Saturday, November 22, 2008

காணாமல் போன இசையமைப்பாளர்கள்:

ரொம்ப நாளைக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.இவ்வளவு அற்புதமான பாடல்களை தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன் ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இப்பதிவு.

"கண்ணுக்குள் நூறு நிலவா","புத்தம் புது ஓலை வரும்" - வேதம் புதிது,
"பொங்கியதே காதல் வெள்ளம்",”இதழோடு இதழ் சேர்க்கும் நேரம்- மண்ணுக்குள் வைரம் போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன் 90 களின் ஆரம்பத்தில் வெளியான புதிய தென்றல் திரைப்படத்திற்குப் பிறகு என்னவானார் என்பது தெரியவில்லை.இப்படத்தின் பாடல்களும் கூட நன்றாக இருக்கும். குறிப்பாக எஸ்.பி.பி மற்றும் சித்ரா ஆகியோர் இணைந்து பாடியிருக்கும் "தென்றலிலே மிதந்து வந்த தேவமங்கை வாழ்க" பாடலைச் சொல்லலாம்.

சௌந்தர்யன், நல்ல திறமையிருந்தும் ஏனோ இவரால் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.இவரது முதல் படமான சேரன் பாண்டியன் படத்தின் "சின்னத் தங்கம் ", "வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே" தொடங்கி அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட்டானவையே என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" பாடலை எழுதியதும் இவரே. இவரின் அடுத்த படமான ’சிந்து நதி பூவின் "மத்தாளம் கொட்டுதடி மனசு" இன்றும் கூட கிராமப்புறங்களில் அடிக்கடி ஒலிக்கக் கேட்கலாம் .கோபுர தீபம் படத்தின் ’உள்ளமே உனக்குத்தான்’ பாடலுக்கு கிராமத்து இசைப்பிரியர்களிடம் பெரும் வரவேற்புக் கிடைத்தது.

"உன்னை தொட்ட தென்றல் இன்று " என்ற அற்புதமான மெலடியோடு தலைவாசலைத் திறந்த பால பாரதி அமராவதியில் "தாஜ்மஹால் தேவையில்லை","புத்தம் புது மலரே", "உடலென்ன உயிரென்ன" என்ற எளிதில் மறக்க முடியாத பாடல்களை தந்து,"யாருப்பா இந்த இசையமைப்பாளர்" என்று இசைப்பிரியர்களின் புருவங்களை உயர்த்தவைத்து அத்தோடு காணாமல் போனவர்தான்.சில வருடங்களுக்கு முன்பு ”மெரிகுரிப் பூக்கள்” படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.

வி.எஸ்.நரசிம்மன்,ஒரு காலத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் இரண்டு மூன்று படங்களுக்கு தொடர்ச்சியாய் இசையமைத்தவர்.அச்சமில்லை அச்சமில்லை படத்தின் "ஆவாரம் பூவு","ஓடுகிற தண்ணியிலே" பாடல்கள் இன்றும்கூட தொலைக்காட்சி நேயர்களால் விரும்பி கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பாடல்களை முதன் முதலில் கேட்டபோது இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசையில், சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தின் " செண்பகப் பூவைப் பார்த்து" பாடலும் அவரது இசைத் திறமையை எடுத்துக் காட்டிய ஹிட் பாடலே.

"என்ன அழகு எத்தனை அழகு","ஏன் பெண்ணென்று பிறந்தாய்" என்று அசத்தலான பாடல்களோடு லவ் டுடேவில் அறிமுகமாகி ,"மலரே ஒரு வார்த்தை பேசு","சின்ன வெண்ணிலவே" என்று பூமகள் ஊர்வலத்திற்காக இசைவிருந்து படைத்து “நீ மலரா மலரா” என்று அற்புதம் நிகழ்த்திவிட்டு மௌனமான ஷிவா . அச்சு வெல்லமே அச்சு வெல்லமே” என்று சக்தியோடு தொடங்கிமுந்தானைச் சேலை முட்டுதா ஆளைஎன்று அரிச்சந்திராவோடு காணாமல்போன ஆகோஷ்(ஆனந்த்,கோபால் சர்மா,ஷ்யாம்), வி.ஐ.பி மூலம் அறிமுகமாகி "மின்னல் ஒரு கோடி" பாடலைத் தந்து ஆச்சர்யபடுத்தி சமீபத்தில் உற்சாகத்தில் அவரா இவர் என்று நினைக்கவைத்த ரஞ்சித் பரோட். கௌரி மனோகரியில் "அருவிகூட ஜதி இல்லாமல் ஸ்வரங்கள் பாடுது" பாடலைத் தந்த இனியவன் போன்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமான படங்களிலே எல்லோரது கவனத்தையும் கவர்ந்து, பிறகு ஒரு சிலருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமலும்,சிலருக்கு கிடைத்தும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலும் காணாமல் போயிருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர இன்னும் இரண்டு இசையமைப்பாளர்களின் கதை சற்று வித்யாசமாய் இருக்கும். இவர்களை காணாமல் போனவர்கள் லிஸ்டிலும் சேர்க்க முடியாது, பிசியானவர்களின் வரிசையிலும் சேர்க்க முடியாது. திடீரென காணாமல் போவார்கள்,திடீரென நான்கைந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவர் "ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்"(மனசுக்குள் மத்தாப்பு),"சின்னப் பூவே மெல்ல பேசு" (சின்னப் பூவே மெல்ல பேசு) என்று ஆரம்பத்தில் அசத்தலான பாடல்களை தந்து பிறகு விக்ரமன் படத்தில் ஒரே டியூனை வைத்து ஏகப்பட்ட படங்களுக்கு "லாலாலா" போட்ட எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றொருவர் அன்னை வயல் மூலம் "மல்லிகை பூவழகில்" என்று நல்ல பாடலோடு ஆரம்பித்து "செவ்வந்தி பூவெடுத்தேன்" என்று கோகுலத்தில் தனது திறமையை நிரூபித்து, உள்ளத்தை அள்ளித்தா என்று மிகப் பெரிய ஹிட்டெல்லாம் கொடுத்து பிறகு சில காப்பி&பேஸ்ட் போட்டுவிட்டு இப்போது தொலைக்காட்சியில் பாட்டுப் போட்டி நடுவராக இருக்கும் சிற்பி.

