Thursday, January 8, 2009

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள்:

கவிஞர் கண்ணதாசன்,வாலி,வைரமுத்து ஆகியோரைப் போன்று திரைப் படங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பாடல்களை எழுதாவிட்டாலும் பல மறக்க முடியாத பாடல்களை எழுதியிருக்கும் சில பாடலாசிரியர்கள் பற்றிய ஒரு சிறு நினைவூட்டல் இப்பதிவு.


கவிஞர் மு.மேத்தா:


புதுக் கவிதைகள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வரக்கூடியவர் கவிஞர் மு.மேத்தா. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம் மற்றும் திரைத்துறை என இரண்டு தளங்களில் தனது பங்களிப்பை செய்து வருபவர். இன்றைக்கும் திரை இசை சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பலராலும் விரும்பி கேட்க/பாடப்படுகிற "ராஜ ராஜ சோழன் நான்" பாடலை எழுதியவர்.
ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தில் இவர் எழுதிய"வா வா வா கண்ணா வா" பாடலில் இந்த வரிதான் சிறப்பானது என்று சொல்லமுடியாத அளவிற்கு பாடலில் ஆரம்ப வரியில் இருந்து கடைசி வரிவரை கவிநயத்தோடு காதலைச் சொல்லி அதனுள் மதநல்லினக்கம் பற்றிய ஆழமான கருத்தையும் கூறியிருப்பார்.இவர் திரைப்படங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களையே எழுதியிருக்கிறார் அதற்கு என்ன காரணமென அவரே கூறியிருக்கார், இங்கே சொடுக்கவும்.
இவரின் சில பாடல்கள்:


கற்பூர பொம்மை ஒன்று-கேளடி கண்மணி
என் மன வானில் சிறகை விரிக்கும்-காசி
பெண்மானே சங்கீதம் பாடவா- நான் சிகப்பு மனிதன்
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ - இதயக்கோயில்
மயில் போல பொண்ணு ஒன்னு- பாரதி



புலவர் புலமைபித்தன்:
கம்யூனிஸ்ட் சிந்தனைவாதியான இவரின் திரைப்பாடல்களின் வரிகளில் இலக்கியத் தரமும்,புரட்சி சிந்தனைகளும் ஓங்கி நிற்கும்.உன்னால் முடியும் தம்பி படத்திற்காக இவர் எழுதிய
"புஞ்சையுண்டு நஞ்சையுண்டு" பாடலில்
"வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது"
என்ற வரிகளில் சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வை சாடியிருப்பார்.குழந்தை வளர்ப்பில் ஒரு தாயின் பங்கு எவ்வளவு முக்கியமென்பதை எடுத்துரைக்க இன்றளவும் மேற்கோள் காட்டப்படும் ."எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரும் இவரே.
இவரின் சில பாடல்கள்:
சாதிமல்லி பூச்சரமே -அழகன்
தத்திதோம் வித்தைகள் கற்றிட-அழகன்
அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடும்போது நான் தென்றல் காற்று-நேற்று இன்று நாளை.
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு :


கவிஞர் முத்துலிங்கம்:
சிறந்த திரையிசைப் பாடலுக்கான தமிழக அரசின் விருதை இருமுறை பெற்ற இவருக்கு அரசவை கவிஞராக இருந்த சிறப்பும் உண்டு.தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியான இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப் பாடல்களை எழுதியுள்ளார்.
இவரின் சில பாடல்கள்:
இதழில் கதை எழுதும் நேரமிது-உன்னால் முடியும் தம்பி
மாஞ்சோலை கிளிதானோ-கிழக்கே போகும் ரயில்
சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு
பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
கூட்டத்திலே கோயில் புறா- இதய கோயில்
இவரை பற்றிய மேலும் தகவலுக்கு


கவிஞர் பிறைசூடன்:
எண்பதுகளின் இறுதியிலும்,தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார். 

”காவேரி ஆற்றின் மீனிங்கே 
காதோடு மோதும் ஆனந்தம்” 

கை வீசிடும் தென்றல்  கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ

போன்ற இவரின் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் பிறைசூடன் இன்னும் பெரிதாய் கொண்டாடப்பட வேண்டியவர் என்று தோன்றும். சற்றே பிடிவாதக் குணம்,திமிர்த்தனமான பேச்சு என்பதை இயல்பாய் உடையவர் என்பது இவரின் தொலைக்காட்சி பேட்டிகள் சிலவற்றை பார்த்ததிலிருந்து அறிய முடிந்தது. நம் தமிழ் திரைச்சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து போகக்கூடிய இயல்பில் இருந்திருந்தால் இன்னும்கூட அதிக எண்ணிக்கையிலான பாடல்களை இவரிடமிருந்து கிடைத்திருக்குமோ என்ற எண்ணமும் எனக்குண்டு.

