Monday, May 31, 2010

டூரிங் டாக்கீஸ் நினைவுக‌ள்

"இன்னான்விடுதி ரெங்கம்மா","செல்லம்பட்டி துரை" பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் பகுதியில் இந்தப் பெயர்கள் அத்தனை பிரபலம். எங்க ஏரியாவின் சத்யம்,ஐனாக்ஸ் இந்த இரண்டு டூரிங் டாக்கீஸ்கள்தான்.

எண்பதுகளின் மையத்தில் தமிழக அரசின் குடும்ப
க்
கட்டுப்பாட்டு பிரச்சாரங்களைத் தாங்கிய கார்டூன் படங்களை அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் 35 mm திரையில் ஓட்டுவார்கள், அதையே ஒன்ஸ்மோர் கேட்டுப் பார்த்த பயமக்கள் நாங்களெல்லாம். பஞ்சாயத்துத் தொலைக்காட்சிக்கூட எங்கள் ஊருக்கு எட்டிப் பார்த்திராத நேரத்தில்தான் பக்கத்து ஊர்களான இன்னான்விடுதியிலும், செல்லம்பட்டியிலும் அதிரடியாக இந்த டூரிங் டாக்கீஸ்கள் அவதரித்தன.

வருஷத்துக்கு ஒரு தரம் பொங்கல்,தீபாவளிக்கு தஞ்சாவூருக்குப் போறப்போ பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையெல்லாம் பார்த்ததையே ஒரு வாரத்துக்குக் கதைக் கதையா பேசித் திரிவோம். அப்படி வாய்பிளந்துப் பார்த்த போஸ்டர்களை எங்க ஊரிலேயே பார்க்கும் பாக்கியம் இந்த டூரிங் டாக்கீஸ்களால் கிடைத்தது யாம் பெற்ற பேறு.

ஒரு ஊருக்கு இரண்டு போஸ்டர்கள் என்று கணக்கிட்டு ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போஸ்டர்களை ஒட்டுவார்கள். போஸ்டர் ஒட்ட வருபவர் மைதா மாவை சுவரில் பூசி பிறகு கொண்டு வந்திருக்கும் போஸ்டரின் பின்பக்கமும் பூசி (அவ்வளவு சஸ்பென்ஸாக பூசுவார்) திருப்பி ஒட்டுவதற்குள் "ரஜினி படம்டா", "இல்ல விசியாந்து படம்தான் எவ்வளவு பந்தயம்" என்று அங்கே கூடியிருக்கும் விஸ்கான்களிடையே பெரிய பட்டிமன்றமே நடக்கும்.

ஒரு படம் அதிகபட்சமாக ஒரு வாரம் ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஓடினால் ஆட்டோவில் விளம்பரமெல்லாம் செய்து கொண்டு வருவார்கள். எனக்குத் தெரிந்து பத்து நாட்களைக் கடந்து இரண்டு படங்கள் ரெங்கம்மாவில் ஓடியிருக்கிறது ஒன்று "கரகாட்டக்காரன்" மற்றொன்று "மைதிலி என்னைக் காதலி" (இந்தப் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன் உஸ்ஸ் முடியல, சரி வேண்டாம் ஆட்டய கவனிங்க) .

ஒவ்வொரு வாரமும் என்ன படம்னு தெரிஞ்சிக்க போஸ்டர் ஒட்டியிருக்கும் இடத்திற்கு அவனவன் கார், பைக் எல்லாம் எடுத்துகிட்டு(பசங்க படத்தில பார்திருப்பீங்கல்ல அந்த மாதிரியான கார்களும்,பைக்கும்தான்) ஓ(
ட்)
டிவந்து பார்த்ததையெல்லாம் இப்போது நினைத்தாலும் கண்முன்னே காட்சியாகிறது.

போஸ்டர்கள் ஒட்டியிருக்கும் சுவற்றின் சொந்தக்காரர்கள் அந்த போஸ்டரை வேறு யாரும் கிழித்து விடாமல் பார்துக் கொண்டால் அடுத்தப் படத்திற்கு அவர்களுக்கு இலவச அனுமதி கிடைக்கும்.அதனால் எப்போதும் யாராவது ஒருத்தர் அங்கே காவல் இருப்பர் . அவர்கள் அசரும் நேரம் பார்த்து போஸ்டரைக் கிழித்துக் கொண்டு ஓடிவிடுவோம்.அப்படி கிழிக்கப்பட்ட
போஸ்டர்களில் இருக்கும் தலைவர்கள் அடுத்தநாள் எங்கள் புத்தகத்தின் அட்டைகளாகிச் சிரிப்பார்கள்.

