Tuesday, September 22, 2009

நான் நானில்லை....

ஆறேழு மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு குத்தகைப் பணம் வாங்க கடைசி பஸ்ஸில் வந்திறங்கினேன்.

சற்றுமுன் பெய்த பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தெரு விளக்குகள் எரியாமல் பயங்கர இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரம் காட்சிகள் ஏதும் புலப்படாமல் அப்படியே நின்று கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

கருமேகங்கள் திரண்டு இருட்டின் அடர்த்தியை கூடுதலாக்கிவிட்டிருந்ததால் பாதையை நிதானிப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. பஸ்ஸில் வரும்போதே நண்பன் ஒருவன் போட்ட ரம்பத்தில் செல்போனிலும் சார்ஜ் போய்விட்டிருந்தது.அருகில் ஓடும் ஆற்று நீரின் சலசலப்பு மட்டும் மெலிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து எதிரே இருந்த ஆற்றுப் பாலத்தின் வெள்ளைச் சுவர் மங்கலாய் தெரிய ஆரம்பித்தது. ஒருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அகலத்தில் இருக்கும் அந்தப் பாலத்தைக் கடந்து வயல்வெளியூடாக செல்லும் மண்பாதையில் ஒரு பத்து நிமிட நடையில் ஊர் வந்துவிடும்.

பாலம் பலம் இல்லாமல் கான்கிரீட் பெயர்ந்து ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் ஓட்டைகளாயிருந்தது. நிதானமாய் அடிமேல் அடிவைத்து கழைக்கூத்தாடி வித்தையைக் காட்டி ஒருவழியாய் பாலத்தைக் கடந்து மண்பாதையை அடைந்தேன்.

மண்பாதையின் ஆரம்பத்திலேயே அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில் மரத்தின் கழிகள் காற்றில் எழுப்பிய ”கீர்ர்ர்ர்..கிய்ய்ய்” ஒலியானது அச்சத்தை உண்டாக்கியதில் அதுவரை அமைதியாக வந்துகொண்டிருந்தவன் பயத்தை மறைக்க பாடல் ஒன்றை முணுமுணுக்க ஆரம்பித்தேன். நடையின் வேகமும் அனிச்சையாய் கூடியது.


பத்தாம் வகுப்பு படிக்கும் வரை இதே ஊரில்தான் இருந்தோம், இப்போது அப்பா வேலை பார்க்கும் ஊரிலேயே எங்கள் படிப்பும் தொடர்வதால் அங்கேயே செட்டிலாகிவிட்டோம். சொந்த ஊரில் பாட்டி மட்டும் இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பொங்கல்,கோயில் திருவிழா போன்ற விஷேச நாட்களில் மட்டுமே ஊருக்கு வருவதென்றாகிவிட்டது.


வழக்கமாய் குத்தகைப் பணம் வசூலிக்க அப்பாதான் வருவார். இந்தத் தடவை காலேஜ் லீவாக இருந்ததாலும் ஊர் பசங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் நானே வந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து வருவதால் எனக்கு அந்த இருட்டு ரொம்பவே பயத்தைக் கொடுத்தது. ”பேசாமல் காலையில் வந்திருக்கலாமோ” என நினைத்துக்கொண்டே நடையின் வேகத்தை முடிந்தவரைக் கூட்டினேன்.


பாதையின் இருபுறமும் இருக்கும் வயல்களிலிருந்து தத்துப் பூச்சிகளின் சத்தமும், தவளைகளின் சத்தமும் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது. இன்னும் சில அடிகள் நடந்து ரெட்டை ஆலமரங்களைக் கடந்துவிட்டால் அப்புறம் பொட்டல்வெளிதான். அதன் பின் பயமில்லை என்று எண்ணியபடியே வந்து கொண்டிருந்தவன் ஆலமரத்தின் கீழ் ஏதோ ஒரு உருவம் தெரிந்ததைப் பார்த்து அப்படியே திடிக்கிட்டு நின்றுவிட்டேன்.

