Tuesday, April 1, 2008

அப்படியா,ரொம்ப நன்றி தம்பி.............!

வழக்கம்போல் அந்த டவுன் பஸ்ஸில் இன்றும் கூட்டம் நிரம்பி வழிந்தது, ஆனாலும் அருண் ஜன்னலோர இருக்கையைப் பிடிச்சு உட்கார்ந்துட்டான்.

பஸ் புறநகர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோதே அவனால் உட்கார முடியவில்லை,இன்னும் இருபத்தைந்து கிலோ மீட்டர் போகணும்னு நெனச்சாலே எரிச்சலாக வந்தது.சைக்கிளில் போறவங்க கூட சைடு வாங்கி போற அளவுக்குதான் இருந்தது பஸ்ஸின் வேகம்.இந்த வேகத்திலேயே போயிட்டிருந்தா இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் ஊர் போய்ச் சேர.இதுல அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு நிறுத்தம் வேற.

கோடைகாலம்கிறதால ஒரே புழுக்கம், அனேக பயணிகள் வேர்வையில் தெப்பமாக நனைந்திருந்தனர். மேற்கொண்டு கூட்டம் கூடிக்கொண்டே இருக்குதேத் தவிர, ஒருத்தரும் இறங்குற மாதிரித் தெரியல.

அருண் அமர்ந்திருந்த இருக்கை, சரியாக டயருக்கு மேலாக வரும் இருக்கையாதலால் அவனால் வசதியாக உட்காரமுடியவில்லை,எழுந்து நிற்கலாமென்றால்,"கூட்டத்தில் நசுங்குவதைவிட, இதே மேல்" என்றெண்ணி அப்படியே உட்கார்ந்து பார்வையை வெளியே ஓடவிட்டான்.அதிலும் சிரமம் , அவன் உயரத்திற்கும்,ஜன்னலின் உயரத்திற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. ரூட் பஸ்ஸில் வந்திருந்தாலாவது பாட்டு கேட்டுக்கிட்டே வந்திருக்கலாம், இப்போ அதுக்கும் வழி இல்லையென்று நினைத்தப்படியே அமர்ந்திருந்தான்.

"டிக்கெட்,டிக்கெட்"என்றபடி நடத்துனர் கூட்டத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த போது, இவனோட சிரமம் கொஞ்சம் பரவாயில்லேன்னு தோணுச்சு.

இருக்கையின் உஷ்ணம் தாங்காமல் லேசாக எழுந்து மீண்டும் அமர்ந்து கொண்டான்,அதற்குள் அவன் எழப்போவதாக எண்ணிய இருவர் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு இடம் பிடிக்க எத்தணித்து அசடு வழிந்தனர்.

அருணுக்குப் பக்கத்தில உட்கார்ந்திருந்தவர் ஒரு பிரபல வார இதழை படித்துக்கொண்டிருந்தார், மெதுவாக அதில் கவனத்தைச் செலுத்தினான். தனக்குப் பிடித்த நடிகரின் பேட்டி அதில் வெளியாகியிருந்தது,ரொம்ப சுவராஸ்யமாக படிக்க ஆரம்பித்தான்,ஒரு ரெண்டு பத்தி படிக்கிறதுக்குள்ள அவர் அடுத்தப் பக்கத்திற்குத் திருப்பிவிட்டார். அந்த நடிகரையும்,பிரபல நடிகையையும் இணைத்து வெளிவரும் கிசு கிசு பற்றிய கேள்விக்கு, அவர் சொல்லியிருந்த பதிலை படிக்கும் போதுதானா இப்படித் திருப்ப வேண்டும்.

இப்போ அவனுக்கு, பஸ்ஸின் வேகம்,வேர்வை,இருக்கையின் சிரமம் எதுவுமே சிந்தனையில் இல்லை,யோசனை முழுக்க அந்த நடிகரின் பதில் என்னவாக இருக்கும் என்பதிலேயே இருந்தது.

