Saturday, November 28, 2009

எங்க‌ ஊர் 20 - 20

90களின் முதல் பகுதி,அப்போதுதான் எங்கள் ஊரிலிருந்து ஓரிருவர் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்.அதற்கு முன்பு பத்தாவது தாண்டுவதே தம்பிரான் செயல்.ஓரிரு வருடங்களில் கல்லூரி செல்வோரின் எண்ணிக்கை கூடியது.அது B.E ஆக இருந்தாலும் B.A ஆக இருந்தாலும் எங்க கணக்குப்படி காலேஜ் படிப்பு பெரிய படிப்பு. வெளியூருக்கு ரொம்பதூரம் சென்று (25 கிலோமீட்டர் தூரமே உள்ள தஞ்சாவூரில்தான்) படிக்கச் சென்ற காலேஜ்கார அண்ணன்மாருங்கதான் எங்க ஊருக்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினவங்க.

ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாத சிறுவர் கூட்டம் தொடர்ந்து கிட்டி புல்லு,பம்பரம் என்றே விளையாடிக் கொண்டிருந்தோம்.ஆள் பற்றாக் குறையின் காரணமாக அண்ணன்மாருங்க எங்களையும் தங்கள் டீமில் ஐக்கியமாக்கிக் கொண்டார்கள்.எங்களுக்கு ஒன்லி ஃபீல்டிங் மட்டும்தான். ரொம்ப காலமாக பேட்டிங் எங்களுக்கு ஒரு பெரிய கனவாகவே இருந்தது, பட்டுன்னு சொன்னா எங்களை பந்து பொறுக்கி போட மட்டும் வச்சிருந்தாங்க.

கிரவுண்ட் பக்கமா எதாவது ஃபிகருங்க கிராஸ் பண்ணா(இப்போதான் ஃபிகரு அப்போ அக்காங்க) என்னைய மாதிரி ஒரு சின்ன பையன்கிட்ட பௌலிங் போடச் சொல்லி சிக்ஸ் அடித்து ஹிரோயிசம் காட்டுவார்கள். இதிலென்ன வேடிக்கையின்னா பலதடவை இப்படி சீன் போடும்போது கிளீன் போல்டாகிவிட்டு "பால்போட சொன்னா என்னடா மாங்கா அடிக்கிறியா, இப்படியெல்லாம் போடக்கூடாது இது 'நோ'பால்" என்று அவர்கள் சிக்ஸ் அடிக்கும்வரை எங்கள் பௌலிங்கை தொடரச் செய்வார்கள். சில சமயம் நாங்க பௌலிங் போடும்போது ஒய்டு ஆகிவிட்டால் இரண்டு ரன்கள் சேர்த்துக் கொள்வார்கள்,ஏன்னு கேட்டால் இது பெரிய ஒய்டுடா அதனாலதான்னு சொல்லுவாங்க. நாங்களும் அது நெஜம்னு நம்பி இனி ஒய்டு போட்டாலும் சின்ன ஒய்டா போடுங்கடான்னு சொல்லிகிட்டு விளையாடியிருக்கோம்.

இப்படியாக பந்து பொறுக்கி போடப்போயி கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கெட் எங்களை சில மாதங்களிலேயே முழுவதும் ஆக்ரமித்தது.அப்புறம் சின்ன பசங்க எல்லோரும் சேர்ந்து தனி டீம் ஃபார்ம் பண்ணி தென்னை மட்டையில் பேட்டும்,தேங்காய் நாரை சுருட்டி பேப்பரில் வைத்து டைட்டாக கட்டி பந்தும் செய்து (இதில் முத்துகுமாருதான் எக்ஸ்பர்ட், மத்தவய்ங்க செய்யும் பந்து ஒரு ஓவர்கூட தாங்காது,ஆனால் அவன் ஒரிஜினல் பந்து ஷேப்பில் அசத்தலாக செய்துவிடுவான்)வயல்வெளிகளில் தனியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய டீமில் பேட்டிங் புடிக்கிற அளவிற்கு முன்னேறினோம்(எப்போதாவது கடைசி ஓவர் முடிய ஒன்னு ரெண்டு பந்து இருக்கும்போது கொடுப்பாங்க).

