போன்ற கம்யூனிஸ பெயர்களும் நிறைய இருக்கின்றது.அதுபோக மீதம் இருப்பவர்களுக்கு வெற்றி, சித்திர, சண்முக, சிங்கார வேல்களாகவும், அய்யப்பன் போன்ற சாமி பெயர்களைக் கொண்டும் இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தக் கட்ட இளைஞர்களுக்கு "ஷ்"ல் முடியும் பெயர்களான ரமேஷ், சுரேஷ், சதீஷ், தினேஷ் போன்ற பெயர்களும் சினிமா மோகத்தில் அமலா,நதியா போன்ற சில பெயர்களும் சூட்டப்பட்டது.

இப்போது பிறந்த குழந்தைகளிலிருந்து பத்து வயதுவரை உள்ள குழந்தைகளின் பெயர்கள்தான் அசத்தல் ரகம். நகர நாகரீகத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லையென இதில்தான் நூறு சதவிகிதம் நிறுபித்திருக்கிறார்கள். அவற்றில் சில பெயர்கள் மேஹா, ஹரிணி, ஹரீஷ், நிதீஷ், அரிஹா, நிகிலா, பார்மிகா, பவ்யா, நிஷா, ஷிவாணி,வைபவ்,ஆதர்ஷ் இன்னும் சில பெயர்கள் எனக்கு உச்சரிக்க சரியாக வரவில்லை.

இன்றைய குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களை கேட்க நன்றாக இருந்தாலும் ஒருபுறம் நல்ல தமிழ் பெயர்கள் எவ்வளவோ இருக்கிறதே அதையும் வைக்கலாமே என்று ஒரு எண்ணமும் வந்ததால் இப்பதிவு. தமிழ்ப் பெயர்களான அகிலன், முகிலன், நந்தன் போன்ற சில பெயர்களை மாடனாகச் சுருக்கி அகில், முகில், நந்தா என்று வைத்துக் கொள்வதுக் கூட நன்றாகத்தானே இருக்கிறது. அதுமாதிரி நல்ல தமிழ்ப் பெயர்களை பொருள் கெடாமால் மாடனாக்கிச் சூட்டலாமே.

Thursday, June 18, 2009

மோகன்லால் திரைப்படங்கள்- நிறைவுப் பகுதி

முதல் இரண்டு பகுதிகள் இங்கே:முதல் பகுதி , இரண்டாம் பகுதி

இப்பதிவில் மோகன்லால் நடித்த குடும்பப் படங்களையும் காமெடி படங்களையும் பார்ப்போம்.

T.P.பாலகோபாலன் M.A(1986):
இயக்கம்:சத்யன் அந்திக்காடு
சொற்ப சம்பளத்தில் வேலையில் இருக்கும் லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனின்(மோகன்லால்) சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பம். ஒரு கட்டத்தில் அவன் வேலையை இழக்க நேரிடுகிறது. அதன் பிறகு அவனது நிலை என்ன என்பது கதை. மிடில் கிளாஸ் மக்களின் அன்றாட கஷ்டங்களை எதார்த்தாமாய் சொன்ன படம். அவ்வளவு கஷ்டங்களுக்கும் நடுவே ஷோபனாவுடன் இருக்கும் காதலால், ஷோபனாவின் குடும்பத்தார் மோகன்லாலிடம் பணத்தை சுரண்டும் காட்சிகளெல்லாம் காமெடியாக கையாண்டிருப்பார்கள். இந்த படம் காமெடியான திரைக்கதையில் சீரியஸான விஷயத்தைச் சொன்னது.

வெள்ளானக்களூடே நாடு(1986):
இயக்கம்:பிரியதர்ஷன்
வீடு கட்டுமானம் மற்றும் ரோடு கான்ட்ராக்ட் ஆகியவற்றில் ஊழல் செய்யும் முனிசிபல் மாபியா கும்பலை தோலுரித்துக் காட்டிய படம். ரோடு கான்ட்ராக்டராக வரும் மோகன்லால் மிடில் கிளாஸ் ஃபேமிலியை பின்புலமாகக் கொண்டவர், அவர் எப்படி ஒவ்வொரு அதிகாரிக்கும் கூலைக் கும்பிடு போட்டும், லஞ்சம் கொடுத்தும் கான்ட்ராக்ட் வாங்குகிறார் என்பதையும், வேலையை முடித்து பில் பாஸாக்காமல் அவரை இழுத்தடிப்பதால் கூலியாட்களுக்கு அவரால் சம்பளம் கொடுக்க முடியாமல் தவிப்பதையும் பயங்கர காமெடியாக சொல்லியிருப்பார்கள். கையில் எப்போதும் குடையுடனும், ஒரு கையில் வேட்டியைப் பிடித்தபடியே நடக்கும் மோகன்லாலின் மேனரிஸமும், வேலையாட்களிடம் எரிந்து எரிந்து விழும்போது பேசும் டயலாக்குகளும் வெடிச் சிரிப்பை வரவழைப்பவை.

வரவேழ்ப்பு(1989):
இயக்கம்:சத்யன் அந்திக்காடு
கதை:சீனிவாசன்
ஏழு ஆண்டுகளாய் வளைகுடா நாடுகளில் சம்பாதித்தப் பணத்தை வைத்து சொந்த ஊரில் தொழில் தொடங்கி செட்டிலாக நினைக்கும் இளைஞனை (மோகன்லால்), சூழ்நிலை எப்ப‌டி மீண்டும் வெளிநாட்டிற்கே துர‌த்துகிற‌து என்பது கதை. சொந்தத் தொழில் தொடங்க நினைத்து பஸ் ஓனராகும் மோகன்லாலை, ரூட் அப்ரூவல் வாங்குவது தொடங்கி தொழிலாளர் ஸ்ட்ரைக் வரை வரிசையாக பலசோதனைக‌ள் துரத்தும். இந்த விஷயங்களை காமெடியாக திரைக்கதைப் படுத்தியிருப்பார்கள். தொழிலாளர் நலம் பேணுவதாய் நடிக்கும் போலி கம்யூனிஸ்டுகளை ஷார்ப்பான வசனங்களால் கடுமையாகச் சாடியது இந்தப் படம்.

பிரியதர்ஷனின் இயக்கத்தில் மோகன்லால்,ஊர்வசியின் நடிப்பில் 1993ம் ஆண்டு வெளிவந்த "மிதுனம்" படமும் மிடில்கிளாஸ் மக்களின் பிரச்சனையை பேசிய படமே. இதிலும் மோகன்லால் படும் கஷ்டங்கள் அனைத்தும் காமடியாகவே சொல்லப்பட்டிருக்கும்.

முழுநீள நகைச்சுவைப் படங்கள்:
மலையாளத் திரையுலகில் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள். ஆனால் இவர்களில் யார் சிறந்த நடிகரென இருவரின் ரசிகர்களுக்கிடையே நேரிலும், இணையம் போன்ற ஊடகங்களிலும் கருத்து போர் நடக்கும். அப்படிப்பட்டக் கருத்துக்களில் ஒன்று காமெடி, ரொமான்ஸ் ஆகிய இரு விஷயங்களிலும் மோகன்லாலே தி பெஸ்ட் என்பது. என்னுடைய கருத்தும் அதேதான். (மம்முட்டியின் சிறப்புகள் அவரின் படங்களைப் பற்றிய தொடரில் எழுதுகிறேன்). மோகன்லாலை "லாலேட்டன்" என கேரள மக்கள் அழைப்பதற்குக் காரணம் அவரின் ஆரம்பக் காலக் காமெடி மற்றும் குடும்பப் படங்களே என்றால் மிகையில்லை.

நாடோடிக்காட்டு(1987):
இயக்கம்:சத்யன் அந்திக்காடு
கதை:சீனிவாசன்
தமிழில் பாண்டியராஜன்,எஸ்.வி.சேகர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான "கதாநாயகன்" படத்தின் ஒரிஜின‌ல் இந்தப் படம். குவைத் என்று நினைத்து சென்னையில் வந்து இறங்கும் மோகன்லாலும், சீனிவாசனும் அடிக்கும் லூட்டிகள், தமிழில் பார்த்தைவிட நன்றாக இருக்கும். ஷோபனாவிடம் மோகன்லால் வழிந்து கொண்டு பேசுகிற சீனிலெல்லாம் பட்டையை கிளப்பியிருப்பார். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால், பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமும்,மூன்றாம் பாகமும் முறையே
"பட்டண பிரவேஷம்", மற்றும் "அக்கரே அக்கரே அக்கரே" என்ற பெயர்களில் வெளிவந்து வெற்றிப் படங்களாயின.

சித்ரம்(1988):
இயக்கம்:பிரியதர்ஷன்
சின்னச் சின்ன திருட்டுகளை செய்யும் ஒருவனுக்கு(மோகன்லால்) ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், பதினைந்து நாட்களுக்கு கோடீஸ்வரன் (பூர்ணம் விஸ்வநாதன்) மகளுக்கு(ரஞ்சனி) கணவனாக நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. அமேரிக்காவிலிருந்து பதினைந்து நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும் பூர்ணம் விஸ்வநாதனின் முன்புதான் அவர்கள் இந்த கணவன்,மனைவி ட்ராமாவை அரங்கேற்ற வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கிடைக்கும் கேப்பிலெல்லாம் பணம் சுருட்ட நினைக்கும் மோகன்லாலின் செயல்கள், மோகன்லாலை கண்டாலே வெறுப்பாகும், ஆனாலும் தனது அப்பாவின் முன் நடித்தாக வேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் ரஞ்சனியின் இக்கட்டான நிலை, அவர்கள் நிஜ கணவன் மனைவி இல்லை என்பதை அறிந்து கொள்ளும் ரஞ்சனியின் அத்தை மகன் (சீனிவாசன்), பூர்ணம் விஸ்வநாதனிடம் போட்டுக்கொடுக்க எடுக்கும் முயற்சிகள் என படம் நெடுக சரவெடி காமெடித் தோரணங்கள். கேரளாவில் அதிக தியேட்டர்களில் தொடர்ந்து பல நாட்கள் ஓடி அதற்கு முன்பிருந்த பல சாதனைகளை முறியடித்தப் படம். தமிழில் "எங்கிருந்தோ வந்தான்" என்ற பெயரில் சத்யராஜ்,ரோஜாவின் நடிப்பில் வெளிவந்து மோசமான திரைக்கதையால் வந்தச் சுவடேத் தெரியாமல் தியேட்டரை விட்டே ஓடியது.

