சில வருடங்களுக்கு முன்பு ஒரு பொங்கல் சமயத்தில் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கையில் பரண் மீதிருந்த அட்டைப் பெட்டியில் பம்பரங்கள், கோலிகுண்டுகளோடு சாயம் வெளுத்து செல்லரித்துப் போயிருந்த சீவல், புகையிலை பாக்கெட்டுகளின் லேபிள்களைப் பார்த்ததும் தும்பி பிடித்து விளையாடிய நாட்களின் நினைவுகளில் மனம் சஞ்சரிக்கத் தொடங்கியதன் விளைவில் இப்பதிவு.
90களின் ஆரம்பம் எங்கள் பகுதிகளில் புலிமார்க் சிகைக்காயிலிருந்து ஷாம்பூவிற்கு மக்கள் மாறத்தொடங்கியிருந்த காலம். ஷாம்பூவிற்கு என்பதைவிடவும் ஸ்டாம்புக்கு என்றால் சரியாக இருக்கும்,பெரும்பாலும் அப்படித்தான் உச்சரிப்பார்கள். அப்போது மார்க்கெட்டில் சிக் ஷாம்பூவிற்கும் வெல்வெட் ஷாம்பூவிற்கும் இருந்த வியாபார போட்டியில் ”ஐந்து காலி ஷாம்பூ பாக்கெட்டுகளைக் கொடுத்து ஒரு ஷாம்பூ பாக்கெட் வாங்கிக் கொள்ளலாம்” என்ற வெல்வெட் கம்பெனியினரின் விளம்பரத்தைத் தொடர்ந்து காலையில் பள்ளி செல்வதற்கு முன்னர் ஊரில் இருக்கும் ஏரி,குளம்,குட்டை, பம்ப்செட் என எங்கெல்லாம் குளிப்பார்களோ( குறிப்பாக பெண்கள்) அங்கெல்லாம் சிறுவர் கூட்டம் ஷாம்பூ பாக்கெட் பொறுக்குவதற்கு அலைந்து திரிவோம். அப்படி பொறுக்கி சேர்த்த காலி ஷாம்பூ பாக்கெட்டுகளைக்கொண்டு ஒரு புதிய விளையாட்டை உருவாக்கினோம்.
கையடக்கத்தில் சதுரமாய் தேய்க்கப்பட்ட கற்களை ஆளுக்கொன்றாக வைத்துக்கொண்டு மார்க் செய்திருக்கும் ஓரிடத்திலிருந்து கல்லை தூரத்தில் வீசி(எங்க பாஷையில் சொன்னால் ஒட்டி) வீசிய கல்லினை மற்றொருவன் சூட் செய்தாலோ அல்லது சாண் அளவு வருமாறு அருகில் ஒட்டினாலோ அவனுக்கு முதலில் ஒட்டியவன் பெட் கட்டிய ஷாம்பூ பாக்கெட்டுகளைக் கொடுக்க வேண்டும். வெல்வெட் ஷாம்பூவிற்காகத் தொடங்கிய இவ்விளையாட்டில் எனக்குத் தெரிந்து யாரும் காலி பாக்கெட்டுகளைக் கொடுத்து ஷாம்பூ வாங்கிய நினைவில்லை.மாறாக சிக்,வெல்வெட் என அப்போது புழக்கத்திலிருந்த அத்தனை ஷாம்பூ பாக்கெட்டுகளையும் கொண்டு விளையாட்டை மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தோம்.
விளையாட்டு உச்சபட்ச ட்ரெண்டில் இருந்தபோது ஒரு நாள் பச்சை நிறத்தில் புதிய பிராண்ட் ஷாம்பூ பாக்கெட்டை நண்பனொருவன் எடுத்து வந்தான். முதன் முதலாய் அந்த ஷாம்பூவை அப்போதுதான் பார்க்கிறோமென்பதால் அதனை ஜெயித்துவிட ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டிருந்தபோது அங்கே வந்த ஒரு அண்ணன், ”டேய் இது இருமல் மருந்து நிவாரன் 90 டா” என்றார். நாங்க எல்லோரும், ”இருமல் மருந்தா?’’ என்று கோரஸ் பாடி முடிக்கையில், ”அதான் தலைக்கு போட்டதும் நொரையே வல்லையா” என்றவனைப் பார்த்து அந்த அண்ணன் பயங்கரமாய் சிரித்துவிட்டு, ”ஏண்டா படிக்கத் தெரியாட்டியும் அதுலதான் ஒரு ஆளு வாயில மருந்த ஊத்திக்கிற மாதிரி படம் இருக்குல்ல அதப் பாத்துமாடா வெளங்கல” என்றபடியே பக்கத்தில் கபடி விளையாடிக்கொண்டிருந்த மற்ற அண்ணன்களிடமெல்லாம் நண்பனின் மானத்தை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார். இப்போதுதான் தேங்காய் எண்ணெய் தொடங்கி பல பொருட்கள் அந்த மாதிரி சாஷைகளில் வருகிறது, அப்போது ஷாம்பூ மட்டுமே பாலிதின் சேஷைகளில் வந்துகொண்டிருந்ததால் வந்த குழப்பம் அது. நிவாரன் 90 யை பார்க்கும் போதெல்லாம் இப்போதும் இந்த நினைவுதான் என்னிடமிருந்து ஒரு சிறிய புன்னைகையை களவாடிச் செல்லும்.