எங்க ஊரைத் தொடர்ந்து ஆதனக்கோட்டை, கருக்காடிப்பட்டி, வெட்டிக்காடு, சில்லத்தூர் என அருகில் உள்ள எல்லா கிராமத்திலும் கிரிக்கெட் டீம் உருவாகி ஒவ்வொரு சனி ஞாயிறுகளிலும் கருக்காடிப்பட்டி பள்ளி மைதானத்தில் ஃபிரண்ட்லி மேட்ச் விளையாட ஆரம்பித்து அப்படியே ஒவ்வொரு ஊரிலும் டோர்ணமெண்ட் வைக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து கில்லி,பம்பரம்,கோலி குண்டு போன்ற விளையாட்டுகளுக்கு ஆப்பு வைத்தது கிரிக்கெட்.

டோர்ணமெண்டுகள் பெரும்பாலும் கோடைவிடுமுறையில்தான் நடக்கும், இப்படி பக்கத்து ஊரில் நடக்கும் டோர்ணமெண்ட்டுக்கு செல்ல எல்லோர் வீட்டிலும் பெர்மிஷன் கிடைக்காது பிளேயர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் தேங்காய் பறிப்பு, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்,வாழைக்கு கீங்கட்டை வெட்டுதல்,ஆடு மாடு மேய்த்தல் என ஏதாவது ஒரு வேலை இருக்கும்.இந்த மாதிரி வேலை இருக்கும் நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு டேக்கா கொடுத்துவிட்டு விளையாட கிளம்புவது ஒரு சிறுகதைக்குண்டான அத்தனை சுவராஸ்யம் அடங்கியது. உள்ளூர் போட்டியின்போது லுங்கி கட்டி விளையாடிடுவோம், ஆனால் டோர்ணமெண்ட் செல்லும்போது கண்டிப்பாக பேண்ட்,டீசேர்ட் அணிந்துதான் விளையாட வேண்டும்(நோட்டீஸ்லயே பெரிதாக அச்சடித்துவிடுவார்கள் கண்டிப்பாக லுங்கி அணிந்து விளையாடக் கூடாதென்று).ஒவ்வொருத்தரும் வீட்டிலிருந்து பேண்ட்டை லுங்கிக்குள் ஒளித்து வைத்து மெல்ல வீட்டிலிருந்து வெளியேறி,ஊரிலிருந்து ஒவ்வொருவராக தனித் தனியாக கிளம்பி ஊரின் வெளிப்புறத்தில்தான் ஒன்றுசேர்ந்து செல்வோம்.பிறகு அப்பா பாக்கெட்டிலும், அம்மாவின் அரிசிப்பானை சேகரிப்பிலும் சுட்ட காசுகளை ஒன்று சேர்த்து எண்ட்ரென்ஸ் ஃபீஸ் ரெடியாகிவிடும்.சில வீட்டில் பாட்டியின் சுருக்கு பைகளிலும் கைவைக்கப்படும்.

சின்ன பசங்களாகிய எங்களை, டீமில் இருந்தாலும் இல்லாவிடிலும் பௌண்டரி, சிக்ஸர்,விக்கெட் எடுக்கும் நேரங்களில் கைதட்டுவதற்காக கூடவே அழைத்து செல்வார்கள். சில அண்ணன்மார்கள் வீட்டு வேலைகளில் மாட்டிக்கொண்டு வரமுடியாத சந்தர்ப்பங்களில் சின்ன பசங்களுக்கு அடிக்கும் பெரிய டீமில் விளையாடும் யோகம். பெரும்பாலும் எங்க டீம்தான் முதல் பரிசை தட்டி வருவார்கள்.முதல் பரிசாக சுழற்கோப்பையுடன் வாங்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களை வைத்தே டீமிற்கு தேவையான பேட், கிளவுஸ், ஸ்டம்ப் போன்ற பொருட்களை வாங்கிவிடுவோம்.சரக்கு பார்ட்டியெல்லாம் இப்போதான், அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் பெரும்பாலான பசங்க குடிக்க மாட்டாங்க தவிரவும் ஒயின்ஸ் வசதி அப்போது எங்க ஏரியாவில் இல்லை.