வந்தனம்(1989):
இயக்கம்:பிரியதர்ஷன்
சித்ரம் மெகா ஹிட் ஆனதைத் தொடர்ந்து வெளிவந்த இப்படத்தில், மோகன்லால் ஒரு போலிஸ் ஆபிஸர்,பல கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருக்கும் நெடுமுடி வேணுவை எப்படி அவரின் மகளுக்கு(கிரிஜா) காதல் வலை விரித்துப் பிடிக்கிறார் என்பதேக் கதை. ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷ‌ன் என சுவாராஸ்யமான கலவையில் வெளிவந்து ஹிட்டானது. "உள்ளத்தை அள்ளித்தா" படத்தில் கார்த்திக் ரம்பாவிடம் "ஐ லவ் யூ" சொல்ல சொல்லிக் கேட்பாரே, அக்காட்சி இப்படத்தில் இருந்து அப்பட்டமாக உருவப்பட்டதே. படம் நெடுக மோகன்லால் கிரிஜாவின் பின் சுற்றி காதல் செய்யும் காட்சிகளெல்லாம் "மௌனராகம்" கார்த்திக்கை நினைவு படுத்தும்.

கிலுக்கம்(1991):
இயக்கம்:பிரியதர்ஷன்
கதை:வேணு நாகவள்ளி
ஊட்டியில் டூரிஸ்ட் கைடாக இருக்கும் மோகன்லால், ஊட்டியைச் சுற்றிப் பார்க்க வரும் ரேவதியிடம் (ரேவதி ஒரு பைத்தியம் என்பது தெரியாமல்) மாட்டிக்கொண்டு அவரிடமிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளும், ரேவதி பைத்தியம் இல்லை என்ற உண்மைத் தெரிந்து பின் ஏன் அப்படி நடித்தார் என்பதும் கதை. ஜெகதி ஸ்ரீகுமாரும், மோகன்லாலும் அடிக்கும் லூட்டிகளை நினைத்தாலே சிரிப்பை வரவழைக்கக் கூடியவை. இப்படத்தில் இருந்து நிறைய காட்சிகளை "உள்ளத்தை அள்ளித்தா" படத்தில் சுந்தர்.சி பயன்படுத்தியிருப்பார்.

இப்படங்களைத் தவிர மோகன்லால் சீனிவாசன் காம்பினேஷனில் வெளிவந்த "மழை பெய்யுந்நு மத்தளம் கொட்டுந்நு", "பூச்சைக்கொரு மூக்குத்தி" மற்றும் மோகன்லால் மற்ற நடிகர்களின் காம்பினேஷனில் நடித்த "வியட்னாம் காலனி", "மிஸ்டர் பிரம்மச்சாரி"ஆகிய படங்களும் என்னுடைய தேர்வாக உங்களுக்கு பரிந்துரைப்பேன்.

Action படங்கள்:

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக மலையாள திரையுலகினர் இப்போதெல்லாம் தமிழ் மசாலப் படங்களைப் பார்த்து Action படங்கள் என்ற பெயரில் பல மொக்கை படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழப் படங்களை மிஞ்சும் வகையில் "பஞ்ச்" டயலாக்குகள் வேறு. மோகன்லால்,மம்முட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் ஒரு சில ஆக்ஷ‌ன் படங்கள் ரசிக்கும் படியும் இருக்கும் . அதில் எனது தெரிவுகளாக "ஆறாம் தம்புரான்","நரன்","பாபா கல்யாணி" போன்ற சில படங்களைச் சொல்லலாம்.

இங்கே பகிர்ந்துக் கொண்டது வெகு சில படங்களே இன்னும் பல அருமையான மோகன்லால் படங்கள் இருக்கின்றன குறிப்பாக, "No:20 மெட்ராஸ் மெயில்"," கமலதலம்","உன்னிகளே ஒரு கத பறயாம்", "ராசாவிண்டே மகன்","தேன்மாவின் கொம்பத்து", "சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்" இப்படி நீளும் பட்டியல்.

மோகன்லாலின் படங்களை மூன்று பதிவுகளாகப் பார்த்தோம். இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் என பலராலும் பாராட்டப்படும் இவரின் நடிப்பிற்கு நான் எந்த அளவிற்கு ரசிகனோ அதே அளவிற்கு அவரின் சில படங்களில் தமிழர்களை சித்திரிதிருக்கும் விதம் குறித்து கடுமையான கோபமும் உண்டு. பெரும்பாலும் இவரின் படத்தில் வரும் தமிழ் பேசும் கதாப்பாத்திரங்கள் திருடனாகவோ, வில்லனாகவோ அல்லது வேலைக்காரனாகவோதான் சித்திரிக்கப் பட்டிருக்கும். அப்படியென்ன தமிழர்கள் மீது இவருக்கு வெறுப்பு எனத் தெரியவில்லை. இது குறித்து எனது மலையாளி நண்பர்களிடம் கேட்டபோது, அவர்கள் சொல்வது "தமிழ் படத்தில் மட்டும் எங்க ஊரு சேச்சிகளை வெறும் முண்டு உடுத்தியும், அவர்களிடத்தில் இரட்டை அர்த்த வசனங்களை பேசுவதும் எப்படி உங்களுக்கு காமெடியாக இருக்கிறதோ அப்படித்தான் எங்களுக்கு இது" என்று கூறுகிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளியாகும் படங்களில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. குறிப்பாக "ரசதந்திரம்", "தன்மாத்ரா" போன்ற படங்களில் பாரதியாரின் கவிதைகளையும், திருக்குறளையும் நேசிக்கும் மனிதராக நடித்திருப்பார்.

இத்தோடு இத்தொடர் நிறைவு பெறுகிறது

Wednesday, June 17, 2009

மலையாளத் திரைப்படங்கள் ஒரு பார்வை-2

நேற்றைய இடுகையை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துவிட்டுத் தொடரவும்.

இந்த பதிவில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த உளவியல் பாதிப்புகளை பின்னணியாக கொண்டத் திரைப்படங்களை காணலாம்.

தாளவட்டம்(1986):
இயக்கம்:பிரியதர்ஷன்

ஒரு விபத்தில் த‌ன் கண்முன்னே காதலியை(லிஸி) பறிகொடுக்கும் காதலன்(மோகன்லால்), மனநிலை பாதிக்கப்பட்டு மென்டல் ஆஸ்பிடலில் அனுமதிக்கப் படுகிறான். அவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்ட‌ர் (கார்த்திகா ) நாள‌டைவில் அவ‌ன் மேல் காத‌லாகிறாள். இதை அறியும் சீஃப் டாக்ட‌ரான‌ அவ‌ளின் த‌ந்தை, மோக‌ன்லாலுக்கு ட்ரீட்மெண்ட் என்ற‌ பெய‌ரில் செய்யும் காரிய‌த்தால் ந‌ட‌க்கும் எதிர்பாராத‌ நிக‌ழ்வால் டாக்ட‌ரின் ம‌க‌ள் என்னவாகிறாள் என்பதுதான் கதை. இதில் மோகன்லாலின் குறும்புத் தனங்கள் மிக சுவராஸ்யமாக ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கும். படத்தின் முடிவு நெஞ்சை கன‌க்கச் செய்துவிடும். இதே படம் தமிழில் பிரபு,சரண்யா நடிப்பில் மனசுக்குள் மத்தாப்பு என்ற பெயரில் ராபர்ட் ராஜ சேகரன் இயக்கத்தில் வெளிவந்தது.

உள்ளடக்கம்(1991):
இயக்கம்:கமல்
தன் கண்முன்னே காதலனை பறிகொடுக்கும் காதலி ம‌ன‌நிலை பாதிப்பிற்குள்ளாகிறாள், பிறகு சிகிச்சை எடுத்து நார்மலாகத் திரும்பும்போது புதிதாக அவளுக்கொரு பிரச்சனை, தனக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்டரின்(மோகன்லால்) சில மேனரிஸங்கள், தன் காதலனை நினைவு படுத்த உள்ளுக்குள் அவனையே தன் காதலனாக நினைக்கத் தொடங்குகிறாள்.(இது தவறு எனத் தெரிந்தும் அவளால் தனது கற்பனைகளை கட்டுப்படுத்த முடியாத‌ ப‌டியான‌ க‌தாபாத்திர‌ அமைப்பு). இவ்வேளையில் டாக்டருக்கும் ,அவரின் முறைப் பெண்ணுக்கும் (ஷோபனா) திருமண ஏற்பாடுக‌ள் ந‌ட‌க்கிற‌து. மனநிலை பாதிப்பிற்குள்ளான‌ அப்பெண் திரும‌ண‌ ச‌ட‌ங்கு ந‌டைபெறும் இட‌த்திற்கு வ‌ந்து அவளையே அவளால் கண்ட்ரோல் செய்ய முடியாமல் செய்யும் காரியத்தால் நடக்கும் அதிரிச்சியான விஷயங்களே படத்தின் ஹைலைட். இந்த படத்தில் அமலா மெண்ட்டல் பேஷன்ட்டாக கலக்கியிருப்பார். இந்தப் படத்தை மோகன்லால் நடித்திருக்கும் அமலா படம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படம் முழுவதும் அமலாதான் தெரிவார்.

மணிச்சித்ரதாழு(1993):
இயக்கம்:ஃபாசில்
கதை:மதுமுட்டம்
ஸ்பிலிட் பர்ஸனாலிட்டி என்னும் நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் நாய‌கி (ஷோபனா) தான் படித்தும் கேட்டும் அறிந்த ஒரு கதையின் நாயகியாக தன்னையும், தன் வீட்டிற்கு எதிரில் குடியிருக்கும் இளைஞனை அக்கதையில் நாயகனாகவும் , அவனோடு சேர்வதற்கு தடையாய் இருக்கும் வில்லனாக தனது கணவனையும்(சுரேஷ் கோபி) பாவித்து, கணவனையே கொல்வதற்கு நாள் குறிக்கிறாள். பிறகு அவளது கணவனின் நண்பனான மனோதத்துவ டாக்டர் ச‌ன்னி (மோகன்லால்) , அவளை எப்படி அவள் வழியிலேயே சென்று குணப்படுத்துகிறார் என்பதுதான் கதை. "ஒரு முறை வந்து பார்த்தாயா" என்ற அருமையான தமிழ் பாடல் இப்படத்தின் இறுதிக் காட்சியில் அமைந்திருப்பது சிறப்பம்சம். ஷோபனாவிற்கு முதல் தேசிய விருதை வாங்கித் தந்தப் படம் .ஃபாசிலின் திரைக்கதை அசத்தலாக இருக்கும். இதே படத்தை சந்திரமுகி என்ற பெயரில் வாசு காமடி பண்ணியது அனைவரும் அறிந்ததே.

