Monday, September 28, 2009

எங்க ஊருக்கு தொலைக்காட்சி வந்த கதை

எண்பதுகளின் மத்தியில் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், எங்கள் ஊர் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நிறைய இடங்களில் தங்கி ஆயுதப் பயிற்சி எடுத்து வந்தனர். அப்போது அவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளுக்காக VCR மூலமாக அருகில் இருக்கும் கிராமங்களில் புதுப்புது படங்களை ஓட்டுவ‌து வ‌ழ‌க்க‌ம். டிக்கெட் ஒரு ரூபாய். முதன் முதலில் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கும் பாக்கியம் எங்கள் ஊருக்கு அவர்களின் மூலமாகவேக் கிடைத்தது.

அப்போது எங்கள் ஊரில் மூன்று வீடுகள் மட்டும்தான் மாடி வீடுகள். அதிலொன்று ப‌ள்ளியின் அருகிலேயே இருக்கும்.அவ்வீட்டின் மாடிப் படிகளில் ஏறமுடியாதவாறு முட்களைக்கொண்டு அடைத்து வைத்திருப்பார்கள். திருட்டுத்தனமாக அவ்வீட்டின் மாடிப்படியின் பக்கவாட்டு சுவரில் சறுக்கி விளையாடுவது எங்கள் சிறுபிராயத்தின் சாகச விளையாட்டுகளில் ஒன்று. அந்த வீட்டில் பாட்டி ஒருவர் இருக்கிறார் , அவர் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான் மனித குலம் தோன்றிய காலத்தைய முன்னோரில் ஆரம்பித்து எங்களுக்கு பிந்தைய தலைமுறைக்கெல்லாம் சேர்த்து சாபம் விடுவார். இன்னொரு மாடி வீடு எனது நண்பனின் வீடு என்பதால் அங்கே அடிக்கடி மாடியில் ஏறிப்பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மூன்றாவது வீட்டு மாடியின் அமைப்பு எப்படி இருக்குமென்றே தெரியாத அளவிற்கு எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அந்த வீட்டு மாடியில்தான் முதல் வீடியோ அரங்கேற்றம் நிகழ்ந்தது.

படம் பார்ப்பதைக் காட்டிலும் அவ்வீட்டின் மாடியை பார்க்கப் போகிறோம் என்கிற ரெட்டைச் சந்தோஷமெனக்கு. ”பூக்களைப் பறிக்காதீர்கள்”, ”வளையல் சத்தம்” மற்றும் ”முத்துக்கள் மூன்று” ஆகிய மூன்று படங்களை அப்போது ஓட்டினார்கள். கொடுத்த ஒரு ரூபாய்க்கு ஆசைத்தீர அந்த மாடிப்படிகளில் ஏறி இறங்கினேன். மற்றபடி படத்தின் தலைப்பைத் தாண்டி கதை பற்றியெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளும் வயதில்லை.ஏதோ படம் தெரிந்தது அவ்வளவுதான்.

என் கூட்டாளிப் பசங்களின் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் பக்கத்து ஊர்களிலேயே இருப்பார்கள். ஆனால் எனது பாட்டி வீடு கொஞ்சம் தூரத்தில் உள்ள ஒரு சிறு நகரமென்பதால் அடிக்கடி பஸ் ஏறி பார்ப்பவன் என்கிற ரேஞ்சில் நிறைய பெருமைகள் எனக்கிருந்ததால் நான் சொல்வதே அவர்களுக்கு வேதவாக்கு. எங்க பாட்டியின் ஊர்ல ரோட்டுல கப்பல் போகும்டான்னு சொன்னாக் கூட நம்பும் வெள்ளந்தி பயமக்க. பாட்டியின் வீட்டிற்குச் செல்லும்போது சில வீடுகளில் ஆண்ட்டெனாவைப் பார்த்திருப்பதால் தொலைக்காட்சிப் பெட்டியில் படம் தெரிய ஆண்ட்டெனா அவசியமென சொல்லியிருந்தேன். ஆனால் அன்று ஆண்டெனா இல்லாமல் படம் ஓடியதைக் கண்டு எப்படி இது சாத்தியமென்று எனக்கோ ஒரே குழப்பம். மற்ற பசங்களின் முன் முதன் முறையாக என் ரீல் அந்து போனது அப்போதுதான். அதன் பின் நான் என்ன சொன்னாலும் கையால் ரீல் சுற்றுவதைப் போல் சைகை செய்து கமுக்கமாய் சிரித்து வெறுப்பேற்றுவானுங்க.

விடுதலைப் புலிகள் போட்டு வைத்த பிள்ளையார் சுழியைத் தொடர்ந்து எங்கள் ஊர் இளைஞர் மன்றத்தினர் விடுமுறை நாட்களில் தஞ்சையிலிருந்து வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து வந்து பள்ளிக்கூடத்தில் வைத்து வருடத்திற்கு இரண்டு மூன்று முறை படம் ஓட்ட ஆரம்பித்தார்கள். நாயகன், கரகாட்டக்காரன் போன்ற படங்களை ஓட்டியபோது தியேட்டரைப் போன்றே பெரும்கூட்டம் திரண்டது.

சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு இலவச அனுமதி வேண்டியும், சிலர் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு பள்ளிக்கூடத்தையே அழைத்து வந்து ஐம்பது காசைக்கொடுத்து பேரம் பேசுவதெல்லாம் வேறு நடக்கும். அப்படி டிக்கெட் எடுக்க காசில்லாமல் வெளியில் நிற்பவர்கள் பள்ளிக்கூடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்க்க என்னன்னவோ வித்தைகளெல்லாம் செய்வார்கள். ஆனாலும் ஒவ்வொரு ஜன்னலிலும் ஒருத்தர் தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல் கதவுகளை உள்பக்கமா இழுத்து பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். முதல் படம் ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் ஏகப்பட்ட கெடுபிடிகளாக இருக்கும். பிறகு ஒன்னுக்கடிக்க வெளியில் வருபர்களோடு சேர்ந்து டிக்கெட் எடுக்காதவர்களும் நைசாய் வந்து அமர்ந்து விடுவார்கள். ஓரளவு முதலுக்கு மோசமில்லாத வசூல் வந்ததும் வெளியில் நிற்பவர்களை மன்றத்து அண்ணன்களே இலவசமாக அனுமதித்துவிடுவார்கள். காசு கொடுத்து வந்தவனெல்லாம் முதல் படம் முடிந்ததும் தூங்கிவிடுவான், பிளாக்கில் வந்தவர்கள் விடியவிடிய படம் பார்த்துவிட்டு விடிந்ததும் டிக்கெட் எடுத்த பார்ட்டிகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

சில தடவை எங்க அப்பா படம் பார்க்க அனுமதி கொடுக்காமல் கிராமர் எடுக்க ஆரம்பித்து விடுவார். அன்றைக்கு காலையில் இருந்தே சும்மாதான் திரிந்து கொண்டிருந்திருப்பேன் ஆனால் படம் போடும் நேரத்தில்தான் பாடம் நடத்த ஆரம்பிப்பார். பள்ளிக்கூடமும் எங்க வீடும் அடுத்தடுத்து இருப்பதால் அங்கே படம் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இவரோ இங்கே ”ராமு இஸ் ஸ்மாலர் தேன் ராஜா” இதை பாஸிடிவ் டிகிரியா மாத்து என்பார். துக்கம் தொண்டையை அடைக்கும், கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கும். பிறகு கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ”போய்த்தொல” என்று காசு கொடுத்து விரட்டிவிடுவார். சில தடவை அழிச்சாட்டியமாய் அனுப்பவே மாட்டார். அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் பொறந்தாலும் வாத்தியார் பிள்ளையா மட்டும் பொறக்கக் கூடாதென்று.