ரெங்கம்மாவில் பெரும்பாலும் பழைய படங்களாகவே ஓடும், மாறாக துரையில் புதுப்புது படங்களாக ரிலீஸ் செய்வார்கள்.(இங்கே பழைய படங்கள் என்று சொல்வது "லவகுசா" காலத்துப் படங்கள்,புதுப் படங்கள் என்று சொல்வது முரட்டுக் காளை ரேஞ்ச் படங்கள். துரையில் முரட்டுக்காளை ரிலீஸ் ஆகியிருந்த சமயத்தில் தஞ்சையில் "அண்ணாமலை" ஓடிக்கொண்டிருந்தது).

பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் "மாப்பிள்ளை","கேப்டன் பிரபாகரன்" போன்ற ரிலீஸ் ஆகி இரண்டு மூன்று வருடங்களேயான ரொம்பப் புதுப்படங்களையெல்லாம் போட்டு அசத்துவார்கள். இதிலும் துரையில் ரஜினி படம் ஓடினால், ரெங்கம்மாவில் விஜயகாந்த் படம்தான் ஓடும் என்று கண்மூடிக்கொண்டுச் சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு எங்க ஏரியாவில் இந்த இருவருக்கும் ரசிகர்கள் உண்டு. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ரஜினிக்கோ, விஜயகாந்துக்கோ கிடைக்காத வ
வேற்பு அப்போதைய ராமராஜன் படங்களுக்கு இந்த டூரிங் டாக்கீஸ்களில்(குறிப்பாக ரெங்கம்மா) கிடைத்தது. மேளதாளம்,தோரணம் என முழக்கி எடுத்து விடுவார்கள். வருடத்திற்கு இருமுறை "கரகாட்டக்காரனும்", "நம்ம ஊரு நாயகனும்" ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓட்டுவார்கள். அதே மாதிரி டி.ராஜேந்தர் படங்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்தது.

டீ.ஆரின் "எங்க வீட்டு வேலன்" ஓடியபோது சினிமா கொட்டாயின்(அப்படித்தான் சொல்வோம்) முன்புறம் பெரிய வேப்பங்கிளையை வெட்டி வைத்து அதன்கீழ் ஒரு அம்மன் படமும், ஒரு குடத்தில் மஞ்சள் துணியைக் கட்டி உண்டியலாகவும் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் சாமி சிலைகளை இரண்டு முறை கேமராவில் முன்னும் பின்னும் ஜூம் செய்து காட்டிவிட்டால் போதும் நிறைய அம்மணிகளுக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். பிறகு அங்கே இந்த மாதிரி படங்களுக்கென்றே ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் பூசாரி ஒருத்தர் இருப்பார் அவர் இவர்களையெல்லாம் வெளியேற்றி கொட்டாயின் முன்புறம் இருக்கும் அம்மன் படத்தின் முன்பு ஆடவிடுவார். "டேய் ம்ம்ஹூம்" என வினோத சத்தங்களையெல்லாம் அரங்கெற்றும் இந்த சாமியாடி அம்மணிகள், வாங்கி திங்க என கொண்டு வந்திருக்கும் ஐம்பது காசு, ஒரு ரூபாய்களை புசாரியின் கட்டளைப்படி உண்டியலில் போட்டுவிட்டு பூசாரி கொடுக்கும் உச்சந்தலை அடியையும், திறுநீரையும் வாங்கியபடி மீண்டும் ஆட்டைக்கு வந்துவிடுவார்கள். அதுவரை படம் நிறுத்தப் பட்டிருக்கும். "ஆடி வெள்ளி","வெள்ளிக்கிழமை விரதம்" போன்ற பக்தி படங்களுக்கு இந்த சாமியாட்ட கும்பலின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இவர்கள் சாமியாடி முடிக்கும்வரை கேண்டீன் வியாபாரம் சூடுபிடிக்கும், கடலை மிட்டாய், முறுக்கு,ஆரஞ்ச் கலர் என ஹைகிளாஸ் ஐட்டங்களயெல்லாம் வாங்கும் அளவிற்கு எங்களிடம் காசு இருக்காது. தரை டிக்கெட்டுக்கு எழுபத்தைந்து பைசா தேற்றுவதே பெரிய காரியமாக இருக்கும். எனவே தியேட்டருக்கு வெளியே விற்கும் நாவப்பழம், கொடுக்காப் புளி, நெல்லிக்காய், வேர்க் கடலை ஆகியவற்றை ஆரம்பத்திலேயே வாங்கிச் சென்றுவிடுவோம். அதிக பட்சமாக எங்களின் ஸ்னாக்ஸ் செலவை ஐம்பது பைசாவில் முடித்துக் கொள்வோம். ஒன்னார்ரூவாய் பெஞ்ச் டிக்கெட்டும், ரெண்டு ரூவா தேங்காய் நார் குஷன் சீட்டிலும் உட்கார்ந்துப் படம் பார்க்க வேண்டுமென்பது அப்போதெல்லாம் பெரிய லட்சியமாக இருந்தது.

