* இப்படத்தின் வட்டாரப் பேச்சு வழக்கு அவ்வளவு இயல்பாக வந்திருக்கிறது. "போகனும்ல", "சொல்றோம்ல" என்ற மதுரையின் ஸ்லாங்கும் "ஏனுங்", "சொல்றேனுங்" என்ற கொங்கு தமிழையும் வட்டார வழக்காக்கியே கிராமத்தை கதைக்களமாகக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் முதன் முதலாக தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் பேசப்படும் "இங்கர்ள கேக்குறன்ன"("இங்கே பாரு புள்ள கேட்கிறேன்ல"), "அவனும் போட்டா எடுக்கனும்ன", "அண்ணாந்து பார", "அய்யனார் கோயிலுக்கெல்லாமா மால போடுவோ", "அவ்வோ ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ களவாணித்தனம் பண்றவோ" மேலும் கணவன்மார்கள் மனைவிகளை "ஏட்டி"(ஏன்டி)என அழைப்பது என இப்படியான வட்டார வழக்கை அப்படியே கொண்டுவந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். காரணம் நானும் இதே ஸ்லாங்கை பேசும் ஒரத்தநாட்டுக்காரன்.
"அவய்ங்க","வராய்ங்க","போறாய்ங்க" என்பது மதுரையின் வட்டார வழக்கு அதை இந்தப் படத்திலும் பேசுகிறார்கள் என்று சில விமர்சனங்களில் படித்தேன். இந்த "வந்துட்டாய்ங்க", "போயிட்டாய்ங்க" என்பது ஒரத்தநாட்டு வட்டார வழக்கிலும் உண்டு. எங்கள் பகுதியில் பெண்பிள்ளைகளை "ஆயி", "ஆத்தா", "புள்ள" என்று அழைப்பது வழக்கம். அதையும் இப்படத்தில் அழகாய் பயன்படுத்தியிடுக்கிறார் இயக்குனர்.
* "கட்டிக்கிறேன்னு சொல்லு" என பார்க்கும் பொண்ணுங்களிடமெல்லாம் லந்தடிக்கும் ஹீரோ விமல், பஸ்ஸில் அமர்ந்திருக்கும் இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் ரூட் விடுமிடத்தில் இளைஞர்களிடம் கிளாப்ஸை அள்ளுகிறார். ஹீரோயின் ஓவியாவிடம் நிறைய ரிப்பீட்டட் எக்ஸ்பிரஷன்களாகவே இருந்தாலும் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார். குறிப்பாய் விமலிடம் "அறிவழகன்" என சொல்லுமிடத்தில் நன்றாகவே செய்திருக்கிறார்.
* கதாபாத்திரங்களின் படைப்பும் தேர்வும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. "இந்தா வந்திட்டாரு அறிக்கி" என பொருப்பில்லா மகனை கடிந்துகொள்ளும் அப்பாவாக இளவரசன், ஹிரோ என்ன களவாணித்தனம் பண்ணாலும் "அவனா பண்றான் அவன் கெரகம் அப்படியிருக்கு"என மகனை விட்டுக்கொடுக்காத அம்மாவாக வரும் சரண்யா,நெல்வியாபாரியாக வரும் கதாநாயகியின் அப்பா,சில காட்சிகளிலேயே வந்தாலும் இயல்பாய் நடித்திருக்கும் கதாநாயகியின் அம்மா,வண்டல் மண்ணின் மைந்தனாகவே முறுக்கித் திரியும் கதாநாயகியின் கோபக்கார அண்ணன்,பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பு என இன்னும் நிறைய சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அழகாய் உலாவருகிறார்கள்.மகன் திடீர் கல்யாணம் செய்து கொள்ளும்போதும் கூட அசால்ட்டாய் மகனுக்கு சப்போர்ட் பண்ணும் சரண்யா கேரக்டர் மற்ற எல்லா துணைக் கதாபாத்திரங்களை விடவும் முந்தி நிற்கிறது. ராம்,தவமாய் தவமிருந்து,எம்டன் மகன் என விதவிதமான கேரக்டர்களில் அசத்திய சரண்யா இந்தப் படத்தில் அசால்ட்டான நடிப்பில் பின்னியிருக்கிறார்.
