Thursday, January 31, 2008

காக்கா டாக்டர்


வீட்டை நெருங்க நெருங்க உள்ளுக்குள் கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு.

இவ்வளவுக்கும் நேத்தே அம்மாக்கிட்ட பேசினப்போ,"ரெண்டு மாசம் ஆயிடுச்சு அதெல்லாம் மறந்து போயிருக்கும்,நீ பயப்படாம வா" ன்னு சொன்னாங்க, இருந்தாலும் எனக்கு பயம் இன்னும் போகல.


வீட்டுக்குப் பக்கத்துல வந்ததும் மெதுவாக அந்த மரத்தை நோக்கிப் பாத்தேன், அங்கே அது இருக்கிற மாதிரித் தெரியல, அப்பாடான்னு மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. என்னையுமறியாமல் அனிச்சையாய் ஒரு பாடலை முணுமுணுத்துக்கிட்டே வீறுநடை போட்டு வீட்டை நோக்கி நடக்கையில திடீர்ன்னு அந்தச் சத்தம்,


"கா.. கா... கா... கா.. கா" சத்தம் கேட்டு சப்த நாடியும் ஒடுங்கிப்போச்சு.


எந்தச் சத்தத்தைக் கேக்கக் கூடாதுன்னு இவ்வளவு நேரம் பயந்துக்கிட்டு வந்தேனோ அதேச் சத்தம்.


"நீ இன்னுமா மறக்கல"ன்னு சொல்லிட்டு கைகளைத் தலைக்கு மேலே விசிறிக்கிட்டே வீட்டுக்குள்ள ஓடினேன். வீட்டுக்குள்ள போனதுகப்புறமும் கொஞ்ச நேரம் அது கத்திக்கிட்டே இருந்துச்சு.


என்ன விஷயம்னா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி லீவுல ஊருக்கு வந்திருந்தப்போ வீட்டுக்கு முன்னால இருக்கிற இந்த வேப்ப மரத்து நெழலுல உக்காந்து நியூஸ் பேப்பர் படிச்சிகிட்ருந்தேன், அப்போ ஏதோ கிழே விழற சத்தம் கேட்டுத் திரும்பிப் பாத்தாக்க பொறந்து கொஞ்ச நாளேயான ஒரு காக்காக் குஞ்சு மரத்திலேருந்து விழுந்துத் தத்தளிச்சிக்கிட்டிருந்துச்சு.


ஐயோ பாவம்னு இரக்கப்பட்டு அதை மறுபடியும் கூட்லயே வச்சிடலாம்னு கையில எடுத்தா அதன் கால் வெரல் ஒண்ணு முறிஞ்சு தொங்கிட்ருந்துச்சு, வாயிலயும் லேசா ரத்தம் வழிஞ்சுகிட்டிருந்துச்சு. ரொம்பக் கவனமா கையாண்டும் அந்த முறிஞ்ச வெரல் தனியாக் கீழே விழுந்திருச்சு. சரி எதாவது முதலுதவி செய்யலாம்னு வீட்டுக்குள்ளக் கொண்டு வந்தேன்.


"ஐயையோ,அதத் தூக்கி வெளியிலே வீசுடா,வீட்டுக்குள்ள கொண்டு வராத தரித்திரியம்" அலறினாங்க அம்மா.


"போம்மா,இதப் பாத்தா பாவமா இல்ல"


"இந்த மாதிரிக் கிறுக்குத்தனமெல்லாம் பன்னாதேன்னா கேக்குறானா இவன்" அம்மா கத்திக்கிட்டே இருந்தாங்க.


