Friday, December 12, 2008

மினிபஸ் பயணமும் ராமராஜன் பாடல்களும்:


எப்போதாவது கிராமப்புறங்களில் செல்லும் மினிபஸ்ஸில் பயணித்திருக்கின்றீர்களா? இல்லையெனில் ஒருமுறைச் சென்று பாருங்கள், சுவாரஸ்யங்களும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்த நல்லதொரு சிறுகதைத் தொகுப்பை படிக்கும் உணர்வை தரவல்லது இந்த மினிபஸ் பயணம்.

பஸ் வசதியில்லா கிராமங்களிலிருந்து அருகில் உள்ள பேரூராட்சி அல்லது நகராட்சி அந்தஸ்த்துள்ள ஊர்களுக்கு விடப்பட்டிருக்கும் மினிபஸ்களின் சேவை மகத்தானது.

கிராமப்புறங்களில் புழக்கத்திலுள்ள பதினெட்டுப் பட்டி என்ற சொல் அனேகர் அறிந்ததே, திருமணத்திற்கு பெண் கொடுப்பது,எடுப்பது என எல்லாமே பெரும்பாலும் இந்த பதினெட்டு ஊர்களுக்குள்ளாகவே நடக்கும்.குறிப்பிட்ட இந்த பட்டிகளில் ஏதோ ஒரு பட்டியில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த மினிபஸ்கள், குறைந்தது ஒரு பத்து பட்டிகளிலாவது நுழைந்து இருபது நிமிடத்தில் அடையவேண்டிய தூரத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து வந்து சேரும்.இதிலென்ன சுவராஸ்யம் என்கிறீர்களா?நிறைய இருக்கிறது.

பயணிகள் வசதி நிறுத்தம்(passengers dependent bus stop), நாம் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், இறங்கிக்கொள்ளலாம். இதில் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் இருவர் ஒரே நேரத்தில் பயணித்தால் இருவரும் அவரவர் வீட்டு வாசலிலேயே இறங்கிக்கொள்ள முயல்வர், அவர்களிடம் நடத்துனர், "ஏங்க ஒரே இடத்திலே இறங்கிக்கலாம்ல" என்று சொல்லிவிட்டால் போச்சு ,"ஏன் அவன் வீட்டு வாசலில நிக்கிற வண்டி ஏவீட்டு வாசலில நிக்காதோ" என்று பெரிய கௌரவப்பிரச்சினை கிளம்பிவிடும்.

டிரைவரிடம்,"தம்பி,எம்மவகிட்ட இத மறக்காம கொடுத்துடுங்க, அவ வந்து வாங்கிக்குவா" என பக்கத்து ஊரில் கட்டிகொடுத்திருக்கும் தனது மகள் வீட்டிற்கு பால் முதல் பனியாரம் வரை பார்சல் அனுப்பும் தாய்க்குலங்கள், மருந்துச் சீட்டை கொடுத்து மாத்திரைகள் வாங்கிவரச் சொல்லும் பெருசுகள், அண்ணே அடுத்த நடை வரும்போது ரெண்டு முழம் பூ வாங்கிட்டு வந்துருங்கண்ணே என்று காசை நீட்டும் குமரிகள் இப்படியாக ஒரு இலவச கூரியர் சர்விஸ் வேலையையும் செய்து கொண்டிருக்கும் இந்த மினிபஸ்களில் நடக்கும் சுவாரஸ்யங்களின் பட்டியல் இன்னும் நீளும்.

சாலையில் பஸ் செல்வதை பார்த்திருப்போம்,ஆனால் இந்த மினிபஸ்கள் பல இடங்களில் சாலையென்ற ஒரு யூகத்தின் அடிப்படையிலேயேச் சென்று கொண்டிருக்கும். ஒரு சில இடங்களில் நல்ல நிலையில் சாலைகளிருக்கும், ஆனால் கண்டிப்பாக அங்கே ஒரு பெண்மணி தானியங்களை காயவைத்துக்கொண்டிருப்பார், டிரைவர் அவரிடம்,"ஏம்மா இப்படி நடுரோட்ல காயவெச்சீங்கன்னா எப்படி வண்டி ஓட்றது" என்று கேட்டால்,"ஆமா நீ ஒரு நாளைக்கு வருவ ஒம்போது நாளைக்கு ரிப்பேருன்னு வரமாட்ட, இன்னைக்கு நீ வருவேன்னு எனக்கென்ன சோசியமா தெரியும்" என்பதுதான் அந்தப் பெண்மணியின் பதிலாக இருக்கும். அதற்குள் பஸ்ஸினுள் இருக்கும் எதாவது ஒரு பெருசு, "தம்பி கிராமம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும், அட்சஜ்ட் பண்ணிப் போப்பா" என்று குரல் கொடுக்கும்,ஏன்னா அடுத்த திருப்பத்துல அவர்வீட்டு நெல் காய்ந்து கொண்டிருக்கும்.

