Monday, July 30, 2012

தூரிகைத் தாரகை-1



எச்சரிக்கை: வாரத்திற்கு ஒரு தூரிகைத் தாரகை வரைவதாய் உத்தேசித்திருக்கிறேன்.

டைம் பாஸ்-1

“இனி உங்க கூட ஷாப்பிங் வந்தா,என்னன்னு கேளுங்க”என்று ஆரம்பிக்கும் சண்டையானது,“வீக் எண்ட்,ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்” என்பதில் சமாதானமாகிறது.
#என்னமோ போடா மாதவா

எங்க தஞ்சாவூர் கலெக்டர் ரொம்ப வருஷமா அங்கேயே இருக்கார். அவரையும் மாத்தினா புண்ணியமா போவும்.
 #தங்கம் சீரியல் டார்ச்சர்

”இதுவும் கடந்து போகும்” என்று சொன்னவன் ஊரு பக்கம் டவுன் பஸ்ல போனவானாத்தான் இருக்கணும் ,
#அதைத்தான் ஆடு மாடு உட்பட அனைத்தும் கடந்து போகும்.

பஸ் ,சாலு, சாக்கு, மதி இந்த வார்த்தைகளின் மூலமே மற்ற மாநில மொழிகளையும் கத்துக்கலாம்னு ஆரம்பித்தேன்.அப்புறம் ‘போதும்’னு விட்டுட்டேன் .

வாய வச்சிகிட்டு சும்மா இருந்தா பொழப்பு நடக்குமா?
 #டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

வாழ்க்கை என்பது சிலருக்கு வழுக்கையாவதில் வழுக்கிவிடுகிறது. 
#விக் எடு கொண்டாடு

”தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்குமாம்”.
#எங்க ஏரியாவில் ஒவ்வொரு ஹோட்டலா தேடித் தேடி சாப்பிட்டும் ருசியே இல்லையப்பு.

தொப்பையைக் குறைக்க, டி.வி ரிமோட்டை தூர வீசு. 
#பிட்னஸ் சீக்ரெட்

கோயில் உண்டியலை உடைச்சு திருடுபவனே சிறந்த நாத்திகவாதி. 
#பேச்சை குறை செயலில் இறங்கு

”கதவைத் திற காற்று வரட்டும்” என்னும் நித்தி மொழியை நித்திய மொழியாகச் செய்ததே இவ்வாட்சியின் ஓராண்டு சாதனை. 
#பவர் கட்

ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் சோதனையிடும் போலீசாரைக் கண்டால் யதார்த்தமாய் இருக்கும் நாம், அதை வெளிக்காட்ட நடிக்க ஆரம்பிக்கிறோம். 
#அவதானிப்பு

தனக்குத்தானே புலம்புதல் என்பது மனநிலையோ அல்லது பணநிலையோ சரியில்லாததின் அறிகுறி.
#சார் இன்னும் சம்பளம் கிரிடிட் ஆவல

Tuesday, July 24, 2012

மூணாம் பக்கம்

மூணாம் பக்கம் 1988ல் பத்மராஜன் இயக்கத்தில் வெளிவந்த மலையாளத் திரைப்படம்.

கடற்கரையோர கிராமம் ஒன்றில் தனது பரம்பரை வீட்டில் ரிட்டயர்மெண்ட் வாழ்க்கையைத் தனிமையில் கழித்து வரும் ஒரு பெரியவர்(திலகன்). அதே ஊரில் இருக்கும் தனது சக வயது நண்பரோடு சேர்ந்து மது அருந்துவது, பழைய கதைகளை பேசிக்கொண்டிருப்பது என்பதாக அவரது பொழுதுகள் கழிகின்றன.

மருத்துவக் கல்லூரி மாணவனான அவரின் பேரன்(ஜெயராம்) விடுமுறையில் அவனின் சில நணபர்களோடு தாத்தாவை பார்க்க வருகிறான். தனது ஒரே மகனின் இழப்பிற்குப் பிறகு ஒட்டுமொத்த அன்பையும் தனது பேரனின் மீது வைத்திருக்கும் பெரியவர் அவனின் வருகையை கொண்டாடி மகிழ்கிறார். 

