வீட்டில், திண்ணை இருந்தவரை சும்மா இருக்கும் நேரத்தில் அதில் அமர்ந்துதான் வெட்டி அரட்டைகள் அரங்கேற்றுவோம். இப்போ அலுவலகத்தில் ஒரு பத்து நாளாக, ஆணியேதும் இல்லாமல் சும்மாதான் இருக்கிறேன். சரி எதாவது பதிவு போடலாம்னு பார்த்தா இங்கேயும் திண்ணை. பத்து நாளா சும்மா இருந்த நேரத்திலும், நான் சும்மா இருக்காமல் திண்ணை இணைய இதழைத்தாங்க படிசிட்டு இருந்தேன்.
சரி விஷயத்துக்கு வரேன்,எங்கள் கிராமத்தில் அனேக வீடுகளில் சிறிதோ, பெரிதோ சம்பிரதாயத்துக்காவது ஒரு திண்ணை இருக்கும். பெரும்பாண்மையானவர்கள் வீட்டின் திண்ணை சாணம் மற்றும் வைக்கோல்கரி சேர்த்து மெழுகிவைத்திருப்பார்கள். கரும் பச்சை நிறத்தில் இருக்கும் அந்தத் திண்ணைகளில் அமர்ந்தால் குளிரூட்டி அறையைவிட(A.C Room) சில்லுன்னு இருக்கும்.
எங்கள் வீட்டிலும் இரண்டு திண்ணைகள் இருந்தது.ஒன்று பெரியதாகவும், மற்றொன்று கொஞ்சம் சிரியதாகவும் இருக்கும்.எனது ஆரம்பக் கல்வி எங்கள் ஊரின் தொடக்கப் பள்ளியில்தான்,எங்கள் வீட்டிற்கும்,பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் ஒரு முப்பது அடிக்குள்தான் இருக்கும், பத்து மணிக்குதான் பள்ளி ஆரம்பம் என்றாலும், மாணவர்கள் ஒன்பது மணியிலிருந்தே வரத்தொடங்கிவிடுவர். அந்த ஒரு மணிநேரத்தில் எங்கள் வீட்டுத் திண்ணைதான் எங்களுக்கு பிளேகிரவுண்ட்.
எங்கள் வீட்டுத் திண்ணை சிமெண்ட்டினாலானது,நல்லா வழவழப்பாக இருக்கும்.சிலேட்டுக் குச்சி(பல்பம்) விளையாட்டு விளையாட ரொம்ப ஏதுவாக இருக்கும்.(சிலேட்டுக் குச்சி விளையாட்டுன்னா என்னண்ணு தெரியாதவங்களுக்கு விளக்கம் பின்னூட்டத்தில் தரப்படும்). நாங்கள் விளையாடி கொண்டிருக்கும் போது, எங்கள் பாட்டி சத்தம் போடுவார்,"ஏ பாளையங்களா இது என்ன சாவடியா?சத்திரமா? போயி எங்கிட்டாவது விளையாடுங்க?"என்று. அதை ஒரு நாளும் நாங்கள் காதில் வாங்கிக் கொண்டதாக நினைவில்லை .
எனது அப்பா ஆசிரியர் என்பதால், இரவு நேரத்தில் நிறைய மாணவர்கள் எங்கள் வீட்டில் வந்து படிப்பார்கள். இவ்வளவுக்கும் டியூஷன் மாதிரியெல்லாம் கிடையாது,வாத்தியார் வீட்டுக்கு போயி படிச்சா படிப்பு வரும்ங்கிறது எங்க ஊரில் சிலரது நம்பிக்கை. இரவு பத்து மணிவரை எங்கள் வீட்டுத் திண்ணையில் குருகுலம் நடக்கும். திண்ணையில் மரத்தினாலாண தூண்கள் இருக்கும், அதன் அருகில் இடம் பிடிப்பதற்கு மாணவர்களுக்கிடையே போட்டி நடக்கும்.
