Thursday, April 30, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க......!

சமீபத்தில் திருப்பதிக்கு சென்றிருந்தேன்,எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்,எல்லாவற்றிற்கும் நீண்ட க்யூ அதுவும் குறிப்பாக ஸ்வாமி தரிசனத்திற்கு நிற்கும் மிக நீண்ட க்யூவில் ஆமை நகர்வதுபோல் நகர்ந்து சென்று மூச்சு விடுவதற்கே சிரமமான நிலையிலிருக்கும் சிறு சிறு அறைகள் போன்ற ஒரு அமைப்பில் நான்கு மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு,பின்பு ஒரு வழியாக ஏழுமலையானை தரிசித்துவிட்டு வருவதற்குள் ஏன்டா வந்தோமென்று ஆகிவிட்டது.காலை கீழே ஊன்ற முடியாத அளவிற்கு இருக்கும் கூட்ட நெரிசலிலும் வெவ்வெறு மாநில கண்ணகிகள் சிலர் "இடிக்காம நில்லுங்க" என்று சில அப்பாவி இளைஞர்களை அங்கேயும் அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு கூட்டம் வந்து போகும் திருப்பதியின் ஆச்சர்யமான விஷயம் சுத்தம்.பொது கழிப்பறை கூட படுசுத்தமாக இருக்கிறது.இலவச பஸ் வசதி,இலவச உணவு,ஐம்பது ரூபாயில் நல்ல வசதியுன் தங்கும் விடுதிகள் என பலவும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.அறிவிப்பு பலகைகள் உள்ள எல்லா இடங்களிலும் தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆனாலும் முழுவதும் சந்தோஷ படமுடியவில்லை அந்த அளவிற்கு எழுத்துப்பிழைகள்.ஓரிரு இடங்கள் என்றால் பரவாயில்லை கிட்ட தட்ட எல்லா அறிவிப்பிலுமே ஏக பிழைகளுடன் எழுதப்பட்டிருக்கிறது.

***********************************************

சென்ற மாதத்தில் எங்கள் ஊர்ப்பகுதியில் ஒரு குட்டி வளர்ப்பு மகன் திருமணம் போல் ஒரு திருமணம் நடந்தது.பாதி ஊரை அடைத்து பந்தல்,மதுரை தொகுதிக்குள் இருக்கின்றோமோ என்று எண்ணுமளவிற்கு பிரியாணி விருந்து,ஊரின் பல இடங்களில் குவிந்து கிடந்த சரக்கு பாட்டில்கள் என படு அமர்க்களமாக நடந்தேறியது.இவ்வளவுக்கும் அந்த வி.ஐ.பி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.இப்பொழுது அவர் ஒரு மாவட்ட ஊராட்சி குழு தலைவர்(சேர்மன்). அப்போ எம்.பி,எம்.எல்.ஏ லெவலுக்கு ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை கொடுப்பது பத்தாயிரம் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

*************************************************
இது திருவிழாக் காலம்,முன்னெல்லாம் இரவு நிகழ்ச்சிகளாக ஆர்கெஸ்ட்ரா என்ற பெயரில் ஓரளவிற்கு தரமான இசைக் கச்சேரிகள் நடைபெறும்,இப்போதோ ஆடலுடன் பாடல் என்ற பெயரில் படுமோசமாக உடையணிந்தும்,வல்கர் மூவ்மெண்ஸுமாக திருவிழாக்கள் கிராமங்களில் ஆண்களுக்கு மட்டும் என்கிற மாதிரி ஆகிவிட்டது.நேரம் ஆக ஆக உடையின் அளவும் குறைந்து கிட்டத்தட்ட " ----- லைவ் ஷோ" மாதிரி காம கலியாட்டங்கள் நடக்கின்றன. முதலில் இதற்கு ஒரு தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும். இந்த கலாச்சாரம் ஆரம்பத்திலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.இதற்கு அந்தந்த ஊர்மக்களே நடவெடிக்கையெடுக்கலாம்,ஆனால் இப்படிபட்ட நிகழ்ச்சிகளால் விடலை பசங்கள் எந்த அளவிற்கு திசை திருப்பப் படுவார்கள் என்ற பிரஞ்ஞை பெரும்பாலான கிராமத்து பெருசுகளிடம் இருப்பதில்லை.


*************************************************

சமீபத்தில் நடந்த குரூப் ஒன் தேர்வில் கேட்கப்பட்ட பல சுவராஸ்யமான கேள்விகளில் ஒன்று கீழே:
பொருத்துக:

தி.மு.க ----மாம்பழம்
அ.தி.மு.க ---- பம்பரம்
பா.ம.க ---- இரட்டை இலை
ம.தி.மு.க ---- உதய சூரியன்

*************************************************
ஹோட்டல்களில் சாப்பிடுவதை பெரும்பாலும் அசுத்தத்தின் காரணமாக தவிர்த்துவிடுவேன், வேறு வழியின்றி எப்போதாவது செல்லும்போது கண்டிப்பாக எனக்கு வைக்கப்படும் தண்ணிரில் எதாவது மிதந்துகொண்டிருக்கும்,வெங்காய பச்சடியில் தலை முடி,இலையில் எதாவது அசிங்கம்,சாதத்தில் புழு,சாம்பாரில் சணல் இன்னும் நிறைய , கூட வரும் நண்பர்களிடம் இதை சொன்னால்,என்னைக்காவது எங்களுக்கு இப்படி நடந்திருக்கா? ஓவர் சுத்தம் பார்த்தா அப்படிதாண்டா ஆகும் என்று நக்கலடிப்பார்கள்.என் சந்தேகம் என்னவெனில் அது எப்படி எனக்கு மட்டும் இப்படி நடக்கும்,ஒரு வேளை நான் மட்டும் கவனிப்பேனாயிருக்கும். இது ஹைகிளாஸ் ஹோட்டலில் இருந்து கையேந்தி பவன் வரைக்கும் நான் கவனித்தது.இனிமேல் கொஞ்சம் கவனமாக பாருங்கள் உங்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கக் கூடும்.