Wednesday, February 18, 2015

மனோ என்னும் மந்திரக் குரலோன்

திரையிசைப் பாடல்கள் பாடுவதில் யாரும் நெருங்கா முடியாத உயரத்தில் தனக்கென ஒரு ராஜபாட்டையை போட்டு வைத்திருந்தவர் எஸ்.பி.பி. திரையிசையில் அனைத்து விதமான பாடல்களையும் பாடும் திறமையும், அவற்றிற்குப் பொருந்தும் குரல் வளமும் கொண்ட எஸ்.பி.பிக்கு இந்திய அளவில் மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் எஸ்.பிபிக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கிய எண்பதுகளின் பிற்பகுதியில் அவரின் தேதி கிடைப்பது கடினமாக இருந்த சூழலில் எஸ்.பி.பியின் சாயலையொத்த குரலாக அடையாளம் காணப்பட்டு திரை இசையுலகிற்குள் வந்தவர் மனோ.

மனோவின் ஆரம்ப நாட்களின் பாடல்களை கேட்டால் எஸ்.பி.பி என்றே நினைக்கத் தோன்றும் அளவிற்கு குரலின் தன்மையிலிருந்து சொற்களை உச்சரிக்கும் தொனிவரை அச்சு அசல் எஸ்.பி.பியின் குரலாகவே ஒலிக்கும். உதாரணத்திற்கு வேலைக்காரன் படத்தின் ’வா வா வா அன்பே வா’ பாடலில் ’எண்ண எண்ண இனிக்குது’ என்ற ஒரு இடம் வரும் அந்த இடத்தில் ‘எண்ண’ என்பதை ‘எள்ண்ண’ ’ள்ண்’சேர்ந்தாற் போன்ற ஒரு உச்சரிப்பை மனோ கொடுத்திருப்பார். இந்த தொனியை எஸ்.பி.பியின் பல பாடல்களின் நாம் கவனிக்கலாம். ஆனாலும் அது எஸ்.பி.பியின் பாணியா இல்லை தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்களின் பொதுத் தன்மையா என்று ஒரு சந்தேகமும் உண்டு. ஏனெனில் ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’போன்ற பல பாடல்களில் பி.சுசிலாவிடமும் இதே தொனியைக் கவனிக்கலாம்.  

எஸ்.பி.பியை மிமிக் செய்கிறார் ஒரிஜினாலிட்டி இல்லாத வாய்ஸ் என்பது போல ஆரம்பத்தில் இவர் மீது சில விமர்சனங்களும்கூட எழுந்தன. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ராஜா மனோவிற்கு ஏராளமான வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டிருந்தார்.அப்போதுதான் மனோவின் குரலுக்கென்று ஒரு வசீகரம்,தனித்தன்மை இருப்பது இசை ரசிகர்களுக்கு பிடிபட ஆரம்பித்தது. இந்த அடையாளம் காணப்படுவதற்கு முன்னமே ‘செண்பகமே செண்பகமே’,‘மதுர மரிக்கொழுந்து வாசம்’,’மீனம்மா மீனம்மா’ என ஹிட்களை கொடுக்கத் தொடங்கியிருந்தார் மனோ.

மனோ என்ற பாடகனை பரவலாய் அடையாளம் காணச் செய்த பாடலென்றால் சின்னத்தம்பி படத்தின் ’தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே’ என்று சொல்லலாம்.இந்த பாடலில் தனது குரலின் தனித்துவத்தை மட்டுமன்றி தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே தடுமாறும் ‘ல’,’ழ’,’ள’ வையும் சரி, ‘ர’,’ற’ வையும் சரி மிகச் சரியான உச்சரிப்போடு மெனக்கெட்டு உச்சரிப்பது போல இல்லாமல் அத்தனை இலகுவாக பாடியிருப்பார். இந்த உச்சரிப்பின் பின்னணியில் இளையராஜாவின் மொழியார்வத்தை நாம் உணரலாம்.பட்டி தொட்டியெல்லாம் பெரிதாய் சென்றடைந்த இந்த பாடலின் மூலமாகத்தான் தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது முதன் முறையாக அவருக்குக் கிடைத்தது.இதே படத்தின் ‘உச்சந்தல உச்சியிலே’ பாடலில் ’கம்மாயி நெறஞ்சாலும் அத பாடுவே(ன்), நெல்லு கதிர் முற்றி வெளஞ்சாலும் அத பாடுவே(ன்)’ என்று தெம்மாங்குத் தனமாக சொற்களை உச்சரிக்கும் தொனியில் வசீகரிக்கும் மனோவின் குரல்.  