மழைபெய்து சில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்தும் எனக்கு லேசாய் வியர்க்க ஆரம்பித்தது. அது என்னவாக இருக்கும் என்று உற்று கவனித்தேன். அதனிடம் எந்த அசைவும் இல்லை. பயத்தில் அடுத்த அடி எடுத்து வைக்கத் தயங்கியபடியே வெலவெலத்துப் போய் அசையாமல் நின்று கொண்டிருந்தேன். “ஏன் வம்பு பேசாமல் மீண்டும் ஆற்றுப் பாலத்திற்கே திரும்பிவிடலாமா” எனவும் யோசிக்க ஆரம்பித்தேன். தூரத்தில் ஊருக்குள் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.


அது மனித உருவம் மாதிரியும் வேறு மாதிரியும் மாறி மாறி தெரிந்தது, ஒரு வேளை பயத்தால் என் கற்பனையில் தோன்றிய பொய்பிம்பமோ எனவும் சந்தேகம் எழ குழம்பியபடியே பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென ஆலமரத்திலிருந்து ஆந்தையோ வேறேதேனும் பறவையோப் பறந்ததில் கிளைகளில் சிறிது சலசலப்பு உண்டாக பயந்து வியர்த்து போயிருந்த நான் என்னையுமறியாது ”யாரது” என்று பெருங்குரலெடுத்து அலறினேன்.

என் அலறலைக் கேட்ட அந்த உருவம்,”யாருப்பா அது” என்றதும்தான் அட யாரோ மனுஷன்தான் நிக்குறான்னு பயம் மறைந்து நிம்மதியாயிருந்தது. 
வேகவேகமாய் அந்த ஆளின் பக்கத்தில் சென்று யாரென்று பார்த்தால் பக்கத்து ஊர் செல்லத்துரை.ஸ்கூலில் செல்லத்துரை எனக்கு ரெண்டு வருட சீனியர். என்னைப் பார்த்ததும்,

 ”அட சரவணனாடா என்ன இந்த நேரத்துல “ என்றான்.
நான் வந்த விஷயத்தை அவனிடம் சொல்லிவிட்டு, ” இந்த நேரத்தில நீ என்ன இங்கே பண்ணிட்டு இருக்க ” என்றேன்.


”பக்கத்து களத்து மேட்டுல கருதுக் கட்டு கிடக்கு அதான் காவலுக்கு வந்தேன்” என்று சொல்லிவிட்டு ” என்னடா இருட்டைப் பார்த்து பயந்துட்டியா, சரி வா ஊர் வரைக்கும் துணைக்கு நானும் வரேன்” என்றபடியே என்கூட பேசிகிட்டே நடக்கலானான். எனக்கும் அப்பாடான்னு நிம்மதியா இருந்தது.


”அப்புறம் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்க”


“பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபைனல் இயர்” 


“நீயெல்லாம் நல்லா படிச்சிகிட்ட அடுத்த வருஷம் வேலைக்கு போயி பணத்த அள்ளு அள்ளுன்னு அள்ளப் போற” என்றான்.


என்னடா இவன் இப்படி பேசுறானேன்னு நினைத்தபடியே ”பார்க்கலாம்” என்றேன்.


”ஊருக்குள்ளே ஓட்டு வீடு மட்டும்தானே இருக்கு அத மாடிவீடா கட்டுனா என்ன,உங்க அப்பாரு சம்பாதிக்கிற பணத்தயெல்லாம் என்ன பண்றிய? அப்படியே பீரோக்குள்ளயே வச்சு கரையான் அரிச்சிட போவுதுடா” என்றான்.
ஓங்கி அறைந்துவிடலாமான்னு வந்த வெறியை அடக்கிக்கொண்டு எதுவுமே பேசாமல் கேட்டுகிட்டே வந்தேன்.


“இதுவரைக்கும் நம்ம ஸ்கூலில் எவனும் நான் எடுத்த மார்க்கை எடுக்கல ஆனா பாரு நான் வெங்கப் பயலா போயிட்டேன், நீயெல்லாம் இஞ்சினியர் ஆயிட்ட, காசு இருக்கு கச்சேரி நடத்துறிய” என்றான்.