பண்டிகை நாட்களில் மட்டும் நான்கு காட்சிகள் ஓட்டுவார்கள். மற்ற நாட்களில் இரண்டு காட்சிகள் மட்டும்தான். பண்டிகை நாட்களில்தான் படம் பார்க்க பர்மிஷன் கிடைக்கும், அதுவும் காலைக் காட்சி அல்லது மேட்னி ஷோவுக்கு. இந்த மாதிரி பகல் நேரக் காட்சிகளைப் பார்க்க நேரிடும்போது புரஜெக்டர் ரூமிலிருந்து வரும் ஒளியைவிட சூரிய ஆப்பரேட்டர் அடிக்கும் ஒளிதான் திரையை அதிகம் ஆக்ரமிக்கும். அத்தனை ஓட்டைகள் இருக்கும் சினிமாக் கொட்டாய்களின் கூரையில். மழைக் காலத்தில் பெரும்பாலும் காட்சிகளை ரத்து செய்துவிடுவார்கள்.

இரவு காட்சிகள் செல்வதுதான் பயங்கரத் திரில் நிறைந்தது. துரையும், ரெங்கம்மாவும் எங்க ஊரிலிருந்து தலா நான்கு கிலோமீட்டர் தூரத்தில் எதிரெதிர்த் திசையில் அமைந்திருக்கும். பெரும்பாலும் இரவுக் காட்சிகளுக்கு செல்லும்போது வீட்டாருக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாகவே போவோம்.


செல்லம்பட்டித் துரைக்கு செல்லும் வழி ஒன்னும் பிரச்சனை இருக்காது. மெயின் ரோட்டிலேயே சென்றுவிடலாம்.ஆனால் ரெங்கம்மாவிற்கு செல்லும் வழிதான் நிறைய அட்வென்சர்களை செய்ய வேண்டியிருக்கும். முழுவதும் வயல் காடுகளும், சவுக்குத் தோப்புகளும் நிறைந்து இருக்கும். இந்த சவுக்குத் தோப்புகளுக்கிடையில் ஒரு முனியன் கோவில் இருக்கும், அங்கே ஒரு ஹாஃப் சைஸ் 'சரவண பெலகுலா' ரேஞ்சுக்கு பெரிய முனியன் சிலை கையில் பெரிய அரிவாளோடு வீற்றிருக்கும், பக்கத்தில் ஒற்றை பனை மரம் ஒன்று இருக்கும். படம் பார்க்கச் செல்லும்போது ஓரளவிற்கு வெளிச்சத்திலேயே சென்று விடுவோம், ஆனால் திரும்பி வரும்போதுதான் "ஜெகன் மோகினி" எபெஃக்டெல்லாம் கேட்கும், அதுவும் காற்றடிக்குபோது சவுக்குத் தோப்பிலிருந்து ஒரு சத்தம் வரும் பாருங்க டி.டி.எஸ் எபெஃக்டெல்லாம் தோற்றுப் போகும். கரக்டா முனியன் கோவில் நெருங்கும் சமயத்தில் எல்லோரும் எடுப்போம் ஓட்டம், சவுக்குத் தோப்பை கடக்கும் வரை "ஆய் ஊய் குத்தி புடுவேன், வெட்டிப் புடுவேன்" என்று எங்களது பயங்களை வீரமாக மாற்றியபடி கத்திக்கொண்டே தூரமாய் வந்த பிறகே ஓட்டத்தை நிறுத்துவோம். இந்த டூரிங் டாக்கீஸில் நான் கடைசியாகப் பார்த்தப் படம் விஜய் நடித்த "விஷ்ணு". இதுவும் கூட திருட்டுதனமாகப் பார்த்த படம்தான்.

