Friday, July 4, 2014

டைம் பாஸ்-7

கூகிள் பிளஸில் அவ்வப்போது கிறுக்கியவற்றின் தொகுப்பு.

ஊடல் பொழுதுகளில் அஃறினையெல்லாம் பேசுகின்றன.
#டீ கோப்பை வைக்கப்பட்டது, நங் என்ற ஓசையுடன்.

”இளையராஜாவின் பாடல்களைக் கேட்க முடியாதே” என்று நினைக்கிறபோதுதான் மரணம் குறித்த அச்சம் வருகிறது.
#இளையராஜாயணம்

கணவனிடம் மட்டுமே கொஞ்சலாம், கெஞ்சலாம், மிஞ்சலாம் என்கிற உண்மை ஒரு பொண்ணுக்கு புரிய வருகிற நேரம் அந்த கணவன் கணவனான பிறகு ஆசிர்வதிக்கபடுகிற முதல் தருணம்.
# மிஞ்சலாம் என்பதில் தூக்கிப்போட்டு மிதிக்கலாம் வந்திடும்ல?


சோப்பு தீர்ந்துவிடும் நாட்களில் மனைவியின் சோப்பை  பயன்படுத்தும்போது மனசெங்கும் கமழ்கிறது காதலின் வாசம்.
#அதையும் தாண்டி புனிதமானது மொமண்ட்


மாலையானால் கூடு திரும்பும் பறவைகளைப்போல இரவானால் இளையராஜாவிடம் திரும்புகிறது நெஞ்சாங்கூடு.
#இளையராஜாயணம்

அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவதென்பது மன்மதலீலையை வெல்வதற்கு ஒப்பானதாய் என்னளவில்.
#வேண்டாம் மைண்ட் வாய்ஸ் தெளிவா கேட்குது.

ராமராஜனுக்கு அப்புறம் ரொம்ப நல்லவன்னா அது நாதஸ்வரம் கோபிதான்.
#விருச்சிககாந்தின் முன்னோடி ஸ்ட்ரைட்டா ஹீரோதான்.

நேற்றுபோல் இன்று இல்லையாம்
இன்று போல் நாளை இல்லையாம்
வாரம் முச்சூடும் ஒரே மாதிரிதான் தெரியுது.
#கூலிக்கு குப்பை கொட்டுபவனின் பிழைப்பு

சாயலைக் குறித்த பிரக்ஞை இல்லாதவனின் உலகில் கழுதைகளுக்கான இடம் இருப்பதில்லை.
#எல்லாமே குதிரைதான்

பழகிய பாதையில்தான் பயணம்,
எங்கோ ஆழமாய்
நினைவுகளின் நங்கூரம்.
#பறத்தல் ஆசை


எதுக்காவது எரிச்சல் படலாம்; எல்லாத்துக்குமே என்றால் குழப்பம் உலக இயக்கத்தில் இல்லை,உங்கள் உள்ளத்தின் இயக்கத்தில் என்றறிக.
#தத்துவமாமாம்

பறவைக்கு சிறகு அழகு
பறவைக்கா என்றால் இல்லை.
#பறவையே வந்து உன்னாண்ட சொல்லுச்சா?

ஒத்த ரசனையுடைய நண்பர்களை புதிதாய் பெறும்போது இருக்கும் சிக்கல், தேய்ஞ்சு போன ரெக்கார்டையே திரும்ப திரும்ப தேய்க்க வேண்டியதாய் இருப்பதுதான்.
#ஆனாலும் சொறிய சொறிய சொகமாவுல்ல இருக்கு.

தம்பியா பிறந்தவன் கல்யாணமும், ஐ.ஆர்.சி.டி.சியில் டிக்கெட் புக் பண்ணுவதும் ஒண்ணுதான்..
#ஆல்வேஸ்_இன் _வெயிட்டிங்_லிஸ்ட்

சில நேரங்களில் சில மனிதர்கள்.
#பல நேரங்களில் பல ’நான்’கள்

”இனியும் வாழணுமா” என்கிற எண்ணம் ரசம் சாதத்திற்கு அவிச்ச முட்டையை தொட்டுக்க வைக்கும் தருணத்திலும் வரலாம்.
#என்னமோ போடா மாதவா

அட்டகாசம் என்பதன் சுருக்கமே ஆஸம்.
#செம, என்னா கண்டுபிடிப்பு

Wednesday, February 26, 2014

புரியுதா புதிர்-2

1



2



3



4


குறிப்பு: 

1.இட வலம்,வல இடம்,கலைந்து என எப்படியும் இருக்கலாம்.

2.எழுத்துப் பிழை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.ஓசையை வைத்து சில குறிப்புகள் இருக்கலாம்.

3.சில படங்களை இணைத்து பொருள் கொள்ள வேண்டும்.

Wednesday, February 5, 2014

புரியுதா புதிர்..


புதிர்-1 


புதிர்-2


புதிர்-3


புதிர்-4




புதிர்-5



குறிப்பு: விடைகள் இட வலம்,வல இடம்,கலைந்து என எந்த ஆர்டரிலும் இருக்கலாம்.

Thursday, January 23, 2014

80’s - 90's சினிமா டெம்ப்ளேட்

ஊரில் பெரிய பண்ணையார், அவருக்கு பட்டணத்தில் படிக்கும் ஒரு மகள் இருப்பார். மகன்கள் இருந்தாலும் அவர்கள் டம்மி பீஸாகவே இருந்து தங்கச்சி சொல்வதே வேதவாக்காக நினைத்து வாழும் ஆத்மாக்களாக இருப்பார்கள். கல்லூரி விடுமுறையில் பண்ணையாரின் மகள் தனது தோழிகளான நான்கு சப்பை ஃபிகர்களோடு சொந்த ஊருக்கு வருவார். அதே ஊரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து என்ன வேலை பார்க்கிறார் என்பதே சொல்லப்பாடாத ஹீரோவிடம் ‘ஏய் மேன்’ என்று சொடுக்கு போட்டு அழைத்து தனது பண்ணையார் மகள் செல்வாக்கைக் காட்டுவார். அடுத்த நொடியிலிருந்து ஹீரோவிற்கு வேலை கிடைத்துவிடும், அதாவது பண்ணையார் மகளின் திமிரை அடக்குவதையே முழுநேர வேலையாகக் கொண்டு களத்தில் குதித்துவிடுவார்.