இவ்விளையாட்டில் பைத்தியமாய் இருந்த நாட்களில் பக்கத்து ஊர் கம்மாய் வரை ஷாம்பூ பாக்கெட் தேடி அலைந்திருக்கிறோம். கும்பலாய் ஷாம்பூ பாக்கெட் வேட்டைக்கு போகயில் தூரத்தில் கிடக்கும் பாக்கெட்டை எவனாவது முதலில் பார்த்துவிட்டு ”அங்கரே ஒன்னு கெடக்கு நாந்தான் ஃபர்ஸ்டு பாத்தேன்” என்று சொல்லிக்கொண்டே ஓடுகையில் அவனை முந்திக்கொண்டு வேற எவனும் எடுத்துவிட்டால் அவ்வளவுதான் ரத்தகளரி நடக்கும். முதலில் ஏதுவாக இருப்பது சட்டை பாக்கெட்டுதான் அதைத்தான் முதலில் கிழிப்பானுங்க/பேன். சட்டை போடாமல் இருப்பவனுங்களை கட்டுக்குள் கொண்டுவர அரைஞான் கயிற்றை பிடித்துக்கொண்டு உருளுவோம். இப்படியான சண்டைகளில் ஷாம்பூ பாக்கெட்டை கிழித்து வீசினாலும் வீசுவோமேயன்றி விட்டுக்கொடுத்ததாக ஞாபகம் இல்லை.
பிறகு இதே போன்று லெட்சுமி சீவல் பாக்கெட்டின் லேபிள்களைச் சேர்க்க ஆரம்பித்தோம். ஐம்பது லேபிள்களைச் சேர்த்து கடைகாரரிடம் கொடுத்தால் இரண்டு தேன் மிட்டாய் கிடைக்கும். அந்த லேபிளை என்ன செய்வார் என்பதெல்லாம் தெரியாது. இப்படி தேன்மிட்டாய்க்கான லெட்சுமி சீவல் லேபிள் சேகரிப்பானது ராணி சீவல்,எஸ்டேட் புகையிலை என விளையாட்டுக்காய் எக்ஸ்டெண்ட் ஆனது.
தஞ்சைக்கு அருகில் உள்ள எனது கிராமத்தில் லெட்சுமி சீவல்,ராணி சீவல் மற்றும் எஸ்டேட் புகையிலை மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இந்த லேபில்களைச் சேகரிக்க காலையிலேயே கடையை நோக்கி ஓடுவோம் . சீவல்,புகையிலை வாங்குபவர்களின் அருகிலேயே அந்த பாக்கெட்டுகளைப் பிரிக்கும் வரை உறுமீன் கொக்காய் நின்றதெல்லாம் ஈரமாய் நினைவில்.
கடையின் வாசலில் வெற்றிலை எச்சில் கறைபட்ட நிறைய லேபிள்கள் கிடக்கும். இந்த லேபிள்களைச் `செல்லாத நோட்டு` என்று ஆட்டத்தில் சேர்த்துக்க மாட்டானுங்க. வேற வழியில்லாத போது , கறைபடிந்த லேபிள்களையும் பொறுக்கி, கறைகள் தனியாய் கசிந்து பிரியும்படி தண்ணிரில் சிறிது நேரம் உள்ளங்கையில் வைத்தபடியே நனைத்து , பிறகு மண் சுவரில் ஒட்டி காயவைத்து நல்ல மடமட சலவைத் தாளோடு களம் இறங்குவோம். இப்படி செய்யும் போது இளஞ்சிவப்பு நிற லெட்சுமி சீவல் லேபிள் ஆரஞ்ச் கலர் லேபிளாக மாறிவிடும், இருந்தாலும் ஆட்டையில் சேர்த்துக்குவானுங்க. மட்டித்தாள்களில் அச்சடிக்கப்பட்டிருக்கும் லேபிள்களை நனைக்கும்போது மண்பாண்டக் குயவனின் செயலையொத்து மிகக் கவனமாகக் கையாண்டால்தான் சலவைத்தாள் இல்லாவிடில் காகிதம் கூழ். நான் இதில் பயங்கர எக்ஸ்பெர்ட்.