இப்படி எத்தனையோ நினைவுகளை என்னைப் போன்ற பலரிடம் விதைத்து வைத்திருக்கும் இந்த டூரிங் டாக்கீஸ்களில் ஒன்று இன்று டி.என்.சி நெல் அடுக்கும் குடோனாகவும், மற்றொன்று பாழடைந்து புதர்களும்,கரையான் புற்றுகளுமாக காட்சியளிக்கிறது.எத்தனை ஆர்ப்பாட்டம், விசில்கள், கால்தடங்கள் பதிந்த இடம் இன்று பொலிவிழந்து, மனுஷ பயலுக்கு எதையோ உணர்த்தியபடியே அமைதியாக காட்சியளிக்கிறது.

இன்று சத்யம்,ஐனாக்ஸ் தொடங்கி வெளிநாட்டு திரையரங்கில் கூட படம் பார்த்துவிட்ட போதும் மனசு ஏனோ அந்த ஆறு மணி தேய்ந்த ரெக்கார்ட் சவுண்டுக்கு ஏங்குகிறது.



Friday, May 21, 2010

அவனுக்கென்ன குடிகாரன்...

அவனுக்கென்ன குடிகாரன்...
தூசி படிந்த கிச்சன்,
நிறமிழந்த பாத்ரூம் ஸ்டிக்கர் பொட்டு,
ஃபேன் காற்றில் படபடக்கும் ஜக்கிவாசுதேவ்,
பிரிக்கப்படா உணவுப் பொட்டலம்,
டீப்பாயில் முளைத்த நெப்போலியன்,
கையில் புகையும் கிங்ஸ்,
எங்கிருந்தோ கேட்குமொரு சேவலின் கூவல்,
உறக்கம் தொலைத்த விழிகளோடு
மூலையில் சுருண்டுகிடக்கும் அவன்
உங்க‌ளின் பார்வைக்கு
வெறும் குடிகாரனாய் தெரியலாம்..!

மதனோற்சவம்
வேண்டுமென்பேன்
வேண்டாமென்பாய்
மாறன் தொடுத்த
இடைவிடாக் கணைகளில்
மயங்கி முயங்கி
பழகிய பொழுதொன்றில்
எனது வேண்டும்களுக்கும்
உனது வேண்டாம்களுக்கும்
அர்த்தம் ஒன்றேயென
அறிந்து தெளிந்தபின்
நான் கெஞ்சுவதுமில்லை
நீ மிஞ்சுவதுமில்லை
நடந்தேறிக்கொண்டிருக்கின்றன
மதனோற்சவங்கள்...!


அனங்கரங்கம்
நிசப்தம்சூழ் தனிமை
வம்பாய் வந்தமர்ந்து
வாட்டி வதைக்கும்
முறுக்கேறிய காலையில்,
ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத் தெரிந்தும்,
சிதறிக் கிடக்கும்
வாராந்திரிகளில் கண்ணும்,
ஐபாட்டுக்கு காதும்
கொடுத்து முடியாது,
ஒழுங்கிலா அறையை
சுத்தம் செய்கிறேன்....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் பிரவகிப்பை
அடக்குவதென
இயற்கையை ரசிக்க முயல்கிறேன்,
திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மற்ற வேலைகளில்
மூழ்கியிருக்கலாம்......!

எப்படித் தொலைப்பது?
வழக்கமாய்ச் செல்லும்
இப்பாதையின்
இதே இடத்தில்தான்
முன்பொருமுறை
முக்கியப் பொருளொன்றைத்
தொலைத்தேன்
,
ராசியில்லா இவ்விடத்தைக்
கடக்கும் போதெல்லாம்
இருக்கும் பொருட்களை
அனிச்சையாய்
சரி
பார்த்துக் கொள்கிறேன்,
பொருளைக் கண்டெடுத்தவனும்
இப்பாதையை
வழக்கமாக்கி
க் கொண்டனாயிருப்பின்,
இதே இடத்தை
நன்றியோடு நினைவு கூர்ந்து
நகர்ந்து போகக் கூடும்,
எனக்கான பிரச்சனை என்னவெனில்
தொலைந்தப் பொருள் தொலைந்ததுதான்,
இவ்விடத்தைக் கடக்கயில் வரும்
இப்படியான நினைவுகளை
எப்படித் தொலைப்பது?!