இந்த இடத்தில் ஹீரோயினை சீண்டி ஹீரோ தனது நண்பர்களோடு ஒரு பாட்டு பாடியே ஆகவேண்டும்.இங்கே ஹீரோவிற்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு 50 லிருந்து 70 வயது வரை குறைந்த பட்சம் இருக்க வேண்டும். ஏனெனில் எப்படி படு மொக்கை ஃபிகர்களை தோழிகளாக வைத்தால்தான் சாத மொக்கை ஃபிகரை ஹீரோயினா ஆடியன்ஸான நாம் ஏத்துக்குவோமோ அதே போல 40-ல் இருக்கும் ஹீரோவை இளமையாகக் காட்ட இந்த டெக்னிக் ,அதெல்லாம் தொழில் ரகசியமாமாம்.

பாட்டு முடிந்ததும் ஹீரோயின் ஹீரோவைப் பார்த்து,”யூ யூ யூ” என்று கோபமாய் மூன்று முறை  சொல்ல வேண்டும்.மேலும் ‘இடியட்’, ’ஸ்கவுன்ட்ரல்’,’ஸ்டுப்பிட்’,’கெட் லாஸ்ட்’ போன்ற அறிய சொற்களை அவ்வப்போது உதிர்ப்பதில் ஹீரோயின் புலமை வாய்ந்தவராகவும் இருப்பார்.இதன் மூலம் ஹீரோயின் பெரிய படிப்பு படித்தவர் என்பதை பார்வையாளனுக்கு சூசகமாக கடத்துகிறார்கள் இயக்குனர்கள். அந்த வகையில் அவை தவிர்க்க முடியாதவை ஆகின்றன. 

தனது ஆங்கிலப் புலமையை நிரூபித்துவிட்ட ஹீரோயின் அதே கோபத்தோடு கிளம்பிப்போய் ஹீரோ தன்னிடம் செய்த ரவுஸை பண்ணையாரிடம் போட்டுக் கொடுத்து விடுவார். அதுவரை சின்ன வீடுகளுக்கு போய் வருவதை மட்டுமே செய்து கொண்டிருக்கும் பண்ணையார், ஹீரோவை பழி வாங்கக் கிளம்பிவிடுவார். எப்படின்னா சொதப்பலான அடியாட்களோடு படு சொதப்பலான பிளான்களை போட்டு ஹீரோவிடம் வரிசையா பல்ப் வாங்கிகிட்டே இருப்பார். கட்ட கடைசியா ஒரு சுமாரான பிளானை, இசையமைப்பாளரின் பி.ஜி.எம் உதவியோடு படு பயங்கர பிளானாய் நம்மை நம்ப வைத்து இறுதி பல்புக்கு ரெடியாகிவிடுவார். அதுவும் பல்பாத்தான் இருக்குமென்று நூறு சதவிகிதம் தெரிந்தாலும் வெட்கமே இல்லாமல் நாமும் சீட்டு நுனியில் குந்தி பார்க்க ஆரம்பிச்சிடுவோம்.

இதற்கிடையில் ஹீரோவோட ஒரு மொன்னை ஃப்ளாஷ் பேக்கை அந்த ஊரில் உள்ள ஒரு பாவப்பட்ட கேரக்டர் மூலமா அறிந்துகொண்டோ அல்லது ஹீரோவின் உதவும் குணத்தைப் பார்த்தோ ஹீரோவை லவ்ஸ்விட ஆரம்பித்து இரண்டு டூயட்கள்,ஒரு சோகப் பாடலை பாடி முடிச்சிருக்கும் ஹீரோயின், இந்த பிளானை நேரடியாகவோ அல்லது இதற்கென்றே பிரத்யேகமாக எண்டராகும் ஒரு வேலையாளின் மூலமாகவோ ஹீரோவிடம் சொல்லிவிடுவார்.

ஹீரோவும், ஹீரோயின் சொன்ன இடத்திற்குப் போய் அந்த படு பயங்கர பிளானான ஹீரோவின் அப்பா,அம்மாவை கட்டி வைத்திருக்கும் குடோனிலிருந்து அவர்களை மீட்டு வெற்றிக் கொடி நாட்டிவிடுவார்.(ஹீரோவோட தங்கையை பண்ணையாரோ அல்லது அவரது ஆட்களோ ரேப் செய்ததால் தங்கை தூக்கில் தொங்கியதையெல்லாம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை).அங்கே நடக்கும் கலவரத்தில் ஹீரோவிற்காக செதுக்கி கூரா வைத்திருக்கும் ஆப்பில் பண்ணையார் குந்தி உயிரிழந்து விடுவார்.அப்பாலிக்கா ஹீரோயின் குடும்ப குத்துவிளக்காகி ஹீரோவின் குடிசை வீட்டுக்கு போயிடுவார்.

இதே டெம்ப்ளேட்டில் ட்விஸ்ட் ஒண்ணும் வைப்பாய்ங்க அதாவது ஹீரோவும் ஹீரோயினும் அத்தை புள்ள மாமா புள்ள உறவு முறையாக்கும்னு.

1980லிருந்து 1995 வரையிலான தமிழ் சினிமாவில் ரஜினியிலிருந்து ராமராஜன் வரை இந்த டெம்ப்ளேட்டிற்கு தப்பிய ஹீரோக்கள் இல்லை .