இந்தப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் இசையமைப்பாளர்கள் அறிமுகமான காலத்தில் இளையராஜா என்ற மிகப்பெரிய இசை சாம்ராஜ்யத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் அல்லது தனக்கான தனி இசை அடையாளம் இலாமல் இளைராஜாவின் இசைப்பாணியை அப்படியே தொடர முயன்றதாலும் கூட அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் போயிருக்கலாம். முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல்.

"ஏதோ நடக்கிறது","தோடிராகம் பாடவா","மல்லிகைப் பூ பூத்திருக்கு" போன்ற அழகான மெலடிகளையும், ரஜினி படங்கள்(மனிதன்,ராஜா சின்ன ரோஜா) உட்பட சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் பல படங்களுக்கு இசையமைத்து சமீபத்தில் மறைந்த திரு.சந்திரபோஸ், பாலைவனச் சோலை("மேகமே மேகமே"), பெண்மணி அவள் கண்மணி("மூங்கிலிலை காடுகளே"), சம்சாரம் அது மின்சாரம்("சம்சாரம் அது மின்சாரம்","ஜானகி தேவி") என்று எண்பதுகளின் மத்தியில் நிறைய படங்களுக்கு இசையமைத்த சங்கர் கணேஷ் மற்றும் செந்தூரப் பூவே,ஊமை விழிகள்,உரிமை கீதம்(மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்),வெளிச்சம்("துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே") போன்ற வசீகரிக்கும் பாடல்களைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்த மனோஜ் கியான் போன்ற ஒரு காலக்கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்த இவர்களும் கூட காணாமல் போன லிஸ்ட்டில் இடம்பிடித்தது ஏனோ தெரியவில்லை.

அழகன்,வானமே எல்லை,ஜாதி மல்லி போன்ற படங்களுக்கு இசையமைத்த மரகதமணி(கீரவாணி),கொடிபறக்குது,கேப்டன் மகள் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹம்சலேகா, ரசிகன் ஒரு ரசிகை(”பாடி அழைத்தேன்”,”ஏழிசை கீதமே”) படத்திற்கு இசையமைத்த அமரர் ரவீந்திரன் மற்றும் பூவுக்குள் பூகம்பம் ("அன்பே ஒரு ஆசை கீதம்") படத்திற்கு இசையமைத்த சங்கீத ராஜன் ஆகியோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது, காரணம் அவர்கள் தெலுங்கு மற்றும் மளையாளத்தின் முண்ணனி இசையமைப்பாளர்கள்.தமிழுக்கு அவ்வப்போது விருந்தாளிகளாய் வந்த இசையமைத்தவர்கள்.

கங்கை அமரன்,எஸ்.பி.பி மற்றும் டீ.ராஜேந்தர் ஆகியோர் இசையமைப்பதை முதன்மையான தொழிலாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

டிஸ்கி:உங்களுக்குத் தெரிந்த காணாமல் போன இசையமைப்பாளர்களை பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க.

38 comments:

K.Ravishankar said...

நாடோடி இலக்கியன் !


ரவீந்திரன் (மலையாளம்) என்ற ஒரு இசையமைப்பாளர் .படம் " ரசிகன் ஒரு ரசிகை"

௧. ஏழிசை கீதமே (ஜானகி & யேசு) ௨. பாடி அழைத்தேன் ௩. உனக்காவே உயிர்

கர்நாடக ராகத்தில் அமைந்த பாடல்கள். ராஜாவின் சாயல். Poorman"s Ilaiyaraaja.ஆனால் சரக்கு உள்ள ஆசாமி.His Highness Abdullah.(மலையாளம்) ஹிட் ஆன படம்

www.dishant.com/album/Rasikan-Oru-Rasikai.html

தலைமுறை மாறும் போது ரசனைகளும் மாறும்.

Anonymous said...

sivaji raja

நாடோடி இலக்கியன் said...

வாங்க ரவி ஷங்கர்,

முதல் வருகைக்கு மிக்க நன்றி,
நீங்கள் குறிப்பிட்டுள்ள ரவீந்திரன் அவர்களின் ரசிகன் ஒரு ரசிகை படத்தையும் குறிப்பிடுள்ளேன்,கவனிக்கவில்லையோ?

மலையாளத்தில் அவர் இசையமைத்த ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவில் வரும் "பிரமதவனம் வீண்டும்" பாடல் எனது விருப்பப் பாடல் வரிசையில் முதல் இடம் கொடுப்பேன்.