முத‌ல்ம‌ழை என்ற என‌து இன்னொரு வ‌லைப்ப‌திவில் எழுதி காற்று வாங்கிய‌ என‌க்குப் பிடித்த‌ கிறுக்க‌ல்க‌ள் சில‌.

Thursday, May 13, 2010

பாஸான கூட்டமுங்க....

அனுப்புதல் :
9014,
ஒன்பதாம் வகுப்பு,

அ.உ.பள்ளி,

கே.கே.பட்டி.

பெறுதல்:
திரு.அமேரிக்க சுதந்திரப் போர் அதிகாரி,
ஒரத்தநாடு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,

ஐயா,

எங்கள் ஊரில் கடந்த ஒரு மாத காலமாக அமேரிக்க சுதந்திரப் போர் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால் தாங்கள் அதை முடித்து வைக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
ஊர் மக்கள் சார்பாக
தங்கள் கீழ்படிந்துள்ள மாணவி,
9014.

ஒன்பதாம் வகுப்பு படித்தபோது அரையாண்டுத் தேர்வில் `அமேரிக்க சுதந்திரப்போர் பற்றி ஒரு
கடிதம் வரைக` என்று வினாத்தாளில் கட்டுரை என்பதிற்குப் பதிலாக கடிதமென தவறுதலாய் அச்சாகியிருந்ததால் ஒரு மாணவியால் எழுத‌ப்ப‌ட்ட‌ பதில்தான் மேலே நீங்கள் வாசித்தது.

இப்படியான மாணவக் கண்மணிகள் நிறைந்த பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றதால் ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை” யாக முதலிரண்டு ரேங்குக்குள் வந்துகொண்டிருந்தேன்.எனவே பத்தாம் வகுப்புவரை தேர்வு குறித்து பெரிதாக
பயம் இருந்ததில்லை.மற்ற பாடங்களைவிட ஆங்கிலத்திலும் சமூக அறிவியலிலும் முதல் மதிப்பெண்கள் எடுப்பதிலேயே அதிகக் கவனம் இருக்கும்.காரணம் அந்த இரண்டு பாடங்களையும் எடுத்த என்.ஏ ஸார். மனுஷன் சரியான கண்டிப்பு. ஆங்கிலத்தில் பெரிய போட்டியின்றி முதல் மதிப்பெண் எடுத்தபோதும் ஐமுனை போட்டி நிலவிய சமூக அறிவியலில் பெரும்பாலும் முதல் மதிப்பெண்ணை தவறவிட்டு விடுவேன்.ஒவ்வொரு முறை பேப்பர் திருத்திக் கொடுக்கும் போதும் உயிர் போய் உயிர் வரும்.மற்ற பசங்க சின்ன சின்ன தவறுகள் செய்திருந்தால் பெரிதாய் மதிப்பெண் குறைக்க மாட்டார் ஆனால் எனக்கு மட்டும் அப்படியே குறுக்கே ஒரு சிவப்புக் கோடிட்டு மூஞ்சில தூக்கி வீசுவார் பேப்பரை. அதனால் சமூக அறிவியலில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டுமே என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும் . என்னை கடுமையாகத் திட்டினாலும் எனது ஒவ்வொரு வளர்சிக்கும் மிகவும் பாடுபட்டவர் என்.ஏ.ஸார். அவரில்லாமல் நானில்லை என்றே சொல்லலாம் ஏனெனில் அவர்தான் என்னுடைய அப்பா. பிதாவே குருவாகும் பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கும்.(ஆனாலும் கொஞ்சம் கஸ்டம்தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்).