Monday, July 15, 2013

டைம் பாஸ்-6


வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நமக்கு தரப்படும்ஆப்ஷன்கள் பௌலிங்கா?, ஃபீல்டிங்கா? வகையையிலேயே இருக்கின்றன.
# இந்த ஸ்டேட்டஸ் உங்களுக்கு புடிச்சிருக்கா? இல்லை நல்லாயிருக்கா?

சொல்வதெல்லாம் உண்மையில் குந்தியிருக்கும் ஜட்ஜம்மாக்களிடம், 90களின் கவுண்டமணியை எதுனா ஒரு பஞ்சாயத்துக்கு பிராது கொடுக்கச் சொல்லி கற்பனை செய்து பார்த்து திருப்திபட்டுக்கொள்கிறேன்.
#கொண்ட போட்டவளுக்கெல்லாம் நான் தீர்ப்பு சொல்றதில்ல

மற்றவரை குறைகளோடு நேசி;குறை உன்னிடமே என்றால் கொஞ்சம் யோசி.
# ஆகையினால எல்லோரும் என்னை நேசிங்க.

எம்பொண்டாட்டிக்கு இத்தனை வகை சட்னி வைக்க தெரியுங்கறதே இன்னிக்குத்தான் தெரியும்.
#மச்சான் வந்திருக்கான்.


பகல் தூக்கம், அன்றைய மீதியை நரகமாக்கும்.
#ஆனா தூங்கும்போது சொர்க்கம்யா.

சிறைதான் என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும் சிறகுகள். 
# டேய் சத்தியமா புரியலடா

வயிறு சரியில்லையென்று மணத்தக்காளி சாம்பார் வச்சு கொடுத்தாய்ங்க. அதைப் பார்ததிலிருந்து மனசு சரியில்லை.
#என் கடன் அசைவம் சாப்பிட்டுக் கிடப்பதே

முகத்துல மொளச்சா முகமுடின்னுதானே சொல்லணும், அப்புறம் ஏண்ணே தாடிங்கிறாய்ங்க.
#மாத்தி யோசி என்ற பதத்திற்கான விதையை அனாயசமாய் தூவிய கேரக்டர். 


” டேய் மச்சி நீ எப்பயும் போகாத ஊருக்கே வழி சொல்ற”
“ங்கொய்யால போகாத ஊரு என்ன, போகாத நாட்டுக்கே வழி சொல்லுவேன்..” 
# கூகிள் மேப்ஸ்

நாம் சென்ற பாதையில் இதோ போய்க்கொண்டிருக்கிறேன்,சில கணங்களில் நானும்
சில கணங்களில் நாமுமாய்.

#அப்படியே போய்க்கொண்டே இரு,திரும்ப வந்துறாத

எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ பழகுதல் என்பதுதான் இப்போதைய எனது எதிர்பார்ப்பு.
#இதுக்கு பேருதான்  விசு’வாசம்

எந்த சொல்லிற்குள்ளும்  புதைந்திருக்கும்  என்பதால் கோபமும்கூட ஒரு  கன்னிவெடிதான்.
#வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம எங்கேயோ போய் வாங்கி கட்டிகிட்டு வந்து இங்க தத்துவம் சொல்லிகிட்டு இருக்கான்.

டைம் பாஸ்-5

கூகிள் பிளஸில் கிறுக்கியவற்றின் தொகுப்பு

நாவை அடக்க, நானை அடக்கு.
#சொல்லிட்டாருப்பா சாக்ரடீசு

”எக்ஸ்கியூஸ் மீ” என்பது ” கொஞ்சம் நகர்ந்துக்கோங்க ” என்கிற அர்த்தத்திலேயே பெரும்பாலும் சொல்லப்படுகிறது.
#அவதானிப்பு

நெருக்கடிகளில் எண்ணத்தைப் பேசாமல் என்னத்தையாவது பேசித் தொலைக்கும் இந்த பொல்லாத நாக்கு.
#  நீ வாயைத் தொறந்தாலே நெருக்கடிதானடா

தெரியாமல் செய்துவிட்ட தவறுக்கான நியாயத் தேடல்களில் தெரிந்தே பிறக்கிறது மற்றொரு தவறு.
# தெரியாம கிளிக்கி இங்க வந்தது தப்புத்தான் .

ஹோட்டல் மெனு கார்டில் , மாதத்தின் ஆரம்பத்தில் ஐட்டங்களை பார்த்தும், மாதக் கடைசியில் விலையைப் பார்த்தும் ஆர்டர் செய்வதை வழக்கமாக கொண்டவனென்றால் நீயும் என் நண்பனே.
#இப்படி நல்லதா பேசிப் பழகு

கேபிள் கனெக்‌ஷன்,செய்தித் தாள் ,பால் பாக்கெட் மாதிரி இப்போ எங்க வீட்டில் மாதச் செலவுகளில் இடம் பிடித்திருக்கும் புது வரவு(செலவு) ரிமோட் கண்ட்ரோல், டேட்டா கார்ட் மற்றும் செல் போன் பேட்டரி.
வாலு வாழும் வீடு

காட்டிலே காயும் நிலவை கண்டு கொள்ள யாருமில்லை இந்த வரியை கேட்கும்போதெல்லாம் தூர்தர்ஷன் நினைவும் கூடவே வந்துவிடுகிறது.
#எப்புடி இருந்த நீ இப்படி ஆயிட்ட

பழி வாங்க காத்திருக்கும் தருணங்கள் உன்னை பழிவாங்கும்.
# என்னை பழி வாங்கினாலும் பரவாயில்லடா கையில என்னைகாவது மாட்டாமயா போயிடுவ.

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நிறைமாத கர்ப்பிணிகளாக சிலர் வருட கணக்கில் வலம் வருகிறார்கள்.
#நிறைய மாத கர்ப்பிணிகள்

”அதுல பாருங்க”
 #வி.கே.ராமசாமியோடு வழக்கொழிந்து போய்விட்ட வசனம்.