நான் காதிலே வாங்கிக்கவே இல்ல, கொஞ்சமா மஞ்சத்தூளை அடிப்பட்ட இடத்திலத் தடவி,ஒரு கூடையில் கவுத்துப் போட்டு கொஞ்சம் சோத்துப் பருக்கய அதுக்கு முன்னால தூவுனேன்,கழுத்த சாச்சு என்னையேப் பாத்துக்கிட்ருந்துச்சு. காக்கைக்கு மட்டுமா அது பொன்குஞ்சு ,கழுத்த சாச்சுப் பாக்கையில எனக்கும் அப்படித்தாங்க தெரிஞ்சிச்சு.


இப்படியே ஒரு நாலு நாள் எனது பராமரிப்பில வச்சிருந்து ஓரளவுக்குக் காயம் ஆறின உடனே அதை மறுபடியும் கூட்லயே வச்சிடலாம்னு மரத்துல ஏறும்போது எங்கிருந்துதான் வந்துச்சுன்னேத் தெரியல, கொஞ்சமும் நான் எதிர்பாக்காத நேரத்துல ஒரு காக்கா தன் கால் நகத்தால அழுத்தமா என் தலையில கீறிட்டுப் போச்சு. தாய் காகமா இருக்கும் போலன்னு நெனச்சுகிட்டே, அவசர அவசரமாகக் காக்காக் குஞ்ச கூட்ல வச்சிட்டு நான் இறங்றதுக்குள்ளயே மேலும் ரெண்டுவாட்டி அதன் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியதாகிப்போச்சு.


அப்போ ஆரம்பிச்ச தாக்குதல் வீட்லருந்த ஒரு வாரத்துக்கும் தொடர்ந்துச்சு, வீட்டுக்கு வெளியில் என் தலை தெரிஞ்சாப் போதும், எங்கிருந்து வருதுன்னே தெரியாது, மாடார்ன்னு தலையில அடிச்சிட்டுப் போகும்.அந்த ஒருவாரமும் தொப்பியோடதான் திரிஞ்சேன்.விஷயம் கொஞ்சம் கொஞ்சமா எங்க தெருவுக்கே பரவி எல்லாரும் என்னைய "காக்கா டாக்டரு, காக்கா டாக்டரு"ன்னு நக்கல் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க.


இது கூடப் பரவாயில்லை, "என் பணி நக்கல் செய்து கிடப்பதே"ங்கிற மாதிரியான ஒரு ஆள் எங்க ஊர்ல இருக்கான்,ரொம்பச் சாதாரணமா எல்லாரையும் நக்கலடிச்சிகிட்டே இருப்பான், இந்த விஷயம் அவனுக்குத் தெரிஞ்சா சும்மா விடுவானா, அன்னைக்கு ஒரு நாளு கூட்டாளிகளோட நின்னுப் பேசிக்கிட்டிருந்தேன், அந்தச் சமயம் பாத்து இந்த ஆள் அங்கே வந்தான்,


"என்ன மாப்ள,எப்போ ஊர்ல இருந்து வந்தாப்ல"-என்னைப் பாத்துத்தான் கேட்டார்.


"நாலஞ்சு நாளாச்சு"- நானும் ரொம்பப் பொறுப்பா பதில் சொன்னேன்.


"நல்ல உத்தியோகமாமே,பயலுவ பேசிக்கிட்டாய்ங்க"


"ம்ம்"


"பரவால்லடா,நீ ஒருத்தனாவது,ஒழுங்காப் படிச்சு நல்ல வேலைக்கும் போயிட்டே, உங்க அப்பா அம்மாவுக்கு மட்டுமில்ல நம்ம ஊருக்கேப் பெருமையான விஷயமுடா இது"-ரொம்பவேப் புகழ்ந்து பேசினாரு.
அப்படியே உச்சிக் குளுந்துபோயி நின்னேன்.மத்த பசங்கலெல்லாம் செம்ம கடுப்பா பார்த்துட்ருந்தானுங்க.


