Wednesday, May 6, 2009

கேபிள் டீவியின் வருகையும் இயல்பை தொலைத்த கிராமங்களும்.

சின்ன பசங்க நாங்க என்னும் இந்த பதிவில் என்னுடைய சிறுபிராயத்தின் விளையாட்டுகளையும்,அந்த விளையாட்டுகளை கிரிக்கெட் எப்படி ஓரங்கட்டியது என்பதை எங்க ரு 20 - 20 என்னும் இந்த பதிவிலும் எழுதியதைத் தொடர்ந்து இன்று கேபிள் டீவியின் வருகையால் தன் சுயத்தை இழந்து கொண்டிருக்கிற எனது கிராமத்தின் இன்றைய நிலையை இப்பதிவில் காண்போம்.

2001ம் வருடம்தான் கேபிள் டீவி இணைப்பு எங்க ஊருக்கு வந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும், ஞாயிற்றுக்கிழமைக்கும் காத்திருந்து ஒளியும் ஒலியும் மற்றும் கருப்பு வெள்ளை திரைப்படமுமே பார்த்தவர்களுக்கு,இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன படங்களும்,புதுப் புது பாட்டுகளும் மொத்தமாய் சிறுசுங்க முதல் பெருசுங்கவரை டீ.வியின் முன் கட்டிப்போட்டது.

குழந்தைகள் அடுத்தவங்க வீட்டில் டீ.வி பார்க்கபோறத விரும்பாத அம்மாக்கள்(சீரியல் பார்க்க குழந்தைகளை சாக்காக வைத்து) உடனேயே தங்கள் வீட்டிற்கும் டீ.வி வாங்க ஆரம்பித்து டீ.வியின் எண்ணிக்கை பெருக பெருக சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.

வழக்கம்போல் சாயங்காலம் கிரிக்கெட் விளையாட கிளம்பினால் "பங்காளி இன்னைக்கு தலைவர் படம் போடுறான், நாளைக்கு விளையாடுவோண்டா" என ஆரம்பித்து வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தனின் தலைவர் படங்களுக்கும் ஒவ்வொருத்தனும் இப்படியே சொல்ல தினமும் கிரிக்கெட் விளையாடியது போக வாரத்திற்கு ஒரு நாள் , இரண்டு நாட்கள் என விளையாடுவது குறைந்தது. நாங்களாவது இன்றைக்கும் அப்பப்போ கிரிக்கெட் விளையாடுகிறோம் ஆனால் எங்களின் ஜூனியர்கள் முற்றிலும் WWE வில்(ரெஸ்லிங்) ஐக்கியமாகியும்,அவர்களின் ஜூனியர்ஸ் ஜெடிக்ஸ் போன்ற சேனல்களில் வரும் சாகச வீரர்களிடமும் ஒன்றிப்போய்கிடக்கிறார்கள்.

ஆற்காட்டார் புண்ணியத்தில் அப்பப்போ வீட்டைவிட்டு வெளியே வரும்போதும்கூட இவர்கள் விளையாடுவது டீவியில் பார்த்த அதே காட்சிகளின் சாகச நாயகர்களாக தங்களை பாவித்துக் கொண்டு "ஆ ஊ" என கத்தியும்,குத்தியும் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கிராமபுறத்து இளைஞர்கள் எப்போதும் உடல் வலிமைமிக்கவர்களாக இயல்பிலேயே இருப்பார்கள்.காரணம் உடல்வலிமையை மறைமுகமாக தந்துகொண்டிருந்த விளையாட்டுகள் கிராமங்களில் நிறைய இருந்ததுதான். இனிவரும் தலைமுறை அப்படியிருக்க வாய்ப்பில்லை,இந்த டீ.வி அவர்களை முழுச் சோம்பேறிகளாக்கி வைத்திருக்கிறது. உட்கார்ந்துகூட பார்ப்பதில்லை, படுத்து கொண்டேதான் டீவி பார்க்கிறார்கள்,விளைவு கொஞ்ச நேரம் நின்னாலே இடுப்புக்கு கையை முட்டுகொடுக்க வேண்டியிருக்கிறது.