+1,+2 தஞ்சையின் அரசர்(Rajah's) மேநிலைப் பள்ளியில். கழுதை கட்டெறும்பாகிய இடம். சினிமாத் தியேட்டர்களில் அட்டெண்டென்ஸ் வைத்திருந்தால் அந்த இரு வருடங்களின் வருகைப் பதிவு விருது எனக்குத்தான் கிடைத்திருக்கும். +1 அரையாண்டு பரிட்சையில்தான் பிட் அடிப்பதற்கான
முதல் முயற்சி. முன்னாள் குடியரசுத் தலைவர் ஜானி ஜெயில்சிங்கின் மறைவால் கெமிஸ்ட்ரி எக்ஸாம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் சில பள்ளிகளில் குறிப்பிட்ட தேதியிலேயே எக்ஸாம் நடத்திவிட்டபடியால் கொஸ்டின் பேப்பர் அவுட்டாகிவிட்டது. அதில் கிட்டத்தட்ட 90 சதவிகித கேள்விகள் படிக்காதவை (மீதியும் கூட கேள்விபட்டதாய் ஞாபகம்தான்). புதிதாய் மடமடன்னு பிரிக்கப் படாமலேயிருந்த புத்தகத்தை ஒரு நாள் இரவுக்குள் படிக்க முடியுமா? இந்தச் சூழலில் ஒரு அப்பாவி என்னதான் செய்வான்.ஆமாம் நானும் அதைத்தான் செய்தேன்.விடிய விடிய பிட் பிரிப்பரேஷன்.

பிட் அடிச்சு மாட்றவனுங்களை அடித்து துவைப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர் போல் நடந்து கொள்ளும் ஆசிரியர்தான் ஹாலின் என்ட்ரன்ஸிலேயே வரவேற்றார். அவரைப் பார்ததுமே வியர்க்க ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் ”அவ்வளோ கஷ்டப்பட்டு எழுதிட்டு வந்தத தூக்கியா வீச முடியும், பிட் அடிச்சே ஆகணும்” என்கிற வைராக்கியத்தோட ஹாலுக்குள் நுழைந்து டெஸ்கில் அமர்ந்தால் வயிற்றை கலக்குவது போல் அவஸ்தை. வினாத்தாள் கொடுக்கும் முன்பாக “எவனாவது பிட் வச்சிருந்தா மரியாதையா கொடுத்திடுங்க, நீங்களா கொடுத்திட்டா ..” என்று அவர் சொல்லிமுடிக்கும் முன்பாகவே முதல் ஆளாக எல்லாத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு நிம்மதியானேன்.


+2வில் எந்த ஒரு பாடப் புத்தகத்தையும் திருப்புதல் தேர்வுவரை திருப்பாததால் மொத்தத்தில் 300 மதிப்பெண்கள்கூட எடுக்காமல் இருந்த என்னின் ஒரிஜினல் பிராக்ரஸ் ரிப்போர்ட் அப்பாவிடம் மாட்டிக்கொள்ள பெரிதாய் கோபப்படாமல் என் மீதான அவரின் நம்பிக்கையை அன்பாய் வெளிப்படுத்தியதும் தவறையுணர்ந்து படிக்க ஆரம்பித்தபோது காலம் கடந்துவிட்டிருந்ததால் எந்த ஒரு சப்ஜெக்டையும் முழுதாய் கவர் செய்ய முடியாமல் ஜஸ்ட் ஃபர்ஸ்ட் கிளாஸில்தான் தேர்வானேன். “ இம்ப்ரூவ்மெண்ட் எழுதுகிறேன்” என்றபோது ”யானை பெருசா குசுவப்போவுதுன்னு பின்னாடியே பார்த்துகிட்டிருந்தா அது சீத்துன்னு குசுவுச்சாம்” என்ற பழமொழியை சொல்லிய எங்க அப்பா ”போதும்பா நீ எழுதினது” என்றபடியே கல்லூரியில் பி.எஸ்.ஸி கணிப்பொறி அறிவியலில் சேர்த்துவிட்டார்.


+2 வரை தமிழ் வழிக் கல்வியென்பதால் கல்லூரியில் பாடங்களை புரிந்து கொள்வதில் சிரமம். எக்ஸாமில்
எதை வேண்டுமானாலும் எழுதாலாமென்பது முதலில் தெரியாததால் பத்து நிமிடங்களிலேயே ஹாலைவிட்டு வெளியேறிவிடுவேன். `புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது` என்பதுபோல் அரியர் விழுந்தாலும் பிட் அடிக்கக் கூடாதென்று ஆரம்ப நாட்களில் இருந்தேன். மாட்டிக்கொண்டால் மூன்று வருடம் டீபார்ட் பண்ணிவிடுவார்கள். அதுக்கூட பரவாயில்லை பெரிய போர்டில் `இன்று பிட்டடித்து பிடிபட்டவர்கள்` என்று கொட்டையெழுத்தில் எழுதி கல்லூரியின் எண்ட்ரென்ஸிலேயே வைத்து விடுவார்கள். இதற்கு பயந்தே பிட் அடிப்பதில்லையெனினும் அடுத்தடுத்த செமெஸ்டர்களில் சில நீக்குபோக்குகள் அறிந்து பஸ்டிக்கெட்டில் குறிப்பெடுத்துக்கொண்டு போவதில் ஆரம்பித்து அடுத்தவனின் பேப்பரை பிடுங்கி எழுதுகிறவரை முன்னேற்றம்.