ஒரு நாள், பேரன் தனது நண்பர்களோடு அருகில் இருக்கும் பீச்சில் குளித்துக்கொண்டிருக்கும்போது அலையில் அடித்துச் செல்லப்படுகிறான்.  அதுவரை மிகச் சாதாரணமான காட்சிகளுடன் பயணிக்கும் திரைக்கதை, பத்மராஜனின் படமாக மெல்ல மெல்ல உருமாற ஆரம்பிப்பது இந்தக் காட்சியிலிருந்தான் என்று சொல்லலாம். அலையில் அடித்துச் செல்லப்படுபவர்களின் உடல் மூன்றாவது நாளில்(படத்தின் பெயர்) கரை ஒதுங்கும் என்பது அங்கே அவர்கள் அனுபவத்தில் கண்டுகொள்கிற உண்மை. அப்படி கரை ஒதுங்குபவர்களில் சிலர் உயிருடனும் இருந்த நிகழ்வுகளும் சில கதாபாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படுகிறது. 

கடலில் அடித்துச் செல்லப்பட்டவன் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பது தெரியாமல் நகரும் அந்த மூன்று நாட்களில்,  சுற்றத்தார் எல்லோரும் கவலையோடு இருக்கும்போதும் பெரியவர் மட்டும் ”அவன் நிச்சயமாய் உயிரோடு கிடைப்பான்” என்று மற்றவர்களிடம் சொல்லியபடி தனது அன்றாட செயல்களை செய்துகொண்டிருக்கிறார்.

மூன்றாவது நாள் கரை ஒதுங்குகிறது பேரனின் உயிரற்ற உடல். அதனைத் தொடந்து நடக்கும் சம்பவங்கள் பத்மராஜனின் மேஜிக்.குறிப்பாய் மனதை கனக்கச் செய்துவிடும் அந்த கிளைமேக்ஸ். அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் இப்படத்தில் நான் ரசித்த சில காட்சிகள் உண்டு. தான் மது அருந்தியிருப்பது பேரனுக்கு தெரிந்துவிடாமல் இருக்க செய்யும் பெரியவரின் பாடிலாங்வேஜ், தனது நண்பரின் பேத்திக்கும், தனது பேரனுக்கும் இடையே காதலை வளர்த்துவிட பெரியவர் செய்யும் விஷயங்கள் குறிப்பாய் பேரனுக்குத் தெரியாமல் இயல்பாய் அவர்களின் சந்திப்புகள் நிகழ்வதுபோல சூழலை கிரியேட் செய்து கண்டுக்கொள்ளாதது போல இருக்குமிடத்திலெல்லாம் திலகனின் நடிப்பு கிளாஸாக இருக்கும். தமிழில்தான் அவரை வில்லனாக மட்டுமே பாவித்துவிட்டார்கள். பேரனின் உடல் கரை ஒதுங்கிவிட்டதா என பெரியவர் அந்த மூன்று நாட்களும் அதிகாலையில் வந்து வந்து கடற்கரையைப் பார்த்துச் செல்லும் காட்சிகள், கடற்கரையில்  ”இது ஆபத்தான பகுதி இங்கே யாரும் குளிக்காதீர்கள்”(தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்) என்று போட் வைக்கும் காட்சி , பேரன் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும்,”நெனச்சேன்” என்றபடியே பெரியவர் காட்டும் முகபாவம் என இப்படி நிறைய காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன அசைப்போட்டு சிலாகித்துச் சொல்ல. முடிந்தால் ஒருமுறை இப்படத்தை பாருங்கள். 


பத்மராஜனின் ”இந்நலே” படத்தைப் பற்றி அடுத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.

Wednesday, July 11, 2012

ஓவிய சார்.

ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை எனது கிராமத்திற்கு பக்கத்து ஊரில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில்(தற்போது மேநிலைப் பள்ளி) படித்தேன். அதே பள்ளியில்தான் எனது அப்பாவும் ஆசிரியராக பணியாற்றியதால் அங்கு பணியாற்றிய அத்தனை ஆசிரியர்களோடும் முன்னமே அறிமுகம் இருந்தது. 

இருப்பினும் ஆறாம் வகுப்பில் சேர்ந்தப் புதிதில் மிகவும் பிடித்த ஆசிரியராய் இருந்தவர் ஓவிய ஆசிரியர் நாடிமுத்து சார். நாடிமுத்து சாருக்கு அதே ஊர், பள்ளிக்கு அருகிலேயே அவரின் வீடும் இருக்கும். நாடிமுத்து சாரையும் சேர்த்து மூன்று ஆசிரியர்கள் எனது அப்பாவின் முன்னாள் மாணவர்கள் அங்கே ஆசிரியராக இருந்தார்கள்.