//தலைமுறை மாறும் போது ரசனைகளும் மாறும்//

உடன்பாடான கருத்தே.

கபீஷ் said...

நாடோடி இலக்கியன்,

நீங்களே எல்லாரையும் குறிப்பிட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுக்கு ஞாபக சக்தி ஜாஸ்தின்னு நினைக்கிறேன்

Anonymous said...

Nalla padhivu....

முரளிகண்ணன் said...

எஸ் ஏ ராஜ்குமார் தெலுங்கிலும் இசை அமைப்பதால் அந்த இடைவெளி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

மனோஜ் மனோஜ் பட்னாகர் என்ற பெயரில் இயக்கம் (என்றென்ரும் காதல், குட்லக்], சமீரா ஒலிப்பதிவு கூடம் என ட்ராக் மாறிவிட்டார்.

மிக மிக அருமையான பதிவு

K.Ravishankar said...

ஆமாம் கவனிக்க வில்லை. மன்னிக்கவும் .


ரவீந்திரன் படத்தில்நேரடியாக கர்நாடக இசை தெரியும் . ஆனால்
Maestro ராஜா கர்நாடக இசை கலந்த பாடல்களை வித்தியாசமாக கொடுப்பார்.
"மோக முள்" .

நீங்கள் சொன்ன பாடல்கள் நான் கேட்டுருக்கிறேன். எதோ (சில பாடல்கள் விதி விலக்கு)ஒப்புக்கு கேட்கலாம் .அவ்வளுவுதான்.

ராஜாவின் பாட்டுகளை கேட்டு விட்டு இந்த "இசை அமைப்பாளர்களின்" இசை மனதில் ஓட்ட வில்லை. அவர் ஒரு காட்டு காட்டிவிட்டு போய் விட்டார்.

"அன்பே வா முன்பே வா " பாடலும் "மாலையில் யாரோ மனதோடு" பாடலும் ஒரே மாதிரி உணர்ச்சியை உள்ளடக்கிய பாட்டு..ராஜாவின் பாட்டில் ஆரம்பத்தில்
ஒரு "இசை சிதறலை" காட்டிவிட்டு உள்ளே வருவார்.

கடைசியாக .......

இந்த இசைஅமைப்பாளர்கள் "அழகி" படம் பார்த்தார்களா ? பின்னணி இசை அமிர்தமாக வழியும் (ஒளியிலே தெரிவது) .கடைசி பெயர்கள் ஓடும் காட்சி.

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/azhagi/endcredits.r

இந்த படத்திற்க்கு ஏன் இவ்வளவு?

தமிழ்ப்பறவை said...

நல்ல பதிவு...
//சமீபத்தில் ஏதோ ஒரு படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.
//
அது 'மெர்க்குரிப்பூக்கள்' படம்.
மகேந்திரன் என்.எஃப்.டி.சிக்கு எடுத்த 'சாசனம்' படத்திற்கும் இசை பாலபாரதி தான்.'தலைவாசல்', அமராவதி இதைத் தவிர்த்து அவர் ஒன்றும் சொல்லிக்கொள்கிறார்போல் இசை பண்ணீயதில்லை.

சிற்பியின் 'அன்னைவயல்' பாடல்களை முதலில் கேட்டபோது ,இளையராஜா இசை என்றுதான் நினைத்திருந்தேன். நன்றாக இருக்கும்.சிற்பி கடைசியாகக் கொடுத்த நல்ல பாடல் எனில் அது 'கோடம்பாக்கம்' படத்ஹ்டில் வரும் 'ரகசியமானது காதல்' பாடல்தான்.

'லவ்டுடே'ஷிவாவின் 'சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்' நல்ல பாடல்.

//முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல்.//
முதல் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். இரண்டாவது கருத்து தவறு. ஏனெனில் இப்போதிருக்கும் அவசர மீடியாவில் ஒருமுறை கேட்டாலே, ரசிக்கும்படி பாடல் போட்டாலே ஹிட் ஆகிவிடும். ஆனால் அது மிகக் குறுகியகாலத்திற்குத்தான். பாடல்களின் லைஃப் கம்மியாகிவிட்டது. இளம்புயலின் ஆதிக்கம் காரணமெனில் யுவன், வித்யாசாகர், ஹாரிஸ், விஜய் ஆன்டனி பாடல்கள் ஹிட்டாவது எங்ஙனம்..? மக்கள் ரசனை மற்றும் கொஞ்சம் தரம் இவை போதும்.

இன்னுமொரு இசையமைப்பாளரை விட்டு விட்டீர்கள்...பரணி

Expatguru said...

பல இனிமையான பாடல்களின் நினைவுகளை தூண்டி விட்ட நல்ல பதிவுக்கு நன்றி. வி.குமார் என்ற அருமையான இசை அமைப்பாளரையும் இந்த பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள். அவருடைய இசையில் வெளி வந்த படங்கள்:

நீர்குமிழி ("ஆடி அட‌ங்கும் வாழ்க்கைய‌டா, ஆர‌டி நில‌மே சொந்த‌ம‌டா")
இரு கோடுகள் ("புன்ன‌கை ம‌ன்ன‌ன் பூ விழி க‌ண்ண‌ன் ருக்ம‌ணிக்காக‌")
எல்லோரும் ந‌ல்ல‌வ‌ரே
ராஜ‌ நாக‌ம்
வெள்ளி விழா
அர‌ங்கேற்ற‌ம் ("மூத்த‌வ‌ள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்ற‌ம்")

ஆனால் இவை எல்லாவ‌ற்றையும் விட‌ என‌க்கு மிக‌ மிக‌ பிடித்த‌ பாட‌ல் தேன் சிந்துதே வான‌ம் என்ற‌ ப‌ட‌த்தில் இவ‌ர் இசை அமைத்த‌ "உன்னிட‌ம் ம‌ய‌ங்குகிறேன், உள்ள‌த்தால் நெருங்குகிறேன்" என்ற‌ பாட‌ல் தான்.