கோடைகாலங்களில் அனைவருக்கும் திண்ணையே படுக்கையறை, சாயங்காலமாக திண்ணையின் சூட்டைத்தணிக்க தண்ணீர் ஊற்றிவிடுவார்கள், பிறகு இரவு படுக்கும்போது வெறும் தரையிலேயே கட்டையை சாய்த்துவிடுவோம். திண்ணையின் ஜில்லிப்பில் தூக்கம் சுகமாக வரும்.
இவையணைத்தும் ஒரு திண்ணையில்தான் நடக்கும்,மற்றொன்றில் எப்போதுமே நெல் மூட்டைகளோ,உர மூட்டைகளோ அல்லது வேறேதேனும் விவசாய சம்பந்தமான பொருட்கள் அடைந்திருக்கும்.அறுவடை நேரத்தில் மழை வந்துவிட்டால்,ஈரப்பதம் உணர்வதற்காக இரண்டு திண்ணையிலும் நெல் கொட்டிவைக்கப்பட்டிருக்கும்.
சில சமயம் என் பாட்டியின் உடல்நிலை குறித்து யாராவது என்னிடம் விசாரிப்பார்கள், அப்போது பாட்டியின் உடல்நிலையின் உறுதியை விளக்குவதற்கு, "அதெல்லாம் நல்லாதான் இருக்கு, வேணா வீட்டுக்கு போயி பாருங்க இந்தத் திண்னையிலிருந்து, அந்தத் திண்ணைக்கு தாண்டிகிட்டு இருக்கும்"அப்படின்னு கூறுவேன்.உண்மைதாங்க,எங்க பாட்டி திண்ணையோடு சேர்ந்தார்போலிருக்கும் ஒரு அறையில்தான் இருப்பார்,அந்த அறைக்காண மின்விளக்கு பொத்தான்(ஸ்விட்ச்) மற்றொரு திண்ணையின் பகுதியில் இருக்கும்,இரு திண்ணைகளுக்கும் இடையில் ஒரு மூன்றரை அடி இடைவெளி இருக்கும்.எப்பொதுமே எங்க பாட்டி,இந்தத் திண்ணையிலிருந்து அந்தத் திண்ணைக்கு ஜம்ப் பண்ணிதான் ஸ்விட்ச் போடுவார்.மைக்கேல் மதன காமராஜன் பாட்டிக்கெல்லாம் அக்கா, எங்க பாட்டி.
நான் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் முன்பு இதே திண்ணையில்தான் எனது தாத்தா படுத்திருப்பார்,அவரோடு என்னையும் படுக்க வைத்துக் கொண்டு நிறைய கதைகள் சொல்லுவார். தாத்தா இறந்த பிறகு அவர் படுத்துக் கொண்டிருந்த இடத்தைப் பார்க்கும் போது கொஞ்ச காலத்திற்கு அவர் நினைவு வந்துகொண்டிருந்தது.இப்போ இல்லையான்னு கேக்கக் கூடாது, ஏன்னா இப்போ திண்ணையே இல்லை. அப்பாவிடம் புதிய வீடு கட்டச் சொல்லி போராடி பார்த்த அம்மா, அப்பா அசைந்து கொடுக்காததால் இருக்கிற வீட்டையே கொஞ்சம் மாற்ற முயன்றதில் 1999 ஆம் ஆண்டு பலியானது எங்கள் வீட்டுத் திண்ணை. இப்போ திண்ணை இருந்த இடத்தில் ஒரு புறம் ஒரு சிறிய அறையும், மறுபுறம் வரவேற்பு ஹாலாகவும் இருக்கிறது.இது மட்டுமல்ல இன்னும் வீட்டிற்குள் நிறைய மாற்றம் செய்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போதும் எதாவது ஒரு மாற்றம் இருக்கும். அப்பா,அம்மாவிடம் விளையாட்டாகச் சொல்லிக் கொண்டிருப்பார் பேசாமல் நம்ம வீட்டுக்கு ஒரு நிரந்தரக் கொத்தனாரை வேலையில் அமர்த்திவிடலாமென்று.