விஸ்மயதும்பத்து(2004):
இயக்கம்:ஃபாசில்
மருத்துவக் கல்லூரி மாணவியான கதாநாயகி(நயந்தாரா) சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மேற்படிப்பிற்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவ‌ளை ஒருத‌லையாக‌க் காத‌லிக்கும் ப‌யிற்சி ம‌ருத்துவ‌ர் அவளை அமெரிக்கா போகக்கூடாதென தடுக்கிறான், அவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதத்தில் எதிர்பாரா விதமாக அவளை பிடித்து தள்ளிவிடுவதில் அவள் சுய நினைவை இழக்கிறாள். பிறகு யாரும் அறியாது ஒரு வீட்டில் ஒளித்து வைக்கிறான். அவளை பற்றிய மர்மத்தை கண்டுபிடிக்க போலிஸ் வலைவீசி தேடுகிறார்கள். அப்போது அந்த ஊருக்கு புதிதாக வரும் மோகன்லால் கதாபாத்திரத்திடம்(ஆவிகளுடன் பேசக்கூடிய சக்தியுடையவர்) கோமா ஸ்டேஜில் இருக்கும் நாயகியின் ஆத்மா உதவியை நாடுகிறது.பிறகு அவளின் ஆத்மாவையும்,உடலையும் எப்படி ஒன்று சேர்த்து அவளை காப்பாற்றுகிறார் என்பது கதை. இதில் நயந்தாராவின்ஆத்மா மோகன்லாலை காதலிக்கத் தொடங்கும், ஆனால் ஆத்மாவை உடலோடு பொருத்தும்போது இந்த காதல் மறந்துபோய்விடுமோ என பயப்படும் அவளின் ஆத்மா உடலோடு சேர மறுக்கும் காட்சியெல்லாம் செம்ம விறு விறுப்பாக இருக்கும். இது நயந்தாராவிற்கு இரண்டாவது படம், அற்புதமான நடிகை என்பது இப்படத்தை பார்த்தவர்களுக்குத் தெரியும். இப்போது டோட்டலா வேஸ்டடிக்கப் படுகிறார். படத்தின் பெரிய பலம் செம்ம விறு விறுப்பாக இருக்கும் திரைக்கதை .

வடக்கும் நாதன்(2006):
இயக்கம்:ஷாஜூன் கார்யல்
ஒழுக்க சீலர் மற்றும் அறிவுஜீவியான கல்லூரி பேராசியருக்கும்(மோகன்லால்), அவரது முறைப்பெண்ணுக்கும்(பத்மப்பிரியா) திருமண ஏற்பாடுக‌ள் ந‌ட‌க்கையில், பேராசிரியர் திடிரென "இந்த பந்தங்களை கடந்து செல்கிறேன்" என கடிதம் எழுதிவைத்துவிட்டு எங்கோ சென்றுவிடுகிறார். அவர் ஏன் அப்படி செய்தார், திரும்பவும் வந்தாரா போன்ற பல கேள்விகளுக்கு மிகவும் அருமையாகவும், அசாத்தியமான பொறுமையுடனும் கதை சொல்லியிருப்பார் இயக்குனர். இந்த படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது சிலாகித்துப் பேச. அதிகம் படித்துக் கொண்டே இருப்பதாலேயோ என்னவோ மோகன்லால் "Bipolar Disorder" என்ற மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்படுகிறார். மற்றவர்களிடமிருந்து அதை மறைக்க அவர் செய்யும் செயல்கள் அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்போது, "நாம வரப்பில் நடந்து போகும்போது தடுமாறுவதில்லையா அதுபோலத்தான் இதுவும்" என சிரித்துக் கொண்டே அவர் சொல்லும்போது நமக்கு என்னமோ போலாகிவிடும். மோகன்லால் ஒரு பிறவிக் கலைஞன் என்பதை நிரூபித்த‌ ப‌ட‌ங்க‌ளில் இதும் ஒன்று.


இதே வரிசையில் இடம் பெற்ற "தன்மாத்ரா" படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. அருமையான படமென்று பலர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன்.

மேற்சொன்ன படங்களை பார்க்கும்போது ஒரு சிறிய இடைவெளிவிட்டு பார்த்தால்தான் நன்றாக இருக்கும். தொடர்ச்சியாக பார்த்தால் என்னடா எல்லாப் படத்திலேயும் ஏதோ நோயாகவே இருக்கிறதே என்றுத் தோன்றும்.

குடும்பப் பிரச்சனைகளை எதார்த்தமாக அனுகிய படங்கள்,காமெடி வித் ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் படங்கள் ஆகியவவை நாளைய பதிவில்.

கொசுறு:மம்முட்டி நடித்தப் படங்களை அடுத்தத் தொடரில் எழுதுகிறேன்.

Tuesday, June 16, 2009

மலையாளத் திரைப்படங்கள் ஒரு பார்வை

சமீப காலமாக 'உலக சினிமா'வைப் பற்றி பல பதிவுகள் இணையத்தில் பரவலாக வலம் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் நம்ம பக்கத்து மாநிலத்தில் வெளிவந்த சில படங்களைப் பற்றியது இப்பதிவு.

பத்து வருடங்களுக்கு முன்பு திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிப்பில் வங்காள மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களே ஒவ்வொரு வருடமும் மாற்றி மாற்றி சிறந்த படங்களுக்கான விருதுகளை அள்ளிச்செல்லும். எப்போதாவது தமிழ் உட்பட மற்ற மொழிப் படங்கள் அந்த வரிசையில் இடம்பெறும். அப்படி என்னதான் இருக்கிறது இந்த மலையாளப் படங்களில் வாங்க கொஞ்சம் மேலோட்டமா பார்க்கலாம்.

விருது வாங்குகிற படங்களை பார்ப்பதென்றாலே நம்மில் பலருக்கு ஆயாசமாய் இருக்கும்.ஆனால் நான் இங்கே பகிர்ந்து கொள்ளப் போகும் படங்கள் அசத்தலான திரைகதையால் நம்மைக் கட்டி போடும் மலையாளப் படங்களைப் பற்றியது, அதனால் பயப்படாமல் தொடருங்கள்.

பேரரசு,இளைய,சின்ன,புரட்சி தளபதிகளின் படங்களையே பார்த்துவிட்டு திடிரென உலக சினிமாவை பார்ப்பதற்குப் பதிலாக முதல் கட்டமாக வார்ம் அப் செய்து கொள்ளும் விஷயமாக இந்த மலையாளப் படங்களைப் பார்க்கலாம்.(இப்போது வரும் மலையாளப் படங்களுக்கு பேரரசுவின் படங்களை மூன்றுமுறை தியேட்டரிலேயேப் பார்க்கலாம்).நான் இங்கே சொல்லப் போகும் படங்கள் கொஞ்சம் பழைய படங்களே.

மலையாள சினிமாக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.முதலாவதாக அழுத்தமான கதைகளோடு ய‌தார்த்தமான திரைக்கதையமைப்பில் வெளிவந்த கலைப்படங்கள்(ரொம்பப் பொறுமையை சோதிக்கும் படங்கள்),இரண்டாவது புதுமையான/வித்யாசமான கதையமைப்பும் நிறைய ய‌தார்த்தமும் கொஞ்சம் மசாலாவும் கலந்தவை(இந்த வரிசையில் எக்கசக்க அசத்தல் படங்கள் இருக்கு),மூன்றாவது நடுத்தர வர்கத்தின் பிரச்சனைகளை பேசும் குடும்பப் படங்கள் மற்றும் லாஜிக்கெல்லாம் இல்லாத முழுநீள நகைச்சுவைப் படங்கள்.(இயக்குனர் பிரியதர்ஷனின் நிறைய படங்கள் இதில் அடங்கும்). நான்காவதாக ஆக்சன் படங்கள்(தமிழ் படங்களின் பாதிப்பால் சும்மா பறந்து பறந்து அடிக்கும் படங்கள் ) .

(ஐந்தாவதாக 'அந்தப்' படங்களையும் சேர்துக்கலாம் என நீங்க முணுகுவது கேட்குதுங்க,கொஞ்சம் மெதுவா)

இங்கே முதலில் நான் எடுத்துக்கொள்ளப் போவது மோகன்லால் நடித்தத் திரைப்படங்களை மட்டுமே.

மேற்சொன்ன நான்கு பிரிவுகளிலும் மோகன்லால் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். எனது பார்வையில் மோகன்லால் படங்களுக்கு மற்றுமொரு பிரிவை ஒதுக்குவேன்,அது உளவியல் ரீதியான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள்.

கலைப்படங்கள்:

வானப்பிரஸ்தம்(1999):மோகன்லாலுக்கு இரண்டாவது தேசிய விருதை பெற்றுத் தந்தத் திரைப்படம்.ஒரு ஏழை கதகளி கலைஞனின் வாழ்க்கையை பேசிய படம். ரொம்ப பொறுமையாகப் பார்த்தும் பாதி புரியாத படம். நம்ம ஊர் சுஹாசினிதான் இதில் கதாநாயகி. இந்த வரிசையில் இன்னும் சில படங்கள் இருப்பினும் இது ஒன்று போதும் எப்படியிருந்தாலும் நீங்க பார்க்கப் போவதில்லை.

புதுமை மற்றும் வித்யாசமான கதைக்களங்கள்:

கண்டிப்பா மிஸ் பண்ணக் கூடாத படங்கள் என நான் நினைக்கும் படங்கள், இப்பிரிவில். ரொம்பப் பெரிய இன்ரோவெல்லாம் கொடுக்கப் போறதில்லை. சும்மா ஸ்டோரியின் ஒன்லைன் மாதிரி சொல்கிறேன்.

தசரதம்(1989):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்

த‌ன் தாய் செய்த துரோகத்தால், பெண்களை வெறுத்து கல்யாணம் செய்துகொள்ளாமலேயெ குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் கோடீஸ்வரன் ஒருவனுக்கும்(மோகன்லால் ), தனது கணவனின்(முரளி) உயிரைக் காப்பாற்ற, சூழ்நிலையால் வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணொருத்திக்கும்(ரேகா) இடையே குழந்தைப் பாசத்தை வைத்து நடக்கும் போராட்டமும், பெண்கள் மேல் அவன் வைத்திருக்கும் தவறான கருத்தை எப்படி அவள் தகர்க்கிறாள் என்பதுமே கதை. மோகன்லாலின் மிகச் சிறந்த படமாகவும், அவராலேயே மீண்டும் நடிக்க முடியாத கதாபாத்திரமாகவும் நான் நினைப்பது இப்படத்தின் 'ராஜிவ்' கதாபாத்திரத்தைத்தான். சிபிமலயில் இயக்கத்தில் இப்படம் ஒரு மைல்கல். ஏற்கனவே இப்படத்தைப் பற்றி முழு விமர்சனத்தையும் இங்கே எழுதியிருக்கிறேன்.