நாடோடி இலக்கியன் said...

Anonymous said...
//sivaji raja

வாங்க அனானி,
உங்கள் பதிலைக் கண்டதும் சிவாஜி ராஜா என்ன படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்று இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவல் காற்றுக்கென்ன வேலி என்ற திரைப்படம்.
அதில் இடம் பெற்ற ஒரு பாடலை பற்றியும் ,சிவாஜி ராஜா பற்றியும் திரு.எஸ்.பி.பி. அவர்கள் பகிர்ந்துகொள்ளும் சுவையான தகவல் இங்கே:

http://myspb.blogspot.com/2008/06/663.html

வருகைக்கு மிக்க நன்றி.

நாடோடி இலக்கியன் said...

கபீஷ் said...
//நாடோடி இலக்கியன்,
நீங்களே எல்லாரையும் குறிப்பிட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.//வாங்க கபீஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//உங்களுக்கு ஞாபக சக்தி ஜாஸ்தின்னு நினைக்கிறேன்//

சிறுவயதிலிருந்தே நிறைய பாடல்கள் கேட்பது வழக்கம்,அதனால்தான் என்று நினைக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

Anonymous said...
//Nalla padhivu....

வாங்க அடுத்த அனானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பெயரை சொல்லிவிட்டு போகலாமே நண்பா.

நாடோடி இலக்கியன் said...

முரளிகண்ணன் said...
//எஸ் ஏ ராஜ்குமார் தெலுங்கிலும் இசை அமைப்பதால் அந்த இடைவெளி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

மனோஜ் மனோஜ் பட்னாகர் என்ற பெயரில் இயக்கம் (என்றென்ரும் காதல், குட்லக்], சமீரா ஒலிப்பதிவு கூடம் என ட்ராக் மாறிவிட்டார்.

மிக மிக அருமையான பதிவு//

வாங்க முரளி கண்ணன்,
முதல் வருகைக்கும்,கூடுதல் தகவலுக்கும் மிக்க நன்றிங்க.
நேற்றுதான் உங்கள் வலைப்பக்கம் எட்டி பார்த்தேன்,சினிமாவைப் பற்றி எத்தனை சுவராஸ்யமான பதிவுகள், அத்தனையும் அருமை.தொடரட்டும் உங்கள் பணி.

நாடோடி இலக்கியன் said...

K.Ravishankar said...
//ஆமாம் கவனிக்க வில்லை. மன்னிக்கவும் .


ரவீந்திரன் படத்தில்நேரடியாக கர்நாடக இசை தெரியும் . ஆனால்
Maestro ராஜா கர்நாடக இசை கலந்த பாடல்களை வித்தியாசமாக கொடுப்பார்.
"மோக முள்" .

நீங்கள் சொன்ன பாடல்கள் நான் கேட்டுருக்கிறேன். எதோ (சில பாடல்கள் விதி விலக்கு)ஒப்புக்கு கேட்கலாம் .அவ்வளுவுதான்.

ராஜாவின் பாட்டுகளை கேட்டு விட்டு இந்த "இசை அமைப்பாளர்களின்" இசை மனதில் ஓட்ட வில்லை. அவர் ஒரு காட்டு காட்டிவிட்டு போய் விட்டார்.

"அன்பே வா முன்பே வா " பாடலும் "மாலையில் யாரோ மனதோடு" பாடலும் ஒரே மாதிரி உணர்ச்சியை உள்ளடக்கிய பாட்டு..ராஜாவின் பாட்டில் ஆரம்பத்தில்
ஒரு "இசை சிதறலை" காட்டிவிட்டு உள்ளே வருவார்.

கடைசியாக .......

இந்த இசைஅமைப்பாளர்கள் "அழகி" படம் பார்த்தார்களா ? பின்னணி இசை அமிர்தமாக வழியும் (ஒளியிலே தெரிவது) .கடைசி பெயர்கள் ஓடும் காட்சி.

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/azhagi/endcredits.r

இந்த படத்திற்க்கு ஏன் இவ்வளவு?//

வாங்க ரவி ஷங்கர்,
மறுவருகைக்கும் அன்பான தருகைக்கும் மிக்க நன்றிங்க.
இளையராஜா மற்றும் ரவீந்திரன் பற்றிய உங்களது கருத்துதான் எனக்கும்.
நீங்கள் கொடுத்துள்ள சுட்டி இங்கு திறப்பதில் சிரமமாக உள்ளது.

நாடோடி இலக்கியன் said...