வாரத்தில் இரண்டு நாட்கள் ஓவிய வகுப்புகள் இருக்கும். ஆனாலும் எப்போது எங்களுக்கு ஃப்ரி டைம் கிடைத்தாலும் மொத்த வகுப்புமே சேர்ந்து ஓவிய சாரைத் தேடிப்போய் ”சார், எங்க கிளாஸுக்கு வாங்க சார்,ப்ளிஸ் சார்” என்று கெஞ்சுவோம். காரணம் அவர் சொல்லும் கதைகள்.

பொன்னியின் செல்வன், கடல் புறா போன்ற சரித்திர நாவல்களின் அறிமுகம் அவராலயே கிடைத்தன. காட்சிகளை அவர் விவரிக்கும் போது இருக்கும் அந்த ரியாக்‌ஷன்களை அத்தனை எளிதாய் விவரித்துவிட முடியாது. சட் சட்டென்று மாறும் முக பாவங்களை கேட்டுக்கொண்டிருக்கும் எங்களின் முகத்திலும் பிரதிபலிக்கச் செய்யும் சாகசக்காரர். அன்று அவர் எங்களுக்கு விவரித்த காட்சிகளில் நிறைய தனது சொந்த திரைக்கதை என்பது இப்போது இந்த நாவல்களை படிக்கையில் புரிந்தாலும் அந்த வயதிற்கு எங்களுக்கு எப்படிச் சொல்லனுமோ அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதையும் உணர்கிறேன்.

எனது பிரியமான ஆசிரியர் அடுத்தடுத்த வருடங்களில் பிடிக்காத ஆசிரியராகி  பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவரை ஒரு எதிரியைப் போல நினைக்கத் தொடங்கியிருந்தேன். மற்ற மாணவர்களும் அப்படித்தான். மற்றவர்கள் அவரை வெறுக்க இருந்தக் காரணம் சவுக்குக் குச்சியால் விளாசித் தள்ளுவதாய் இருந்தபோது எனக்கான காரணம் வேறாய் இருந்தது.

இண்டர்வெல் நேரத்தில் மாணவர்களுக்கு வைத்திருக்கும் குடிநீர் ட்ரம்மில் சில நேரம் டம்ளர் இருக்காது. அந்த மாதிரி நேரங்களில் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் இருக்கும் டம்ளர்களை எடுத்துக்கொண்டு வந்துக் கொடுப்பேன். எனது அப்பா ஆசிரியராக இருந்ததால் இது ஒரு அட்வாண்ட்டேஜ். ஒரு முறை இந்த மாதிரி டம்ளரை எடுத்து கொடுத்தபோது, ” உங்க அப்பா வாத்தியாரா இருந்தா உன் இஷ்டத்திற்கு ஸ்டாஃப் ரூமில் நுழைவியா” என்று சொல்லி அடி பிரித்தெடுத்திவிட்டார். அங்கே ஆரம்பமானது அவரை வெறுக்கும் படலம். அதன் பின் ஸ்டாஃப் ரூமிற்கே போறதில்லை. மதிய உணவுகூட அது நாள் வரை அப்பாவுடன் சேர்ந்து சாப்பிடுவடு தான் வழக்கம் ,அதன் பிறகு தனியாக சாப்பாடு கொண்டு செல்ல ஆரம்பித்தேன். 

ஓவிய வகுப்பில் எத்தனை நன்றாக ஓவியம் வரைஞ்சிருந்தாலும் எனக்கு மட்டும் பத்திற்கு முன்று அல்லது நான்கைத் தாண்டி மதிப்பெண்கள்போடவே மாட்டார்.  ”நீயும் ஒரு ஸ்டூடண்ட்தான் , உனக்கு தனியா சலுகை கொடுக்க முடியாது” என்று அடிக்கடி திட்டுவார்.

பள்ளிக்கு அருகில் இருக்கும் கோயிலில் எனது ஊரைச் சேர்ந்த மற்ற மாணவர்களோடு மதிய உணவு இடைவேளையின் போது எப்போதும் விளையாடுவது வழக்கம். ஒரு நாள் அப்படி விளையாடிக்கொண்டிருந்தபோது, எல்லோரையும் கூப்பிட்டு கிரவுண்டில் விட்டு விளாசினார். அப்போதும்கூட ”நீதாண்டா எல்லாரையும் அழைச்சிட்டு போயிருப்ப” என்று சொல்லி கூடுதலா நாலு சாத்து சாத்தினார் என்னை.  