நாங்க சின்ன பசங்களா இருந்தபோது இப்படி வீட்டிற்குள்ளே உட்கார்ந்திருந்தால் பெற்றோர்கள் "ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்க வெளிலபோயி கைய கால உதறி நாலுபேரோட சேர்ந்து விளையாடு"என்று கூறுவார்கள்.ஆனால் இப்போ வெயிலில் கிடந்து அலையாதே கருத்து போயிடுவ(விளம்பர குழந்தைகளின் சிவப்பு படுத்தும்பாடு), ஊர்பயலுவலோட சேராம இங்கேயே டீவிய பாரு" என்று பசங்களின் தாய்குலங்களே சொல்கிறார்கள்.இப்படிதான் நகர்கிறது இன்றைய எங்க ஊர்ப் பசங்களின் கோடைவிடுமுறை.

பசங்களின் நிலை இப்படியென்றால் ஒட்டுமொத்த கிராமத்தின் நிலை இன்னும் பரிதாபம்.முன்னெல்லாம் இரவு பத்து மணிவரை ஆள்நடமாட்டம் வீதிகளிள் தெரியும், இப்போது ஆறு மணியாகிவிட்டால் "மேகலா" விற்காகவும், " கஸ்தூரி"க்காகவும் கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறார்கள் தங்கமணிகள். தங்கமணிகள் மட்டுமல்ல ரங்கமணிகளும் இப்போது சீரியல் வலையில் சிக்கியிருக்கிறார்கள்.கிராமத்தில் எதாவது அசம்பாவிதம் நடந்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் ஊரே திரண்டுவிடும்.இப்போது வீட்டிற்கு பக்கத்திலேயே எதாவது அசம்பாவிதம் நடந்தாலும்கூட எதுவுமே தெரியாமல் "என் கடன் டீ.வி பார்ப்பதே" என்றிருக்கிறார்கள்.

இப்போது வீட்டிற்கு வீடு கலைஞர் டீ.வி.வேறு(இது சேனல் இல்லை தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சியைத்தான் இப்படி சொல்றாங்க).கூலி வேலை செய்யும் இடத்தில் எப்போதும் அடுத்தவங்க வீட்டு கதை பேசும் பெண்கள் இப்போது அபியின் கல்யாண பேச்சில் இருக்கிறார்கள்(இது ஒன்னுதான் நல்ல விஷயம்னு நினைக்கிறேன்). எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென்றால்கூட அன்றைய சீரியலின் சூழல்தான் இவர்களின் பயணத்தை போகலாமா? வேண்டாமா என்று நிர்ணயிக்கின்ற அளவு சீரியல் பைத்தியம் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது.இது இப்படியே தொடர்ந்தால் "யாருக்கு எது நடந்தா நமக்கென்ன" என்றிருக்கும் நகரபாணி வாழ்க்கை கிராமங்களிலும் வந்துவிடக்கூடிய சூழல் ரொம்ப தூரத்தில் இல்லை.

எப்படி கிரிக்கெட் எங்க ஊரின் பாரம்பரிய விளையாட்டுகளை மறக்கடிக்கச் செய்ததோ,அதே மாதிரியே இந்த டீ.வியின் மோகம் கிராமங்களின் தனித்துவத்தையும், இயல்பு நிலையையும் தொலையச் செய்து கொண்டிருக்கிறது. பாரதி இப்போதிருந்தால் "என்று தணியும் இந்த டீ.வியின் மோகம்" என்று பாடியிருப்பார்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு எனது கிராமத்தில் சில நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்த மாதிரியான மாற்றங்களைக் கண்டு வேதனையாக இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருப்பது ஒரே ஆறுதலான விஷயம்.

11 comments:

தினேஷ் said...
This comment has been removed by the author.
தினேஷ் said...

தோழா, உங்களை என்ன வென்று சொல்வது , கிரிக்கெட் பற்றிய பதிவு பழசை கிளருச்சுனா, இந்த பதிவு என் வயிற்றெரிச்சலா நியாபகபடுத்துது..
நாங்கள் சிறுவர்களாக் இருக்கும் போது
ஊர் குள்த்தில் உள்ள கோவிலில் மாலை வேளையில் சாமி கும்பிட வரும் ஃபிகருகளை பார்த்து ஜொள்ளு விடும் என் அண்ணன் மச்சான்களை போல் நமக்கும் காலம் வரும் என்று எதிர்பார்த்து கேபிள் டிவியால் கோவில் வேறிச்சோடி யாரும் வராமல் புண் பட்ட நெஞ்சில் நானும் என் நண்பர்களும் புகை விட்டு ஆத்தியது நினைவிற்க்கு வருது...

