Sunday, December 23, 2012

பாடலாசிரியர் ஆர்.வி.உதயக்குமார்ஒரு இயக்குனர் ஒரு பாடலாசிரியரிடம் தனது படத்தின் கதை,களம், கதாபாத்திரங்களின் தன்மை,பாடலின் சூழல் என சில கூறுகளைச் சொல்லி பாடலுக்கான வரிகளை பெறும்போது பாடல் வரிகள் குறைந்தபட்சம் மேற்கூறிய ஏதாவது ஒரு விஷயத்தைவிட்டு விலகி போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.இதே ஒரு இயக்குனரே திறமையான பாடலாசிரியராகவும் இருந்தால் அவரின் எண்ண ஓட்டத்தில் விளையும் வார்த்தைகள் கதையை,களத்தை,கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படுத்திவிட முடியும். அப்படி சிறப்பாக வெளிப்படுத்தியதில் இயக்குனர் ஆர்.வி.உதயக்குமார் குறிப்பிடப்பட வேண்டியவர்.

பாடல் வரிகளுக்கு எதற்காக தனிச் செலவு என்ற எண்ணத்தில் எழுதுவது போல  "கும்மாங்குத்து லேடி" மாதிரியான வார்த்தைகளை இட்டு நிறப்பிக்கொண்டிருக்கும் பேரரசு போன்றோரின் வரிகளைப்போல் இல்லாமல் வாலி,வைரமுத்து என பாடல் எழுதுவதைத் தொழிலாகக் கொண்டவர்களின் திறமைக்கு நிகராக பாடல்களை எழுதியிருப்பதில் தமிழ்த் திரையுலகில் டி.ராஜேந்தரைப் போன்று ஆர்.வி.உதயக்குமாரும் ஒருவர்.

உறுதிமொழி படத்தின் அதிகாலை நிலவே அலங்காரச் சுடரே பாடலை சற்று முன் கேட்டுக்கொண்டிருந்தேன். இயக்குனர் ஆர்.வி.உதயக்குமாரின் இந்த  பாடலாசிரியர் முகத்தைப் பற்றி எழுத வேண்டும் என்கிற நீண்ட நாளைய எண்ணத்தை  ”ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு” என்ற வரி உசுப்பிவிட்டுவிட்டது. ஆர்.வி.உதயக்குமார், தான் இயக்கிய படங்களுக்கு அவரே பாடல்களை எழுதும் வழக்கத்தை தனது முதல் படமான உரிமை கீதத்திலிருந்தே தொடர்பவர்.”சித்தகத்தி பூக்களே சுத்தி வரப் பாக்குதே அத்திமரத் தோப்பிலே ஒத்திகைய கேட்குதே” போல எளிய சொற்களை ரசனையோடு கோர்க்கும் வித்தையும், ”சின்ன இடையில் மின்னலென ஒரு கோடு ஓடும்” போன்ற அழகான உவமைகளுமாக இவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசனைக்குரியதாக இருக்கும்.

சின்னக்கவுண்டரில் கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊரவிட்டு பாடலில், 

பொள்ளாச்சி சந்தையில 
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு போகல
பண்ணாரி கோயிலுக்கு 
முந்தான ஓரத்தில 
நேந்து முடிச்ச கடன் தீரல 

என்ற வரிகளில் கதை நடக்கும் களத்தையும் நுழைத்து சூழ்நிலைக்கு பொருத்தமான வார்த்தைகளோடு கதையின் போக்கில் எழுதியிருப்பார். இதே படத்தின் ஓவ்வொரு பாடலுமே மேற்கோள் காட்டி சிலாகிக்கும்படியான வரிகளைக் கொண்டிருக்கும்.

எஜமானில் ”ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்”, ”ஆலப்போல் வேலப்போல்”,”நிலவே முகம் காட்டு” என பாடலின் பல்லவிகளே சிறப்பாக இருக்கும். 

ராஜகுமாரனின் என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை பாடலில்,
”ஆகாய மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள், நீரோடைப் போல நாளும் ஆடிப்பாடி ஓடுவாள்” என்ற வரிகளில் காதலியின் இயல்புகளாக சொல்லியிருக்கும் இந்த கற்பனையைப்போல பாடல் முழுவதும் ரசனையான வரிகளால் அழகுபடுத்தியிருப்பார்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு,சிந்து நதிச் செம்மீனே,அன்ப சுமந்து சுமந்து, ஏய் வஞ்சிகொடி என பொன்னுமணியின் ஒவ்வொரு பாடலிலும் இவரின் முத்திரை இருக்கும். இதே போன்று கிழக்கு வாசலின் எல்லா பாடல்களையும் சொல்லலாம். குறிப்பாய் பாடி பறந்த கிளி சோகத்தை பிழியும் வரிகளால் மனதைத் நெகிழச் செய்யும் என்றால், அதே படத்தின் தளுக்கி தளுக்கி பாடலில் மெட்டுக்குள் அட்டகாசம் செய்யும் வரிகள் அனைத்தும் குறும்பானவை.

சிங்காரவேலனில் இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் பாடலில் வரிக்கு வரி காதலை வார்த்தைகளால் பிரவாகமாய் கவிதை நயத்தோடு ஓட வைத்திருப்பார்.

”உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு” என்று நந்தவனத் தேரு படத்தின் வெள்ளி நிலவே வெள்ளி நிலவே பாடலின் வரியை கேட்கும்தோறும் ஒரு பாடலாசிரியராக தொடர்ந்து இவரை இந்தத் திரையுலகம் பிஸியாக வைத்திருக்கலாம் என்று தோன்றும். இந்த படத்தோடு
சரிந்த  இவரது மார்க்கெட்  அதன்பின் எழாமலேப்போக இசைஞானி இளையராஜா, தனக்குப் பர்சனலாக பிடித்த பாடலாசிரியரான இவருக்கு கே.எஸ்.ரவிக்குமாரின்  பெரியகுடும்பம் படத்தில் பாடல்களை எழுதும் வாய்ப்பை கொடுத்தார். அப்படத்தின் ”முற்றத்து மாடப்புறா காதலுக்கு தூதொன்னு போய் வருமா“ என்னுடைய ஃபேவரைட். அதன் பின் வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதியியிருக்கின்றாரா என்பது தெரியவில்லை. இப்போதைய ட்ரெண்டிற்கு படங்கள் இயக்குவதென்பது இவரால் சாத்தியமா என்பது சந்தேகம் என்றாலும் ஒரு சிறந்த பாடலாசிரியராக இவரால் இயங்க முடியும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

Wednesday, December 5, 2012

டைம் பாஸ்-3

எந்தச் சட்டத் திட்டங்களுக்கும் உட்படுவதில்லை கனவுகளின் நீள அகலங்கள்.
#என் கனவு என் உரிமை

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

#ஒன்னாப்புல படிச்சிருப்பீங்க, கல்யாணம் ஆனதும் அர்த்தம் புரியும்.

நிழலையொத்தது மனசு,நேரத்திற்கு ஒரு பக்கம் சாயும்.

# மகான் கவுண்டர்கூட சொல்லியிருக்கார் அட அரசியலில் இதெல்லாம் .. என்று.

உதவி செய்தார்கள் என்பதற்காக  அடுத்தவரின் டைரியை புரட்டும் உரிமை தனக்கு இருப்பதாகவே கொள்கிறார்கள் சிலர்.

# கொய்யால மளிகை கணக்கை எழுதி வச்சிருக்கும் ஒரு நோட்டுக்கு என்னா சீரியஸ் பில்டப்பு.

முழம் இருபது ரூபாய் என்கிற போது நாத்தீகம் பேசும் மனசு , ரெண்டு முழம் பத்து ரூபாய் என்கிற போது பக்தி பரவசமாகிவிடுகிறது.
# என்னமோ போடா மிடில் கிளாஸ் மாதவா.

இரவில் தாமதமாக தூங்குபவனின் உச்சபட்ச சோம்பேறிச் சிந்தனை, உச்சா சேமிக்கும் பை இன்னும் கொஞ்சம் பெருசா இருந்திருக்கலாம் என்பதாக இருக்கலாம்/கிறது.

# கொயந்தயாவே இருந்துருக்கலாம்..


எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.
இதுதான் பாட்டு, எதிர் காலத்தை கணிச்சு எழுதிருக்காரு.
#பவர்கட்


கல்யாணத்திற்கு முன்பு:மாதா,பிதா,குரு,தெய்வம்
கல்யாணத்திற்கு பிறகு:மனைவி,பொண்டாட்டி,ஒய்ஃப்,வீட்டுக்காரம்மா.
# அட , எல்லாமே என் பொண்டாட்டிதாம்பா..

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

#என்னின் எழுத்து உயிரெனத் தகும்.


தோல்வியை இலக்காக்கி இறங்குகிறேன், எதிர்பாராமல் வெற்றிக் கிடைத்தால் அது எனக்கு தோல்வியா வெற்றியா?
#இப்ப நீ என்னான்ற

Tuesday, November 20, 2012

டைம் பாஸ்-2

அவ்வப்போது கூகிள் ப்ளஸில் கிறுக்கியவை சில...

என்னைப் பற்றி சொல்வதற்கு சிறப்பாய் எதுவுமே இல்லை என்பதுதான் என்னுடைய சிறப்பு.

எதிர்பாரா தருணங்களில் வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடுகிறது.

#பிளைன் பிரியாணியில் மட்டன் பீஸ்.

ஒரு பொண்ணு அழகா இருக்கா என்றோ  இல்லை என்றோ சொல்வதற்கு நாம் அழகா இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

#எப்போப்பாரு உன் மூஞ்சிய கண்ணாடியில் பாக்கவே மாட்டியான்றாய்ங்க.

மாடர்ன் வேல்ட், டெக்னாலஜி புரட்சி பற்றியெல்லாம் ஏதுமறியாது,  அதாவது நம் கூற்றுபடி கிணற்றுத் தவளைகளாக இருப்பவர்கள் , அவர்கள் வாழும் சூழலில் எவ்வித குழப்பமுமின்றி அவர்களுக்கான வாழ்க்கையை பெரிதாய் வாழ்கிறார்கள்.


பால்யகால நட்புகளையும்,அவர்களுடன் கழிந்த பொழுதுகளையும் அசைபோட இனிமையாய் இருக்கும் அதே நேரத்தில் நேரில் பார்க்கும்போது,” நலமா?” என்பதைத் தாண்டி பேசுவதற்கு ஏதுமில்லாததாய் இருக்கிறது.

# வயதின்  ரசனை மாற்றம்.

* காயிருப்பக் கனி கவர்ந்தற்று.

பாகற்காய் 

உண்மை, உண்மையாய்த் தெரிய பொய்களின் துணை தேவையாய் இருக்கிறது சமயங்களில்.


”கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும்”. 

#அப்படீன்னா கோபம் என்பது ஒரு குணம் இல்லையா?


சந்தர்ப்பங்களில் சனியனாய் அமைந்துவிடும் சாதாரணமாய் உதிர்க்கும் வார்த்தைகள்.

#யாகாவராயினும் நா காக்க

பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருட்டு என்று நினைக்குமாம்.

#திறந்தால் மட்டும் என்று கவுண்டர் விடுவது சாட்சாத் தமிழ்நாட்டு பூனை.


மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளத் துடிக்கும் தமிழ்த்திரைக் கதாபாத்திரங்களின் கைகளில்  சிக்கும் தீப்பெட்டியின் தீக்குச்சிகளில் முதலிரண்டு குச்சிகள் எப்போதும் பதத்து போனவையாகவே இருக்கின்றன.