தேவாசுரம்(1993):
இயக்கம்:ஐ.வி.சசி
கதை:ரஞ்சித்

பாரம்பரியமிக்க குடும்பத்தின் ஊதாரியான வாரிசு(மோகன்லால்), அவனை பழிவாங்கத் துடிக்கும் பரம்பரை எதிரி(நெப்போலியன்) என்று சாதாரணமாக துவங்கும் கதையில், நாயகனின் பிறப்பின் ரகசியம் தெரிய வரும்போது காதநாயகனிடம் ஏற்படும் மாற்றங்களை ரொம்ப உணர்வு பூர்வமாகப் பேசிய படம். இப்படம் தேவர் மகன் படம் பார்த்த எபெஃக்டைக் கொடுக்கும். ரௌடித்தனத்தின் உச்சமாக மோகன்லால், பரதநாட்டிய கலைஞரான ரேவதியை தனக்கு மட்டும் அவரை ஆடிக்காட்ட நிர்பந்திக்கும் போது வேறு வழியில்லாமல் ஆடிவிட்டு பிறகு ரேவதி விடுக்கும் சவால் படத்தின் முக்கியமான காட்சிகளில் ஒன்று. கதாநாயகியாக நடித்த ரேவதிக்கும் அவர் பிலிம் கேரியரில் இது முக்கியமான படம்.

கிரீடம்(1989):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்


தமிழில் அஜித் நடிப்பில்(?) வெளிவந்தது. அதே கதைதான் தமிழில் இருந்ததைப் போல மொக்கையாக இருக்காது. தன் மகனை பெரிய போலிஸ் ஆபிஸராகப் பார்க்கத் துடிக்கும் போலிஸ் தந்தை, சூழ்நிலையால் அதே மகனை குற்றவாளியாக பார்க்க நேர்ந்தால் என்னவாகும் என்பது கதை. தந்தையாக நடித்திருக்கும் திலகனின் நடிப்பிற்காகவே இப்படத்தை பலமுறை பார்க்கலாம். மோகன்லாலிற்கு சிறப்பு ஜூரி அவார்ட் வாங்கித் தந்தப் படம். இதன் இரண்டாவது பாகம் செங்கோல் என்ற பெயரில் வெளிவந்தது.

பரதம்(1991):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்

சங்கீதத்தைப் பிண்ணனியாகக் கொண்ட பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசுக்கும் (நெடுமுடி வேணு),இளைய வாரிசுக்கும்(மோகன்லால்) இடையே நடக்கும் ஈகோதான் கதையின் அடிநாதம். மோகன்லாலின் நடிப்பில் இப்படமும் ஒரு மாஸ்டர் பீஸ். இப்படத்தின் மூலமே மோகன்லாலுவிற்கு முதல் தேசிய விருது கிடைத்தது. நெடுமுடி வேணுவும்,மோகன்லாலுவும் நடிப்பில் நீயா? நானா நடத்திக் காட்டிய படம். இறுதிக்காட்சியில் எப்படிப் பட்டவராக இருப்பினும் கண்கள் கலங்கிவிடும். பல உணர்ச்சிமயாமான காட்சிகளோடு ரசிகனை ஒன்றவைக்கும்படி இருக்கும் இப்படத்தைத் தான் பி.வாசு 'சீனு'வாக்கி குதறித் தள்ளியிருந்தார். பி.வாசுவின் லீலைகளை இந்த பதிவில் இன்னும் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஸ்படிகம்(1995):
இயக்கம்:பரதன்
கதை:பரதன்

தன் மகனின் விருப்பத்திற்கு மாறான படிப்பை, வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கும் ஸ்ட்ரிக்டான ஆசிரியத் தந்தைக்கும்(திலகன்), அதனால் தந்தையையே பிடிக்காமல் நாளைடைவில் ரௌடியாகும் மகனுக்கும் (மோகன்லால்) இடையே நடக்கும் பனிப்போர்தான் கதை.கேரளாவில் சக்கை போடு போட்ட படம். இப்படத்தில் சில்க் ஸ்மிதாவும் இருக்கிறார்.தமிழில் "வீராப்பு" என்ற பெயரில் சுந்தர்.சி நடித்து வெளிவந்தது.தமிழிலும் நன்றாகவே எடுத்திருந்தார்கள்.

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா(1990):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்

நெடுமுடி வேணு ஒரு ஜ‌மின்தார் , அவரின் சொத்துக்களை அப‌க‌ரிக்கும் பொருட்டு உற‌வின‌ர்க‌ளே அவ‌ரைத்தீர்த்து க‌ட்ட‌ ஒரு ரௌடியை வ‌ர‌வ‌ழைகின்ற‌ன‌ர். ஆரம்பத்தில் கொலை செய்ய தக்க சமயம் பார்த்திருக்கும் ரௌடி எப்படி அப்பெரியவரின் உயிரையும், சொத்துக்களையும் உறவினர்களிடமிருந்து காப்பாறுகிறான் என்பது கதை. கதையின் நாயகி கௌதமி. என்றைக்குமே நிலைத்து நிற்கும் அமரகானமான "பிரமதவனம் வீண்டும்" பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றது.ரவீந்திரனின் அனைத்து பாடல்களுமே அசத்தலாக இருக்கும் இப்படத்தில்.


இதேப் பிரிவில் சதயம்,தூவானத் தும்பிகள்,நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள், பவித்ரம்,லால் சலாம் என இன்னும் சில படங்களும் இருக்கின்ற‌ன‌.


உளவியல் ரீதியான படங்களையும், நகைச்சுவைப் படங்களையும், மோகன்லால் படங்களில் எனக்கிருக்கும் விமர்சனத்தையும் நாளைய பதிவில் பார்ப்போம்.

கொசுறு:மம்முட்டி நடித்தப் படங்களை அடுத்தத் தொடரில் எழுதுகிறேன்.

Monday, June 15, 2009

கணிதமும் கிராமப்புற மாணவர்களும்..

"ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறனும், உள்வாங்கும் கெப்பாசிட்டியும் இருக்கிறது. வளர வளர அதனளவுகளில் வேறுபடலாம். சிலருக்கு ஒருமுறை,சிலருக்கு இருமுறை,பலருக்கு பலமுறை.. ஆனால் புரிந்தே கொள்ள முடியாது என்று எதுவும் இல்லை.. புரிந்தே கொள்ளமுடியாதவர்கள் யாருமே இல்லை"

என்று நண்பர் நர்சிம் தனது இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வேன். காரணம் எனது நண்பர் ஒருவரின் அனுபவத்திலிருந்தே ஒன்றைச் சொல்ல முடியும். நண்பர் தன்னுடைய முதுகலை பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் பயின்று கொண்டிருந்த சமயம், ஒரு கிராமப்புற அரசு பள்ளியில் ஒரு வருட காலம் பத்தாம் வகுப்பிற்குக் கணித ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அங்கே கணித ஆசிரியரின் பணியிடம் நிரப்பப் படாமல் இருந்ததால் தன்னார்வ ஆசிரியராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் அனுமதி பெற்று பணியாற்றினார். அதே பள்ளியில்தான் அவரும் பத்தாம் வகுப்புவரை பயின்றார்.தனக்கு பயிற்றுவித்த அதே ஆசிரிய பெருமக்களோடு சக ஆசிரியனாக வேலை பார்த்த அந்த ஒரு வருட காலம் தன் வாழ்வில் ரொம்ப இனிமையானதொரு தருணம் என்று அடிக்கடிச் சொல்லிக்கொள்வார்.

பத்தாம் வகுப்பு கணிதம் மிகவும் எளிதான ஒன்று என்பது பொதுவாக நிறையபேரின் கருத்தாகும்.அப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலும் நகர்புறப் பள்ளிகளில் பயின்றவர்களாக இருக்கக் கூடும் என்பது என் கருத்து. ஏனெனில் பத்தாம் வகுப்பின் கணித பாடத்திலும், ஆங்கில பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் கல்வியைத் தொடர முடியாமல் போன எத்தனையோ இளைஞர்களை கிராமப்புறத்தில் பார்க்கலாம். கணிதம் என்றாலே இன்றும் நிறைய மாணவர்களுக்கு எட்டிக்காயாகவே இருக்கிறது.கணிதத்தின் மேல் உள்ள வெறுப்பின் காரணமாகவே கணித ஆசிரியரை "கணக்கு வாத்தி" என்று அழைப்பதெல்லாம்.

ஒவ்வொரு வருடமும் தேர்வு முடிவுகளை பார்க்கும்போது கிராமப்புற பள்ளிகளில் அதிகமாகக் கணிதத்திலேயே தேர்ச்சி விழுக்காடுக் குறைவாக இருக்கும். நண்பரின் பள்ளியிலும் அதே நிலைதான் நீண்ட வருடங்களாகத் தொடர்ந்து இருந்தது.

நண்பர் பணிபுரிந்த அந்த வருடத்தில் இரு பிரிவுகளாய் பிரிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பில் ஐம்பது மாணவர்களும், ஐம்பது மாணவிகளும் இருந்தனர். வகுப்பெடுக்கச் சென்ற இரண்டு நாட்களிலேயே மாணவர்களின் தரம் மிகவும் மோசமாக இருந்ததை உணர்ந்து, சொல்லப் போனால் அடிப்படைக் கூட்டல் கணக்கிலேயே அவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்குப் பிரச்சினை இருந்திருக்கிறது. தானும் அதே பள்ளியில் பயின்றதாலும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு, அதற்கேற்றார் போல் எப்படி பாடம் நடத்தலாம் என்று திட்டம் வகுத்திருக்கிறார்.

பாடம் எடுக்கச் செல்லும்போதே தூங்கி வழியும் மாணவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க முதலில் கணித பாடத்தை புரிய வைப்பதற்கு முன்பாக, தன்னை அவர்களுக்குப் பிடிக்க வைத்திருக்கிறார். பொது அறிவு, விடுகதைகள், கிரிக்கெட், சினிமா இப்படி அவர்களுக்கு ஈடுபாடான விஷயங்களை அடிக்கடி பாடம் நடத்தும்போது இடை இடையே சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். தவிர வாரத்தின் ஏதாவது ஒரு நாள் பாடமே நடத்தாமல் நல்ல பயனுள்ள விஷயங்களையும் விளையாட்டாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். (அந்த விளையாட்டிலும் ஆங்காங்கே கணித ஃபார்முலாக்களை விளையாட்டோடு தொடர்பு படுத்தி அவர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்). ஓரிரு வாரங்களிலேயே கணித பாடவேளை எப்போது வரும் என்று ஏங்குமளவிற்கு மாணவர்களின் மனதிற்கு பிடித்த ஆசிரியராக ஆகியிருக்கிறார். அதன் பிறகு பாடம் நடத்துவது மிகவும் எளிதாக இருந்திருக்கிறது. அரையாண்டு தேர்வுக்கு முன்னதாகவே சிலபசை முடிக்க வேண்டுமென்பதால் சீக்கிரமாகவே சிலபசை முடித்துச் சோதனைத் தேர்வு நடத்தியதில் முப்பது மாணவர்கள் அறுபது சதவிகித மதிப்பெண்ணும், மற்றவர்கள் அதற்கு கீழும், பலர் தேர்ச்சி பெறாமலும் இருந்திருக்கிறார்கள்.