மீனம்மா மீனம்மா-ராஜாதி ராஜா 

திங்கள்தான் தென்றல்தான் - கேளடி கண்மணி 
கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே 
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட  - உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்
சோலை பசுங்கிளியே - என் ராசாவின் மனசில
மணிக்குயில் இசைக்குதடி - தங்க மனசுக்காரன்
நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
உயிரே உயிரே இது தெய்வீக - எல்லாமே என் காதலி
ரசிகா ரசிகா - ஸ்டார்
போர்க்களம் இங்கே - தெனாலி



இவர்களை தவிர "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு","பாட்டு தலைவன் பாடினான்" போன்ற பாடல்களை எழுதிய ந.காமராசன், "மலையோரம் மயிலே",
"எங்கிட்ட மோதாதே","குயில் பாட்டு ஓ வந்ததென்ன" போன்ற பாடல்களை எழுதிய கவிஞர் பொன்னடியான், "கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு", "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்","எங்கெங்கு நீ சென்ற போதும்"போன்ற பாடல்களை எழுதிய கவிஞர் காமகோடியான்,பஞ்சு அருணாச்சலம் போன்ற இன்னும் சில கவிஞர்களும் பல மறக்க முடியாத பாடல்களை தந்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரின் படங்களுக்கு பெரும்பாலும் அவரே பாடல்களை எழுதியிருப்பார்.இயக்குனர் கங்கை அமரனும் "சிந்திய வெண்மணி", "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே" போன்ற நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார்.இயக்குனர் ஆபாவானனும் இணைந்த கைகள்,செந்தூர பூவே, ஊமை விழிகள் போன்ற தனது படங்களில் இடம்பெற்ற பாடல்களை எழுதியிருக்கிறார்.

"முத்தமிழே முத்தமிழே","செம்பூவே பூவே உன் மேகம் நான்" என அசத்தல் பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி மற்றும் அவரின் வழித் தோன்றல்களான ந.முத்துகுமார்,பழனிபாரதி,பா.விஜய்,யுகபாரதி,சினேகன் என இன்றைய திரையுலகில் உலாவரும் சில கவிஞர்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


இங்கே குறிப்பிட்டிருக்கும் கவிஞர்களை பற்றி எனக்குத் தெரிந்த/திரட்ட முடிந்த வரையில் தகவல்களை கொடுத்திருக்கிறேன்.இவர்களை பற்றிய உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
டிஸ்கி 1:
டி.ராஜேந்தரின் பாடல்களைப் பற்றி தனி பதிவிடயிருப்பதால் இங்கே குறிப்பிடவில்லை.
டிஸ்கி 2:
பொதுவாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் திரைப் பாடல்கள் ஒலிபரப்பப்படும் போது படத்தின் பெயரும்,இசையமைப்பாளர் மற்றும் பாடியவர்கள் பெயரை மட்டுமே அறிவித்துவிட்டு பாடலாசிரியரை குறிப்பிடுவதில்லை அதை மனதில் கொண்டே இப்பதிவை எழுதினேன்.

24 comments:

Unknown said...

அண்ணா மிக மிக நல்ல பதிவு... எனக்கு இவை அனைத்துமே புதிய தகவல்கள்.. ஆயிரம் முறை இப்பாடல்களைக் கேட்டிருக்கிறேன் பாடலாசிரியர்கள் பெயர் தெரிந்ததில்லை.. :(( அறிய வைத்தமைக்கு நன்றி.. :)) அனைத்துமே எனக்குப் பிடித்தப் பாடல்கள்.. :)))

Unknown said...

//இசை சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பலராலும் விரும்பி கேட்க/பாடப்படுகிற "ராஜ ராஜ சோழன் நான்" பாடலை எழுதியவர்.//

நானும் கூட இந்த பாடல் பாடி ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிருக்கேன்.. ;)))

Unknown said...

//"வா வா வா கண்ணா வா" //

இந்த பாடலில் "தாஜ்மகால் காதிலே ராம காதைக் கூறலாம்.. மாறும் இந்த பூமியில் மாதங்கள் ஒன்று சேரலாம்.." எனக்கு பிடித்த வரிகள்.. :)

Unknown said...

/டிஸ்கி 2:பொதுவாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் திரைப் பாடல்கள் ஒலிபரப்பப்படும் போது படத்தின் பெயரும்,இசையமைப்பாளர் மற்றும் பாடியவர்கள் பெயரை மட்டுமே அறிவித்துவிட்டு பாடலாசிரியரை குறிப்பிடுவதில்லை அதை மனதில் கொண்டே இப்பதிவை எழுதினேன்./

ம்ம் ஆமா அண்ணா :((

முரளிகண்ணன் said...