தமிழ்ப்பறவை said...
நல்ல பதிவு...
//சமீபத்தில் ஏதோ ஒரு படத்திற்கு பிண்ணனி இசை மட்டும் அமைத்ததாக ஞாபகம்.
//
அது 'மெர்க்குரிப்பூக்கள்' படம்.
மகேந்திரன் என்.எஃப்.டி.சிக்கு எடுத்த 'சாசனம்' படத்திற்கும் இசை பாலபாரதி தான்.'தலைவாசல்', அமராவதி இதைத் தவிர்த்து அவர் ஒன்றும் சொல்லிக்கொள்கிறார்போல் இசை பண்ணீயதில்லை.

சிற்பியின் 'அன்னைவயல்' பாடல்களை முதலில் கேட்டபோது ,இளையராஜா இசை என்றுதான் நினைத்திருந்தேன். நன்றாக இருக்கும்.சிற்பி கடைசியாகக் கொடுத்த நல்ல பாடல் எனில் அது 'கோடம்பாக்கம்' படத்ஹ்டில் வரும் 'ரகசியமானது காதல்' பாடல்தான்.

'லவ்டுடே'ஷிவாவின் 'சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்' நல்ல பாடல்.

//முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல்.//
முதல் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். இரண்டாவது கருத்து தவறு. ஏனெனில் இப்போதிருக்கும் அவசர மீடியாவில் ஒருமுறை கேட்டாலே, ரசிக்கும்படி பாடல் போட்டாலே ஹிட் ஆகிவிடும். ஆனால் அது மிகக் குறுகியகாலத்திற்குத்தான். பாடல்களின் லைஃப் கம்மியாகிவிட்டது. இளம்புயலின் ஆதிக்கம் காரணமெனில் யுவன், வித்யாசாகர், ஹாரிஸ், விஜய் ஆன்டனி பாடல்கள் ஹிட்டாவது எங்ஙனம்..? மக்கள் ரசனை மற்றும் கொஞ்சம் தரம் இவை போதும்.

//

வாங்க தமிழ் பறவை,
முதல் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.

முன்னவர்களுக்கு இசைஞானி என்றால் பின்னவர்களுக்கு இசைப்புயல் என்று சொல்லியிருப்பது
அவர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதால் அல்ல தனக்கென்று ஒரு தனிப் பாணியை தொடராமல் ரஹ்மானின் சாயலை தொடர முயற்சித்ததால் கூட இருக்கலாம் என்று சொல்ல வந்தேன்(எ.கா)வி.ஐ.பி ரஞ்சித் பரோட்.மற்றபடி நீங்கள் கூறியிருக்கும் வெற்றி பெற்ற இசையமைப்பாளர்களான ஹாரிஸ்,வித்யாசாகர்,யுவன்,விஜய் ஆண்டனி ஆகியோருக்கு தனி அடியாளம் இருப்பதாவே நினைக்கிறேன்.இவர்களின் பாடலை கேட்கும் போது இது இன்னார் இசையமைத்தது என்று தெரிந்துவிடும்.

//இன்னுமொரு இசையமைப்பாளரை விட்டு விட்டீர்கள்...பரணி//

ஆமாம், பரணியும் நல்ல இசையமைப்பாளர்.இவர் இசையமைப்பில் "ஏ அசைந்தாடும் காற்று","பார்த்துக் கொண்டால் ஆனந்தம்"மற்றும் சார்லி சாப்ளினில் எல்லா பாடல்களும் எனக்கு பிடித்தவை.

இன்னொரு இசையமைபாளரையும் விட்டு விட்டேன்.90 களில் அவரும் பல ஹிட் பாடல்களை கொடுத்தவரே.பார்ப்போம் யாராவது சொல்கிறார்களா என்று.

Anonymous said...

In the recent years, Kadhal music director Joshua...

ravi srinivas said...

திரை உலகில் பல திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் அதிகம் இராது.உ-ம் A.A.ராஜ்
ஒரு தலைராகம் இவரது முதல் படம்.
இதில் டி.ராஜேந்தருக்கும் பங்குண்டு.
ராஜ் உதவி இசை அமைப்பாளராக
பல ஆண்டுகள் இருந்திருக்கிறார்.
S.P.B தமிழில் இசை அமைப்பாளராக
வெற்றிவில்லை.T.M.செளந்தர்ராஜனும்அப்படித்தான்.தாராபுரம் செளந்தர்ராஜன்,M.L.ஸ்ரீகாந்த்,A.V.ரமணன் போன்றோர் பாடகர்கள்,இசை அமைப்பாளர்கள்.ஆனால் திரையிசையில் வாய்ப்புகள் அதிகம்
பெறாதவர்கள்.கோவர்த்தனம் இசை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார்,
உதவி இசை அமைப்பாளராகவும்
இருந்திருக்கிறார்.அதே போல் புகழேந்தி
கே.வி.மகாதேவனின் நீண்ட கால
உதவி இசை அமைப்பாளர்.தமிழில்
சில படங்களுக்கே இசை அமைத்துள்ளார். ஷ்யாம் 70களில்,80களில் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர்.கங்கை அமரன் ஒரு காலகட்டத்தில் நிறையப் படங்களுக்கு பாடல் எழுதினார், இசை அமைத்தார்.
சில படங்களை இயக்கினார்.ஆனால் திரை இசை அமைப்பாளராக மீண்டும் அவர் தொடரவில்லை.
சிவாஜி ராஜா ஒரு படத்திற்கே இசை அமைத்துள்ளார்.தமிழில் அதிகம்
வாய்ப்புக் கிடைக்காத மரகதமணி
தெலுங்கில் நிறையப் படங்களுக்கு
இசை அமைப்பாளர்.ஹிந்தி படங்களுக்கும் இசை அமைப்பாளர்.