1990 ல் எங்கள் ஊருக்கு பஞ்சாயத்துத் தொலைக்காட்சியின் வருகை நிகழ்ந்தது . டீ.வி வந்த அன்று ஊரே பள்ளிக்கூடத்தின் முன்பு திரண்டு விழாக்கோலம் பூண்டு வரவேற்றது அந்த பிளாக் அண்ட் ஒயிட் சாலிடர் டீ.வியை. ஆண்டெனாவை ஃபிட் செய்து இப்படியும் அப்படியுமாய் திருப்பி சிக்னலைப் பிடித்து ஒரு வழியாய் ஏதோ ஹிந்தி நிகழ்ச்சி ஓட ஆரம்பித்தது. கலைக்கு மொழியில்லை என்பதை முழுதாய் உணர்ந்த நாள் அது. ஊர் மொத்தமும் அசையாமல் பார்த்து ரசித்தது அன்றைய ஹிந்தி நிகழ்ச்சிகள் முழுவதையும்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை படத்திற்கும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கும் தவமாய் தவமிருந்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் பசுமையான காட்சிகளாக நினைவில் விரிகிறது. ஞாயிற்றுக் கிழமை ஐந்து மணிக்கு ஒளிபரப்பாகும் படத்திற்கு மூன்று மணிக்கே பள்ளியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அன்றைய எல்லா வேலைகளும் படம் பார்ப்பதை மனதிற்கொண்டே பக்கா பிளானிங்கா முன்கூட்டியே நடக்கும். இது சிறுவர்கள்,பெண்கள் தொடங்கி ஊரின் அத்தனை பேருக்கும் பொருந்தும். அப்படி இருக்கும் சமயத்தில் பவர் கட் ஆகிவிட்டால் துக்க வீடு கணக்கா யாரோடும் பேசும் மனநிலையற்று பித்து பிடித்ததைப் போன்று அமர்ந்திருப்பார்கள். பவர் வருவதற்கு முன்பாகவே எவனாவது “ஹைய்யா கரண்ட் வந்திடுச்சு ” என்று கத்தி கொலைவெறியை கிளப்புவானுங்க. அப்படிக் காத்துக் கிடந்து பார்ப்பது அரதப் பழசான ஒரு பூலோக ரம்பையோ, மாகாக்கவி காளிதாசோவோதான் இருக்கும். எப்போதாவது ”மூன்றாம் பிறை”, ”வேலைக்காரன்” போன்ற ரிலிஸாகி ஐந்தாறு வருடங்களேயான புதுப்படங்களை ஆச்சர்யமாய் ஒளிபரப்புவார்கள்.

தூர்தர்ஷனைத் தவிர வேறு சானல்களும் இல்லாததால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்களைக் கூட ஆர்டராக மனப்பாடம் செய்து ஒப்பித்த காலமது. ரொம்ப பிரசித்திப் பெற்ற விளம்பரம் ”என்ன ஆச்சு குழந்த அழுது” என்று ஆரம்பிக்கும் கிரேப் வாட்டருக்கான விளம்பரம்தான்.
இது போன்ற விளம்பரங்களைப் பார்க்கையில் மண்வாசனையோடு பசங்க உதிர்க்கும் கமெண்ட்ஸ், தடங்கலுக்கு வருந்தும்போது வரும் கூஊ...ஊ சவுண்டுக்கு கோரஸ் பாடுவது என ரகளையான நாட்கள் அவை.

பஞ்சாயத்து டீ.விதானே என்று ஆளாளுக்கு உரிமை கொண்டாடியதில் சீக்கிரமாகவே பல்லிளித்தது அந்த சாலிடர். ஸ்கிரினில் ”ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்தோடு தெரியும் மங்களான காட்சிகளைக் கூட விடாமல் பார்க்க ஆரம்பித்து வீடியோ இல்லாமல் வெறும் ஆடியோவை மட்டுமே கேட்கும் ரேடியோவாகவும் பரிணாமத் தேய்வு அடைந்து பல பரிமாணங்களில் வேலை செய்தது அந்த சாலிடர். பிறகு ஒரு நாள் யார் ஆப்பரேட் செய்வது என்ற சண்டையில் ஒன்றுக்கும் உதவாத ஜடமானது. சண்டையின் உச்சத்தில் அதுவரை அமைதியாக இருந்த ஒரு அண்ணன் ”எனக்கும் இந்த டீவியில் ஒரு நெட்டாவது பங்குண்டு” என்று சொல்லியபடியே பூஸ்டரை தூக்கி உடைத்துவிட்டு எழுந்து சென்றார். ஒரு வழியாய் பஞ்சாயத்து டீ.விக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள். அந்த சமயம்தான் ராஜிவ்காந்தி அஸாசினேஷன் நடந்தது. எங்க ஊரில் டீ.வி ஓடாததால் ராஜிவ் காந்தி அவர்களின் இறுதி ஊர்வலக் காட்சிகளைப் பார்ப்பதற்காக பக்கத்து ஊருக்கு குறுக்குப் பாதையில் காட்டாற்றில் இறங்கி கொளுத்தும் வெயிலில் கருவேலங்காட்டினுள் புகுந்து சென்று பார்த்ததெல்லாம் மறக்கமுடியாத நினைவுகள்.

இரண்டு வருடங்களாக தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்து பழகிவிட்ட எங்க அப்பா எங்கள் வீட்டிற்கு ஒனிடா 21 இன்ச் கலர் டீவியை 92ம் வருடம் திபாவளி அன்று வாங்கிவந்து எங்களை ஆச்சர்யப்படுத்தினார். அதுதான் எங்கள் பகுதிக்கே முதல் வண்ணத்தொலைக்காட்சி. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீட்டின் வாசலில் டீ.வியை எடுத்து வைத்து விடுவோம் ஊரே அன்று எங்கள் வீட்டின் வாசலில் இருக்கும். நான்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பக்கத்து ஊர் இளைஞர்கள் சிலர் சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு வேல்ட்கப் ஃபுட்பால், கிரிக்கெட் பார்க்க வந்த கதையெல்லாம் உண்டு. படம் பார்க்க வரும் மக்கள் எங்கள் வீட்டு வாசலையே டாய்லெட்டாக்கி அசிங்கம் செய்து வைத்ததால் என்னென்னவோ ரூல்ஸ் போட்டும் யாரும் மதிக்காததால் சில மாதங்களுக்குப் பிறகு டீ.வியை வெளியில் எடுத்து வைப்பதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

இலங்கை சேனல்களான ரூபவாஹிணியும், ஐ.டி.என்னும் அவ்வப்போது கிராஸ் ஆகும். அதில் ஐ.டி.என்னில் புத்தம் புது தமிழ் படங்கள் ஒளிபரப்புவார்கள். பாதி படம் வரை நன்றாகத் தெரியும் திடீரென சிக்னல் கட்டாகிவிடும் அந்த சமயத்தில் ஆண்டெனாவை திருப்பித் திருப்பியே நாளெல்லாம் மண்வெட்டி பிடித்து வெட்டுபவனைப் போல கடுமையாய் கை காய்த்துப் போய்விடும்.

இப்போது வீடு தவறாமல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், கேபிள் இணைப்பும் இருக்கிறது ஆனாலும் அளவோடு இருந்ததால் அமுதாய் தெரிந்த அந்த ஒலியும் ஒளியும் காத்திருப்பின் சுகமே தனிதான்.