"சரி மாப்ள,அப்படியே நேரங்கெடச்சா,நம்ம வூட்டுப் பக்கம் வந்திட்டுப் போ, கோழி ஒண்ணு சொனங்குனாப்ல இருக்கு, நீதான் நல்லா வைத்தியம் பாப்பியாமுல்ல" - ரொம்பச் சாதாரணமாச் சொல்லிட்டு போயிட்டுருந்தான்.
கூட நின்ன அத்தன பேரும் சிரிச்சானுங்க பாருங்க, சரி அந்தாளு மட்டுமா அப்படின்னா, ஊர்ல இத்துணூண்டு வாண்டுங்கக்கூட,"அண்ணே பின்னாடி காக்கா வருது ஓடுங்க ஓடுங்க"ன்னுச் சொல்லி வெறுப்பேத்துசுங்க. ஒரு கட்டத்துல ஏன்டா இத பண்ணனோம்னு ஆயிடுச்சு.அப்புறம் விடுமுறை முடியறதுக்குள்ளேயே திரும்பி நான் வேலை பாக்குற ஊருக்கேப் போயிட்டேன்.


மறுபடியும் இப்போதுதான் ஊருக்கு வறேன்.நான் ஓடிவந்ததப் பாத்த அம்மா, ”இன்னுமா அந்த சனிய மறக்கல”ன்னு சொல்லிகிட்டே மரத்துல உட்கார்த்திருந்த அதப் பார்த்து,


"ஏ சனியனே ஒம்புள்ளய காப்பாத்தப் போயி இப்படி எம்புள்ளய படுத்தியெடுக்கிறியே"ன்னு கோபமா சத்தம் போட்டாங்க,என்னவோ அதுக்குப் புரியப்போறமாதிரி.


கொஞ்ச நேரங்கழிச்சு மறுபடியும் மெதுவா வாசல் பக்கம் வந்தேன். என் தலை வெளில தெரிஞ்சதோ இல்லையோ கத்த ஆரம்பிச்சுடுச்சு.அப்படியே நகராம நின்னுப் பார்த்துக்கிட்டே இருந்தேன், அது கத்திக்கிட்டே பறந்து வந்து நான் நின்ன இடத்துக்குக் கொஞ்சந்தள்ளி உக்காந்து கழுத்தச் சாச்சு என்னையேப் பாத்தப்பதான் கவனிச்சேன் அதோட ஒரு காலுல மூணு வெரல்கள்தான் இருந்தத. அடுத்த நொடியில சந்தோஷத்துல கத்தினேன்,


"அம்மா, இங்கே சீக்கிரமாக் கொஞ்சம் சாதம் எடுத்துட்டு வா!" .

21 comments:

கருப்பன்/Karuppan said...

சுருக்கமா இருந்தாலும் சூப்பரா இருக்கு!

சில வருடங்களுக்கு முன்பு பகலில் காக்கைகளால் தாக்கப்பட்ட பெரிய (மிகப்பெரிய)ஆந்தையை காப்பாற்றி நானும் என் தம்பியும் கட்டுப்போட்டு அதன் பொந்தில் இட்டோம். அடுத்தநாள் அது செத்துப்போச்சு :'-(

பாச மலர் said...

காக்கா டாக்டர்..ரசிக்கும்படி இருந்தது..

நாடோடி இலக்கியன் said...

கருப்பன்/Karuppan said...
//சுருக்கமா இருந்தாலும் சூப்பரா இருக்கு!
சில வருடங்களுக்கு முன்பு பகலில் காக்கைகளால் தாக்கப்பட்ட பெரிய (மிகப்பெரிய)ஆந்தையை காப்பாற்றி நானும் என் தம்பியும் கட்டுப்போட்டு அதன் பொந்தில் இட்டோம். அடுத்தநாள் அது செத்துப்போச்சு :'-(
//
வாருங்கள் கருப்பன்,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பரே!

// பாச மலர் said...
காக்கா டாக்டர்..ரசிக்கும்படி இருந்தது..//

ரொம்ப நன்றிங்க பாசமலர்.