மிக அருமையான பதிவு. சுவராசிய தகவல்கள். டீ ஆரின் பதிவை மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

முரளிகண்ணன் said...

குத்து கவிஞர் பேரரசுவை விட்டு விட்டீர்களே?

நாடோடி இலக்கியன் said...

வாங்க ஸ்ரீமதி,
இந்த பதிவுக்காக தகவல் திரட்டும்போது கூட இணைய பக்கத்தில் திரைப்பட பாடல்களுக்கென்றே இருக்கும் பல விசேஷமான தளங்களில் கூட பாடலாசிரியரின் பெயர்கள் இல்லை.அதனால் நிறைவான தகவல்களை கொடுக்க முடியவில்லை.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

@முரளிகண்ணன்,
விரைவில் டி.ஆரை பற்றிய பதிவு வரும் நண்பரே.


தொடரும் வருகைக்கு மிக்க நன்றி.
//குத்து கவிஞர் பேரரசுவை விட்டு விட்டீர்களே?//

யோசிக்க வைக்கும் கேள்வி,எப்படி மறந்துபோனேன். :))

நித்யன் said...

அன்பு நண்பருக்கு வணக்கங்கள் பல.

தமிழ் திரைப்பாடல்களில் கவிதைகள் அரிதாக காணப்படும் சூழல் மாறவேண்டும என்பதே நம் அவா.

நாம் விரும்பிக்கேட்கும் சில சிறந்த பாடல்களின் கவிஞர்கள் யாரென்று அறிந்து கொண்டேன். நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள்

பேரன்பு நித்யன்

நாடோடி இலக்கியன் said...

@நித்யகுமாரன்,
ஆமாம் நண்பரே, திரைப் பாடல்களில் கவித்துமான வரிகள் இன்றைய பாடலகளில் பெரும்பாலும் இருப்பதில்லை.இப்போதுள்ள கவிஞர்களில் நா.முத்துகுமார் ஓரளவுக்கு ரசிக்கக்கூடிய வரிகளை எழுதுகிறார்.தவிரவும் குத்து பாட்டு கலாச்சாரம் இருக்கும் வரை நாம் பாடல்வரிகளில் கவிதை நயத்தை எதிர்பார்க்க முடியாது என்றே கருதுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

Anonymous said...

Panju Arunasalam as a lyricist and Sutharsanam as a music director are so undervalued in their respective fields.As in Cricket, V.V.Kumar also paid a price for having played cricket at the same era as Bedi,Prasanna and Chandrasekar. Excellent article.

Nilofer Anbarasu said...

பேரரசுவை எப்படி மறந்தீர்கள் என்றுதான் நானும் படிக்கும் போதே நினைத்தேன். பொதுவாக குத்துப் பாட்டுக்காகவே அவர் அறியப் பட்டாலும் சில நல்ல பாடல் வரிகளை அவரும் எழுதியிருக்கிறார். சிவகாசி படத்தில் வரும் "என் தெய்வத்துக்கே மாறுவேஷமா" பாடலில் வரும்
"செத்துப் பொழச்சு நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் முறிச்சு நித்தம் பாலக் கொடுப்பா
அவ வாழும் போது தள்ளி வைப்போம்
செத்த பின்ன கொல்லி வைப்போம்
புள்ளியாக பேதத்திற்கு என்ன பாவம் செஞ்சுப் புட்டாடா " என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். அதே போல் திருப்பாச்சி படத்திலும் "என்ன தவம் செஞ்சுப் புட்டோம், அண்ணன் தங்கை ஆகிப் புட்டோம்" பாடலும் ரொம்ப பிடிக்கும். இப்போது வந்த திருவண்ணாமலை படத்தில் கூட சிவன் பற்றிய ஒரு பாடல் ரொம்ப நன்றாக இருக்கும். வரும் பதிவுகளில் மறக்காமல் இவரையும் சேர்த்துக்கொள்ளவும்.

/கம்யூனிஸ்ட் சிந்தனைவாதியான இவரின் திரைப்பாடல்களின் வரிகளில் //
புலவர் புலமைபித்தன் தற்ப்போது அ.தி.மு.க வின் அரசவைக் கவிஞராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

@anonymous,
சுதர்சனம் பற்றிய தகவலுக்கு நன்றி அனானி.பஞ்சு அருணாச்சலம் அவர்கள் எழுதிய பாடல்களில் ஒன்றான "ராமனின் மோகனம்" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அடுத்தமுறை பெயரோடு பின்னூட்டமிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்,அனானி என விளிக்க சங்கடமாக இருக்கிறது நண்பரே.

நாடோடி இலக்கியன் said...