Friday, September 25, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க...

சென்ற மாதம் நண்பர் ஒருவரின் திருமண விழாவில் வந்திருந்தவர்கள் எல்லோருக்கும் மணமக்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட கைக்குட்டையை வழங்கினார்கள். அந்தக் கைக்குட்டை அநியாயத்திற்கு சின்னதா இருந்தது. வழக்கம் போல என்னோட குசும்பு பிடித்த நண்பன் (அந்த டீக்கடை பையனிடம் லந்து அடித்தாரே அவரேதான்) கைகுட்டை வழங்கிக்கொண்டிருந்த இன்னொரு நண்பரிடம்,
நண்பர் 1: ஆமா என்ன கொடுத்திட்டு இருக்க
நண்பர் 2: கர்சிஃப் தாண்ணே
நண்பர் 1: அப்படின்னா, தமிழில் சொல்லுய்யா
நண்பர் 2: (சிரித்துக்கொண்டே) கைக்குட்டைண்ணே
நண்பர் 1:ம்ம்,இதுக்கு பேரு கைக்குட்டையா ? விரல்குட்டைன்னு வேணா சொல்லிக்க.
நண்பர்2:??????
*************************
பதிவுலகில் சில நண்பர்கள் ரொம்ப அவசியமான சிந்திக்க வைக்கக் கூடிய விஷயங்களைப் பற்றிய டாப்பிக்கை எடுக்கிறார்கள்.ஆனால் அந்த விஷயத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்கள் இல்லாமலேயே எழுதுகிறார்கள்.சில விஷயங்கள் வயதின் ஓட்டத்திலும்,அனுபவ ரீதியாகவும் தான் புரிந்துகொள்ள இயலும் என்பது என் எண்ணம், வாசிப்பனுவத்திலேயே எல்லாத்தையும் அனுகிவிட முடியாது. அப்படியொரு நண்பர் தொடர்ந்து ஆழமான விஷயங்களை மேம்போக்காக என்று கூட சொல்ல முடியாதபடிக்கு எழுதிக்கொண்டிருக்கிறார். ஊடகங்களில் வரும் செய்திகளில் சுவாரஸ்யத்திற்காக சேர்க்கப்படும் யூகத்தின் அடிப்படையிலான செய்திகளையும் அப்படியே நம்புபவர் போல் இருக்கும் அவரின் தர்க்கங்கள். இந்த மாதிரி எழுதுபவர்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. அதைவிட இந்த இடுகைகளுக்கு வரும் ’அருமையாச் சொன்னீங்க’ என்பது போன்ற டெம்பிளேட் பின்னூட்டங்கள் இன்னும் பயமுறுத்தும் விஷயங்களா என் அளவில் தோன்றுகிறது.
*************************
சிறுகதை பட்டறையில் டீ இடைவேளையில் சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிறுகதை எழுதும்போது வாசிப்பாளனுக்கு கதையின் நம்பகத் தன்மையை கூட்ட ஒரு சின்ன டிப்ஸ் சொன்னார் சுந்தர்ஜி , எடுத்துக்காட்டாக,”அவன் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது” என்பதைக் காட்டிலும் ”அவன் கையில் கிங்ஸ் புகைந்து கொண்டிருந்தது” ,அணிந்திருந்த புதுச் சட்டை கசங்கியது என்பதைக் காட்டிலும் அந்த சேர்ட்டின் பிராண்ட் நேம் யூஸ் பண்ணலாம் அப்படி எழுதும் போது கதைக்கு எதார்த்தம் கூடும் என்றார். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம் ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
*************************
பிளாஸ்டிக் கப்பின் உபயோகத்தை தடைசெய்ய உத்தரவு பிறப்பித்தும் இன்னும் நிறைய டீக்கடைகளில் பிளாஸ்டி கப் பயன்படுத்துகிறார்கள்.நாட்டில் எவ்வளோ பிரச்சனை இருக்கு இப்போ இதுதான் முக்கியமான்னு நானும் சராசரியா யோசிச்சிட்டு போயிடுவது வழக்கம். சமீபத்தில் ஒரு மாவட்டத்தின் தலைநகர நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் டீக்கடையிலேயே போலிஸாரும் வழக்கறிஞர்கள் சிலரும் பிளாஸ்டிக் கப்பில் டீ அருந்திக்கொண்டிருப்பதைப் பார்த்து சராசரிக்கும் சராசரி மனுஷனாய் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வந்தேன்.
*************************
பிரபல பதிவர் ஒருத்தர் என்னிடம் சாட்டில் ” உறுபசின்னா என்ன தல” என்றார். ”தெரியலையே நண்பா” என்று நான் அனுப்பிய அடுத்த நொடியில் துள்ளி வந்தது அவரிடமிருந்து அடுத்த மெஸேஜ் ”அப்போ உங்க பேரின் பின் பாதியை கட் பண்ணிடுங்க” என்று.அதற்கு பதிலாக நான் டைப்பி அனுப்பாமல் விட்டது இங்கே ”நான் என் பேரின் பின்பாதியை கட் பண்ணிக்கிறேன் .நீங்க உங்க பேரின் முன் பாதியை கொஞ்சம் கட் பண்ணிக்கோங்க” . யாரந்த பி.ப ?

Tuesday, September 22, 2009

நான் நானில்லை....

ஆறேழு மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு குத்தகைப் பணம் வாங்க கடைசி பஸ்ஸில் வந்திறங்கினேன்.

சற்றுமுன் பெய்த பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தெரு விளக்குகள் எரியாமல் பயங்கர இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரம் காட்சிகள் ஏதும் புலப்படாமல் அப்படியே நின்று கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

கருமேகங்கள் திரண்டு இருட்டின் அடர்த்தியை கூடுதலாக்கிவிட்டிருந்ததால் பாதையை நிதானிப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. பஸ்ஸில் வரும்போதே நண்பன் ஒருவன் போட்ட ரம்பத்தில் செல்போனிலும் சார்ஜ் போய்விட்டிருந்தது.அருகில் ஓடும் ஆற்று நீரின் சலசலப்பு மட்டும் மெலிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து எதிரே இருந்த ஆற்றுப் பாலத்தின் வெள்ளைச் சுவர் மங்கலாய் தெரிய ஆரம்பித்தது. ஒருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அகலத்தில் இருக்கும் அந்தப் பாலத்தைக் கடந்து வயல்வெளியூடாக செல்லும் மண்பாதையில் ஒரு பத்து நிமிட நடையில் ஊர் வந்துவிடும்.

பாலம் பலம் இல்லாமல் கான்கிரீட் பெயர்ந்து ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் ஓட்டைகளாயிருந்தது. நிதானமாய் அடிமேல் அடிவைத்து கழைக்கூத்தாடி வித்தையைக் காட்டி ஒருவழியாய் பாலத்தைக் கடந்து மண்பாதையை அடைந்தேன்.

மண்பாதையின் ஆரம்பத்திலேயே அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில் மரத்தின் கழிகள் காற்றில் எழுப்பிய ”கீர்ர்ர்ர்..கிய்ய்ய்” ஒலியானது அச்சத்தை உண்டாக்கியதில் அதுவரை அமைதியாக வந்துகொண்டிருந்தவன் பயத்தை மறைக்க பாடல் ஒன்றை முணுமுணுக்க ஆரம்பித்தேன். நடையின் வேகமும் அனிச்சையாய் கூடியது.