அடுத்தடுத்தப் பக்கங்களைப் புரட்ட அதிலும் சினிமா சம்பந்தமான செய்திகளே இருக்க, அவர் அருணிடம்,"எந்த புத்தகத்தப் பார்த்தாலும் இந்த சினிமாக் காரணுங்களப் பத்திதான் எழுதுறானுங்க" என்றதற்கு மெலிதாக சிரித்து வைத்தான். மனசுக்குள் "சீக்கிரம் படிச்சு முடிய்யா" என்று சொல்லிக் கொண்டான்.

அடுத்தடுத்து சில அரசியல் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வந்தார், இவனும் ஓரக்கண்ணாலேயே வேகமாக படித்துக்கொண்டிருந்தான்.சில பக்கங்களை அவர் படிக்கும் வேகம் இவனோட பொறுமையை சோதிக்கிற மாதிரி இருந்தது.

பஸ் இப்போ கிட்டத்தட்ட பாதித் தூரம் கடந்திருந்தது,கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக் குறைய ஆரம்பித்திருந்தது.இன்னும் ஒரு சில நிறுத்தம்தான் மீதம்.அதை நினைத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

அருண் எப்போதோ வாசித்து முடித்த பக்கத்தை, இப்போதான் அவர் வாசித்துவிட்டு அடுத்தப் பக்கத்தைப் புரட்டினார், மீண்டும் ஜோதியில் ஐக்கியமாகி வாசிக்க ஆரம்பித்தான். புதிதாய் கட்சி ஆரம்பித்திருக்கிற ஒரு நடிகரின் பேட்டி அடுத்ததாக இருந்தது.

"இனிமேல் நடிகரெல்லாம் கட்சி ஆரம்பிக்கக் கூடாதுன்னு சட்டம் கொண்டுவரணும்" என்று ரொம்பவே ஆவேசமா அருணைப் பார்த்து சொன்னார்.

இவனும் கண்ணை புத்தகத்தில் பதித்துக்கொண்டே,"ஆமாம்" என்பதாய் தலையாட்டினான்.

அருகில் நின்றுக்கொண்டிருந்த ஒருத்தரும், நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறதுக்கு எதிரா பேச ஆரம்பித்தார்,உடனே அருணிண் பக்கத்து இருக்கைக்காரரும், படித்துக்கொண்டிருந்தப் பக்கத்தில் அடையாளத்திற்கு விரலை வைத்துக்கொண்டு, புத்தகத்தை மூடியபடியே சுவாரஸ்யமா அவருடன் பேச ஆரம்பித்துவிட்டார்.

அதற்குள் இந்த விஷயத்துக்கு ஆதரவாகவும்,எதிராகவும் வாக்குவாதம் மிக சூடாக இன்னும் சிலரால் தொடரப்பட்டது.பேச்சின் இடையே புத்தகத்தைத் திறப்பதுபோல் வருவார், மீண்டும் பேச்சிலேயே மூழ்கிவிடுவார். இவனுக்கோ சரியான எரிச்சலாக இருந்தது.

"யோவ்,ஒன்னு படி, இல்ல பேசு" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

அடுத்த நிறுத்தத்தில் அருண் இறங்க வேண்டும், அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது மீண்டும் வாசிக்கத் தொடங்கினார்,இவனும் நிறுத்தம் வருகிறதாவென பார்த்துக்கொண்டே விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தான். அதற்குள் நிறுத்தம் மிக நெருங்கிவிட எழுந்துகொண்டான்.

"என்ன தம்பி இறங்க போறீங்களா?"என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.

"ஆமாம்"என்றான்.

"அப்படியா,ரொம்ப நன்றி தம்பி" என்றபடியே அருண் இடம் பிடிக்க போட்டு வைத்திருந்த, அந்த வார இதழை அவனிடம் கொடுத்தார்.