சாலையின் நடுவே சில இடங்களில் கால்நடைகள் கும்பலாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்,அவற்றை எழுப்ப நடத்துனர் படும்பாடு இன்னும் வேடிக்கையாக இருக்கும்(அவருக்கல்ல). ஹேர்பின் பென்ட்டைவிட அபாயகரமான வளைவுகளைக் கடந்து நம்ம பென்ட்டைக் கழட்டிவிடும் இந்த மினிபஸ் பயணத்தில் இப்படி சில அசௌகர்யங்கள் இருப்பினும் நான் ஒவ்வொருமுறை ஊருக்குபோகும்போதும் இதில் பயணிப்பதை மிஸ் பண்ணுவதில்லை,அதற்கு முக்கியமான காரணமென்றால் இளயராஜாவின் பாடல்கள்தான்.

சென்ற முறை பயணத்தின்போது ராமராஜன் பாடல்களை ரொம்ப நாளைக்கு பிறகு கேட்கும் வாய்ப்பு அதுவும் வயல்வெளிகளினூடாக பஸ் வரும்போது "சொர்கமே என்றாலும்" பாடலை கேட்டபோது இதற்கு முன் பலதடவை கேட்ட பாடல்தானென்றாலும் அந்த ரம்மியமான சூழலில் பாடலின் வரிகளுக்கேற்ற காட்சிகளை நேரில் பார்த்துக்கொண்டே பயணித்தபோது அந்த பாடலின் வீச்சை முழுமையாக உணரமுடிந்தது.
தொடர்ந்து "தினமும் சிரிச்சு மயக்கி", "ராசாத்தி மனசுல","அரும்பாகி மொட்டாகி","நேத்து ஒருத்தர ஒருதர பார்த்தோம்", "மதுர மரிக்கொழுந்து வாசம்", "செண்பகமே" ஆகிய பாடல்கள் வரிசையாக ஒலித்துக்கொண்டே வந்தது. அதென்னவோ தெரியல,மோகன் மற்றும் ராமராஜன் படங்களுக்கு இளயராஜா அவர்கள் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையமைத்திருக்கிறார். இந்த மாதிரியான கிராமத்துக் கீதங்களை சத்தமாக ஒலிக்கவிட்டுக்கொண்டு செல்லும் மினிபஸ்கள் வாழ்க.

கொசுறு:எங்க பக்கத்து வீட்டுக்காரரும் அன்று என்னோடு பஸ்ஸில் வந்தார்,இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அவரவர் கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டோம் என்பதை இங்கே சொல்லிக்கிறேன்.
:)

17 comments:

Unknown said...

நல்ல பதிவு அண்ணா.. :)) நீங்க பயணித்த காட்சிகள நாங்களும் கற்பனை செஞ்சு பார்க்கும்படியா எழுதியிருந்தீங்க.. நல்லா இருக்கு.. :))

Anonymous said...

போன பதிவுக்கு நீங்க என்ன தலைப்பு வைக்கலாம்னு நினைச்சீங்கனு சொல்லல.

நாங்க சொன்ன தலைப்புக்கும் பதில் இல்லை.

என்னாச்சு பாஸ்!

Anonymous said...

ஒரு ராஜ்கிரண் படம் பார்த்தது மாதிரி விவரிச்சிருக்கீங்க.

நல்லாருந்துச்சு!

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி,
ஆளில்லா கடைக்கு டீ ஆத்திவிட்டேனோ என நினைத்துக் கொண்டிருக்கொபோது உங்கள் உற்சாகமூட்டும் பின்னூட்டம்.
கருத்துக்கு மிக்க நன்றிங்க ஸ்ரீமதி.

நாடோடி இலக்கியன் said...

@வெயிலான்,
போன பதிவிற்கு நான் யோசித்திருந்த தலைப்பு"அக்கரை பச்சை",இதே தலைப்பை அருணா என்பவரும் கூறியிருந்தார்.அதனாலேயே "இந்த சிறுகதைக்கு என்ன பெயர் வைக்கலாம்" என்ற தலைப்பில் பதிவிட்ட அந்த சிறுகதைக்கு அக்கரை பச்சை என்ற தலைப்பை சூட்டிவிட்டேன்.
அதை முறையாக டிஸ்கியில் குறிப்பிட்டிருக்கலாம் ,கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டேன்.
நீங்கள் கூறியிருந்த தலைப்பும் மிக பொருத்தமானதே.தொடரும் உங்கள் வாசிப்பிற்கு நன்றிகள் ஆயிரம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கிராமப்புறங்களில் புழக்கத்திலுள்ள பதினெட்டுப் பட்டி என்ற சொல் அனேகர் அறிந்ததே, திருமணத்திற்கு பெண் கொடுப்பது,எடுப்பது என எல்லாமே பெரும்பாலும் இந்த பதினெட்டு ஊர்களுக்குள்ளாகவே நடக்கும்.///



பெரும்பாலும் என்பது உண்மையே...