இதைக் கேட்டதும் ”சே பாவம் அவனுக்கு என்ன பிரச்சனையோன்னு அவன்மேல் பரிதாபமாய் இருந்தது.


இப்படியே ஊர் வர்ர வரைக்கும் வயித்தெரிச்சல் புடிச்சக் கேள்வியா கேட்டுக்கொண்டே வந்தான். ஒருவழியா ஊரை வந்தடைந்ததும்,” சரி சரவணா இனி நீயே போயிடுவல்ல நான் களத்துக்கு போறேன்” என்றபடியே விடைபெற்றுக்கொண்டான்.


”இவன் கூட வந்ததற்கு பேசாமா தனியாவே வந்திருக்கலாம்” என எண்ணிக்கொண்டே வீட்டையடைந்தேன். வாசலிலேயே என் வருகையை எதிர்பார்த்து உட்கார்த்திருந்த பாட்டி, ”யய்யா,நேரமா வர வேண்டியதுதானே இன்னும் ஆளக்காணாமேன்னு கெத்து கெத்துன்னு ஒக்காந்திருக்கேன்” என்றாள்.


”சீக்கிரமாத்தான் கிளம்பினேன் ஆறு மணி பஸ் ஏதோ ரிப்பேருனுட்டாய்ங்க அதான் கடைசி பஸ்ல வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே உடை மாற்றிவிட்டு பாட்டி எனக்காக தயார் செய்து வைத்திருந்த சாப்பாட்டை ஒரு புடி புடித்துவிட்டு அசந்து தூங்கியதில் காலையில் எழுந்திருக்க பத்து மணியாகிவிட்டது.


குத்தகைப் பணத்தை வசூல் செய்துவிட்டு, ஊர் பசங்களோடு அளவளாவி முடித்து செல் நம்பர்களை பறிமாறிக்கொண்டு ஊருக்குக் கிளம்பும்போது மணி இரவு எட்டாகிவிட்டது.மீண்டும் மழை வருவதற்கான அறிகுறி தென்பட வேக வேகமாக பஸ் ஸ்டாப்புக்கு நடையைக் கட்டினேன்.


அதே ஆலமரத்தின் அருகே வரும்போது பளீரென ஒரு மின்னல் வெட்டியதில் மறுபடியும் பவர் கட்டாகியது. தெருவிளக்குகள் அணைந்து சட்டென்று நேற்றைப்போலவே கும்மிருட்டாகி எதுவுமேத் தெரியவில்லை. நல்ல வேளை செல்போனில் சார்ஜ் போட்டிருந்தேன். லைட்டடிக்க செல்போனை பாக்கெட்டிலிருந்து எடுக்கும் போதே எதோ புதிய எண்ணிலிருந்து கால் வந்தது அட்டெண்ட் செய்தால் எனது பால்ய நண்பன் செந்தில்.


“என்ன பங்காளி ஊருக்கு வந்திருந்தியா,நான் கொஞ்சம் வேலையா வெளியூர்ல இருக்கேன், இப்போதான் பசங்களுக்கு போனடிச்சேன் நீ வந்துட்டு போனன்னு சொல்லி உன் நம்பரக் கொடுத்தாய்ங்க” என்று ஆரம்பித்தவனிடம் 
”ஆமாண்டா பஸ் ஏற போயிட்டிருக்கேன், ரெட்டால மரத்துகிட்டதான் போயிட்டுருக்கேன் ” என்றேன்.


”அப்படியா பார்த்து போடா, போன மாசம் அந்த ரெட்டால மரத்திலதான் பக்கத்து ஊரு செல்லத்துரை தூக்குமாட்டிச் செத்தான்”என்றான்.