எஸ்.பி.பியின் குரலின் தன்மையை ஒத்திருப்பதாலோ என்னவோ அவரைப் போன்றே அனேக பின்னணி பாடகிகளின் குரல்களோடும் பொருந்தும் குரலாக மனோவின் குரல் இருந்தது.’ஆசையில பாத்தி கட்டி‘,’ராசாத்தி மனசுல‘ என சுசிலாவின் குரலின் இனிமைக்கும் ஈடுகொடுக்கும், ‘காதோரம் லோலாக்கு’,’நிலா காயும் நேரம் சரணம்’என்று எஸ்.ஜானகியின் கொஞ்சும் குரலோடும் சிருங்காரம் செய்யும்.’நினைத்தது யாரோ நீதானே’ என ஜிக்கி போன்ற ரேர் வாய்ஸோடும் அதே பாணியில் சேர்ந்து ஒலிக்கும்,’பூவான ஏட்டத்தொட்டு பொன்னான எழுத்தாலே’ என கணீர் என ஒலிக்கும் வாணி ஜெயராமின் குரலோடும் இணைந்து குழையும். எஸ்.பி.சைலஜா, மின்மினி, உமாரமணன், சுஜாதா, எஸ்.பி.பி.பல்லவி என வித்தியாசமான பல குரல்களோடும் நெருடலின்றி கச்சிதமாய் இணைந்து ஒலித்த குரல் மனோவினுடையது.

எத்தனையோ குரல்களோடு இணைந்து ஒலித்திருந்தாலும் குறிப்பிட்ட இரண்டு பாடகிகளின் குரல்களோடு இணையும்போது மனோவின் குரல் மேஜிக்கை நிகழ்த்தும். குறிப்பிட்ட அந்த இரு குரல்கள் சித்ரா மற்றும் சொர்ணலதாவினுடையது.மனோ சித்ராவுடன் இணைந்து ’நீ ஒரு காதல் சங்கீதம்’,’ஓ ப்ரியா ப்ரியா’,’ஒரு மைனா மைனா குருவி’ என்று இளையராஜாவின் இசையில் கலக்க ஆரம்பித்து ’சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது’,வீரபாண்டி கோட்டையிலே’,’அடி யாரது யாரது அங்கே’ என்று தேவா,ரஹ்மான்,சிற்பி என தொண்ணூறுகளில் முன்னணியில் இருந்த பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பல வெற்றி பாடல்களை தந்தனர். அன்றைய நாட்களில் வானொலிகளில் பாடல் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்போது பாடகர்ககளின் பெயர்களை அறிவிக்கையில் மனோ என்று அறிவிப்பாளர் சொல்லும்போதே நேயர்கள் சித்ரா என்று சொல்லுமளவிற்கு பிரபலமான இணை குரல்கள் இவர்களுடையது.

மனோ வளர்ந்து வரும் பாடகராக இருந்த போது அவருடன் கூடவே அதே காலகட்டத்தில் திறமைகளை நிரூபித்துக்கொண்டிருந்த சொர்ணலதாவுடன் இணைந்து’அந்தியில வானம்’,’சொல்லிவிடு வெள்ளி நிலவே’,’மலைக்கோயில் வாசலில்’ என்று இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்களின் வெற்றியால் பின்’முக்காலா முக்காபுல்லா’,’அன்புள்ள மன்னவனே ஆசைக் காதலனே’,’ஏய் சப்பா ஏசப்பா’,’அல்லி அல்லி அனார்கலி’ என மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் இணைந்து பாடி பல வெற்றிப் பாடல்களைத் தந்தனர்.

டூயட் பாடல்களில் மட்டுமல்லாமல் மனோ ஏராளமான தனிப் பாடல்களிலும் முத்திரையை அழுந்தப் பதிந்திருக்கிறார். எங்க ஊரு பாட்டுக்காரனின் ’செண்பகமே செண்பகமே’ பாடலின் தொடக்கத்தில், பின்னணி இசையின்றி ’பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்’ என்று ஆரம்பிக்கும் மனோவின் குரலின் வசீகரத்திற்கு மயங்காத இசை ரசிகர்களே இருக்க முடியாது எனலாம்.ராஜாதி ராஜாவின் ‘மலையாளக் கரையோரம்’, செந்தமிழ்ப்பாட்டின் ‘கூட்டுக்கொரு பாட்டிருக்கு’,தங்க மனசுக்காரனின் ‘மணிக்குயில் இசைக்குதடி’, இதயத்தைத் திருடாதேவில் ‘காவியம் பாடவா தென்றலே’ என்று மனோவின் தனிக் குரலில் மனதை கொள்ளை கொண்ட பாடல்களின் பட்டியல் பெரிதாய் நீளும். 