*ஹிரோ விமல் ஹீரோயினை காதலிக்கச் சொல்லி கலாட்டா செய்யும் "அறிக்கி LCII2 கூட்டு "காட்சிகள் கவிதையென்றால் ஹீரோயின் நட்டு வைக்கும் நாற்றுகள் செழித்து வளரும் காட்சிகள் வண்டல் மண் ஹைக்கூ. அறிவழகன் என்னும் பேரை "அறிக்கி" என நண்பர்கள் அழைப்பதைப் பிடிக்காத ஹீரோயின்,"அறிவழகன் என்றுதான் கூப்பிடணும்" என்பதைத் தொடர்ந்து நண்பர்கள் ஹீரோவை கலாய்க்கும் காட்சி கிச்சு கிச்சு.
* ஃபிளக்ஸ் பேனரில் வித்தியாசமான கோணங்களில் போஸ் கொடுப்பதுத் தொடங்கி கஞ்சா கருப்பை காணுமிடத்திலெல்லாம் கலாட்டா செய்து காலியாக்குவது என ஹீரோவின் நண்டபர்களாக வருபவர்கள் ரசிக்க வைத்திருக்கிறார்கள் சில காட்சிகளில் சொதப்பினாலும் .
* "மல்லியே மெல்ல வந்து கிள்ளி போ","மாடி மாடி ஒன்னு" போன்ற மெல்ல மெல்ல தொலைந்து கொண்டிருக்கும் வண்டல் மண் விளையாட்டுகளை திரைக்கதையின் ஓட்டத்தில் இயல்பாய் தொட்டுச் சென்றது ரசனை.
* மினிபஸ்ஸில் ஹீரோயினின் சைக்கிளை ரன்னிங்கிலேயே ஹீரோ தூக்கும் காட்சி,கஞ்சா கருப்பு இறந்துவிட்டதாக அனொன்ஸ் பண்ணுமிடம், ஹீரோயினிடமிருந்து ஹீரோவிற்கு போன் கால் வரும்போது சிக்னல் கிடைக்காமல் ஹீரோ மாட்டு வண்டியை அப்படியே ரோட்டிலேயே விட்டு விட்டு சிக்னல் தேடுமிடம் என படம் நெடுக படு சுவாரஸ்யமான காட்சிகள் ரசிக்கும்படி கையாளப்பட்டிருக்கிறது.
* ஒரத்தநாட்டின் பசுமைக் காட்சிகளை களவாடி வந்திருக்கும் ஓம்பிரகாஷின் கேமராவிற்கு ஒரு பெரிய சபாஷ். மிக அழகாய் ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு பெரிய பிளஸ் மண்வாசம் வீசும் யதார்த்தமான வசனங்கள் .
* குறையென்று பார்த்தால் பள்ளிக்கூட மாணவியை காதல் செய்வது போன்ற காட்சிகள். மேலும் ஹீரோ விமல் தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக உள்வாங்கி நடித்திருந்த போதும் என்னதான் ஒரத்தநாட்டின் வட்டார வழக்கை உச்சரித்தாலும் அவரின் வாய்ஸ் மாடுலேஷன் மதுரைக்கே இழுத்துச் செல்கிறது. அதே போன்று மற்றவர்களின் ஸ்லாங்கிலிருந்து மாறுபட்டு "பருத்தி வீரன்" சுஜாதாவின் வாய்ஸும் ஒட்டவில்லை. ரீட்டா டான்ஸ் இடம்பெறும் திருவிழாக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். எப்படா முடியுமென நினைக்கும்படி வெகு நீளம். நேட்டிவிட்டிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் சில கதாபாத்திரங்களின் முகத்தில் கேமரா பயத்தினால் செயற்கைத் தனம் தெரிவதையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். இம்மாதிரியான சின்னச் சின்ன குறைகளைத் தாண்டி ரகளையாய் மனதை களவாடுகிறான் இந்தக் களவாணி.
