Friday, April 11, 2014

ராஜாவின் பாடல்களோடு ....

நேற்று, சூரியன் FMல் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் அந்தநாள் ஞாபகம் நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்தேன். ரொம்ப அரிதாகத்தான் FM கேட்பது வழமை. எனினும் எப்போதெல்லாம் கேட்க மனநிலை வாய்க்குதோ அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் இனி இதை தொடரவேண்டுமென. 

நமக்குப் பிடித்த பாடல்களை பிளே லிஸ்ட்டில் தேர்வு செய்து வரிசையாகக் கேட்பதைக்காட்டிலும்,இந்த FMல் கேட்கும்போது அடுத்து என்ன பாட்டாய் இருக்கும் என்று ஒரு குறுகுறுப்பை நமக்குள் கடத்துவது இதில் பிடித்த விஷயமாக இருக்கிறது. சமயத்தில் ஒரு பாடலைக் கேட்டுக்கொண்டிருக்குபோது அதன் நீட்சியாய் மற்றொரு பாடல் குறித்து யோசனை உதிக்கும். பார்த்தால் அடுத்ததாய் அதே பாடல் ஒலிக்கும். அப்போது ஏற்படுகிற பரவசம் ஒரு குழந்தையின் குதூகலத்தை ஒத்திருக்கும். அது இந்தFM களின் மற்றொரு சிறப்பு.

ஒரு பாடலை வீடியோ வடிவில் பார்ப்பதைவிட இப்படி ஆடியோவை மட்டும் கேட்கும்போதுதான் நிறைய சுவாரஸ்யங்களை கவனிக்க ஏதுவாய் இருக்கிறது. குறிப்பாக அது இளையராஜாவின் பாடல்கள் என்று வரும்போது மயிர் கூச்செறிய வைக்கும் அளவிற்கு அந்த சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.எத்தனையோ முறை கேட்ட பாடல்கள்தான் என்றாலும் சில பாடல்களை பெரிய இடைவெளிக்குப் பிறகு நேற்று கேட்டபோது, மீள் வாசிப்பில் புதிய கதவுகளைத் திறக்கும் கவிதையைப்போல மொட்டையின் மெட்டுகள் புதுப்புது பூங்கதவுகளைத் திறந்த வண்ணம் இருந்தன.

எஜமானின் ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் பாடலில் ’கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க’ என்று ஹைபிட்சில் தொடங்கும் கோரஸ் முடிந்து சிதறும் ஒலிச்சிதறலைத் தொடர்ந்து ஒரு பட்டாம்பூச்சியின் சிறகை வருடுவதைப்போல அத்துனை மெல்லிய குரலில் ’ஒரு நாளும் உனை மறவாத’ என்று ஜானகி ஆரம்பிக்கும் போது எங்கேயோ ஹைபிட்ச்சில் ஆரம்பிச்ச ட்யூன் இத்துனை சாஃப்டா மாறி நிற்கிறதே எப்போ எங்கே நடந்தது அந்த டிரான்சிஷன் என்று யோசிக்கிறேன். எந்த நெருடலும் இல்லாமல் அழகாய் பயணிக்கிறது பாடல். அதுதான் மொட்டை.

அடுத்து மானே தேனே கட்டிப்புடி என்று உதயகீதத்திலிருந்து பாடல். இந்த பாடலில் ராஜாவின் பாராட்டப்பட வேண்டிய விஷயம் எஸ்.பி.பியை பாட வைத்திருப்பது. சில மெட்டுக்கள் எஸ்.பி.பியை மனதில் கொண்டே ராஜா யோசிச்சிருப்பாரோ என்ற கோணத்தில் இந்த பாடலை ரசிக்க ஆரம்பிக்கிறேன். பெரிதாய் சிலிர்க்கிற மாதிரியான வாத்தியக் கலவை இல்லாத பாடல் எனினும் அதையெல்லாம் யோசிக்கத் தேவையே இல்லை என்பதுபோல எஸ்.பி.பி எத்தனை விதமான பாவங்களை அதுவும் ஓடிக்கொண்டே இருக்கிற தாளக்கட்டில் அசால்ட்டாக கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இவ்வளவுக்கும் அப்போதெல்லாம் லைவ் ரெக்கார்டிங் வேறு. அவ்வப்போது கொடுக்கிற சின்ன சின்ன சில்மிஷ சேட்டைகள்கூட அந்த தாளக்கட்டில் பிசகாமல் உட்கார்ந்துகொண்டே இருந்தன.சிம்பிள் மெட்டைக்கூட பெரிதாய் சிலாகிக்க வைத்த விதத்தில் இந்த பாடலை பொருத்தமட்டில் ராஜாக்கு நிகரான கிரெடிட்டை எஸ்.பி.பிக்கும் கொடுக்க வேண்டும்.