யாராவது வயதானவர்கள் கடைக்குச் சென்று வெற்றிலை வாங்கி வரச் சொன்னால் நானெல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ளாதவன்.ஆனால் இவ்விளையாட்டு ஆரம்பித்த பிறகு ஊரில் இருக்கும் அத்தனை வெற்றிலை போடும் பெருசுகளுக்கும் ராஜமரியாதைதான். வெற்றிலை போடுபவர்களை எங்கே பார்த்தாலும் ”கடைக்கு போகனுமா” என்று வலிய கேட்க ஆரம்பித்து ஒவ்வொருத்தனும் சிலரை வாடிக்கை பிடித்து வைத்திருந்தோம். நாங்க லேபிளுக்காகத்தான் நிற்கிறோமென்பது நன்றாகவே தெரிந்தாலும் சில பெருசுங்க லேபிளை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுப்பதுபோல பாவ்லா காட்டி லேபிளோடயே சீவல் பாக்கெட்டை வேட்டியில் சுருட்டிட்டு போகுங்க அப்போதெல்லாம் ”இருடி உனக்கு இருக்கு” என்று மனசுக்குள்ளேயே கருவிக்கொண்டு நிற்போம். வெற்றிலை போடும் சில பாட்டிகளின் பக்கத்தில் லேபிளுக்காக போய் நின்றால், ”போங்கடா அங்கிட்டு எம்பேரங்கிட்டதான் கொடுப்பேன்”னு லேபிளை முந்தானையிலேயே முடிந்து வைத்துக்கொண்டதும், கிழவிகள் தூங்கும் போது முடிச்சை அவுத்து நாங்கள் முடிச்சவுக்கிளான கதைகளும் உண்டு.
கோடைவிடுமுறைக்கு பக்கத்தில் உள்ள சிறுநகரமான எனது பாட்டியின் ஊருக்குச் செல்லும்போது அங்குள்ள கடைத்தெருக்களில் ஏ.ஆர்.ஆர் சீவல் மற்றும் தங்கவிலாஸ் புகையிலைகளின் லேபிள்களை சேகரிப்பதுதான் முக்கிய வேலையாக இருக்கும். ஊருக்கு திரும்பியதும் புதிய லேபிள்களோடு விளையாடப் போகும்போது இருக்கும் பெருமிதத்தை அடடா என்னவென்று சொல்வேன் அதெல்லாம் அனுபவிச்சு உணரணும்ங்க, ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டாடுவானுங்க பசங்க. ”கூட்டாளி கூட்டாளி எனக்கு ஒன்னே ஒன்னு குடுய்யா நான் ஒனக்கு ரெண்டு லெச்சுமி சீவல் கடுதாசி தரேன்” என்றெல்லாம் கெஞ்சுவானுங்க. அதுவும் பத்மினி படம் அச்சிடப்பட்ட எஸ்டேட் புகையிலையின் லேபிளைப் பார்த்து பார்த்து சலித்துப்போனவர்கள் பச்சை நிறத்தில் பறக்கும் குதிரையோடு இருக்கும் தங்கவிலாஸ் புகையிலையின் லேபிளின் மேல் பயங்கர கிரேஸாக இருந்தனர்.
ஒவ்வொரு நாளும் விளையாடிய பிறகு ”இன்னைக்கு எனக்கு ஆயிர்ரூவா ஜெயிப்புடா/தோப்புடா ”என்று கணக்குப்போட்டு பேசிக்கொண்டிருக்கையில் அவ்வழியா கிராஸாகும் எதாவது ஒரு பெருசு,” எலேய் ஒங்கப்ப(ன்) கையில காசுல்லன்னுட்டு இருக்கான் நீதான் ஆயிரமாயிரமா வச்சிருக்கியே கொஞ்சம் கொடுக்குறது” என்றபடி ஏதோ பெரிதாய் காமெடி செய்துவிட்டதைப் போல தானே கேட்டு தானே சத்தமாய் சிரிச்சிட்டு போகும். இப்படி ஆயிரம் ஆயிரமாய் சேமித்து வைத்த பொக்கிஷம்தான் பரணில் செல்லரித்துப் போயிருந்த அந்த லேபிள்கள்.