”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்றதும் ”ஏன் மாற்றான் தோட்டத்து ரோஜா மணக்காதா?” என்றோ,”அயன் தோட்டத்து மல்லிகை மணக்காதா?” என்றோ ஃபேஸ் புக்கில் கணக்கில்லாத யாரேனும் சொன்னால் அவர்களிடம் உடனே ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணச் சொல்லி புண்ணியத்தைத் தேடிக்கொள்ளுங்கள்.


Wednesday, August 1, 2012

நண்பேன்டா..!

திவாகர், என்னுடைய பள்ளித் தோழன். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒரே டெஸ்க்கில் அமர்ந்ததிலிருந்து  ஒன்னுக்கடிக்கப்போனது வரை எங்கேயும் ஒன்றாய்ச் சுற்றித் திரிந்த நட்பு. எங்களிருவரின் அப்பாக்களும் அதே பள்ளியில் ஆசிரியர்களாக இருந்ததால் அறிமுகமான சில நாட்களிலேயே எங்களின் நட்பு இறுக்கமானது. 

திவாகர், ரொம்ப சுவாரஸ்யமான கேரக்டர். அவனது டைமிங் சென்ஸ்க்காகவே அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். பாடம் நடத்தும்போது அவன் கேட்கும் சந்தேகங்களைக் கேட்டு ஆசிரியர் உட்பட மொத்த வகுப்புமே அல்லோகலப்படும். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன், ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் நடந்தது இது. வகுப்பறையின் நுழையுமிடத்தில் இருக்கும் சமையல் கொட்டகையில் அமர்ந்து வேகவைத்த முட்டைகளின் ஓடுகளை அகற்றிக்கொண்டிருந்தார் சமையல் செய்யும் ஆயா. முட்டைகளை உரிக்கும்போது அதன் ஓட்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் சதையை, ஆயா தன் கட்டைவிரலால் மேல் நோக்கிச் சுண்ட, அடுத்த கணம் மேலே பறக்கும் சதையானது சரியாய் ஆயாவின் வாயில் விழும். இவ்வளவுக்கும் ஆயா குனியவோ ,நிமிரவோ மாட்டார். அசையாமல் அமர்ந்திருப்பார். கையும் வாயும் வேகமாய் வேலை செய்தபடியே இருந்ததை விடாமல் பார்த்துக்கொண்டிந்தவன், “எந்த ஒரு பொருளையும் மேல்நோக்கி வீசினால் அது புவியீர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி வந்துவிடும்” என்று புவியீர்ப்பு விசையைப் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை இடைமறித்து ,”டீச்சர், நியூட்டன் பொய் சொல்லியிருக்காரு, கொஞ்சம் இங்கே வந்து பாருங்க உங்களுக்கேத் தெரியும்” என்று சொல்லி ஆசிரியையிடம் ஆயாவின் செயலைக் காட்டியதும், வந்த சிரிப்பை அடக்கியபடியே,”பாடத்தைக் கவனிக்காம என்ன வேடிக்கை” என்று அவனின் தலையில் கொட்டப் போனவரை ”டீச்சர் டீச்சர் இப்போ பாருங்க” என்று மீண்டும் ஆயாவைக் காட்டி, ஆயா சுண்டும்போது பறக்கும் முட்டைக்கு ”சொய்யிங்” என்றும், வாயில் விழும்போது ”கச்சக்” என்றும் பிஜிஎம் வாசித்தான். மீண்டும் மீண்டும் ”சொய்யிங்”,”கச்சக் ”,”சொய்யிங்”,”கச்சக்” என்று சொல்லிக்கொண்டிருந்தவனைப் பார்த்து ஆசிரியை குழந்தைபோல சத்தமாய் சிரித்துக்கொண்டே ஓடி நாற்காலியில் அமர்ந்து நீண்ட நேரம் கண்ணில் நீர் வர சிரித்துக்கொண்டிருந்தார்.


தோட்டக்கலை ஆசிரியரான அவனின் அப்பா, ஆசிரியர்கள் யாரேனும் விடுப்பில் இருக்கும்போது பாடமும் நடத்துவார். அப்போது வருகைப் பதிவு எடுக்கும்போது “எஸ் சார்” என்று கூறிவிட்டு பசங்களுக்கு மட்டும் கேட்கும் விதமாய், ”வீட்டில் இவர் சொல்றதை நான் கேட்கவே மாட்டேன், அதான் இப்படி என் வாயால அவரை சார் என்று சொல்ல வைக்கிறதுக்காகவே அட்டெண்டென்ஸ் எடுக்குறார்” என்பான்.

இப்படித்தான், சமைக்கிற ஆயாவில் ஆரம்பித்து தனது அப்பாவரைக்கும் யாரையும் விட்டு வைக்க மாட்டான். அவனது இந்த இயல்பால் வகுப்பில் நன்றாய் படிக்கிற மாணவனிலிருந்து கடைசி பெஞ்ச் மாணவன் வரைக்கும் எல்லோருக்குமே நெருக்கமான நண்பனாக அவனால் இருக்க முடிந்தது.


அந்த ஐந்து வருடத்தில் எங்கும் ஒன்றாகவே திரிந்த எங்களுக்கு ”அபூர்வ சகோதரர்கள் ”என்று பெயர் வைத்தார் கணிதஆசிரியர். காரணம் நான் ஆறாம் வகுப்பு படித்த போதே பத்தாம் வகுப்பு மாணவர்களைப் போன்ற உயரத்தில் இருப்பேன், அவன் அப்படியே உல்ட்டா. நாங்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் எங்கள் வகுப்பு மாணவர்களிடையே பிரபலம். அதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் மதிய இடைவேளையின் போது எலி பிடிப்பது. 

சத்துணவுப் பொருட்கள் இருக்கும் அறையின் பெரிய மரப்பெட்டியின் மீது சமையல் பாத்திரங்கள் கழுவி வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாத்திரங்களில் இருக்கும் நீரைக் குடிக்க மரப்பெட்டியிலிருந்து மெல்ல வெளியில் வரும் எலிகளை பிடிக்க, தண்ணீர் இருக்கும் வட்டாவின் மேல்,அதன் பெரிய மூடியை சிறிது இடைவெளி தெரியும்படி திறந்து வைத்துவிட்டு, பக்கத்து அறையில் ஒளிந்து ஒரு துளையின் வழியாக பார்த்துக்கொண்டிருப்போம். ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாய் உள்ளே நுழையும் எலிகள், சிறிது ஓசைக்கேட்டாலும் கண் இமைக்கும் நேரத்தில் மரப்பெட்டிக்குள் அடைக்கலமாகிவிடும் . அதனால் காற்றில் நடப்பதுபோல ஓசையில்லாமல் மெதுவாய் பதுங்கி வந்து மூடியை மூடவேண்டும். இதில் நான் எக்ஸ்பெர்ட். என்னதான் எக்ஸ்பெர்ட்டா இருப்பினும் ஒவ்வொரு முறையும் முதல் சில முயற்சிகள் தோல்வியிலேயே முடியும் . இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்று கற்றுத் தந்த அதே பள்ளியில் அக்கூற்றை எலிபிடிப்பதில் பரிசோதித்துப் பார்த்து வெற்றிகண்டோம். மூடியை இறுகப் பிடித்தபடி திவாகருக்கு சிக்னல் கொடுப்பேன். அதன் பின் வட்டாவைத் தூக்கியபடி விளையாட்டு மைதானத்திற்குள் ஓடுவான். வட்டாவோடு அவனைப்பார்த்ததும் மைதானத்தில் விளையாடும் அத்தனை மாணவர்களும் ஆளுக்கொரு குச்சியோடு அவன் பின்னால் ஓடுவார்கள். மைதானத்தின் மையப்பகுதியில் எலிகளைத் திறந்து விடுவான். திசைக்கொன்றாய் ஓடும் எலிகளை யார் அடித்துக் கொல்வது என்பதில் பசங்களிடம் பெரும் போட்டி நடக்கும். இவ்வளவுக்கும் நான் வகுப்பில் இருந்தபடியே  எலி பிடிப்பதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பேன். 

இதை அடிக்கடி கவனித்த கணித ஆசிரியர் திவாகரிடம்  எலி பிடிக்கும் வித்தையைக் கேட்க,அவனோ, “சார் நான் வெறும் அம்பு, சூத்ரதாரி அங்கே இருக்கான்” என்று என்னைக் கைகாட்டிவிட்டான். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு டெமோ நடத்திக் காட்ட வேண்டியதாகிவிட்டது. டெமோவைப் பார்த்து அசந்த கணித ஆசிரியர், முதன்முறையாய் என்னை ஊமைக் குசும்பன் என்று தனது திருவாயால்  சொன்னார். இன்றுவரை பல சந்தர்பங்களில் இந்த ஊமைக்குசும்பன் பட்டம் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நாங்கள் இருவரும் ஒரத்தநாட்டிற்கு ட்யூஷன் சென்றுக்கொண்டிருந்தோம். பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும் ஒரு தள்ளு வண்டிக் கடையில் முட்டை போண்டா ஃபேமஸ். அந்த முட்டை போண்டாவிற்காகவே ட்யூஷன் செல்வதை அடாத மழையிலும் விடாது செய்து கொண்டிருந்தோம். சைக்கிளில் வரும்போதே முட்டை போண்டாவை தின்றுகொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் போண்டாவை தின்று முடித்ததும் ,”தின்னுட்டியாடா ”என்று கேட்டான். ”ஆமாம்” என்றதும் போண்டாவின் மேலுள்ள மாவை மட்டும் தின்றுவிட்டு பேண்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த முட்டையை எடுத்து ”ஆஹா என்னா ருசி என்னா ருசி ”என்ற படியே என்னிடம் காட்டி காட்டி வெறுப்பேத்திக்கொண்டு வந்தான். ”டேய் டேய் எனக்கு கொஞ்சோண்டு கொடுடா” என்று கெஞ்சியும் கடைசிவரை கொடுக்காமல் தின்று தீர்த்துவிட்டு அவன் சைக்கிளை, என் சைக்கிளோடு ஒட்டியபடி கொண்டு வந்து முகத்திற்கெ நேராக ஏப்பம் விட்டு கடுப்பேற்றினான். 

அடுத்த நாள் சைக்கிளில் வரும்போது அதே காட்சி மீண்டும். இருவரும் போண்டாவை தின்றுகொண்டு வரும்போதே அன்றும் முட்டையை மட்டும் விறுட்டென்று பாக்கெட்டில் வைத்தான். இருட்ட ஆரம்பிதிருந்ததால் நான் கவனிப்பதுஅவனுக்குத் தெரியவில்லை. திரும்ப அவனை பார்க்கும்போது போண்டாவை  வேகமாய் கடித்து சாப்பிட்டு ஏப்பம் விடுவதாய் பாவனைக் காட்டிவிட்டு என்னிடம்,”டேய் அண்ணா கொஞ்சூண்டு குர்ரா” என்று கெஞ்சிக்கொண்டு வந்தான். நான் வேக வேகமாய் தின்றுவிட்டு ஏப்ப ரீவென்ஞ் கொடுத்தேன். 

