Tuesday, July 10, 2012

வண்டல் மண் கதைகள்-5

காட்டாத்துப் பாலத்துக்கிட்ட விறகுக்கு கருவக்குச்சிகள வெட்டி வச்சிகிட்டு, ரொம்ப கனமா இருக்கவும், சொம தூக்கிவிட யாராச்சும் ஆளு வருதான்னு இலுப்பமர நெழலுல ஒக்காந்து பாத்துகிட்டிருந்தா மல்லிகா.

மல்லிகாவுக்கு நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். கெச்சலா,பாதிக்கு மேல நரச்ச தலையோட இருக்கிறவள பாத்தா இன்னும் ஒரு நாலஞ்சு வயசு சேத்து சொல்லலாங்கிற மாதிரி இருப்பா. பாட்டாளி பொம்பள, ஒரு நிமிஷம் சும்மா ஒக்காந்து பாக்க முடியாது. எதையாவது பரபரன்னு செஞ்சுகிட்டு இருப்பா. இப்போக்கூட மனசுக்குள்ள அடுத்த வேலைய யோசிச்சுகிட்டுதான் இருப்பா.

தூரமா எங்கயோ ட்ராக்டர் உழுற சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டு இருந்துச்சேத் தவிர ஆளுக வரதுக்கான அறிகுறியக் காணும்.

மரத்த அடச்சு நின்ன நெழல வச்சு மணி பண்ணெண்டு ஆச்சுன்னு தனக்குத்தானே முனகியபடி, தாலிக்கொடியில இருந்த ஊக்குல ஒண்ணக் கழட்டி காலுல குத்தியிருந்த முள்ளை எடுக்க ஆரம்பிச்சா. ஒரு காலை நீட்டி, முள்ளு குத்துன காலை, நீட்டுன காலின் தொடையில வச்சு, முள்ளு அறுவுதான்னு மெல்லமா தடவினாள். முள்ளு அறுவவும் ஊறுகாய தொட்டு நக்குற மாதிரி ஆக்காட்டி வெரலால எச்சியத்தொட்டு, அறுவுன எடத்தில தடவிப் பாக்கவும் பாதத்துக்குள்ள மச்சம் கெடக்குற மாதிரி பளிச்சுன்னு தெரிஞ்சிச்சு முள்ளு. ஊக்கால மெல்லமா குத்தி, அப்படியும் இப்படியுமா நெம்பினாள். முள்ளு கொஞ்சம் தளந்து வரமாதிரி இருக்கவும் கட்ட வெரலுக ரெண்டையும் முள்ளுகுத்துன எடத்துக்கு அங்கிட்டும் இங்கிட்டுமா வச்சு வலட்ட ஆரம்பிச்சா. கட்டுக்கேணி செங்கல்லு இடுக்கிலிருந்து, பாம்பு தலையை நீட்டுற மாதிரி, கதக்குன்னு வெளில எட்டிப் பார்த்த முள்ளை, வெடுக்குன்னு புடுங்கி,” எத்தத்தண்டி குத்தியிருக்குன்னு பாத்தியன்ன; மொவரையும் தன்னான”ன்னு முணுமுணுத்துகிட்டே, முள்ள வீசி எறிஞ்சிட்டு மறுபடியும் ரோட்டுல ஆளு வருதான்னு பாத்தா. யாரும் வர்ற மாதிரித் தெரியல. கையி தன்னாப்புல கால்ல இன்னும் முள்ளு தச்சிருக்கான்னு தடவிக்கிட்டிருந்துச்சு.

முள்ளுத்தச்சக் காலில் இன்னும் நாலஞ்சு முள்ளு இருந்தா களஞ்சு எடுக்கலாம்னு தோணும். அப்படி ஒரு சொகமாவும் எதையோ சாதிச்சிகிட்டு இருக்குற மாதிரியும் இருக்கும். முள்ள எடுத்தப் பிறகு முந்திரிக்கொட்டைய அனல்லக் காட்டி, எளஞ்சூடானதும் வலியிருக்குற எடத்துல வச்சு வச்சு எடுத்தா வலி அப்படியே மரத்துபோவும். மரத்துப்போறது ரெண்டாம்பச்சம்தான், சுடும்போது சுருக் சுருக்குன்னு இருக்கிற அந்த சொகத்துக்கே நெதேய்க்கும் முள்ளக் குத்திக்கலாம்னு இருக்கும்.

ஆளுக அன்னாரத்தையேக் காங்கல, என்ன பண்ணலாம்னு சுத்தி முத்திப் பார்த்தா , பக்கத்துல இருந்த இண்டம்புதர்ல படர்ந்து கெடந்தக் குறிஞ்சாக்கீரை கண்ணுல படவும் எந்திரிச்சு, லேசா கெந்தி கெந்தி நடந்துபோயி கீரையப் பறிச்சு மடியிலக் கட்ட ஆரம்பிச்சா. பாதி மடி ரொம்பியிருக்கையில யாரோ வர மாதிரித் தெரியவும், சட்டுன்னு புதரவிட்டு வெளில வந்து ரோட்டைப் பார்த்தா.