தப்பை என்னைக்காவது  தட்டி கேட்டுறுக்கியா?
#கேட்டிறுக்கியாவா? தப்பை தட்டி கேக்கும்போது வர்ர அந்த டண்டனக்கு டனக்கு னக்கு என்னா ரிதம்யா, சூப்பரா இருக்கும்.


தன்னை வெல்லுதல் என்பது கடினமான காரியமாம்.
bubble buster கேமில் நேற்றைய எனது ஸ்கோரை இன்று நானே சர்வ சாதாரணமாய் வென்றேன் அப்படி ஒண்ணும் கஷ்டாமா இல்லையே.
#லூசு எதை எதோட கோக்குது பாரு.

கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன..
#ஆமாமா, நிச்சயிக்கப்படும்போது சொர்க்கமாத்தான் தெரியும்.


அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
#ரைட்டு, அர்த்த ராத்திரியில் மழை பெய்தால் குடை பிடிப்பவனெல்லாம் வாழ்வு வந்தவன் என எடுத்துக்கலாமா?

ஸ்ரீதேவி,கஸ்தூரி என பாட்டிகளை வைத்து விளம்பரங்கள் எடுப்பவர்கள் மோகன்லால் ரசிகர்களாக இருக்க வேண்டும் என்று அவதானிக்கிறேன்.
#ஆண்ட்டி ஹிரோ

மனக்கடலில் மட்டும் அலைகளின் சீற்றம் ஆழத்தில்தான் அதிகமாய்.
#ஆழக் கடலில் தேடிய தத்துவ முத்து

ரயில்வே ஸ்டேஷன்களில் ”காப்பி காப்பி” என்று கூவி, ’இது காஃபியின் காப்பியேயன்றி  ஒரிஜினல் அல்ல’ என்று விற்பவர்களே உங்களுக்கு சூசகமாக  உணர்த்திவிடுகிறார்கள்.
# இனி காஃபி சரியில்லை என்று புலம்புவதை விடுத்து காப்பியை காப்பியா குடிக்கணும் சரியா?

நாளும் ஒரு நான்.
#ம்க்கும் நாளும் ஒரு நீயா? நீ, நேரத்துக்கு ஒரு நீ.

முரண் படுதல் மற்றவரிடத்து எனும் போது இயல்பாய் ; நம்மிலிருந்தே எனும் போது அவஸ்தை.
#ஆமாமா அவஸ்தையோ அவஸ்தை இனி இங்கே வருவேன்

Friday, May 17, 2013

இளையராஜாவின் இசையில் சுசீலா

என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் பின்னணி பாடகி சித்ரா. குறிப்பாய் ”பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா”, ”மலரே பேசு மௌன மொழி”,”சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா”  போன்ற அவரது ஆரம்ப கால பாடல்களில் இருந்த அந்த குழந்தைத் தனமான உச்சரிப்பின் மீது பெரிய மயக்கம் உண்டு. 

அவரைவிடுத்து மற்ற பாடகிகளை அவர்கள் பாடியிருக்கும் எல்லா பாடல்களிலும் நான் ரசித்தது இல்லை . அதே நேரத்தில் சில பாடல்கள் இவர்களைத் தவிர வேறு யாரும் இத்தனை சிறப்பாய் பாடியிருக்க முடியாது என்றும் அல்லது அந்த பாடலை வேறு குரலில் யோசிக்கவே வேண்டியதில்லை என்கிற மாதிரியும் தோன்றும். உதாரணமாய் சொர்ணலதாவின் என்னுள்ளே என்னுள்ளேவையோ, ஜானகியின் ராசாவே ஒன்ன நம்பியையோ ,உமாரமணனின் மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவேவையோ,வாணி ஜெயராமின் என்னுள்ளில் எங்கோவையோ இன்னொரு குரலில் என்னால் யோசிக்க முடியாது.

இளையராஜா பீக்கில் வந்ததும் எம்.எஸ்.வி காலத்தில் தனியாவர்த்தனம் செய்து கொண்டிருந்த சுசீலாவிற்கு கிள்ளியும், ஜானகிக்கு அள்ளியும் வழங்க ஆரம்பித்ததில் பின்னணி பாடுவதில் முன்னணிக்கு வந்தார் ஜானகி . அள்ளி வழங்கியதாலோ என்னவோ ஜானகி பாடிய சில பாடல்கள் அவருடைய குரலுக்கு அத்தனை பொருத்தமில்லையோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. 

ஜானகியின் குரல் குழந்தையாய்,குமரியாய்,கிழவியாய் கொஞ்சி,கெஞ்சி,சிணுங்கி என ஜாலம் செய்து  எக்ஸ்பிரஷனில் ஸ்கோர் செய்துவிடும் எனினும் சில பாடல்களில் ஒரே பாடலிலேயே இரண்டு கதாபாத்திரத்திற்கு பாடுவது போல வேறுபட்டு கேட்கவும் செய்யும். ஜானகி பாடிய சில பாடல்களை வேறு யாராவது பாடியிருக்கலாமோ என்கிற எண்ணத்தை உண்டு பண்ணவும் செய்திருக்கிறது. மாறாக வெகு சொற்பமான எண்ணிக்கையிலான பாடல்களையே ராஜாவிற்கு சுசீலா பாடியிருந்தாலும் அந்த பாடல்கள் அனைத்திற்குமே மாற்றாய் வேறொரு குரலை யோசிக்க முடியாதபடியாய் இருக்கும். சுசீலாவின் குரல் ஜானகியின் குரலினைப்போல எக்ஸ்பிரஷன்ஸில் ஜாலங்கள் காட்டாவிட்டாலும் குரலினிமை என்கிற தன்மையில் அடித்து செல்லும். போலவே சில வார்த்தைகளை அவர் உச்சரிக்கும் தொனிகூட வசிகரமாய் இருக்கும். அப்படி ராஜாவிடமிருந்து கிடைத்த வாய்ப்புகளில் சிக்ஸர் அடித்த சுசீலாவின் பாடல்கள் சில youtube இணைப்புடன்.