இப்போது காதல் மணமும்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இளயராஜா அவர்கள் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷலாகவே இசையமைத்திருப்பதாகவே //



இங்கெல்லாம், ஏ. ஆர். ஆர். ஹாரிஸ்,...... பாட்டெல்லாம் அதிக பட்சம் ஆறு மாதம் தான். அதுவும் பள்ளி மாண்வர்கள் செல்லும் நேரத்தில்தான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

.ஹேர்பின் பென்ட்டைவிட அபாயகரமான வளைவுகளை கடந்து நம்ம பென்ட்டை கழட்டிவிடும் இந்த மினிபஸ் பயணத்தில்//


ஊர் ஜனங்களுக்கு இது பழகியிருக்கும்

Anonymous said...

//அதென்னவோ தெரியல,மோகன் மற்றும் ராமராஜன் படங்களுக்கு இளயராஜா அவர்கள் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷலாகவே இசையமைத்திருப்பதாகவே தோன்றுகிறது.//

மிக்கச் சரி.

கிராமங்களில் மினிபஸ் பயனம் நல்லதொரு அனுபவம் தரும்.

குடுகுடுப்பை said...

கொசுறு:எங்க பக்கத்து வீட்டுக்காரரும் அன்று என்னோடு பஸ்ஸில் வந்தார்,இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அவரவர் கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டோம் என்பதை இங்கே சொல்லிக்கிறேன்.//

//

ஒரே ஸ்டாப்பா ரெண்டு வீட்டுக்கும்.

பாபு said...

இதுபோன்ற பயணங்களில் கேட்கும் பாடல்கள்,நமக்கு பிடித்த அதே சமயம் அடிக்கடி ஒலிபரப்ப படாத பாடல்களாகவே இருக்கும்
நல்ல பதிவு

நாடோடி இலக்கியன் said...

@சுரேஷ்,
//இப்போது காதல் மணமும்...//

ஆமாம்,அதனாலேயே பெரும்பாலும் என்று கூறினேன்.

//இங்கெல்லாம், ஏ. ஆர். ஆர். ஹாரிஸ்,...... பாட்டெல்லாம் அதிக பட்சம் ஆறு மாதம் தான். அதுவும் பள்ளி மாண்வர்கள் செல்லும் நேரத்தில்தான்.//

எங்க ஊர்பக்கமும் அப்படித்தாங்க, காலையிலும்,மாலையிலும் ஸ்கூல் பசங்க அவர்களே புது பாடல் சிடி கொண்டுவந்து டிரைவரிடம் கொடுத்து ஒரே அதகளம் செய்துகொண்டு வருவார்கள்,மற்ற நேரங்களில் ஒன்லி ராஜாவின் ராஜாங்கம்தான்.

//ஊர் ஜனங்களுக்கு இது பழகியிருக்கும்
//

முற்றிலும் உண்மை,சாலையில் பஸ் எங்கெல்லாம் குலுங்குமென்று நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு அந்த இடம் வரும்போது அனைவரும் தேசிய கீததிற்கு மரியாதை கொடுப்பதுபோல் எழுந்து நின்றுவிடுவார்கள்.:))

நாடோடி இலக்கியன் said...

@வடகரை வேலன்

//கிராமங்களில் மினிபஸ் பயனம் நல்லதொரு அனுபவம் தரும்.//

ஆமாங்க,இங்கே நான் சொல்லியிருக்கிறது கொஞ்சமே கொஞ்சம்தான் இன்னும் நிறைய இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .

நாடோடி இலக்கியன் said...

@வருங்கால முதல்வர்

அப்படியே உல்டாவா கேட்குறீங்களே நண்பா,ரெண்டுபேரும் அவங்க அவங்க வீட்டு வாசலிலேயே இறங்கிக்கொண்டோம் என சொல்ல வந்தேன்.
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

நாடோடி இலக்கியன் said...

@ பாபு
//இதுபோன்ற பயணங்களில் கேட்கும் பாடல்கள்,நமக்கு பிடித்த அதே சமயம் அடிக்கடி ஒலிபரப்ப படாத பாடல்களாகவே இருக்கும்//

ஆமாங்க,
சின்னவர்,ஆவாரம் பூ,சின்ன கவுண்டர் ,சிந்து நதிப்பூ போன்ற 90களில் ஆரம்பத்தில் வந்த படங்களின் பாடல்களையெல்லாம் ஒவ்வொருமுறை ஊருக்கு போகும்போதும் இந்த மினிபஸ்ஸில் கேட்டிருக்கிறேன்.

சிட்டுக்குருவி said...

ஏனுங்கோ எங்க ஊரு மினி பஸ் கதைய திருடிபுட்டீங்கோ ! ! ! ! !

ஹா ஹா ஹா ஹா ரொம்ப நல்லா இருக்குங்கோ

நாடோடி இலக்கியன் said...

நன்றி சிட்டுக்குருவி,(உங்க அனுபவத்தையும் எழுதுங்களேன் படிக்க ஆவலாக இருக்கிறேன்)