பொதுவாக ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது எல்லா மாணவர்களுக்கும் புரிந்ததா என்பதை யோசிக்காமல் நன்றாக படிக்கும் சில முந்திரிக் கொட்டை மாணவர்கள் புரிந்து கொண்டவுடன் அடுத்தடுத்த பாடத்திற்கு சென்றுவிடுவர். காரணம் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக பார்த்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக சிலபசை கவர் செய்ய முடியாது என்பதுதான், அது உண்மையும் கூட,ஏனெனில் அந்த அளவிற்கு மாணவர்களின் உள்வாங்கும் திறனில் வேறுபாடுகள் இருக்கும்.

இதை சரியாக புரிந்து கொண்ட எனது நண்பர், அதற்கு அடுத்த கட்டமாக முதல் வகுப்பில் தேறிய மாணவர்களை தனியாகப் பிரித்து அவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கான பயிற்சிகளும், மற்றவர்களுக்கு முதல் பாடத்திலிருந்து மீண்டும் நினைவூட்டும்(refresh) விதமாக ஒவ்வொரு பாடமாக நடத்தியபோது,ரொம்ப எளிதாக அடுத்த கட்டமாக நிறைய முந்திரிக் கொட்டை மாணவர்களை உருவாக்க முடிந்திருக்கிறது. அதுவரை கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையையும், அடிப்படை சந்தேகங்களையும்(ஆறாம் வகுப்பிலேயே தெரிந்திருக்கக் கூடியவை) போக்கியதும் அவர்களின் பிக்அப் செய்து கொள்ளும் திறனில் நல்ல முன்னேற்றம். குறிப்பாக மாணவர்களிடம் "இது கூடத் தெரியாதா?" போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திருக்கிறார். அவர்கள் தவறாக கணக்கு செய்தாலும்கூட "பரவாயில்லையே, சின்ன தப்புதான் பண்ணியிருக்க, இப்படித்தான்டா ஆரம்பத்தில் அவனும்(நன்றாக படிக்கும் மாணவனின் பெயரைக் குறிப்பிட்டு) தவறுகள் செய்தான், அவனை மாதிரியே நீயும் அடுத்த டெஸ்டில் நிறைய மார்க் எடுப்பப் பாரு" என்று மோடிவேட் செய்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு கட்ட பயிற்சியின் போதும் ஒவ்வொரு மாணவனைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் அவர்களின் பலம், பலவீனம் தெரிய வந்திருக்கிறது. பிறகு அதற்கேற்றார்போல பயிற்சி முறைகளைக் கையாண்டு, கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையுமே முதல்தர மாணவர்களாக்கியிருக்கிறார்.


மாணவர்களை ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிலும் மிக நன்றாக படிக்கும் மாணவனிலிருந்து பிலோ ஆவரேஜ் மாணவன் வரைக்கும் எல்லாவித மாணவனும் இருக்கும்படி அமைத்து குழுக்களுக்கிடையே போட்டி தேர்வு வைத்து எந்த குழுவின் சராசரி மதிப்பெண் கூடுதலாக இருக்கின்றதோ அவர்களுக்கு சிறு சிறு பரிசுகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் நன்றாக படிக்கும் மாணவன் தனது குழுவில் உள்ள மற்ற மாணவனின் மதிப்பெண்ணிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்ததால் ரொம்ப நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

இறுதியாக ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு இருந்த ஏழு மாணவ மாணவிகளை மட்டும், தலைமை ஆசிரியரிடம் இறுதி ரிப்போர்ட் கொடுத்த போது இவர்கள் ஏழுபேரைத் தவிர மற்ற அனைவரும் நல்ல மதிப்பெண்ணில் தேறிவிடுவர். இருப்பினும் "இவர்களையும் நான் தேர்ச்சி பெற வைத்து விடுகிறேன் சார்" என்று கூறியிருக்கிறார். மற்ற சுற்றுவட்டார பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் "அந்த மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுதச் சொல்லுங்கள் அதற்கான அனைத்து உதவிகளையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்" என்று பேரம் பேசி 100% ரிசல்ட்டை காட்டிக் கொள்வார்கள். ஆனால் நண்பரின் பள்ளி இந்த மாதிரியான மலிவான விளம்பரங்களை நாடுவதில்லை.

அந்த வருட பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சம்பந்தப் பட்ட பள்ளியில் இரண்டு மாணவியர்களைத் தவிர அனைவரும் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகியிருந்தனர். அந்த பள்ளிக்கூடம் ஆரம்பித்து நாற்பது வருட காலத்தில் முதன் முறையாக கணிதத்தில் சதம் எடுத்ததும் அந்த வருடத்தில்தான். இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறும்,95 -99 மதிப்பெண்கள் வரை பதினைந்து மாணவர்களும், பணிரெண்டு மாணவர்களைத்தவிர மற்ற அனைவரும் கணிதத்தில் எழுபது மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சியடைந்திருந்தனர். இதில் மற்ற பாடங்களில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களை விட கணிதத்திலேயே எல்லோரும்(நூறு பேருமே) கூடுதலான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். ஃபெயிலான அந்த இரண்டு மாணவிகள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர்கள், அவர்களின் மதிப்பெண்களிலும் கணிதத்திலேயே அதிகமாக எடுத்திருந்தனர்.

இவ்வளவுக்கும் நண்பர் மாணவர்களை அடிப்பது கிடையாது, சனி ஞாயிறுகளிலும் கூட சிறப்பு வகுப்பெடுக்கச் சொல்லி அந்த மாணவர்கள் நண்பரை கெஞ்சுவதையும் நான் நேரிலேயேப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவரிடம் எந்த அளவிற்கு பாசமாக இருப்பார்களோ அதே அளவிற்கு பயத்தோடவும் இருப்பார்கள். எந்த மாணவனையும் அடிக்காமலேயே அன்பு கலந்த மிரட்டலிலேயெ அவர் இதைச் சாதித்திருக்கிறார்.

இது ரொம்ப சாதாரண விஷயமாகத் தோணலாம் ஆனால் அதன் முன்பும் பிறகும் அந்த பள்ளியில் இன்றுவரை யாரும் செண்ட்டம் எடுக்கவும் இல்லை, கணிதத்தில் அந்த அளவிற்குத் தேர்ச்சி சதவிகிதமும் இன்றுவரை இல்லை. ஒவொரு வருடமும் ரிஸல்ட் வருகிற போதெல்லாம் கண்டிப்பாக எனது நண்பனைப் பற்றிய பெருமையான பேச்சுகள்"அந்த பையன் நல்லா சொல்லி கொடுத்தானப்பா,அது மாதிரி ஒருத்தர் கிடைக்கணும்"என்று இன்றும் அந்த ஊரில் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

எனது நண்பன்,தானே ஒரு மாணவனாக இருந்துகொண்டே, முரட்டு சுபாவம் உள்ள கிராமத்து பசங்களிடம் ஒரே வருடத்தில் இதை செய்து காட்டியிருக்கும்போது, ஏன் அனுபவம் உள்ள ஆசிரியர்களால் இதைச் செய்ய முடிவதில்லை?.

Friday, June 12, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க....

கடந்த நவம்பர் மாதம் கோவை எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து கோவை செல்லும்போது எனது கல்விச் சான்றிதழ்கள் , வேலை முன்னனுபவச் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பு மற்றும் பர்ஸ், புது கைக்கடிகாரம் ஆகியவை எனது கைப்பையிலிருந்து களவாடப்பட்டுவிட்டது. அதன் பின் அதைத் தேடி கண்டுபிடிக்க எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்காமல் போக டூப்ளிக்கேட் சான்றிதழ்கள் பெறுவதற்கான முயற்சியில் இருந்தபோது(தயவு செய்து சான்றிதழ்கள் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்க, தொலைத்தால் நாய் படாதபாடு படவேண்டும்) மூன்று மாதம் கழித்து ஆம்பூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் திரு.கோபிநாத் என்பவர் என்னுடைய சான்றிதழ்கள் அடங்கிய கோப்பு பேருந்தில் கண்டெடுத்தாக கொடுத்த தகவலின் பேரில் எனது ஒரிஜினல் சான்றிதழ்களை திரும்பவும் பெற்றேன்.இந்த தருணத்தில் அவருக்கு ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னிடம் அந்த கோப்பை சேர்ப்பதற்கு மூன்று மாத காலமாக பல முயற்சிகள் செய்து பின் எப்படியோ எனது சான்றிதழ்கள் எதிலேயோ தொலைபேசி எண்ணை கண்டுபிடித்திருக்கிறார். மூன்று மாதமாய் சான்றிதழ்களை என்னிடம் சேர்த்துவிட வேண்டுமென்று பெரும் முயற்சியெடுத்த அந்த அன்பு மனிதரின் மனிதாபிமானத்திற்கு நான் என்றுமே கடமைப்பட்டிருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மனிதாபிமானத்தைப் பற்றி பேசும் போது எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. நான் கொரியாவில் இருந்த சமயம் அலுவலகத்திற்குச் செல்லும்போது ஒருநாள் திடிரென சரியான மழை,கையில் குடை எடுத்துச் செல்லவில்லை. எப்போதும் வெதர் ரிப்போர்ட் பார்த்து கிளம்பும் நான் அன்று அவசரத்தில் மறந்துவிட்டேன்.ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் எனது அலுவலகம்,காலை ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்,அதை மனதில் கொண்டு நனைந்த படியே சென்றுவிட எத்தணித்த போது அருகில் பிளாட்பாரத்தில் சான்ட்விச் கடை வைத்திருக்கும் மூதாட்டி என்னையே கவனித்து கொண்டிருந்துவிட்டு அவரின் குடையை என்னிடம் கொடுத்து திரும்ப வரும்போது கொடுக்கும்படி கூறினார். இதில் என்ன விஷேஷமென்றால் அவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது,எனக்கோ கொரியன் தெரியாது எல்லாமே சைகை மூலமாகவே என்னிடம் சொல்லி அந்த குடையை கொடுத்தார்.அதன் பின் நான் ஊருக்கு வரும்வரை தினமும் என்னை நலம் விசாரித்துக் கொண்டே இருப்பார்.என்னிடம் பேசிவிட்டு அருகில் இருக்கும் மற்ற கொரியன்ஸை ஒரு கம்பீர லுக்விடுவார் அதில் நான் ஃபாரினர்ஸிடமெல்லாம் பேசுவேனாக்கும்ங்கிற மாதிரி ஒரு பெருமிதம் இருக்கும்.