தன் நேரத்தை நொந்தபடியே புத்தகத்தை வாங்கிக்கொண்டு இறங்கினான் அருண்.

27 comments:

ஸ்ரீ said...

ஏப்ரல் 1 அன்று வெளியிட சரியான கதை. ஊகிக்க முடியாத நடை அழகு. சூப்பரு.

Divya said...

முடிவு யூகிக்க முடியாவண்ணம் ரொம்ப அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்..

நாடோடி இலக்கியன் said...

ஸ்ரீ said...
//ஏப்ரல் 1 அன்று வெளியிட சரியான கதை. ஊகிக்க முடியாத நடை அழகு. சூப்பரு.//

வாங்க ஸ்ரீ ,

மிக்க நன்றிங்க..!
இப்போதாங்க சிறுகதை எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இன்னும் அந்த கலை கைவரமாட்டேங்குது.

நாடோடி இலக்கியன் said...

Divya said...
//முடிவு யூகிக்க முடியாவண்ணம் ரொம்ப அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்..
//
வாங்க திவ்யா,
முடிவு யூகிக்க முடியாத அளவுக்கு இருப்பதாக கூறியதில் மிக்க மகிழ்ச்சிங்க.

meha said...

கதையின் கரு அழகு..சில குறைபாடுகள் தென்படுகின்றன...
எழுத எழுத்த எல்லாம் சரியாகிவிடும் என்று கருதுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்...முயற்சி திருவினையாக்கும்...

நாடோடி இலக்கியன் said...

meha said...
//கதையின் கரு அழகு..சில குறைபாடுகள் தென்படுகின்றன...
எழுத எழுத்த எல்லாம் சரியாகிவிடும் என்று கருதுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்...முயற்சி திருவினையாக்கும்...//

வாங்க மேஹா,

//குறைபாடுகள் தென்படுகின்றன...
எழுத எழுத எல்லாம் சரியாகிவிடும் //

என் எழுத்தை செம்மை படுத்திக்கொள்ளவே பொழுதுபோக்கு அம்சம் பொருந்திய சின்ன,சின்ன கதைகளாகவும்,கவிதைகளாகவும் :) எழுதி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமா சரியாக்கிடுறேங்க...!

கருத்துக்கு மிக்க நன்றி.

aanazagan said...

வெகு யதார்த்தம். எனக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு

நாடோடி இலக்கியன் said...

வாங்க ஆணழகன்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க..!

ஜி said...

:)))) Arumai... First set of sequencesa padikkumpothu same blood nu padichittu irunthen :)))

நாடோடி இலக்கியன் said...

வாங்க ஜி,

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

cheena (சீனா) said...

நல்ல கதை - முடிவு நல்ல திருப்பத்துடன் வருகிறது - பேருந்துப் பயண அனுபவக் கட்டுரையோ என்னும் எண்ணமும் வருகிறது. சிறு சிறு செய்திகளைக் கூட விட்டு விடாமல் எழுதி இருப்பது நல்ல கதாசிரியரின் திறமை.

நல்வாழ்த்துகள்

நாடோடி இலக்கியன் said...

cheena (சீனா) said...
//நல்ல கதை - முடிவு நல்ல திருப்பத்துடன் வருகிறது - பேருந்துப் பயண அனுபவக் கட்டுரையோ என்னும் எண்ணமும் வருகிறது. சிறு சிறு செய்திகளைக் கூட விட்டு விடாமல் எழுதி இருப்பது நல்ல கதாசிரியரின் திறமை//

வாங்க திரு சீனா ,
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் பயணக்கட்டுரை போல் தோன்றுவதை நானும் உணர்ந்தேன்.இப்போதுதான் கதை எழுத பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.வரும் நாட்களில் இந்த மாதிரி மைனஸ்கள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

சென்ஷி said...

முடிவு சத்தியமாய் ஊகிக்க முடியவில்லை. கலக்கல் :))

நாடோடி இலக்கியன் said...