”முடிச்சிட்டியா” என்றவன் ”டொடடொடடோய்ங்” என்று பிஜிஎம் வாசித்து ஒளித்து வைத்த முட்டையை காண்பித்து மீண்டும் அதே ஆஹா வசனத்தைப் பேசியபடியே தின்றுகொண்டு வந்தான். நான் கண்டுகொள்ளாமல் வந்ததைப் பார்த்து பாதி முட்டையை என்னிடம் நீட்டி, ”போனா போவுது இந்தாத் தின்னுத் தொல” என்று கொடுத்தான். நானும் வாங்கி தின்றுவிட்டு வந்தேன். எங்களிருவரின் ஊர்களின் பிரிவு சாலை வந்ததும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிரிவது வழக்கம். அப்படி பேசிக்கொண்டிருக்கையில் என்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து  சாப்பிடாமல் ஒளித்து வைத்திருந்த முழுபோண்டாவையும் எடுத்து அவனிடம் காட்டி, அதே பிஜிஎம்மை பாடிவிட்டு சுவைக்க ஆரம்பித்தேன். கெஞ்சினான், கொடுக்கவில்லை. சகிக்கமுடியாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானான். மீண்டும் அதே பிஜிஎம், காரணம் என் கையில் அவனின் சைக்கிள் சாவி. முற்றிலும் அவனை பார்க்க வைத்து தின்று திருப்தியாய்  பெரிய செயற்கை ஏப்பம் விட்டப்பிறகே சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு டாட்டா காட்டி விடைபெற்றேன். 

இது போல ஏகப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி கதைகள் எங்கள் இருவரிடையே உண்டு. எல்லோரும் இருக்கும் இடத்தில் அடித்துக்கொள்வோம், அரைமணி நேரம்கூட ஆகியிருக்காது வெட்கமே இல்லாமல் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு முன்பாகவே விளையாடுவோம்.

மேநிலைப் பள்ளிக்குக்கூட இருவரும் தஞ்சையில் ஒரே ஸ்கூலில்தான் சேர்ந்தோம் என்றாலும் வெவ்வேறு பாடப்பிரிவுகளை எடுத்ததால் முன்புபோல் சேர்ந்திருக்கும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து, பள்ளிபடிப்போடு மொத்தமாய் படிப்பிற்கு முழுக்குபோட்டுவிட்ட அவனோடு தொடர்புகள் முற்றிலும் இல்லாமலே போய்விட்டது. சில வருடங்களுக்கு முன் அவனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோதும்கூட அவனைப் பார்த்துப் பேசமுடியாது அவசரமாய் கிளம்ப வேண்டிய சூழ்நிலையாகிவிட்டது.

எனக்குத் திருமணமான பின் அடிக்கடி அதே பிரிவு சாலையில் செல்கிற வாய்ப்பு. மாமனார் ஊருக்கு அதுதான் வழி. ஒவ்வொரு முறையும் அந்த இடம் வந்ததும் என் மனைவி ”நீங்களும் உங்க ஃப்ரெண்டும் போண்டா தின்ன இடம் வந்திடுச்சுங்க ”என்று சிரிப்பார்.

சில நாட்களுக்கு முன் திவாகர் எனக்கு போன் செய்து ,”டேய் அண்ணா, பிரிவு சாலைக்கிட்டே நிக்குறேன், இந்த எடத்துக்கு வந்த உடனே  உன்னோட நெனப்பு வந்திச்சு, அதான் கூப்பிட்டேன்” என்றான், என்னைப்போலவே.

Monday, July 30, 2012

தூரிகைத் தாரகை-1எச்சரிக்கை: வாரத்திற்கு ஒரு தூரிகைத் தாரகை வரைவதாய் உத்தேசித்திருக்கிறேன்.

டைம் பாஸ்-1

“இனி உங்க கூட ஷாப்பிங் வந்தா,என்னன்னு கேளுங்க”என்று ஆரம்பிக்கும் சண்டையானது,“வீக் எண்ட்,ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்” என்பதில் சமாதானமாகிறது.
#என்னமோ போடா மாதவா

எங்க தஞ்சாவூர் கலெக்டர் ரொம்ப வருஷமா அங்கேயே இருக்கார். அவரையும் மாத்தினா புண்ணியமா போவும்.
 #தங்கம் சீரியல் டார்ச்சர்

”இதுவும் கடந்து போகும்” என்று சொன்னவன் ஊரு பக்கம் டவுன் பஸ்ல போனவானாத்தான் இருக்கணும் ,
#அதைத்தான் ஆடு மாடு உட்பட அனைத்தும் கடந்து போகும்.

பஸ் ,சாலு, சாக்கு, மதி இந்த வார்த்தைகளின் மூலமே மற்ற மாநில மொழிகளையும் கத்துக்கலாம்னு ஆரம்பித்தேன்.அப்புறம் ‘போதும்’னு விட்டுட்டேன் .

வாய வச்சிகிட்டு சும்மா இருந்தா பொழப்பு நடக்குமா?
 #டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

வாழ்க்கை என்பது சிலருக்கு வழுக்கையாவதில் வழுக்கிவிடுகிறது. 
#விக் எடு கொண்டாடு

”தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்குமாம்”.
#எங்க ஏரியாவில் ஒவ்வொரு ஹோட்டலா தேடித் தேடி சாப்பிட்டும் ருசியே இல்லையப்பு.

தொப்பையைக் குறைக்க, டி.வி ரிமோட்டை தூர வீசு. 
#பிட்னஸ் சீக்ரெட்

கோயில் உண்டியலை உடைச்சு திருடுபவனே சிறந்த நாத்திகவாதி. 
#பேச்சை குறை செயலில் இறங்கு

”கதவைத் திற காற்று வரட்டும்” என்னும் நித்தி மொழியை நித்திய மொழியாகச் செய்ததே இவ்வாட்சியின் ஓராண்டு சாதனை. 
#பவர் கட்

ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் சோதனையிடும் போலீசாரைக் கண்டால் யதார்த்தமாய் இருக்கும் நாம், அதை வெளிக்காட்ட நடிக்க ஆரம்பிக்கிறோம். 
#அவதானிப்பு

தனக்குத்தானே புலம்புதல் என்பது மனநிலையோ அல்லது பணநிலையோ சரியில்லாததின் அறிகுறி.
#சார் இன்னும் சம்பளம் கிரிடிட் ஆவல

Tuesday, July 24, 2012

மூணாம் பக்கம்

மூணாம் பக்கம் 1988ல் பத்மராஜன் இயக்கத்தில் வெளிவந்த மலையாளத் திரைப்படம்.

கடற்கரையோர கிராமம் ஒன்றில் தனது பரம்பரை வீட்டில் ரிட்டயர்மெண்ட் வாழ்க்கையைத் தனிமையில் கழித்து வரும் ஒரு பெரியவர்(திலகன்). அதே ஊரில் இருக்கும் தனது சக வயது நண்பரோடு சேர்ந்து மது அருந்துவது, பழைய கதைகளை பேசிக்கொண்டிருப்பது என்பதாக அவரது பொழுதுகள் கழிகின்றன.

மருத்துவக் கல்லூரி மாணவனான அவரின் பேரன்(ஜெயராம்) விடுமுறையில் அவனின் சில நணபர்களோடு தாத்தாவை பார்க்க வருகிறான். தனது ஒரே மகனின் இழப்பிற்குப் பிறகு ஒட்டுமொத்த அன்பையும் தனது பேரனின் மீது வைத்திருக்கும் பெரியவர் அவனின் வருகையை கொண்டாடி மகிழ்கிறார். 

ஒரு நாள், பேரன் தனது நண்பர்களோடு அருகில் இருக்கும் பீச்சில் குளித்துக்கொண்டிருக்கும்போது அலையில் அடித்துச் செல்லப்படுகிறான்.  அதுவரை மிகச் சாதாரணமான காட்சிகளுடன் பயணிக்கும் திரைக்கதை, பத்மராஜனின் படமாக மெல்ல மெல்ல உருமாற ஆரம்பிப்பது இந்தக் காட்சியிலிருந்தான் என்று சொல்லலாம். அலையில் அடித்துச் செல்லப்படுபவர்களின் உடல் மூன்றாவது நாளில்(படத்தின் பெயர்) கரை ஒதுங்கும் என்பது அங்கே அவர்கள் அனுபவத்தில் கண்டுகொள்கிற உண்மை. அப்படி கரை ஒதுங்குபவர்களில் சிலர் உயிருடனும் இருந்த நிகழ்வுகளும் சில கதாபாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படுகிறது. 

கடலில் அடித்துச் செல்லப்பட்டவன் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பது தெரியாமல் நகரும் அந்த மூன்று நாட்களில்,  சுற்றத்தார் எல்லோரும் கவலையோடு இருக்கும்போதும் பெரியவர் மட்டும் ”அவன் நிச்சயமாய் உயிரோடு கிடைப்பான்” என்று மற்றவர்களிடம் சொல்லியபடி தனது அன்றாட செயல்களை செய்துகொண்டிருக்கிறார்.

மூன்றாவது நாள் கரை ஒதுங்குகிறது பேரனின் உயிரற்ற உடல். அதனைத் தொடந்து நடக்கும் சம்பவங்கள் பத்மராஜனின் மேஜிக்.குறிப்பாய் மனதை கனக்கச் செய்துவிடும் அந்த கிளைமேக்ஸ். அதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் இப்படத்தில் நான் ரசித்த சில காட்சிகள் உண்டு. தான் மது அருந்தியிருப்பது பேரனுக்கு தெரிந்துவிடாமல் இருக்க செய்யும் பெரியவரின் பாடிலாங்வேஜ், தனது நண்பரின் பேத்திக்கும், தனது பேரனுக்கும் இடையே காதலை வளர்த்துவிட பெரியவர் செய்யும் விஷயங்கள் குறிப்பாய் பேரனுக்குத் தெரியாமல் இயல்பாய் அவர்களின் சந்திப்புகள் நிகழ்வதுபோல சூழலை கிரியேட் செய்து கண்டுக்கொள்ளாதது போல இருக்குமிடத்திலெல்லாம் திலகனின் நடிப்பு கிளாஸாக இருக்கும். தமிழில்தான் அவரை வில்லனாக மட்டுமே பாவித்துவிட்டார்கள். பேரனின் உடல் கரை ஒதுங்கிவிட்டதா என பெரியவர் அந்த மூன்று நாட்களும் அதிகாலையில் வந்து வந்து கடற்கரையைப் பார்த்துச் செல்லும் காட்சிகள், கடற்கரையில்  ”இது ஆபத்தான பகுதி இங்கே யாரும் குளிக்காதீர்கள்”(தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்) என்று போட் வைக்கும் காட்சி , பேரன் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும்,”நெனச்சேன்” என்றபடியே பெரியவர் காட்டும் முகபாவம் என இப்படி நிறைய காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன அசைப்போட்டு சிலாகித்துச் சொல்ல. முடிந்தால் ஒருமுறை இப்படத்தை பாருங்கள். 


பத்மராஜனின் ”இந்நலே” படத்தைப் பற்றி அடுத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.

Wednesday, July 11, 2012

ஓவிய சார்.

ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை எனது கிராமத்திற்கு பக்கத்து ஊரில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில்(தற்போது மேநிலைப் பள்ளி) படித்தேன். அதே பள்ளியில்தான் எனது அப்பாவும் ஆசிரியராக பணியாற்றியதால் அங்கு பணியாற்றிய அத்தனை ஆசிரியர்களோடும் முன்னமே அறிமுகம் இருந்தது. 

இருப்பினும் ஆறாம் வகுப்பில் சேர்ந்தப் புதிதில் மிகவும் பிடித்த ஆசிரியராய் இருந்தவர் ஓவிய ஆசிரியர் நாடிமுத்து சார். நாடிமுத்து சாருக்கு அதே ஊர், பள்ளிக்கு அருகிலேயே அவரின் வீடும் இருக்கும். நாடிமுத்து சாரையும் சேர்த்து மூன்று ஆசிரியர்கள் எனது அப்பாவின் முன்னாள் மாணவர்கள் அங்கே ஆசிரியராக இருந்தார்கள்.