காலைத் தென்றல் பாடி வரும் :

கற்பூர பொம்மையொன்று:

மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதை கேட்டு:

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ:

பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்:

சோலை புஷ்பங்களே:

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு:

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்:

அரும்பாகி மொட்டாகி பூவாகி:

தில் தில் தில் மனதில்:

முத்துமணி மால:

Tuesday, April 9, 2013

வண்டல் மண் கதைகள்-6

ஆலக்காட்டுக்கு எப்படியாலங்க போகணும்?” குரலைக்கேட்டு தனது டீக்கடை கல்லாவில் உட்கார்ந்திருந்த கோனார், படிச்சிக்கிட்டு இருந்த தினத்தந்தியிலிருந்து தலையை நிமித்தாம, மூக்குக் கண்ணாடிக்கும் புருவத்துக்கும் இடையில பார்வையை மட்டும் நிமுத்திப் பார்த்தார்.

வெள்ளையுஞ் சொள்ளையுமாக ஸ்ப்ளண்டர் ப்ளஸ்ல உட்கார்ந்தபடி கோனாரின் பதிலை எதிர்பார்த்துக்கிட்டு நின்னவனுக்கு ஒரு முப்பத்தஞ்சு வயசிருக்கும்.

“ஆலக்காட்டுக்கு வழி” என்று மீண்டும் ஆரம்பித்தவனுக்கு, “ஆலக்காட்டுக்கா, இந்தா இப்படியே ஆத்துக் கரையிலேயே போனியள்னா ரெண்டாவது பாலத்தோட தெக்கால திரும்பிக்கிருங்க” என்ற கோனார்,தொடர்ந்து “அந்தா அங்ன பஸ்டாப்ல கால்ல கட்டு போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்காரு பாருங்க, அவரு ஆலக்காடுதான், பாவம் ரொம்ப நேரமா பஸ்ஸுக்கு ஒக்காந்திருக்காரு, முடிஞ்சா அவரையும் ஏத்திக்கிட்டு போறியளா?” என்று நிழற்குடையில் உட்கார்ந்திருந்த சிவலிங்கத்தை காட்டிவிட்டார்.

“அதுக்கென்ன ஏத்திக்கிட்டாப் போச்சு” என்றவன் நன்றிங்கங்கிற மாதிரி கோனாரைப் பார்த்து தலையாட்டிவிட்டு வண்டியை பஸ் ஸ்டாப்பை நோக்கி விட்டான்.

நிழற்குடை கட்டையில் கால் ரெண்டையும் மடக்கி குத்துக்காலிட்டு ஐயப்பஞ்சாமி கணக்கா உட்கார்ந்தபடிக்கு பஸ் வராத எரிச்சல் உள்ளேயும், கொளுத்தியெடுக்கும் வெயில் வெளியேயும் சேர்ந்து அனத்தியதை, கையில் வைத்திருந்த குத்தாலத் துண்டைக் கொண்டு விசிறி விரட்டிக்கொண்டிருந்த சிவலிங்கம், ”ஆலக்காட்டுக்குத்தான போறிய? ஏறிக்கங்க” என்று யாரோ முன்ன பின்ன தெரியாதவன் சொன்னதைக் கேட்டதும் , விசுறுவதை நிறுத்தி, குத்துக்காலை பட்டுன்னு தொங்கவிட்டு, அறிக்காத தலையை சொறிந்துமென மாறி, ”ஆமா, ஆலக்காட்டுக்குத்தான் போகணும், ஆனா தம்பி யாருன்னு புடிபடலியே” என்று வழிசலாய் சிரிச்சுக்கிட்டு இருக்கையிலேயே, ”ஆலகாட்டாரேய்ய்ய்ய்” என்ற கோனாரின் குரல் வரவும், திரும்பினான்.

தினத்தந்திக்குள்ள விரலை வச்சபடிக்கு கையை ஆட்டி ஆட்டி ”நாந்தான் சொன்னேன், ஏறிக்கங்க” ங்கிற மாதிரி சைகை செய்ததை புரிஞ்சிக்கிட்ட சிவலிங்கம், தலையை ஆட்டிக்கிட்டே இன்னும் பெரிசா வழிஞ்சபடி, வண்டியில் ஏறிக்கொண்டு, ”வரட்டுமா” ங்கிற மாதிரி பதில் சைகை காட்டினான்.

சட்டுன்னு தினத்தந்திக்கு பார்வையைத் திருப்பிய கோனார், வண்டியில ஏறிய சிவலிங்கத்திடமிருந்து நினைப்பைத் திருப்ப கொஞ்ச நேரம் பிடிச்சிச்சுங்கிறது, அவர் மொகத்தில தேங்கிக் கிடந்த சிரிப்பை வச்சே கண்டுக்க முடிஞ்சிது. மனசப் பய மனசு சின்னதா யாருக்கும் ஒரு ஒத்தாசை பண்ணாலும் என்னாமா பூரிச்சுப் போவுது.

”என்னா கால்ல கட்டு?” ஸ்பெளண்டர்காரன்தான் ஆரம்பிச்சான்.

“அதுவாப்பா, நாலு நாளைக்கி முந்தி எள்ளுக்கா அறிக்கையிலெ கட்டை குத்திப்புடிச்சு, ஓத்திரியம் தாங்காய்க்கல, அதான் ஓபில காட்டி மருந்து வச்சிக்கிட்டு வாறேன்” என்ற சிவலிங்கம்,”வெகு நேரமா குந்தியிருக்கேன் உள்ள போன பஸ்ஸு இன்னும் திரும்பல, சீர் கெட்டு பொயித்துதான்னு தெரியல, கால் சரியாயிருந்தாவா இப்படி குந்தியிருக்கேன், இந்நேரம் முனியங்கோயிலோட ஒத்தயடி பாதைய புடிச்சு வீட்டுக்கு போயி பழைய ஆளாயிருப்பேன்” என்றான்.