நமக்கு அப்புறமா கிரிக்கெட் டீம் ஃபார்ம் பண்ணவங்கெல்லாம் டோர்ணமெண்ட் வைத்துக் கொண்டிருக்க, நாம் வைக்காமல் இருந்தால் மத்த டீமிடம் மரியாதை இருக்காது என்றெண்ணி எங்க ஊரிலும் டோர்ணமெண்ட் வைப்பதற்காக இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒன்றுகூடி எப்படி செய்யலாம் என விவாதித்தபோது எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது மைதானம், டோர்ணமென்ட் வைக்கும் அளவிற்கு பெரிய மைதானம் எங்க ஊரில் இல்லை,எங்கே வைக்கலாம் என்று பல இடங்களை தேர்வு செய்து இறுதியில் ஏரியின் உள்ளே(கோடையில்தாங்க) வைக்கலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளிலும் துரிதமாக செயல்பட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் டோர்ணமெண்டுக்கான நாளும் குறிக்கப்பட்டது.

பஞ்சாயத்துத் தலைவர்,வாத்தியார் மற்றும் பெரும் மிராசுதார் முறையே முதல் மூன்று பரிசுகளுக்கும் ஸ்பான்சர் எளிதாக கிடைத்த போதும் நோட்டீஸ் அடிப்பதற்கு யாரை கேட்பது என புரியாமல் நின்றபோது வெளிநாடு சென்று வந்த அண்ணாச்சி ஆபத்பாந்தவனாக வந்து உதவினார், நோட்டீஸில் அவர் பெயரை கொட்டை எழுத்தில் போடவேண்டுமென்ற கண்டிஷனோடு.ஒலி ஒளி அமைப்பு ஏவிஎம் மணிமாறன் அண்ணன்கிட்ட கடன் சொல்லி ரெண்டு ஸ்பீக்கர்,ரெண்டு மைக்,ஐந்து ட்யூப் லைட் வாங்கி கட்டியாகிவிட்டது. இது ஆஃபிஸ் ரூம் யூசுக்கு,நான்கு மூங்கில் கால் ஊன்றி,பத்து கீற்று போட்டு சுற்றிலும் படுதாவால்(தார்ப்பாய்) சூழப்பட்டதுதான் ஆஃபிஸ் ரூம்.

டோர்ணமெண்ட் அன்று பௌண்டரி லைனில் குச்சி ஊன்றுவது,பிட்ச்சில் சுண்ணாம்பு கோடு போடுவது,வெளியூர் டீமிற்கு தண்ணீர் சப்ளை ஆகிய பொறுப்புகள் சின்ன டீமிற்கு வழங்கப்பட்டது.ரொம்ப சந்தோஷமா எல்லா வேலைகளையும் செய்தோம் காரணம் உள்ளூர் டோர்ணமெண்ட் என்பதால் சின்ன டீமையும் தனியா விளையாட அனுமதி கொடுத்ததுதான்.(அனுமதி கொடுக்காமல் இருந்திருந்தால் சீறும் சிங்கங்கள் 11 என்ற பெயரில் புது டீமை உருவாக்குவதாகத் திட்டம் இருந்தது).

வெளியூர் டீம் ஒவ்வொன்றாக வந்து டோர்ணமெண்ட் களைகட்டத் தொடங்கியது.நேர்முக வர்ணனை சுடர் அண்ணாச்சிதான் வர்ணனையில் பின்னி பெடலெடுப்பார். "சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருக்கை சரவணன், பூஜ்ஜியத்திலேயே தனது ராஜ்ஜியத்தை முடித்துக்கொண்டு பெவிலியன் திரும்புகிறார்" என்ற ரேஞ்சில் பட்டையை கிளப்புவார். இப்படியாக ஆரம்பித்த உள்ளூர் டோர்ணமெண்ட் வருடா வருடம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் சீனியர் பிளேயர்ஸ் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருவராக சென்றுவிட சின்ன பசங்களாக இருந்த நாங்க மெயின் பிளேயர்ஸ் ஆனபோது எங்களுக்கு பந்து பொறுக்கிபோட வேண்டிய எங்களது ஜூனியர்ஸை அப்போது எங்க ஊருக்குள் நுழைந்த கேபிள் டீ.வியின் வருகை எப்படி அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கியது என்பதனை நாளைய பதிவில் பார்ப்போம்.