பிராக்டிகல் எக்ஸாமில் பிட் அடிப்பதென்பது அங்கீகரிக்கப்பட்டதைப் போல் இருந்ததால் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இருக்காது.கோபாலின்(COBOL) எலக்ட்ரிசிட்டி பில் மாதிரியான இருப்பதிலேயே மிகப்பெரிய புரோகிராம்தான் எப்போதுமே எனக்கு வந்துத் தொலைக்கும். அதையெல்லாம் பிட் பேப்பரில் எழுதுவதற்கே இரண்டு நாட்களாகும். அதனால் பிட் எழுதிவரும் எவனிடமாவது வாங்கி நோகாமல் நொங்கு சாப்பிடுவது வழக்கம்.

எழுபது சதவிகித மதிப்பெண்களோடு எம்.சி.ஏ வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்டோசைப் பற்றிய தெளிவே கல்விக் கூடங்களைவிட்டு வெளியில் வந்த பிறகே என்னைப் போன்றே பலருக்கும் கிடைத்ததென்றால் அது எங்களுடைய தவறு மட்டுமா என்றால் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

பள்ளி முதல் கல்லூரி வரையிலான
தேர்வு பயம் குறித்த தொடர் பதிவிற்கு ஆதி அவர்களால் அழைக்கப்பட்டிருந்ததை ஏற்று இப்பதிவு.

இத்தொடரைத் தொடர நான் அழைக்கும் நண்பர்கள்,

பிரபாகர்.

தமிழ்ப்பறவை.

சே.குமார்.

Saturday, May 8, 2010

புரியாத புதிர்..

டீக்கடைகளில்கற்பூர நாயகியே கனகவல்லிசத்தமாய் ஒலித்துக்கொண்டிருந்த இருள்விலகா அதிகாலை.

புறநகர் பகுதியில் உங்களை அன்புடன் அழைத்துக்கொண்டிருந்த காவேரி நகர் ஆர்ச்சினுள் நுழைந்துசாமிநாதன் எம்.காம்,நகராட்சி வருவாய் துறை ஆய்வாளர்என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த அந்தஇளம் பச்சை நிற காம்பவுண்ட் சுவர் வீட்டினருகே வந்து நின்ற டாட்டா சுமோவிலிருந்து இறங்கியவருக்கு ஐம்பதை கடந்த அரசாங்க உத்தியோகஸ்தர் தோற்றம். அனேகமாய் சாமிநாதன். அவரைத் தொடர்ந்து கசங்கிய பட்டுச் சேலையில் கணத்த சரீரத்தில் ஏகப்பட்ட நகைகளணிந்து கையில் தாம்பூலப் பையோடு மிகவும் களைப்பாய் இறங்கினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. பார்த்ததுமே தெரிந்தது அவரின் மனைவியென்பது . ஏதோ திருமணத்திற்கு போய்விட்டு வருகிறார்கள்போல.

கேட்டை திறக்கச் சொல்லும் விதமாக ட்ரைவர் காரிலிருந்தபடியே ஹாரன் ஒலியை பலமுறையடித்தும் உள்ளிருந்து யாரும் ராததால், ”வள்ளி வள்ள்ள்ளீளீ..” என்று வீட்டிற்குள் இருக்கும் யாரையோ உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் அப்பெண்மணி.