இப்படி 'காணமல் போனோர்' பட்டியல் நீண்டது.

செல்வேந்திரன் said...

அருமையான பதிவுகளும், அக்கறையான பின்னுட்டங்களுமாக பிரமாதமாய் இருக்கிறது உங்கள் வலைப்பூ.

Anonymous said...

மேலே சொன்னவர்கள் எல்லாம் வந்து காணாமல் போனவர்கள், நீண்ட காலம் இருந்தும் காணாமல் போன ஒருவர் உண்டு, தேவா. இவர் கொடுக்கும் பாடல் எல்லாமே ஏதோ ஒரு பாடலின் சாயல் இல்லாமல் இருக்காது. அப்படியே நேரடியாக தெரியாவிட்டாலும் ஏதாவது இருக்குமோ என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிவிடும்.

பனிமலர்.

நாடோடி இலக்கியன் said...

Expatguru said...
//பல இனிமையான பாடல்களின் நினைவுகளை தூண்டி விட்ட நல்ல பதிவுக்கு நன்றி. வி.குமார் என்ற அருமையான இசை அமைப்பாளரையும் இந்த பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்.

மிக‌ மிக‌ பிடித்த‌ பாட‌ல் தேன் சிந்துதே வான‌ம் என்ற‌ ப‌ட‌த்தில் இவ‌ர் இசை அமைத்த‌ "உன்னிட‌ம் ம‌ய‌ங்குகிறேன், உள்ள‌த்தால் நெருங்குகிறேன்" //

வாருங்கள் Expatguru,
உங்களுடைய வருகைக்கும் ,நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.


Anonymous said...
//In the recent years, Kadhal music director Joshua...//

வாருங்கள் அனானி,
ஜோஷ்வாவை இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து,அறிமுகமாகி கொஞ்ச வருடங்கள்தானே ஆகிறது,இன்னும் கொஞ்ச நாட்கள் பார்க்கலாம்.

ravi srinivas said...
//
திரை உலகில் பல திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் அதிகம் இராது.உ-ம் A.A.ராஜ்
ஒரு தலைராகம் இவரது முதல் படம்.
இதில் டி.ராஜேந்தருக்கும் பங்குண்டு.
ராஜ் உதவி இசை அமைப்பாளராக
பல ஆண்டுகள் இருந்திருக்கிறார்.
S.P.B தமிழில் இசை அமைப்பாளராக
வெற்றிவில்லை.T.M.செளந்தர்ராஜனும்அப்படித்தான்.தாராபுரம் செளந்தர்ராஜன்,M.L.ஸ்ரீகாந்த்,A.V.ரமணன் போன்றோர் பாடகர்கள்,இசை அமைப்பாளர்கள்.ஆனால் திரையிசையில் வாய்ப்புகள் அதிகம்
பெறாதவர்கள்.கோவர்த்தனம் இசை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார்,
உதவி இசை அமைப்பாளராகவும்
இருந்திருக்கிறார்.அதே போல் புகழேந்தி
கே.வி.மகாதேவனின் நீண்ட கால
உதவி இசை அமைப்பாளர்.தமிழில்
சில படங்களுக்கே இசை அமைத்துள்ளார். ஷ்யாம் 70களில்,80களில் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர்.கங்கை அமரன் ஒரு காலகட்டத்தில் நிறையப் படங்களுக்கு பாடல் எழுதினார், இசை அமைத்தார்.
சில படங்களை இயக்கினார்.ஆனால் திரை இசை அமைப்பாளராக மீண்டும் அவர் தொடரவில்லை.
சிவாஜி ராஜா ஒரு படத்திற்கே இசை அமைத்துள்ளார்.தமிழில் அதிகம்
வாய்ப்புக் கிடைக்காத மரகதமணி
தெலுங்கில் நிறையப் படங்களுக்கு
இசை அமைப்பாளர்.ஹிந்தி படங்களுக்கும் இசை அமைப்பாளர்.

இப்படி 'காணமல் போனோர்' பட்டியல் நீண்டது.//

வாருங்கள் srinivas,
வருகைக்கும் பல இனிய நினைவுகளை பகிர்ந்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

நாடோடி இலக்கியன் said...

செல்வேந்திரன் said...
//அருமையான பதிவுகளும், அக்கறையான பின்னுட்டங்களுமாக பிரமாதமாய் இருக்கிறது உங்கள் வலைப்பூ//

வாருங்கள் செல்வேந்திரன்,
ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

நாடோடி இலக்கியன் said...

Anonymous said...
//மேலே சொன்னவர்கள் எல்லாம் வந்து காணாமல் போனவர்கள், நீண்ட காலம் இருந்தும் காணாமல் போன ஒருவர் உண்டு, தேவா. இவர் கொடுக்கும் பாடல் எல்லாமே ஏதோ ஒரு பாடலின் சாயல் இல்லாமல் இருக்காது. அப்படியே நேரடியாக தெரியாவிட்டாலும் ஏதாவது இருக்குமோ என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிவிடும்.