பொதுவா கொரியன்ஸ் ரொம்ப அன்பானவங்க ஆனால் ஆங்கில அறிவு பூஜ்ஜியம் அதனால் வெளினாட்டினரை கண்டால் அவர்களுக்கு ஆங்கில அலர்ஜி வந்துவிடும். எதாவது அவர்களிடம் கேட்டோமேயானால் பயந்து வெலவெலத்து போய்விடுவார்கள்.ஒரு சிலர் அரைகுறை ஆங்கிலத்தில் நம்மிடம் எதாவது சொல்லி அதை நாம் புரிந்து கொண்டுவிட்டோமேயானால் அவர்கள் முகத்தில் அப்படியொரு சந்தோஷம் பொங்கும்.(என்னோட ஆங்கிலமே பீட்டர்தான் ஆனா அவங்க அதையே பிரமிப்பா பார்ப்பாங்கன்னா பார்த்துக்கோங்க.)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப் பட்டபோது தமிழகத்தில் ஈழப்பிரச்சனை எந்த விதமான தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறதென தொலைக்காட்சிகள், தினசரிகள் முதல் பதிவுலகம் வரை அலசப்பட்டது.பலரும் பலவிதமான கருத்தைச் சொன்ன பிறகு என்னுடைய கருத்தாக ஒன்றையும் சொல்கிறேன். பிரபாகரனின் மரணச்செய்தி தொலைக்காட்சியில் ஃபிளாஷ் நீயூஸில் வந்து கொண்டிருந்த போது அதிர்ச்சியுற்ற நான் அருகிலிருக்கும் எனது நண்பன் வீட்டிற்குச் சென்று அதை பற்றி மிகுந்த சோகத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தபோது அருகில் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம்,"யாருப்பா பிரபாகரன்னா?" என்றார்.அதற்கு இன்னொரு பெண்மணி,"சந்தனக் கடத்தல் வீரப்பனோட கூட்டாளி" என்று பதிலளிக்க,மீண்டும் அந்த முதல் பெண்மணி,"வீரப்பனா அது யாரு?" என்று கேட்க இப்படியாக அவர்களின் பேச்சு தொடர்ந்தது. விஷயம் இதுதான் ஈழம் குறித்த பிரஞ்ஞை நகர்புறங்களிலும், படித்தவர்களிடமும் (அன்றாட நாட்டு நடப்புகளை அவதானித்து வருபவர்களிடம்) மட்டுமே இருந்திருக்கலாம். மேலே சொன்னது ஏதோ ஒரு கிராமத்தில் என்று எடுத்துக் கொள்வதற்கில்லை பெரும்பாலான கிராமங்களில் ஈழம் குறித்த பிரஞ்ஞை சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம். தமிழகத்திலேயே இப்படியென்றால் வட மாநிலத்தவர்களிடம் நாம் என்னத்தை எதிர்பார்ப்பது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்ததாக பதிவுலக நண்பர்களான அருட்பெருங்கோ, வெயிலான், நித்தியகுமாரன் மற்றும் ஸ்ரீ இவர்களை பற்றியது.ஒரு முறை கூகுளில் காதல் கவிதைகள் என தமிழில் டைப் செய்து தேடிய போது நண்பர் அருட்பெருங்கோவின் வலைப்பூவை கண்டு அசந்து போனேன். வார்த்தைகளில் எந்தவித அலங்காரமும் இல்லாமல் எளிய சொற்களில் பல கவிதைகளும், உரைநடையிலும் காதலை காதலுக்குள்ளேயே சென்று எழுதியிருந்தார்.இவரின் வலைப்பூ மூலமாகவே எனக்கு பிளாக் குறித்தான அறிமுகம் கிடைத்தது.

அருட்பெருங்கோவின் வலைப்பூ மூலமாகத்தான் தமிழ்மணத்தையும் கண்டறிந்தேன். நான் முதலில் தமிழ்மணத்திற்கு வந்தபோது நண்பர் வெயிலான் நட்சத்திர பதிவராக மின்னிக்கொண்டிருந்தார். அசத்தலான பல பதிவுகள் அப்போது இவர் எழுதிக் கொண்டிருந்தார். வாசிப்பவர்களை வசீகரிக்கக் கூடிய எழுத்து நடைக்கு சொந்தக்காரர். நான் இதுவரை நேரில் சந்தித்திருக்கும் மூன்று பதிவர்களில் இவரும் ஒருவர். பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.சக பதிவர், நண்பர் என்பதைத் தாண்டியும் ஒரு சகோதர பாசம் இவரிடம் எனக்குண்டு.இது அவரிடம் பழகியவர்களுக்கு நன்கு தெரியும்.

அடுத்தவர் நித்தியகுமாரன், இவர் பதிவுலகிற்கு வந்த புதிதில்தான் தமிழ்மணத்தில் உலவிய சில பதிவர்களிடையே அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு தனிமனிதத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தது அப்போது புதிய பதிவரான இவர் எழுதிய இந்த கட்டுரை என்னை இவரின் ரசிகனாகவே ஆக்கிவிட்டது.பெரிய எழுத்தாளராவதற்கு அனைத்துத் தகுதியும் இவருக்கு உண்டென்பது என்னுடைய கருத்து.

அடுத்தவர் அருமைத் தம்பி ஸ்ரீ,இவரின் காதல் கவிதைகளுக்கு நான் பெரிய விசிறி.நேரில் பார்க்கவில்லை எனினும் சாட்டிங்கில் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.இவரின் வலைப்பக்கம் இப்போது திறக்க முடியவில்லை.என்ன காரணமென்றுத் தெரியவில்லை.

இந்த நால்வரும் ஏனோ இப்போது அதிகமாக அல்லது சுத்தமாகவே எழுதுவதில்லை பணிச்சுமையா என்பது தெரியவில்லை எதுவாகினும் விரைவில் பதிவுலகிற்கு திரும்புங்கள் நண்பர்களே.உங்கள் எழுத்தின் சுவையறிந்த ஒரு வாசகனின் வேண்டுகோளாய் இதை வைக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த மாதிரி பதிவுகளில் இறுதியாக ஒரு கவிதை கொண்டோ அல்லது ஒரு நகைச்சுவைத் துணுக்குக் கொண்டோ முடிப்பார்கள் சக பதிவர்கள். நான் மற்ற பதிவர்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்த ஒன்றை சிலாகித்து பேசலாமென்றிருக்கிறேன். இந்த வாரம் நண்பர் ஆதிமூலக் கிருஷ்ணனின் "பாப்பாக்குடி" வீடியோவைப் பற்றி. ஆதி நல்லதொரு எழுத்தாளர் என்பது தெரியும் அவருக்குள் இப்படி ஒரு கிரியேட்டர் இருப்பது இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். கிராமத்தை பின்னணியாகக் கொண்ட நண்பர்களுக்கு அந்த வீடியோ உணர்வு பூர்வமாக பல நினைவுகளை மீட்டியிருக்கும். (ஆதி நீங்க டைரக்டர் ஆனவுடனே என்னையும் அசிஸ்டெண்டா சேர்த்துக்கோங்க).

Wednesday, June 10, 2009

யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி...!

யூத்ஃபுல் விகடனில் என்னுடைய "பசங்க படமும் எனது பால்ய காலமும்" குட் பிளாக் பகுதியில் தற்போது மின்னிக்கொண்டிருக்கிறது.

யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி...!

Tuesday, June 9, 2009

பசங்க படமும் எனது பால்ய காலமும்

"பசங்க" படத்தில் வரும் ஜீவாவை போன்றே எனது சிறுவயதில் நானும் இருந்திருக்கேன்.ஜீவாவிற்கு பக்கடாவும் மணியும் எப்படியோ அது மாதிரி எனக்கு கோபுவும்,தங்கப்பனும்(ஏத்தியெல்லாம் விடமாட்டானுங்க). எங்கே போனாலும் ஒன்னாத்தான் திரிவோம்.நான் என்ன சொன்னாலும் ரெண்டு பேரும் எதிர்த்து பேசமாட்டானுங்க. எல்லாத்துக்கும் "சரி"ன்னு தலையாட்டுவானுங்க. ஏன் அப்படி என்றால் கீழே இருக்கிற உரையாடல்களை படித்தால் உங்களுக்கே புரியும்.

உரையாடல் 1:

நான்: கோபு நான் ஒரு ஜோக் சொல்றேன்டா?

கோபு:சொல்லு சொல்லு..

(ஏதோ ஒரு ஜோக் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தான் கோபு)

நான்:இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற,இந்த ஜோக்ல உனக்கு என்ன புரிஞ்சிச்சு சொல்லு பர்ப்போம்?.

கோபு:அதான் நல்லா காமடியா இருந்துச்சு.

நான்:என்ன காமடியா..

கோபு: (மௌனம் காக்கிறான்)

நான்:சொல்லுடா உனக்கு என்ன புரிஞ்சிச்சு?

கோபு:ம்ம் போடா நீ புரியிற மாதிரி ஜோக்கும் சொல்ல மாட்ட,சிரிக்காட்டியும் அடிப்ப,அதான் சிரிச்சேன்.

நான்:??????

உரையாடல் 2:

நான்:ஏன்டா கோபு இப்படி டியூப் லைட்டா இருக்க?

தங்கப்பன்:ஏன் அவன எப்ப பார்த்தாலும் டியூப் லைட்டுன்னு திட்டுறே,டியூப் லைட்டுன்னா என்னா?

நான்:ம்ம் ஸ்விட்ச் போட்டவுடனேயே ட்யூப்லைட் எரியாது கொஞ்ச நேரம் கழித்துதான் எரியும் அதுமாதிரிதாண்டா இவனும் சொன்ன உடனே எதையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறான்.

தங்கப்பன்:அப்போ உடனேயே புரிஞ்சிகிட்டா குண்டு பல்பா?

நான்:?????????

உரையாடல் 3:

ஒருமுறை காட்டுக்கு எலந்த பழம் பறிக்கச் சென்றோம். அப்போது எலந்த மரத்தின் உச்சியில் தேன் கூடு இருந்ததைப் பார்த்த நான், கோபுவிடம்..


நான்:டேய் அங்கா பாருடா தேன் கூடு.

கோபு:எங்க?

நான்:உச்சாங் கெளையில இருக்கு பாரு.

கோபு:எங்கடா எனக்கு தெரியல.

நான்:டேய் நல்லா பாருடா எவ்வளோ பெருசா இருக்கு,பக்கத்தில கூட ஒரு பட்ட குச்சி இருக்கு பாரு.

கோபு: (கொஞ்ச நேரம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே) ம்ம் ஆமான்டா,எவ்ளோ பெருசா இருக்கு.

(எனக்கு அவன் இன்னும் பார்க்கல சும்மா சொல்றான்னு புரிஞ்சிடுச்சு அதனால)

நான்: பாருடா அந்த தேன் பக்கத்தில இப்போ ஒரு குருவி வந்து உட்கார்ந்திருக்கு.

கோபு:ஆமாண்டா சூப்பரா இருக்குல்ல.

நான்:எங்க இருக்கு குருவி தெரியலேன்னா தெரியலன்னு சொல்லு எதுக்கு இப்படி ..என்று வைத்தேன் தலையில் ஒரு கொட்டு.

கோபு:உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.

இன்னும் இப்படி நிறைய இருக்குங்க."பசங்க" படம் பார்த்த பிறகு எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.அதான் இந்த கொசுவத்தி.

