Thursday, January 23, 2014

80’s - 90's சினிமா டெம்ப்ளேட்

ஊரில் பெரிய பண்ணையார், அவருக்கு பட்டணத்தில் படிக்கும் ஒரு மகள் இருப்பார். மகன்கள் இருந்தாலும் அவர்கள் டம்மி பீஸாகவே இருந்து தங்கச்சி சொல்வதே வேதவாக்காக நினைத்து வாழும் ஆத்மாக்களாக இருப்பார்கள். கல்லூரி விடுமுறையில் பண்ணையாரின் மகள் தனது தோழிகளான நான்கு சப்பை ஃபிகர்களோடு சொந்த ஊருக்கு வருவார். அதே ஊரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து என்ன வேலை பார்க்கிறார் என்பதே சொல்லப்பாடாத ஹீரோவிடம் ‘ஏய் மேன்’ என்று சொடுக்கு போட்டு அழைத்து தனது பண்ணையார் மகள் செல்வாக்கைக் காட்டுவார். அடுத்த நொடியிலிருந்து ஹீரோவிற்கு வேலை கிடைத்துவிடும், அதாவது பண்ணையார் மகளின் திமிரை அடக்குவதையே முழுநேர வேலையாகக் கொண்டு களத்தில் குதித்துவிடுவார்.

இந்த இடத்தில் ஹீரோயினை சீண்டி ஹீரோ தனது நண்பர்களோடு ஒரு பாட்டு பாடியே ஆகவேண்டும்.இங்கே ஹீரோவிற்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு 50 லிருந்து 70 வயது வரை குறைந்த பட்சம் இருக்க வேண்டும். ஏனெனில் எப்படி படு மொக்கை ஃபிகர்களை தோழிகளாக வைத்தால்தான் சாத மொக்கை ஃபிகரை ஹீரோயினா ஆடியன்ஸான நாம் ஏத்துக்குவோமோ அதே போல 40-ல் இருக்கும் ஹீரோவை இளமையாகக் காட்ட இந்த டெக்னிக் ,அதெல்லாம் தொழில் ரகசியமாமாம்.

பாட்டு முடிந்ததும் ஹீரோயின் ஹீரோவைப் பார்த்து,”யூ யூ யூ” என்று கோபமாய் மூன்று முறை  சொல்ல வேண்டும்.மேலும் ‘இடியட்’, ’ஸ்கவுன்ட்ரல்’,’ஸ்டுப்பிட்’,’கெட் லாஸ்ட்’ போன்ற அறிய சொற்களை அவ்வப்போது உதிர்ப்பதில் ஹீரோயின் புலமை வாய்ந்தவராகவும் இருப்பார்.இதன் மூலம் ஹீரோயின் பெரிய படிப்பு படித்தவர் என்பதை பார்வையாளனுக்கு சூசகமாக கடத்துகிறார்கள் இயக்குனர்கள். அந்த வகையில் அவை தவிர்க்க முடியாதவை ஆகின்றன. 

தனது ஆங்கிலப் புலமையை நிரூபித்துவிட்ட ஹீரோயின் அதே கோபத்தோடு கிளம்பிப்போய் ஹீரோ தன்னிடம் செய்த ரவுஸை பண்ணையாரிடம் போட்டுக் கொடுத்து விடுவார். அதுவரை சின்ன வீடுகளுக்கு போய் வருவதை மட்டுமே செய்து கொண்டிருக்கும் பண்ணையார், ஹீரோவை பழி வாங்கக் கிளம்பிவிடுவார். எப்படின்னா சொதப்பலான அடியாட்களோடு படு சொதப்பலான பிளான்களை போட்டு ஹீரோவிடம் வரிசையா பல்ப் வாங்கிகிட்டே இருப்பார். கட்ட கடைசியா ஒரு சுமாரான பிளானை, இசையமைப்பாளரின் பி.ஜி.எம் உதவியோடு படு பயங்கர பிளானாய் நம்மை நம்ப வைத்து இறுதி பல்புக்கு ரெடியாகிவிடுவார். அதுவும் பல்பாத்தான் இருக்குமென்று நூறு சதவிகிதம் தெரிந்தாலும் வெட்கமே இல்லாமல் நாமும் சீட்டு நுனியில் குந்தி பார்க்க ஆரம்பிச்சிடுவோம்.

இதற்கிடையில் ஹீரோவோட ஒரு மொன்னை ஃப்ளாஷ் பேக்கை அந்த ஊரில் உள்ள ஒரு பாவப்பட்ட கேரக்டர் மூலமா அறிந்துகொண்டோ அல்லது ஹீரோவின் உதவும் குணத்தைப் பார்த்தோ ஹீரோவை லவ்ஸ்விட ஆரம்பித்து இரண்டு டூயட்கள்,ஒரு சோகப் பாடலை பாடி முடிச்சிருக்கும் ஹீரோயின், இந்த பிளானை நேரடியாகவோ அல்லது இதற்கென்றே பிரத்யேகமாக எண்டராகும் ஒரு வேலையாளின் மூலமாகவோ ஹீரோவிடம் சொல்லிவிடுவார்.

ஹீரோவும், ஹீரோயின் சொன்ன இடத்திற்குப் போய் அந்த படு பயங்கர பிளானான ஹீரோவின் அப்பா,அம்மாவை கட்டி வைத்திருக்கும் குடோனிலிருந்து அவர்களை மீட்டு வெற்றிக் கொடி நாட்டிவிடுவார்.(ஹீரோவோட தங்கையை பண்ணையாரோ அல்லது அவரது ஆட்களோ ரேப் செய்ததால் தங்கை தூக்கில் தொங்கியதையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை).அங்கே நடக்கும் கலவரத்தில் ஹீரோவிற்காக செதுக்கி கூரா வைத்திருக்கும் ஆப்பில் பண்ணையார் குந்தி உயிரிழந்து விடுவார்.அப்பாலிக்கா ஹீரோயின் குடும்ப குத்துவிளக்காகி ஹீரோவின் குடிசை வீட்டுக்கு போயிடுவார்.

இதே டெம்ப்ளேட்டில் ட்விஸ்ட் ஒண்ணும் வைப்பாய்ங்க அதாவது ஹீரோவும் ஹீரோயினும் அத்தை புள்ள மாமா புள்ள உறவு முறையாக்கும்னு.

1980லிருந்து 1995 வரையிலான தமிழ் சினிமாவில் ரஜினியிலிருந்து ராமராஜன் வரை இந்த டெம்ப்ளேட்டிற்கு தப்பிய ஹீரோக்கள் இல்லை .

4 comments:

MF Niroshan said...

கலக்கீட்டீங்க! போலீசுகாரங்க கரக்டா கடைசில வாறது, திறந்திருக்கிற கட்டிடத்திலையும் சுவைத்த உடைச்சிட்டு ஹீரோ வாறது, நஞ்சுன்னு எழுதின போத்தல வீட்டில வச்சிருக்கிறது, கடைசியா இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்த கதைய சொல்ல ஒரு ஆள் வாறது....எ பியூடிபுள் மூன் டைம்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி MF Niroshan.

//திறந்திருக்கிற கட்டிடத்திலையும் சுவைத்த உடைச்சிட்டு ஹீரோ வாறது, நஞ்சுன்னு எழுதின போத்தல வீட்டில வச்சிருக்கிறது,//

சூப்பர். :-)

Karthiban Vaithi said...

நல்லாயிருக்கு

நாடோடி இலக்கியன் said...

நன்றி கார்த்தீபன். :-)