இதைக் கேட்டதும் ”என்னது” என்று பதறி அலறியதில் செல்போன் கீழே விழுந்துவிட்டது. சற்றும் யோசிக்காமல் ஆலமரத்தை நோக்கினேன் அங்கே அந்த உருவம். அடுத்த நொடியில் மயங்கிச் சரிந்தேன்.
எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் என்றேத் தெரியவில்லை,முழிப்பு வந்ததும் மெல்ல எழ முயன்றேன் என்னால் முடியவில்லை. இன்னும் இருட்டாகவே இருந்தது. ஆலமரத்தின் கீழ் அந்த உருவம் இப்போது இல்லை
.தூரத்தில் யாரோ இருவர் பேசிக்கொண்டு வருவது கேட்டது.அந்தக் குரல் ரொம்பப் பரிச்சயமானதாக இருந்ததால் யாரென்று அறிந்து கொள்ள காதைத் தீட்டினேன்.
”அருமையான பையன்யா சரவணன் இப்படி அவனைப் போயி இந்த செல்லத்துரை பய அழைச்சிக்கிட்டானே,நேத்து இந்நேரமெல்லாம் உசுரோட இங்கன இருக்கான், இன்னைக்கு ப்ச் அவன் விதி அவ்வளவுதான் ” என்று செந்தில்தான் யாரோடோ பேசிக்கொண்டு வந்தான்.
டிஸ்கி: இதையே முடிவாய் நெனச்சுக்குறவங்க நேரடியாய் பின்னூட்டலாம். இன்னும் திருப்தியில்லை என்பவர்கள் மேலே இருக்கும் வெற்றிடத்தை select செய்து படிக்கவும்.

24 comments:

கதிர் - ஈரோடு said...

ஒழுங்கா... அந்த வெற்றிடத்தப் படிக்காம போயிருக்கலாமா!!!???

உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...

அய்யய்யோ.... இன்னைக்கு எப்படி இருட்டுல வீட்டுக்குப் போவேன்!

கதிர் - ஈரோடு said...

என்ன இது கமெண்டும் தெரியா மாட்டேங்குது... இதுக்கு எங்கே போய் செலக்ட் பண்ணி படிக்கிறது...

ஓ... பாரி... நீங்கதான் அரஸ்ட் பண்ணியிருக்கீங்களா... அட ரிலீஸ் பண்ணுங்க

இரும்புத்திரை அரவிந்த் said...

செந்தில் தான் அடுத்ததா இல்லை செந்தில் கிட்ட பேசிக்கிட்டு வர்றது செல்லத்துரையா

கும்க்கி said...

நல்லாத்தான்யா கெளப்புறாய்ங்க பீதிய....

கும்க்கி said...

கதையை வேகமாக படித்துவிட்டு .....ஸ்...ஸ்... ஸ்...ஸ்ஸப்பா...அப்புறம்...டிஸ்கியை ..உஸ்...படித்து....விட்டு....திரும்ப அந்த மேலே கண்ட பாராவை படித்தால்....அய்யோ.....யாரோ.......நிக்கறாப்பில இருக்கே.....ஒடுறா கும்க்கி...ஒடுறா டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

ஊர்சுற்றி said...

நல்ல முயற்சிங்க!
நல்ல ப்ளோ இருந்தது! ஆரம்பத்திலதான் கொஞ்சம் தட்டுத்தடுமாறி போச்சுது. ஊருக்கு போற வழியில வேகமெடுத்தது!

முதல் சில பத்திகளைப் படிக்கும்போது கதைங்கிற ஒரு நினைப்பே வரல.நீங்க ஏதோ நடந்த விசயத்தை சொல்ல வர்றதப் போல ஆரம்பிச்சிருக்கீங்க!

நிதானிக்க அவதானிக்கல்லாம்தான் கொஞ்சூண்டு சலசலப்புக்கு காரணம்!

ஏற்கெனவே இதுபோன்று பல கதைகள் படித்திருந்தாலும், இதுவும் நல்லாத்தான் இருக்கு! :) கலக்குங்க!

ஆதிமூலகிருஷ்ணன் said...

முதலில் கதையா என ஓடப்பார்த்தவனை தொடரச்செய்தது முதல் பாரா. முதல் டிவிஸ்டை பாதியிலேயே எதிர்பார்த்தாலும் இரண்டாவது முடிவு கலக்ஸ். அதன் தொடர்ச்சியாக இரும்புத்திரையின் டிவிஸ்டும் நல்லாயிருந்தது.