(இது ஒரு மீள் இடுகை).

இந்த பதிவின் முதல் பகுதி : சின்ன பசங்க நாங்க .

8 comments:

அகல்விளக்கு said...

//எங்களுக்கு பந்து பொறுக்கிபோட வேண்டிய எங்களது ஜூனியர்ஸை அப்போது எங்க ஊருக்குள் நுழைந்த கேபிள் டீ.வியின் வருகை எப்படி அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கியது என்பதனை நாளைய பதிவில் பார்ப்போம்.//

அடடா இப்படி ஆயிடுச்சே....

செ.சரவணக்குமார் said...

மிக அருமை, ரசித்துப்படித்த இடுகை. எனது கிராமத்து கிரிக்கெட் அனுபவங்களும் சுவையானவையே. அதை நினைத்து ரசித்து சிரித்து உருக வைத்தது உங்கள் எழுத்து. நன்றி நண்பா.

thamizhparavai said...

சுவாரஸ்யமான இடுகை...
நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டீங்க....(மீள்பதிவெல்லாம் போடுறீங்கள்ல அதான்... :-) )

பிரபாகர் said...

பாஸ்,

நாமளும் இந்த மாதிரி நல்லா கூத்தடிச்சிருக்கோமில்ல! நடை, எழுத்தாக்கம் மிக அருமை.

பிரபாகர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

எத்தனை முறை படித்தாலும் சலிக்காத இடுகை..:-)))

அருண்மொழிவர்மன் said...

ஊரில் டென்னிஸ் பந்தில் வைத்து கிரிக்கெட் விளையாடிய நினைவுகளை மீட்டி இருக்கின்றீர்கள். நன்றி.

கனடாவில் டொரண்டோவில் கோடை காலங்களில் பெரிய மைதானம் ஒன்றை குத்தகை எடுத்து சனி, ஞாயிறு தினங்களில் இது போன்ற 20 ஓவர் (இப்போது 15 ஓவர் ஆக்கி விட்டார்கள்) போட்டிகள் நடாத்துவார்கள். ஒரே நேரத்தில் 4 போட்டிகள் நடைபெறக்கூடிய பெரிய மைதானம். ஒவ்வொரு முறையும் ஒரு அணியின் சார்பில் மதிய உணவும் வழங்கப்படும்..

அழகிய நினைவுகளை மீட்டு இருக்கிறீர்கள்

பித்தனின் வாக்கு said...

நண்பரே நான் தங்களுக்கு ஒரு விருதினைக் கொடுத்துள்ளேன். அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும், நன்றி. ரொம்ப நல்ல பதிவு. இருமுறை படித்தேன். நன்றி.

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி அக‌ல்விள‌க்கு.

ந‌ன்றி செ.ச‌ர‌வ‌ண‌க்குமார்.

ந‌ன்றி த‌மிழ்ப்ப‌ற‌வை.(ஹி ஹி)

ந‌ன்றி பிர‌பாக‌ர்.(நீங்க‌ளும் எழுதுங்க‌ பிர‌பா வாசிக்க‌ ஆவ‌லுட‌ன்).

ந‌ன்றி கார்த்திகைப் பாண்டிய‌ன்.(மிக்க‌ ம‌கிழ்ச்சி ந‌ண்பா)

ந‌ன்றி அருண்மொழிவ‌ர்ம‌ன்.(சுவார‌ஸ்ய‌மான‌ த‌க‌வ‌ல்)

ந‌ன்றி பித்த‌னின் வாக்கு(விருதுக்கு மிக்க‌ ந‌ன்றிங்க‌ ந‌ண்ப‌ரே).