பத்தாம் வகுப்பில் அரையாண்டுத்தேர்விற்குப் பிறகு ஓவிய வகுப்புகளில் மற்றப் பாடங்களை ரிவிஷன் பண்ணச் சொல்லியிருந்தால் அவர் வருவதில்லை. அது கடைசி பிரியடாகவும் இருந்தது. அப்போது நான் ஒரத்தநாட்டிற்கு கணிதத்திற்கு ட்யூஷன் சென்று கொண்டிருந்தேன். வாரத்தில் சனி,ஞாயிறு மற்றும் வியாழன் மூன்று நாட்கள் ட்யூஷன் இருக்கும். வியாழக்கிழமை மாலை 5.30க்கு ட்யூஷன் தொடங்கும், பள்ளியில் இருந்து ஒரத்தநாட்டிற்கு சைக்கிளில் செல்ல முக்கால் மணி நேரம் ஆகும். பள்ளி முடிந்ததும் அவசர அவசரமாக செல்ல வேண்டியிருக்கும். ஒரு நாள் ஓவிய  பிரியடில், அவர்தான் இப்போது வருவதில்லையே என்று எண்ணி, அசால்ட்டாக மணி அடிப்பதற்கு முன்பே சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். கேட்டிற்கு அருகில் நின்றவர் அன்று நடந்து கொண்ட விதத்திலிருந்துதான் அவரை எதிரியாய் பாவிக்கத் தொடங்கினேன். 

அவர் என்னை குறி வைத்து டார்ச்சர் பண்ண  சம்பவங்கள் இப்படி இன்னும்கூட சில இருக்கின்றன. இவரின் நடவடிக்கைகளை என் அப்பாவிடம் ஒரே ஒரு முறைதான் சொன்னேன். ”அவன் உன்னோட ஆசிரியர், அடிச்சா வாங்கிக்க” என்றதோடு நிறுத்திக்கொண்டார்.

பிறகு தஞ்சைக்கு மேநிலை வகுப்பிற்கு வந்த பிறகு, ஒரு நாள் பஸ்ஸில் ஓவிய சார் வந்தார். அப்போது நான் அமர்ந்திருந்தேன். அவர் நின்றுகொண்டு வந்தார். எப்போதுமே தெரிந்தவர்கள் வந்தால் எழுந்து இடம் கொடுக்கும் நான் அவரை கண்டுக்காதது போலவே அமர்ந்திருந்தேன். வெறுப்பின் உச்சத்தில் இருந்த நேரம் அது.

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் எனக்கு அப்பண்டிசைடிஸ் ஆப்பரேஷன் நடந்தது. அப்போது என்னைப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்தார் ஓவிய சார். எனது கையைப் பிடிச்சிகிட்டு ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிகிட்டு இருந்தார். அப்போது அவர் மீதான வெறுப்பு  கொஞ்சம் குறையத் தொடங்கியது, ஆனாலும் அதன் பிறகு எங்கு பார்த்தாலும், பேருக்கு ஒரு வணக்கத்தோடு நகர்ந்து விடுவேன்.

எம்.சி.ஏ கரஸில் படித்தேன். அந்த சமயத்தில் ஃப்ரீ டைம் நிறைய இருந்ததால் அதே பள்ளிக்கு கணித ஆசிரியராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமா இரண்டு வருடங்கள் பணியாற்றினேன். அப்போதும் ஓவிய சார் அங்குதான் வேலை பார்த்தார். சர்க்கரை வியாதியால் மிகவும் இளைத்து போயிருந்தார். முன்புபோல் மாணவர்களை அடிப்பதெல்லாம் நிறுத்திவிட்டிருந்தார். அந்த இரண்டு வருடங்களில்தான் ஓவிய சாரின் மேல் நான் வைத்திருந்த வெறுப்பு முற்றிலும் மறைந்து மறக்க முடியாத மனிதராக ஆனார்.

”உன் அப்பாவிடம் இருக்கும் கம்பீரம் உன்னிடமும் இருக்குடா, அவர் பார்வையாலே ஸ்டூடன்ஸை அடக்குவார், உனக்கும் அதே மாதிரி பயப்படுறானுங்க, எவ்வளவு மிரட்டினாலும் உங்க அப்பாதான் எங்களுக்கு பிடிச்ச வாத்தியார், அதே மாதிரிதான் உன்னைச் சுற்றியும் பசங்க சார் சார்னு சுத்துரானுங்க” என்று சொல்லுவார்.

