Thursday, January 19, 2012

காணாமல் போன இசையமைப்பாளர்கள்:

ரொம்ப நாட்களுக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.இவ்வளவு அற்புதமான பாடல்களை தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன் ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இப்பதிவு.

"கண்ணுக்குள் நூறு நிலவா","புத்தம் புது ஓலை வரும்" - வேதம் புதிது,
"பொங்கியதே காதல் வெள்ளம்",”இதழோடு இதழ் சேர்க்கும் நேரம்”- மண்ணுக்குள் வைரம் போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன், 90 களின் ஆரம்பத்தில் வெளியான புதிய தென்றல் திரைப்படத்திற்குப் பிறகு என்னவானார் என்பது தெரியவில்லை.இப்படத்தின் பாடல்களும் கூட நன்றாக இருக்கும். குறிப்பாக "தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க" பாடலைச் சொல்லலாம்.

சௌந்தர்யன், நல்ல திறமையிருந்தும் ஏனோ இவரால் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.இவரது முதல் படமான சேரன் பாண்டியன் படத்தின் "சின்னத் தங்கம் ", "வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே" தொடங்கி அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட்டானவை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" பாடலை எழுதியதும் இவரே. இவரின் அடுத்த படமான சிந்து நதி பூவின் "மத்தாளம் கொட்டுதடி மனசு" இன்றும்கூட கிராமப்புறங்களில் அடிக்கடி ஒலிக்கக் கேட்கலாம் .கோபுர தீபம் படத்தின் ’உள்ளமே உனக்குத்தான்’ பாடலுக்கு கிராமத்து இசைப்பிரியர்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்தது.

"உன்னை தொட்ட தென்றல் இன்று " என்ற அற்புதமான மெலடியோடு தலைவாசலைத் திறந்த பால பாரதி,அமராவதியில் "தாஜ்மஹால் தேவையில்லை","புத்தம் புது மலரே", "உடலென்ன உயிரென்ன" என்ற எளிதில் மறக்க முடியாத பாடல்களை தந்து,"யாருப்பா இந்த இசையமைப்பாளர்" என்று இசைப்பிரியர்களின் புருவங்களை உயர்த்தவைத்து அத்தோடு காணாமல் போனவர்தான்.சில வருடங்களுக்கு முன்பு ”மெர்குரிப் பூக்கள்” படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.

வி.எஸ்.நரசிம்மன்,ஒரு காலத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் இரண்டு மூன்று படங்களுக்குத் தொடர்ச்சியாய் இசையமைத்தவர். அச்சமில்லை அச்சமில்லை படத்தின் "ஆவாரம் பூவு","ஓடுகிற தண்ணியிலே" பாடல்கள் இன்றும்கூட தொலைக்காட்சி நேயர்களால் விரும்பி கேட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பாடல்களை முதன் முதலில் கேட்டபோது இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசையில், சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தின் " செண்பகப் பூவைப் பார்த்து" பாடலும் அவரது இசைத் திறமையை எடுத்துக் காட்டிய ஹிட் பாடலே.

"என்ன அழகு எத்தனை அழகு","ஏன் பெண்ணென்று பிறந்தாய்" என்று அசத்தலான பாடல்களோடு லவ் டுடேவில் அறிமுகமாகி ,"மலரே ஒரு வார்த்தை பேசு","சின்ன வெண்ணிலவே" என்று பூமகள் ஊர்வலத்திற்காக இசைவிருந்து படைத்து “நீ மலரா மலரா” என்று அற்புதம் நிகழ்த்திவிட்டு மௌனமான ஷிவா . ”அச்சு வெல்லமே அச்சு வெல்லமே” என்று சக்தியோடு தொடங்கிமுந்தானைச் சேலை முட்டுதா ஆளைஎன்று அரிச்சந்திராவோடு காணாமல்போன ஆகோஷ்(ஆனந்த்,கோபால் சர்மா,ஷ்யாம்), வி.ஐ.பி மூலம் அறிமுகமாகி "மின்னல் ஒரு கோடி" பாடலைத் தந்து ஆச்சர்யபடுத்தி சமீபத்தில் உற்சாகத்தில் அவரா இவர் என்று நினைக்கவைத்த ரஞ்சித் பரோட். கௌரி மனோகரியில் "அருவிகூட ஜதி இல்லாமல் ஸ்வரங்கள் பாடுது" பாடலைத் தந்த இனியவன் போன்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமான படங்களிலே எல்லோரது கவனத்தையும் ஈர்த்து, பிறகு ஒரு சிலருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலும், சிலருக்கு கிடைத்தும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலும் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர இன்னும் இரண்டு இசையமைப்பாளர்களின் கதை சற்று வித்யாசமாய் இருக்கும். இவர்களை காணாமல் போனவர்கள் லிஸ்டிலும் சேர்க்க முடியாது, பிசியானவர்களின் வரிசையிலும் சேர்க்க முடியாது. திடீரென காணாமல் போவார்கள்,திடீரென நான்கைந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவர் "ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்"(மனசுக்குள் மத்தாப்பு),"சின்னப் பூவே மெல்ல பேசு" (சின்னப் பூவே மெல்ல பேசு) என்று ஆரம்பத்தில் அசத்தலான பாடல்களை தந்து பிறகு விக்ரமன் படத்தில் ஒரே டியூனை வைத்து ஏகப்பட்ட படங்களுக்கு "லாலாலா" போட்ட எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றொருவர் அன்னை வயல் மூலம் "மல்லிகை பூவழகில்" என்று அட்டகாசமான மெலடியோடு ஆரம்பித்து "செவ்வந்தி பூவெடுத்தேன்" என்று கோகுலத்தில் தனது திறமையை நிரூபித்து, உள்ளத்தை அள்ளித்தா என்று மிகப் பெரிய ஹிட்டெல்லாம் கொடுத்து பிறகு சில காப்பி&பேஸ்ட் போட்டுவிட்டு இப்போது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டி நடுவராக இருக்கும் சிற்பி.