மாடிவீட்டு ரெங்கராசு தன்னோட பல்சர, காட்டாத்துக் கரையோரமா இருக்கிற கருவ மரத்தடில நிப்பாட்டிட்டு, அதுல சாஞ்ச மேனிக்கே ஒரு கையில புகையிற சிகரெட்டும், இன்னொரு கையில செல்போன வச்சி நோண்டிகிட்டும் நின்னான். மட மடன்னு சலவ மடிப்புக் கலையாம, வெள்ளையுஞ் சொள்ளையுமா கரவேட்டி கட்டிகிட்டு, கைசெயினு , மோதிரம்னு நிக்கிற அவன பாத்தாலேத் தெரியும். பெரும் பணக்காரன்னு. மல்லிகா வீட்டுக்கு ஒண்ணுவிட்ட பங்காளிதான் ரெங்கராசு.
ரெங்கராச பார்த்த மல்லிகா புதரவிட்டு ரெண்டு எட்டு எடுத்துவச்சிட்டு ஏதோ யோசனையா தலைய சொறிஞ்சிகிட்டே மறுபடியும் புதருக்கேத் திரும்பி கீரைய பறிக்க ஆரம்பிச்சிட்டா.

சிகரெட்ட இழுத்து முடிச்சிட்டு ரெங்கராசு வண்டிய ஸ்டார்ட் பன்ற சத்தம் கேட்டதும் , மல்லிகா அவன் கண்ணுல படுற மாதிரி விறுவிறுன்னு வெறவுக்கட்டுக்கு பக்கத்துல போயி நின்னுகிட்டு அவனப் பாத்து, ”சொமய கொஞ்சம் தூக்கிவிடுறியா?”ங்கிற மாதிரி சிரிச்சா, பதிலுக்கு ரெங்கராசும் வேண்டா வெறுப்பா லேசா சிரிச்சு தலைய ஆட்டிட்டு, அவளோட சிரிப்பின் அர்த்தம் வெளங்காதவன் போலவே , வண்டிய கிளப்பிகிட்டு அவம் பாட்டுக்கு போயிகிட்டிருந்தான்.

மூஞ்சில அடிச்ச மாதிரி போச்சு மல்லிகாவுக்கு, ”பெரசண்டு எலக்சன் வரட்டும், சித்தி நொத்தின்னுட்டு இளிச்சிகிட்டு வரயில இருக்கு” என்று தனது ஆற்றாமைய வாயவிட்டு புலம்பிகிட்டே மறுபடியும் மரத்தடிக்கேத் திரும்பி, கீரைகள ஆஞ்சபடி ஒக்காந்துட்டா.

நேரம் ஆக ஆக, பசி மயக்கத்துல ”உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”ன்னு பெலகீனமா மூச்சுவிட்டவ, இங்கின ஒக்காந்திருக்க நேரத்துக்கு வீட்டுக்கே போயி ஆள அழைச்சிகிட்டு வந்திரலாம்னு யோசிச்சு,ஆஞ்சக்கீரைய அப்படியே முடிஞ்சிகிட்டு எந்திரிக்கையிலே, ”என்ன அத்தாச்சி இங்கின குந்தியிருக்க, சொம தூக்கிவிடனுமா” என்றபடியே தோள்ல மம்பட்டிய வச்சிகிட்டு வந்துகிட்டிருந்தான் அர்ச்சுனன்.

”யப்பா,நல்ல வேள நீ வந்த, வெறவு வெட்டி கட்டி வச்சிட்டு ஒரு நாழியா குந்தியிருக்கேன் ஒரு புள்ள பொடுசக் காணும்”ன்னு சொல்லியபடியே சும்மாடுக்கு கொண்டு வந்திருந்தத் துண்ட சும்மாடு கோலவும்,

”அத்தாச்சி, இந்த மம்பட்டிய நீ எடுத்துக்க, நான் தூக்கிட்டு வறேன்"னு அர்ச்சுனன் சொல்லிகிட்டே வெறவுக்கட்ட குனிஞ்சு தூக்கப் போனான்.

”அட நீயே வேல செஞ்சுக் களச்சுப் போயி வற, ஒனக்கு எதுக்கு செரமம், சும்மா தூக்கிவிடு, நான் தூக்கிட்டு வறேன்"னு சொன்ன மல்லிகாவ எடமறிச்சு,
”ஆமா நீ தூக்குன, கால வேற கெந்துற , சும்மா இரு அத்தாச்சி, நான் தூக்கி கொண்டாந்து போட்டுட்டு போறேன்"னு சொல்லியபடியே ”ஒரு கைபோடு ” என்று மல்லிகாவிடம் வெறவுக்கட்ட தூக்கிவிடச் சொல்லி குமிஞ்சான்.

”இரு இரு இந்தா இந்த சும்மாட தலைக்கு வச்சிக்க” என்று துண்டை நீட்டினா மல்லிகா.

”துண்ட எந்தலையில வச்சிகிட்டு வந்தா அப்புறம் தீட்டுன்னு தொடமாட்டிக, நீயே வச்சிக்க ,புதுத்துண்டாட்டமா வேற இருக்கு, நான் ஓணாங்கொடிய பறிச்சு சுத்திக்கிறேன்”னான் அர்ச்சுனன்.

”ம்க்கும், தீட்டாம்ல, காசு பணம் இல்லீன்னா எல்லாந் தீட்டுதான்”ன்னு சொல்லிகிட்டே,கோலுன சும்மாட அர்ச்சுன தலையில வச்சிவிட்டு, வெறவுக்கட்ட தூக்கிவிட்ட மல்லிகா, ”நட போவோம்”னு சொல்லி அர்ச்சுனனின் மம்பட்டிய தூக்கிக்கிட்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.

4 comments:

manjoorraja said...

கிராமத்து மணம் வீசுது!

நாடோடி இலக்கியன் said...

நன்றிங்க மஞ்சூர் ராஜா.

Muthukumaran Devadass said...

நன்றாக இருக்கிறது.. ஊர் பக்கம் போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு!

நாடோடி இலக்கியன் said...

மிக்க நன்றிங்க முத்துக்குமரன்.