”நாளைக்கு சாப்பாடு கொண்டு வர வேண்டாண்டா உனக்கு ஸ்பெஷலா வீட்டில் சமைக்கச் சொல்லியிருக்கேன்” என்று சொல்லி நிறைய தடவை சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுத்திருக்கார். அந்த இரண்டு வருடங்களில் அவர் வீட்டில் நான்வெஜ் செய்த நாட்களிலெல்லாம் எனக்கு அவர் வீட்டு சாப்பாடுதான்.

நான் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போது எனக்குத் தெரியாமல் சில முறை கவனித்துவிட்டு, ”கிராமத்து பசங்களுக்கு ஏத்த  மாதிரி  டீச் பண்ணறடா, நீ பேசாம பி.எட் செய்திருக்கலாம்டா” என்று பாராட்டியிருக்கிறார். அவர் மகன் என்னிடம் பயின்றான். அவனுக்கு பிடித்த ஆசிரியராய் என்னை அவரிடம் சொன்னதை அவ்வளோ ஒரு மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

பிறகு சென்னைக்கு வந்த பிறகு அவரிடம் டச் இல்லாமல் போய்விட்டது. சென்ற வருடத்தில் ஒரு முறை ஊருக்கு சென்றுகொண்டிருந்தபோது இரவு முழுக்க அவரைப் பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்துகொண்டே இருந்தன. காலையில் பஸ்ஸைவிட்டு இறங்கும்போதே எதிரே இருந்த சுவரில் ஒட்டியிருந்த பதினாறாம் நாள் அஞ்சலி போஸ்டரில் சிரித்தபடியிருந்தார் ஓவிய சார்.

அன்று ஏன்  அவரின் நினைவு மீண்டும் மீண்டும் எனக்கு வந்ததுன்னு இப்போ வரைக்கும் ஆச்சர்யமாகவும்,குழப்பமாகவுமே இருக்கு.