* பஞ்ச் டயலாக்,குத்துப்பாட்டு இவற்றையெல்லாம் நம்பாமல் அழகான திரைப்படத்தைத் தந்த இயக்குனர் சற்குணத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
டிஸ்கி:இப்படத்தில் ஓரிரு காட்களில் நடித்திருக்கும் சிலரை படம் பார்த்த அன்றே ஒரத்தநாட்டில் பார்க்க நேர்ந்தது."நீங்கதானே களவாணியில..." என்று கேட்கும்போது அவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்திருக்கணும் ....
26 comments:
மிகவும் ரசித்தேன் பாரி! இரு முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. உங்களின் விமர்சனம் நுறு சதம் ஒத்துப்போகிறது!
அருமையான விமர்சனம்.
பிரபாகர்...
படம் பார்க்கும் போதே உன்னைத் தான்யா நினைச்சிட்டிருந்தேன்.
விமர்சனமும் எழுதச் சொல்லணும்னு இருந்தேன்.
நல்ல படம். அதிலும் கதாநாயகியின் அண்ணனாக வருபவர் வாழ்ந்திருக்கிறார்.
ம்... ஒரத்தநாடும் இப்போ பேமஸ் ஆயிருச்சுப்போய்!
நன்றி பிரபாகர்.(ரெண்டு தடவ பார்த்தாச்சா,நானும் இன்னொரு முறை பார்க்க நினைத்திருக்கிறேன்).
நன்றி வெயிலான்,(படம் பார்த்தாடச்சா,ஒரத்தநாட்டிற்கு எப்போ வறீங்க?).
உங்க பார்வை என்னையும் படம் பார்க்க தூண்டியிருக்கிறது... ஒரு நல்ல படத்தை அறிமுக படுத்தியம்மைக்கு மிக்க நன்றிங்க.
நன்றி கருணாகரசு,(மிஸ் பண்ணாம பாருங்க).
ஒரே மாதிரியான வட்டாரச் சொற்கள் பல தஞ்சை மற்றும் மதுரையில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் சில இடங்களில் குழம்புவது இயற்கையே.
எப்படி இருக்கீங்க அண்ணே! :-)
மிக மிக ரசித்து பார்த்த படம்.............. லொகேஷனுக்காகவே இந்த படத்தை பல தடவை பார்க்கலாம்
நன்றி ரோஸ்விக்,
//அதனால் சில இடங்களில் குழம்புவது இயற்கையே//
குழம்பலாம் ஆனால் அது மதுரையில் மட்டுமே பேசப்படுவது போன்று எழுதினால் எப்படி அதான்.
நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க நண்பா?
நன்றி அத்திரி,(ஆமாம்,எங்கள் ஊரில் இன்னும் கூட பசுமையான அழகான லோகேஷன்கள் உண்டு.நிறைய இடங்கள் நான் சிறு வயதிலிருந்தே பழகிய லோகேஷன்கள்,அதைத் திரையில் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது)
நல்ல படம் நண்பா.. என்ன இன்னும் கொஞ்சம் விறுறுப்பைக் கூட்டி இருக்கலாம்..
அப்புறம் தாமதமா சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க.. திருமண நல்வாழ்த்துகள்..:-))
வரமுடியாமல் போனமைக்கு வருத்தமும்..:-((
நல்ல பகிர்வு நண்பரே...
இந்தவாரம் பார்த்து விடுவேன்...