“சமையல் கான்ராக்டரு செல்லத்துரை இருக்காரே அவர தெரியுமா?”

“ஆமா சொல்லுங்க , அவ்வொ வீட்டுக்கிட்டதான் நம்ம வீடு, தொரய பாக்கத்தான் போறியளா?”

“ஆமாமா, நமக்கு ஊரு செவவிடுதி , இதுக்கு முந்தி ஒங்க ஊருக்கு வந்ததில்ல,ஆனா சமையல்காரர் நம்ம ஊருக்கு வந்து போவாரு, அப்புடி பழக்கம்” என்று நிறுத்திக்கொண்டான் ஸ்பெளெண்டர்.

எதுக்காகப் பாக்க போறான் என்று சொல்லுவான்னு எதிர்பார்த்த சிவலிங்கத்துக்கு மேற்கொண்டு ஒண்ணுஞ் சொல்லாம வண்டிய ஓட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருந்தவனின் செயல் கொஞ்சம் ஏமாத்தத்தை தந்துச்சு.

கொஞ்ச நேரம் கம்முன்னு வந்த சிவலிங்கம், “வீட்ல கல்யாணம் காச்சியா இருக்கும், சமையலுக்கு ஆடரு கொடுக்க போறிய போலருக்கு?” என்று மறுபடியும் ஆரம்பிச்சான். தனக்கு சம்பந்தமில்லாத விஷயந்தான்னாலும் மனுசப்பய மனசாச்சே, சும்மா இருக்க விடுமா,அதான் ஒரு கொக்கியைப் போட்டான்.

“கல்யாண விசியந்தான் , ஆனா சமையலுக்கு ஆடரு கொடுக்கப் போவல, வேற ஒரு விசியமாப் போறேன் ” என்று மறுபடியும் சிவலிங்கத்தின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு கப்சிப்புன்னு வண்டியை ஓட்டிக்கிட்டு போனான்.

”சரி, இதுக்கு மேலயும் நோண்டிக் கேட்டா அசிங்கமா போயிரும்” என்று நினைத்த சிவலிங்கம், ”அவனா சொன்னா கேட்டுக்குவோம்”ங்கிற மாதிரி மேற்கொண்டு பேசாமல் வந்தான்.

சிவலிங்கத்தின் நெனப்பு சரியாவே இருந்துச்சு, “செல்லக்கோட்டைக்காரரு சுந்தரம்னு , ஒங்கூர்ல பொண்ணு எடுத்தவரு, அங்கய பொண்ணோட காணியா இருக்காராம்ல, அவரு வீடு எங்ன இருக்கு?” என்று மீண்டும் ஆரம்பித்தான் ஸ்ப்ளெண்டர்.

“ஆமாமா, வடக்கி வீட்டு சுந்தரம், நம்ம வீட்டுக்கு பத்து வீடு தள்ளிதான் அவ்வொ வீடு. சொல்லுங்க தெரியும்”

“எப்புடி குடும்பம்”

என்ன திடீன்னு வடக்கி வீட்டப் பத்தி விசாரிக்கிறான் என்று யோசிச்சிக்கிட்டே,”ம்ம் நல்ல குடும்பம்தான், பத்து பாஞ்சு மா நெலம் இருக்கு, முந்தி கொஞ்சம் நொடிச்சி போயிருந்தவோ, இப்போ சுந்தரம் தலப்பட்டு கொஞ்சம் காசு பணம்னு பச புடிப்பாத்தான் இருக்கவோ” என்று சொன்னவன், “ஆமா,எதுக்கு இப்போ அவ்வூட்ட பத்தி விசாரிக்கிறிய , கல்யாண விசியும்னு வேற சொன்னிய , அவ்வூட்டு பொண்ண கேக்கப் போறியளோ?” என்று விசியத்தை நெருங்கிவிட்ட திருப்தியில் கேட்டான்.

“அதான் பட்டுன்னு புரிஞ்சிக்கிட்டியளே, நம்ம தம்பி ஒருத்தனுக்கு பொண்ணு பாத்துக்கிட்டு இருக்கோம், பாப்பாநாட்டு புரோக்கர்கிட்ட அந்தப் பொண்ணோட சாதகம் இருந்திச்சு, அதான் காண்ட்ராக்டர் செல்லத்துரைக்கிட்ட சாரிச்சிட்டு போவலாம்னு வந்தேன்”.

“அப்படி சொல்லுங்க சேதிய ” என்ற சிவலிங்கம் , ”நல்ல்ல்...ல குடும்பம்தான்” என்று இழுத்து, ”எதுக்கும் தொரைக்கிட்டயும் கொஞ்சம் நல்லா சாரிச்சுகிடுங்க” என்று ஒரு மாதிரி சொன்னான்.

“என்னங்க இன்னமுட்டும் நல்ல குடும்பம்னிய, இப்ப என்னமோ இழுத்தாப்ல பேசுறிய”

“அப்படியில்ல, கல்யாண விசியம் எதுக்கும் ஒண்ணுக்கு ரெண்டு தடவ சாரிச்சிக்கிறது நல்லதுன்னு சொல்றேன்” என்ற சிவலிங்கத்தின் பதிலில் ஏதோ விசியம் இருப்பதை புரிஞ்சிக்கிட்ட ஸ்ப்ளெண்டர்,

“இங்கருங்க ஏதோ இக்கு வச்சே பேசுறிய, என்னான்னு சொல்லுங்க, நீங்களே சொல்றிய நல்லா சாரிச்சுகிடுங்கன்னு,தெரிஞ்சத சொல்லலாம்ல” என்று சேதியில கவனமா இருந்தவன் ரோட்டில் இருந்த சின்னக் குழியை கவனிக்காம வண்டியை விட்டுவிட்டான்.