பத்தாம் வகுப்பு படிக்கும் வரை இதே ஊரில்தான் இருந்தோம், இப்போது அப்பா வேலை பார்க்கும் ஊரிலேயே எங்கள் படிப்பும் தொடர்வதால் அங்கேயே செட்டிலாகிவிட்டோம். சொந்த ஊரில் பாட்டி மட்டும் இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பொங்கல்,கோயில் திருவிழா போன்ற விஷேச நாட்களில் மட்டுமே ஊருக்கு வருவதென்றாகிவிட்டது.


வழக்கமாய் குத்தகைப் பணம் வசூலிக்க அப்பாதான் வருவார். இந்தத் தடவை காலேஜ் லீவாக இருந்ததாலும் ஊர் பசங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் நானே வந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து வருவதால் எனக்கு அந்த இருட்டு ரொம்பவே பயத்தைக் கொடுத்தது. ”பேசாமல் காலையில் வந்திருக்கலாமோ” என நினைத்துக்கொண்டே நடையின் வேகத்தை முடிந்தவரைக் கூட்டினேன்.


பாதையின் இருபுறமும் இருக்கும் வயல்களிலிருந்து தத்துப் பூச்சிகளின் சத்தமும், தவளைகளின் சத்தமும் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது. இன்னும் சில அடிகள் நடந்து ரெட்டை ஆலமரங்களைக் கடந்துவிட்டால் அப்புறம் பொட்டல்வெளிதான். அதன் பின் பயமில்லை என்று எண்ணியபடியே வந்து கொண்டிருந்தவன் ஆலமரத்தின் கீழ் ஏதோ ஒரு உருவம் தெரிந்ததைப் பார்த்து அப்படியே திடிக்கிட்டு நின்றுவிட்டேன்.

மழைபெய்து சில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்தும் எனக்கு லேசாய் வியர்க்க ஆரம்பித்தது. அது என்னவாக இருக்கும் என்று உற்று கவனித்தேன். அதனிடம் எந்த அசைவும் இல்லை. பயத்தில் அடுத்த அடி எடுத்து வைக்கத் தயங்கியபடியே வெலவெலத்துப் போய் அசையாமல் நின்று கொண்டிருந்தேன். “ஏன் வம்பு பேசாமல் மீண்டும் ஆற்றுப் பாலத்திற்கே திரும்பிவிடலாமா” எனவும் யோசிக்க ஆரம்பித்தேன். தூரத்தில் ஊருக்குள் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.


அது மனித உருவம் மாதிரியும் வேறு மாதிரியும் மாறி மாறி தெரிந்தது, ஒரு வேளை பயத்தால் என் கற்பனையில் தோன்றிய பொய்பிம்பமோ எனவும் சந்தேகம் எழ குழம்பியபடியே பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென ஆலமரத்திலிருந்து ஆந்தையோ வேறேதேனும் பறவையோப் பறந்ததில் கிளைகளில் சிறிது சலசலப்பு உண்டாக பயந்து வியர்த்து போயிருந்த நான் என்னையுமறியாது ”யாரது” என்று பெருங்குரலெடுத்து அலறினேன்.

என் அலறலைக் கேட்ட அந்த உருவம்,”யாருப்பா அது” என்றதும்தான் அட யாரோ மனுஷன்தான் நிக்குறான்னு பயம் மறைந்து நிம்மதியாயிருந்தது. 
வேகவேகமாய் அந்த ஆளின் பக்கத்தில் சென்று யாரென்று பார்த்தால் பக்கத்து ஊர் செல்லத்துரை.ஸ்கூலில் செல்லத்துரை எனக்கு ரெண்டு வருட சீனியர். என்னைப் பார்த்ததும்,

 ”அட சரவணனாடா என்ன இந்த நேரத்துல “ என்றான்.
நான் வந்த விஷயத்தை அவனிடம் சொல்லிவிட்டு, ” இந்த நேரத்தில நீ என்ன இங்கே பண்ணிட்டு இருக்க ” என்றேன்.


”பக்கத்து களத்து மேட்டுல கருதுக் கட்டு கிடக்கு அதான் காவலுக்கு வந்தேன்” என்று சொல்லிவிட்டு ” என்னடா இருட்டைப் பார்த்து பயந்துட்டியா, சரி வா ஊர் வரைக்கும் துணைக்கு நானும் வரேன்” என்றபடியே என்கூட பேசிகிட்டே நடக்கலானான். எனக்கும் அப்பாடான்னு நிம்மதியா இருந்தது.


”அப்புறம் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்க”


“பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபைனல் இயர்” 


“நீயெல்லாம் நல்லா படிச்சிகிட்ட அடுத்த வருஷம் வேலைக்கு போயி பணத்த அள்ளு அள்ளுன்னு அள்ளப் போற” என்றான்.


என்னடா இவன் இப்படி பேசுறானேன்னு நினைத்தபடியே ”பார்க்கலாம்” என்றேன்.


”ஊருக்குள்ளே ஓட்டு வீடு மட்டும்தானே இருக்கு அத மாடிவீடா கட்டுனா என்ன,உங்க அப்பாரு சம்பாதிக்கிற பணத்தயெல்லாம் என்ன பண்றிய? அப்படியே பீரோக்குள்ளயே வச்சு கரையான் அரிச்சிட போவுதுடா” என்றான்.
ஓங்கி அறைந்துவிடலாமான்னு வந்த வெறியை அடக்கிக்கொண்டு எதுவுமே பேசாமல் கேட்டுகிட்டே வந்தேன்.


“இதுவரைக்கும் நம்ம ஸ்கூலில் எவனும் நான் எடுத்த மார்க்கை எடுக்கல ஆனா பாரு நான் வெங்கப் பயலா போயிட்டேன், நீயெல்லாம் இஞ்சினியர் ஆயிட்ட, காசு இருக்கு கச்சேரி நடத்துறிய” என்றான்.

இதைக் கேட்டதும் ”சே பாவம் அவனுக்கு என்ன பிரச்சனையோன்னு அவன்மேல் பரிதாபமாய் இருந்தது.


இப்படியே ஊர் வர்ர வரைக்கும் வயித்தெரிச்சல் புடிச்சக் கேள்வியா கேட்டுக்கொண்டே வந்தான். ஒருவழியா ஊரை வந்தடைந்ததும்,” சரி சரவணா இனி நீயே போயிடுவல்ல நான் களத்துக்கு போறேன்” என்றபடியே விடைபெற்றுக்கொண்டான்.


”இவன் கூட வந்ததற்கு பேசாமா தனியாவே வந்திருக்கலாம்” என எண்ணிக்கொண்டே வீட்டையடைந்தேன். வாசலிலேயே என் வருகையை எதிர்பார்த்து உட்கார்த்திருந்த பாட்டி, ”யய்யா,நேரமா வர வேண்டியதுதானே இன்னும் ஆளக்காணாமேன்னு கெத்து கெத்துன்னு ஒக்காந்திருக்கேன்” என்றாள்.


”சீக்கிரமாத்தான் கிளம்பினேன் ஆறு மணி பஸ் ஏதோ ரிப்பேருனுட்டாய்ங்க அதான் கடைசி பஸ்ல வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே உடை மாற்றிவிட்டு பாட்டி எனக்காக தயார் செய்து வைத்திருந்த சாப்பாட்டை ஒரு புடி புடித்துவிட்டு அசந்து தூங்கியதில் காலையில் எழுந்திருக்க பத்து மணியாகிவிட்டது.


குத்தகைப் பணத்தை வசூல் செய்துவிட்டு, ஊர் பசங்களோடு அளவளாவி முடித்து செல் நம்பர்களை பறிமாறிக்கொண்டு ஊருக்குக் கிளம்பும்போது மணி இரவு எட்டாகிவிட்டது.மீண்டும் மழை வருவதற்கான அறிகுறி தென்பட வேக வேகமாக பஸ் ஸ்டாப்புக்கு நடையைக் கட்டினேன்.