//"மல்லியே மெல்ல வந்து கிள்ளி போ","மாடி மாடி ஒன்னு" போன்ற மெல்ல மெல்ல தொலைந்து கொண்டிருக்கும் வண்டல் மண் விளையாட்டுகளை திரைக்கதையின் ஓட்டத்தில் இயல்பாய் தொட்டுச் சென்றது ரசனை.//
இதப் பத்தி தெரியாத என்னைப் போன்றாவர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்..
அருமையான விமர்சனம் நண்பரே..!
அலசி ஆராய்ந்து நீண்ட பதிவில் அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியாச்சு. எனது மனசு () வலையில் எழுதியாச்சு... பார்க்கவும்.
சொல்லவே இல்லை... திருமண வாழ்த்துக்கள்.
நன்றி கார்த்திகைப் பாண்டியன் ,(என் பார்வைக்கு ஓரிரு காட்சிகளைத் தவிர படம் விறுவிறுப்பாகவே சென்றது நண்பா ஒரு வேளை இந்தப் படம் எங்க ஊரை கதைக்களமாக கொண்டிருந்ததால் கூட இருந்திருக்கலாம். வாழ்த்துகளுக்கும் ஒரு நன்றி).
நன்றி தமிழ்ப்பறவை, (அவ்விளையாட்டுக்களை நேரமிருக்கும்போது எழுதுகிறேன் நண்பா,இல்லாவிடில் உங்களுக்கு போனிலாவது சொல்லிவிடுகிறேன் :) ).
நன்றி சே.குமார் ,(தொடர் பதிவை இப்போதான் படிச்சேன் நன்றாக இருந்தது,அழைப்பை ஏற்றமைக்கு மிக்க நன்றி நண்பரே).
நன்றி குடுகுடுப்பை .
படம் பார்த்ததே அந்த ஊருக்காகத்தான் நண்பா, என்ன இருந்தாலும் அப்பா பொறந்து வளர்ந்த ஊரு, நேர்லதான் போக முடியலை, இப்படியாச்சும் பாப்போம்ன்னு வெறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் போனேன். அருமையான படம். அடுத்த தலைமுறை இயக்குனர்களின் வரிசையில் இவரும்
சேர்த்தி.
தாமதமான வாழ்த்துக்களுக்கும் திருமணத்திற்கு வர முடியாததற்க்கும் எனக்கு வருத்தம் உண்டு. ஆனால் அவசியம் ஒரத்த நாடு வருவேன், (வோம்).:-)
நண்பா, அழகான மணவாழ்விற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நன்றி முரளி,(எப்போ வறீங்க ஒரத்தநாட்டிற்கு வரவேற்க ஆவலோடு இருக்கேன்.வாழ்த்துக்களுக்கும் நன்றி).
யதார்த்தமான சினிமாவை அதைப்போலவே விமர்சனம் செய்தது பாராட்டுக்குரியது.wari
நன்றி ராஜபாண்டியன்.
இதுக்கு பின்னூட்டம் போட்டுட்டேனா.? :-)
என்னதானிருந்தாலும் ராமராஜன் படம் போலாகுமா
நன்றி ஆதி,(இன்னும் இல்லைன்னு நினைக்கிறேன் :) ).
நன்றி இரும்புத்திரை.
அருமையான படம்னுதான் எல்லாரும் சொல்றவோ. பாக்கணும்.
எனக்கும் ஒரத்தநாட்டுக்கும் தூரத்து சொந்தம் (என் முன்னோர்கள் இந்த ஊர்தான்!). எங்கள் ஊரில் (பரவாக்கோட்டையில்) எங்களை ஒரத்தநாட்டான் வீடுன்னுதான் சொல்லுவோ!!
சீக்கிரம், நம்மூரு பக்கம் பேசப்படும் (தற்போது மறந்துவிட்ட) பேச்சு வழக்குகளை பதிவிடலாம்னு இருக்கேன்.