மீண்டும் வீட்டிலிருந்து அமைதி,”சனிய இவ்வளோ சத்தம் போட்டும் அப்படியென்ன தூக்கம் அவளுக்குஎன்று அப்பெண்மணி களைப்பில் வெறுப்பாய் முணகியதிலிருந்தே வள்ளி வேலைக்காரியாய் இருக்கக் கூடுமென்பதை ஊகிக்க முடிந்தது,

திவாகர்...திவ்யா டேய் யாராவதும் கேட்ட திறந்து விடுங்கடாஎன்று சாமிநாதனும் குரல் கொடுத்தார். ம்ஹும்,எந்தப் பலனுமில்லை. மொபைல் போனில் இரண்டு மூன்று தடவை டயல் செய்துவிட்டுசுச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான், லேண்ட் லைனும் போக மாட்டேங்குதுஎன்றுவிட்டு, டிரைவரிடம்பழனி, காம்பவுண்ட் சுவரேறிக் குதித்து காலிங் பெல்லை அடிஎன்றார்.

டிரைவர்,காம்பவுண்ட் சுவரில் ஏறுகையில் அருகில் படுத்திருந்த தெருநாய் குரைக்கத் தொடங்கியது.”ச்சூ போஎன்றபடியே கீழே குனிந்து கல்லை எடுப்பதாய் டிரைவர் பாவனை செய்ததுதான் தாமதம் பெரிதாய் அடிவாங்கிய மாதிரிவீல்என்றலரியபடியே ஓடத்தொடங்கிய அந்நாய்,` நானும் எரிகிறேன்` என்பதாய் சன்னமாய் எரிந்துகொண்டிருந்ததொரு தெருவிளக்கு கம்பத்தினருகே நின்றுகொண்டு மீண்டும் குரைத்துக்கொண்டிருந்தது.

பலமுறை காலிங் பெல்லை அழுத்தியும் உள்ளிருந்து பெரும் அமைதியே நிலவியதால் கதவினை வேகமாய் தட்டியபடியேதம்பி திவா கதவ திறங்கய்யாஎன்று கத்திய டிரைவர் மெல்ல திரும்பி இப்போ நான் என்ன பண்ணட்டும் என்பதாய் தனது முதலாளியை நோக்க,” ஜன்னல் வழியா பாருப்பாஎன்ற முதலாளியின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது.

திறந்தே இருந்த ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்த டிரைவர் உள்ளே லைட் எரியாததால் தனது செல்போன் வெளிச்சத்தை வீட்டினுள் பாய்ச்சிய அடுத்த நொடியில்ஸாஆஆ...ர் அந்த பொண்ணு வள்ளி ஃபேன்ல தொங்கிட்டுருக்குஎன்று பெரிதாய் அலறியபடியே தெரித்து ஓடிவந்தார்.

அடிப்பாவிஎன்று அலறிய அப்பெண்மணி தொடர்ந்துஎன்னங்க உள்ளே நம்ம பசங்கஎன்று பயத்தில் நடுங்கியபடியே தனது கணவனின் கையை இறுகப்பற்றிக்கொண்டு சத்தமாய் அழ ஆரம்பித்துவிட்டாள்.

தெருமுனை டீக்கடையில்,ஏற்காட்டில் வீற்றிருக்கும் ஏகவல்லி மாரியை பக்தி பரவசத்தோடு அழைத்துக்கொண்டிருந்த எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும்கூட அச்சூழலில் அச்சம் தருவதாய் இருந்தது. தெருநாய் இன்னமும் விட்டு விட்டு குரைத்தபடியே இருந்தது.

“பழனி, உள்ளே திவாகரும் திவ்யாவும் இருக்காங்களான்னு பாரு” என்றபடியே சாமிநாதனும் கேட்டின் மேல் சிரமப்பட்டு ஏறி குதித்து உள்ளே ஓடினார் .

"எக்ஸ்கியூஸ்மி , என்னுடைய‌ ஸ்டேஷ‌ன் வ‌ந்திடுச்சு" என்று சொன்ன‌ அந்த‌ இளைஞ‌னிட‌ம் ஓசியில் வாங்கி ப‌டித்துக்கொண்டிருந்த‌ பாக்கெட் நாவ‌லை கொடுத்துவிட்டு உங்க‌ளைப் போல‌வே நானும் முடிவு என்ன‌வாக‌யிருக்கும் என‌ யோசித்துக்கொண்டே என் ப‌ய‌ண‌த்தைத் தொட‌ர்ந்தேன்.

கொசுறு: இந்த‌க் க‌தையை தொட‌ர் க‌தையாக‌ எழுத‌ நினைத்து தொட‌ரும் போட்டிருந்தேன் நேர‌மின்மையால் இப்ப‌டியே முடித்துவிட்டேன்.