Friday, December 26, 2008

மண்வாசனை பாட்டிகள்........!

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் காந்திமதி அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை போல எப்போதும் கேலியும்,கிண்டலும்,சிலேடை பேச்சுமாய் அதகளம் செய்கிற பாட்டிகள் கிராமங்களில் ஊருக்கு ஒன்றிரண்டு பேராவது இருப்பார்கள்.எங்க ஊர்லகூட இப்படி நாலஞ்சு பா(ர்)ட்டிகளுண்டு, அதில் ஒரு பாட்டியின் தனிச்சிறப்புகளத்தான் இங்கே பகிர்ந்துக்க போறேன்.

*வண்டிமாடு கட்டுத்தறியைவிட்டு அவிழ்த்துக் கொண்டு நின்றதைப் பார்த்த பாட்டி தனது கணவரிடம் மாட்டை பிடித்துக் கட்டுமாறு சொன்னதற்கு, படுத்திருந்த தாத்தாவோ,"ஏண்டி நீ அங்கேதானே நிக்கிற நீயே புடிச்சு கட்டிடு" என்றார். இதற்கு பாட்டி ரொம்ப கேஷுவலாக தாத்தாவிடம்,"நீ கட்டியிருக்கற வேட்டிய அவுத்து கொடு அதை நான் கட்டிக்கிறேன்" என்றதும், தாத்தா தலைதெறிக்க எழுந்து மாட்டை நோக்கி ஓடினார்.

*அருகிலுள்ள கிராமத்திலிருந்து தாத்தாவின் அக்கா காலையிலேயே வந்துகொண்டிருந்தார், இவர் மாததிற்கு குறைந்தது ஒரு முப்பது தடவையாவது பிறந்த வீட்டிற்கு வந்துவிடுவார் .இவரைக் கண்டாலே நம்ம பாட்டிக்கு ஆகாது, எனினும் அதை நேரடியாக காட்டிக்கொள்ளமாட்டார். அப்போது வீட்டின் வாசலில் கோவிலுக்காக நேர்ந்துவிடப்பட்ட கன்றுகுட்டி படுத்திருந்தது. தாய்ப் பசு பாட்டி வீட்டில் இருப்பதால் அந்த கன்றுக் குட்டி அங்கே படுத்துக் கொள்வது வழக்கம். நம்ம பாட்டி கன்றுக் குட்டியையும், விருந்தாளி பாட்டியையும் மாற்றி மாற்றி பார்த்தார், அருகில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து படுத்திருந்த கன்று குட்டியை நோக்கி "சனியனே உன்னதான் முறையா சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்த்தாச்சுல்ல இன்னும் எதுக்கு இங்கே வந்து டேரா போடுற,சாவுற வரைக்குமா ஒனக்கு பொறந்த இடம் கேக்குது" என்று கன்றுக் குட்டியை அடித்து விரட்டிவிட்டு அப்படியே கூலாக முகத்தை வைத்துக்கொண்டு,"வாங்க வாங்க"என்று அக்கா பாட்டியை வறவேற்றார். விருந்தாளி பாட்டியும் எல்லாம் புரிந்தாலும் "எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்க மாட்டோமா?"என்கிற ரேஞ்சில் எதையுமே கண்டுகொள்ளவில்லை.

*பாட்டிக்கும், அவரின் கணவரின் தம்பி மனைவிக்கும் இடையே ஏதோ பிரச்சனையில் நம்ம பாட்டியின் பிறந்த வீட்டைப் பற்றி சின்ன பாட்டி ஏதோ இழிவாக பேசிவிட்டார். பதிலுக்கு நம்ம பாட்டி எந்த வித ஆர்ப்பாட்டமின்றி ஒரே வார்த்தையில் அவரை கிளீன் போல்ட் ஆக்கினார். "உன்னை பொண்ணு பாக்க வந்தப்போ உங்க அப்பன் வீட்டு வைக்க(வைக்கோல்) போர அண்ணார்ந்து பார்த்தப்போ விழுந்த சுளுக்குதான் இன்னும் எடுபடல". இதை கேட்ட சின்ன பாட்டி கப்சிப்.காரணம் சின்ன பாட்டியின் டாடி வீட்டில்தான் நிலமே கிடையாதே, அப்படியிருக்க ஏது வைக்கோல் போர்(முன்னெல்லாம் கிராமத்தில் ஒருத்தர் எவ்வளவு பணக்காரர் என்பதை அறிய அவர் வீட்டு வைக்கோல் போரை பார்த்தால் தெரியுமென்பார்கள்).