நடை இந்தக்கதைக்கு மிகப்பொருத்தம். உள்ளூர பயம் ஏற்படுத்தியது.

Anonymous said...

வெள்ளைத்திரையில் இருந்த முடிவும் நல்லா இருந்துது.

பித்தன் said...

முதலில் வரும் பத்திகளை படிக்கும்போது கண்டிப்பாக பேய் வரும் என்று முடிவாகிவிட்டது, ஆனா நமிதா,இல்ல நயந்தார ஸ்டைல ஒரு கவர்ச்சியா பொம்பளை பேய் வருமுனு பார்த்தா செல்லதுரைனு ஆம்பளை பேய், பராவயில்லை, நாங்க நமிதாவை பார்த்துக்குறேம் (ரெண்டும் ஒன்னுதான).
கதை மிகவும் அருமை, வளர்க.

நாஞ்சில் நாதம் said...

அருமையான நடை. செந்தில் தான் அடுத்த குறியா? இல்ல அவன் ஏற்கனவே பேயா?

புனைவுண்ணு வேற போட்டுருக்குறீங்க. எதாவது பேய் அனுபவம் உங்களுக்கு உண்டா? இல்ல நீங்கதான் அந்த செல்லதுரையா?

வழக்கம்போல உங்க ஊர் பத்தின எதோ ஒரு கட்டுரைன்னு நினைச்சேன். ஆனா செல்லத்துரை வந்த பிறகு தான் கதைனு தெரிஞ்சது.

ஸ்ரீமதி said...

கொஞ்சம் பயந்துதான் போயிட்டேன்... ஆரம்பத்துல சந்தேகம் இருந்தாலும் நீங்க திகில் கதையெல்லாம் எழுத மாட்டீங்கன்னு நம்ம்ம்ம்ம்பி படிச்சேன்... :((( ஹ்ம்ம்ம்.... :))

SanjaiGandhi said...

நாங்கல்லாம் பயத்துக்கே பயம் காட்டறவங்க.. எங்களுக்கே நீங்க பயம் காட்டிட்டிங்களே.. சூப்பர் பாஸ்.. :)

பரிசல்காரன் said...

சரியான ஐடியா பாரி!

க்ரேட்!

நாடோடி இலக்கியன் said...

நன்றி கதிர்,(இருட்டுல வீட்டுக்கு எப்படி போறதுன்னு பாலாஜிகிட்ட கேளுங்க சூப்பரா சொல்லுவார்,என்ன எதாவது விளம்பர தட்டி வந்தா மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா போங்க).

நன்றி அரவிந்த்,(செந்தில் அடுத்ததா இருக்கலாம்,ஆனா அவன் செல்லத்துரையின் லிஸ்ட்டில் இருக்கானா,இல்லை சரவணனின் முதல் போணியா என்பதெல்லாம் உங்க கற்பனைக்கே).

நன்றி கும்க்கி,(அண்ணே, ஒரு தடவை எங்க ஊரு ரெட்டால மரத்துக்கு வந்துட்டு போங்களேன்).

நன்றி ஊர்சுற்றி,(நண்பா உங்க கமென்ட்ஸ் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது,இப்போ அந்த குறையை ஓரளவிற்கு சரி பண்ணியிருக்கேன் பாருங்க).

நன்றி ஆதி,(முதல் முடிவு யூகிக்க முடியும் என்பதை நானும் அறிவேன் இருப்பினும் அதை உறுதி படுத்தவிடக்கூடாதுன்னு கொஞ்சம் முயற்சி பண்ணி குழப்பப் பார்த்தேன் அது எந்த அளவிற்கு வொர்க் அவுட் ஆச்சுன்னு தெரியல.
நடையை பற்றிய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி ஆதி பயந்துகிட்டேதான் படித்தேன் உங்க பின்னூட்டத்தை, இப்போ ஹேப்பி).

நன்றி சின்ன அம்மிணி.