அம்மாவின் ஆசையை பிள்ளைகளாகிய நாங்கள், அண்ணன் தம்பி மூவரும் சேர்ந்து, இப்போதுதான் நிறைவேற்றியிருக்கிறோம்.ஆம் இன்றுதான் எங்கள் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா.
திண்ணையைப் பற்றி எழுதுவதற்கு நான் அழைக்கும் இருவர்,
காதல் முரசு அருட்பெருங்கோ மற்றும் அன்பு தம்பி ஸ்ரீ.
9 comments:
தங்களின் இடுகை எங்கள் இல்லத்துத் திண்ணைகளையும் நாங்களும் அதுபோல இருந்ததையும் நினைவூட்டியது.
உங்க பாட்டி பற்றிய பாரா ரொம்ப ரசித்தேன்..
நல்ல நினைவுகள்...
//"ஏ பாளையங்களா இது என்ன சாவடியா?சத்திரமா? போயி எங்கிட்டாவது விளையாடுங்க?"அப்படின்னு//
அது என்ன 'பாளையங்களா?'. எங்க வீட்லயும், எங்க அக்கா இந்த மாதிரி சொல்லி திட்டுவாங்க. பொருள்தான் தெரியல :)
புது மனைப் புகு விழாவிற்கு என் வாழ்த்துக்கள் !
சிலேட்டுக் குச்சி விளையாட்டுன்னா என்ன?
பாலராஜன்கீதா said...
//தங்களின் இடுகை எங்கள் இல்லத்துத் திண்ணைகளையும் நாங்களும் அதுபோல இருந்ததையும் நினைவூட்டியது.//
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க பாலராஜன்கீதா...!
உங்களது பால்ய காலமும் என் பால்ய காலத்தை ஒத்து இருந்தது குறித்து மகிழ்ச்சி...!
கயல்விழி முத்துலெட்சுமி said...
//உங்க பாட்டி பற்றிய பாரா ரொம்ப ரசித்தேன்..
நல்ல நினைவுகள்...//
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க கயல்விழி முத்துலெட்சுமி...!
தஞ்சாவூரான் said...
//அது என்ன 'பாளையங்களா?'. எங்க வீட்லயும், எங்க அக்கா இந்த மாதிரி சொல்லி திட்டுவாங்க. பொருள்தான் தெரியல :)//
வாங்க தஞ்சாவூரான்,
உங்களுக்கே தெரியலையா..?
எங்க ஊர் பக்கம் கும்பலா சிறுவர்,சிறுமியர் கூடியிருந்தால் இந்த பாளையம் அப்படிங்கிற வார்த்தை பிரயோகம் திட்டுவதற்காக உபயோகப் படுத்துவார்கள்,அதை தவிர்த்து எனக்கும் அதற்காண அர்த்தம் தெரியவில்லை.
//புது மனைப் புகு விழாவிற்கு என் வாழ்த்துக்கள் !//
ரொம்ப நன்றிங்க..!
லேகா said...
//அன்புள்ள நண்பருக்கு,
வலைத்தளத்தில் இலக்கியம் குறித்த தேடலின் பொழுது உங்களின் வலைத்தல பெயரே கவர்ந்து விட்டது.பதிவுகள் யாவும் அருமை..தொடர்ந்து கவிதை இலக்கியம் படைக்க வாழ்துக்கள்..//
வாருங்கள் லேகா,
உங்களின் முதல் வருகைக்கும்,அன்பான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
Shahul Hameed said...
//சிலேட்டுக் குச்சி விளையாட்டுன்னா என்ன?//
வாங்க சாகுல்,
ஊருக்கு வரும்போது செயல்முறை விளக்கத்தோடு சொல்லிவிடுகிறேனே..!
:)
வருகைக்கு மிக்க நன்றி...!
Post a Comment