*இன்னொரு சுவையான சம்பவம்,பாட்டியின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் ஏதோ அவசர வேலையாய் வந்துவிட்டு உடனே வீடு திரும்ப எத்தணித்தபோது, பாட்டியின் மகன் உறவினரிடம்"இருங்கண்ணே காலையிலே போகலாம் ரொம்ப நேரமாச்சு" என்றதற்கு உறவினரோ,"இல்ல தம்பி நான் பஸ்ல போயிடுறேன்" என்றதைக் கேட்ட பாட்டி,"ஏண்டா தம்பி, நீ பசுவுல போனது இருக்கட்டும் காளையிலே போகலாம்டா"என்று சிலேடையில் பேசி அசரடித்தார்.

*குடிப் பழக்கத்தால் 60 வயதிலேயே தாத்தா கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு நாள் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்துக் கொண்டிருந்தார், அதை பார்த்த பாட்டி "என்னத்த பாக்குற குடிக்காதைய்யா குடிக்காதைய்யா உடம்புல ஒன்னும் இல்லன்னு சொன்னப்பெல்லாம் பார்க்கல இப்போ என்னாத்துக்கு பாடி(body) பாக்குற, இனியா தேற போவுது" என்று அன்பை பொழிந்தார்.

*கிட்டத்தட்ட அதே சமயத்தில் வங்கியில் தாத்தாபேரில் இருக்கும் ஏதோ கடனுக்காக அவரிடம் கையெழுத்து வாங்க வந்திருந்த அதிகாரிகள் தாத்தாவிடம் "பெரியவரே மெல்லமா பேங்க் வரைக்கும் வரமுடியுமா"என கேட்க நம்ம பாட்டி "மெல்லமா வரமுடியுமாவா? அவரு வேகமா போறத்துக்குள்ள இருக்காரு, இப்போ அவரு எங்கிட்டு வர்ரது" என்றதும் அதிகாரிகள் கொஞ்சம் பாட்டியை பார்த்து மிரண்டுதான் போனார்கள்.

*ஒருமுறை ஏதோ சொத்து பிரச்சினையில் பாட்டியின் மகன் மேல் ஒருத்தர் வழக்கு தொடர்ந்ததையடுத்து பாட்டியின் மகனைத் தேடி வீட்டிற்கு போலிஸ் வந்து "உன் மகன் எங்கே"யென விசாரித்து கொண்டிருந்தனர், நம்ம பாட்டி போலிஸாரிடமும் வழக்கம் போல் அகட விகடமாய்ப் பேச, கடுப்பான போலிஸ்காரர் "ஏய் கிழவி ஓவரா பேசுன ஜீப்பிலே ஏத்திடுவேன்" என்று சொல்ல, அதற்கும் அசராத பாட்டி,"கொஞ்சம் இருய்யா நல்ல சேலையா கட்டிகிட்டு வரேன், எனக்கும் ரொம்ப நாளா இந்த வண்டியில எல்லாம் ஏறி பார்க்கணும்னு ஆச" என்றதைத் தொடர்ந்து தெரிச்சு ஓடினார்கள் போலிஸ்.

கொசுறு:இங்கே சொன்னது பாட்டியின் சாகசங்களில் மிகவும் சொற்பமே.

7 comments:

ஸ்ரீமதி said...

:))))))))))))

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி

அப்பாடா ஒரு பின்னூட்டம் வந்திடுச்சு.
:))

சூரியன் said...

இது உண்மையில் கலக்கலானது. கிராமத்தில் வாழ்ந்த மக்கள் இந்த பாட்டியை கண்டிப்பா பார்த்திருப்பார்கள்..

தேவன் மாயம் said...

இல்ல தம்பி நான் பஸ்ஸுல போயிடுறேன்" என்றதைக் கேட்ட பாட்டி,"ஏண்டா தம்பி,நீ பசுவுல போனது இருக்கட்டும் காளையிலே போகலாம்டா"என்று சிலேடையில் பேசி அசரடித்தார்.///

பாட்டிகட்ட வாக்குடுக்க முடியாதுப்பு!!

கதிர் - ஈரோடு said...

தாத்தாவுக்கு 60 வயசுதான? நான் ஏதோ நம்ம தமிழ்நாட்டு தாத்தா கணக்கா 85+ இருக்கும்னு நினைச்சேன்...

இன்னும் வெத்தலைய கொட்டிகிட்டு இந்த பாட்டிக தங்களோட கொழுந்தியா, நங்கையா கிட்ட பண்ற அழும்பு சில சமயம் தாங்க முடியாது...

இன்னும் கொஞ்சம் பாட்டியின் குறும்புகளை செதுக்கியிருக்கலாம் இலக்கியன்

//அவரு வேகமா போறத்துக்குள்ள இருக்காரு//

இது டாப்பு

இரா.சிவக்குமரன் said...

அந்த காலத்துலேயே நீரு, நல்லாதான்யா எழுதி இருக்கீரு?!

நாடோடி இலக்கியன் said...

நன்றி தேவன் மாயம்.

நன்றி கதிர்.

நன்றி சிவா.