பனிமலர்.//

வாருங்கள் பனிமலர் ,

தேவா இப்பொழுதும் சிறுமுதலீட்டு படங்களுக்கு இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.மற்றபடி அவரை பற்றிய உங்கள் கருத்து அவராலேயே கூட மறுக்க முடியாது.:)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

இதில் தேவாவின் சகோதரர்கள் சபேஸ் முரளியையும், பாபி ( சொல்லாமலே திரைப்படம்)மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன், பருவராகம் ( ஜீகி சாவ்லாவின் முதல் பட இசை அமைப்பாளர்) பெயர் ரவிசந்திரன் என நினைக்கிறேன் சேர்க்கலாம்....

Anonymous said...

GOOD, YOU LEFT ONE MORE GOOD MUSIC DIRECTOR,MR.OVIYAN FILM:DHINAMTHORUM ACTORS:MURALI,SUVALAKSHMI
ALL SONGS ARE GOOD MELODY AND VARIETY IN THIS MOVIE .I THOUGHT THAT HE WILL COME TO TOP,BUT NEVER HAPPENED,BAD LUCK.

ANOTHER ONE IS MR.ADITHYAN

நாடோடி இலக்கியன் said...

Anonymous said...
//இதில் தேவாவின் சகோதரர்கள் சபேஸ் முரளியையும், பாபி ( சொல்லாமலே திரைப்படம்)மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன், பருவராகம் ( ஜீகி சாவ்லாவின் முதல் பட இசை அமைப்பாளர்) பெயர் ரவிசந்திரன் என நினைக்கிறேன் சேர்க்கலாம்//

வாங்க அனானி,
நன்றி பாபி,சபேஸ் ஆகியோரை நினைவுபடுத்தியதற்கு.

பருவராகம் படத்தின் ஹீரோவாக நடித்து இயக்கி தயாரித்தவர் ரவிச்சந்திரன்."பூவே உன்னை நேசித்தேன் மற்றும் "காதல் இல்லை என்று சொன்னால்"பாடல்கள் என்றென்றும் மறக்கமுடியாதவை. இந்த படத்தின் இசையமைப்பாளர்
ஹம்சலேகா.


// Anonymous said...
GOOD, YOU LEFT ONE MORE GOOD MUSIC DIRECTOR,MR.OVIYAN FILM:DHINAMTHORUM ACTORS:MURALI,SUVALAKSHMI
ALL SONGS ARE GOOD MELODY AND VARIETY IN THIS MOVIE .I THOUGHT THAT HE WILL COME TO TOP,BUT NEVER HAPPENED,BAD LUCK.

ANOTHER ONE IS MR.ADITHYAN
//

வாங்க அனானி(பெயரையும் சொல்லிவிட்டு போங்க நண்பா),
வருகைக்கும்,தினம்தோறும் ஓவியனை நினைவு படுத்தியதற்கும் நன்றி.
ஆதித்யன் பற்றி யாருமே இன்னும் சொல்லவில்லையே என நினைத்திருந்தேன்,நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.ஆதித்யன் இசையமைப்பில்"ஒயிலா பாடும் பாட்டுல","சந்திரனே சூரியனே","அழகோவியம்","ஆனந்தம் வந்ததடி" போன்ற பாடல்கள் பெரிய ஹிட்டானவை.

Chuttiarun said...

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

LOSHAN said...

அருமையான பகிர்வு .. நல்ல திரட்டல்.. உங்களுக்கு ஞாபக சக்தியும் தேடலும் இருக்கிறது.

நானும் வி.குமார் பற்றி சொல்லலாம் என்று பார்த்தால் பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் குறிபிட்டுள்ளார்.

ஒரு சில விஷயங்கள்..

கோபுரதீபம் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் சிற்பி என்று நினைக்கிறேன்.

வி.எஸ்.நரசிம்மன் இசையமைத்த மற்றுமொரு அருமையான திரைப்படம் ஏழாவது மனிதன்.

நீங்கள் குறிப்பிட்ட காணாமல் போனோர் வரிசையில் எனக்கு மிகப்பிடிதவர் மரகதமணி.. அருமையான பாடல்கள் தந்தவர்.
ஆனால் தெலுங்கில் கீரவாணி என்ற பெயரில் பிரபலமாக இருப்பதாக அறிந்தேன்.

கொடி பறக்குது திரைப்பட இசையமைப்பாளர் ஹம்சலேகா என்னவானார்?

நீங்கள் குறிப்பிடாமல் விட்ட ஒருவர். சுரேஷ் பிடேர்ஸ் .. கூலி,தென் காசிப் பட்டணம் போன்ற நல்ல பாடல்கள் கொண்ட படங்கள் தந்தும் காணாமல் போய் விட்டார்.

ரமேஷ் விநாயகம் கூட நல்ல பல பாடல்களைத் தந்துகொண்டிருந்தவர். இப்போது பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

நாடோடி இலக்கியன் said...

LOSHAN said...
//அருமையான பகிர்வு .. நல்ல திரட்டல்.. உங்களுக்கு ஞாபக சக்தியும் தேடலும் இருக்கிறது.//

வாருங்கள் திரு.லோஷன்,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.


//கோபுரதீபம் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் சிற்பி என்று நினைக்கிறேன்.//

அப்படியா,இதுநாள் வரை சௌந்தர்யன் என்றே நினைத்திருந்தேன்,இணையத்தில் தேடி பார்த்தேன் தகவல் கிடைக்கவில்லை,எனவே பதிவிலிருந்து குறிப்பிட்ட பாடலை நீக்கிவிட்டேன் நண்பரே.