அதே ஆலமரத்தின் அருகே வரும்போது பளீரென ஒரு மின்னல் வெட்டியதில் மறுபடியும் பவர் கட்டாகியது. தெருவிளக்குகள் அணைந்து சட்டென்று நேற்றைப்போலவே கும்மிருட்டாகி எதுவுமேத் தெரியவில்லை. நல்ல வேளை செல்போனில் சார்ஜ் போட்டிருந்தேன். லைட்டடிக்க செல்போனை பாக்கெட்டிலிருந்து எடுக்கும் போதே எதோ புதிய எண்ணிலிருந்து கால் வந்தது அட்டெண்ட் செய்தால் எனது பால்ய நண்பன் செந்தில்.


“என்ன பங்காளி ஊருக்கு வந்திருந்தியா,நான் கொஞ்சம் வேலையா வெளியூர்ல இருக்கேன், இப்போதான் பசங்களுக்கு போனடிச்சேன் நீ வந்துட்டு போனன்னு சொல்லி உன் நம்பரக் கொடுத்தாய்ங்க” என்று ஆரம்பித்தவனிடம் 
”ஆமாண்டா பஸ் ஏற போயிட்டிருக்கேன், ரெட்டால மரத்துகிட்டதான் போயிட்டுருக்கேன் ” என்றேன்.


”அப்படியா பார்த்து போடா, போன மாசம் அந்த ரெட்டால மரத்திலதான் பக்கத்து ஊரு செல்லத்துரை தூக்குமாட்டிச் செத்தான்”என்றான்.

இதைக் கேட்டதும் ”என்னது” என்று பதறி அலறியதில் செல்போன் கீழே விழுந்துவிட்டது. சற்றும் யோசிக்காமல் ஆலமரத்தை நோக்கினேன் அங்கே அந்த உருவம். அடுத்த நொடியில் மயங்கிச் சரிந்தேன்.
எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் என்றேத் தெரியவில்லை,முழிப்பு வந்ததும் மெல்ல எழ முயன்றேன் என்னால் முடியவில்லை. இன்னும் இருட்டாகவே இருந்தது. ஆலமரத்தின் கீழ் அந்த உருவம் இப்போது இல்லை
.தூரத்தில் யாரோ இருவர் பேசிக்கொண்டு வருவது கேட்டது.அந்தக் குரல் ரொம்பப் பரிச்சயமானதாக இருந்ததால் யாரென்று அறிந்து கொள்ள காதைத் தீட்டினேன்.
”அருமையான பையன்யா சரவணன் இப்படி அவனைப் போயி இந்த செல்லத்துரை பய அழைச்சிக்கிட்டானே,நேத்து இந்நேரமெல்லாம் உசுரோட இங்கன இருக்கான், இன்னைக்கு ப்ச் அவன் விதி அவ்வளவுதான் ” என்று செந்தில்தான் யாரோடோ பேசிக்கொண்டு வந்தான்.
டிஸ்கி: இதையே முடிவாய் நெனச்சுக்குறவங்க நேரடியாய் பின்னூட்டலாம். இன்னும் திருப்தியில்லை என்பவர்கள் மேலே இருக்கும் வெற்றிடத்தை select செய்து படிக்கவும்.

வேட்டைக்காரன் என் பார்வையில்

ஒரு பேராழியில் ஏற்படும் மிகப்பெரிய கொந்தளிப்புக் காட்சியோடு தொடங்குகிறது படம். கேமரா சூம் அவுட் ஆக ஆக பரந்து விரிந்ததொரு ஆலமரத்தினடியில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கும் எணணெய்ச் சட்டிதான் அந்த பெருஞ்சமுத்திரம் எனத் தெரியும்போது ’அட’ என ஆரம்பக்காட்சியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

பாட்டியின் கடையில் வடைக்கு ஏகப்பட்ட கியூ நிற்க, பாட்டியோ தன் பேரன் முதல் போணி செய்தால்தான் மற்றவர்களுக்கு வடையெனச் சொல்லியபடியே தட்டில் வடையை வைத்துக்கொண்டு காத்திருக்க, திடீரென இடியும் மின்னலுமாய் பெருமழைக்கான அறிகுறிகள் தோன்ற எங்கிருந்து வருகிறார் என்றேத் தெரியாமல் மாடுகள் மிரளும், நாய்கள் கண்டால் நாற்பது கிலோமீட்டருக்கு துரத்தும் நிறத்திலான காஸ்ட்யூமில் பாட்டியின் முன்பு தோன்றுகிறார் ஹீரோ.

”வந்துட்டியா ராசா” என்று பாட்டி ஹீரோவின் முகத்தை வருடி திருஷ்டி முறிக்கும்போது மீண்டும் மின்னல் வெட்டி இடியிடிக்கிறது, ஹீரோ தனது தலையைச் சாய்த்து வானத்தை நோக்கி கிராஸாக ஒரு லுக்விட திரண்டிருக்கும் கருமேகக் கூட்டங்கள் பஞ்சாய் திக்கெட்டும் பறக்க, பளீரென வானம் துடைத்து வைக்கப்பட்டதுபோல் ஆகிவிடுகிறது.

இக்காட்சியைக் கண்டதும் விசில் சத்தம் தியேட்டரை நிறைக்கிறது, அந்தச் சத்தத்தோடே தனது அறிமுகக் குத்துப் பாடலை ஆடிமுடிக்கிறார் ஹீரோ.

பாடல் முடிந்ததும் பாட்டியம்மா வடையை ஹீரோவிற்கு ஊட்ட எத்தணிக்கும்போது ஆலமரத்தில் அமர்ந்து ரொம்ப நேரமாக வடைமேலேயேக் கண்ணாக இருக்கும் ஒரு காக்கா இமைக்கும் நேரத்தில் வடையை கவ்விக்கொண்டுச் சென்றுவிடுகிறது.

இதை எதிர்பாரா பாட்டி மற்றும் பேரனின் முகங்களில் அதிர்ச்சி அலைகள். மீண்டும் கார்மேகம் சூழ்கிறது. பாட்டி பத்து கட்டபொம்மி(கள்),ஐம்பது மனோகரா கண்ணாம்பாள்(கள்),நூறு கண்ணகி(கள்)யாக மாறி ”பேராண்டி அந்த காக்காவை சும்மா விடக்கூடாது,அதை சூப் வைத்தேத் தீருவேன். நீ உப்பு போட்டு வடை திங்கறவனாயிருந்தா அந்த காக்காயோட என்னை வந்து பாரு, அப்படியில்ல இந்த ஜென்மத்துக்கும் உனக்கு வடை கிடையாது” என ’வட போச்சே’ என்கிற ஆதங்கத்தில் வீரவசனம் பேசுகிறார். ஒவ்வொரு வசனத்திற்கும் இடையிலும் பயங்கரமான இடி மின்னல் எஃபெக்ட்டும் அதைவிட பயங்கரமாக ஹீரோவின் குளோசப் ஷாட்களுமாய் பட்டாசாய் இருக்கிறது அக்காட்சி.

பாட்டி தனக்கு சின்ன வயதிலிருந்தே வடை கொடுத்து வளர்த்ததை ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் ஓட்டி முடித்து, வடைக்கு விடை தேடும் முயற்சியாக அந்தக் காக்காவைப் பிடிக்க வேட்டைக்காரனாகிறார் ஹீரோ.