கிராமங்களில் பால்யம் அமையப் பெற்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.அந்த வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.தொலைந்து போன எனது பால்யத்தின் தொலையாத நினைவுகளில் இப்படித்தான் அடிக்கடி தொலைந்துபோகிறேன்.

20 comments:
நல்ல பகிர்வு சார். பால்ய நினைவுகளை எழுப்பி விட்டீர்கள்.
எங்க ஊர்ப் பக்கம் தீப்பெட்டி லேபிளை சேகரிப்போம்........
தீப்பெட்டி லேபிள், சிகரட் அட்டை, ஷாம்பூ பாக்கட் என்று கரன்ஸி மாறியிருக்கிறதே தவிர விளையாட்டு மாறவேயில்லை. :(. காலத்தின் கோலம் இப்போது இங்கு சிறுவர்கள் காசு வைத்து விளையாடி பான்பராக் வாங்குவது.
அங்கே வந்த ஒரு அண்ணன், ”டேய் இது இருமல் மருந்து நிவாரன் 90 டா” என்றார்.நாங்க எல்லோரும், ”இருமல் மருந்தா?’’ என்று கோரஸ் பாடி முடிக்கையில், ”அதான் தலைக்கு போட்டதும் நொரையே வல்லையா” என்றான் நண்பன். இதைக் கேட்டதும் அந்த அண்ணன், ”ஏண்டா படிக்கத் தெரியாட்டியும் அதுலதான் ஒரு ஆளு வாயில மருந்த ஊத்திக்கிற மாதிரி படம் இருக்குல்ல அதப் பாத்துமாடா வெளங்கல” என்றபடியே பயங்கரமாய் சிரிக்கத்தொடங்கி பக்கத்தில் கபடி விளையாடிக்கொண்டிருந்த அவர் செட்டில் உள்ள இன்னும் சில அண்ணன்களிடமெல்லாம் நண்பனின் மானத்தை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்.
...... ha,ha,ha,ha,ha,,......
ரொம்ப நேரம் சிரித்து கொண்டு இருந்தேன். So chweet!
வெல்வெட் ஷாம்பூ, தேன் மிட்டாய், தங்க புஷ்ப புகையிலை தாள்........
நீங்கள் பரணில் இருந்து எடுத்த நினைவலைகளை, உங்கள் இடுகையை வாசித்த எனக்கும் பரவச் செய்ததற்கு, நன்றிகள் பல.
மாமா வெளிநாட்டிலிருந்து வந்தபோது கொண்டு வந்த ஷூ பாலிஷை கோந்து என எண்ணி புத்தகத்தை ஒட்ட முயற்சித்தது நினைவிற்கு வருகிறது... என்ன அப்போது 12 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்...
நாங்களும் சோடா மூடி, தீப்பெட்டி என சேகரிப்போம்....
நினைவுகளை கிளறவிட்ட இடுகை!
பிரபாகர்...
//கிராமங்களில் பால்யம் அமையப் பெற்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.அந்த வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.தொலைந்து போன எனது பால்யத்தின் தொலையாத நினைவுகளில் இப்படித்தான் அடிக்கடி தொலைந்துபோகிறேன்.//
இந்த விசயத்தில் நாங்களும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே...!
அந்த கனாக்காலம் இன்னும் இளமையாய்...
ம்ம்ம்.... அசைபோட மட்டுமே முடிந்த அழகான நாட்கள்.
எனக்குத் தெரிஞ்சி நான் சின்ன வயசுல இந்த ஷாம்ப் பாக்கெட்டுகள கடையில கொடுத்திட்டு தேன் முட்டாய் வாங்கி சாப்பிட்டிருக்கேன்...
அந்த நிவாரன் 90 காமடி சூபபர்....
எனக்கு ஒருதடவ பேஸ்ட்க்கும் ஆயில்மெண்ட்டுக்கும் வித்யாசம் தெரியாம வாயில வச்சிட்டு ரெண்டு நாளு மெனக்கெட்டு வாந்தியெடுத்திருக்கேன்...