வண்டி குழியில் இறங்கி ஏறி தடுமாறியதில், ”என்னத்த ரோடு போடுறாய்ங்க, ஒரு மழைக்கு தாங்கலைங்கிது, ரோட்ல ஆரம்பிச்சு புள்ளய படிக்கிற பள்ளியோடம் வரைக்கும் இந்த பவுசுலதான் இருக்கு” என்று பேச்சை மாத்தினான் கேட்டக் கேள்விக்கு புடிகொடுக்காத சிவலிங்கம்.

இந்த முறை ஸ்ப்ளெண்டருக்கு இருப்புக் கொள்ளவில்லை, “ அது இருக்கட்டும்ங்க, இப்ப நம்ம பேசிட்டு இருந்த விசியத்துக்கு வாங்க, எதுவானாலும் பட்டுன்னு தேங்கா ஒடச்ச மாதிரி சொல்லுங்க” என்று சொன்னவன் வண்டியை அருகில் இருந்த நாவ மரத்துக்கிட்ட நிறுத்தினான்.

”வசதி வாய்ப்புல கூட கொறச்சு இருந்தாலும் பிரச்சனை இல்லை, கௌரவமான குடும்பமா இருந்தாப் போதும், வேற பெருசால்லாம் எதிர்பார்ப்பு இல்லங்க, பொண்ணு கிடைக்கிறது ரொம்பக் கடுசா இருக்குல்ல அதான்” என்றவன், பாக்கெட்டிலிருந்து கோல்ட் ஃப்ளேக் ஒண்ணை எடுத்து பத்த வச்சபடி, ”பொண்ணு எதுவும் அப்படி இப்படி ” என்று இழுத்தான்,

“சே சே பொண்ணு மேலயெல்லாம் கொற சொல்ல வாய்க்காது, ஆனா..” என்ற ஏதோ சொல்ல வாயெடுத்த சிவலிங்கம், பட்டுன்னு சுதாரிச்சு “ யார பத்தியும் நாம ஒண்ணு சொன்னம்னு இருக்கப்டாது, என்னைய கேக்காதிய, அதான் தொரைய பாக்கப் போறியல்ல அங்க கேட்டுக்கிருங்க" என்று மடையடச்சு பேசினான்.

"சரிங்க என்னத்தையோ மறைக்கிறிய, நல்ல விசியமா இருந்தாத்தான் சொல்லியிருப்பியளே, அப்புறம் என்னத்த நான் அங்க வந்து சாரிக்கிறது" என்றபடி புகையிற சிகரெட்டை கையில் வச்சபடிக்கே கட்டைவிரலால் நெத்தி வேர்வையை வழிச்சு சுண்டிவிட்டவனின் பார்வை கீழே எதுவுமே இல்லாத கட்டாந்தரையில் குத்தியிருந்தது, அவன் தீவிரமான யோசனையில் இருப்பதைக் காட்டியது.

”எங்கே இவன் இங்கிட்டாலயே திரும்பிருவானோ, வெயிலு வேற உச்சிக்கு வந்திடுச்சு” என்று தனக்குள்ளயே குழம்பிக்கிட்டு இருந்த சிவலிங்கம், " அடியெடுத்து வைக்கறதே பெருஞ் செரமமா இருக்கு" என்று தன்னை இப்படியே விட்டுவிட்டு போய்விடக்கூடாதேங்கிற கவலையில் கொஞ்சம் கூடுதலாய் வலியை வெளிக்காட்டியபடியே கிழே மறுபடியும் ஐயப்பஞ்சாமியாய் உட்கார்ந்தான்.

ஏதோ ஒரு முடிவு எடுத்தவனாய் அவசர அவசரமாய் மிச்ச சிகரெட்டையும் இழுத்துவிட்டு சிகரெட் துண்டை கீழேப் போட்டு, அட்டப் பூச்சியை நசுக்குவது மாதிரி காலை வழட்டி நெருப்பை அணைச்சவன், கட்டியிருந்த வேட்டியை கொஞ்சம் லூஸாக்கி மறுபடியும் இறுக்கிக் கட்டிக்கிட்டு, "சரி ஏந்திரிங்க, வந்தது வந்துட்டேன் ஒங்கள ஊர்ல விட்டுட்டு கெளம்பறேன்" என்றதும் அவசர அவசரமாய் வண்டியில் ஏறிக்கிட்டான் சிவலிங்கம்.

கரடி பத்தை பாலம் வர்ர வரைக்கும் எதுவுமே பேசிக்கல ரெண்டு பேரும். இந்த இடம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாலும் அட அப்படி என்னத்தைத்தான் இந்த ஆளு மறைக்கிறாங்கிறதை தெரிஞ்சிக்க ஸ்ப்ளெண்டருக்கு ஆர்வம் வந்திடுச்சு. அவன் மட்டும் என்ன வானத்திலேர்ந்தா குதிச்சான், மனுஷப்பயதானே,

“இந்த பாலத்திலதான் திரும்பணுமா?”என்று ஸ்ப்ளெண்டர்தான் மறுபடியும் ஆரம்பிச்சான்.

”இல்ல இல்ல, அடுத்த பாலம், நீங்க அங்னயே விட்டுட்டியள்னாகூட போதும்”

"இந்த இடம் சரிப்படாதுன்னு பட்டுடுச்சுங்க, இருந்தாலும் என்னா ஏதுன்னு தெரியாம போறோமேன்னுதான் கொஞ்சம் இதுவா இருக்கு" என்று ஒரு கொக்கியைப் போட்டான்.