//வி.எஸ்.நரசிம்மன் இசையமைத்த மற்றுமொரு அருமையான திரைப்படம் ஏழாவது மனிதன்.//

ஏழாவது மனிதன் படத்தின் இசையமைப்பாளர் திரு எல். வைத்தியநாதன் அவர்கள்.
"காக்கை சிறகினிலே" மறக்க முடியுமா?

//நீங்கள் குறிப்பிட்ட காணாமல் போனோர் வரிசையில் எனக்கு மிகப்பிடிதவர் மரகதமணி.. அருமையான பாடல்கள் தந்தவர்.
ஆனால் தெலுங்கில் கீரவாணி என்ற பெயரில் பிரபலமாக இருப்பதாக அறிந்தேன்.//

ஆமாம்.

//கொடி பறக்குது திரைப்பட இசையமைப்பாளர் ஹம்சலேகா என்னவானார்?//

அம்சலேகா கன்னடத்தில் பெரிய இசையமைப்பாளர்,300 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்,தமிழிலும்,
தெலுங்கிலும் சொற்ப எண்ணிக்கையிலேயே இசையமைத்திருக்கிறார்.


//நீங்கள் குறிப்பிடாமல் விட்ட ஒருவர். சுரேஷ் பிடேர்ஸ் .. கூலி,தென் காசிப் பட்டணம் போன்ற நல்ல பாடல்கள் கொண்ட படங்கள் தந்தும் காணாமல் போய் விட்டார்.//

நன்றி, சுரேஷ் பீட்டர்ஸ்ஸை நினைவூட்டியதற்கு.

//ரமேஷ் விநாயகம் கூட நல்ல பல பாடல்களைத் தந்துகொண்டிருந்தவர். இப்போது பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.//

ரமேஷ் வினாயகம் இசையமைப்பில் "விழிகளின் அருகினில் வானம்" நல்ல பாடல்.

Anonymous said...

அமரன், சீவலபேரிபாண்டி போன்ற படங்களில் அற்புதமான பாடல்களை கொடுத்த "ஆதித்யன்" பல வருடங்களாக தனியார் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சி வழங்கி வருகிறார்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி அனானி,

ஆதித்யனைப் பற்றி ஏற்கனவே இன்னொரு அனானி நண்பரும் நினைவு படுத்திருக்கிறார் பாருங்கள்.

ராமகிருஷ்ணன் த said...

which film has the song "மல்லிகைப் பூ பூத்திருக்கு
i like it very much

bala said...

காணமல் போனவர்கள் பட்டியலில் சக்கரவர்த்தி, பகடை பன்னிரண்டு, யமனுக்கு யமன் போன்ற படங்களில் இசை அமைத்தவர்
விஸ்வகுரு -அமரன் திரைப்பட இசை அமைப்பாளர்களுள் ஒருவர். T R பாப்பா நிறைய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர்களையும்
சேர்த்து கொள்ளுங்கள்

bala said...

காணமல் போனவர்கள் பட்டியலில் விஜயபாஸ்கர்-மயங்குகிறாள் ஒரு மாது, தப்புத்தாளங்கள்
படங்களுக்கு இசை அமைத்தவர், தக்ஷினாமூர்த்தி -ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது...போன்ற சில
படங்களுக்கும் மலையாள படங்களுக்கும் இசை அமைத்தவர் இவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

சாமக்கோடங்கி said...

ஆஹா. ஆஹா.. ஆஹா.. எத்தனை தகவல்கள்.. நிச்சயமாக இந்தப் பதிவு ஒரு தகவல் களஞ்சியம்..

Anonymous said...

இன்று தான் உங்கள் பதிவை படித்தேன்
மிக அருமை
சங்கீத ராஜன் என்ற பெயரில் தமிழ் இல் அறிமுகம் . மலையாளத்தில் எஸ் ப வெங்கடேஷ் என்று ஒரு இசை அமைப்பாளர் தியாகராஜனின் 'பூவுக்குள் பூகம்பம் ' படம் என்று நினைவு

யாருக்கு யார் காவல் - கே சி ஜாய்

பாப்பாத்தி,பாத பூஜை - ஜெயவிஜயா

Anonymous said...

வணக்கம் நண்பர்களே.. இத்தனை நாளாக நான் இளையராசா பாடலாக நினைத்த பல அருமையான பாடல்கள் மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்தது எனும் போது என் அறியாமை தெரிந்தது. ஆனால் என்னை போல் பல ஆட்கள் இருக்கிறார்கள். வரும் தலைமுறைக்கு, 1990க்கு முன்னர் இளையராசா தவிர வேறு யாரும் இசையமைத்தது தெரியபோவதில்லை.

deva raja said...

suresh peters

ma. amaresan said...

ஆதித்தயன்.

அமரன் படத்தில், நான் வெத்தலைப் போட்ட சோக்குல என்ற அமர்களமான குத்துப் பாடலையும், வெண்பனி வீசிடும் மேகங்கலே என்றும் மெல்லிசைப் பாடலையும், சந்திரரே சூரியரே என்னும் சோகப்பாடலையும் போட்டவர். அதற்க்கு பிறகு ஒன்றிரண்டு படங்களுக்கு இசையமைத்து இப்பொழுது சமையல் நிகழ்ச்சியில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் முகம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.