வாரத்தில் இரண்டு நாட்கள் ஓவிய வகுப்புகள் இருக்கும். ஆனாலும் எப்போது எங்களுக்கு ஃப்ரி டைம் கிடைத்தாலும் மொத்த வகுப்புமே சேர்ந்து ஓவிய சாரைத் தேடிப்போய் ”சார், எங்க கிளாஸுக்கு வாங்க சார்,ப்ளிஸ் சார்” என்று கெஞ்சுவோம். காரணம் அவர் சொல்லும் கதைகள்.

பொன்னியின் செல்வன், கடல் புறா போன்ற சரித்திர நாவல்களின் அறிமுகம் அவராலயே கிடைத்தன. காட்சிகளை அவர் விவரிக்கும் போது இருக்கும் அந்த ரியாக்‌ஷன்களை அத்தனை எளிதாய் விவரித்துவிட முடியாது. சட் சட்டென்று மாறும் முக பாவங்களை கேட்டுக்கொண்டிருக்கும் எங்களின் முகத்திலும் பிரதிபலிக்கச் செய்யும் சாகசக்காரர். அன்று அவர் எங்களுக்கு விவரித்த காட்சிகளில் நிறைய தனது சொந்த திரைக்கதை என்பது இப்போது இந்த நாவல்களை படிக்கையில் புரிந்தாலும் அந்த வயதிற்கு எங்களுக்கு எப்படிச் சொல்லனுமோ அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதையும் உணர்கிறேன்.

எனது பிரியமான ஆசிரியர் அடுத்தடுத்த வருடங்களில் பிடிக்காத ஆசிரியராகி  பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவரை ஒரு எதிரியைப் போல நினைக்கத் தொடங்கியிருந்தேன். மற்ற மாணவர்களும் அப்படித்தான். மற்றவர்கள் அவரை வெறுக்க இருந்தக் காரணம் சவுக்குக் குச்சியால் விளாசித் தள்ளுவதாய் இருந்தபோது எனக்கான காரணம் வேறாய் இருந்தது.

இண்ட்டர்வெல் நேரத்தில் தண்ணீர் குடிக்கச் செல்கையில் மாணவர்களுக்கு வைத்திருக்கும் குடிநீர் ட்ரம்மில் டம்ளர் சில நேரங்களில் இருக்காது. அந்த மாதிரி நேரங்களில் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் இருக்கும் டம்ளர்களை எடுத்துக்கொண்டு வந்துக் கொடுப்பேன். எனது அப்பா ஆசிரியராக இருந்ததால் இது ஒரு அட்வாண்ட்டேஜ். ஒரு முறை இந்த மாதிரி டம்ளரை எடுத்து கொடுத்தபோது, ” உங்க அப்பா வாத்தியாரா இருந்தா உன் இஷ்டத்திற்கு ஸ்டாஃப் ரூமில் நுழைவியா” என்று சொல்லி அடி பிரித்தெடுத்திவிட்டார். அங்கே ஆரம்பமானது அவரை வெறுக்கும் படலம். அதன் பின் ஸ்டாஃப் ரூமிற்கே போறதில்லை. மதிய உணவுகூட அது நாள் வரை அப்பாவுடன் (அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து சாப்பிடுவாங்க) சேர்ந்து சாபிடுவடு தான் வழக்கம் ,அதன் பிறகு தனியாக சாப்பாடு கொண்டு செல்ல ஆரம்பித்தேன்.
ஓவிய வகுப்பில் எவ்வளோ நல்லா ட்ராயிங் வரைஞ்சிருந்தாலும் எனக்கு மட்டும் பத்திற்கு முன்று அல்லது நான்கைத் தாண்டி மதிப்பெண்கள்போடவே மாட்டார்.  ”நீயும் ஒரு ஸ்டூடண்ட்தான் , உனக்கு தனியா சலுகை கொடுக்க முடியாது” என்று அடிக்கடி திட்டுவார்.

உணவு இடைவேளையின் போது எப்போதும் பள்ளிக்கு அருகில் இருக்கும் கோயிலில் எனது ஊரைச் சேர்ந்த மற்ற மாணவர்களோடு விளையாடுவது வழக்கம். ஒரு நாள் அப்படி விளையாடிக்கொண்டிருந்தபோது, எல்லோரையும் கூப்பிட்டு கிரவுண்டில் விட்டு விளாசினார். அப்போதும்கூட ”நீதாண்டா எல்லாரையும் அழைச்சிட்டு போயிருப்ப” என்று சொல்லி கூடுதலா நாலு சாத்து சாத்தினார் என்னை.  

பத்தாம் வகுப்பில் அரையாண்டுத்தேர்விற்குப் பிறகு ஓவிய வகுப்புகளில் மற்றப் பாடங்களை ரிவிஷன் பண்ணச் சொல்லியிருந்தால் அவர் வருவதில்லை. அது கடைசி பிரியடாகவும் இருந்தது. அப்போது நான் ஒரத்தநாட்டிற்கு கணிதத்திற்கு ட்யூஷன் போய்கொண்டிருந்தேன். வாரத்தில் சனி,ஞாயிறு மற்றும் வியாழன் மூன்று நாட்கள் ட்யூஷன் இருக்கும். வியாழக்கிழமை மாலை 5.30க்கு ட்யூஷன் தொடங்கும், பள்ளியில் இருந்து ஒரத்தநாட்டிற்கு சைக்கிளில் செல்ல முக்கால் மணி நேரம் ஆகும். பள்ளி முடிந்ததும் அவசர அவசரமாக செல்ல வேண்டியிருக்கும். ஒரு நாள் ஓவிய  பிரியடில், அவர்தான் இப்போது வருவதில்லையே என்று அசால்ட்டாக மணி அடிப்பதற்கு முன்பே சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். கேட்டிற்கு அருகில் நின்றவர் அன்று நடந்து கொண்ட விதத்திலிருந்துதான் அவரை எதிரியாய் பாவிக்கத் தொடங்கினேன். 

அவர் என்னை குறி வைத்து டார்ச்சர் பண்ண  சம்பவங்கள் இப்படி இன்னும்கூட சில இருக்கின்றன. இவரின் நடவடிக்கைகளை என் அப்பாவிடம் ஒரே ஒரு முறைதான் சொன்னேன். ”அவன் உன்னோட ஆசிரியர், அடிச்சா வாங்கிக்க” என்றதோடு நிறுத்திக்கொண்டார்.

பிறகு தஞ்சைக்கு மேநிலை வகுப்பிற்கு வந்த பிறகு ஒரு நாள் பஸ்ஸில் ஓவிய சார் வந்தார். அப்போது நான் அமர்ந்திருந்தேன். அவர் நின்றுகொண்டு வந்தார். எப்போதுமே தெரிந்தவர்கள் வந்தால் எழுந்து இடம் கொடுக்கும் நான் அவரை கண்டுக்காதது போலவே அமர்ந்திருந்தேன். வெறுப்பின் உச்சத்தில் இருந்த நேரம் அது.

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் எனக்கு அப்பண்டிசைடிஸ் ஆப்பரேஷன் நடந்தது. அப்போது என்னைப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்தார் ஓவிய சார். எனது கையைப் பிடிச்சிகிட்டு ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிகிட்டு இருந்தார். அப்போது அவர் மீதான வெறுப்பு  கொஞ்சம் குறையத் தொடங்கியது, ஆனாலும் அதன் பிறகு எங்கு பார்த்தாலும், பேருக்கு ஒரு வணக்கத்தோடு நகர்ந்து விடுவேன்.

எம்.சி.ஏ கரஸில் படித்தேன். அந்த சமயத்தில் ஃப்ரீ டைம் நிறைய இருந்ததால் அதே பள்ளிக்கு கணித ஆசிரியராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமா இரண்டு வருடங்கள் பணியாற்றினேன். அப்போதும் ஓவிய சார் அங்குதான் வேலை பார்த்தார். சர்க்கரை வியாதியால் மிகவும் இளைத்து போயிருந்தார். முன்புபோல் மாணவர்களை அடிப்பதெல்லாம் நிறுத்திவிட்டிருந்தார். அந்த இரண்டு வருடங்களில்தான் ஓவிய சாரின் மேல் நான் வைத்திருந்த வெறுப்பு முற்றிலும் மறைந்து மறக்க முடியாத மனிதராக ஆனார்.

”உன் அப்பாவிடம் இருக்கும் கம்பீரம் உன்னிடமும் இருக்குடா, அவர் பார்வையாலே ஸ்டூடன்ஸை அடக்குவார், உனக்கும் அதே மாதிரி பயப்படுறானுங்க, எவ்வளவு மிரட்டினாலும் உங்க அப்பாதான் எங்களுக்கு பிடிச்ச வாத்தியார், அதே மாதிரிதான் உன்னைச் சுற்றியும் பசங்க சார் சார்னு சுத்துரானுங்க” என்று சொல்லுவார்.

”நாளைக்கு சாப்பாடு கொண்டு வர வேண்டாண்டா உனக்கு ஸ்பெஷலா வீட்டில் சமைக்கச் சொல்லியிருக்கேன்” என்று சொல்லி நிறைய தடவை சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுத்திருக்கார். அந்த இரண்டு வருடங்களில் அவர் வீட்டில் நான்வெஜ் செய்த நாட்களிலெல்லாம் எனக்கு அவர் வீட்டு சாப்பாடுதான்.

நான் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போது எனக்குத் தெரியாமல் சில முறை கவனித்துவிட்டு, ”கிராமத்து பசங்களுக்கு ஏத்த  மாதிரி  டீச் பண்ணறடா, நீ பேசாம பி.எட் செய்திருக்கலாம்டா” என்று பாராட்டியிருக்கிறார். அவர் மகன் என்னிடம் பயின்றான். அவனுக்கு பிடித்த ஆசிரியராய் என்னை அவரிடம் சொன்னதை அவ்வளோ ஒரு மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

பிறகு சென்னைக்கு வந்த பிறகு அவரிடம் டச் இல்லாமல்போய்விட்டது. சென்ற வருடத்தில் ஒரு முறை ஊருக்கு சென்றுகொண்டிருந்தபோது இரவு முழுக்க அவரைப் பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்துகொண்டே இருந்தன. காலையில் பஸ்ஸைவிட்டு இறங்கும்போதே எதிரே இருந்த சுவரில் ஒட்டியிருந்த பதினாறாம் நாள் அஞ்சலி போஸ்டரில் சிரித்தபடியிருந்தார் ஓவிய சார்.

அன்று ஏன்  அவரின் நினைவு மீண்டும் மீண்டும் எனக்கு வந்ததுன்னு இப்போ வரைக்கும் ஆச்சர்யமாகவும்,குழப்பமாகவுமே இருக்கு.