தானந்தன கும்மி கொட்டி, அவ்வப்போது கேட்டிருக்கேன், அத்தனை விருப்பமாய் இருந்ததிராத இப்பாடலை நேற்றுதான் முழுவதுமாய் அனுபவித்துக் கேட்டேன். மலேசியா வாசுதேவனின் குரலில் இந்த பாடலில் வேறு எந்த பாட்டிலும் கேட்காத ஒரு வசிகரத்தைக் கவனித்தேன். ”புது மாக்கோலம் விழி மீன்போட” ,”சிறுவானி கெண்டைய போல மின்னுது கண்ராசி” என்ற வரிகளில் மலேசியாவின் குரல் ஒலிக்கும் தொனியைக் கவனித்ததும் இனி இவரின் மற்ற பாடல்களையும் இப்படி கேட்டு பார்க்க வேண்டும், நிறைய மிஸ் பண்ணியிருக்கேன் என யோசனை ஓடியது. எஸ்.பி.பி, மனோ போன்றோரின் வாய்ஸ் மாடுலேஷன்கள் குறித்து நாள் முழுக்க பேசச்சொன்னாலும் பேசுவேன். அந்த லிஸ்ட்டில் மலேஷியாவையும் இனி சேர்க்க வேண்டும்.

தபேலா டாமினேட்டிங் செய்யும் தெம்மாங்கு மெட்டுகளை ராஜா 90களில் அடிச்சி துவம்சம் பண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் வந்த பாடல் இது. எனினும் இந்த பாடல் தனக்கென்று ஒரு சுவாரஸ்யத்தை தக்க வைத்திருப்பதை நேற்றுதான் கவனித்தேன். அது அந்த மெட்டு பயணிக்கும் போக்கு, சரணத்தில் கிட்டத்தட்ட இரு வரிகளுக்கு ஒரு முறை மாறுகிறது மெட்டின் அமைப்பு. ஆனாலும் அந்த மாற்றம் அத்தனையும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் பாடல் ஆரம்பித்ததும் தானாய் ஆட ஆரம்பிக்கிற தலையை அப்படியே ஆட்ட வைத்தபடியே மொத்த பாடலும் இருந்தது. மேலும் ராஜா, தான் பாடும் பாடல்களில் உச்சரிப்பிற்கு எத்தனை முக்கியத்துவம் கொடுப்பாரென்று நாம் அறிந்ததே, இந்த பாட்டில் மலேசியாவும் சரி ஜானகியும் சரி உச்சரிப்பில் ராஜாவின் உச்சரிப்பிற்கு சற்றும் குறையாத அளவில் பாடியிருப்பதையும் கவனிக்க முடிந்தது.

உதயகீதம் படத்திலிருந்து மறுபடியும் ஒரு பாடல் வந்தது. என்னோடு பாட்டு பாடுங்கள் என்று. எண்பதுகளில் ராஜா உச்சத்தில் இருந்த டைமில் வந்த பல முத்துகளில் ஒன்று. இந்த பாடலை எப்போது கேட்டாலும் என்னை வெகுவாக கவர்வது வரிகள்தான். குறிப்பாக ’பௌர்ணமி புன்னகை பால் மொழி கன்னிகை’ என்ற வரிகள். கன்னிகை என்ற வார்த்தை பிரயோகத்தை மட்டுமே வைத்து வாலியாக இருக்கலாம் என முடிவிற்கு வந்தேன்.இன்று இணைய தேடலில் எம்.ஜி.வல்லபன் என்ற தகவல் கிடைக்கப் பெற்று ஆச்சர்யம். இவர் வேறு என்ன பாடல்களையெல்லாம் தந்திருக்கிறார் என தேட வேண்டும்.

”நேரம் ஆகிவிட்டது இந்த பாட்டோடு தூங்கிடலாம்” என்ற எண்ணம் தோன்றிய பின்னும் அடுத்த பாட்டோடு நிறுத்திக்கலாம் என ஒரு மணி நேரத்திற்கு மேலாக தவணை வாங்க வைப்பது ராஜாவின் பாடல்களை கேட்கும்போது மட்டுமே நிகழும் அனிச்சை என்றாகிவிட்டது. நள்ளிரவு ஒன்றரை மணிக்குத்தான் மனசில்லாமல் தூங்கவே சென்றேன்.