நன்றி பித்தன்,(முதன் முதலா பேய் கதை எழுதலாம்னு முடிவு பண்ணும்போதே எடுத்த முதல் முடிவு பொம்பள பேய் இருக்கக் கூடாது என்பதுதான்.
”மச்சான் நீங்க போட்ட கமெண்ட பாத்தாச்சு,கொஞ்சம் கொஞ்சம் என்க்கு கோபம் வந்தாச்சு” அப்படின்னு நமிதா உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க நண்பா ஹி ஹி).

நன்றி நாஞ்சில் நாதம், (எல்லாம் உங்க மாதிரி நண்பர்களின் அக்கரையால்தான் நண்பா.
அப்புறம் நான் செல்லத்துரையா இல்லையான்னு எங்க ஊருக்கு கடைசி பஸ்ல ஒருக்கா வாங்க நேரிலேயே தெரிஞ்சிக்கலாம் :) ).

நன்றி ஸ்ரீமதி,(பேய்கதையும் சும்மா எழுதி பார்ப்போமேன்னு ...).

நன்றி சஞ்சய்,(அப்பாடா பயந்தாச்சா,சந்தோஷமா இருக்கு).

நன்றி பரிசல்காரன்,(அட ரொம்ப நாள் கழித்து இந்த பக்கமும் வந்துருக்கீங்க).

மங்களூர் சிவா said...

/
கும்க்கி said...

நல்லாத்தான்யா கெளப்புறாய்ங்க பீதிய....
/

ரிப்பீட்டு!

நாடோடி இலக்கியன் said...

நன்றி மங்களூர் சிவா.

தஞ்சாவூரான் said...

/
கும்க்கி said...

நல்லாத்தான்யா கெளப்புறாய்ங்க பீதிய....
/

ரிப்பீட்டு!

ஓரளவு ஊகிக்கமுடிஞ்சதுன்னாலும், நன்றாக இருந்தது. நானும் ஏதோ உங்க ஊர் நினைவுகள்ன்னு நெனச்சேன். சரவணன்னு பேர் பாத்ததும், தெளிஞ்சேன் :)

பாட்டு பாடுனா பயம் போயிடும்ன்னு ஒரு நெனப்பும் என் சின்ன வயசுல இருந்துச்சு. 100 அடி தள்ளி இருக்குற கடைக்கு இருட்டுல போகக்கூட நான் பாட்டு பாடுவேனாக்கும். பேயே பயந்துருக்குன்னா, எவ்வளவு கொடூரமா இருந்திருக்கும் நம்ம பாட்டு :))

இரா.சிவக்குமரன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்பா .....முடியல சாமி... ஏன் இப்படிலாம். சின்னபசங்க பயந்துகிடுவோமில்ல....

ஊர்சுற்றி said...

திரும்பவும் வாசித்தேன்.

ஒருசில மாற்றங்களைத்தான் கண்டுபிடிக்க முடிந்தது!

:)

நாடோடி இலக்கியன் said...

நன்றி தஞ்சாவூரான்,(அப்போ பேய் ஓட்டறதுக்கு அண்ணன் பாடினா போதும்ன்றீங்க :) ).

நன்றி சிவா,(யாரு நீங்களா?).

நன்றி ஊர்சுற்றி,(ஆரம்பம் கொஞ்சம் தடுமாற்றமா இருந்ததுன்னு சொல்லியிருந்தீங்கதானே அதான் அங்கே கொஞ்சம் ஷார்ப் செய்து ஒரு பாராவை குறைத்தேன்,மேலும் ஆங்காங்கா லைட்டா ட்ரிம் அவ்வளோதான் அதன் பிறகு வாசித்தபோது எனக்கே கொஞ்சம் திருப்தியா இருந்தது :).உங்களுக்கு பெரிதாய் மாற்றம் தெரியவில்லை போலும்,இருந்தாலும் அடிக்கடி கொட்டுங்க திருத்திக்க வசதியா இருக்கும்).

ஊர்சுற்றி said...

ஏதோ நேரம்கிடைக்கும்போது, நம்பளால முடிஞ்சது!

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஊர்சுற்றி,(அவ்வப்போது சொல்லுங்க).

mano said...

nalla erunhuchuu !!

நாடோடி இலக்கியன் said...

நன்றி மனோ.