தன்னைக் கொண்டு வந்து விடுவதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வரானே ,விசியத்தை சொல்லிடுவோமா என்று கொஞ்சம் குழம்பியபடியே வந்துக்கிட்டு இருந்த சிவலிங்கத்துக்கு, அவன் மறுபடியும் இப்படிக் கேட்டதும் வடி மடையை வெட்டிவிட்ட மாதிரி கடகடன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டான்.

“தம்பி , நீங்க பாக்கப் போற பொண்ணோட அம்மா கொஞ்சம் அப்படி இப்படி, பாஞ்சு இருவது வருஷத்துக்கு முந்தி கண்ணுச்சாமின்னு மேக்கித்தியான் ஒருத்தன் அவ்வொ வீட்டுல இருந்து வேல வெட்டி செஞ்சிக்கிட்டு இருந்தான், அவனோட பழக்கமாயி பொறந்த புள்ளதான் நீங்க பாக்கப்போற பொண்ணு. இந்த விசியம் வெளில தெரியறதுக்கு முந்தி, நம்ம சாதிக்கார பயலான தாய்,தாப்பன் இல்லாத இந்த சுந்தரத்துக்கு சொத்த எழுதிவச்சு, நாலாம் பேருக்குத் தெரியாம மூடி மறச்சி கல்யாணம் பண்ணிவச்சிட்டாய்ங்க, ஊருக்குள்ள அரச பொரசலா ஒண்ணு ரெண்டு பேருக்குத்தான் இந்த விசியம் தெரியும்” என்றவனுக்கு சட்டுன்னு ,தான் சொன்ன விசியத்தை எங்க ஸ்ப்ளெண்டர் யாருகிட்டயும் சொல்லிப்புடுவானோங்கிற பயம் வந்திடுச்சு. தனக்கு தேவையில்லாத விசயங்கள்ல தலையைக் கொடுத்துப்புட்டு பிறகு யோசிக்கிறதுதானே மனசப்பய குணம். இப்போ சொன்னதை யாருகிட்டயும் சொல்லிடக்கூடாதேங்கிற எண்ணத்தில் ஸ்ப்ளெண்டரை குளுமைப் படுத்த ”உங்களப் பாத்தா பெரிய இடத்து புள்ள மாதிரி தெரியிது ,அதான் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்” என்று சொல்லி முடிக்கவும், ஆலக்காட்டு பாலம் வரவும் சரியா இருந்துச்சு.

“தம்பி இப்படியே நிப்பாட்டிக்கிருங்க, நான் எறங்கிக்கிறேன்” என்ற சிவலிங்கம், ”உங்களுக்குள்ளயே வச்சிக்கிடுங்க தம்பி, நான் சொன்னேன்னு தெரிஞ்சா பொல்லாப்பாயிரும்” என்று வெளிறிய முகத்தோட சொன்னான்.

“சே சே, நான் யாருக்கிட்டயும் விட்டுக்கிற மாட்டேன், நல்ல வேளை, விசியத்தை சொன்னிய, சரி பாத்துப் போங்க” என்று சிவலிங்கத்தை இறக்கிவிட்டுவிட்டு ஒரே முறுக்காய் முறுக்கி மின்னல் வேகத்தில் பறந்தான் ஸ்ப்ளெண்டர்.

செட்டியார் கடையில் வெத்தலை சீவல் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு நடையை கட்டிய சிவலிங்கத்துக்கு, வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி வந்தப்பவே அவன் பொண்டாட்டி ஒப்பாரி வச்சு அழவுற சத்தம் கேட்டுச்சு, சட்டுன்னு குழப்பமான சிவலிங்கம் நடையை விரட்டி வீட்டைத் தொட்டதும், அவன் பொண்டாட்டி இன்னும் சத்தமாய் ,”ஏங்க, இந்தப் பய வடக்கி வீட்டுக் குட்டிய இழுத்துக்கிட்டு ஓடிட்டானாம்ங்க” என்று வாசலுக்கு ஓடி வந்தாள் தலைவிரி கோலமாய்.

சிவலிங்கம் சுத்தி முத்தியும் பாத்தான்,பக்கத்து வீட்டு பரமசிவம் வைக்கோல் புடுங்குற மாதிரி, கண்ணை வைக்கோல் போர்லயும் கருத்தை சிவலிங்கத்து வீட்லயுமா வச்சி நின்னுக்கிட்டு இருந்தான். தெரு பைப்புல தண்ணி புடிச்சிக்கிட்டு இருந்த காரவீட்டு சரசு, நீர் கடுப்புல சொட்டு மூத்திரம் வர கணக்குல பைப்ப கொஞ்சமா திருப்பி வச்சிக்கிட்டு தண்ணி புடிக்கிற மாதிரி நின்னுக்கிட்டிருந்தா. பாலக்கட்டையில ஒக்காந்துக்கிட்டு வேற என்னத்தையோ பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி இருந்த இளவட்டப் பயலுக சிவலிங்கத்தைப் பார்த்ததும் ஆர்வமானதை எல்லாம் கவனிச்சவன்,தம் பொண்டாட்டி கன்னத்துல ஓங்கி ஒரு அறையை விட்டு ”இப்ப என்ன எழவா விழுந்திடுச்சுன்னு ஒப்பாரி வக்கிற, மத்த நாயிவொ மாதிரி,கண்ட சாதிக்குள்ளயுமா போயி நொழஞ்சான், சாதிக்காரியோடதான போயிருக்கான்,போயி சோலியப் பாருடி” என்று மிகச் சாதாரணமாய்ச் சொல்லிவிட்டு நெனப்போட பவுசு மூஞ்சில தெரியுங்கிறதையெல்லாம் பொய்யாக்கி எப்பயும்போல வெத்தலைப் பொட்டலத்தைப் பிரிச்சபடி திண்ணையில் உட்கார்ந்தான்.

#வண்டல்_மண்_கதைகள்