இப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் இசையமைப்பாளர்கள் அறிமுகமான காலத்தில் இளையராஜா என்ற மிகப்பெரிய இசை சாம்ராஜ்யத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் அல்லது தனக்கான தனி இசை அடையாளம் இலாமல் இளைராஜாவின் இசைப்பாணியை அப்படியே தொடர முயன்றதாலும் கூட அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் போயிருக்கலாம். முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல்."ஏதோ நடக்கிறது","தோடிராகம் பாடவா","மல்லிகைப் பூ பூத்திருக்கு" போன்ற அழகான மெலடிகளையும், ரஜினி படங்கள்(மனிதன்,ராஜா சின்ன ரோஜா) உட்பட சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் பல படங்களுக்கு இசையமைத்து சமீபத்தில் மறைந்த திரு.சந்திரபோஸ், பாலைவனச் சோலை("மேகமே மேகமே"),பெண்மணி அவள் கண்மணி("மூங்கிலிலை காடுகளே"), சம்சாரம் அது மின்சாரம்("சம்சாரம் அது மின்சாரம்","ஜானகி தேவி") என்று எண்பதுகளின் மத்தியில் நிறைய படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ் மற்றும் செந்தூரப் பூவே,ஊமை விழிகள்,உரிமை கீதம்(மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்),வெளிச்சம்("துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே") போன்ற வசீகரிக்கும் பாடல்களைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்த மனோஜ் கியான் போன்ற ஒரு காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த இவர்களும் கூட காணாமல் போன லிஸ்ட்டில் இடம்பிடித்தது ஏனோ தெரியவில்லை.அழகன்,வானமே எல்லை,ஜாதி மல்லி போன்ற படங்களுக்கு இசையமைத்த மரகதமணி(கீரவாணி),கொடிபறக்குது,கேப்டன் மகள் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹம்சலேகா, ரசிகன் ஒரு ரசிகை(”பாடி அழைத்தேன்”,”ஏழிசை கீதமே”) படத்திற்கு இசையமைத்த அமரர் ரவீந்திரன் மற்றும் பூவுக்குள் பூகம்பம்("அன்பே ஒரு ஆசை கீதம்") படத்திற்கு இசையமைத்த சங்கீத ராஜன் ஆகியோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது, காரணம் அவர்கள் தெலுங்கு மற்றும் மளையாளத்தின் முண்ணனி இசையமைப்பாளர்கள்.தமிழுக்கு அவ்வப்போது விருந்தாளிகளாய் வந்த இசையமைத்தவர்கள்.

கங்கை அமரன்,எஸ்.பி.பி மற்றும் டீ.ராஜேந்தர் ஆகியோர் இசையமைப்பதை முதன்மையான தொழிலாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

டிஸ்கி:இது ஒரு மீள்ஸ்

11 comments:

முரளிகண்ணன் said...

பல ஞாபகங்களைத் தூண்டிவிட்டது இந்தப் பதிவு

எம்.எம்.அப்துல்லா said...

துவக்கப் பள்ளியில் அமரவைத்து விட்டீர்கள் :)

க.பாலாசி said...