நன்றி தஞ்சாவூரான்,(எல்லாரும் சொல்றவோளா ,நாந்தான் அன்னைக்கே சொன்னன்னா படம் நல்லாயிருக்குன்னு,இன்னுமா பாக்காம இருக்கிய.
உங்கள் எழுத்தை வாசித்து எவ்வளோ நாளாச்சு, வண்டல் மண் சொற்களை விரைவில் எழுதுங்க. நம்ம ஊர் பக்கமே பேச்சு வழக்கில் நிறைய வேறுபாடுகள் ஊருக்கு ஊர் இருக்கிறது எ.கா, வந்துகினு போயிகினு ,வந்துகிண்டு போயிகிண்டு,வந்துகிட்டு போயிகிட்டு).
ஒரு இளைஞன் எப்படியிருக்கக்கூடாதுங்கிறதுக்கான அத்தனை காரணங்களும் படத்தில் இருக்கின்றன.அப்படியிருந்தும் அருமையென்றே விமர்சனமும்,பின்னூட்டங்களும் இருக்கின்றன.மனோபாவங்களே ஒரு சமுதாயத்தின் முகக் கண்ணாடி.இப்படியான ரசனைகளை வைத்துக் கொண்டு அங்கே நொள்ளை,இங்கே நொள்ளைன்னு பதிவுலகில் வந்து கூவ மட்டுமே செய்கிறோம்.எனது எதிர் விமர்சன வருத்தங்கள்.
நன்றி ராஜநடராஜன்,( முதலில் இது ஒரு ஹீரோயிஸ படம் கிடையாது. அதைத் தாண்டி படத்தில் ரசிக்க நிறைய இருப்பதாக நினைக்கிறேன். தஞ்சையின் ஒரத்தநாட்டுப் பகுதியின் கிராம வாழ்க்கையையும் தற்போதைய இளஞர்களின் செயல்பாடுகளையும் எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் அப்படியே பதிவு செய்ததற்காகவே இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.
//ஒரு இளைஞன் எப்படியிருக்கக்கூடாதுங்கிறதுக்கான அத்தனை காரணங்களும் படத்தில் இருக்கின்றன//
இது போன்ற இளைஞர்களுக்கு சப்போர்ட் செய்வதாக நினைக்க வேண்டாம் நண்பரே.ஆனால்
இதே போன்ற இளைஞர்கள் ஊருக்கு ஊர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.குடிப்பதும்,பொண்ணுங்களை சைட் அடிப்பதும் அந்த காரணங்களாக இருப்பதாக நினைத்தால் அது இரண்டும் இல்லாத இளைஞர்களை எத்தனை பேரை உங்களால் சொல்ல முடியும்.இன்றைய யதார்த்தம் இதுதான்.
ஆனாலும் மீடியாக்களில் இப்படியான இளைஞர்களின் செயல்களை யாதார்த்தம் என்ற பெயரில் கைதட்டி ஊக்குவிக்கும்போது பதின்மத்தில் இருப்பவர்களுக்கு அது தவறு என்பது தெரியாமல் அந்த ஹீரோக்களை ஃபாலோ செய்யக் கூடிய அபாயமும் இருப்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.
தங்கள் அண்ணன் சொல்லி உங்கள் வலைப்பக்கம் பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டேன். நல்ல விமர்சனம். மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்...
நானும் தஞ்சாவூர் கிராமத்து ஆள்:) “களவாணி” படம் பற்றிய என் பார்வை:
http://vssravi.blogspot.com/2010/08/blog-post.html
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
மிக்க நன்றி ரவிச்சந்திரன்,
உங்களின் விமர்சனம் படித்தேன், கிட்டத்தட்ட ஒரே மாதிரி படத்தை ரசித்திருக்கிறோம்.
வெட்டிக்காட்டிற்கு சமீபத்தில் சென்றேன்.என்னுடைய நண்பன் உங்க ஊர்தான்.
Post a Comment