அப்படியே பசங்க படம் பார்க்காதவங்க பார்த்திடுங்க, அருமையான படம். ஃபிரேம் பை ஃபிரேமா ரசிக்க வேண்டிய படம்.

வகுப்பறை காட்சிகளிளெல்லாம் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் அத்தனை சிறுவர் சிறுமியரும். ஏதோ ஹிடன் கேமரா வைத்து படம் பிடித்தது போல் மாணவர்களின் செயல்கள், குறும்புகள் அத்தனையும் இயல்பு மாறாமல் படமாக்கப்பட்டிருக்கிறது.

பசங்களின் குறும்பு ஒரு பக்கமென்றால் விமல்,வேஹாவின் காதல் ஆஹா போடவைக்கிறது.விமல் அறிமுகமாம்,பையனின் மதுரைத்தமிழ் உச்சரிப்பு புல்லரிப்பென்றால் வேஹாவின் புருவ சுழிப்பு "பருவ செழிப்பு". இருவரும் அசத்தியிருக்கிறார்கள். "எப்பூடி" புஜ்ஜிமா வரும் சீன்களிலெல்லாம் தியேட்டரில் விசில்.

அன்புக்கரசு,ஜீவா,பக்கடா,மணி,"அப்பத்தா மங்கலம்" ஆகிய இந்த பசங்கள அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பசங்க சும்மா பூந்து வெளையாடியிருக்கானுங்க. கூட அந்த குட்டி பொண்ணும் குறைவான காட்சியில் வந்தாலும் மனதில் நிறைவாக தங்கிவிடுகிறாள்.

ஜீவாவின் அப்பாவாக நடித்திருப்பவர் சின்ன சின்ன முக பாவங்களில் அசத்துகிறார். குறிப்பாக "ஸார் உங்கள ஹெட்மாஸ்டர் கூப்பிடுறார்"என்று பியூன் சொல்லும் போது அவர் கொடுக்கும் அந்த சின்ன தலையாட்டலே அத்தனை தேர்ந்த நடிப்பு.அன்புவின் அம்மா அப்பாவாக நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் வெகு யதார்த்தம். அன்புவின் வீட்டில் நடக்கும் காட்சிகள் அத்தனை அழகு. அவர்கள் நிஜமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலவே நினைக்கத் தோன்றுகிறது படம் முடிந்த பின்னும்.

"ஒரு வெட்கம் வருதே","அன்பாலே அழகாகும் வீடு"என ஜேம்ஸ் வசந்தனும் தன் பங்கிற்கு மனதை வருடுகிறார். ஒளிப்பதிவு அருமை குறிப்பாக "ஒரு வெட்கம் வருதே" பாடலில் மழை நம்மீது பொழிவதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் பாண்டியராஜ் அவர்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு நிறைய நன்றிகளும் வாழ்த்துகளும்.


உரையாடல்:சிறுகதைக்கான எனது சிறுகதை இங்கே

Thursday, June 4, 2009

சின்னு

"இப்புடியேத் தூணுக்குத் தொணையா குந்திக்க,ஒரு ரெண்டாயிர்ருவாப் பொறட்டறதுக்குத் துப்பு இல்ல,நீயும் ஒரு ஆம்பள" என்று தனது கணவன் சங்கரனைக் காலையிலேயே அர்ச்சனைச் செய்துக்கொண்டிருந்தாள் விஜயா.

"நிறுத்துடி,காலையிலேயே ஒ ராமாயணத்தை ஆரம்பிக்காத நா என்ன சும்மாவா இருக்கே நாலு இடத்திலே சொல்லிவச்சிருக்கேன் பாப்போம்"

"ஆமா கிழிச்ச இன்னேரம் ஒ அக்கா தங்கச்சி வூட்டு தேவைன்னா என்னா பரபரப்ப, இன்னும் நாலு நாளுதா கெடக்கு ஏ அண்ண புள்ளயக் காதுகுத்து அதுக்குள்ள எதுனா தோது பண்ணல அப்பற நா மனுஷியாவே இருக்க மாட்டே"

ஒரு வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிக்கிட்டு இருக்கு, சங்கரனும் பட்டாளத்தார் வீடு, கிட்டங்கிக்கார வீடு, காரவீட்டு அய்யாத்தொரன்னு பலபேருகிட்டக் கேட்டுப் பாத்துட்டான் ஒன்னும் வேலைக்காகல.

விஜயா இன்னும் ஏதோத் திட்டிக்கிட்டே இருக்குறாங்றது வீட்டுக்குள்ள பாத்திரங்கள் உருளும் சத்தத்திலேயேத் தெரிந்தது, இனியும் இங்கே உட்கார்ந்திருந்தா இருக்கிற மானத்தையும் ஏலம் போடுவான்னு நினைத்து கொடியில் கிடந்தக் காசித்துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு கூரையில் சொருகி வைத்த கணேஷ் பீடி கட்டில் பீடி ஒன்றையெடுத்துப் பத்த வைத்தபடியேக் கட்டிய லுங்கியோடு வெளியேக் கிளம்பினான் சங்கரன்.

சங்கரன் நல்ல பாட்டாளி,விவசாய சம்பந்தமான அத்தனை வேலைகளையும் செய்வான். வேலையில் படுசுத்தம், வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாம உழைப்பான்.ஆனா சம்பாதிக்கிற காசுல சாராயத்துக்கும், பீடிக்குமே பாதியைச் செலவழிச்சிடுவான்.


சங்கரனுக்கு சொத்துன்னு பார்த்தா நாலு செண்ட் இடமும், ஒரு சின்னக் குடிசையும், நாலு பசுமாடுகளும்தான்.மாடுகளை கவனித்துக் கொள்வது சங்கரனின் அம்மா சொர்ணம். சொர்ணத்திற்கு அந்த மாடுகள்தான் உசுரு.

வீட்டிலிருந்துக் கிளம்பிய சங்கரன் கறம்பக்குடியான் டீக்கடையில் நுழைந்தான். எட்டுக்கு ஆறு அளவில் மூனுபக்கம் களிமண்ணால் எழுப்பப்பட்டக் கட்டைச் சுவரும், சிமெண்ட்டால் பூசப்பட்ட ஒரு அடுப்பு மேடையும், கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் "காதல் பரிசு" ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக இருப்பதுதான் கறம்பக்குடியான் டீக்கடை.

உள்ளூர் பெரியசாமி மக ஓடிப் போனதிலிருந்து உலக அரசியல் வரை கறம்பக்குடியானுக்கு அத்துப்படி. டீ குடிக்க வர்ற பெருசுங்க கறம்பக்குடியான் பேசுறத, கறம்பக்குடியான் பொண்டாட்டி,சானம் தெளிச்சு மெழுகி பச்சையா வச்சிருகிற வாசலை "பொளிச் பொளிச்"சுன்னு வெத்லாக்கு எச்சியைத் துப்பி சிவப்பாக்கிக்கொண்டேக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

"அண்ணே ஒரு டீ" என்ற சங்கரனிடம் டீயை நீட்டியக் கறம்பக்குடியான், "சங்கரா, ஒன்னயப் பாத்தா வீட்டுக்கு வரச் சொல்லுன்னு பச்சத்துண்டுக்காரு சொன்னாரப்பா" என்றார்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி பச்சத்துண்டுக்காரிடம் பணம் கேட்டிருந்தது ஞாபகம்வர அவசர அவசரமாகக் கறம்பக்குடியானின் சக்கரத் தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு "கணக்குல வச்சுக்கண்ணே" என்று சொல்லியபடியே பச்சத்துண்டுக்காரர் வீட்டிற்குச் சென்றான்.

பச்சத்துண்டுக்காரர் எப்போதுமேத் தோளில் பச்சைக் கலர் சால்வையை அணிந்தபடியேதான் இருப்பார். ஊரில் எல்லோரும் காசித்துண்டோடு இருக்கையில் குஞ்சமெல்லாம் வச்ச சால்வையை அணிந்து செல்வதைப் பெரிய கௌரவமாக நினைப்பார். மெட்ராஸ்ல வேல பாக்குற அவரு மகன் சுரேசு வந்தா அந்தத் துண்டை போட்டுக்க மாட்டாரு. அவனுக்கு அது புடிக்காது. "யேம்ப்பா இத போட்டுக்கிட்டு எம் மானத்த வாங்குற ஃபிரண்ஸ்ஸெல்லாம் கிண்டல் பண்றாங்க" என்பான். சுரேசுக்குத் தெரியாது ஊருக்குள்ள நிறைய பேர் பச்சத்துண்டுக்காரு மாதிரி ஒரு சால்வ வாங்கணும்னு பெரிய லட்சியத்தோட இருக்கிறது.

"வாய்யா சங்கரா,காசு கேட்டிருந்தில்ல,ஒரு ஆயிர்ரூவா சாயங்காலமா வாங்கிக்க" என்றவர் கூடவே " கொஞ்சம் நெல்லு இருக்குது டி.என்.சியில போட்டுட்டு வந்திடு" என்றார். ஆத்திர அவசரத்திற்கு ஆயிரமோ ஐநூறோ பச்சத்துண்டுகாரருதான் கொடுத்து உதவுவாரு அதனால இப்படிச் சின்ன சின்ன வேலைகளும் அவருக்கு அப்பப்போ ஓசியாச் செய்ய வேண்டியிருக்கும்.

ஆயிர்ரூவாப் பொறட்டியாச்சு இன்னும் ஆயிரந்தான் எப்படியாவது தேத்திடலாம்னு மனதிலேயெ நினைத்தவன், சொன்ன வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.

"என்னாச்சு" என்றாள் விஜயா.

"ஆயிர்ருவா சாயங்காலமாப் பச்சத்துண்டுக்காரு கொடுக்குறேன்னிருக்காரு"

"ஆயிரம் ஓவாயா,அத வச்சு என்னாத்தப் பண்றது. ஏற்கனவே ஏ அண்ணிக்காரி சாட பேசுறா, நீ சபையில ஏ மானத்த வாங்காம விடமாட்ட போலிருக்கு" என்று மறுபடியும் ஆரம்பித்தவளிடம்,

"ஏண்டி எழவெடுத்தவளே, எந்தலய அடமானம் வச்சாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணிர்றேன்,செத்த நொய் நொய்யிங்காம வவுத்த பசிக்குது சோத்தப் போடுறியா" என்று சங்கரன் கோபமாய் சீறியபோது,

"ம்ம்ம்ம்....மா"அலறியது பசுமாடு.

"யம்மோவ்,சின்னு கத்துது பாரு அதுக்கு ரெண்டு எரயெடுத்துப் போடு"என்று தன் தாய் சொர்ணத்திடம் கூறினான் சங்கரன்.