இந்தப்பாடல்களை பலநாளா ரொம்ப விரும்பி கேட்டிருந்தாலும் யார்யார் இசையமைத்தார்கள் என்பதை இப்பதான் தெரிஞ்சிகிறேன்..

பிரபாகர் said...

நிறைய தகவல்கள் பாரி, தெரியாதவைகளோடு...

பிரபாகர்...

நாஞ்சில் பிரதாப்™ said...

சண்முக விநாயகம்(அழகிய தீயே)

balakrishnan said...

namma deva ,baradwaj,barani aathiyan dhina srikanth deva latest ta vidayasaagar enge ?

நாடோடி இலக்கியன் said...

@முரளிகண்ணன்,
நன்றி.

@அப்துல்லா,
ஓ நீங்க அவ்வளோ யூத்தா..
:-))))))))

@பாலாசி,
நன்றி தம்பி.

@பிரபாகர்,
நன்றி பிரபா.

@ நாஞ்சில் பிரதாப்,
ரமேஷ் விநாயகம்னு நினைக்கிறேன்.

@பாலகிருஷ்ணன்,
இது மீள் பதிவு நண்பரே, இதை முதலில் பதிவிட்டபோது வித்யாசாகர்,பரத்வாஜ் போன்றோர் பிஸியாகவே இருந்தனர்.

ஆதித்யனை மட்டும் இந்த லிஸ்ட்டில் மறந்துவிட்டேன்.நேரமிருக்கும்போது அவரையும் இதில் சேர்த்து விடுகிறேன். பரணி அவ்வப்போது சின்ன பட்ஜெட் படங்களில் எட்டிபார்த்துக்கொண்டிருக்கிறார் பெரிய அளவில் தெரிவதில்லை,

ஸ்ரீகாந்த் தேவா இவரின் எந்த பாடலை நான் மேற்கோள் காட்ட?!

தேவா ம்ம்,கானாவிற்கு முன்பான தேவாவின் இசையில் சில மறக்க முடியா மெட்டுகள் இருக்கின்றன. சேர்க்கணும்.

நன்றி.

இசைப்பிரியன் said...

பாலபாரதி அண்மையில் நாங்க,ஊதாரி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். (படங்கள் வெளியாகவில்லை பாடல்கள் வெளியாகி விட்டன). தேவா ஆசை, பாட்ஷா போன்ற படங்களுக்கு பிறகு பிரபலமானாலும் அதற்கு முன்பே அவரின் இசையில் வந்த பல நல்ல மெலடி பாடல்கள் மறக்கப்பட்டு விட்டன. 'நான் அடிமை இல்லை' விஜய் ஆனந்த், 'உன்னிடத்தில் நான்' (நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்) தாயன்பன், 'அபிராமி' மனோரஞ்சன், 'நண்பர்கள்' பாபுல் போஸ்,'சுந்தரகாண்டம்' தீபக், அம்மா பொண்ணு 'ஏகாந்தன்','புதுவயல்'அரவிந்த் நீங்கள் குறிப்பிடாத சிலர்.ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் ஒரு படத்திற்கு தான் இசையமைத்திருக்கிறார்கள்.

RAADHU SPEAKS said...

ஆகோஷின் இசையில் கோடிஸ்வரன் குறிப்பிடத்தக்கது. மனோஜ் கியானில் இன்று கியான் மறைந்து விட்டார்.மனோஜ் என்றென்றும் காதல் ,குட்லக் போன்ற படங்களை இயக்கி இசை அமைத்தார்.நட்சத்திரா உட்பட பல ஹிந்தி படங்களை தயாரித்துள்ளார்.

RAADHU SPEAKS said...

வித்யாசாகர் தெலுங்கு தமிழ் மலையாளம் ஹிந்தி என 150 படங்களை தாண்டி விட்டார்.தற்போது மலையாலத்தில் பிஸியாக உள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அவரின் மலையாள பாடல்களை கேட்டு பாருங்கள்்,தமிழ் இசை ரசிகர்கள் என்னென்ன இழந்துள்ளோம் என தெரியும்.

நாடோடி இலக்கியன் said...

@RAADHU SPEAKS,
வித்யாசகரின் மலையாளப் பாடல்கள் நிறைய கேட்டிருக்கிறேன். 90களின் இறுதில் அவரின் மலையாளப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

சம்மர் இன் பெத்லேகம் படத்தின் ஒரு ராத்ரிகூடி விட வாங்கவே என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் பாடல்.

இக்கட்டுரை 2009ல் எழுதியது, மீள் பதிவிட்டேன்.