இங்கே ஆரம்பிக்கும் பரபரப்பு இறுதிவரை தொடர்கிறது. அதன் பின் ஹீரோ வரும் ஒவ்வொரு காட்சியிலும் பேக்ரவுண்டில் வரும் அந்த ”காரன் காரன் வேட்டைக்காரன்” தீம் மியூசிக் பட்டையைக் கிளப்புகிறது.

மரத்திற்கு மரம் பறந்து எப்படியாது வடையை தின்றுவிட போராடும் காக்காவைவிட பலமடங்கு உயரத்தில் பறந்து பறந்து விரட்டும் ஹீரோவைப் பார்த்து காக்கா மிரளும் குளோசப் ஷாட்களில் கேமரா மேன் சபாஷ் வாங்குகிறார்.

ஹை ஓல்ட்டேஜ் மின்சாரக் கம்பிகளிலெல்லாம் ஹீரோ அனாயசமாக தொங்கிச் செல்லும் காட்சிகளில் ஹீரோவின் பவர் என்ன என்பதை நேரடி வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு ரசிகனுக்கும் புரிய வைப்பது டைரக்டரின் சாமர்த்தியம். இப்படி பல காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் படமெங்கும் தோரணங்களாய்.

மாற்றி மாற்றிப் பறந்ததில் ஹீரோவும் காக்காவும் ஒரு காட்டிற்குள் வந்துவிடுகின்றனர். காக்கா மிகவும் சோர்வாகி ஆற்றங்கரை மரமொன்றில் அமர்ந்துவிடுகிறது. ஹீரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருகும் மரப்பாலத்தில் நின்று வில்லில் அம்பை வைத்துக் காக்காவை நோக்கி குறிபார்க்கையில் ஒரு கட்டெறும்பு ஹீரோவின் காலைக்கடிக்க ஹிரோ அவசரமாய் காலை சொறியக் குனிகையில் தவறி ஆற்றில் விழப்போகிறார் அப்போது அவ்வழியாய் வரும் காட்டுவாசிப்பெண் ஹீரோவைத் தாங்கிப் பிடிக்கிறார்.

அந்தக் காட்டுவாசிப் பெண்தான் ஹீரோயின்.படம் பார்ப்பவர்களுக்கே நாலைந்து காட்சிகளுக்குப் பிறகுதான் அவர்தான் ஹீரோயின் என்பதே புலப்படுகிறது. மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதால் ரொம்பவே பொருத்தமாயிருக்கிறார் இந்தக் கதாபாத்திரத்திற்கு.

இதற்கிடையில் கட்டெறும்புக் கடிக்கையில் காக்கா தப்பிவிடுகிறது.அப்போது காக்காவிற்கும் கட்டெறும்புக்குமான நட்பின் ஃபிளாஷ் பேக் ஒன்று வருகிறது. இக்காட்சியின்போது எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுவன் "ஹையா இந்தக் கதை எனக்குத் தெரியும்" என துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இயக்குனர் தானே பலநாள் யோசித்து எழுதிய அருமையான ஃபிளாஷ் பேக் ஒன்று இப்படத்தில் யாரும் யோசிக்காத கோணத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருந்ததை இங்கே நினைவுக் கூர்வது அவசியமாகிறது.

இதுவரை விறுவிறுப்பாய் நகரும் கதையில் ஹீரோயின் வந்த பிறகு ஹீரோவை காக்காவை துரத்த வைப்பதா இல்லை ஹீரோயினைத் துரத்த வைப்பதா என்று இந்த இடத்தில் டைரக்டர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். அதைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

சரியாக கதை சிறிது தொய்வாகும் இந்த இடத்தில் ஹீரோயின் ஆற்றில் விழுந்துத் தத்தளிக்கிறார்.ஹீரோவிற்கோ நீச்சல் தெரியாது ஆற்றின் கரையிலேயே நின்று கதறி அழுகிறான், மீண்டும் திரைக்கதை சூடுபிடிக்கிறது. தியேட்டரில் ஆங்காங்கே விசும்பல் சத்தம்.அப்போது ஒரு தேவதை ஆற்றில் இருந்துத் தோன்றி ஹீரோவிற்கு உதவுகிறது. தேவதையைப் பார்த்ததும் எனக்கு அருகில் அமர்ந்திருந்தச் சிறுவன் மீண்டும் ஆரம்பித்துவிட்டான்.

ஆனால் புத்திசாலித்தனமாக டைரக்டர் அந்த தேவதையை யூஸ் பண்ணியிருப்பதில் பாஸாகிறார்.தேவதை முதலில் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா வழித் தோன்றல்களான இரண்டு கவர்ச்சி கன்னிகளை எடுத்துவந்து இதுதான் உன் காதலியா எனக் கேட்குமிடத்தில் ஹீரோ ஆஹா ஹீரோயினைவிட இது சூப்பராகீதே என்று மைண்ட் வாய்சில் பேசிக்கொண்டிருக்கும்போதே வருகிறது அந்த சூப்பர் ஹிட் பாடல் இருவருடனும் தலா ஆளுக்கொரு சரணமாய் பிரித்து செம்ம குத்து குத்துகிறார்.

தேவதை மூன்றாவதாய் ஹீரோயினை எடுத்துக் கொடுக்கும்போது மற்ற குஜிலிகளையும் பரிசாகக் கொடுத்ததா,ஹீரோ காக்காவைப் பிடித்து பாட்டியிடம் வடையை வாங்கினாரா என்பதை பரபரப்பான இறுதிக் காட்சிகளாக்கி வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர்.

படத்தின் இறுதிக் காட்சியில் ஹீரோயின் தாய் மாமனான வில்லன் ”ஏண்டா காக்காப் பிடிக்கத் தெரியாத நீயெல்லாம்..”என்று ஆரம்பித்து பேசும்போது வரும் ”காக்கா பிடிக்கத் தெரியாத” என்பதையே தனது கேப்ஷனாக வைத்து புதிய கட்சியை ஆரம்பித்து ஹீரோ அரசியலில் புகுந்து பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தும் காட்சியில் தியேட்டரில் ”தலைவா” என்ற கோஷம் விண்ணைத் தொடுகிறது.

டிஸ்கி:முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட இந்த இடுகையைப் படித்து யாருக்கும் சிரிப்பு வரவில்லையென்றால் ஒரிஜினல் வேட்டைக்காரனுக்கு டிக்கெட் ஃப்ரீயாக தரப்படும்.

பாதுகாப்புக் கருதி நானும் ஒரு வேட்டைக்காரன் ரசிகன் என்ற உண்மையையும் சொல்லிக்கிறேன்.

Saturday, September 5, 2009

இயற்கை எழில் கொஞ்சும் திரைப் பாடல்கள்..

சலித்துப்போன அன்றாட நிகழ்வுகளில் இருந்து விடுபட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் என்று தோன்றும் போது எங்காவது இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு போய்வர நினைப்போம்,அதில் முதல் விருப்பம் மலைப் பிரதேசங்களாக இருக்கும்.

மலைப் பிரதேசங்களில் காணும் இயற்கைக் காட்சிகளில் மனம் லயித்து கவலைகள் மறந்து, சிலு சிலுத்து ஓடும் சிற்றோடையாய், அருவியாய், வர்ணஜாலம் காட்டும் பூக்களாய், பாடிப் பறக்கும் புள்ளினங்களாய், துள்ளியோடும் மான்களாய், நீந்தித் திரியும் மீன்களாய் நம் மனமும் நாம் காணும் காட்சியை ஒட்டியே மாறத் தொடங்கும் அற்புத உணர்வை நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம்.