"ம்ம்ம் சின்ன்ன்னு" என்று அழுத்தி இழுத்த விஜயா,"ஏய்யா இந்தக் கிழட்டு மாட்ட எதுக்கு இன்னமும் வச்சுக்கிட்டு இனிமேல் அது கன்னு ஈனப் போறதில்ல எதுக்கு தீனிக்குத் தெண்டமா கெடக்கு,பேசாம அத வித்துடலாம். நீயும் யார்கிட்டயும் காசுக்காகக் கையகட்டி நிக்கவேண்டாம்"என்றாள். மேலும் "மாட்டுயாவாரி கோயிந்தன வரச்சொல்லி சட்டுப்புட்டுன்னு தள்ளிவுட்ற வழியப் பாரு" என்றாள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. பெத்தப் புள்ளயாட்டமா வளத்த மாட்ட அடிமாட்டுக்கு விக்கச் சொல்றாளே என எண்ணிக்கொண்டே சங்கரன் என்ன சொல்ல போறானோன்னு ஏற்கனவே தட்டி முடித்த ராட்டிக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் மெதுவா தட்டியவாறே காதைத் தீட்டினாள்.

ஒரு வாரமா பணத்துக்காகக் கிடந்து அலைந்ததை நினைத்துப் பார்த்த சங்கரன் விஜயாவின் யோசனைக்கு சரியென்று தலையாட்டினான்.

அன்னிக்கி ராத்திரி முச்சூடும் சொர்ணத்தாலத் தூங்க முடியல, பதினஞ்சு வருசத்துக்கு முந்தி சின்னுவை ஈன்ற மூனாவது நாளே அதன் தாய், பாம்பு கடித்து இறந்து போக, சொர்ணந்தான் புட்டி பால் கொடுத்து சின்னு என்று பேர் வைத்து புள்ள மாதிரி வளர்த்து வந்தாள். சொர்ணம் கிணத்துக்குத் தண்ணி எடுக்கப் போறப்பவெல்லாம் கூடவே சின்னுவும் ஒவ்வொரு நடைக்கும் சொர்ணத்தோடவே போய் வந்துக் கொண்டிருக்கும். தண்ணியெடுக்க வரும் மற்ற பொம்பளைங்க "என்ன சொர்ணத்தக்கா ஒம்மவ ஒன்னிய விட்டு பிரியமாட்டாளா" என்று கிண்டலடிப்பார்கள். அப்போவெல்லாம் "ஆமாண்டி சொன்னாலுஞ் சொல்லாட்டியும் எம்மவதான்" என்று கூறியபடியே சின்னுவின் முகத்தை வருடி திருஷ்டி முறிப்பாள்.

சின்னு முதல் கன்றை ஈன்ற போது நல்லபடியாகக் கன்றை ஈன்றுவிட்டால் பாலத்தளி செல்லியம்மனுக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக் கொண்டது, சின்னுவின் பால் காசில் தன் மகள் செல்வியை கட்டிக் கொடுத்தது, ஒரு முறை சங்கரன் குடித்துவிட்டு வந்தபோது சொர்ணம் அவனை ஏதோத் திட்டிவிட,சங்கரன் கோபத்தில் சொர்ணத்தைக் கீழேத் தள்ளிவிட்டபோது பக்கத்தில் நின்ற சின்னு சங்கரனை ஆக்ரோஷமாக முட்டியது என ஒன்னு ஒன்னா நினைவுக்கு வந்து அவளைத் தூங்கவிடாமல் செய்தது. பாதி ராத்திரியில் எழுந்துக் கொட்டடியில் கட்டிக்கிடந்த சின்னுவின் அருகில் போய் சின்னுவின் தாடையை மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தாள்,அவளின் இடுக்கியக் கண்ணில் கண்ணீர் வழிந்துக்கொண்டேயிருந்தது.

காலையிலேயே மாட்டுயாவாரி கோயிந்தன் வந்து நின்னதை எதிர்பார்க்காத சங்கரன், "என்னய்யா கோயிந்தா, நானே ஒன்னய பாக்கனும்னுட்டு இருந்தேன்,நீயே வந்து நிக்குற"
என்றான்.

"மாடு நிக்குதாம்ல,அதா பாத்துட்டு போலாம்னு வந்தேன்" என்ற கோவிந்தன் அதே ஊரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி, கேரளாவிற்கு மாடுகளை வாங்கி அனுப்புவதுதான் அவனுக்குத் தொழில்.

"கொப்ப மவளே என்னா வேகமா வேலப் பாத்திருக்கா" என்று விஜயாவை மனசுக்குள்ளேயேத் திட்டிக்கொண்டு, சின்னு கட்டிக் கிடக்கும் கொட்டடிக்கு கோவிந்தனை அழைத்துச் சென்றான் சங்கரன்.

படுத்துக்கிடந்த சின்னுவின் முதுகில் கோவிந்தன் தட்டியதும்,சோம்பல் முறித்தபடி எழுந்து நின்ற சின்னுவைச் சுற்றி வந்துப் பார்த்த கோவிந்தன், "டங்கரா இத ரெண்டு வருடத்துக்கு முன்னாடியே வித்துருக்கணுமப்பா" என்றான். கோவிந்தனுக்கு ’ச’ வரிசை உச்சரிக்க வராது, 'ச'வுக்கு பதில 'ட' சவுண்ட்தான் வரும். இதில என்ன கொடுமைன்னா அவன் பொண்டாட்டி பேரு சரசு. கல்யாணமான புதுசுல இவன் "டரடு டரடு" சொன்னதக் கேட்டு மெரண்டுபோன சரசு தன் பேரையே இவனுக்காக ராணின்னு மாத்திக்கிட்டா.

"டங்கரா மாட்டுல வெறுந்தோலுதான் இருக்கு" என்று தன் யாவார புத்தியோடப் பேசிக்கிட்டே"என்ன வெல சொல்ற?" என்றான்.

"நீயே சொல்லுய்யா,என்ன கொடுக்கலாம்"

"இல்லப்பா ஒனக்கு ஒரு கணக்கு இருக்குமுல்ல"

"சரி ரெண்டாயிரத்தைனூறு கொடுத்துட்டு ஓட்டிக்க"

"என்ன நக்கலா பண்ற, ஆயிரத்தைனூறுதான் எங்கணிப்பு. அதுக்கு மேல இதில ஒன்னுமில்ல"

"யோவ் ஒ மாட்டுயாவாரி புத்தியக் காட்டாம உள்ளூருகார மாதிரி பேசு, கொஞ்சம் பாத்து சொல்லுய்யா"

"டரி உனக்கு வேண்டா எனக்கு வேண்டா, ஆயிரத்தி எண்ணூறு இதுக்குமேல பிடிறாதே" என்று கூறிக்கொண்டே சங்கரன் கையில் நூறு ரூபாய் அட்வான்ஸையும் திணித்துவிட்டு இரண்டு நாள் கழித்து மாட்டை ஓட்டிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

சங்கரன் வாங்கிய அட்வான்ஸைப் பார்த்தும் விஜயாவும்,சொர்ணமும் எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்.

அடுத்த ரெண்டு நாளும் சொர்ணத்தால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இதற்கு முன் எத்தனையோ மாடுகளை விற்றிருக்கிறாள்,ஆனால் சின்னு விஷயத்தில் மட்டும் அவளால் ஏதோ மாடுதானேன்னு இருக்க முடியவில்லை. வழக்கம் போல் மாடு மேய்க்கப் போனவளின் அருகிலேயே நின்று மேய்ந்து கொண்டிருந்த சின்னு, சொர்ணத்தின் கையை முகர்ந்துப் பார்த்தது, எப்போதும் எதாவது தீனி கொறித்துக்கொண்டே இருக்கும் சொர்ணம் சின்னுவுக்கும் ஊட்டிவிடுவது வழக்கம். இன்றைக்கும் அந்த நினைப்பில் கையை முகர்ந்துப் பார்த்த சின்னுவை,"சனியன போ அங்கிட்டு " என்று கையில் வைத்திருந்தக் குச்சியால் அடித்து விரட்டி தன் ஆற்றாமையை சின்னுவிடம் காட்டினாள். இதை எதிர்பாராத சின்னு சற்று மிரண்டு சிறிது ஓடித் திரும்பி சொர்ணத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

இரண்டு நாள் கழித்து அந்தப் பகுதியில் வாங்கிய நிறைய மாடுகளை லாரியில் ஏற்றியபடியே வந்து இறங்கிய கோவிந்தனையும், லாரியில் விழிபிதுங்கி நிற்கும் மாடுகளையும் பார்த்த சொர்ணத்திற்கு சின்னுவை நினைத்துத் துக்கம் தொண்டையை அடைத்தது.

லாரியைவிட்டு இறங்கி வந்த கோவிந்தன் சங்கரனிடம்,"இந்தாப்பா மீதி பணம் டரியா இருக்கான்னு பாத்துக்க, அப்படியே மாட்டையும் கயிறு மாத்தி புடிட்டுக் கொடு" என்றான்.

"கோயிந்தா, ரெண்டு நாளா மனசேச் சரியில்லப்பா, இந்த மாட்ட பெத்தப் புள்ளயாட்டமா வளத்துட்டோம், அதப் போயி அறுப்புக்குக் கொடுக்க மனசு ஒப்பல, சாவுற வரைக்கும் அது இங்கனயே கெடந்துட்டு போகட்டும், எம் பொண்டாட்டிதான் ஏதுனா திட்டுவா அவ என்ன புதுசாவா திட்டப்போறா. இந்தா நீ கொடுத்த அட்வான்ஸ், கோச்சுக்காதப்பா" என்றபடியே சங்கரன் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்ததைப் பார்த்தச் சொர்ணம் சின்னுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு " எம் மக்க்க்...கா" என்று விம்மி வெடித்து அழத் தொடங்கினாள்.


உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Monday, June 1, 2009

எங்க ஊரில் கிளிக்கியவை-1மாங்கா மாங்கா கொத்து மாங்கா மார்க்கெட் போகின்ற குண்டு மாங்கா.நுணாக் காயும்,மொட்டும்(மல்லிகை இந்த பூவிடம் மண்டியிடணும்)இதில் இருக்கும் காய்களின் எண்ணிக்கை ஆறா ? அஞ்சா? மொத்தத்தில் இதுதாங்க ஆரஞ்ச்.நோண்டியெல்லாம் நொங்கெடுக்க முடியாது,ஏறினாத்தான் நொங்கு.
கரையான் புற்று(உள்ளே குடியிருப்பவர் பெரும்பாலும் மிஸ்டர்.பாம்பர்)சோளக்கொல்லை (பொம்மை வைக்க இன்னும் நாளாகும்)

தூக்கணாங்குருவியும் கூடும்(படம் எடுத்த உடனேயே இந்த குருவி எங்கே போச்சுன்னே தெரியலைங்க, ஒரு வேளை "குருவி"ன்னாலே அப்படித்தானோ.)


இதுதாங்க உடும்புப் பிடி


கமெண்ட் பார்த்து கண்ணை கட்டுதா இதில ஒரு லெமெனை புழிஞ்சிக்கோங்க.