Tuesday, July 10, 2012

வண்டல் மண் கதைகள்-5

காட்டாத்துப் பாலத்துக்கிட்ட விறகுக்கு கருவக்குச்சிகள வெட்டி கட்டி வச்சிக்கிட்டு, கட்டு ரொம்பக் கனமா இருக்கவும், சொம தூக்கிவிட யாராச்சும் ஆளு வருதான்னு இலுப்பமர நெழலுல ஒக்காந்து பாத்துக்கிட்டிருந்த மல்லிகாவுக்கு நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். கெச்சலா,பாதிக்கு மேல நரச்சத் தலையோட இருக்கிறவள பாத்தா இன்னும் ஒரு நாலஞ்சு வயசு சேத்து சொல்லலாங்கிற மாதிரி இருப்பா. பாட்டாளி பொம்பள, ஒரு நிமிஷம் சும்மா ஒக்காந்து பாக்க முடியாது. எதையாவது பரபரன்னு செஞ்சுகிட்டேதான் இருப்பா.
எங்கயோ எட்டி ட்ராக்டர் சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டு இருந்துச்சே ஒழிஞ்சி ஆளுவொ ஒருத்தரும் தெம்படல. மரத்த அடச்சு நின்ன நெழல வச்சு "மணி பண்ணெண்டு ஆச்சு"ன்னு தனக்குத்தானே முனகியவ, தாலிக்கொடியில இருந்த ஊக்குல ஒண்ணக் கழட்டி காலுல குத்தியிருந்த முள்ள எடுக்க ஆரம்பிச்சா.
ஒரு காலை நீட்டி, முள்ளு குத்துன காலை, நீட்டுன காலின் தொடையில மடக்கி வச்சு, முள்ளு அறுவுதான்னு மெல்லமா தடவிப் பாத்தா. முள்ளு அறுவவும் ஊறுகாய தொட்டு நக்குற மாதிரி ஆக்காட்டி வெரலால எச்சியத்தொட்டு, அறுவுன எடத்தில தொடச்சு பாக்கவும் பாதத்துக்குள்ள மச்சங் கெடக்குற மாதிரி பளிச்சுன்னு தெரிஞ்சிச்சு முள்ளு.
ஊக்கால மெல்லமாக் குத்தி அப்படியும் இப்படியுமா களஞ்சி விட்டதும் முள்ளு கொஞ்சம் தளந்து வரமாதிரி இருந்துச்சு. கட்ட வெரலுக ரெண்டையும் முள்ளு குத்துன எடத்துக்கு அங்கிட்டும் இங்கிட்டுமா வச்சு வலட்ட ஆரம்பிச்சா. கட்டுக்கேணி செங்கல்லு இடுக்கிலிருந்து, பாம்பு தலையை நீட்டுற மாதிரி, கதக்குன்னு வெளில எட்டிப் பார்த்த முள்ளை, வெடுக்குன்னு புடுங்கி,” எத்தத்தண்டி குத்தியிருக்குன்னு பாத்தியன்ன; மொவரையும் தன்னான”ன்னு முணுமுணுத்துக்கிட்டே, முள்ள வீசி எறிஞ்சிட்டு மறுபடியும் ரோட்டுல ஆளு வருதான்னு பாத்தா. யாரும் வர்ற மாதிரித் தெரியல. கையி தன்னாப்புல கால்ல இன்னும் முள்ளு தச்சிருக்கான்னு தடவிக்கிட்டிருந்துச்சு.
முள்ளுத்தச்சக் காலில் இன்னும் முள்ளு இருந்தா களஞ்சு எடுக்கலாம்னு தோணும். அப்படி ஒரு சொகமாவும் எதையோ சாதிச்சிக்கிட்டு இருக்குற மாதிரியும் இருக்கும். முள்ள எடுத்த பிறகு முந்திரிக்கொட்டைய அனல்லக் காட்டி, எளஞ்சூடானதும் வலியிருக்குற எடத்துல வச்சு வச்சு எடுத்தா வலி அப்படியே மரத்துபோவும். மரத்துப்போறது ரெண்டாம்பச்சம்தான், சுடும்போது சுருக் சுருக்குன்னு இருக்கிற அந்த சொகத்துக்கே நெதேய்க்கும் முள்ளக் குத்திக்கலாம்னு இருக்கும்.
ஆளுக அன்னாரத்தையேக் காங்கல, என்ன பண்ணலாம்னு சுத்தி முத்திப் பார்த்தவளுக்கு பக்கத்துல இருந்த இண்டம்புதர்ல படந்து கெடந்தக் குறிஞ்சாக்கீரை கண்ணுல  படவும் எந்திரிச்சு, லேசா கெந்தி கெந்தி நடந்துப்போயி கீரையப் பறிச்சு மடியில கட்ட ஆரம்பிச்சா. பாதி மடி ரொம்பியிருக்கையில யாரோ வர மாதிரித் தெரியவும், சட்டுன்னு புதரவிட்டு வெளில வந்து ரோட்டைப் பார்த்தா.