சென்ஷி said...
//முடிவு சத்தியமாய் ஊகிக்க முடியவில்லை. கலக்கல் :))//

வாங்க சென்ஷி,
இப்படியெல்லாம் சொல்லும்போது இன்னும் எழுதனும் போல இருக்குங்க.

RAMASUBRAMANIA SHARMA said...

GOOD STORY...ENJOYED READING IT...KEEP WRITING...

நாடோடி இலக்கியன் said...

@ராம்சுரமணிய ஷர்மா,
வாங்க ராம்சுரமணிய ஷர்மா,
கதையை ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க.

MUTHU said...

""இப்போதாங்க சிறுகதை எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இன்னும் அந்த கலை கைவரமாட்டேங்குது.""

என்னது ட்ரை பண்ணற மாதிரி இல்லை

it's simply superp

நாடோடி இலக்கியன் said...

முத்து
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க முத்து.

மந்திரன் said...

விகடனில் ஒரு பக்க கதைகள் படித்த ஒரு அனுபவத்தை தந்து விட்டீர் ...
நீங்கள் இன்னும் சிறந்த கதை களத்தை எடுத்து கையாள எனது வாழ்த்துக்கள் ..
முதலிலே சிறு உற்சாகத்தை இந்த கதை தரவில்லை என்பது என் கருத்து ....
சற்று நீண்ட தாக உள்ளது சூழ்நிலையின் விவரிப்பு ..சற்று குறைத்து , உரையாடலை அதிக படுத்தி இருக்கலாம் ..

நாடோடி இலக்கியன் said...

@மந்திரன்,
வாங்க மந்திரன்,
பயனுள்ள ஆலோசனைக்கு மிக்க நன்றிங்க.வரும் நாட்களில் இன்னும் நல்ல கதைக்களங்களை எடுத்து சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் நண்பரே.

முதல் வருகைக்கு,கருத்துக்கும் நன்றி.

மஞ்சூர் ராசா said...

முடிவை யூகித்தேன். ஏனெனில் ஏற்கனவே இதே போல ஒரு கதை படித்திருந்த ஞாபகம்.

உங்கள் கதைசொல்லும் திறமை நன்றாக இருக்கிறது. ஒரு பக்க கதைகளை விட்டு இன்னும் ஆழமாக எழுதலாம்.

புதுமைப்பித்தன், திஜா, அசோகமித்திரன், வண்ணநிலவன், சமுத்திரம், கல்கி, நாஞ்சில்நாடன்,பிரபஞ்சன், வண்ணதாசன், தற்போதைய ஜெயமோகன், எஸ்.ரா,சுஜாதா படிக்கவும். ஒரு ஐடியா கிடைக்கும்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி மஞ்சூர் ராசா,(இது வலையுலகிற்கு வந்த புதிதில் சிறுகதையெழுத செய்த முயற்சி நண்பரே,ஒரு வேளை இந்த கதையைக் கூட நீங்கள் முன்பே வாசித்திருக்கக் கூடும்,இன்று தேதி மாற்றி முகப்பில் வைத்திருந்தேன்.

நீங்கள் கொடுத்திருக்கும் எழுத்தாளர்களில் தி.ஜா,எஸ்.ரா படைப்புகளில் சிலவற்றை வாசித்திருக்கிறேன்,மற்றவர்களையும் வாசிக்கிறேன் நண்பரே.

இரா.சிவக்குமரன் said...

அது மட்டும் நானா இருந்திருக்கணும்?!

பாசகி said...

ஜி, ரொம்ப நல்லா இருந்துச்சு...

நாடோடி இலக்கியன் said...

நன்றி சிவா,(ஹா ஹா,அந்த ஸ்டோரியா,ஞாபகம் வந்திடுச்சு சிவா).

நன்றி பாசகி.

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி விக்னேஷ்வரி.