அருட்பெருங்கோ said...

ம்ம்ம்… நல்லாருக்குங்க… காக்கா டாக்டர் :)

ஸ்ரீ said...

நல்லா இருந்ததுப்பா நான் பரவாயில்லை படிக்கும் போது மைனா தான் கொண்டு வந்தேன் வீட்டுக்கு :)

நாடோடி இலக்கியன் said...

// அருட்பெருங்கோ said...
ம்ம்ம்… நல்லாருக்குங்க… காக்கா டாக்டர் :)//

ஹிஹி..நன்றிங்க அருள்!

// ஸ்ரீ said...
நல்லா இருந்ததுப்பா நான் பரவாயில்லை படிக்கும் போது மைனா தான் கொண்டு வந்தேன் வீட்டுக்கு :)//

வாங்க ஸ்ரீ ,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!.
அப்புறம் மைனா கதி என்னாச்சு...

Anonymous said...

AMMA sappadu koduthuccha.

Lenin

ஜீவி said...

உள்ளத்து உணர்வுகளை அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
முடிவிலும் நேர்முகச்சிந்தனையில்
முடித்தமைக்குப் பாராட்டுகள்.
வாழ்த்துக்கள்.

நாடோடி இலக்கியன் said...

வாருங்கள் ஜீவி ,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

cheena (சீனா) said...

அருமையான கதை

இயல்பான நடை

எளிய சொற்கள்

நச்சென்ற முடிவு - வெறுப்பு விருப்பாக மாறி - சாதம் இட அழைப்பது

நன்று நன்று நல்வாழ்த்துகள்

நாடோடி இலக்கியன் said...

வாருங்கள் திரு சீனா,
வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.

சென்ஷி said...

கலக்கல் கதைகள்.. பொறுமையா உங்க எல்லா பதிவுகளும் படிக்கணும் :)))

நாடோடி இலக்கியன் said...

சென்ஷி said...
//கலக்கல் கதைகள்.. பொறுமையா உங்க எல்லா பதிவுகளும் படிக்கணும் :)))//

வாங்க சென்ஷி,
ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

அனுஜன்யா said...

நல்லா இருக்கு. எழுத்துப் பிழைகளைச் சற்று கவனியுங்கள். நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.

அனுஜன்யா

நாடோடி இலக்கியன் said...

@அனுஜன்யா,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்கு நண்பரே...
சொல்லவந்த விஷயம்,அழகாய்,எளிமையாய் வெளிப்படுகிறது.
வாழ்த்துக்கள்...

யாசவி said...

nice way

good finish

:-)

சின்ன அம்மிணி said...

கலக்கல் கதை. சூப்பர்

நாடோடி இலக்கியன் said...

நன்றி தமிழ்ப்பறவை.

நன்றி யாசவி.

நன்றி சின்ன அம்மிணி.

கும்க்கி said...

ஏன் டாக்டர்,.
எங்கூருக்கு பக்கத்துல இப்பிடித்தான் ஒருத்தருக்கு சண்டையில லேசா தாடை கிழிஞ்சுறுச்சு.
கிட்ட போகவே எல்லாரும் தயங்கறாங்க...பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு....தொறந்த வாய வேற மூடவே மாட்டேங்கிறாரு......ஏதாச்சும் உதவி செய்ய முடியுமா?
வேணா அந்த முதலை பண்ணை காப்பாளர் கிட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கித்தாரேன்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி கும்க்கி,
அது ரொம்பச் சின்ன பிரச்சனைதான் நான் சில மெடிசின் சொல்றேன், முதலையின் வாயை ஆ காட்டச் சொல்லி உங்க ராசியான கையாலேயே மருந்தைக் கொடுங்க. எல்லாம் சரியாகிடும்.அதற்கப்புறம் அந்த முதலை நல்லா கும்முன்னு கி கொடுத்த மாதிரி ஆகிடும்.