Tuesday, July 10, 2012

வண்டல் மண் கதைகள்-5

காட்டாத்துப் பாலத்துக்கிட்ட விறகுக்கு கருவக்குச்சிகள வெட்டி கட்டி வச்சிக்கிட்டு, கட்டு ரொம்பக் கனமா இருக்கவும், சொம தூக்கிவிட யாராச்சும் ஆளு வருதான்னு இலுப்பமர நெழலுல ஒக்காந்து பாத்துக்கிட்டிருந்த மல்லிகாவுக்கு நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். கெச்சலா,பாதிக்கு மேல நரச்சத் தலையோட இருக்கிறவள பாத்தா இன்னும் ஒரு நாலஞ்சு வயசு சேத்து சொல்லலாங்கிற மாதிரி இருப்பா. பாட்டாளி பொம்பள, ஒரு நிமிஷம் சும்மா ஒக்காந்து பாக்க முடியாது. எதையாவது பரபரன்னு செஞ்சுகிட்டேதான் இருப்பா.
எங்கயோ எட்டி ட்ராக்டர் சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டு இருந்துச்சே ஒழிஞ்சி ஆளுவொ ஒருத்தரும் தெம்படல. மரத்த அடச்சு நின்ன நெழல வச்சு "மணி பண்ணெண்டு ஆச்சு"ன்னு தனக்குத்தானே முனகியவ, தாலிக்கொடியில இருந்த ஊக்குல ஒண்ணக் கழட்டி காலுல குத்தியிருந்த முள்ள எடுக்க ஆரம்பிச்சா.
ஒரு காலை நீட்டி, முள்ளு குத்துன காலை, நீட்டுன காலின் தொடையில மடக்கி வச்சு, முள்ளு அறுவுதான்னு மெல்லமா தடவிப் பாத்தா. முள்ளு அறுவவும் ஊறுகாய தொட்டு நக்குற மாதிரி ஆக்காட்டி வெரலால எச்சியத்தொட்டு, அறுவுன எடத்தில தொடச்சு பாக்கவும் பாதத்துக்குள்ள மச்சங் கெடக்குற மாதிரி பளிச்சுன்னு தெரிஞ்சிச்சு முள்ளு.
ஊக்கால மெல்லமாக் குத்தி அப்படியும் இப்படியுமா களஞ்சி விட்டதும் முள்ளு கொஞ்சம் தளந்து வரமாதிரி இருந்துச்சு. கட்ட வெரலுக ரெண்டையும் முள்ளு குத்துன எடத்துக்கு அங்கிட்டும் இங்கிட்டுமா வச்சு வலட்ட ஆரம்பிச்சா. கட்டுக்கேணி செங்கல்லு இடுக்கிலிருந்து, பாம்பு தலையை நீட்டுற மாதிரி, கதக்குன்னு வெளில எட்டிப் பார்த்த முள்ளை, வெடுக்குன்னு புடுங்கி,” எத்தத்தண்டி குத்தியிருக்குன்னு பாத்தியன்ன; மொவரையும் தன்னான”ன்னு முணுமுணுத்துக்கிட்டே, முள்ள வீசி எறிஞ்சிட்டு மறுபடியும் ரோட்டுல ஆளு வருதான்னு பாத்தா. யாரும் வர்ற மாதிரித் தெரியல. கையி தன்னாப்புல கால்ல இன்னும் முள்ளு தச்சிருக்கான்னு தடவிக்கிட்டிருந்துச்சு.
முள்ளுத்தச்சக் காலில் இன்னும் முள்ளு இருந்தா களஞ்சு எடுக்கலாம்னு தோணும். அப்படி ஒரு சொகமாவும் எதையோ சாதிச்சிக்கிட்டு இருக்குற மாதிரியும் இருக்கும். முள்ள எடுத்த பிறகு முந்திரிக்கொட்டைய அனல்லக் காட்டி, எளஞ்சூடானதும் வலியிருக்குற எடத்துல வச்சு வச்சு எடுத்தா வலி அப்படியே மரத்துபோவும். மரத்துப்போறது ரெண்டாம்பச்சம்தான், சுடும்போது சுருக் சுருக்குன்னு இருக்கிற அந்த சொகத்துக்கே நெதேய்க்கும் முள்ளக் குத்திக்கலாம்னு இருக்கும்.
ஆளுக அன்னாரத்தையேக் காங்கல, என்ன பண்ணலாம்னு சுத்தி முத்திப் பார்த்தவளுக்கு பக்கத்துல இருந்த இண்டம்புதர்ல படந்து கெடந்தக் குறிஞ்சாக்கீரை கண்ணுல  படவும் எந்திரிச்சு, லேசா கெந்தி கெந்தி நடந்துப்போயி கீரையப் பறிச்சு மடியில கட்ட ஆரம்பிச்சா. பாதி மடி ரொம்பியிருக்கையில யாரோ வர மாதிரித் தெரியவும், சட்டுன்னு புதரவிட்டு வெளில வந்து ரோட்டைப் பார்த்தா.
மாடிவீட்டு ரெங்கராசு தன்னோட பல்சர, காட்டாத்துக் கரையோரமா இருக்கிற கருவ மரத்தடில நிப்பாட்டிட்டு, அதுல சாஞ்ச மேனிக்கே ஒரு கையில புகையிற சிகரெட்டும், இன்னொரு கையில செல்போன வச்சி நோண்டிக்கிட்டும் நின்னான். மட மடன்னு சலவ மடிப்புக் கலையாம, வெள்ளையுஞ் சொள்ளையுமா கரவேட்டி கட்டிக்கிட்டு, கைச்செயினு , மோதிரம்னு நிக்கிற அவன பாத்தாலேத் தெரியும். பெரும் பணக்காரன்னு. மல்லிகா வீட்டுக்கு ஒண்ணுவிட்ட பங்காளிதான் ரெங்கராசு.
ரெங்கராச பார்த்த மல்லிகா புதரவிட்டு ரெண்டு எட்டு எடுத்து வச்சிட்டு ஏதோ யோசனையா தலைய சொறிஞ்சிக்கிட்டே மறுபடியும் புதருக்கேத் திரும்பி கீரைய பறிக்க ஆரம்பிச்சிட்டா.
சிகரெட்ட இழுத்து முடிச்சிட்டு ரெங்கராசு வண்டிய ஸ்டார்ட் பண்ற சத்தம் கேட்டதும் , மல்லிகா அவன் கண்ணுல படுற மாதிரி விறுவிறுன்னு வெறவுக்கட்டுக்குப் பக்கத்துல போயி நின்னுக்கிட்டு அவனப் பாத்து, ”சொமய கொஞ்சம் தூக்கிவிடுறியா?” ங்கிற மாதிரி சிரிச்சா, பதிலுக்கு ரெங்கராசும் வேண்டா வெறுப்பா லேசா சிரிச்சு தலைய ஆட்டிட்டு, அவளோட சிரிப்பின் அர்த்தம் வெளங்காதவன் போலவே , வண்டிய கிளப்பிக்கிட்டு அவம் பாட்டுக்கு போயிக்கிட்டிருந்தான்.
மூஞ்சில அடிச்ச மாதிரி போச்சு மல்லிகாவுக்கு, ”பெரசண்டு எலக்ச வரட்டும், சித்தி நொத்தின்னுட்டு இளிச்சிக்கிட்டு வரயில இருக்கு” என்று தனது ஆற்றாமைய வாயவிட்டு புலம்பிக்கிட்டே மறுபடியும் மரத்தடிக்கேத் திரும்பி, கீரைகள ஆஞ்சபடி ஒக்காந்துட்டா.
நேரம் ஆக ஆக, பசி மயக்கத்துல ”உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” ன்னு பெலகீனமா மூச்சு விட்டவ, இங்கின குந்தியிருக்க நேரத்துக்கு வீட்டுக்கேப் போயி ஆள அழைச்சிகிட்டு வந்திரலாம்னு யோசிச்சு, ஆஞ்சக்கீரைய அப்படியே முடிஞ்சிக்கிட்டு எந்திரிக்கையிலே, ”என்ன அத்தாச்சி இங்கின குந்தியிருக்க, சொம தூக்கிவிடணுமா?” என்றபடியே தோள்ல மம்பட்டிய வச்சிக்கிட்டு வந்துக்கிட்டிருந்தான் அர்ச்சுனன்.
”யப்பா, நல்ல வேள நீ வந்த, வெறவு வெட்டி வச்சிக்கிட்டு ஒரு நாழியா குந்தியிருக்கேன், ஒரு புள்ள பொடுசக் காணு்ம்”ன்னு கெரக்கம் தட்டின கண்ணுல சிரிப்பத் தேக்கி சொன்னமேனிக்கே சும்மாடுக்கு கொண்டு வந்திருந்தத் துண்ட அவசர அவசரமா சும்மாடு கோல ஆரம்பிச்சா.
”அத்தாச்சி, இந்த மம்பட்டிய நீ எடுத்துக்க, நான் தூக்கிக்கிட்டு வறேன்"ன்னு அர்ச்சுனன் சொல்லிக்கிட்டே வெறவுக்கட்ட குனிஞ்சு தூக்கப் போனான்.
”அட நீயே வேல செஞ்சுக் களச்சுப் போயி வற, ஒனக்கு எதுக்கு செரமம், சும்மா தூக்கிவிடு, நான் தூக்கிக்கிட்டு வறேன்"னு சொன்ன மல்லிகாவ எடமறிச்சு,
”ஆமா நீ தூக்குன, கால வேற கெந்துற , சும்மா இரு அத்தாச்சி, நான் தூக்கிக் கொண்டாந்து போட்டுட்டுப் போறேன்"ன்னு சொல்லியபடியே ”ஒரு கைபோடு ” என்று மல்லிகாவிடம் வெறவுக்கட்ட தூக்கிவிடச் சொல்லி குமிஞ்சான்.
”இரு இரு இந்தா இந்த சும்மாட தலைக்கு வச்சிக்க” என்று துண்டை நீட்டினா மல்லிகா.
”துண்ட எந்தலையில வச்சிக்கிட்டு வந்தா அப்புறம் தீட்டுன்னு தொடமாட்டிக, நீயே வச்சிக்க ,புதுத்துண்டாட்டமா வேற இருக்கு, நான் ஓணாங்கொடிய பறிச்சு சுத்திக்கிறேன்”ன்னான் அர்ச்சுனன்.
”ம்ம்மா, தீட்டாம்ட தீட்டு, காசு பணம் இல்லைன்னா எல்லாந் தீட்டுதான்”ன்னு சொல்லிக்கிட்டே,கோலுன சும்மாட்ட அர்ச்சுன தலையில வச்சிவிட்டு, வெறவுக்கட்ட தூக்கிவிட்ட மல்லிகா, ”நட போவோம்”ன்னு சொல்லி அர்ச்சுனனின் மம்பட்டிய தூக்கிக்கிட்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.