ஏ.ஆர்.ஆர், ராணி சீவல்...ம்ம்ம்... மறக்கமுடியுமா!!!
நாங்களும் தீப்பெட்டி,சிகரட் அட்டை,அஞ்சல் தலை, பஸ் டிக்கெட், Train டிக்கெட்..........
நினைவுகளை கிளறவிட்ட ஒரு நல்ல இடுகை.
இந்த மாதிரி பதிவுகள நீங்க நல்லா எழுதுறீங்க
ரசித்தேன்... நாஸ்டால்ஜியா பதிவுகள்னா அது நாடோடி இலக்கியன் பதிவுதான்....
கல்ல வச்சு விளையாடுற விளையாட்டுக்கு எங்க ஊர்ப்பக்கம் பேரு, ‘செதுக்கு சப்பா’...
சுவாரசியம்.. நாங்கள் இதை சோடா மூடி போன்ற ஐட்டங்களுக்குதான் விளையாடி இருக்கிறோம்..
சிக் ஷாம்பு பத்தி சொன்னதும் ஒரு பபிள்கம் (பேர் மறந்து விட்டது) ஞாபகம் வந்தது. அதன் உள்ளே இருக்கும் உறையின் ஐந்து ஸ்டார்களை சேர்த்தால் ஒரு பபிள்கம் கிடைக்கும். பேயாய் அலைவோம் :)
இது உங்க ஏரியா.! அட்டகாசம் பண்ணியிருக்கீங்க..
//”போங்கடா அங்கிட்டு எம்பேரங்கிட்டதான் கொடுப்பேன்”னு லேபிளை// கட்டுரை ரொம்ப லைவ்வாக வந்திருக்கிறது.
நன்றி இராமசாமி கண்ணண் .
நன்றி கரிசல்காரன்.
நன்றி வானம்பாடிகள்.(பான்பராக்கா?)
நன்றி Chitra.
நன்றி பிரபாகர்.(அப்போ விரைவில் ஒரு இடுகையை எதிர்பார்க்கிறேன்.
).
நன்றி சே.குமார்.(மகிழ்ச்சி நீங்களும் கிராமத்தை பின்புலமாகக் கொண்டவர் என்பதில் நண்பரே.)
நன்றி க.பாலாசி.(பழச கிளறிவிட்டுட்டேனா பாலாஜி).
நன்றி நாஞ்சில் நாதம்.(மத்ததெல்லாம் சரியா எழுதலின்றீங்க புரியுது :))) )
நன்றி தமிழ்ப்பறவை.(ரொம்ப நன்றி நண்பா).
நன்றி புபட்டியன்.(ஆமாங்க சோடா மூடியும் பொறுக்கியிருக்கோம்).
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.(உங்கள மாதிரி எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடம்னுதான் நினைக்கிறேன் பார்ப்போம்).
அழகான நடையோடு அற்புதமான இடுகை.நானும் உங்களைப் போலவே ஆசிர்வதிக்கப்பட்டவன்.
டைம் இருந்தா என் பரணைப் பாருங்கள்
http://www.mmabdulla.com/2009/06/blog-post_15.html
நன்றி அப்துல்லா.(நானும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவன்,உங்களுக்கு எந்த கிராமம் அண்ணே).
சூப்பர் நண்பா, எனக்கும் இந்த அனுபவம் உண்டு, எல்லோரும் சொன்ன மாதிரி தீப்பெட்டி அட்டையிலதான் விளையாடுவோம். இன்னும் தொட்டா முட்டா ராயிக்கல்ன்னு ஒரு ஆட்டம் இருக்கு. ச்சான்ஸே இல்லை, அதிரிபுதிரி ஆட்டம்தான்.
கிலுகிலுப்பையை ஆட்டிவிட்டுவிட்டீர்கள்.
நன்றி முரளி,(தொட்டா முட்டா ராயிக்கல் பேரே அதிருதேங்க நண்பா).
நண்பரே... இப்போது இன்னும் மெருகுடன் ஒரு முழுமை பெற்ற கட்டுரையாக இருக்கிறது...
8வது மற்றும் 11 வது பத்திகள் புதிது என நினைக்கிறேன் என் நினைவாற்றல் சரியெனில்...
நன்றி தமிழ்ப்பறவை.
இலக்கியன்...
நல்ல பகிர்வு.
அன்பு நித்யன்.
நன்றி நித்யகுமாரன்.(எவ்வளோ நாளாச்சு...)
Post a Comment