ஆவ்.....

நல்லா எழுதிரிங்க , இப்பதான் நான் உங்க பதிவுகளை படிக்கின்றேன்..

நாடோடி இன்னும் நல்லா ஓடி எங்களுக்கு இன்னும் பல விருந்த(பயப்படாதிங்க பதிவத்தான்பா சொன்னேன்) கொடுங்க.....

அருண்மொழிவர்மன் said...

பொதுவாக எந்த ஒரு சூழலிலும் நவீனத்துவத்தின் வருகை இப்படித்தான் சில அழுத்தங்களாஇ தரும். மெல்ல மெல்ல அதுவும் ஒரு ஒரு மரபாகிப்போய்விடும்.. ஆனால் நாகரிகன் என்ற பெயரில் மக்களின் வாழ்க்கைமுறையில் பல சிதைவுகள் உண்டாகிவிட்டதோ என்ற எண்ணம் எனக்கும் உண்டு

ரங்குடு said...

இப்படியே போனால் நம்ம மக்கள் எதுக்குமே உதவாத ஜந்துக்களாகி விடுவார்களோ என்ற பயமும் வருகிறது.

ஓயாமல் ஒழியாமல் உட்கார்ந்து டி.வி பார்ப்பதினால் கண்கள் பதிக்கப் படுகின்றன. வேலை வெட்டியில்லாமல் உடம்பில் சர்க்கரை வியாதி, கொழுப்பு வியாதி, மற்றும் இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது.

என்ன செய்வது. சில நாடுகளில் டி.வி சேனல்கள் அறிவை வளர்க்கப் பயன் படுகின்றன. நமது நாட்டில் அவை மக்களை மழுங்கடிக்கப் பயன் படுகின்றன.

Dr.Rudhran said...

there is a good book on this called-
Id (identity)

நாடோடி இலக்கியன் said...

@சூரியன்,
//நல்லா எழுதிரிங்க //
நெசமாத்தான் சொல்றீங்களா?. ஆனாலும் நான் சொல்ல வந்த விஷயத்தை சரியா சொல்லவில்லையோங்கிற மாதிரியேதான் ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது,இந்த பதிவிலும்கூட அப்படியே.

தொடரும் வருகைக்கு நன்றி தோழா.



@அருண்மொழிவர்மன்,
//மெல்ல மெல்ல அதுவும் ஒரு ஒரு மரபாகிப்போய்விடும்.. //
உண்மை நண்பரே.நவீனத்தை ஏற்றுக்கொள்வெண்டும் அதேவேளையில்,சுயத்தை தொலைக்காமலும் இருக்கவேண்டுமென்கிற ஆதங்கம்தான் எனக்கு.

@ரங்குடு,
//சில நாடுகளில் டி.வி சேனல்கள் அறிவை வளர்க்கப் பயன் படுகின்றன. நமது நாட்டில் அவை மக்களை மழுங்கடிக்கப் பயன் படுகின்றன//

உண்மைங்க.

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க ரங்குடு.


@Dr.ருத்ரன்,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Sankar said...

Fantastic post.

லக்கிலுக் said...

சுவையாக ஆனால் ரொம்ப சுருக்கமாக இருக்கிறது பதிவு. இன்னும் கொஞ்சம் விலாவரியாக எழுதியிருக்கலாம் இலக்கியன்.

பட்டாம்பூச்சி said...

ரொம்ப சுவையாக இருக்கிறது பதிவு :)

நாடோடி இலக்கியன் said...

@சங்கர்,
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சங்கர்.

@லக்கிலுக்,
இன்னமும் ஆழமாச் சொல்லியிருக்கலாம்,பதிவிட்ட பிறகே எனக்கும் ரொம்ப சின்ன பதிவா இருப்பதாக தோணியது.வரும் பதிவுகளில் இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் நண்பரே.

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி லக்கிலுக்.

@பட்டாம்பூச்சி,
லக்கியாரின் கமெண்டிலிருந்து மூன்று வார்த்தைகளை மட்டும் காப்பி பேஸ்ட் கமெண்ட் போட்ட பட்டாம்பூச்சியின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.:))

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!