@Nilofer Anbarasu,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்கள் உண்மையிலேயே நல்ல வரிகள் கொண்டவை,ஆனால் இப்படி ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர பேரரசுவின் மற்ற பெரும்பாலான பாடல்களில் வார்த்தைகளை ராகத்தோடு பாடாமல் உச்சரித்து பாருங்கள்,கெட்ட வார்த்தையால் திட்டுவது போல்தான் இருக்கும்."என் தெய்வத்திற்கே மாறுவேசமா"ங்கிற மாதிரி யோசிக்கிறவர்,வடுமாங்காய், தயிர்சாதம் உவமையெல்லாம் குறைத்துக் கொண்டால் நல்ல பாடல்களையும் தரலாம்தான்.
செய்வாரா பேரரசு.

//புலவர் புலமைபித்தன் தற்ப்போது அ.தி.மு.க வின் அரசவைக் கவிஞராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.//

புலமை பித்தனும் முன்னால் அரசவை கவிஞரே(தற்போது அல்ல).

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

G.Ragavan said...

நீங்கள் குறிப்பிட்ட கவிஞர்கள் அனைவர்களும் நல்ல இனிய பாடல்களைத் தந்துள்ளார்கள்.

ஆனால் மற்றவர்களை விட புலமைப்பித்தன் ஒரு படி முன்னேயிருப்பது போல ஒரு எண்ணம். அரசியல் அவரை பெருமைக்கு உள்ளாக்காவிடினும்..அவரது ஒவ்வொரு திரைப்பாடலும் அவரது தமிழறிவுக்குச் சாட்சி. தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யாரடித்தாரோ...யாரடித்தாரோ...

ரோசாப்பு ரவிக்கைக்காரி..என்று பட்டியல் நீளும். இதழில் கதையெழுதும் நேரமிது பாடலும் இவர் எழுதியது என்று நினைக்கிறேன். முத்துலிங்கம் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.

இவர் தேவாவின் இசையில் வா கலா கலா கண்ணடிச்சா கலக்கலா என்றும் எழுதியிருக்கிறார்.

மெல்லிசை மன்னர் இசையில் எம்.ஜி.ஆருக்காக நிறைய பாடல் எழுதியிருக்கிறார். சட்டென்று பாடல்கள் நினைவிற்கு வரவில்லை.

நாடோடி இலக்கியன் said...

@ராகவன்,
வாங்க ராகவன்,
"இதழில் கதை எழுதும் நேரம்" பாடல் கவிஞர் முத்துலிங்கம் என்பது சரியென்றே நினைக்கிறேன்.
நீங்கள் சொன்னது போல புலமை பித்தன் எம்.ஜி.ஆர் படங்களில் நிறைய எழுதியிருக்கிறார்.எனக்கு தெரிந்த ஒரு பாடல்"ஆயிரம் நிலவே வா" படத்தின் பெயர் தெரியவில்லை."தென்பாண்டி சீமையிலே"பாடல் எழுதியதும் புலமை பித்தன் தானா?.தகவலுக்கு நன்றி.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அமுது said...

nalla pathivu

A N A N T H E N said...

உங்கள் திரட்டு, நல்ல முயற்சி, புலமைபித்தன் போட்டோவ இதுதான் முதன் முதலா பார்க்கிறேன்

//டிஸ்கி 1:
டி.ராஜேந்தரின் பாடல்களைப் பற்றி தனி பதிவிடயிருப்பதால் இங்கே குறிப்பிடவில்லை.//
நீங்களுமா?

நாடோடி இலக்கியன் said...

வாங்க ஆனந்தன்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

//நீங்களுமா?//
ஏன் நீங்களும் எழுத போறீங்களா?

காத்தவராயன் said...

//"தென்பாண்டி சீமையிலே"பாடல் எழுதியதும் புலமை பித்தன் தானா?.தகவலுக்கு நன்றி.//

"தென்பாண்டி சீமையிலே" பாடல் எழுதியது கவிஞர் வாலி. நாயகன் படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி அவர்களே.

நாடோடி இலக்கியன் said...

@காத்தவராயன்,
வாங்க‌ காத்தவராயன்.
நாயகன் படத்திற்கு பாடல்கள் எழுதியிருப்பது புலவர் புலமை பித்தனும்,இளையராஜாவும்தான்.(வாலி அல்ல). ஆனால் "தென்பாண்டிச் சீமையிலே" பாடல் எழுதியது புலமைப் பித்தனா?இளையராஜாவா? என்றுதான் தெரியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..

salem gowri said...

paadum podu naan
padam pallandu vaazga illa

netru
indru
naalai

நாடோடி இலக்கியன் said...

@கௌரி,
தகவலுக்கு மிக்க நன்றிங்க.
இப்போது சரி செய்துவிட்டேன்.

வருகைக்கும்,தகவலுக்கும் மிக்க நன்றிங்க.

Anonymous said...

புதுமைகள் படைப்போம்!