இந்த அழகிய காட்சிகளைத் தமிழ்த்திரைப் பாடலாசிரியர்கள் திரை கதாநாயகர்களின் வாயிலாகத் தங்களது கவிதை வரிகளால் வர்ணித்திருக்கும் பாடல்களின் தொகுப்பே இப்பதிவில்.

”வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ” --
கண்ணதாசன்.
எத்தனை அற்புதமானக் கற்பனை, பாடலின் ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமான இயற்கைக் காட்சிகளுக்காகவும், குளோசப் ஷாட்டில் வரும் ஷோபாவின் எக்ஸ்பிரஷன்களை படமாக்கியிருக்கும் விதத்திற்காகவும் எத்தனை முறையானாலும் பார்க்கவும், கேட்கவும் சலிக்காதப் பாடல் இந்தச் செந்தாழம் பூவில்.

”கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே” ---
வாலி.
வண்ண வண்ணப் பூக்கள் படத்தில் இளநெஞ்சே வா என ஆரம்பிக்கும் இப்பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை அத்தனை வரிகளும் ஒன்றை ஒன்று விஞ்சக் கூடிய வகையில் கற்பனை நயம் கூத்தாடும். பாடலில் வரும் நேர்த்தியானக் குளோஸப் ஷாட்கள் ஒளிப்பதிவு பாலுமகேந்திரா என்பதைச் சொல்லாமல் சொல்லும். கற்பனைக் கொட்டிக் குவித்துக் கம்பனையே வம்புக்கிழுத்திருப்பார் வாலி இப்பாடலில்.

”தங்க மலைச் சாரல் எந்தன் ஊரோ
இங்கு என்னை கைது செய்வார் யாரோ”
மனசுக்குள் மத்தாப்புப் படத்தின் ஓ பொன்மாங்குயில் எனத் தொடங்கும் இப்பாடல் படத்தின் கதையோடு ஒட்டிய வரிகளைக் கொண்டிருப்பினும் இயற்கையை வர்ணிக்கும் சில அற்புதமான வரிகளைக் கொண்டிருக்கும். எஸ்.ஏ.ராஜ்குமார் இப்படியெல்லாமா பாட்டுகளைத் தந்தார் என்று ஆச்சர்யப் படுத்தும் மெட்டு. மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் மிகப்பிடித்தப் பாடலாக ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் வித்யாசாகர் சில பாடல்களைச் சொல்லியிருந்தார் அதில் இப்பாடலும் ஒன்று.

”ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லைத் தாருங்களே” --
வாலி
கவிஞன் இயற்கை அழகில் மயங்கிச் சிறகடித்துப் பறக்க நாரையிடம் சிறகைக் கேட்கும் இவ்வரிகள் பழமுதிர்ச் சோலை எனும் வருஷம் 16 படப் பாடலில் உள்ளவை. பாடலைப் படமாக்கியிருக்கும் விதமும், கார்த்திக்கின் உற்சாகமானத் துள்ளலும் பார்ப்பவர்களையும் உற்சாகப்படுத்தும்.

”தூரல் உண்டு மலைச்சாரலும் உண்டு
பொன்மாலை வெயில் கூட ஈரமாவது உண்டு”
வெயில் கூட ஈரமாகும் என்ன ஒரு அற்புதமானக் கற்பனை. மலைப் பிரதேசங்களின் கிளைமேட்டுக்கு இதைவிட இன்னொரு சிறப்பான வர்ணிப்பு வேறெந்த மொழியிலும் இருக்குமாங்கிறது சந்தேகமே. இந்த வரிகள் மட்டுமன்றிப் பாடலின் அத்தனை வரிகளுமே இயற்கையைப் பற்றியே இருக்கும். மனோவின் அட்டகாசமானக் குரல் சூப்பர் ஸ்டாருக்கு வெகு பொருத்தமாக அமைந்தப் பாடல் ராஜாதி ராஜாவின் இந்த மலையாளக் கரையோரம்”.

”இங்கே சூரியன் போல் சந்திரன் போல்
சுதந்திரமாய் திரிந்திடுவேன் நான்”

தென்றல் காற்றே ஒன்றாய் போவோமாஎன்று ஆரம்பிக்கும் அதர்மம் படப் பாடலில் நாட்டிற்குள் நிலவும் பேதங்களை வெறுத்து இயற்கையோடு இயைந்தக் காட்டு வாழ்க்கை வாழ ஏங்கும் இளைஞனின் ஏக்கத்தை மனோவின் குரலில் அருமையாக வேலைவாங்கியிருப்பார் இளையராஜா. பாடல் இதோ,


”வெள்ளி மேகங்கள் பள்ளித் தோழன் போல்
எந்தன் தோளைத் தீண்டி ஓடும் கூடும்
நானும் ஒரு காட்டருவி போல நடப்பேன்
நீல நிற நீரலையாய்ப் பொங்கிச் சிரிப்பேன்” ---
வாலி
மேகங்களைப் பள்ளித் தோழனாகக் கவிஞர் கற்பனைச் செய்தது அந்த உச்சிமலைக் காட்டைக் கேளு எனத் தொடங்கும் எங்க தம்பி திரைப் பாடலுக்காக. இப்பாடலில் எந்த வரிகளையும் சிறந்த வரிகளாக மேற்கோள் காட்டலாம். ஆனால் இப்படத்தில் வரும் வேறு சில பாடல்கள் வரிகள் வெகு சாதாரணமாக இருந்தும் அதன் மெட்டமைப்பினால் பெரிய ஹிட்டானதில் இப்பாடல் பெரிதாக எடுபடவில்லை. என்னுடைய வலைப் பூவின் கேப்ஷனாக வைத்திருக்கும் ”நாளை என்னும் நாளை எண்ணி என்னக் கவலை;நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்தப் பொழுதை” என்ற வரிகளும் கூட இப்பாடலின் வரிகளே. பாடல் இதோ,



”மேகம் இந்த ஊரில் மண்ணில் வருது
மோகம் கொண்ட மண்ணை முத்தம் இடுது” ---
வாலி
’பாட்டு வாத்தியார்’ படப் பாடலில் இடம் பெற்ற இவ்வரிகளை கே.ஜே. ஏசுதாஸின் குரலில் கேட்கும்போது எந்த வறண்ட பிரதேசத்தில் இருந்தாலும் மனசுக்குள் சாரல் அடிக்கும்.சோலை மலரே” எனத் தொடங்கும் அப்பாடல் இதோ,


”இயற்கை தாயின் மடியில் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து”---
வைரமுத்து.
மூங்கில் காடுகளே சாமுராய் படப் பாடலின் வரிகளில் தனது ஆபாரமான கற்பனைத் திறத்தால் இயற்கையை மரியாதைச் செய்திருப்பார் வைரமுத்து.

டிஸ்கி: இதுவரை என்னுடைய பதிவுகளைப் படித்து எனக்குத் தொடர்ந்து உற்சாகம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. ஒரு சின்ன இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டும் ஓரிரு மாதங்களில் வருகிறேன்.

Tuesday, September 1, 2009

நானும் அவள்களும்.....3

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

சிறிது நேரம் அவர்கள் செல்வதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் அந்த கட்டைச் சுவரிலேயே அமர்ந்துவிட்டேன்.

கூடு திரும்பும் பறவைகள் தன்னைத்தான் விரட்டி வருகிறதென்றெண்ணியோ என்னவோ பிஞ்சுக் கதிர்களை வீசிக் கொண்டிருந்த அந்திச் சூரியன் வேகமாக மறைந்து கொண்டிருந்தான்.