மேற்சொன்ன பாடல்கள் பொதுவான இசை ரசிகர்களின் தேர்வுகளாய் இருக்கும். இதுவே கிராமப்புற பின்னணியில் உள்ளவர்களின் இசை ரசனையில் ஒரு தனி பட்டியல் இருக்கும். அவற்றில் ’ஆடி பட்டம் தேடி பார்த்து,’ஒரு நாடோடி பூங்காற்று’ என்று மனோ பாடிய ஏராளனமான பாடல்கள் இருக்கும். இந்த பாடல்களின் பொதுத்தன்மைளாக கிராமப்புற சூழலை பிரபலிக்கின்ற வரிகளைக் கொண்டும், தபேலா இசை மேலோங்கிய பாடல்களாகவும் அவை இருப்பதைக் கவனிக்கலாம். இப்பொழுதும் கிராமப் புறங்களில் கோயில் திருவிழாக்கள் தொடங்கி எந்த விழாவானாலும் தொண்ணூறுகளில் வெளிவந்த பாடல்களே அதிகம் ஒலிப்பெருக்கிகளில் ஒலிக்கக் கேட்கலாம். தொண்ணூறுகளின் முதல் பாதியில் கிராமத்தை களமாகக் கொண்டு வெளிவந்த படங்களின் எண்ணிக்கை அதிகம். அந்த காலகட்டத்தில் ராஜாவும்,தேவாவும் கொடுத்த மெட்டுக்கள் அவர்களை ஈர்த்த அளவிற்கு அதன் பிறகான வருடங்களின் வெளிவந்த படங்களின் பாடல்கள் அவர்களை பெரிதாய் ஈர்க்கவில்லை. கிராமப்புற பின்னணி படங்கள் எண்ணிக்கையில் குறைய ஆரம்பித்ததும், வெளிவரும் கிராமப் பின்னணி படங்களின் பாடல்களும் அத்தனை கிராமியத்தனமாய் இல்லாமல் முற்றிலும் டிஜிட்டல் மயமாகிப்போன பின்னணி இசைக் கலவையோடு இருப்பதும் இதற்குக் காரணமாய் சொல்லலாம்.

இப்போது இருபதுகளில் இருக்கும் கிராமப்புற இளைஞர்களின் அலைபேசிகளின் நினைவகத்தில்கூட தொண்ணூறுகளின் பாடல்களே அதிக அளவில் இருக்கும். இதற்கு அவர்களின் ரசனை பின்னோக்கி இருப்பதாகக் கொள்ள முடியாது. நகர்ப் புறங்களில் இருக்கும் மால்கள் போன்ற இடங்களில் ஒரு தெம்மாங்கு பாடலை ஒலிக்கவிட்டால் அங்கே புழங்கும் நவ நாகரீக நகர இளைஞர்களுக்கு எப்படி அது கேலிக்குரியதாக இருக்குமோ அதே போலத்தான் கிராமங்களில் வாழும் இளைஞர்களை , அவர்கள் வாழ் சூழலை பிரதிபலிக்காத மேற்கத்திய பாணி இசை தொடுவதில்லை. அந்த வகையில் ‘அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு’,’கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல’,’தூதுவளை இலை அரச்சு’ என்று கிராமப்புறங்களில் அடுத்த தலைமுறை இளைஞர்களின் காலத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலாக மனோவின் குரல் இருக்கும்.

காதலன் படத்தின் ’முக்காலா முக்காபுல்லா’ பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் மனோவின் குரலில் வேறொரு டைமன்ஷனை கொண்டு வந்ததில் மொழி பேதமின்றி நாடு முழுமைக்கும் சென்றடைந்தது மனோவின் குரல். இதே பாடலின் ஹிந்தி வெர்ஷனை பாடும் வாய்ப்பும் மனோவிற்கே கிடைத்தது. பிறகு சிற்பியின் இசையில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ’அழகிய லைலா’,’அடி அனார்கலி கொஞ்சம் கேளடி’ போன்ற பாடல்களையும், வித்யாசாகர் கர்ணாவில் ’ஏய் சப்பா’ பாடலையும் இதே பாணியில் மனோவை பாட வைத்து ஹிட் கொடுத்தனர். ஒரு வகையில் ‘வருது வருது விலகு விலகு’,’ஆடி மாச காத்தடிக்க’ என எஸ்.பி.பி எண்பதுகளில் செய்து காட்டிய குரல் ஜாலத்தின் தொடர்ச்சியாய் இதை நாம் எடுத்துக்கொண்டாலும், மணிரத்னத்தின் இருவர் படத்தின் ‘ஆயிரத்தில் நான் ஒருவன்’என்று டி.எம்.எஸ் பாணியிலும் பாடி குரலை மாற்றிப்பாடுவதிலும் வெரைட்டி காட்ட முடியும் என நிரூபித்தார் மனோ. 