மாடிவீட்டு ரெங்கராசு தன்னோட பல்சர, காட்டாத்துக் கரையோரமா இருக்கிற கருவ மரத்தடில நிப்பாட்டிட்டு, அதுல சாஞ்ச மேனிக்கே ஒரு கையில புகையிற சிகரெட்டும், இன்னொரு கையில செல்போன வச்சி நோண்டிக்கிட்டும் நின்னான். மட மடன்னு சலவ மடிப்புக் கலையாம, வெள்ளையுஞ் சொள்ளையுமா கரவேட்டி கட்டிக்கிட்டு, கைச்செயினு , மோதிரம்னு நிக்கிற அவன பாத்தாலேத் தெரியும். பெரும் பணக்காரன்னு. மல்லிகா வீட்டுக்கு ஒண்ணுவிட்ட பங்காளிதான் ரெங்கராசு.
ரெங்கராச பார்த்த மல்லிகா புதரவிட்டு ரெண்டு எட்டு எடுத்து வச்சிட்டு ஏதோ யோசனையா தலைய சொறிஞ்சிக்கிட்டே மறுபடியும் புதருக்கேத் திரும்பி கீரைய பறிக்க ஆரம்பிச்சிட்டா.
சிகரெட்ட இழுத்து முடிச்சிட்டு ரெங்கராசு வண்டிய ஸ்டார்ட் பண்ற சத்தம் கேட்டதும் , மல்லிகா அவன் கண்ணுல படுற மாதிரி விறுவிறுன்னு வெறவுக்கட்டுக்குப் பக்கத்துல போயி நின்னுக்கிட்டு அவனப் பாத்து, ”சொமய கொஞ்சம் தூக்கிவிடுறியா?” ங்கிற மாதிரி சிரிச்சா, பதிலுக்கு ரெங்கராசும் வேண்டா வெறுப்பா லேசா சிரிச்சு தலைய ஆட்டிட்டு, அவளோட சிரிப்பின் அர்த்தம் வெளங்காதவன் போலவே , வண்டிய கிளப்பிக்கிட்டு அவம் பாட்டுக்கு போயிக்கிட்டிருந்தான்.
மூஞ்சில அடிச்ச மாதிரி போச்சு மல்லிகாவுக்கு, ”பெரசண்டு எலக்ச வரட்டும், சித்தி நொத்தின்னுட்டு இளிச்சிக்கிட்டு வரயில இருக்கு” என்று தனது ஆற்றாமைய வாயவிட்டு புலம்பிக்கிட்டே மறுபடியும் மரத்தடிக்கேத் திரும்பி, கீரைகள ஆஞ்சபடி ஒக்காந்துட்டா.
நேரம் ஆக ஆக, பசி மயக்கத்துல ”உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” ன்னு பெலகீனமா மூச்சு விட்டவ, இங்கின குந்தியிருக்க நேரத்துக்கு வீட்டுக்கேப் போயி ஆள அழைச்சிகிட்டு வந்திரலாம்னு யோசிச்சு, ஆஞ்சக்கீரைய அப்படியே முடிஞ்சிக்கிட்டு எந்திரிக்கையிலே, ”என்ன அத்தாச்சி இங்கின குந்தியிருக்க, சொம தூக்கிவிடணுமா?” என்றபடியே தோள்ல மம்பட்டிய வச்சிக்கிட்டு வந்துக்கிட்டிருந்தான் அர்ச்சுனன்.
”யப்பா, நல்ல வேள நீ வந்த, வெறவு வெட்டி வச்சிக்கிட்டு ஒரு நாழியா குந்தியிருக்கேன், ஒரு புள்ள பொடுசக் காணு்ம்”ன்னு கெரக்கம் தட்டின கண்ணுல சிரிப்பத் தேக்கி சொன்னமேனிக்கே சும்மாடுக்கு கொண்டு வந்திருந்தத் துண்ட அவசர அவசரமா சும்மாடு கோல ஆரம்பிச்சா.
”அத்தாச்சி, இந்த மம்பட்டிய நீ எடுத்துக்க, நான் தூக்கிக்கிட்டு வறேன்"ன்னு அர்ச்சுனன் சொல்லிக்கிட்டே வெறவுக்கட்ட குனிஞ்சு தூக்கப் போனான்.
”அட நீயே வேல செஞ்சுக் களச்சுப் போயி வற, ஒனக்கு எதுக்கு செரமம், சும்மா தூக்கிவிடு, நான் தூக்கிக்கிட்டு வறேன்"னு சொன்ன மல்லிகாவ எடமறிச்சு,
”ஆமா நீ தூக்குன, கால வேற கெந்துற , சும்மா இரு அத்தாச்சி, நான் தூக்கிக் கொண்டாந்து போட்டுட்டுப் போறேன்"ன்னு சொல்லியபடியே ”ஒரு கைபோடு ” என்று மல்லிகாவிடம் வெறவுக்கட்ட தூக்கிவிடச் சொல்லி குமிஞ்சான்.
”இரு இரு இந்தா இந்த சும்மாட தலைக்கு வச்சிக்க” என்று துண்டை நீட்டினா மல்லிகா.
”துண்ட எந்தலையில வச்சிக்கிட்டு வந்தா அப்புறம் தீட்டுன்னு தொடமாட்டிக, நீயே வச்சிக்க ,புதுத்துண்டாட்டமா வேற இருக்கு, நான் ஓணாங்கொடிய பறிச்சு சுத்திக்கிறேன்”ன்னான் அர்ச்சுனன்.
”ம்ம்மா, தீட்டாம்ட தீட்டு, காசு பணம் இல்லைன்னா எல்லாந் தீட்டுதான்”ன்னு சொல்லிக்கிட்டே,கோலுன சும்மாட்ட அர்ச்சுன தலையில வச்சிவிட்டு, வெறவுக்கட்ட தூக்கிவிட்ட மல்லிகா, ”நட போவோம்”ன்னு சொல்லி அர்ச்சுனனின் மம்பட்டிய தூக்கிக்கிட்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.