Tuesday, June 5, 2012

வண்டல் மண் கதைகள்-4

மேலக்காத்து சன்னமா வீசிக்கிட்டு இருந்தது. புள்ளயார் கோயில் அரசமரத்தடில துண்ட விரிச்சி ,ஒரு கைய தலைக்கு முட்டுக்கொடுத்து சீரங்கத்து பெருமாள் கணக்கா ஒருக்கலிச்சுப் படுத்துக் கெடந்த பொன்ராசு, கட்ட வெரலுக்கும், ஆக்காட்டி வெரலுக்கும் நடுவுல புறா எறக வச்சி, தயிறு கெடையிற மாதிரி இங்கிட்டும் அங்கிட்டுமா காதுக்குள்ள எதமா கொடஞ்சி அதுக்குத்தக்கன கண்ண சொருகி,வாயக் கோணி தன்னை மறந்து லயிச்சுப் போயிக் கெடந்தான்.
கருக்கல்லயே எந்திரிச்சு வெரசா கால வேலையெல்லாம் முடிச்சி, பழையக் கஞ்சியக் குடிச்சிட்டு நேரா கோயிலுக்குதான் வருவான். வந்ததும் மொத வேலையா கோபுரத்தில் இருந்து எறஞ்சு கெடக்குற புறா எறகுகல்ல நல்லதாப் பாத்து ஒண்ண எடுத்துக்குவான், எறக அவன் தேர்ந்தெடுக்கிறதே நல்ல வேடிக்கயா இருக்கும், தேங்காயத் தட்டிப்பாக்குற மாதிரி ரெண்டு கிடுத்தம் சுண்டிப் பாத்து,அதன் கெட்டிதன்மை திருப்தியா இருந்தா எடுத்து, நுனிய ஒதுக்கி, கொஞ்சம் கீழே யெறக்கி சர்ர்ர்...ருன்னு ஒரு இழு, அப்படியே அட்ட பூச்சி மாதிரி எறகு மசுரு சுருட்டிக்கிட்டு விழும், அதே மாரிக்க ரெண்டு பக்கமும் இழுத்துவிட்டு காது கொடைய ரெடி பண்ணிருவான். ”இதுமாரி கோழி எறகுல ஒட்ரே இழுப்புல இழுக்க வாய்க்காது, பொசுக்குன்னு ஒடஞ்சு போவும்”ன்னு அங்கன நிக்கிறவய்களுக்கு கேக்கேமயே வெளக்கம் வேற கொடுப்பான். விவசாய வேல ஆரம்பிக்கற வரைக்கும் இப்படி அரசமரத்தடிலதான் எவனாயாச்சும் புடிச்சு வெட்டி ஞாயம் பேசியபடி ஓடும் அவம் பொழப்பு .
”யோவ் பங்காளி, மினி பஸ்ஸு வந்திட்டு போயிருச்சா”ன்னு ராமூர்த்தியின் கொரல கேக்கவும், மெதுவா எறக காதவிட்டு வெளில எடுத்த பொன்ராசு, பீடி புடிக்கிறவன் கையில பீடிய வச்சிக்கிற மாதிரி, எறக கையில புடிச்சிக்கிட்டே, ”பத்தர வண்டியா ? இனிமேதான் வருவான்”ன்னு சொல்லிட்டு,”வாய்யா, குந்து போவலாம்”ன்னு ராமூர்த்திய கூப்ட்டான்.
”எனக்கு வேல கெடக்கு நா போறேன்,பொறய்க்கா பேசிக்குவோம்”ன்னு கெளம்பிய ராமூர்த்திய, “ஏலேய் இவன, விசியமாத்தான்டா குந்த சொல்றேன் வா”ன்னு மறுவத்ரியும் கூப்புட்டான் பொன்ராசு.
”அட என்னன்னுதான் சொல்லு, வெரசா போவனுங்கிறேன்”ன்னு அவசரப்பட்டான் ராமூர்த்தி.
“ஒண்ணுமில்ல..நம்ம கிட்டிண‌ ம‌வ‌ன் பெரிய‌வ‌னுக்கு பொண்ணு தெவ‌ஞ்சிருக்குன்னாய்ங்க‌ளே எந்த ஊரு, எவ்வடம்னு தெரியுமா?”
"அட‌ நீ வேற‌, அத‌த்தான் க‌ல‌ப்பு க‌ல‌ச்சு விட்டுட்டாய்ங்க‌ளே" ன்னு சொல்லிக்கிட்டே அவனும் கைலியை சூத்தாம்பட்டைக்கு மேல தூக்கிவிட்டு பச்சக் கலர் டவுசர் தெரியும்படி அங்கன கெடந்த முண்டுக் கல்லுல ஒக்காந்தான்.
“அடங்கொப்புரான”ன்னு படுத்திருந்தவன் பட்டுன்னு எந்திரிச்சு ஒக்காந்து “என்ன‌ய்யா இப்ப‌டி சொல்ற‌, க‌ட்டைக்கு க‌ட்ட‌ குந்தி எந்திரிச்சி, இல்லாத நட்டன அடிச்சவனுக்கெல்லாம் க‌ல்யாண‌மாயி போச்சு, இவ‌ன் ஒரு வம்பு தும்புக்கும் போவாம ப‌ம்ப‌ர‌ங்க‌ண‌க்கா வேல வெட்டின்னு சுத்திக்கிட்டு இருப்பான், இவ‌னுக்குப் போயி த‌ட்டிக்கிட்டே போவுத‌ய்யா”
“அதான் ஊருக்கு ரெண்டு பேரு கெடந்துக்கிட்டு கெளம்பிராய்ங்களேய்யா, இல்லாது பொல்லாதுமா சொல்லி கலப்புக் கலச்சுட”
“ ஊருக்கு ஊரு இதேதான் சொல்றாய்ங்க ,மெதுவா எவன் இந்த வேலய செய்யுறான்னு கண்டு சுளுக்கெடுத்துவுடணும்டா, தாயொலியல”.
“ எவனோ நம்ம ஊரு ஆளுவொ தானாம்யா, கெச்சலா ஒசரமான்னு அடையாளம் சொல்லியிருக்காய்ங்க” அதான் இன்னாருதான்னு யோசிக்க முடியல.
“ஏன்டா, ஒரு வேள மேப்படியானா இருக்குமோ” ன்னு மருதராசு வீட்டைக் கண்ணக் காட்டினான் பொன்ராசு.
“நான் என்னத்த ஒங்கிட்ட சொல்றதுன்னு நெனச்சேன், நீ பட்டுன்னு சொல்லிட்ட, அவந்தான்னு எல்லாரும் பேசிக்கிறாய்ங்க,கிட்டிணன் இதை லேசுல வுட மாட்டேனு சொல்லி, வெட்டிக்காட்டு ஒயின்சுக்கு போயிருக்காரு, இன்னைக்கு ரவளதான் நடக்கப் போவுது”
“நாஞ்சொல்றேன் இந்த மாதிரி குடி கெடுக்குற வேலய செய்ய இவன விட்டா நம்மூர்ல ஆளு இல்ல,அதுவும் அடையாளமும் பொருந்திப் போவுது” “ஆமாமா, அவனுந்தான் கல்யாண வயசுல ஆணும் பொண்ணும் வச்சிருக்கான், எல்லாம் நல்லதுக்கா”
இவய்ங்க இப்படி பேசுற மருதராசை, ஊருக்குள்ள எவனுக்குமே புடிக்காது. ஏன்னா அவன் டைப்பு அந்த மாதிரி. எந்த விசயமானாலும் எகனைக்கு மொகனையா பேசுறது, தேவ ,திருவிழான்னா ஆளுகளுக்குள்ள வம்பிழுத்துவிடுறது, ஏலம் விட்ட கொளத்துல திருட்டு மீனு புடிக்கிறதுன்னு கிராதகம் புடிச்ச வேலையாதான் பண்ணிக்கிட்டு இருப்பான். எவனாவது எதுத்துக் கேட்டான் செத்தான் ,அந்த மாதிரி நாராசமா பேசுவான், அவன் வாயிக்கு பயந்தே நரவல கண்டா ஒதுங்கன ஒதுங்கி போயிருவாய்ங்க.சரியான சிலுவுனிப்பய.
”சரிய்யா நான் கெளம்புறேன்”ன்னு கெளம்புன ராமூர்த்திக்கிட்ட அடுத்த கொக்கியப் போட்டான் பொன்ராசு,” பஸ்ஸு வந்திருச்சான்னுக் கேட்ட,அப்புறம் போறங்கிற, யாரும் விருந்தாடி வர்ரவொல”ன்னு பொன்ராசு கேட்டுக்கிட்டு இருக்கறப்பவே, “திருட்டு வக்காளிய, எங்கேயிருந்து எங்கடா போறிய கலப்பு கலய்க்க, நாறக் !@$!$, பொண்ணு கெடைகிறதே கடுசா இருக்குன்னு எம் மொவனுக்கு கீழச்சீமையில போயி நாயா அலஞ்சு பொண்ணு தெவச்சு, தேதி குறிக்கிறதோட இருந்தத, தேவடியா மொவய்ங்க, அங்க தெக்கே போயி கலச்சு விட்டுருக்காய்ங்க, கொப்ப மொவய்ங்களா அடையாளம் எல்லாம் சொல்லியிருக்காய்ங்க, அந்த #@டா மொவனுக்கு இன்னைக்கு இருக்கு, இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்” என்று தண்ணிய போட்டுவிட்டு ரோட்டுல அலப்பற பண்ணிக்கிட்டே வந்துக்கிட்டு இருந்தான் மேப்படியான் மருதராசு.

Thursday, May 31, 2012

வண்டல் மண் கதைகள் - 3

”டேய் குவாட்டர் ஃபைனல்ல நம்ம கூட மோதப் போறது சில்லத்தூர் டீம், செம்ம ஃபார்ம்ல இருக்காய்ங்க, இன்னைக்கு கண்டிப்பா மதியரசன எப்படியாச்சும் போட்டு இழுத்துகிட்டு போயிடனும், இவய்ங்கள மட்டும் ஜெயிச்சிட்டோம்னு வெய்யி கப்பு நமக்குதான்” என்றான் கையில் கிரிகெட் பேட்டோடு நின்று கீழே கிடந்த கரும்பு சக்கையை பந்தாக பாவித்து தட்டியடியே நின்ற கோபு. 

”அவன எங்கடா இப்பயெல்லாம் பாக்க முடியுது,முந்தா நாளு பாத்தேன், மேச்சு இருக்குடா போகனும்னு சொன்னேன், உளுந்து அரிக்கணும், வேல இருக்குன்னான், சரின்னுட்டு இப்போ போனடிகிறேன், ரிங்கு போயிட்டே இருக்கு எடுக்க மாட்டேங்கிறான்டா” என்றான் தங்கப்பன்.

பக்கத்து ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்சில் ரெண்டு ரவுண்ட் ஜெயித்துவிட்டு இதோ இன்னைக்கு நடக்கவிருக்கும் குவாட்டர் ஃபைனலுக்கான மேட்சுக்கு, டீமை இன்னும் ஸ்ட்ராங்காக்கத்தான் மதியரசன தேடிகிட்டு இருக்காய்ங்க. மதியரசன்தான் இவைங்க டீமின் ஆல் ரவுண்டர். ஓப்பனிங் பௌலிங்கும் சரி ,பேட்டிங்கும் சரி அவந்தான். முக்கியமா பௌலிங்கில் கிராமத்தானுங்களுக்கே உரிய மாங்கா அடியை இடையிடையே வீசி , நல்லா ஆடிட்டு இருக்கிறவய்ங்கள க்ளீன் போல்டாக்குவதில் மன்னன்.

“என்னாது உளுந்து அரிக்கிறானா, நீ வேற அவந்தான் வத்தலாம்பட்டியிலேயே குடியா கெடக்குறான்டா, அவரு வேற முக்கிய சோலியா திரியிறாரு” என்று கண்ணடித்து நக்கலாச் சிரித்தான் முத்துக்குமார்.

முத்துக்குமார் ஏதோ அவல் கொண்டுவந்ததை அறிந்து ஆசையாய் மெல்லும் ஆவலில் எல்லோரும் ஆர்வமாய் அவனை என்னடா சொல்ற என்பதாய் பார்க்க, முத்து தொடர்ந்தான்,

“டேய் வத்தலாம்பட்டி வசந்தா தெரியுமா? அதான்டா செண்டுக்காரி, அந்த பொம்பளைகிட்ட மதி அப்பாரு பேச்சு வார்த்தையிலே இருக்காராம் ” என்றுவிட்டு சிரித்தான்.

“அது பெரும் பார்ட்டில்ல , எப்படிடா இவரோட லிங்கானுச்சு, நம்புற மாதிரி இல்லையே” என்றான் கோபு.

”நெசமாத்தான்டா அந்த பொம்பள ஊரணிகாட்டு பேங்குக்கு அடிக்கடி குழு பணம் கட்ட போகும் , அது மாதிரி போகையிலே எப்பயோ கடைசி பஸ்ஸ விட்டுட்டு நின்னிருக்கு, நம்ப மதியப்பாரு அப்போன்னு பார்த்து அங்கிட்டு வண்டியிலே வந்திருக்காரு , அப்படியே பிக்கப் பண்ணவருதான் இன்னும் இறக்கி விடலயாம் ” என்றுச் சொல்லி சிரித்த முத்து தொடர்ந்தான்.