எஸ்.பி.பியின் நகல் என்று ஒரு பக்கம் விமர்சிக்கப்பட்டாலும் அதே காரணத்தால் மனோவிற்கு சில நல்ல விஷயங்களும் நடந்தன. அவற்றில் ஒன்று ரஜினி படங்களுக்கு பாடும் வாய்ப்புகள். வேலைக்காரன் ,ராஜாதிராஜா ,குரு சிஷ்யன் போன்ற படங்களில் தனது அறிமுக நாட்களிலேயே ராஜாவின் இசையில் ரஜினியின் படங்களில் பாடியிருந்தாலும் தொண்ணூறுகளில்தான் ரஜினியின் மேனரிஸங்களுக்கு மனோவின் குரல் நியாயம் செய்யும் என நிரூபணமானது. பாண்டியன் படத்தின் அத்தனை பாடல்களையும் இளையராஜா மனோவை பாட வைத்திருந்தார். மனோவும் கொடுத்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு ரஹ்மானும் ரஜினி படங்களில் எஸ்.பி.பிக்கு அடுத்ததாய் மனோவைத்தான் பயன்படுத்தினார்.

திரைப்பாடல்களில் எல்லா விதமான ஜேனர்களிலும் பொருந்தக்கூடிய குரல்வளம் ஒரு சில பாடகர்களுக்கே உண்டு.மனோவும் அதில் ஒருவர் என்றால் மிகையில்லை. 'கலகலக்கும் மணியோசை’ என்று குதூகலமாயும்,’அதோ மேக ஊர்வலம்’என்று மயிற்பீலி வருடலாயும், ‘என்ன மறந்த பொழுதும்’ என்று சோகத்தில் உருகியும், ‘சிவ ராத்திரி தூக்கமேது’ என்று விரகத்தில் தவித்தும்,’சந்தன மார்பிலே’ என்று கூடலில் முயங்கியும் என காதலின் அத்தனை பரிமாணங்களையும் அப்பட்டமாய் பிரதிபலித்த இந்தக் குரல் ’ஓம் சரவண பவ எனும் திரு மந்திரம்’ என்று கர்நாடக இசை பின்னணியில் பக்தி பரவசப்படுத்தி ’தென்றலே தென்றலே’ என தாலாட்டவும் செய்யும்,’காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும்’ என்று பேயாட்டமும் ஆடும். தரை லோக்கலாய்’ குண்டூரு கோங்குரா’ என்று குத்தாட்டம் போடும் அதே குரல்தான், ‘முக்காலா முக்காப்புல்லா’என்று வெஸ்டனில் எகிறியும் அடிக்கும். அந்த வகையில் திரைப்பாடல்களின் அத்தனை விதமான ஜேனர்களிலும் வெற்றிகரமாய் வலம் வந்த மனோவை முழுமையான பாடகர் என்று கூறலாம். 

இத்தனை சிறப்பானப் பங்களிப்பைச் செய்திருக்கும் மனோவை தமிழ்த் திரையிசை உலகின் புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஏனோ அவ்வளவாய் கண்டுகொள்ளவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் மிக சொற்ப எண்ணிக்கையிலான வாய்ப்புகளே அவருக்குக் கிடைத்திருக்கின்றன. வெரைட்டியான குரல்களுக்காக புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் மனோ போன்ற அனுபவசாலிகளையும் இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் பயன்படுத்தும்போது அவர்களின் இசை இன்னும் மிளிறும் எனபதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வெளியான லிங்கா படத்தின் ’அடி மோனா மை டியர் கேசோலினா’ என்று மீண்டும் மிரட்டலாய் ஹிட் கொடுத்திருக்கும் மனோவின் பக்கம் இளம் இசையமைப்பாளர்களின் பார்வை திரும்புகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.