என்னன்னவோ நெனச்சேனே இப்படி பண்ணிட்டாளே என்று நித்யாவின் செயலை நினைத்து எரிச்சலாக இருந்த அதே நேரத்தில் மலரின் காதலை என்னால் நம்பவே முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக மலர்விழியின் நினைவுகளில் என்னையுமறியாது மூழ்கி மலரின் காதலுக்கு எந்த வகையிலும் நான் உண்மையாக இல்லை அப்படியிருக்க அவளின் காதலை ஏற்றுக் கொள்வது சரியா? இப்படியாக பலவித சிந்தனை, ”சே இப்போ ஏன் அவளைப் பற்றிய நினைவு” என என் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது.

யோசித்துக் கொண்டே இருந்ததில் நன்றாக இருட்டிவிட்டிருந்தது, என்னைத் தேடி கபிலனே அங்கு வந்துவிட்டான். அவனோடுக் கிளம்பி, பஸ்டாண்ட் வருகிற வரைக்கும் மலர்விழியின் தாய் மாமனில் ஆரம்பித்து அன்று கோயிலில் நடந்தது வரை எல்லாவற்றையும் புலம்பிக் கொண்டே வந்தேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வந்த கபிலன்,

”மாப்ள, ஸ்கூல் டேஸ்ல நித்யாவும் உன்னை லவ் பண்ணறாளோன்னுதான் நெனச்சேன், ஆனா இப்போ என்ன சொல்றதுன்னேத் தெரியல, ஊருக்கு போயிட்டு நல்லா யோசி” என்றபடியே என்னை வழியனுப்பிவிட்டான்.

கல்லூரியில் குளோஸ் ஃபிரண்ட்ஸ் சிலரிடம் டிஸ்கஸ் பண்ணியும் எல்லோரும் மலரின் காதலுக்கே ஃபேவரா இருந்தானுங்க. கூடவே ”நித்யாதான் உன்னை லவ் பண்ணல போலிருக்கே அப்புறம் ஏண்டா கன்ஃப்யூஸ் ஆகிற” என்றார்கள்.

நான் இருக்கிற சீரியஸ்னஸ் புரியாம ஒருத்தன் ”காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்” என்று ஏகத்துக்கும் டென்ஷனைக் கிளப்பியதில் அவனை பட்டென்று அறைந்தேவிட்டேன்.

நித்யா என்னை காதலிக்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, அதே நேரத்தில் மலரின் காதலுக்கு நான் தகுதியில்லாதவன் என்ற நினைப்பும் என்னுள் தொடர்ந்ததால் குழப்பத்தின் உறைவிடமாகிப் போனேன்.

ஆறேழு மாதம் கழித்து நித்யாவிடமிருந்து எனக்கொரு கடிதம்,

நவீன்,

கபிலனிடம் எல்லா விஷயங்களையும் அறிந்து கொண்டேன், ஸ்கூல் டேஸில் எனக்கும் உன்மேல் சின்னதாய் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை. உன்னையும் என்னையும் சேர்த்து பசங்க கிண்டல் செய்யும் போது சந்தோஷமா இருக்கும். உன் புத்தகங்களில் என்னுடைய பெயரை நீ எழுதி வைத்திருந்ததெல்லாம் நானும் அறிவேன். நாங்கள் அந்த ஊரைவிட்டு வந்த பிறகு எனக்கு சுத்தமாக உன் நினைவே வரவில்லை, உன்னை மறந்தே விட்டேன் என்றே சொல்லலாம்.

ஆனால் மலர் உன்னை ஆழமாக நேசிக்கிறாள், உனக்கு என்னவெல்லாம் கனவு இருக்கிறதென்பதை ஓரளவிற்கு நான் அறிவேன், உன் அத்தனை ரசனைகளுக்கும் அப்படியே தன்னை மாற்றி வைத்திருக்கிறாள் மலர்.

அவள் உன்னை நேசித்த அளவிற்கு நீ அவளை நேசிக்கவில்லை என்றும், இடையில் என்மீதான ஈடுபாடும் தானே உன்னை குழப்பும் விஷயங்கள்,இதில் குழம்புவதற்கு ஒன்றுமே இல்லை. மலர்விழி மீதும் சரி, என் மீதும் சரி உனக்கு உள்ளது காதலே இல்லை. அது வெறும் ஈர்ப்பு என்பதை சரியாக புரிந்து கொள். இல்லையென்று மறுக்காதே என் மீது உனக்கு காதலென்றால் மலர்விழியின் காதலை ஏற்றுக் கொள்ளலாமாங்கிற குழப்பமே உனக்கு வந்திருக்காது.

அதற்காக நீ ஏதோ பெரிய தவறு செய்ததைப் போல் குற்ற உணர்வெல்லாம் வேண்டாம், கூடப் பழகும் எதிர் பாலரிடம் ஈர்ப்பு வருவது இயல்பான ஒரு விஷயம்தான். அந்த ஈர்ப்பு ஒருத்தர் மேல்தான் வருமென்றெல்லாம் இல்லை.

அப்புறம் அவளுடைய தாய் மாமா விஷயத்தையும் கபிலன் சொன்னான். மலர்விழியின் மாமாவிற்கு எப்போதோ மேரேஜ் ஆயிடுச்சு, அது சும்மா சிறு வயதில் கிண்டலடிப்பார்களாம். அவ்வளவுதான்.

மேலும் அன்று உன்னை காலேஜில் பார்த்தபோதே ஒரு வேளை என்னைப் பார்க்கத்தான் வந்திருப்பாயோன்னும் ஒரு சந்தேகம் இருந்ததால்தான் கோயிலில் முந்திக் கொண்டு மலர் உன்னை நேசிப்பதைச் சொன்னேன்.

நீ என்னைப் பார்க்கத்தான் வந்தாய் என்பது தெரிந்தால் மலர் கண்டிப்பாக தவறாக எடுத்துக் கொள்வாள், நான் பொய் சொல்லி நடித்ததாய் நினைத்துக் கொள்வாள். எங்கள் நட்பு தொடர்வதும் உன் கையில்தான் இருக்கு. அதே போல் அவளின் காதலை நீ ஏற்றுக் கொண்டால் உங்களைவிட நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். அவளின் காதல் ஜெயிக்கணும்.

தேவையில்லாத குழப்பத்தைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தவும்.

அன்புத் தோழி,

நித்யா

இப்படி எழுதி முடித்திருந்தாள், ”சே பொண்ணுங்கதான் எவ்வளோ சீக்கிரமா மெச்சூரிட்டியா யோசிக்குறாங்க” என்று பத்து வருடங்களுக்கு முன்பான நினைவுகளில் மூழ்கியிருந்தவன்,

“அம்மா,ஆண்ட்டி வந்துட்டாங்க” என்றபடியே கத்திக் கொண்டு வீட்டினுள் ஓடிய என் மகனின் சத்தத்தில் நினைவு கலைந்தேன்.

ஆறு மாதக் குழந்தையான என் மகளை பார்ப்பதற்கென தன் கணவனோடு வந்து கொண்டிருக்கிற நித்யாவைப் பார்த்துவிட்டுதான் அந்தச் சத்தம்.

சிறு குழந்தையென துள்ளியபடியே ஓடி வந்த நித்யா என் கையில் இருந்த என் மகளை வாங்கியபடியே ”அப்படியே குட்டி மலர்விழிடா, நவீன்” என்றாள்.

(முற்றும்)

டிஸ்கி: மூன்று பகுதியையும் பொறுமையா படிச்ச உங்கள நெனச்சா ரொம்பப் பெருமையா இருக்குங்க.