மதி அம்மா இத பத்தி அரச பொரசலா கேள்விப்பட்டு கேட்டப்பயெல்லாம் இல்லேன்னு அடிக்க போயிருக்காரு, ஆனா அவ்வோ ரெண்டு பேரும் சோடிபோட்டுகிட்டு போனத நம்ம ஊரு பொம்பளைக யாரோ பாத்துட்டு மதியம்மாகிட்ட சொல்ல , வேற வழியில்லாம மதிகிட்ட வெவரத்த சொல்லி அழுதிருக்கு அவ்வோ அம்மா. அதான் மதிப்பய ரெண்டு பேரையும் கையுங் களவுமா புடிக்கிறேன்னு யாருக்கும் சொல்லாம அங்க போயி சுத்திகிட்டு இருக்கான். இந்த கூத்து நாலஞ்சு மாசமா நடந்துகிட்டு இருக்கு, உங்களுக்குத்தாண்டா தெரியாம இருந்திருக்கிய” என்று முடித்தான்.

“அந்த பொம்பளைக்கு எளசா இருந்தா கசக்கும்போல, பாரு முன்னாடி வெட்டிக்காட்டு மணியாரு இப்போ மதி அப்பாரு” என்று சிரித்தான் கோபு.

”இதுல என்ன காமெடின்னா நேத்து மதி அப்பாரு எங்க அப்பாருகிட்ட ‘இந்த பய அங்கயே சுத்திகிட்டு மானத்தை வாங்கிட்டு இருக்கான், அவன் பண்ணுறது ஒன்னும் மொறையில்ல, பாக்குறவய்ங்க என்ன நெனப்பாய்ங்க,ஓ மவன்கிட்ட சொல்லி கொஞ்சம் அவனை கண்டிக்க சொல்லுய்யான்’னு பொலம்பியிருக்காரு” என்றான் முத்து.

“நல்லாயிருக்குடா கதை அந்தாளு அங்க போறதுமில்லாம ..”என்று ஆரம்பித்த கோபு ,“ஏ தம்பியளா ” என்றபடியே பாலகட்டைய நோக்கி மதியம்மா வந்துகிட்டு இருந்துதத பார்த்ததும்.”அடிச்சாம் பாரு சிக்சு” என டக்குன்னு பேச்சை மாத்தினான் .

“என்ன சின்னம்மா என்னா விசியம் மதி எங்க? கொல்லையிலயா நிக்குறான்?” என்றான் முத்து வெகுளியான முகத்தோடு.

“ம்ம் கொல்லையில நிக்குறானா? ஏன் அவன் எங்க போறான் வறான்னு உங்களுக்கு தெரியாதா?” என்று கோபமாய் ஆரம்பித்தவள், சட்டுன்னு தணிந்து ”யப்பா நல்லாயிருப்பியய்யா, எம்புருஷன் இருக்கானே ஊர் மேயிர நாயி,அது எப்படியாச்சும் போயி தொலையிது, எம்புள்ளய கொண்டு வந்து சேத்துருங்கய்யா, ஆயி மாதிரியே இருந்திருக்காளே மவளும்” என்று ஒப்பாரி வைத்தாள்.

Tuesday, May 15, 2012

வண்டல் மண் கதைகள்-2

”அம்பலாரு மாமோய், எங்கின இருக்கிய” என்று அம்பலார் வீட்டு கரும்புக் கொல்லை வரப்பில் நின்னுகிட்டு குரல் கொடுத்தான் வேலன்.

ஏக சந்தோஷமா இருக்கும் வேலனின் முகத்தைப் பார்க்கும்போதே அவனப் பத்தி தெரிஞ்சவய்ங்களுக்கு ஓரளவுக்கு விஷயம் புடிபட்டுரும். அதுவும் அம்பலாரை இந்த உச்சி வெயில் நேரத்துல , தலையில துண்டுகூட போடாம தேடிகிட்டு வந்திருக்கான்னா கண்டிப்பா ஊருக்குள்ள ஏதோ பிரச்சனைங்கிறதை உறுதி பண்ணிக்கலாம்.

வண்ணாந்தொற ஆலமரத்தடியில அழுக்குத் துணிக்கெல்லாம் ஓருமண்ண போட்டுட்டு இவ்வளவையும் இன்னிக்கு தொவைச்சு முடிக்கணுமேன்னு எரிச்சலாய் ஒக்காந்து வெத்தலாக்கு போட்டுகிட்டு இருவன்கிட்ட, தெக்கித்தெரு சொக்கலிங்கம் வந்து சொன்ன சேதியதான், தாக்கலா கொண்டுகிட்டு வேலன் இப்போ அம்பலார தேடிகிட்டு வந்திருக்கான்.

“யாருப்பா அது” என்ற அம்பலத்தின் குரலுக்கு,”நாந்தான் மாமோய் வேலன்” என்றான்.

“வேலனா, இங்கிட்டு கீழண்ட கொல்லை பம்ப்செட் ஓரமா நிக்கிறேன் வா” என்ற அம்பலத்தின் பதிலுக்கு மின்னலாய் போய் நின்றான் வேலன்.

சொன அறுக்காம இருக்க சோலக்கொல்லை பொம்மைக்கு போட்டிருக்கும் தொம்பா தொம்பா சட்டை மாதிரியான ஒரு பழைய சட்டையை போட்டுகிட்டு, கரும்புக்கு தோகை உரிச்சிகிட்டு இருந்த அம்பலம் வைரக்கண்ணுக்கு ஐம்பது வயசிருக்கும். பாத்தா நாப்பதுதான் சொல்லலாம். அப்படி ஒரு தோற்றம், கடுமையான உழைப்பாளிங்கிறதால இயல்பிலேயே வலிமையான தேகம்.

“என்னடா வேலா, மொட்ட வெயில்ல என்னைய தேடிகிட்டு, என்னா விசியம்” கேட்டார் அம்பலம்.

ஒரு மாதிரி அசட்டு சிரிப்போட தலைய சொரிஞ்சிகிட்டே “ஒன்னுமில்ல மாமா , இந்த தெக்கித்தெரு சொக்கு சம்சாரத்த மாடு மேய்க்க போன எடத்துல, பழனியம்மா மவன் வடிவேலு ஏதோ கலாட்டா பண்னிபுட்டாப்ளயாம், அதான் சொக்கு பஞ்சாயத்த கூட்டச் சொல்லி தாக்கல் சொல்லிவிட்டாப்ல”

“தூத்தேரி, எதுக்கெடுத்தாலும் அருவா தூக்குற பய சொக்கு, தெரிஞ்சும் இந்த கிருத்துருவம் புடிச்ச நாயி அங்க போயி வாலாட்டியிருக்கு, மாட்டு வைத்தியன் கிட்டிணங்கிட்ட சொல்லி கிட்டி போட்டு அடிச்சிவிட்டாத்தான் அடங்குவான் போலிருக்கு” என்றபடியே வேற ஏதோ சொல்ல வந்த அம்பலம், வேலன் காட்டும் சுவாரஸ்யத்தைப் பார்த்து சட்டுன்னு சுதாரிச்சு ”சரி சரி நீ கெளம்பு தோவையெல்லாம் கரபாச்சிட்டு வறேன்” என்றார்.

மீண்டும் அதே அசட்டு சிரிப்போடவே “சரி மாமா நான் மேல வலவுகாரவுகளுக்கும் சொல்லணும், நேரமா சாவடிக்கு வந்துருங்க ” என்றபடியே வேலன் காத்தா போயிட்டிருந்தான். இன்னிக்கு வேலன் இருக்குற குசிக்கு இன்னும் ரெண்டு ஊரு துணியக்கூட வெளுப்பான்.

இப்பயெல்லாம் மாசம் பொறந்தா இப்படி ஒரு பஞ்சாயத்துன்னு ஆயிபோச்சு . இவிங்களுக்கு என்னன்னு நாம பஞ்சாயத்து பண்ண” என்று தனக்குதானே புலம்பிய அம்பலம், சட்டைய கழட்டி வரப்புல வச்சிட்டு , வெத்தல சீவ பொட்டலத்தை பிரிக்கவும், ஆறுமுகம் பொண்டாட்டி சரசு புல்லறுக்க கரும்புக் கொல்லைக்குள்ள நொழையவும் சரியா இருந்துச்சு.

Thursday, May 3, 2012

வண்டல் மண் கதைகள்-1

”சித்தப்பா, ஓ மச்சான் மவன்கிட்ட சொல்லிவய்யி, கால கைய முறிச்சாத்தான் அடங்குவான் போலருக்கு”

“வருஷா வருஷம் உங்களுக்கு இதே பொழப்பா போச்சுடா, சரி அவன் தண்ணி கட்டினதுக்கு அப்புறமா நீ கட்டிக்கடான்னாலும் கேக்க மாட்டேங்குற”

“யோவ், என்ன அவனுக்கு பரிஞ்சு பேசற,நல்லாயில்ல பாத்துக்க. விடிய காலம் மூணு மணிக்கெல்லாம் ஆத்துக்கு போயி, கிளைவாய்க்கா மதக திறந்து, ஒவ்வொருத்தங்கிட்டயா போராடி நாங்க தண்ணி கொண்டுவருவோம், வக்காலி அவம்பாட்டுக்கு நோகாம மடைய திறந்து வச்சுக்குவான், கேட்டா குத்தம், நல்லாயிருக்குய்யா ஞாயம்”

”ஏலேய் புரியாம இல்லடா, அவன் ஒரு கொணங்கெட்டவன், பேசிக்குவோம் கோவப்படாம போ”

“என்னத்த கிழிச்சியோ போ, பாத்துக்கிட்டே இரு , இன்னொரு வாட்டி வாலாட்டுனான்னு வையி மவன அவ்வளதான் சொல்லுவேன்” என்றபடியே இளங்கோ பய மேலுள்ள தாறுமாறான கோபத்தை எம்பங்காளி சேகருகிட்ட கத்திவிட்டு குளத்து பக்கம் நடையைக் கட்டினேன்.

மட்ட மத்தியானம், உச்சி வெயிலுக்கு இதமா குளத்துக்குள்ள எறங்கி தண்ணிக்குள்ள நல்லா முங்கி முங்கி எந்திரிச்சா, ஏதோ மேல வந்து விழற மாதிரி இருந்துச்சு. 

சுத்தி முத்திப் பார்த்தேன், பக்கத்து தொறையில அவ மட்டும் குளிச்சிட்டு இருந்தா, மறுபடியும் சுத்திப் பார்த்தேன், வேற யாரும் அங்கே இல்ல. குழப்பத்தோடே திரும்பவும் முங்க போனேன், சின்னதா ஒரு கல்லு என்னை நோக்கி , பார்த்துவிட்டேன் அவதான், இளங்கோ பய தங்கச்சி. அப்படியே அவளையே பாத்தேன்.

கல்லை அவ வீசாதது போலவே கண்டுக்காம சோப்பு போட்டுகிட்டு இருந்தா, மெல்ல தண்ணிக்குள்ள முங்கி சின்னதா ஒரு நத்தைக் கூடை எடுத்து அவளை நோக்கி வீசினேன், சரியா அவ முதுகுல விழுந்துச்சு, 

டக்குன்னு திரும்பிப் பார்த்து வெட்கத்தோட சிரிச்சா..

நான் மறுபடியும் சுத்தி முத்திப் பார்த்தேன் ...

Friday, April 13, 2012

ஒன்னுமில்ல..

”சரி, எங்க வீடு வந்திடுச்சு , நான் வறேன்டா..”

”செல்வி,கொஞ்சம் நில்லேன். நான் அஞ்சு வருஷமா உங்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நெனக்கிறேன். ஆனா..”

“என்னது”

“ஒன்னுமில்ல”

“சரிடா,வறேன்.”

“ம்”

“ஒரு நிமிஷம் மூர்த்தி, அஞ்சு வருஷம் இல்லடா நல்லா யோசிச்சுப் பாரு இதோட ஏழு வருஷம்”

“என்னது, ஏழு வருஷம்”

“ஒன்னுமில்ல”

Monday, February 6, 2012

பல்பு

”மச்சி , ஈவ்னிங் ஃப்ரி பண்ணிக்கோ சரக்கு இருக்கு”.

“டேய் இன்னைக்கு வேண்டாண்டா ஒர்க் இருக்கு, ஆஃபிஸ்லேருந்து கிளம்ப லேட்டாகும்”

”அப்படி என்னதாண்டா ஆணி புடுங்குவீங்க இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகள்ல” என்றவன், ”கிளென்ஃபிடிச் ஃப்ரம் யூகே யோசிச்சுக்க. வச்சிடட்டுமா” என்றான்.

“டேய் டேய் மச்சி பொறுடா ..ம்ம்ம் ஹி ஹி வறேன்டா”

”ஹா ஹா ... சரி நானே உங்க ஆஃபிஸ்ல வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றுவிட்டு போனை கட் பண்ணியவன் என்னுடைய பால்ய கால நண்பன் ரகு.

பெங்களூருவில் அஞ்சு வருஷம் குப்பை கொட்டிவிட்டு போன மாசம்தான் சென்னைக்கு வந்திருக்கான். ரொம்ப நாளா டச்சில் இல்லாமல் இருந்தவன் எப்படியோ முகநூலின் வழியா பிடிச்சிட்டான். இதோ இங்கு வந்து மூன்றாவது முறையாக சந்திக்க போறோம்.

காலையிலே இந்த புளு கலர் செக்டு ஷேர்ட் போடும்போதே தோணுச்சு இன்னிக்கு ரகு கால் பண்ணிட போறான்னு. நான் இதே ஷேர்ட் அணிந்திருந்த நாட்களில்தான் இதற்கு முன்பான இரு சந்திப்புகளுமே நடந்தன. ஆச்சர்யம் என்னென்னா அவனும் கூட பிஸ்தா கலரிலான செக்டு ஷேர்ட்தான் அந்த இரு சந்திப்புகளிலுமே அணிந்திருந்தான். இன்றைக்கும் அவன் அதே ஷேர்ட்டில் வரானான்னு பார்க்கணும்.

சரியா ஆறு மணிக்கு போன் பண்ணினான்,

“ டேய் மச்சி நான் உங்க ஆஃபிஸ் வெளியேதாண்டா நிக்குறேன் ”

”ரெண்டே நிமிஷம்டா ஷட் டவுன் பண்ணிட்டு வறேன்”

வாட் எ கோஇன்ஸிடெண்ட், சொன்னா நம்ப மாட்டீங்க அவன் இன்றைக்கும் அதே ஷேர்ட்டில்தான் இருந்தான். யுனிகானில் அமர்ந்து ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி,

“டேய் மச்சி” என்றதுதான் தாமதம்.

திரும்பியவன் யோசிக்காமல் கேட்டான்,“டேய் உங்க ஆஃபிஸ்லயும் யூனிஃபார்ம்தானா?”

Thursday, January 19, 2012

காணாமல் போன இசையமைப்பாளர்கள்:

ரொம்ப நாட்களுக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.இவ்வளவு அற்புதமான பாடல்களை தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன் ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இப்பதிவு.

"கண்ணுக்குள் நூறு நிலவா","புத்தம் புது ஓலை வரும்" - வேதம் புதிது,
"பொங்கியதே காதல் வெள்ளம்",”இதழோடு இதழ் சேர்க்கும் நேரம்”- மண்ணுக்குள் வைரம் போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன், 90 களின் ஆரம்பத்தில் வெளியான புதிய தென்றல் திரைப்படத்திற்குப் பிறகு என்னவானார் என்பது தெரியவில்லை.இப்படத்தின் பாடல்களும் கூட நன்றாக இருக்கும். குறிப்பாக "தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க" பாடலைச் சொல்லலாம்.

சௌந்தர்யன், நல்ல திறமையிருந்தும் ஏனோ இவரால் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.இவரது முதல் படமான சேரன் பாண்டியன் படத்தின் "சின்னத் தங்கம் ", "வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே" தொடங்கி அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட்டானவை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" பாடலை எழுதியதும் இவரே. இவரின் அடுத்த படமான சிந்து நதி பூவின் "மத்தாளம் கொட்டுதடி மனசு" இன்றும்கூட கிராமப்புறங்களில் அடிக்கடி ஒலிக்கக் கேட்கலாம் .கோபுர தீபம் படத்தின் ’உள்ளமே உனக்குத்தான்’ பாடலுக்கு கிராமத்து இசைப்பிரியர்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்தது.

"உன்னை தொட்ட தென்றல் இன்று " என்ற அற்புதமான மெலடியோடு தலைவாசலைத் திறந்த பால பாரதி,அமராவதியில் "தாஜ்மஹால் தேவையில்லை","புத்தம் புது மலரே", "உடலென்ன உயிரென்ன" என்ற எளிதில் மறக்க முடியாத பாடல்களை தந்து,"யாருப்பா இந்த இசையமைப்பாளர்" என்று இசைப்பிரியர்களின் புருவங்களை உயர்த்தவைத்து அத்தோடு காணாமல் போனவர்தான்.சில வருடங்களுக்கு முன்பு ”மெர்குரிப் பூக்கள்” படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.

வி.எஸ்.நரசிம்மன்,ஒரு காலத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் இரண்டு மூன்று படங்களுக்குத் தொடர்ச்சியாய் இசையமைத்தவர். அச்சமில்லை அச்சமில்லை படத்தின் "ஆவாரம் பூவு","ஓடுகிற தண்ணியிலே" பாடல்கள் இன்றும்கூட தொலைக்காட்சி நேயர்களால் விரும்பி கேட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பாடல்களை முதன் முதலில் கேட்டபோது இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசையில், சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தின் " செண்பகப் பூவைப் பார்த்து" பாடலும் அவரது இசைத் திறமையை எடுத்துக் காட்டிய ஹிட் பாடலே.

"என்ன அழகு எத்தனை அழகு","ஏன் பெண்ணென்று பிறந்தாய்" என்று அசத்தலான பாடல்களோடு லவ் டுடேவில் அறிமுகமாகி ,"மலரே ஒரு வார்த்தை பேசு","சின்ன வெண்ணிலவே" என்று பூமகள் ஊர்வலத்திற்காக இசைவிருந்து படைத்து “நீ மலரா மலரா” என்று அற்புதம் நிகழ்த்திவிட்டு மௌனமான ஷிவா . ”அச்சு வெல்லமே அச்சு வெல்லமே” என்று சக்தியோடு தொடங்கிமுந்தானைச் சேலை முட்டுதா ஆளைஎன்று அரிச்சந்திராவோடு காணாமல்போன ஆகோஷ்(ஆனந்த்,கோபால் சர்மா,ஷ்யாம்), வி.ஐ.பி மூலம் அறிமுகமாகி "மின்னல் ஒரு கோடி" பாடலைத் தந்து ஆச்சர்யபடுத்தி சமீபத்தில் உற்சாகத்தில் அவரா இவர் என்று நினைக்கவைத்த ரஞ்சித் பரோட். கௌரி மனோகரியில் "அருவிகூட ஜதி இல்லாமல் ஸ்வரங்கள் பாடுது" பாடலைத் தந்த இனியவன் போன்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமான படங்களிலே எல்லோரது கவனத்தையும் ஈர்த்து, பிறகு ஒரு சிலருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலும், சிலருக்கு கிடைத்தும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலும் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர இன்னும் இரண்டு இசையமைப்பாளர்களின் கதை சற்று வித்யாசமாய் இருக்கும். இவர்களை காணாமல் போனவர்கள் லிஸ்டிலும் சேர்க்க முடியாது, பிசியானவர்களின் வரிசையிலும் சேர்க்க முடியாது. திடீரென காணாமல் போவார்கள்,திடீரென நான்கைந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவர் "ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்"(மனசுக்குள் மத்தாப்பு),"சின்னப் பூவே மெல்ல பேசு" (சின்னப் பூவே மெல்ல பேசு) என்று ஆரம்பத்தில் அசத்தலான பாடல்களை தந்து பிறகு விக்ரமன் படத்தில் ஒரே டியூனை வைத்து ஏகப்பட்ட படங்களுக்கு "லாலாலா" போட்ட எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றொருவர் அன்னை வயல் மூலம் "மல்லிகை பூவழகில்" என்று அட்டகாசமான மெலடியோடு ஆரம்பித்து "செவ்வந்தி பூவெடுத்தேன்" என்று கோகுலத்தில் தனது திறமையை நிரூபித்து, உள்ளத்தை அள்ளித்தா என்று மிகப் பெரிய ஹிட்டெல்லாம் கொடுத்து பிறகு சில காப்பி&பேஸ்ட் போட்டுவிட்டு இப்போது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டி நடுவராக இருக்கும் சிற்பி.

இப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் இசையமைப்பாளர்கள் அறிமுகமான காலத்தில் இளையராஜா என்ற மிகப்பெரிய இசை சாம்ராஜ்யத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் அல்லது தனக்கான தனி இசை அடையாளம் இலாமல் இளைராஜாவின் இசைப்பாணியை அப்படியே தொடர முயன்றதாலும் கூட அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் போயிருக்கலாம். முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல்."ஏதோ நடக்கிறது","தோடிராகம் பாடவா","மல்லிகைப் பூ பூத்திருக்கு" போன்ற அழகான மெலடிகளையும், ரஜினி படங்கள்(மனிதன்,ராஜா சின்ன ரோஜா) உட்பட சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் பல படங்களுக்கு இசையமைத்து சமீபத்தில் மறைந்த திரு.சந்திரபோஸ், பாலைவனச் சோலை("மேகமே மேகமே"),பெண்மணி அவள் கண்மணி("மூங்கிலிலை காடுகளே"), சம்சாரம் அது மின்சாரம்("சம்சாரம் அது மின்சாரம்","ஜானகி தேவி") என்று எண்பதுகளின் மத்தியில் நிறைய படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ் மற்றும் செந்தூரப் பூவே,ஊமை விழிகள்,உரிமை கீதம்(மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்),வெளிச்சம்("துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே") போன்ற வசீகரிக்கும் பாடல்களைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்த மனோஜ் கியான் போன்ற ஒரு காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த இவர்களும் கூட காணாமல் போன லிஸ்ட்டில் இடம்பிடித்தது ஏனோ தெரியவில்லை.அழகன்,வானமே எல்லை,ஜாதி மல்லி போன்ற படங்களுக்கு இசையமைத்த மரகதமணி(கீரவாணி),கொடிபறக்குது,கேப்டன் மகள் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹம்சலேகா, ரசிகன் ஒரு ரசிகை(”பாடி அழைத்தேன்”,”ஏழிசை கீதமே”) படத்திற்கு இசையமைத்த அமரர் ரவீந்திரன் மற்றும் பூவுக்குள் பூகம்பம்("அன்பே ஒரு ஆசை கீதம்") படத்திற்கு இசையமைத்த சங்கீத ராஜன் ஆகியோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது, காரணம் அவர்கள் தெலுங்கு மற்றும் மளையாளத்தின் முண்ணனி இசையமைப்பாளர்கள்.தமிழுக்கு அவ்வப்போது விருந்தாளிகளாய் வந்த இசையமைத்தவர்கள்.

கங்கை அமரன்,எஸ்.பி.பி மற்றும் டீ.ராஜேந்தர் ஆகியோர் இசையமைப்பதை முதன்மையான தொழிலாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

டிஸ்கி:இது ஒரு மீள்ஸ்